18 November 2025
TayaG KS 25

குமரனால் அந்த மரணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் நண்பனின் நினைவுகளே அவனை தொல்லை செய்தன. அந்தச் சிரிப்பு சத்தம் அவனது காதுகளுக்கு மட்டும் கேட்கிறது. அவனால் மீள முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக உடனிருந்தவன் இன்று இல்லை. ஓருயிர் ஈருடலென்ற பழைய கிளிஷேக்களுக்கு நவீன சாயம் பூசி காப்பாற்றி வந்த கடைசி தலைமுறை இவர்கள்.

குமரனுக்கு எல்லாமே தேவன்தான். தேவனுக்கும்தான். எங்கு போனாலும் சேர்ந்தேதான் போகிறவர்கள். செத்து பிரிந்துவிட்டார்கள் என ஊரார் வாயை வைத்தனர். உண்மையில் இருவரும் சேர்ந்தேதான் செத்திருக்கவும் வேண்டும்; என்று கூடத்தான் பேசி குமரனை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

தேவன் இறந்து இன்றோடு சில வாரங்கள் ஆகியிருந்தன. நண்பனின் மரணமும் சுற்றத்தின் இந்தப் புறக்கணிப்பும் அவனை எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கியது. போதாக்குறைக்கு மற்றவர்களின் சந்தேகப்பார்வையை அவன் எதிர்க்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவனை அது கொஞ்சம் கொஞ்சமாக கொல்லவும் செய்கிறது. தேவனின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திவிட்டான். அவனால் தன் வீட்டை விட்டே வெளியில் தலை காட்ட முடியவில்லை.

இதோ கைப்பேசி ஒலிக்கிறது. தேவாவின் மனைவிதான் அழைக்கிறாள். பல முறை அழைத்திருந்தாள். ஆனால் ஒரு முறை கூட அதற்கு பதில் அளிக்கவோ அவள் அனுப்பும் வட்சப் செய்திகளைப் பார்ப்பதற்கோ அவனுக்கு மனம் வரவில்லை.  சொல்லப்போனால் அவனுக்கு மேலும் அது பயத்தையே கொடுத்தது.

அவனது மனம் இப்பொழுது தீவிர குழப்பத்தில் இருக்கிறது. அவனுக்கு தேவை பதில். ஒரே ஒரு பதில். ஆம் அல்லது இல்லை. அவ்வளவுதான். நண்பனின் மரணம் அவனுக்குள் ஏற்படுத்தியுள்ள இந்தப் பயத்திற்கான தீர்வை, அவன் கலைய முற்பட்டாலும் அதுவே அவனுக்கு பாதகமாக அமைந்துவிடும். வெடிக்க இருக்கும் வெடிகுண்டின் தப்பான விசையை அழுத்தி உடனே அதை வெடிக்க வைப்பது போல.

தன் ஆருயிர் நண்பன் தன்னை பழிவாங்கவே இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறான். “செத்துட்டான் துரோகி… அவனெல்லாம் நண்பனா.. ச்செ ச்சே.. அவனெல்லாம் மனுஷனா.,..?” என புலம்பிக்கொண்டிருக்கிறான் குமரன்.

மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒரு சிரிப்பு சத்தம் கேட்கிறது. அது தேவனின் பாணிதான் என்பது இவனுக்கு நன்றாகத் தெரியும். இப்படியொடு கேவலமான சிரிப்பை வேறு யாரும் சிரிக்க மாட்டார்கள்.

“தேவன் ஏய்ட்ஸ் வந்துதான் செத்திருக்கான்…” என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியால் அதிகம் பாதிக்கப்பட்டது குமரன் தான். 

குமரன் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றைத்தான். அதுதான் அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கும். மெல்ல மெல்ல கொன்று கொண்டிருக்கும் பயத்திடமிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியும் அதுதான்.

“தேவனுக்கு ஏய்ட்ஸ் இருந்தா.. அது அவனோட மனைவிக்கும் இருக்கும்தான…??” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அவன் கைகள் நடுக்கின.

தேவனின் அந்தக் கேவலமான சிரிப்பு சத்தம் மறுபடியும் கேட்கிறது.


 

எழுதியவர்

தயாஜி
மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார். முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும் ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “நண்பனின் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page