ஒரு மழை நாளில் கடைத்தெருவிற்கு சென்று திரும்போது தனது காலையே சுற்றி சுற்றி வந்த அந்த சாம்பல் நிறப்பூனை அவனுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் சாலைகளில் செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி இறந்துவிடக்கூடாது என்றெண்ணித்தான் அந்த பூனைக்குட்டியை தூக்கிக்கொண்டான்.
அதன் கண்களுக்கு மேலாக இருக்கும் பெரிய ரோமங்கள் மழையில் நனைந்திருந்ததால் ஒன்றோடொன்று ஒட்டியிருந்தன. அதன் மேலுள்ள பஞ்சு போன்ற முடிகள் உடம்போடு ஒட்டி, அதன் இளம் சந்தன நிற உடல் தெரிந்தது. முகமும் கூட அப்படித்தான். மண்டை முழுக்க மழை நீர் வழிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. குளிர் தாங்கமுடியாமல் நடுநடுங்கிக்கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒருவிதமான பயமும் உயிர் பிழைத்திருக்கக்கூடிய பயமும் தொற்றிக் கொண்டு இருந்ததை அவனால் உணர முடிந்தது.
ஒயர் கூடையை கையில் மாட்டிக்கொண்டு அதே கையில் குடையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் அந்த பூனையை நெஞ்சோடு அணைத்தவாறு தூக்கிக்கொண்டான்.
அதன் உடம்பிலிருந்து ‘உர்….. உர்….’ என வெளியான அதிர்வு, அவனது உடலை சிலிர்க்க வைத்தது. அது பயத்தின் குறியீீீடா அல்லது உயிர் பிழைத்து விட்டோம் என்பதன் குறியீடா என்று அவனால் யூகிக்க முடியவில்லை.
அந்த பூனையை எப்படியாவது தெருவுக்குள் விட்டுவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே நடந்தான். அந்த பூனை நெளிந்து அவனது சட்டையோடு உரசி தனது உடலை சூடாக்கிக்கொண்டது.
மழையின் சாரலானது குடைக்கும் தரைக்குமிடையில் நுழைந்து, அவனை சன்னமாக நனைந்திருந்தது. அந்த சாரல் தன் மீது விழாதவாறு அவனது கையிற்கும் சட்டைக்குமிடையில் தன்னை நுழைத்துக்கொண்டது அந்த பூனைக்குட்டி.
குடையை மடித்து சன்னலில் தலைகீழாக மாட்டிவிட்டு வீட்டினுள் நுழைவதற்கு முன்னதாகவே அவனது அம்மா கேட்டாள் ” என்னடா தூக்கிட்டு வர ” என்று.
பூனைக்குட்டியை வீட்டில் விட்டதும் உடலை சிலிர்த்துக்கொண்டே உள்ளே ஓடியது. அதன் மீதிருந்த நீர்த்திவலைகள் ஒரு பூவிலிருந்து உதிரும் திவலைகள் போலவே இருந்தது.
ஒயர் கூடையை கீழே வைத்தான். அவன் அம்மா கேட்ட கேள்விக்கு இன்னமும் அவன் பதிலே சொல்லவில்லை. அவனது அம்மா அந்த பூனைக்குட்டியையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
” எங்கேருந்துடா தூக்கியார “அதற்குள் அந்த பூனைக்குட்டி அவர்களது வீட்டு அடுப்பங்கரைக்குள் சென்றுவிட்டிருந்தது.
பூனைகளுக்கு மட்டும்தான் தெரிகிறது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அடுப்பங்கரைகளின் விலாசம்.
அதன் பின்னால் சென்றவன் அதையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அது தனது கால்களால் அடுப்பங்கரையில் படர்ந்துக்கிடந்த சாம்பலை மிருதுவாக நீவி அடுப்பினுள்ளாக நுழைந்து சுருண்டுக்கொண்டது.
“த்தோ… இந்த குட்டிய நம்மளே வச்சிப்போத்தா ” தனது அம்மாவிடம் சொன்னான். அந்த பூனை சுருண்டு கிடப்பதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவனது அம்மாவின் விடைக்காக காத்திருந்தான்.
” ஒங்களுக்கு சோறு போடவே ங்கொப்பன் படுற பாடு நாய் படாத பாடா இருக்கு. இதுல பூனைக்குமா ” ஒரு கையால் காலில் மிதிப்பட்ட கிண்ணத்தை எடுத்து அம்மியின் மீது வைத்துக்கொண்டே பதில் சொன்னாள் அவனது அம்மா.
“இல்லத்தா …மழைல நனைஞ்சிகிட்டு இருந்துச்சு. அடிப்பட்டு செத்துடும்னு நெனச்சு தூக்கிட்டு வந்து நம்ம தெருல விட்டுடலாம்னு நெனச்சேன். யாரூட்லயாவது போயி அண்டிக்கும்னு நெனச்சன் . எங்கயோ போவுறதுக்கு பதிலா நம்மூட்லயே இருக்கட்டும்த்தா ” இப்போதும் கூட அந்த பூனையை பார்த்துக்கொண்டுதான் பேசிக்கொண்டிருந்தான்.
நன்கு வேயப்பட்ட கூரை வீடு. சுடாத செங்கற்களால் நிரப்பப்பட்ட சுவர், மழையின் சாரல் பட்டு கறைந்திருந்தது. உள்ளே ஐந்து ஜீவன்கள். இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பையன். கணவன் மனைவி. இப்போது இந்த பூனைக்குட்டியாக , இப்போது மொத்தம் ஆறு பேரானது குடும்பம்.துவைத்த துணிகளும் துவைக்காத துணிகளும் இரண்டற கலந்து நைலான் கொடி கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. இன்னொரு மூலையில் மண் பானைகளும் அலுமினிய பாத்திரங்களும். இவைகள் மட்டுமே பாதி வீட்டை அடைத்துக்கொண்டிருக்கும் வீடு அது. மீதி இடம் புழங்குவதற்கு. கொல்லைப்புரத்தில் அடுப்பங்கரை இருந்தது. அது யாருக்கோ திருமணமான ஒருவரின் அறிவிப்பு பேனரால் மூடப்பட்டிருந்தது.
இப்போது அந்த பூனைக்குட்டியின் பெயர் பூனாஸ் என்று அவனால் அழைக்கப்படுகிறது.
அவன் கல்லூரி முடித்து வீட்டிற்கு வரும் நேரம், பூனாஸுக்கு நன்றாக பழக்கப்பட்டு போனது. அவன் தாமதமாக வரும் நாட்களில் அங்கும் இங்குமாக ‘மியாவ் மியாவ் ‘ என்று திரிந்துகொண்டேயிருக்கும். கொஞ்சம் தாமதமானாலும் அவனும் நிலைகொள்ளாமல் வீட்டிற்கு செல்லவே எத்தனிப்பான். அதனாலேயே அவனை ‘ வயதுக்கு வந்த பெண் ‘ என்று கிண்டலடிப்பார்கள் நண்பர்கள்.
பின் கால்களை கீழே வைத்துக்கொண்டு முன்னங்கால்களை வாசலில் வைத்துக்கொண்டு சாலையை கடந்துபோகும் வாகனங்களை முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் பூனாஸ். முகத்தை சுற்றும் ஈக்களை தன முன்னங்கால்களால் லாவகமாக ஓட்டிவிடும் செய்கை யாரோ ஒரு பெரியவரை ஞாபகப்படுத்தும்.
பேருந்திலிருந்து இறங்கி வந்தவனை கண்டதும் ‘மியாவ்… மியாவ்… ‘ எனக் கத்திக்கொண்டு அவனது கால்களை சுற்றி சுற்றி அவன் மீது ஏறத்துடிக்கும். தனது உடம்பை கொண்டு அவனது கால்களை அழுத்தமாக உரசி சுற்றும். அவன் உடை மாற்றி லுங்கிக்குள் மாறும் வரை அவனை விடவே விடாது. இவனும் அதை கவனிக்கத்ததுபோல், நகர்ந்துகொண்டே இருப்பான். சில வேளைகளில் அவனை கீறி, தன் மீது கவனம் செலுத்த வைக்கும். ஆனாலும் உடை மாற்றும் வரை கண்டுகொள்ளாததுபோல் அவன் நடந்துகொள்வான்.
தரையில் பாயை விரித்து படுத்ததுதான் தாமதம் , அவனது நெஞ்சின் மீது கால்களை படர்த்தி அமர்ந்துகொள்ளும் ஒரு குழந்தையைப்போல ‘உர் … உர் .. ‘ சத்தத்தை அவன் மீது பாய்ச்சும். அவனுக்கு உடம்பெல்லாம் கூசும்.
பூனைகளின் பாசம்தான் எவ்வளவு அழகானது. மொழிகளற்ற மொழியில் பேசி, பாசத்தை கடத்துவது வாயில்லா உயிரினங்களின் சாட்சிகள் தானோ.?
சாப்பிடும் நேரங்களில் அவனது கைகளை சீண்டி சோறு கேட்கும். அவன் கண்டுக்கொள்ளாமல் இருக்கும்போது, அவன் கைகளை தட்டி விடும். ஒரு குழந்தைக்கு கிண்ணத்தில் சோறு போட்டு வைப்பதுபோல் , சுத்தமான ஒரு கிண்ணத்தில் பூனாஸுக்கு சோறு வைக்கப்படும். எந்த குழந்தையை போலவும், இது வேண்டும் அது வேண்டுமென்று ஒரு நாளும் அது அழுததில்லை.
இரவு நேரங்களில், தீபாவளி அல்லது பொங்கலுக்கு அங்காடியில் கொடுக்கப்பட்ட அப்பாவின் வேட்டியிலோ , அம்மாவின் புடவையிலோ போர்வையாக்கி தூங்குபவனின் இரண்டு கால்களுக்கிடையில் படுத்துக்கொள்ள போராடி வெற்றி பெறும் பூனாஸ் . அவனும் அதை தூங்க விடாமல் செய்து அலைக்கழித்து தோற்றுப்போவான்.
“ஏண்டா தூங்குற நேரத்துல அத கத்த வச்சி தொல்ல பண்ணுற ” கருத்த இரவு சூழ்ந்த இரவுகளில் ஒவ்வொரு நாளும் அவனது அம்மாவின் குரலுக்கு பிறகு எப்படியேனும் அந்த பூனைக்குட்டி அவனது கால்களுக்கிடையில் படுத்துறங்கி தனது இரவு தூக்கத்தை ‘உர் … உர் .. ‘ சத்தத்தோடு உறங்க செல்லும்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதனுடன் விளையாடுவான். அவனது வீட்டிலிருக்கும் கிழிந்த பாயை நகங்களால் கீறுவான். அது என்னவோ ஏதோவென்று அவனது கைகளை லாவகமாக பிடிக்க நினைக்கும். அவன் தனது கைகளை எடுத்து விடுவான். பளிங்குகளை உருட்டி விடுவான், அது எல்லா பளிங்குகளும் தனக்கான உணவென்று எண்ணி பிடித்து உன்ன பார்த்து தோற்று தூர தள்ளி விடும். கைகளை மேலே தூக்கி விரல்களை ஆட்டுவான், அது எக்கி பிடிக்க தாவி மேலெழுந்து கீழே விழுந்து இவனை முறைத்து பார்க்கும்.
அடுப்பங்கரையும் வீடும்தான் அதன் உலகம். இன்னும் ஓரிரு மாதங்களில் உணவைத்தேடி வேறு வீடுகளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் கருவாட்டு கூடையையோ அல்லது பாலையோ காலி செய்துவிட்டு அவர்களது கண்களில் மாட்டியதும், நல்ல பிள்ளையாக வீட்டிற்கு ஓடி வந்து அதே ‘உர் … உர்.. ‘ சத்தத்தோடு அவனது நெஞ்சிலோ அவனது மடியில அல்லது அவனது கால்களுக்கிடையிலோ படுத்துறாங்கலாம். அந்த நேரம் அவர்கள் வந்து நடந்தைச் சொல்லி சண்டை போடலாம். அதுவரை அவனது வீட்டில் செய்யும் மீன் குழம்பும் கருவாட்டுக்குழம்பும் அல்லது இன்னபிற ருசியான புளிக்குழம்பும் இப்போதைக்கு அதுக்கு போதுமானதாகவே இருக்கிறது.
எப்போதாவது, அவனது அப்பா அரசலாற்றில் பிடித்து வரும் மீன் அதுக்கு பிடித்தமான உணவு. மீனை ஆயும் நேரங்களில் கொல்லையை விட்டு நகரவே நகராது. மீன் குண்டானையும், மீன் செதில்களில் ஒட்டிக்கிடக்கும் துண்டு மீனிறைச்சியையும் உண்ண முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்து தின்று தீர்க்கும். கழுவிய மீன்களில் சில மீன்களை அவனது அப்பா எடுத்து வைப்பார். ஆற அமர உட்கார்ந்து, அந்த மீன்களை தின்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து அடுக்கு பானைகளில் இடுக்குகளில் படுத்துக்கொள்ளும்.
சனி ஞாயிறுகளில் மாடு மேய்க்க செல்லும்போது பூனாஸையும் தன்னோடு தூக்கி செல்வான் அவன். அவனும் அதனுடன் விளையாடுவதை ஒரு குழந்தையுடன் விளையாடுவதாகவே நினைத்து விளையாண்டுக் கொண்டிருப்பான். அங்குள்ள அதற்கான உணவுகளை தேடிப்பிடித்து உண்ணும். தலைக்கு மேல் பறக்கும் பூச்சிகள், ஊர்ந்து செல்லும் வண்டுகள், இன்னும் சில அதன் உணவுகளை மெதுவாக காத்திருந்து பாய்ந்து ஒரு சிறுத்தையை போலவோ அல்லது ஒரு புலியை போலவோ பிடித்து உண்ணும். சில நேரங்களில் எலி வலைகளின் முன் அமர்ந்து, காத்திருந்து எலிகளை பிடித்தும் உண்ணும்.
வயல்வெளிகளில் படுத்து உருண்டு துள்ளி விளையாடும். அதன் நகங்களால் மண்ணை கீறி, எதையாவது தேடும். சிறிது நேரம் கழித்து அவனுடன் வந்து விளையாடும்.
மேய்ந்துகொண்டிருக்கும் மாட்டுடன் சண்டைக்கு போடும். அவனது மாட்டிற்கும் பூனாஸிற்கும் ஆகாது. அதன் சிறிய கொம்புகளால் முட்டப்போகும். அது துள்ளி குதித்து பாய்ந்து சென்று, மீண்டும் வம்பிழுக்கும். பூனாஸ் தனது முன்னங்கால்களால் மாட்டின் முகத்தை சீண்டும். மாடு தனது மேய்ச்சலை நிறுத்தி பூனாஸோடு ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு நிற்கும். கடைசியில் தோற்று மீண்டும் தனது மேய்ச்சலை துவங்கும்.
மேய்ந்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போதும் கூட சண்டைதான். நடந்து செல்லும் மாட்டின் கால்களுக்கிடையில் நுழைந்து கால்களை கீறும். நாடானது அங்கும் இங்கும் கால்களை வைத்து நடந்து செல்லும்.
***
அந்த துயர சம்பவம் அன்று நடக்குமென்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவன் கல்லூரி விட்டு வீடு வந்து சேருவதற்குள்ளாக ஏதோவொரு இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் மாட்டி தனது பிஞ்சு உடலின் பாதி நசுங்கி இடுப்பிற்கு மேல் நசுங்காமல் இரத்தக்கறையுடன் ரோட்டின் ஓரமாக கிடந்த பூனாஸை, அவனது அம்மா வாசலில் ஒரு கிழிந்த சாக்கில் கிடத்தி அழுதுக்கொண்டிருந்தாள் .
பேருந்தை விட்டு இறங்கி, அவனது அம்மா அழுவதை பார்த்ததும், அவனுக்கு என்னமோ ஏதோவென்று பதைபதைக்க வைத்தது. வாசலை பார்த்தான். அவனது அம்மாவை பார்த்தான். பூனாசை பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை. அவனை பார்த்ததும் தலையை தொக்கி ‘மியாவ்.. மியாவ்..’ என கத்த நினைத்தது. ஆனால் தோற்றுப்போனது.
தனது உடலை அவனது மேல் படர செய்து தனது ‘உர்.. உர் …’ அலைகளை படரவிட்டு , அவனை சிலிர்க்க வைக்க நினைத்தும் தோற்றுப்போனது. தனது கையிலிருந்த நோட்டுகளை கீழே போட்டுவிட்டு. ஓவென கத்தினான்.
அவனது ஆத்தா ( அப்பாவை பெற்றவள்) இறந்தபோது கூட அவன் இப்படி அழுததில்லை. அவள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தான். அப்போது அவன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் இப்படியாக ‘ஓவென்று’ இவ்வளவு சத்தமாக அழுததில்லை.
முதன் முதலாக அந்த குட்டியை தூக்கி நெஞ்சோடு அமர்த்திக்கொண்ட நாள் முதலாக, அதன் ஒவ்வொரு குறும்புகளும் அவனது கண் முன்னே வந்து போனது. அதன் பிஞ்சு கால்கள் அவனது நெஞ்சை நீவி விடும் அப்பழுக்கற்ற பாச உணர்வு அவனது கூடப்பிறந்த யாரோ ஒருவர் இறக்க காத்திருக்கும் அச்சத்தை அவனுக்குள் அள்ளி தெளித்து.
பூனாஸ் உயிரோடுதான் இருக்கிறது. அனால் உடல் மட்டும் பாதியாக. அந்த உடல் முளைத்து வந்துவிடக்கூடாதா என்று நினைத்தான். அதை தூக்கி நெஞ்சோடு அமர்த்தினான். உடலெங்கும் ரத்த வாடை வீசியது அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. அதைத்தான் பூனாஸ் ஆசைப்பட்டது. அது ஏதோ சொல்ல நினைத்து ‘உர் … உர் ..’ என அலையை செலுத்தியது. ஆனால் அந்த அலை முன்பிருந்த அதிர்வலையை போல இல்லை.
அதன் பின்னங்கால்கள் லொடலொடத்து கால்கள் உடைந்து போன மனிதனின் அசைவுகள் போல ஆடின. அதை கட்டிப்பிடித்து அதன் தலையை நெஞ்சோடு வைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக அதன் ‘உர்… உர் …’ சத்தம் குறைந்தது. அவனது பாக்கெட்டிலிருந்து காகிதத்தில் சுருட்டி வைத்திருந்த கருவாட்டு துண்டை அதன் வாயினுள் வைத்தான். அது அங்குமிங்குமாக தலையை அசைத்தது. அது வேண்டாமென்று சொல்லுவதாக அவன் நினைக்கவில்லை. மீண்டும் வாயில் வைத்தான். அது மீண்டும் தலையை ஆட்டிக்கொண்டே அவனது தோளில் சாய்ந்தது. அதன் கண்களை பார்த்தான். மயக்கத்தில் இருப்பதுபோல் இருந்தது. அந்த பாதி உடலோடே இருக்கட்டும். மருந்துபோட்டு கட்டி, காப்பாற்றி கூடவே வைத்துக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. தனது கைக்குட்டையால் அதை துடைத்தான். அப்படியே தோளில் கிடத்தினேன். தூக்கத்தில் படுத்துறங்கும் குழந்தையைப்போல அதன் தலையை அவனது தோளில் சாய்த்தது.
சிறிது நேரத்தில் ‘உர் ….. உர் ….’ என்ற சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள் இறங்கி, கடைசியில் நின்றுபோனது….
எழுதியவர்
இதுவரை.
- சிறுகதை26 November 2022மி
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பூனாஸ்
கலகம் இதழுக்கு எனது அன்பும் நன்றியும்….
பூனாஸ் கதையல்ல… அது ஒரு சுத்தமான காதல். இதே அனைத்தும் சம்பவங்களும் என் வாழ்வில் நடந்தது நண்பா. ஆனால் என் பூனை 12 வருடங்கள் எங்களுடன் வாழ்ந்து, திடீரென காணாமல் போய்விட்டது. அந்த காதலையும், துயர சம்வத்தையும் மறக்க முடியாமல் , வேறு ஒரு பூனாஸை வளர்க்க மனம் வரவில்லை. உங்களுடைய எழுத்து மீண்டும் என் மனதை பாரமாக்கிவிட்டது.
வாழ்த்துக்கள் நண்பா..
சிறப்பான கதை