21 November 2024
aravam -appu siva

ந்த பெரியவரின் முன் வேகமாக வந்த குண்டான தீயணைப்பு வீரர், திடீரென்று தன் கையில் பிடித்திருந்த  பதினைந்தடி நீள கருநாகத்தை அவர் முன் நீட்ட சற்று கதிகலங்கித்தான் போனோம்.

நாங்கள் சென்ற ஆண்டு வாடகைக்கு இங்கு குடிவந்தபோதே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  டவுன் பகுதிலிருந்து இரண்டு மைல் தள்ளி இருக்கும் குடியிருப்பு பகுதி இது. இன்னமும் சில வீடுகளும் நடுவில் வயல்வெளியும், அப்புறம் சில வீடுகளுமாக இருக்கும். இரவு ஏழு எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். இரவுகளில் அலாரம் வைத்தது போல தூரமாய் எதாவது ஒரு நாய் ஊளையிட்டுக்கொண்டே இருக்கும். சில சமயம் அந்த சத்தம் கேட்கவில்லையென்றால் ஏதோ இழந்தமாதிரி ஆகிவிடும். வாடகை குறைவு என்பதால் இங்கே குடிவர வேண்டிய சூழ்நிலை.

காலை ஆறுமணிக்கு பால் வாங்க நான் சைக்கிளில் இந்த பகுதியை கடக்கும்போதே சிலர் குழுவாய்  கூடி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது கவனம் வரவில்லை. மறுபடி வீட்டில் இருந்து கல்லூரிக்கு கிளம்பும்போது ஒரு இருபதுபேருக்கு மேல் அங்கே குழுமியிருந்ததை பார்த்து என் ஆவலை அடக்கமுடியாமல் சைக்கிளை அங்கே திருப்பினேன்.

அந்த இடம் எங்கள் வீட்டில் இருந்து டவுன் செல்லும் வழியில் வீட்டுமனையாக பிரித்துப்போட்டிருந்த  வயல்வெளி. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் இருக்கும். கொஞ்சம் ஊரைத்தொட்டுச் செல்வதால் விலை அதிகமாகத்தான் இருந்தது.  ஒன்று இரண்டு புது வீடுகள், நடுவில் அந்தக்கிணறு இருந்தது. அரைமனை அளவு அகலம் கொண்ட பழங்கால கிணறு. குட்டையாக தண்ணீர் தேங்கியும் , ஊர் குப்பைகளை எல்லாம் தன்னுள் வாங்கிக்கொண்டும் சிவனே என்று இருக்கும். இன்னமும் மனைகள் விற்பனை சூடுபிடிக்காமல் இருப்பதால் அந்த கிணறை மூடும் வேலையை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாக தகவல். ஆனால் சமீபத்தில் பெய்த பெருமழையில் அதிசயமாக கிணற்றின் பாதிவரை தண்ணீர் நிரம்பிவிட்டது.

 

கும்பல் சேர்ந்துகொண்டே இருந்தது. நான் யாரிடம் கேட்பது என்று தயங்கித்தயங்கி சுற்றிலும் பார்க்க, அங்கே யாரோடும் கலக்காமல் ஓரமாய் உட்கார்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த பெரியவர் கண்ணில் பட்டார். அடிக்கடி கண்ணில் படும் நபர் என்ற போதிலும் யார் என்ன என்பதெல்லாம் தெரியாது. அருகில் நெருங்கி நின்றேன். என்னை ஒரு அயல்கிரக ஜந்துபோல பார்த்துவிட்டு தன் காதில் வைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைக்க ஆரம்பித்தார்.

“தாத்தா…என்னவாம் கும்பல்?”

அவர் சுருட்டை நான்கு இழுப்பு இழுத்துவிட்டு நெருப்பு சரியாக பற்ற வைத்திருக்கிறதா என பார்த்துக்கொண்டிருந்தார். நான் விலகிவிடலாம் என்று நகர,

“அது இருக்கும் முப்பதடி… “ என்றார் அவர்.

“எது?”

“நாகம்…. சாதாரண நாகமில்ல… ராஜ நாகம்”

“அய்யோ… பாம்பா?” என்று அதிர்ச்சியாக கேட்டேன்.

“பின்ன என்ன… முதலையா வரும் இங்க… பாம்புதான்…. “

எனக்கு பயமும் ஆவலும் பின்ன, சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு  அந்த கிணற்றை நோக்கி கிட்டத்தட்ட ஓடினேன். படம் வரைய கட்டம் போட்டு, அதைச்சுற்றி பார்டர் போட்டதுபோல அந்த கிணற்றின் ஓரங்களில் மனித தலைகள். எல்லோர் பார்வையும் உள்ளே. நான் எனக்கு கிடைத்த சிறு இடைவெளியில் என்னை நுழைத்துக்கொண்டு எட்டிப்பார்த்தேன்.

நல்ல கிணறு. பெரிய பெரிய சதுர கருங்கற்களால் அழகாக சுவர் ஓரங்கள் அணைக்கப்பட்டு மேலே வெறும் செங்கற்களால் காம்பவுண்ட் போல கட்டப்படிருந்தது. செங்கல்சுவர் அங்கங்கே இடிந்து, கொஞ்சம் வலுவாக சாய்ந்தால் விழுந்துவிடுமோ என அச்சமூட்டும் வகையில் இருந்தது. ஒரு மூலையில் இடிந்த மோட்டார் ரூமும் அதன் வெளியே ஒரு தொட்டியின் மூன்று சுவர்களும் மட்டும் இருந்தன.   மோட்டார் ரூமின் ஓரமாய் கட்டப்பட்ட படிகள் கிணற்றின் கருங்கல் சுவர் வரை மட்டுமே இருந்தன. அதன் பின் வெறும் சுண்ணாம்பு பாறைகள் போலவோ ஏதோ. தண்ணீர் பச்சை போர்த்து அங்கங்கே பீட்சாவில் இறைத்துவிட்ட காய்கறிகள் போல குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள்.

கும்பலில் சிலர் சிறு சிறு கற்களை  அந்த தண்ணீரில் எறிய, அது கோலம் போடுவதுபோல வட்டமாக சிறிய அலைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

“நிஜமா பாம்பா அண்ணா?” என்றேன் அருகில் இருந்தவரிடம்.

“தெரியலை தம்பி. நானும்  இப்பதான் கும்பல் பார்த்து வந்தேன்…. இதுவரை எதும் கண்ல படல” என்றார் அவர்.

“ஒரு பாம்புக்கு ஏன் இவ்ளோ பரபரப்பு?”

“அதுவா… அது ஏதோ ராஜநாகமாம். அபூர்வமாதான் வருமாம். கடிச்சா ஒரே நேரத்தில் பத்து பேர்னாலும் அவுட்டாம்… அதான் பயம்”

அருகில் இருந்த இன்னொருவர் தன் தலைய எட்டி எங்களின் பேச்சின் குறுக்கே வந்தார்”

“அப்படி இல்லபா…. பார்த்தது இங்க மனை வாங்கியிருந்த ஒருத்தரோட மகன்.  அவன் கத்தி சொல்லிட்டான். பாம்பு இருக்குன்னு தெரிஞ்சா மனை விக்காதுன்னு… பயர் சர்வீஸ்ல சொல்லி வரச்சொல்லியிருக்காங்க”

“அய்ய… அவ்ளோ பெரிய விஷயமா இது?”

“பாத்தது சாதாரண ஆள் இல்லை. ஏரியா எம்.சி யோட பையன். அதான்”

“அப்படியே கிணத்தை மூடிட்டா முடியுது”

“அதுக்கு இப்ப செலவு பண்ணனுமே…. அதோட… அது உள்ளதான் இருக்கா… வெளியவான்னு தெரியலையே….”

“பெரிசா…..?”

“இருபதடி இருந்ததாம்… மலைப்பாம்பு போல தடிமன்ல…” என்று சொல்லிகொண்டு இருக்கும்போதே அவர் முகம் பரபரப்பாக ஆகியது.

“அதோ..அதோ… அங்க பாருங்க…. “ என்று கத்த ஆரம்பித்தார்.  எல்லோரும்  எட்டிப்பார்க்க, அலைகளில் அது மிதந்து மிதந்து மூழ்கியது. கொஞ்சமாய் வெளியே வந்து ஓரமாய் ஒதுங்கியது. நன்றாக வளைந்த மர விழுது அது.

வரிசையாக பைக்குகளின் சத்தம் கேட்க, திரும்பிப்பார்த்தோம். பயர் சர்வீஸ் ஆட்கள், நான்கு பைக்குகளில் கயிறுகள், நீளமான இரும்புக்கம்பிகள் சகிதம் வந்து இறங்கினார்கள். அந்த கம்பியை நான் டிவியில் பார்த்திருக்கிறேன். முனை வளைந்த பாம்பு பிடிக்கும் கம்பி அது. இறங்கியவர்கள், சத்தம் போட்டுக்கொண்டே வந்தார்கள்.

“நகருங்கப்பா…. ஒண்ணும் இல்லாததுக்கு இவ்ளோ ஆர்ப்பார்ட்டம் பண்ணிக்கிட்டு…. நகருங்க… யாருபா பார்த்தது?” என்றார் அந்த குண்டான தீயணைப்பு வீரர்.  அந்த பையன் அருகில் வந்தான். ஒரு பதிமூன்று பதினாலு வயது இருக்கும். நான் கும்பலில் இருந்து விலகி அவர்கள் அருகில் சென்றேன். ஒட்டு மொத்த கும்பலும் அவர்களை சூழ்ந்துகொண்டது.

“தம்பி உன் பேரென்ன?”

“சதீஸ் சார்”

“எம்.சி ராஜேந்திரன் பையனா நீ?”

“ஆமா சார்…”

“கிணத்து ஓனர் போன் பண்ணினார்… வெளிய இருக்காராம். ஏதோ பெரிய ராஜநாகம்னு சொல்றார். இங்க எல்லாம் அது வராது. அது பொள்ளாச்சி, வால்பாறை…கேரளா பக்கம்தான் இருக்கும். நீ பயப்படாம சொல்லு. எது எப்படி இருந்தது?”

“வந்து… காலைல இங்க விளையாடிட்டு இருந்தோம். எங்க பந்து இங்க வந்துச்சு. நான் எடுக்க வந்தப்போ …அதோ.. அந்த இடத்தில் இருந்து… கல்லெல்லாம் குவிச்சிருக்கே… அதில இருந்து அது வந்துச்சி. என்னை பந்து எடுக்க விடலை. என்னை பார்த்து வேகமா வந்துச்சு.”

“அட பயப்படாம சொல்லு. அது அவ்ளோ அறிவா எல்லாம் வராது. அதான் உன்னை பார்த்து பயந்திருக்கும்”

“இல்ல சார்… அது பயப்படவேயில்லை. என்னை நேருக்கு நேர பார்த்தது. வேகமா வர ஆரம்பிச்சது. நான் பயந்து கிணத்தை சுத்தி சுத்தி ஓடினேன். அது விடவேயில்லை.”

“ஓ… சரி சரி… எவ்ளோ பெரிசு?”

“வந்து… நான் கிணத்தை ஒரு சுத்து சுத்தி வரப்போ, அது முகம் என் பின்னால் இருக்க,  அதோட வால்  எனக்கு முன்னால் இந்த மூலையில் கண்ணில் பட்டது”

படக்கென்று சிரித்துவிட்டார் அவர்.

“டேய் நீ சொல்றது பார்த்தா நூறடி வரும் போலயே…. சரிவிடு…அப்புறம் அது எங்க போச்சு”

“அப்புறம் அதுபாட்டுக்கு கிணத்தில் ஏறி இறங்கிச்சு. ஒரு அரைமணி நேரம் அது போயிட்டே இருந்தது.”

கும்பலில் கலவையான குரல்கள். அக்கம் பக்கம் இருந்தெல்லாம் இன்னமும் வர ஆரம்பித்தார்கள். நான் காலேஜ்க்கு இன்று லீவ் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

“தள்ளுங்க..தள்ளுங்க        “ என்று சத்தமிட்டவாறு அந்த ஆறு பேர் குழு கிணற்றை நெருங்கியது. அதில் இருந்து இன்னொருவர் யாருக்கோ போன் செய்ய சிறிது நேரத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், குழாய் பைப்புகள் வந்தது. அதை இணைத்து,  அங்கே பக்கமாக இருந்த வீட்டில் வயர் சொருகி மோட்டார் ஓட ஆரம்பித்தது. பீய்ச்சி அடித்தது தண்ணீர். அரைமணி நேரம் ஆகியிருக்கும். சில அடிகள் மட்டும் குறைந்தது. அதற்குள், அந்த தண்ணீரில் சிறுவர்கள் தலைகாட்டி, குளித்து விளையாட, ஒரு சில பெண்கள் வீட்டில் இருந்து துணிகளை எடுத்து வந்து துவைக்க ஆரம்பித்தார்கள்.

“ஏது… குட்டை மாதிரி இருக்கும்னாங்க… அது பாட்டுக்கு ஓடுதேப்பா…” என்றார் ஒருவர்.

“அதுவா… அது கடலு… ஆழம் தெரியாம இவங்க வேலையை பாரேன்…” என்று குரல் கேட்க, அனைவர் தலையும் அந்த குரல் வந்த திசையை நோக்கியது. அந்த பெரியவர், மோட்டார் ரூமின் இடிந்த சுவர் மேல் ஹாயாக உட்கார்ந்து சுருட்டை இழுத்தவாறு குரல் கொடுத்தார். ஆபத்தான இடத்தில் அவர் உட்கார்ந்திருந்த விதமே பயமூட்டியது.

“யோவ் பெரிசு… அப்படியா சொல்ற… நெறய ஆழமா…” என்றார் ஒரு வீரர்.

“ஒரு வாரம் ஆகும்….” என்றார் பெரியவர் கெத்தாக.

“அட கிழவா… முன்னமே சொல்லியிருக்கலாமில்ல”

“கேட்ருக்கலாமில்ல”

அவரை முறைத்தவாறு மோட்டாரை நிறுத்தினார்கள். ஏதோ சத்தம் கேட்டு திரும்ப, தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த இடத்தில்  குளித்துக்கொண்டிருந்த நாலஞ்சு பேர் போட்டிருந்த சோப்பை கழுவமுடியாமல் தடுமாறிக்கோண்டிருக்க, ”கொஞ்சம் மோட்டாரை போடுப்பா… துணிய அலசிட்டு மட்டும்  போயிடுறோம்” என்றார் பாட்டி ஒருவர். அவர்களை எரித்துவிடுவதுபோல பார்த்த குண்டு ஆபிசர், மற்றவர்களை பார்த்து கத்தினார்.

“ராஜூ…இது ஆவறதில்ல… நீயும் தர்மாவும் இறங்குங்க” என்றார்.

அந்த ராஜூவும், தர்மாவும் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு நகர, கயிற்றின் இன்னொரு மூலையை அருகில் இருந்த மரத்தில் கட்டினார் குண்டு ஆபிசர். சரசர வென்று கிணற்றின் உள்ளே அவர்கள் இறங்க ஆரம்பித்தார்கள். தண்ணீரின் பரப்பில் மெதுவாக காலின் கட்டைவிரலை வைத்து பார்த்தார்கள். கையில் இருக்கும் குச்சியால் ஒரு அலசு அலசினார்கள்.

“குப்பையா இருக்கு பாருங்க…ஒதுக்கி விடுங்க” என்றார் பெரியவர். அவரை கண்டுகொள்ளாமல் அந்த தர்மா மேலேயே இருந்து குச்சியால் தடவி தடவி பார்க்க, ராஜு தண்ணீரில் குதித்தார். கும்பல் மனம் முழுதும் பயத்தை அப்பிக்கொண்டு வைத்த கண் வாங்காமல் அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தது.

“ஒரு அஞ்சாறு முட்டை…ஒரு சொம்பு பால் வச்சு ஒரு கற்பூரம் காட்டினா… வந்துட்டுபோவுது…நான் சொன்னா…” என்றவாறு சுருட்டை ‘பப்பப்’ என்று இழுத்துக்கொண்டிருந்தார் கிழவனார். தண்ணீரில்  ராஜு உள்ளே அங்கேயும் இங்கேயும் அலைந்து தேடுவது அந்த குப்பை, பாசிகளின் வழியே ஒரு வண்ண ஓவியம் போலத்தெரிந்தது. அடிக்கடி வெளியே தலைகாட்டி மூச்சு வாங்கிக்கொண்டு மறுபடி மூழ்கினார் அவர். ஒவ்வொரு தடவை அவர் தலை தெரியும்போதும் கனத்த அமைதியும், அவர் உள்ளே சென்றதும் சலசலப்புமாக நகர்ந்தது நேரம். சற்று நேரம் கொடுத்து அவர் வந்தார். மேலே பார்த்து கத்தினார்.

“ஒரு பெரிய பொந்து இருக்கு சார்… இன்னும் ஒரு ரெண்டடி தண்ணி குறைஞ்சா பரவால்ல…”

மறுபடி மோட்டார் போடப்பட்டது. நகராது இருந்த பெண்கள் படபடவென்று துணிகளை அலச ஆரம்பித்தார்கள். “ஒரு காலத்தில இங்க வாய்க்காலா ஓடற தண்ணியகூட தொட விடமாட்டானுவ… தீட்டாயிடுமாம்.. இப்ப குப்பை கூளமா இருக்கு… தீர்த்தம்” என்று பேசியபடி அலச ஆரம்பித்தார் பாட்டி.

“தண்ணிக்குள்ள எப்படி அந்த பாம்பு பொந்துக்குள்ள போகும்?… அதென்ன தண்ணிபாம்பா? “ என்றார் ஒருவர்.

“தம்பி… வாசல்தான் தண்ணிக்குள்ள… அந்த பொந்து போகும் இங்கருந்து நாலுமைல் தூரத்துக்கு… ஏன்… உன் வீட்டு பின்னாடிகூட திறக்கும் அது…” என்றார் தாத்தா. அவர சொல்வதை அசமந்தமாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது அவரின் அனுபவத்திற்கும் அறிவுக்கும் மதிப்பு கொடுத்து கேட்பதாக பட்டது.

இரண்டடி குறைய, அந்த பொந்து கண்ணில் பட்டது. கரும் இருள் குகை வாயில் போல தெரிந்தது எனக்கு. உள்ளங்கையகலம்தான் இருக்கும் அது. அதற்குள் ஒரு ஜீவன் ஒளிந்து இங்கிருக்கும் மனிதர்களை இப்படி பயமுறுத்துகிறதே என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

இடுப்பில் கட்டியிருந்த கயிற்றை கொஞ்சம் இழுக்கச்சொன்னார் ராஜூ. சற்று தொங்கியவாறு காலை கிணற்றின் சுண்ணாம்பு பாறைகளில் ஊன்றி தன் கையில் இருந்த குச்சியால் அந்த பொந்தில் உள்ளே நுழைத்து லேசாக அசைத்தார்.

“ஒரு நீளமான ஈட்டி இருந்தா குத்தி ஒரே போடு…. அத விட்டுட்டு பூச்சி புடிக்கறாங்க…” என்றார் தாத்தா.

ராஜு மேலே பார்த்து கையாட்ட… பாத்ரூம் க்ளீன் செய்யும் ஸ்பிரிங் கம்பி போல ஒரு சுருணை தூக்கிப்போட்டார்கள். அதை வாங்கி அந்த பொந்தின் உள்ளே நுழைத்து விட்டுக்கொண்டே இருந்தார். முழு சுருளும் உள்ளே போயும் எதுவும் நடக்கவில்லை.

“இல்லை போலயே…” என்றார் குண்டு ஆபிசர்.

“அதா… அது அந்த கம்பிய வேடிக்க பார்த்து சிரிச்சிட்டு இருக்கும்…” தாத்தா.

“யோவ்… கொஞ்சம் பொத்துறியா….” கத்தினார் குண்டு.

“சொன்னா கேட்கணும்…. அந்த கம்பி முனையில ஒரு முள்ளு கம்பியை பந்தாட்டம் சுத்தி, அப்புறம் உள்ள விட்டு ஒரு ஆட்டு ஆட்டுங்க…. ரத்தமும் சதையுமா பிச்சிட்டு வந்திடும்…” என்றார் தாத்தா.

குண்டு ஆபிசர் தாத்தாவை முறைத்து தன் கையால் வாயை மூடிக்காட்டி கண்ணால் மிரட்டினார்.

“தாத்தா சொல்றதும் சரிதானே… என்ன இருந்தாலும் பெரியவர்… அனுபவம் ஜாஸ்தி… இவங்க ஏன் அதை கேட்கவே மாட்டேங்கறாங்க?” கும்பல் மனிதர்.

“அதா… இவங்களுக்கு என்ன தினமும் வேலையா வருது.  நெருப்பு பிடிச்சாதான்… இன்னிக்கு அதிசயமா வேலை கிடைக்க ரெஃப்ரெஸ் பன்ணிக்கறாங்க…. “ என்று சொல்லி சிரித்தார் இன்னொரு கும்பல் மனிதர்.

“பரம்பரை சொத்து போல… அதான் கிணறை மூட மனசு இல்லாம அப்படியே வச்சிருக்காங்க… யாரு ஓனரு?”

“கடைவீதியில ஜிகே நகைக்கடை இருக்கில்ல… அவங்கதான். பரம்பரை சொத்து கிடையாது. முன்ன இந்த இடம் ரங்கசாமின்னு ஒரு ஆளோடது. ஒரு பொண்ணு பையன் அவருக்கு. பொண்ணு யாரோடயோ ஓடிப்போச்சு… போன இடத்தில் ஆறு மாசத்தில் தூக்கில் தொங்கிடுச்சாம். கவுரவ கொலைன்னும் சொல்றாங்க. பையன் தண்ணி அடிச்சு ரவுடி போல சுத்தி செத்தான். அந்த ரங்கசாமி, ஜிகே ஓனர்க்கு ஃப்ரெண்டு…  ஜிகே இவருக்கு தண்ணியா வாங்கி ஊத்தி ஊத்தி எழுதி வாங்கிட்டார்… எல்லாம் அரசியல்….”

“அட கடவுளே…… ஆறு ஏக்கருமா?”

“நீ வேற…. தோ… கண்ணுக்கு தெரியுது பாரு… அதுவரை பழைய ரங்கசாமியோடது… ஜமீன்போல இருந்தவராம்… நேரம்…”

“முள்ளு கம்பி சுத்தி அனுப்புங்க சார்….” என்று கத்தினார் தாத்தா. கும்பலும் அதையே சொல்லி சொல்லி கத்த… அந்த தர்மா திரும்ப சத்தமிட்டார்.

“சார்… முதல்ல இந்த கும்பலை அவங்கவங்க வூட்டுக்கு துரத்துங்க….வேலை செய்யவிடாம….போங்கய்யா… போய் உங்க பொழப்ப பாருங்க.. என்ன செய்றதுன்னு எங்களுக்குத்தெரியும்”

“சொன்னா கேட்கறதில்ல… முன்னோர் சொல்றதை எவன் கேட்கறான்… வேடிக்கைதான் எல்லாம்” என்று சுருட்டை தூரப்போட்டுவிட்டு அடுத்ததை பற்ற வைத்தார் தாத்தா.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம்… இதே போல கழிந்தது. கிணற்றின் வெளியே தள்ளு வண்டி கடைகளில் நொறுக்குத்தீனிகள் விற்க ஆரம்பித்தன. சில ஐஸ் வண்டிகளும் டேரா போட்டு கல்லா கட்டின. விட்டால் ராட்டினம் எல்லாம் வைத்து கண்காட்சி நடத்துவார்கள் போல இருந்தது. தாத்தா சொன்னது போல எல்லாமே வேடிக்கைதான். என்ன மனிதர்கள் என்று நினைத்தவன், காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நானும் இங்கேதான் இருக்கிறேன் என்பது உரைக்க, அந்த சிந்தனையை தொடராமல் வேடிக்கையை தொடர்ந்தேன்.

ராஜுவும் தர்மாவும் மேலே ஏறினார்கள். குண்டும், இன்னொருவரும் மட்டும் இருக்க இரண்டு பேர் வெளியில் சென்று அவர்களுக்கு சாப்பாடு பொட்டலம் கட்டிக்கொண்டு வந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குள் ஏதோ பேசிக்கோண்டிருக்க, அருகில் சென்று கேட்கவும் பயந்து… ஆவலை அடக்க முடியாமல் அனைவர் காதுகள் மட்டும் அந்த அறுவரை சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்து மறுபடி இறங்கியது குழு. ஸ்பிரிங்க் கம்பி இன்னும் ஒரு சுருள் இணைத்து அதையும் சேர்த்து உள்ளே நுழைத்தார் ராஜு.

“அங்க அது இருக்காது… அது இன்நேரம் ஊரேசுத்திட்டு இருக்கும். இங்க மனுஷங்களோட சேர்ந்து அதும் உங்களை வேடிக்க பார்த்துட்டு இருக்குதோ என்னவோ” என்றார் தாத்தா. கும்பல் சிரித்தாலும் கொஞ்சம் பயந்து தங்கள் கால்களுக்கருகில் ஏதேனும் ஊர்கிறதா என்றும் பார்த்துக்கொண்டனர்.

“தர்மா… சொன்ன மாதிரி, ஒரு வேளை அது வேற எங்காவது இருக்கப்போவுதுபா…தேவையில்லாம நேரம் போவுதுன்னு நினைக்கிறேன்.” என்றார் குண்டு.

“இங்க வேற எதுவும் இல்ல சார்…. ராஜு கண்ல எதுவும் தப்பாது. கிணத்து ஆழம் வர பாத்துட்டான். கண்டிப்பா இது ஒண்ணுதான் வழி…” என்றார் தர்மா. அவர் பாதிவரை தொங்கிக்கொண்டு ராஜுவுக்கு தேவையானதை கொடுத்து உதவிக்கொண்டிருந்தார்.

“பெரியவன் சொல்றேன்… இப்பயாவது கேளுங்க” என்றார் தாத்தா.

“அட எதாவது உருப்படியா சொல்லு கிழவா… இல்லனா கடுப்பாயிடுவேன்” என்றார் குண்டு.

“ஒரு அரை சாக்கு தேங்காய் நார்…. காயிதம் கொண்டு வாங்க. கூடவே கசப்பா எதாவது மருந்து அதில் தெளிங்க. அந்த பொந்தில் அதையெல்லாம் துணிச்சு… சீமெண்ணை ஊத்தி பத்த வைங்க. பொக தாங்காம அது வந்தே ஆகணும்”

“அட செம ஐடியால்ல… வருதோ இல்லியோ… செத்துடும்” என்றது கும்பல்

கிழவரை முறைத்த குண்டு “நிஜமா சொல்றேன் நீ வாயை மூடிக்கிட்டு இருந்தா போதும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே தர்மா கத்தினார்.

“ராஜு… அந்த பொந்துக்கு மேல ஒரு செடி மாதிரி இருக்கு பாரு…அதை விலக்கு”

ராஜு அப்போதுதான் அதை கவனித்தார். மற்ற இடங்களில் சிறு சிறு செடிகள் இருக்க, அந்த இடத்தில் மட்டும் ஒரு கொத்தாக சிறு புதர்போல மண்டிக்கிடந்தது. ராஜு தன் கையால் அதை விலக்க, அங்கே ஒரு சிறு சந்து கண்ணுக்கு தெரிந்தது.

“சின்னது தர்மா…அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. இங்கே சான்ஸ் இல்லை” என்று ராஜு சொல்லிகொண்டு இருக்கும்போதே உஸ்ஸென்று சீறிக்கொண்டு வந்தது அது.

நிஜமாகவே பயத்தின் முழு அனுபவத்தையும் அன்று நான் உணர்ந்தேன்.  “ஹோ” வென்று கத்தியது கும்பல். தன் முழு உடலையும் அந்த சின்ன பொந்தில் ஒளித்து வைத்திருந்த அது ராஜுவை நோக்கி ஒரு ஐந்தடி அளவுக்கு சீறி வந்தது. அதன் விஷபற்கள் கூட தெரியும் அளவுக்கு சரியான சீற்றம். சட்டென்று சுதாரித்த ராஜு வேகமாக தன் கால்களால் சுவரை உதைத்து உடலை பின்னுக்கு தள்ளியிருக்காவிடில் அவர் கண்களிலேயே அது போட்டிருக்கும். விஸ்வரூபமெடுத்து ஆடி நின்றது அது. ராஜு தூர விலகுவதும், மேலிருந்த குண்டு கயிற்றை தளரவிடுவதும் ஒத்திசைவாக இருந்தது. தண்ணீரில் விழுந்தார்  ராஜு.

அது அப்படியே படம் எடுத்தபடி கும்பலை பார்த்தது. நல்ல கருமையான நிறம். கொஞ்சம் பிரௌன் கலர் கலந்தது போல. சரியான கோபத்தில் இருந்தது அது. ராஜூவின் தலை தண்ணீரில் நிமிர, அதன் பார்வை அங்கே திரும்பியது. மெதுவாக ராஜுவை நோக்கி நகருவதாக தோன்றியது.

“ராஜு… நீ அதுக்கு போக்கு காட்டு… நான் கவனிச்சுக்கறேன்” என்று சொன்ன தர்மா மெதுவாக அந்த துளை இருந்த பகுதிக்கு மேலே காலை ஊன்றி அதன் வால் பகுதிக்கு நகர்ந்தார். ராஜு தன் கையில் இருந்த கம்பியால் அதன்  முன் ஆட்டி அதன் கவனத்தை தன் பக்கம் வைத்திருந்தார். தர்மா மெல்ல அதன் வாலை பற்ற, அது நடு கிணறு வரை தன் உடலை நீட்டி நெளிய ஆரம்பித்தது. ராஜு எதிர்புறம் ஒதுங்கி மெதுவாக மேலேறினார். தர்மாவை அந்த குண்டு ஆபிசர் கயிறு கொண்டு இழுக்க, பாம்புடன் மேலே வந்தார் தர்மா. ஏறும்போதெ மீதம் இருந்த இரண்டு பேர், தம் கையில் இருந்த இரும்பு கழியால் அதன் தலையை மெதுவாக தொட்டபடி இருக்க, மேலே வந்ததும் சட்டென்று கீழே வைத்து அதன் தலையை அழுத்திக்கொண்டனர். குண்டு தன் கையால் ஜாக்கிரதையாக அதன் கழுத்தை பிடித்து தூக்கினார்.

இருபதடி இருந்தது அது. என் பார்வை கிழவனார் பக்கம் போனது.

“சொன்னேனில்ல. அனுபவஸ்தன் சொல்றேன். அது நாகம்… ராஜ நாகம்…. பத்து பேரை காவு வாங்காம விடாது. சாவடிங்க முதல்ல….” என்றார் அவர்.

அந்த பெரியவரின் முன் வேகமாக வந்த குண்டு, திடீரென்று தன் கையில் பிடித்திருந்த  பாம்பைஅவர் முன் நீட்ட சற்று கதிகலங்கித்தான் போனோம்.

“யோவ் பெரியவரே… உன் பேரேன்ன?” அதட்டலாய் கேட்டார் குண்டு.

“ம்…. ரங்கசாமி… அதுக்கென்ன”

“அட ரங்கசாமி கிழவா…. கொன்னு புடிக்கணும்னா எங்களுக்கு அரைமணி வேலை. இதை உயிரோட புடிச்சு காட்ல விடணும்னுதான் இவ்வளவு மெனக்கெடல்… உன் முன்னோர் அறிவை கொஞ்சம் உன்னோடயே வச்சுக்க… சரியா?” என்றபடி அந்த பாம்பை ஒரு சாக்கில் போட்டு கயிற்றால் கட்டி பைக்கை கிளப்பினார்கள்.

எழுதியவர்

அப்பு சிவா
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Esai
Esai
2 years ago

அரவம். அருமையான கதையோட்டம், ஆரவாரமான எழுத்து,

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x