கல்லூரி முடித்து ஓரிரு வருடங்கள் உள்ளூரிலேயே சில்லறை வேலைகளில் கை செலவுக்கு ஒப்பேற்றிக் கொண்டிருந்தவன், அவ்வப்போது சில பெரிய கம்பெனிகளுக்கு தன்னுடைய ப்ரோஃபைலை அனுப்பிக் கொண்டும் சில இன்டர்வ்யூக்களுக்கு போவதும் வருவதுமாக இருந்தான். முயற்சி வீண் போகாமல் அவன் படித்த படிப்பிற்கேற்ற வகையில் மாநகரத்தில் வேலை கிடைக்க மகிழ்ச்சியுடன் ஊருக்கு விடை சொல்லி பட்டணத்திற்கு பஸ் ஏறினான்.
கம்பெனி, நகரத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தள்ளி SEZ எனப்படும் தொழிற்பேட்டையில் இருந்தது. ஆஃபர் லெட்டரை கையில் எடுத்துக் கொண்டு முதல் நாள் பெட்டி படுக்கையுடன் நேரே கம்பெனிக்குச் சென்று விட்டான். அவனைப் போல் சிலரும் அன்று வேலையில் சேர வந்திருந்தார்கள் போலும். ஹெச்ஆர் அவனுடைய ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்டுகளை சரி பார்த்து விட்டு, “வாங்க, ஜாய்னிங் ஃபார்மாலிடீஸ் முடிச்சிரலாம்ன்”ன்னு கூட்டிட்டுப் போய் அவளுடைய கேபினில் உட்கார வைத்து விட்டு, “ஐ அம் கோயிங் ஃபார் எ டீ, நீங்க வர்றீங்களா?” எனக் கேட்க, “நோ, தேங்க்ஸ்..” என வெட்கத்துடன் மறுத்து விட்டான். அவன் வாழ்க்கையில் அன்று தான் முதல் முறையாய் ஒரு பெண் அவனை டீ சாப்பிட கூப்பிட்டிருக்கிறாள்.
அரைமணி நேரம் கழித்து வந்த ஹெச்ஆர் அவனிடம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் கொடுத்து, “முழுசா படிச்சு பாத்து ரெண்டுலயும் கையெழுத்துப் போட்டு ஒன்னை நீங்க வெச்சுகிட்டு இன்னொன்னை எங்கிட்ட கொடுத்திருங்க”ன்னு சொல்லி மீண்டும் எங்கேயோ எழுந்து போய் விட்டாள். அவளுடைய பெர்ஃப்யூம், அவள் வாயில் மென்று கொண்டிருந்த சூயிங்கம் வாசனைகளை மீறி அவள் சற்று முன் பிடித்திருந்த சிகெரட் வாசனையை அந்த அறை முழுவதும் நிரப்பி விட்டுச் சென்றிருந்தாள். அப்பாவின் பீடி வாடை துளியும் ஆகாதவனுக்கு அக் கணம் ஏனோ சிகெரட் வாசனை பிடித்திருந்தது.
அடுத்து மீண்டும் அரைமணி நேரம் கழித்து வந்தவள், அவன் கையெழுத்திட்டவை மற்றும் அவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒரு தனி ஃபைலில் போட்டு வைத்து பின் தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவனை அழைத்து அவனிடம், “இவரை மெடிக்கல் டெஸ்ட்க்கு அந்த டீமோட அனுப்பிடுங்க” என்றவள் இவனைப் பார்த்து, “அவர் கூட போங்க, உங்கள ஆஃபீஸ் வண்டியில ஏத்தி மெடிக்கல் டெஸ்டுக்கு அனுப்பி விடுவார், உங்களோட இன்னைக்கு ஜாயின் பண்ண இன்னும் சில பேரும் வருவாங்க, டெஸ்ட் முடிஞ்சதும் அதே வண்டியில ஏறி இங்கே வந்து என்னைப் பாருங்க, நான் சீட்ல இல்லன்னா எனக்கு கால் பண்ணுங்க, என்னோட நம்பர் இங்க இருக்க யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க”
மெடிக்கல் டெஸ்ட்டைத் தொடர்ந்து மதிய உணவு, கம்பெனி குறித்த விரிவான விளக்கம் மற்றும் ஹெச்.ஆர் பாலிசிகளை அவனிடம் விளக்கி விட்டு, சுடச் சுட வந்த ஐடி கார்டை அவன் கழுத்தில் அவளே மாட்டி விட்டு, அவனின் மேனேஜரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, “அக்சஸ் கார்ட், பஸ் ட்ரான்ஸ்போர்ட்டேஷன், அப்புறம் வேற எது வேணும்னாலும் என்னோட டீம்ல இருக்க யாரை வேணாலும் கேட்டு வாங்கிக்கோங்க” என்றபடி சென்று விட்டாள். மேனஜர் அவனை அந்த டீமில் இருந்தவர்களிடம் ஒவொருவராக அறிமுகப்படுத்தி, பின் அவனை அசிஸ்டன்ட் மேனேஜரிடம் ஒப்படைத்து விட்டு எங்கோ சென்று விட்டார்.
அவரிடம் தங்குவதற்கான இடம் குறித்து அவன் கேட்க, டீமில் இருந்த இருவரை வரச் சொல்லி, “ஏம்ப்பா, நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தானே தங்கியிருக்கீங்க, இன்னொரு ஆளுக்கு இடம் இருக்குமா?” எனக் கேட்க.. உடனே கிடைத்தது. அவர்களுடன் சட்டென ஒட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த அசிஸ்டன்ட் மேனேஜர் அவனிடம், “நாளையில இருந்து உனக்கு செகன்ட் ஷிஃப்ட் போட்டிருக்கு, மதியம் ஒரு மணியில இருந்து நைட் பத்து மணி வரைக்கும்”
அவனின் ரூம் மெட்ஸ் அன்று ஜெனரல் ஷிஃப்ட்டில் இருந்ததால் அவர்களுடனே மாலை ஐந்தரைக்கு கிளம்பி விட்டிருந்தான். கம்பெனி பஸ்ஸில் ஏறிக் கொண்டு புது ஊரை வேடிக்கை பார்த்தபடி வந்தவனை எழுப்பினார்கள், “வா, இது தான் நம்ம ஸ்டாப், நாளைக்கு ட்ரான்ஸ்போர்ட் டீமுக்கு அப்டேட் பண்ணிடு” என இறங்கியவர்கள் அருகே சென்று ரோட்டாரமாக நின்றனர்.
“இங்கே ஏன் நிக்கிறோம்?”
“இங்க இருந்து நம்ம ரூம்க்கு ஒன்னரை கிலோமீட்டர் போகணும், வெயிட் பண்ணு ஷேர் ஆட்டோ வரும்”
“நாளைக்கு எனக்கு செகன்ட் ஷிஃப்ட் சொல்லியிருக்காங்க, முடிஞ்சு இங்க வர்றதுக்கு எப்படியும் பத்தரை பதினொன்னு ஆகுமே, அந்த நேரத்துக்கு ஷேர் ஆட்டோ வருமா?”
“நைட் ஷோ முடிஞ்சு வர்றவங்க வரைக்கும் வரும், நீ ஒன்னும் கவலைப் படாதே”
ஷேர் ஆட்டோ வர, அதில் ஏறி போகும் வழியை கவனமாகப் பார்த்துக் கொண்டான். நிறுத்தம் வர, அவர்களுடன் இறங்கி ரூமிற்குச் சென்று உண்டு உறங்கி அவர்களுடன் ஐக்கியமாகப் பழக ஆரம்பித்தான். காலை அவனுக்கு முன்பாக எழுந்து கிளம்பியவர்கள் அவனிடம், “நேத்து இறங்கிய இடத்துக்கு எதிர்ல ஷேர் ஆட்டோ ஏறிக்கோ, பஸ்ஸும் நேத்து இறக்கி விட்ட இடத்துக்கு எதிர்ல தான் நிக்கும், ட்ரான்ஸ்போர்ட்க்கு போன் பண்ணி சொல்லிடு, அவங்க ட்ரைவர்ட்ட சொல்லிடுவாங்க, 12 மணிக்கு முன்னாடி கெளம்பிடு, அப்போ தான் கம்பெனிக்கு வந்து சாப்பிட்டு வேலையை ஆரம்பிக்க சரியா இருக்கும்”
தான் இயந்திரமாக மாறப் போவதை லேசாக உணர ஆரம்பித்தான். திரும்பப் படுக்க மனம் வராமல் எழுந்து பாலில்லாமல் டீ போட்டு குடித்தான், பின் குளித்தான், வெளியே சென்று ஒரு தள்ளு வண்டி கடையில் ஐந்தாறு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, ஒரு தம்மை பற்ற வைத்த போது சுதந்திரமாக உணர்ந்தான். இதே நம்ம ஊராக இருந்தா யார் கண்ணுல பட்ருவோமோன்னு பயந்து பயந்து திருட்டு தம் அடிக்கணும், இங்க இனிமே அந்த பிரச்சனையே இல்லனு நினைக்கும் போதே அவனுக்கு புதிய ஊர் பிடிக்க ஆரம்பித்து விட்டது.
அவர்கள் சொன்னபடி கிளம்பி கம்பெனிக்கு சென்று உள்ளே நுழைய முற்பட்ட போது தடுத்து நிறுத்திய செக்யுரிட்டி, “ஐடி கார்ட்?” என கேட்க, அதுவரை ஐடி கார்ட் அணிந்து பழக்கமில்லாத காரணத்தால் மறந்தவன், உடனடியாக தன் அசிஸ்டன்ட் மேனேஜருக்கு போன் செய்து நிலைமையை விளக்க, அவர் ஒருநாள் டெம்ப்ரரி ஐடி கார்ட் ஏற்பாடு செய்து உள்ளே வர வைத்தார். அன்று முழுவதும் ட்ரெயினிங்கில் கழிந்தது. இரவு பத்து மணிக்கு ஐடி கார்டை கழட்டி கேட்டில் கொடுத்து விட்டு பஸ் ஏறினான்.
ஒரு சிலர் வர லேசாக தாமதம் ஏற்பட்டு பஸ் மெதுவாக கிளம்பியது. அவனுடைய ஸ்டாப்பில் வந்து இறங்கிய போது மணி கிட்டத்தட்ட இரவு பதினொன்று ஆகி விட்டிருந்தது. ஷேர் ஆட்டோவிற்காக நின்றவன், சட்டென யோசனை வந்தவனாக அருகே அப்போது தான் பூட்ட ஆரம்பித்த பெட்டிக் கடையில் அரை பாக்கெட் கோல்ட் ஃபில்டர் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்த படி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஐந்து நிமிட நடைக்குப் பிறகு சாலையில் இவனும் ஓரிரு நாய்களும் மட்டுமே இருந்தனர். சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிய போது அவனருகே ஒரு போலீஸ் வண்டி வந்து நின்றது.
உள்ளிருந்து வந்த குரல், “எங்கே போற?” எனக் கேட்க,
சற்றே பதட்டமானவன், “வீட்டுக்குப் போறேன்” என்றான்.
“வீடு எந்த ஏரியா?”
வீடு இருந்த இடத்தின் பெயர் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் விட்டது அப்போது தான் அவனுக்கு உரைத்தது, “இங்க தான் பக்கத்துல”
“பக்கத்துலன்னா, இடத்துக்குப் பேர் இல்லையா?” எஸ்ஐ தலை வெளியே நீட்டி கேட்டது.
“இல்ல, நான் ஊருக்குப் புதுசு, பேர் தெரியல”
“பேர் தெரியாம என்னடா பண்ற?” குரலில் சந்தேகத் தொணி காணாமல் போய் கடுமை ஏறியது.
“இல்ல, இங்க கம்பெனில வேலைக்கு ஜாயின் பண்ணிருக்கேன்”
“என்ன கம்பெனி?”
சொன்னான்.
“ஐடி கார்ட் எடு”
“அது.. மறந்து வீட்டுல வெச்சிட்டு போயிட்டேன், வீட்ல இருக்கு”
“சரி, வண்டியில ஏறு”
“ஏன்?”
“உன்னை நாங்களே வீட்டுல கொண்டு போய் விடுறதுக்கு தான், ஏறு”
“இல்ல சார் பரவால்ல, நான் நடந்தே போயிடுறேன், பக்கம் தான்”
“த்தா.. மூடின்னு ஏர்றியா, இல்ல இறங்கி அடிச்சு ஏத்தணுமா?”
நடுங்கினான். “சார், நான் எதுவுமே பண்ணலையே, என்னை எதுக்கு போலீஸ் வண்டியில போய்..”
அவன் பேசி முடிக்கும் முன் வண்டியிலிருந்து இறங்கிய கான்ஸ்டபிள் ஒருவன் அவனுடைய சட்டை காலரை இழுத்து சுருட்டி பிடித்த படி, “ஒரு வார்த்தையில சொன்னா ஏற மாட்டியாடா? வா..” என இழுத்து வண்டியின் பின் சீட்டில் ஏற்றி அருகில் அவனும் நெருக்கியபடி உட்கார்ந்து கொண்டான்.
“சார், நான் ஒன்னுமே பண்ணல, இன்னைக்கு தான் கம்பெனில வேலைக்கு சேர்ந்து..” சொல்லி முடிக்கும் முன் அவன் பின்னங்கழுத்தில் ஒரு அடி விழுந்தது.
எஸ்ஐ, “டேய்.. ஸ்டேஷன் வர்ற வரைக்கும் ஒரு வார்த்தை பேசக் கூடாது, எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கோ, புரியுதா?”
வண்டி போன வழி அவனுக்குப் புதிதாக இருக்க, அடுத்த பத்து நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது. அந்த கான்ஸ்டபிள் அதே போல் அவன் சட்டையைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு போக, அவனுடைய கையை லேசா விலக்கி விட்டு, “விடுங்க சார், நானே வர்றேன்..” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காதது போல் உள்ளே கொண்டு விட்டான். வாழ்க்கையில் முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் அழைத்து வரப் பட்டிருந்தான்.
நள்ளிரவு.. அங்கிருந்த லாக்அப்பில் இருவர் ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தனர். வயர்லெஸ்ஸிலிருந்து விடாமல் கரகரவென யாராரோ பேசிக் கொண்டிருந்தனர். கழற்றி மாட்டப் பட்டிருந்த காக்கி உடைகள், ஷெல்ஃப்பில் அடுக்கப் பட்டிருந்த நைந்த பேப்பர் கட்டுகள், பழைய மர டேபிள், பீரோ, ஜன்னல், கதவுகள், அங்கிருந்த ஐந்தாறு போலீசுகள் என எல்லாமுமாகச் சேர்ந்து அவன் மூக்கில் அதுவரை பழக்கப்படாத விரும்பத்தகாத ஒரு புது வாடையை ஏற்றியது.
அவனை ஒரு மூலையில் நிற்க வைத்து விட்டு, அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். வயர்லெஸ் விடாமல் அலறிக் கொண்டிருந்தது. அவனுக்கு எதிரில் இருந்த பெஞ்சில் உட்காராமல் இரு திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர். தண்ணியைக் குடித்து விட்டு வந்த எஸ்ஐ அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு ஒரு தரம் சொன்னா மண்டையில ஏறாது இல்ல..”
“இல்லீங்கய்யா, நாங்க எப்பவும் போல தர்றவங்ககிட்ட காசு தான் வாங்கினு இருந்தோம்”
“அப்போ வேற எதுவும் பண்ணல?”
“அந்த கடவுளுக்கு அறிய சத்தியமா வேற எதுவும் பண்ணலங்க”
திரும்பிப் பார்த்து சிரித்து, “கேட்டீங்களா ஏட்டய்யா கதைய..”
“அய்யா சாமி சத்தியமா..”
“ஏய்.. கேள்வி கேட்டா மட்டும் தான் பேசணும், அதுவரைக்கும் மூடிட்டு இருக்கணும் புரியுதா?”
“.. .. ..”
“கையில எவ்ளோ பணம் வெச்சிருக்கீங்க?”
இருவரும் ஜாக்கெட்டிலிருந்த சில ரூபாய்த்தாள்களை எடுத்துக் காட்டினர்.
எஸ்ஐ, “என்ன இவ்ளோ தானா? நூறு ரூவா நோட்டெல்லாம் ஜட்டிக்குள்ள இருக்கா?”
“.. .. ..”
“இவ்ளோ தாங்கய்யா இருக்கு”
ஒரு கான்ஸ்டபிள் பெயரைச் சொல்லி அழைத்த எஸ்ஐ அவனிடம், “இவங்கள கூட்டிட்டு போய் கம்ப்ளீட்டா ஃபுல்லா செக் பண்ணிட்டு, வாங்கிட்டு அனுப்பிடு” என சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்து, “இனிமே ஒழுங்கா இருக்கணும் புரியுதா? 9 மணிக்கு மேல கண்ணுல படக் கூடாது, போ..” என்றான்.
“சரிங்கய்யா’ என அவர்கள் தயக்கத்துடன் நகர,
“எத்தனை மணிக்கு மேலன்னு சொன்னேன்?”
“9..”
“ஆங்.. ஒம்போது” என பெரிய ஜோக் அடித்தது போல சிரிக்க, மற்ற போலீசுகளும் சிரித்தனர். அந்த கான்ஸ்டபிள் திருநங்கைகளை அங்கிருந்த தடுப்பு ஒன்றன் பின்னால் அழைத்துச் சென்றான்.
நடந்ததை எல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அவனை நோக்கித் திரும்பிய எஸ்ஐ, “ம்.. இப்போ சொல்லு உன்னோட கதையை..” என டேபிள் ஏறி உட்கார்ந்தான்.
“சார்.. இன்னைக்கு தான் நான் கம்பெனியில வேலைக்கு சேர்ந்த முதல் நாள், இந்த ஊருக்கு நேத்து தான் வந்தேன், வேற தப்பா எதுவுமே நான் பண்ணல”
“ம்.. உம் பேரென்னடா?”
சொன்னான்.
“ஆஹாங்..”
“சொந்த ஊரு?”
சொன்னான்.
“அங்கெல்லாம் எந்த வேலையும் இல்லாமத்தான் இங்க வந்தியா?”
“சார், நான் டிப்ளோமா மெக்கானிக்கல், அங்க அதுக்கு சரியான வேலை கிடைக்காது, அதான் இங்க..”
“உன் பாக்கெட்ல இருக்கிறதெல்லாம் ஒன்னு விடாம எடுத்து இங்க வை”
செல்போன், பர்ஸ், கர்சீஃப், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி, பேனா என அனைத்தையும் எடுத்து வைத்தான்.
“சட்டை, பேன்ட் உள் பாக்கெட்ல எதுனா வெச்சிருக்கியா?”
“உள் பாக்கெட் எதுவும் இல்ல சார்”
“அந்த பெல்ட்டை கழட்டு”
தயக்கத்துடன் கழட்டி வைத்தான். இதற்கிடையே அந்த திருநங்கைகளை திருப்பி வெளியே அனுப்பவிருந்த கான்ஸ்டபிளை அழைத்த எஸ்ஐ, “யோவ் இவனை கொஞ்சம் தரோவா செக் பண்ணு, எனக்கு இவன் மேல ரொம்ப சந்தேகமா இருக்கு”
அருகில் வந்த கான்ஸ்டபிள், “சட்டையைக் கழட்டு” என்றான்.
“சார், எங்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் அங்க வெச்சுட்டேன், வேற எதுவும் இல்ல”
“சட்டையைக் கழட்டு” என்றான் கொஞ்சம் கடுமையாக,
தயக்கத்துடன் முதல் பட்டனைக் கழட்டியவன் அருகில் சென்ற கான்ஸ்டபிள், “ஏன்டா, ஒரு தரம் சொன்னா மளமளன்னு செய்ய மாட்டியா?” எனக் கேட்டவாறே அவன் சட்டையை மேலிருந்து கீழ் இரண்டாகப் பிரிக்க, மீதமிருந்த பட்டன்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பிய்ந்து தெறித்தோடின. அவன் சட்டையைப் பிடுங்கி உதறிப் பார்த்து பெஞ்சின் மேல் வீசினான்.
அவன் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது.
கான்ஸ்டபிள், “பனியனைக் கழட்டு”
எதிர்ப்பு தெரிவிக்காமல் கழட்டி விட்டு வெற்றுடம்புடன் நின்றான்.
“பேன்ட்டை கழட்டு”
தயங்கினான்.
“நீயா கழட்டுறியா, இல்ல அதையும் நான் தான் கழட்டி விடணுமா?”
மெதுவாகக் கழட்டி அதைக் கால்களை மறைக்குமாறு பிடித்தபடி நின்றான்.
“அதை அங்க வை”
வைத்தான்.
“ஜட்டியக் கழட்டு”
“சார்..” அவன் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
“உனக்கு மட்டும் சாமான் என்ன தங்கத்துலயா செஞ்சு வெச்சிருக்கு? கழட்டுடா”
“சார்.. எதுவும் இல்ல சார்”
கான்ஸ்டபிள் எஸ்ஐயைப் பார்த்து, “சார், உள்ள எதுவும் இல்லன்னு சொல்றான் சார்”ன்னு சொல்லி சிரிக்க, எஸ்ஐ இன்னும் சத்தமாகச் சிரித்தான்.
“ஒரு ரெண்டு நிமிசம் தான், உடனே போட்டுக்கலாம், கழட்டு..”
அந்தத் திருநங்ககைள் இருவரும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
எஸ்ஐ, “இப்போ கழட்டப் போறியா இல்லையா?” எனக் கேட்டவாறே அருகில் இருந்த லட்டியை கையில் எடுத்து உருட்டினான்.
அவனக்கு பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து சிறுநீர் முட்டிக் கொண்டு வரும் போல் இருந்தது.
“கழட்டுடா..” என எஸ்ஐ லட்டிய ஓங்கிக் காட்ட, ஜட்டியை மெதுவாகக் கழட்டி முன் பக்கம் வைத்து மறைத்துக் கொண்டான்.
“அதை அந்த பெஞ்சு மேல வை”
வைத்து விட்டு, கால்களைக் குறுக்கி கைகளை முன்னே வைத்துக் கொண்டான்.
மீண்டும் லட்டிய ஓங்கிய எஸ்ஐ, “கை ரெண்டையும் மேலே தூக்கு..” எனச் சொல்லவும், இந்த பிரபஞ்சமே தன்னை நிர்வாணமாகப் பார்ப்பது போல் உணர்ந்து கைகளை மேலே தூக்கினான்.
அந்தத் திருநங்கைகளைப் பார்த்த எஸ்ஐ, “என்ன, நீங்க இன்னும் கிளம்பலியா? வேற எதுவும் பாக்கணுமா?” எனக் கேட்க, அவர்கள் விட்டால் போதும் என வெளியே வேகவேகமாக சென்று மறைந்தார்கள்.
லட்டியை அவனின் தலையில் வைத்த எஸ்ஐ கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக கீழிறக்கினான். கன்னம் கழுத்து, மார்பு, வயிறு, தொப்புள் என அவனின் சிவந்த உடலை லட்டியால் தேய்த்த படியே கவனித்துக் கொண்டு வந்தவன் கீழ்ப்பக்கமாக கொண்டு சென்று லட்டியால் அவனின் ஆண்குறியை தூக்கிப் பார்த்தான். பின், “திரும்பி நில்லுடா” என்றான்.
மரண பயத்துடன் திரும்பி நின்றான். மீண்டும் அதே போல் லட்டியை தலை, பின்னங்கழுத்து, முதுகு என இறக்கிக் கொண்டே வந்தவன் கால்கள் பிரியும் பிளவு மேட்டில் வைத்து நிறுத்தினான். எங்கே லட்டியை பின்னால் நுழைத்து விடுவானோ என அவனின் இதயம் திகீர் திகீர் என அடித்துக் கொண்டது. அவனின் இடது பக்க மேட்டில் கையால் லேசாக தட்டியவன், “ம்.. உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் நல்லாத் தான்டா இருக்கீங்க”
மீண்டும் டேபிள் மேல் ஏறி உட்கார்ந்த எஸ்ஐ, “ம்.. இப்போ சொல்லு, இங்க எதுக்கு வந்த? உன்னோட சேர்ந்த உங்காளுங்க இன்னும் எத்தனை பேர் வந்திருக்கீங்க? என்ன பிளான் பண்ணியிருக்கீங்க?”
“சார்.. நான் உண்மையைத்தான் சொல்றேன், என் செல்போனைக் குடுத்தீங்கன்னா ரூம்ல இருக்க என்னோட கூட வேலை செய்ற பசங்களுக்கு போன் பண்ணா என்னோட ஐடிய எடுத்துட்டு வருவாங்க”
“ஓ.. மாட்டிக்கிட்டா என்னவெல்லாம் பண்ணனும்னு முன்னாடியே பேசி வெச்சுட்டீங்களா?”
“அப்டியெல்லாம் கிடையாது சார், உங்களுக்கு நம்பிக்கையில்லன்னா நீங்களும் என் கூட ரூம்க்கு வாங்க, தங்கியிருக்க இடத்தைக் காட்டுறேன்”
“தெரியும்டா உங்கள பத்தி, எத்தனை கேஸ பாத்திருப்போம்” என்றபடியே எஸ்ஐ அவனுடைய செல்போனை எடுத்தான்.
“சார், என் ரூம் மெட்ஸ் பேர் சொல்றேன், அவங்க நம்பர் அதுல இருக்கும், வேணும்னா நீங்களே போன் பண்ணி கேட்டுப் பாருங்க..”
“டேய், இங்க பார்.. நான் கேட்டா மட்டும் தான் நீ பதில் சொல்லணும், ஒரு தரம் தான் சொல்லுவேன், புரியுதா?”
“சரிங் சார்..”
செல்போனை எடுத்த எஸ்ஐ, கால் ஹிஸ்டரி சென்று பார்த்தான், அதில் லாஸ்ட் டயல்ட் எண்களில் முதலாக ‘பட்டு’ என்றிருக்க, “யார்றா பட்டு?” என அவனைக் கேட்டுக் கொண்டே டயல் செய்தான்.
“சார்.. அது வந்து..” என அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன், மறுமுனையில் ஒரு பெண், “ம்ம்.. சொல்லு, என்ன இந்த நேரத்துல?” எனக் கேட்க,
ஸ்டேஷன் இருந்த ஊர்ப்பெயரை சொன்ன எஸ்ஐ, “இந்த நம்பர் வெச்சிருக்க ஆளு உங்களுக்கு என்ன வேணும்?””எனக்குத் தெரிஞ்சவங்க தான்”
“தெரிஞ்சவங்கன்னா யாரு?”
“சார், அது என்னோட லவ்வர் தான், அவன் என்ன சார் பண்ணினான்?”
“உன் பேரென்ன?”
சொன்னாள்.
“உன் அப்பா என்ன பண்றாரு?”
“பஜார்ல வெல்ல மண்டி வெச்சிருக்கார் சார்”
“கடை பேரு என்ன?”
“சார்..”
“சொல்லும்மா, கடை பேர் என்ன?”
“ரத்தினம்பிள்ளை மண்டி”
“ஏம்மா, யாராரை லவ் பண்றதுன்னு உங்களுக்கெல்லாம் ஒரு வெவஸ்தை கிடையாதா?”
“சார், அவனையும் அவன் குடும்பத்தையும் சின்ன வயசுல இருந்தே எனக்கு நல்லா தெரியும், அவன் எந்த தப்பும் பண்ண மாட்டான் சார்”
“உங்கப்பா கிட்ட குடு, கேப்போம்”
“சார், இந்த நேரத்துல வேணாம் சார்”
“சரி, நீ வை, தேவைப்பட்டா அப்புறமா கூப்பிடுறேன்”
போனை கட் செய்தவன், “பாத்தீங்களா ஏட்டய்யா, எங்க இருந்துகிட்டு எங்க போய் புள்ளைங்கள கரெக்ட் பண்றானுங்க” என்றபடியே டேபிள் மேலிருந்து அவனுடைய சிகரெட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.
வயர்லெஸ் இவர்களைக் கேட்டு அலறியது போலும், ஏட்டு எடுத்து பேசிவிட்டு எஸ்ஐயிடம் வந்து, “அய்யா, வாட்டர் டேங்க் பக்கத்துல ஏதோ குடிச்சிட்டு சத்தம் போட்டுட்டு இருக்கானுங்களாம், கன்ட்ரோல் ரூம்க்கு போன் போயிருக்கு”
“வண்டிய எடுங்க, ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோம்”
எஸ்ஐ அவனைப் பார்க்க, “சார், நான் போலாமா?”
“துணிய எடுத்து போடு”
அவசர அவசரமாக ஜட்டியைப் போட்டவன் பேன்ட்டைக் கையில் எடுக்க, தடுத்த எஸ்ஐ, “டேய்.. உன் கிட்ட இன்னும் விசாரிக்க வேண்டியது இருக்கு, நான் வர்ற வரைக்கும் அங்க உட்காந்திரு” என ஒரு மூலையைக் காட்டினான்.
துணியை எடுக்கப் போனவனை தடுத்து, “என்ன, ட்ரெஸ்ஸ மாட்டிட்டு அப்டியே ஓடிறலாம்னு பாக்குறியா? அதெல்லாம் மெதுவா போட்டுக்கலாம், போடா” என்றபடி வெளியே சென்று விட்டான்.
ஒரு கான்ஸ்டபிள் அவனிடம் வந்து, “அதான் அங்க உட்கார சொல்லியிருக்காருல்ல, போய் உட்காருபா, அவரு வந்த உடனே அனுப்பிடுவாரு”ன்னு சொல்ல, குறுகிய படி அந்த மூலையில் உட்கார்ந்தான்.
நள்ளிரவைத் தாண்டி நேரம் போய்க் கொண்டிருந்தது. ஸ்டேஷனில் இருந்த இரண்டு போலீசுகளும் சேரில் அமர்ந்தபடியே அரைத் தூக்கத்தில் இருந்தார்கள். துணியை எடுத்துக் கொண்டு அப்டியே ஓடி விடலாமா என்று யோசித்தவன் அவனுடைய செல்போனும் பர்ஸும் ஒரு டேபிள் ட்ராயருக்குள் வைத்து பூட்டியிருப்பதை நினைத்து அந்த எண்ணத்தைக் கை விட்டான். சிறுநீரின் உந்துதல் ஒரு வழியாக அடங்கியிருந்தது.
இரண்டு இரண்டரை மணி வாக்கில் சைக்கிளில் ஒரு பெரியவர் ஸ்டேஷனுக்கு டீ கொண்டு வந்தார். “டீ வேண்டுமா?” என்று கேட்ட ஒரு போலீசிடம் வேண்டாம் என சைகையில் சொன்னான். அந்தப் பெரியவரிடம் எப்டியாவது சொல்லியனுப்பலாம் என்றாலும் ரூம் மெட்ஸ்ன் பெயர்களைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் இருந்தான்.
அதிகாலை நாலரை மணிக்கு எஸ்ஐ வந்தான், எங்கேயோ வண்டியை நிறுத்தி தூங்கி விட்டு வந்திருந்தது அவன் கண்களில் தெரிந்தது. வந்தவன் நேரே டேபிளில் இருந்த அவனுடைய செல்போனை எடுத்து ஏதாவது கால் வந்திருக்கிறதா என கால் ஹிஸ்டரியைப் போய் பார்த்தான். பின் அவனைப் பார்த்து, “என்னடா, நல்லா தூங்குனியா?” என நக்கலாகக் கேட்டு விட்டு, “எல்லாம் வெவரமாத் தான்டா வேல பாக்குறீங்க” என்றவன் கழிவறைக்குச் சென்றான்.
சிறிது நேரம் கழித்து வந்து, “உன் துணிமணி எல்லாம் எடுத்து போட்டுக்கோ” என்றவன், “ஏட்டய்யா, இந்த பாத்ரூம் ஏன் இப்படியிருக்கு? எவனையாச்சும் விட்டு க்ளீன் பண்ணக் கூடாதா? காலையில இன்ஸ்பெக்டர் வந்தா அதுக்கு வேற தனியா சத்தம் போடுவாருல்ல..” என குரல் கொடுக்க, அந்த ஏட்டு, “இந்தா லாக்கப்ல இருக்க ஒருத்தனை வெச்சு இப்போ பண்ணிடலாம்யா”
எஸ்ஐ, “அதெல்லாம் வேணாம்” என்றவன், பிய்ந்து போன சட்டை பட்டன்களுக்குப் பதில் குண்டூசிகளை வைத்து குத்திக் கொண்டிருந்தவனை நோக்கி, “டேய், அந்த பாத்ரூமையும் வாஷ் பேசினையும் நல்லா கழுவி விட்டுட்டு கெளம்பு” என்றான்.
“சார்.. என்ன சார்?”
“ஏன், செய்ய மாட்டீங்களோ? நானாவது பரவால்லடா, காலையில இன்ஸ்பெக்டர் வந்தாருன்னா லட்டிய எடுத்து அடிச்சு உடைச்சிட்டு தான் கேள்வியே கேட்க ஆரம்பிப்பாரு, போடா, போய் சுத்தமா கழுவி விட்டுட்டு நீ பாட்டுக்கு கெளம்பி போயிட்டே இருக்கலாம்”
கர்சீப்பை எடுத்து மூக்கையும் வாயையும் கட்டியவன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் போலீஸ் ஸ்டேஷனின் பாத்ரூமையும் வாஷ்பேசினையும் சுத்தம் செய்து விட்டு வந்து நின்றான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருக்க, கைகள் தானாக நடுங்கிக் கொண்டிருந்தன.
அவனுடைய போனை எடுத்து கொடுத்த எஸ்ஐ, “உன்னோட ரூம்ல இருக்கவனுக்கு போன் பண்ணி உன்னோட ஐடி கம்பெனி ஐடி கார்ட், அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் ரெண்டையும் எடுத்துட்டு வரச்சொல்லு” என்றான்.
போன் செய்து சொன்னான்.
அடுத்த இருவது நிமிடங்களில் அவர்கள் இருவரும் வந்து நின்றனர். எஸ்ஐ அவற்றை வாங்கிப் பார்த்து விட்டு அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு விட்டு, “இவனுங்ககிட்ட எல்லாம் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என சொல்லிவிட்டு, “ஏட்டய்யா, இவனோட கைரேகையை எடுத்துக்கிட்டு டீடைல்ஸ் எல்லாம் எழுதி வாங்கிட்டு அனுப்புங்க”
“சார், கைரேகை எதுக்கு சார்?’
“அவசியம் தெரிஞ்சே ஆகணுமா?”
“சார், அது வந்து..”
“ஏற்கனவே நடந்த சம்பவத்துல உன்னோட கை ரேகை எதுவும் இருக்கான்னு செக் பண்ணுவோம், நீ தான் நல்லவனாச்சே, ஏன் பயப்படுற? குடுத்துட்டு கெளம்பு, இன்ஸ்பெக்டர் வர்ற நேரமாச்சு”
அவனுடைய இரு கைகளிலும் மை தடவப்பட்டு அவனுடைய கை ரேகை ஒரு நீண்ட நோட்டுப் புத்தகத்தில் பதியப்பட்டது. அவனிடம் ஒரு அச்சடித்த தாளைக் கொடுத்த கான்ஸ்டபிள், “இதுல உன்னோட பேர், அட்ரஸ், செல்போன் நம்பர் எல்லாத்தையும் எழுதி ஃபில் பண்ணிக் கொடு” என நீட்டினான்.
பள்ளியிலும் கல்லூரியிலும் அட்டென்ட்டென்ட்ஸ் எடுக்கும் போது அவன் பெயர் தான் முதலில் வரும், அதில் அவனுக்கு ஒரு பெருமையும் கூட. அந்தத் தாளை கையில் எடுத்துப் பார்த்தவன் அன்று தான் முதல் முறையாக தன்னுடைய பெயரை உண்மையில் வெறுத்தபடி பெயர் என்ற இடத்திற்கு எதிரே எழுதினான்..
..அப்துல் மாலிக்..
- மலர்வண்ணன்
எழுதியவர்
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022கடமை கண்ணியம் தட்டுப்பாடு