கிடைத்தது என்னவோ அடுக்குமாடி வீடுதான். பூச்சோங் வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமான அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி அது. ஐந்து நிமிடத் தூரத்தில் இரண்டு வகையான குடியிருப்புகளைப் பார்க்கலாம். நீச்சல் குளம், ஜிம் செட்டிங், உணவுக் கடை, டோபி கடை என உள்ளுக்குள்ளேயே ஒரு குட்டி ஊரை வைத்திருப்பார்கள். அடையாள அட்டையைக் காட்டாமல் உள்ளுக்குள் புதியவர்கள் யாரும் நுழைய முடியாது. சுற்றிலும் முள்வேலி போடப்பட்டு வாசலில் நான்கு பாதுகாவலர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார்கள் . வெளிநாட்டிலிருந்து இங்கு வேலை செய்ய வந்திருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். அனைவரும் வெள்ளைக்காளர் அணிந்து வேலைக்குப் போகின்றவர்கள்.
பக்கத்திலேயே இருக்கிறது இன்னொரு குடியிருப்பு. இங்குப் பிறந்து இங்குப் படித்து இங்கு வேலை செய்துகொண்டிருக்கும் குடிமகன்கள் இருப்பார்கள். உண்மையில் பலர் அங்குக் குடி-மகன்களாகவும் குடி-மகள்களாகவும் இருந்தார்கள். இங்குள்ளவர்களில் பாதிப் பேர் சிவப்பு அடையாள அட்டை உள்ளவர்கள். அவ்வப்போது பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்திகளாக அவர்கள் சிவப்பு அடையாள அட்டையுடன் வந்து போவார்கள். இந்தக் குடியிருப்பிற்கு நுழைய யாரையும் எதுவும் கேட்கவோ யாரிடமும் எதையும் சொல்லவோ வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். வாசல் என்ற ஒன்று நாலா பக்கத்திலும் திறந்த வெளியாக இருக்கும். ஆனால் இதுவரை இந்த அடுக்குமாடி வீட்டில் எந்தத் திருட்டு சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் சுற்றுவட்டார மக்களின் காணாமல் போகும் உடைமைகளை இங்கு வந்து காணலாம். காணலாம். அவ்வளவுதான் ஆனால் முழுக்க அடையாளம் காணவோ திரும்பப் பெறவோ முடியாது.
யார் செய்த புண்ணியத்தாலோ, மணிமாறனுக்கு நீச்சல் குளம் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு கிடைத்தது. அவனுடன் வேலை செய்துகொண்டிருந்த பங்களா தேசி அலுவலகத்தின் அருகிலேயே சொந்த வீடு வாங்கியிருந்தான். ஆச்சர்யமாக இருக்கிறது தானே. “உள்ளவனுக்கே ஒன்னுக்கும் வழியில்ல, எங்கிருந்தோ வந்தவனுக்குச் சொந்த வீடாம் கதையைக் கேட்டியா” எனப் புலம்பல்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறது. அதெப்படித்தான் அவர்களால் இங்குள்ள பெண்களை அவ்வளவு சாதாரணமாகத் திருமணம் செய்து அவர்கள் பெயரில் வியாபாரம் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி சொந்த வீடு சொந்த வாகனம் சொந்தக் கடை என நாட்டையும் சொந்தம் கொண்டாட முடிகிறதோ தெரியவில்லை என்ற குழப்பம் இங்குள்ள மலாய்க்காரர்கள் உட்பட மற்ற இனத்தவருக்கும் கூட உண்டு.
தன் முழு வருமானம் அந்த வீட்டின் வாடகைக்கே செல்வதை மணிமாறன் விரும்பவில்லை. ஆதலால் தன் வீட்டில் இருக்கும் அறையை அந்த பங்களாதேசியின் ஆலோசனை பேரில் இன்னொரு பங்களாதேசிக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டான்.
இங்குதான் சிக்கல் ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டிற்கு ஒருவர்தான் கட்டணமின்றிக் காரை வைக்க முடியும். மற்ற கார்களை வைப்பதற்கு மாதக் கட்டணம் கட்ட வேண்டும். அங்கிருக்கும் காலி வீடுகளை அவ்வப்போது மூன்று நாட்கள் ,ஒரு வாரம் என வாடகைக்குச் சில நைஜீரியக்காரர்கள் எடுப்பதுண்டு. கேட்டால் குரூப் ஸ்டடி எனச் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இரவு முழுக்க ஆண் பெண்களின் முக்கல்களும் முனகல்களும் அங்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். அதனைக் கேட்பதற்காகவே அவ்வழியாகச் சில இளைஞர்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்டு இருப்பார்கள். படிக்கட்டுகளில் அவர்கள் செய்யும் காரியங்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மின் தூக்கியில் அவர்கள் எதையும் தூக்கிக்காட்டாத வரை யாரும் அதைத் தொந்தரவாக நினைக்க மாட்டார்கள். அங்கு வசிப்பவர்களுக்கு எந்தச் சத்தமும் தன் வீட்டுக்குள்ளிருந்து வராதவரை எதைப்பற்றியும் கவலையோ பயமோ இல்லை. கவலை இல்லைதான் ஆனால் பயமுமா இல்லை?. சிலருக்கு இருக்கலாம். அதனால்தான் சொந்த வீட்டிற்குள்ளாகவே சிசிடிவி-களை பொருத்தியிருக்கிறார்கள்.
அவ்வாறு வந்து போகும் படுக்கையாளிளுக்காக இல்லையில்லை படிப்பாளிகளுக்காகப் பல இடத்து கார் நிறுத்துமிடங்கள் காலியாகவே இருக்கும். வீட்டு வாடகை போக வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கே தினம் இருபது வெள்ளியைக் கொடுக்க முடிந்தவர்களுக்காக அடுக்குமாடி நிர்வாகம் இதைக் கூடவா செய்ய முடியாது.
அங்கு வசிப்பவர்களின் இரண்டாவது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக நாளொன்றுக்கு ஐந்து வெள்ளி கொடுக்க வேண்டும். தினம் ஐந்து வெள்ளி கொடுத்தால் மாதத்திற்கு நூற்றைம்பது வெள்ளி வரும் என்பது முதலாம் ஆண்டு மாணவனின் கணக்குதான் . ஆனால் இடத்திற்கு முன்பணமாக இருநூறு வெள்ளி கொடுக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் கணக்கு. இந்தக் கணக்கு மணிமாறனுக்கு பிடிபடவில்லை பிடிக்கவும் இல்லை. இந்த முன்பணத்தைத் திரும்பவும் கொடுத்துவிடுவார்கள். அதுவும் எப்போது தெரியுமா ? ஒரு மாதம் முழுக்க அங்குக் காரை வைக்காதிருந்தால் மட்டுமே அப்பணத்தைத் திரும்பத் தருவார்கள். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் அங்கு வந்து காரை நிறுத்தவில்லை எனப் பாதுகாவலருக்கு நினைவுபடுத்த வேண்டும். ஒரு வேலை பாதுகாவலர் வேறு இடத்துக்கு மாறி விட்டாலோ, தினம் வந்து எழுதிவிட்டுப்போகும் குறிப்பு புத்தகத்தின் பக்கங்கள் காணாமல் போயிருந்தாலோ மீண்டும் முதல் நாளிலிருந்து கணக்கு எடுக்க ஆரம்பிப்பார்கள். கேட்பதற்கு உங்களுக்கே என்னவோ போலிருந்தால் அங்கு கார் நிறுத்த கட்டணம் கட்ட யோசித்திருப்பவர்களின் மனநிலையை யோசித்துப்பாருங்கள்.
மணிமாறனின் ‘வீவா’ கார் ஒருவாரம் மட்டுமே உள்ளே கட்டணமின்றி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு தன்னுடன் அறையை வாடகைக்கு எடுத்திருக்கும் பங்களாதேசி தனது போக்குவரத்துக்கு ‘பேந்த்லி’ வகைக் காரை வாங்கியிருந்தான். இப்படி உயர் ரகக் காரை வைத்திருப்பவரை அவன் இவன் என அழைத்தால் இச்சமூகம் கோவித்துக் கொள்ளும் என்பதால் அந்த பங்களாதேசி சாரை அவர் இவர் என்றே மரியாதையாக அழைப்போம்.
‘பேந்த்லே’ கார் வந்துவிட்ட நாளிலிருந்து மணிமாறனுக்கு சிக்கல் தொடங்கியதாகச் சொன்னேன் அல்லவா.? அது இதுதான். அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கிய காரை தினம் ஐந்து வெள்ளி கட்டி கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்க அந்த பங்களாதேசி சார் ஒப்புக்கொள்ள வில்லை. ‘வீவா’ போன்ற 45-ஆயிரம் வெள்ளி காருக்கு வேண்டுமானால் ஐந்து வெள்ளி கட்டணத்தில் நிறுத்தி வைக்கலாம். ஆதலால் ‘பேந்த்லி’ போன்ற உயர் ரகக் காரை இலவசமாக நிறுத்தி வைப்பதுதான் அந்த காருக்கு தரவேண்டிய மரியாதை என பங்களாதேசி சார் சொல்லிவிட்டதால் ‘வீவா’ கார் அடக்கி வாசித்தது.
உள்ளே வைத்து கட்டணம் கட்டி சாவதை விடவும் குடியிருப்பு வேலிக்கு வெளியில் வைக்கலாம் என மணிமாறன் முடிவெடுத்தான். முடிவு எடுக்கத் தள்ளப்பட்டான். விழுந்தும் விட்டான்.
வெளியில் காரை வைத்திருந்ததால் பாதுகாப்பு கருதி தன் வீட்டு ஜன்னலிலிருந்து கண்ணுக்கு கார் தெரிய வேண்டும் என்கிற ஒற்றை வருத்தம் மணிமாறனுக்கு இருந்தது. ஆக, அதற்கான இடத்தைத் தேடிக்கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது அப்படிக் குடியிருப்பு வேலியைச் சுற்றிலும் இங்கு வசிக்கின்றவர்கள் கார்கள்தான் அதிகம் இருக்கின்றன. அது கொஞ்சம் தைரியம் கொடுத்தது. என்னதான் பக்கத்துக் குடியிருப்பில் இருப்பவர்கள் திருடுவார்கள் என்றாலும் கார்களை திருடிச் சென்று விற்கும் அளவிற்கு வளர்ச்சியடையாத உள்ளூர் திருடர்கள் அவர்கள். குறைந்தது எதையாவது போட்டு கார் கண்ணாடியை ஒன்றும் பாதியுமாக உடைப்பார்கள். பின்னர் உடைந்த கண்ணாடிகள் கைகளைக் கீறுவதையும் பொருட்படுத்தாது காரினுள் இருக்கும் பத்துக் காசோ ஐம்பது காசோ எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
அங்கும் இங்குக் காரை நிறுத்திக்கொண்டிருந்த மணிமாறனுக்கு மர நிழலில் தோதான இடம் கிடைத்தது. வழக்கமாக கார் நிறுத்திய யாரோ இப்போது கார் நிறுத்தாதது போல் தெரிந்தது. அங்கிருந்து தலையைத் தூக்கி கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தால் மணியின் வீட்டு ஜன்னல் சில கோடுகளாகத் தெரியும்.
வேலிக்கு அருகில் இருக்கும் மரங்களைக் கடந்து நான்கு முச்சந்தியில் வலது பக்கமாகத் திரும்பினால் சில வினாடி தூரத்தில் மணிக்கான கார் நிறுத்தம் இருந்தது. அவ்வளவு எளிதாக அங்கு கார் நிறுத்த பாதுகாப்பான இடம் கிடைத்தது அவனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வெண்டும். ஆனாலும் என்றாவது ஒரு நாள் இங்கு ஏற்கனவே கார் நிறுத்தியவர் வந்து கேட்டால் என்ன சொல்வது? அது அப்போதைய கவலை. அதுவரை அதைப்பற்றி யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இப்படி ஒரு மர நிழலில் காரை நிறுத்துவிட்ட ஜன்னலைக் கொஞ்சமாகத் திறந்துவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுவது என்றால் எத்தனை சுகம் என்பதை மணிமாறன் கண்டறிந்திருந்தான்.
அன்றும் அப்படித்தான். பாதி திறந்த கார் கண்ணாடியில் ஏதோ இடித்தது போன்று சத்தம் கேட்டது. அதுவரை காரிலேயே உறங்கிக்கொண்டிருந்த மணிமாறன் விடுக்கென்று எழுந்தான். அவனது மடியில் முறிந்துவிட்ட பச்சிளம் கிளை ஒன்று கிடந்தது. அதனை எடுத்துப் பார்க்கும் போதே தெரிந்தது. யாரோ ஒரு விஷமி கிளையை முறித்து காருக்குள் போட்டு விளையாடியிருக்கிறது. அதனை எடுத்து வெளியில் போட்டுவிட்டு மீண்டும் உறங்கினான். வீட்டில் கூட இப்படி ஒரு தூக்கத்தை மணி உணர்ந்ததில்லை. இங்கேு அப்படியொரு தூக்கம் அவனைத் தாக்கியது.
மீண்டும் ஜன்னலை ஏதோ ஒன்று இடித்தது. முழித்தவன் மடியில் இருக்கும் இன்னொரு முறிந்த கிளையைக் கண்டான். இம்முறை கிளை கொஞ்சம் தடிமனாக இருந்தது. மீண்டும் தூங்கினால் மரத்தையே பிடுங்கி உள்ளே போட்டுவிடுவார்கள் என நினைத்து கார் கதவைத் திறந்து வெளியேறினான். அப்போதுதான் அந்த பெரியவரைக் கண்டான்.
கதவைத் திறந்த நொடியில் எப்படி வந்தார் என்றே தெரியவில்லை. கண் முன் மணிமாறனையே பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சு மூச்சற்று அதிர்ச்சியில் அவரையே மணிமாறன் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்தான் அதிர்ச்சியைத் தெளியவைத்தார்.
“அதிர்ச்சியா பார்க்குற அளவுக்கு நானெல்லாம் ஆளில்லை தம்பி.. சாதாரணமாகவே பாருங்க….”
சொல்லிவிட்டுச் சிரிக்கலானார். அவர் சொன்னதற்கும் சிரிப்பதற்கும் கொஞ்சம் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. வெள்ளை நிறத்தில் போட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தைக் கொடுக்கும் செம்மண் வண்ண வேட்டியை முட்டிவரை மடித்துக் கட்டியிருந்தார். நடந்து நடந்தே முறுக்கு ஏறிய கறுப்பு கால்கள் அவை. மொட்டைக்கை சட்டையைப் போட்டிருந்தும் ஆங்காங்கு விழுந்திருந்த பொத்தல்கள் மார்பு கட்டை காட்டியது. வயிறே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
“என்ன சார் வேணும்…?.”
“சாரெல்லாம் வேணாம் நல்லா தமிழ்ல அய்யான்னு கூப்ட வேணும்…”
கிழவனுக்கு கொழுப்பை பார்த்தியா என மணி நினைத்த மாத்திரம்;
“என்ன தம்பி செய்றது.. தினமும் உழைக்கிறேன் தான் ஆனா…அந்த கொழுப்பு மட்டும் கரையவே மாட்டுது..”
மணிக்கு என்ன பேசுவதென்று தோன்றவில்லை. உண்மையில் அப்போது அவனுக்கு எதுவுமே தோன்றவில்லை. அந்த கிழவரே தொடர்ந்தார்.
“பார்த்தா படிச்ச பையன் போலவே இருக்கியே தம்பி. இப்படி அடுத்தவங்க இடத்துல காரை நிறுத்தி வைக்கிறியே.. நல்லாவா இருக்கும்…?”
“இல்ல ஐயா… ஒருவாரமா இங்க யாருமே காரை வைக்கலையே…?”
“எப்படி தம்பி வைப்பாங்க… அதான் ஒரு வாரமா நீ காரை வச்சிட்டு ஜம்முனு போய்ட்டு இருக்கியே..”
“ம்…!!!” தவிர மணியிடம் சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை. ஆனாலும் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லவேண்டுமே.
“ஓ… சரி ஐயா. நான் வேற இடம் பார்த்துக்கறேன்….”
“நீயும் போய்ட்டா இங்க யார் தம்பி காரை போடுவாங்க யார் எனக்கு கூலி தருவாங்க…?”
மணிக்கு அவர் பேச்சு பிடிடவில்லை.
“தோ பாரு தம்பி.. எனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. ஏதோ இங்க போடற் காரை பார்த்துக்கிட்டா எனக்கு கைகாசு கிடைக்கும்.. ரொம்பலாம் இல்ல… ஏதோ ஒரு நாளுக்கு ஒரு சுருட்டு கொஞ்சூண்டு கோப்பிக்கு போதும்… மத்ததெல்லாம் நானே பார்த்துக்குவேன்… ஏற்கனவே காரை போட்டிருந்த மகராசி உன்னால வேற இடத்துக்கு போய்ட்டா… நீயே இதுக்கு ஒரு முடிவு கட்டு… ”
ஓ விசயம் அதுதானா என மணிக்கு பெருமூச்சு வந்தது.
“சரி ஐயா…. எவ்வளவு கொடுக்கட்டும்…”
“நம்ம கையால காசு வாங்கற ஆளுங்க இல்லப்பா…. இவ்வளவு காசு கொடுன்னும் கேட்கற ஆளும் இல்லை… எவ்வளவு உன் மனசு சொல்லுதோ அவ்வளவு கொடு போது… தோ பாரு.. கொடுன்னதும் கைலலாம் கொடுக்க வேணாம்.. தோ இந்த மரம் இருக்குல்ல.. இதை நான் தான் இங்க நட்டு வளர்த்தி வச்சிருக்கேன்.. நீ தினமும் காரை வச்சிட்டு கைகாசை மரத்துல எங்கயாச்சும் சொருவிட்டு போய்டு.. அப்பறம் அதுகிட்ட நான் கேட்டு வாங்கிக்கறேன்…”
‘என்னது மரத்துக்கிட்ட கேட்டு வாங்கிக்குவிங்களா’ என்கிற அதிர்ச்சியில் மணி அதிகம்தான் கண்களைத் திறந்துவிட்டான்.
“ஏன் தம்பி கண்ணாடிய பார்த்து பேசறிங்க… முன்னாடி யாருமில்லாட்டியும் பேசறிங்க… முதுகுக்கு பின்னாடியும் பேசறிங்க… கல்லை பார்த்து பேசறிங்க… ஏன் தம்பி.. நான் நட்டு நான் தண்ணி ஊத்தி நான் பார்த்துப்பார்த்து வளர்த்த மரத்துக்கூட நான் பேசக்கூடாதா… நான் பேசனா அதும் என்கூட பேசாதா என்ன….”
மேற்கொண்டு இந்த பைத்தியம்கிட்ட பேசக்கூடாது என முடிவெடுத்தான் மணி. காற்சட்டையில் காசுக்காகக் கையை விட்டான்.
“அங்க சில்லறை காசு இருக்காது தம்பி, சட்டை பாக்கேட்டில் பாருங்க.. மூணு வெள்ளி இருக்கும் அதிலிருந்து ஒருவெள்ளியை மரத்துகிட்ட வச்சிட்டு போங்க… காரை நானும் மரமும் பத்திரமா பார்த்துக்கறோம்…”
அவர் சொன்னது போலவே மணியின் சட்டை பாக்கேட்டில் 3 வெள்ளி இருந்தது. மணிக்கே அது இப்போதுதான் தெரியும். எந்த பதிலும் பேச்சும் பேசாமல் பையில் இருந்த காசை எடுத்து அவர் சொன்னது போலவே மரத்தின் ஒரு பொந்தில் சொருகினான்.
அந்த ஐயாவை பார்க்க அவர் முறிந்து போயிருந்த இரண்டு மரக்கிளைகளை அதன் பழைய இடத்தில் ஒட்டவைத்துக் கொண்டிருந்தார். அந்த முறிந்த கிளைகளும் முந்தைய இடத்தைக் கண்டுகொண்டு மீண்டும் தன்னோடு அந்தக் கிளைகளைச் சேர்த்துக் கொண்டன. மணியின் கண் முன்னே இதெல்லாம் நடந்து கொண்டிருந்தன.
“போங்க தம்பி போங்க.. உங்களுக்கு ஆயிரம் வேலை கிடக்கும் அதை செய்யுங்க…. இந்த வேலை வெட்டி இல்லாதவனை ஏன் இன்னமும் வேடிக்கைப் பார்த்துகிட்டு நிக்கறிங்க…”
“வேலை இருக்குதான் ஐயா… ஆனா அந்தக் கிளைகளை எப்படி ஒட்ட வச்சிங்க… நான் பார்த்தேனே…??”
“பார்த்திங்களா… என்ன பார்த்திங்க… சொல்லுங்க கேட்போம்?”
மணிக்கு சட்டென கண்ட காட்சி எல்லாவற்றையும் யாரோ அழித்துவிட்டதாக பட்டது. ஒரே இருட்டு. எந்த நினைவும் இல்லை. காரில் தூங்கிக்கொண்டு அதிர்ச்சியில் எழுந்தது போலவே இருந்தது.
“அது…. அது…. தெரியல ஐயா… என்னமோ.. மறதியா இருக்கு….”
“அதுக்கு பேரு மறதி இல்ல தம்பி… நம்பிக்கை இல்லாமை…”
“புரியலை ஐயா…”
“நம்பிக்கையும் அன்பும்தான் இயற்கைகிட்ட பேசறதற்கான மொழி… ஆதிகாலம் தொட்டுப் பாதி காலம் வரை மனுஷங்க அப்படித்தானே வாழ்ந்தாங்க… ஆனால் பாருங்க… புத்தியில சந்தேகம் வர வர இயற்கையின் மொழி மறந்துப்போச்சி… இப்போ மனுசங்க கண்ணுக்கு இயற்கையே தெரியாம போச்சு….”
மணிக்கு ஒன்றும் புரிந்ததாக படவில்லை. மனதின் ஏதோ ஒன்று விடுபட்டதாகத் தோன்றியது. கிளம்புவதாக முடிவெடுத்து;
“சரிங்க ஐயா.. கிளம்பறேன்… காரை பார்த்துக்கோங்க..”
“இயந்திரத்து மேல இருக்கற அக்கறை இயற்கை மேல இல்லையே தம்பி….”
“அது…..”
“பரவால தம்பி நீங்க புறப்படுங்க…”
மணி புறப்படலானான். மனம் திரும்பத் திரும்ப ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தது. அது அந்தப் பெரியவர் சொன்ன ‘நம்பிக்கையும் அன்பும்தான் இயற்கையோடு பேசுவதற்கான மொழி ’ . கோலாலம்பூருக்கு வந்த நாளிலிருந்து எந்த ஒரு செடிக்கும் தண்ணீர் கூட ஊற்றாதது அவனுக்குச் சட்டென உறைத்தது. ஆமாம், தோட்ட வாழ்க்கையில் இயற்கையோடு பின்னிப்பிணைந்திருந்தவர்கள்தானே எல்லோரும்.
உடல் பிணியில் இருந்து உள்ளத்தின் பிணி வரைக்கும் செடி கொடிகளை வைத்துத்தானே சரி செய்தோம். இயற்கையைத்தான் நேசித்தோம். மரங்களால்தானே சுத்தமான காற்றைச் சுவாசித்தோம். எத்தனை நாட்களில் பசியைப் பழங்கள் மட்டுமே கொண்டு நிரப்பியவன் ஆயிற்றே. எப்படி அந்த உறவு துண்டிக்கப்பட்டது. உலகின் வளர்ச்சிதான் காரணமா அல்லது மனிதனின் அலட்சியம்தான் காரணமா எனத் தனக்குள்ளேயே பட்டிமன்றம் ஒன்றை நடத்தினான். அவனால் இப்படியும் பேச முடிந்தது அப்படியும் பேச முடிந்தது. மின் தூக்கியின் முன் நின்றுகொண்டிருந்தான். கதவுக்கு அருகில் அழகு செடி ஒன்றை வைத்திருந்தார்கள்.இத்தனை நாட்களில் இப்போதுதான் கவனிக்கலானான். நீல நிறப் பூக்களை அவை தாங்கியிருந்தன. அதனைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பால்யத்தில் விளையாடிய விளையாட்டுகளில் வந்துபோன மரம் செடிகளை நினைக்கலானான். ஒரு முறை கீழே விழுந்து அடிபட்ட இடத்தை ஏதோ இலையைக் கொண்டு கட்டி அதன் ரத்தத்தை உடனடியாகக் காய வைத்துக் காயத்தையும் ஆற்றியது நினைவுக்கு வந்தது.
ஏனோ இத்தனை நாளாய் அந்த நினைவுகள் அற்று இருந்தன. மனதை உறுத்தியது. கோலாலம்பூர் தன்னை மாற்றியதா அல்லது கோலாலம்பூர் போன்ற பட்டணத்திற்காகத் தன்னை மாற்றிக்கொண்டானா என்கிற கேள்வி மூளைக்குள் முளைவிடத் தொடங்கின. பரபரப்பு வாழ்க்கை என்கிறோம். நேரம் காலமின்றி உழைப்பதாகச் சொல்கிறோம். ஆனால் அடுத்தவர்களைக் கண்டு பொறாமை கொள்ளவும் புரளி பேசவும் எப்போதும் கால நேரத்தை அதிகமாகவே வைத்திருக்கிறோம். இயற்கையோடு ஏன் இப்படியொரு இடைவெளி வந்தது. அந்த முதியவர் உண்மையில் யார். எதற்காக என்னிடம் ஏதேதோ பேசினார். எதற்கு என்னுடைய பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டார்.
காற்று குளிர்ந்து வீசுவதை உணர்ந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு காற்றில் பச்சை இலைகளின் வாசனை அவனுக்கு ஆழ்ந்த சுவாசத்தைக் கொடுத்தது. சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். ஆங்காங்கு ஒவ்வொரு பெருத்த மரங்கள் இவனைப் பார்த்ததும் அன்பு பாராட்டும் விதமாக ஒரு குலுக்கு குலுக்கியதில் உண்மையில் சிரித்தேன் விட்டான்.
மின் தூக்கிக்கு வந்து சேர்ந்தான். அங்குக் கதவுக்கு அருகில் ஒரு பூச்சட்டியில் அதில் புதிதாய் பூத்திருந்த நீல சிற பூவும் கண்ணில் பட்டது. நீல பூ செடிக்கு அருகில் சென்றான். கள்ளங்கபடம் ஏதுமின்றி சிறுவனாகத் தன்னை நினைத்துக்கொண்டு செடியைத் தடவிக் கொடுத்தான். அதுவும் இவனுக்காக வளைந்து கொடுத்தது. கீழே அதன் சிறிய கிளை ஒன்று முறிந்து விழுந்திருந்ததைக் கண்டான். அதனை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து சில வினாடிகள் அதனையே பார்த்துக் கொண்டிருந்தவன், செடியை பார்க்கலானான். அதன் ஓர் இடத்தில் முறிந்த அச்சு தெரிந்தது.
மணி தன் கையில் இருக்கும் முறிந்த சிறிய கிளையை அச்செடியின் அச்சில் வைத்தான். முறிந்த கிளை மீண்டும் அதனைத் தனதாக்கிக்கொண்டது. மணி, அச்செடியைத் தடவிக்கொடுத்து கண் கலங்கிய நிலையில் மின் தூக்கியில் நுழைந்தான். அதன் கதவு சாத்துவதற்கும் அந்தச் செடியில் கிளை ஒன்று மணியைப் பார்த்து கையைசக்கவும் சரியாக இருந்தது.
Courtesy : In Featured Image – Illustrator graphics By Francesco Ciccolella
எழுதியவர்
- மலேசியா நாட்டைச் சார்ந்த தயாஜி, முன்னாள் (மலேசிய) அரசாங்க வானொலி அறிவிப்பாளர். புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை எனும் இணைய புத்தக அங்காடியை நிறுவி நடத்தி வருகிறார். இதுவரையில் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ என்ற பத்திகள் தொகுப்பும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’,'குறுங்கதை எழுதுவது எப்படி ? - 108 குறுங்கதைகள்' தொகுப்பும் ,‘பொம்மி’ கவிதைகள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ எனும் பதிப்பகத்தையும் தொடங்கியிருக்கிறார். குறுங்கதை பயிற்றுனராகவும் செயல்படும் இவர், மலேசிய தொலைக்காட்சி வானொலி படைப்புகளுக்கு எழுத்தாளராகவும் இருக்கிறார்.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023இயற்கையின் கையசைப்பு…