3 December 2024
mi -piraimathi

ரு காலை இப்படியாக விடிவதை என்னால் ஏற்க முடியவில்லை. வெறும் தனிமையில், ஆள் அரவமற்ற என் அறையின் ஜன்னல் வழியே நகர்ந்துபோகும் மேகங்களை கூட என்னால் இன்று ரசிக்க முடியவில்லை. கழுத்தில் கட்டியிருக்கும் சிவப்பு நிற கயிற்றில் தொங்கும் தாயத்தை வைத்து என்னால் சொல்ல இயலும், எனக்கு ஏதோ ஆகிவிட்டிருக்கிறது. ஒருவேளை நான் பைத்தியமாக ஆகிவிட்டேன் என்று நினைத்து என்னை இங்கு வைத்திருக்கிறார்களா.?

இப்படியாக, இந்த காலையில், இந்த அறையை எனக்கு யார் ஒதுக்கினார்கள். அதுவும் எதற்காக ஒதுக்கினார்கள் என்று கேட்கவேண்டும் . ஆனால் நான் யாரிடம் கேட்பேன். இன்று தேதி என்ன..? நேரம் மட்டும் ஓரளவு என்னால் கணிக்க முடியிகிறது. ஜன்னலை கிழித்துக்கொண்டு உள்ளே நுழையும் அந்த ஒளியை வைத்து சரியாக சொல்லலாம். இப்போது நேரம் காலை 8 அல்லது 8.30க்குள் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் நான் ஏன் இங்கு வந்தேன். என்னை இங்கு வந்து விட்டவர்கள் யார்…?

அதை விட, என் வீட்டிற்கும் இந்த அறைக்குமான தூரம் எவ்வளவு இருக்குமென்பதுதான். இல்லை இல்லை… எங்கள் ஊருக்கும் இந்த இடத்திற்குமான தூரம் எவ்வளவு என்பது… அதுவுமில்லை, எங்கள் தமிழ்நாட்டிற்கும் இதற்குமான தூரம் எவ்வளவு இருக்கும்..? ஒருவேளை நான் வேறு நாட்டில் கூட இருக்கலாமல்லவா….?  அப்படியில்லையெனில், பக்கத்து வீட்டு மாமா என்றோ சொன்னாரே, அதேப்போல நேரப்பயணம் செய்து வேறொரு கிரகத்தில் இருக்கிறேனோ… அங்கு இப்படியான அறைகள் இருக்குமா…? அங்கும் வானம்தான் இருக்குமா… இதேபோல வெயில் இருக்குமா…….

முதலில் யாரையாவது பார்க்க வேண்டும். ஆனால் இதன் வெளியில் வீடுகளோ வாகன இரைச்சலோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே…?

ஜன்னலின் வழியாக சற்று நேரம் வேடிக்கை பார்க்கலாம் என எழுந்தேன்…  இப்போது மணி காலை 9 மணி இருக்கலாம்.. ஆனால் பசிக்கவில்லை.. ஒருவேளை இன்னும் சில நேரத்திற்கு பிறகு பசிக்கலாமல்லவா…….?

எனக்கு பசிக்கவேயில்லை. ஆமாம் உண்மையிலேயே எனக்கு பசிக்கவில்லை. இப்போது மணி 12 இருக்கலாம். ஏனெனில் செங்குத்தாக நிற்கும் அந்த தென்னை மரத்தின் நிழல் அதன் வேரில் இருந்தது. அதனால் சொல்கிறேன்… இப்போது கொஞ்சமாக பசியெடுக்க ஆரம்பமானது.  ஏதாவது சாப்பிட்டால் போதும். ஆனால் நான்தான் ஒரு அறையில் பத்திரமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேனே… எப்படி வெளியே போவது. அல்லது யாராவது வந்து சாப்பாடு கொடுப்பார்களா என்று எதுவும் தெரியவில்லை…

நேரம் 1.00 மணியை கடந்தபோது மிகக்கொடூரமான் பசியாகத்தான் இருந்தது.. எதையாவது சாப்பிட வேண்டும்.

ஆனால் இப்போதுதான் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. எனக்கு ஒரு காதலி இருந்தாளே… அவளது பெயரும்.. ஆமாம் அவளது பெயர் எனக்கு மறந்துவிட்டது. சத்தியமாகவே எனக்கு மறந்துவிட்டதுதான்…

மி

ஆமாம், அவளது பெயர் ‘மி’ என்றுதான் முடியும். ஆனால் என்ன பெயர். இப்போது எனக்கு பசி ஞாபகத்தில் இல்லை… மி என்பது நினைவில் இருக்கிறது… முழு பெயர் மறந்துவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவளது உருவமும் வந்து போகிறதே… வட்ட முகம். நடிகை ஜோதிகாவை போலவே இருப்பாளே.. ஆமாம்  ஜோதிகாவைப்போலதான் இருப்பாள். நிறம் கூட ஜோதிகாவின் நிறம்தான்.

நிலவை குழைத்து வண்ணங்களை திரட்டியெடுத்த முகம். குள்ளமான உருவம் என்றாலும் கூட, ஒரு மாதிரியான மஞ்சள் நிறம். அவளது நிறம், அவளது முகம் எல்லாம் நினைவுக்கு வந்து பெயர் மட்டும் நினைவுக்கு வராதது ஏனென்றுதான் தெரியவில்லை..

அவள் வரைந்து கொடுத்த பழக்கூடை, அவள் வரைந்து கொடுத்த இரண்டு கிளைகள் பிரியுமிடத்தில் இருந்த பச்சைக்கிளியின் படம், அவளும் நானும் இருப்பதுபோல் வரைந்துகொடுத்த ஒரு படம் (எங்களுக்கு நடுவில் ஒரு குழந்தை இருப்பதுபோல் அந்த புகைப்படம் இருக்கும்) , ஒரு ஒற்றையடிப்பாதையில் நானும் அவளும் செல்வதுபோல் வரைந்துகொடுத்த இன்னொரு ஓவியமென எல்லாமே இப்போது நினைவில் வந்துவிட்டது. ஆமாம் அவள் நன்றாகவே ஓவியம் வரைவாள்.. காதலும் கூட நன்றாகவே செய்வாள். அந்த படங்கள் என் வீட்டிற்கு வந்து சேர்ந்த அந்த நாட்களில் ஏதாவது ஒரு முக்கியமான பண்டிகையாகவோ அல்லது வேறு ஏதாவது அவளுக்கு முக்கியமான நாளாகவோ இருக்கும்.

வீடு என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. எங்கள் குடும்பம் பற்றிக்கூட இன்னும் நினைவுக்கு வரவில்லை. நான் காதலித்த பெண்ணின் பெயர் நினைவுக்கு வந்த அந்த ஒற்றை எழுத்து, அவளின் முகம் கூட எங்கள் குடும்பம் பற்றிய எதுவும் நினைவுக்கு வரவில்லை..

கண்களில் அவ்வளவு காதலை தேக்கி வைத்துக்கொண்டு, எப்படித்தான் அப்படி உற்று பார்ப்பாளோ தெரியவில்லை. அவளது கண்களின் வழியாகத்தான் எனது காதலையே என்னால் பார்க்க முடிந்தது. அவளது கண்களின் வழியாகத்தான் எனக்குள் இருக்கும் பாசத்தை அளவிட முடிந்தது. மொத்தத்தில் எனக்குள் இருந்த என்னை அடையாளம் காட்டியவள் அவள்தான்.

எனது பிறந்தநாளுக்காக, அவளது உண்டியலை உடைத்து, சில்லறைகளையெல்லாம் சேர்த்து, அது போதாதென்று அவளது அப்பாவிடம் ஏதோவொரு பொய் சொல்லி எனக்கு வாங்கி கொடுத்து குறுமாத்துதான்( கை செயின்) நானணிந்த முதல் தங்கம்… நான் முதன் முதலாக தங்கம் அணிய காரணமானவள் அவள்தான். நான் அவளுக்காக எந்த முக்கியமான நாளிலும், அவளது பிறந்தநாளுக்கு ஒரு மிட்டாய் கூட வாங்கிக்கொடுத்ததாக இப்போது எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை நானும் என் அப்பாவின் சட்டைப்பையிலிருந்து அவரது வியர்வை படிந்த பணத்தை திருடியோ அல்லது அம்மாவின் அஞ்சறைப்பெட்டியிலிருந்து திருடப்பட்ட பணத்தையோ வைத்து அவளுக்கு கம்மலோ அல்லது வலையலோ எடுத்து கொடுத்திருக்கலாம். ஆனால் அவை யாவும் நினைவுக்கு வரவில்லை. மொத்தத்தில் அவளை பற்றிய நினைவுகளை விட எதுவும் நினைவுக்கு வரவில்லை…

இப்போது நான் அந்த தனிமையான அறையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு புறா மேல்நோக்கி பறந்துகொண்டிருக்கும் ஒரு படத்தை பார்த்துக்கொண்டுதான் இவைகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.. அந்த புறா விடுதலையை தேடி பறக்க நினைக்கிறது. ஆனால் ஒரு சட்டகத்தில் அடைப்பட்டுள்ளது என்னைப்போலவே.

ஐயோ… இந்த பசி மட்டும் இல்லையென்றால், என்னால் என் காதலியின் நினைவுகளை நிறைய யோசிக்க முடியும். ஆனால் இந்த பசித்தான் என்னை மிகவும் துன்புறுத்துகிறது… யாராவது கொஞ்சம் உணவு கொடுத்தால் போதும்..

“மி” என்று மட்டும்தான் நினைவில் வருகிறது. மீதிப்பெயர் நினைவுக்கு வராததன் காரணம் என்ன… பரவாயில்லை… இந்த அறையை விட்டு வெளியேறியதும் முதலில் அவளை சந்தித்துவிட்டு வேண்டும். என் வாழ்க்கையின் மீதியை கண்டிப்பாக எனக்கு சொல்லிவிடுவாள்.. என் குடும்பத்தை கூட அவள் காட்டிவிடுவாள்.. பிறகு பார்த்துக்கொள்ளலாம் மற்றவைகளை.

என் வீட்டில் யாருமற்ற ஒரு நாளில், சொல்லாமல் கொள்ளாமல் வந்து தொலைத்துவிட்டாள். ஏனென்று கேட்டபோது அவள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன்.

ஆம்… நினைவுக்கு வந்துவிட்டது. வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும் சைக்கிளின் பெல்லை யாரோ அழுத்துவதுபோல் சத்தம் கேட்டு வெளியே வந்தபோதுதான் தெரிந்தது. அது அவளேதான்.. ஆமாம், “மி” தான் அவள். கை கால் உதறல் எடுக்க, என்ன விஷயம் என்றேன். ‘உள்ள கூப்பிட மாட்டியாடா’ என்றாள். என்ன திடீரென ‘டா’ என்கிறாள். ஒருவேளை என்னை ‘டா’ போட்டுத்தான் கூப்பிடுவாளோ. ஒருவேளை ‘டா’ என்று அழைக்க சொல்லி நான் வற்புறுதிருப்பேனோ… அல்லது அவளே அந்த ‘டா’ என்ற காதலிகளின் சொல்லாடலில் நான் கிறங்கி போய்,  இப்படியே என்னை அழைக்க அனுமதித்திருப்பேனோ என்னவோ….

‘சரி உள்ளே வா’ என்று அழைத்த அடுத்த கணம் அவளின் வலது கால் முதன்முறையாக எனது வீட்டிற்குள் ஒரு பூவைப்போல் பதிந்தது. அவளுக்கு வலது காலை வைக்க சொல்லி யார் சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை.

உள்ளே வந்தாள். “யாருமில்லையாடா” என்று கேட்டுக்கொண்டே, கன்னத்தில் பச்சென்று அழுத்தி முத்தமிட்டாள். இல்லையில்லை. அது முத்தமென்று சொல்லி எப்படி கடந்து போக முடியும். அது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, தர்காவிற்கு பின்னால் இருந்த அரச மரத்து இலையை, பள்ளி புத்தகத்தில் வைத்து, மூன்று நாட்கள் கழித்து எடுத்து கன்னத்தில் தடவியபோது எவ்வளவு மென்மையாக இருந்ததோ அதே போலொரு உணர்வுதான் அது. அல்லது மயில் இறகால் காய்ந்துகொண்டிருக்கும் புண்ணிற்கு மருந்திடும் போது வரும் மயிர் சிலிர்க்கும் கூச்சம் என்றும் சொல்லலாம்.

அந்த முத்தம், இந்த தனிமையில் எனக்கு வேண்டும்போல் இருந்தது. இந்த கொலை பசியை போக்க, ‘மி’ யின் அந்த முத்தம் போதுமானதாக இருந்தது. இன்னும் அந்த பசி என்னை விட்டு போகவே இல்லை. இந்த பசி, ‘மி’யின் முத்தத்தை நினைவுபடுத்துவது, இன்னும் கூடுதல் கொடுமையை தந்தது.

அடுத்ததாக இன்னொன்றும் திடீரென எனது நினைவுக்கு வருகிறது.. இருங்கள் அதையும் சொல்லிவிடுகிறேன். சொல்லலாமா என்று தெரியவில்லை. தயவு செய்து இதை ‘மி’யிடம் சொல்லிவிடாதீர்கள். சொல்லிவிட்டால், என்னை அருவருப்பான ஒரு சொறி நாயைப்போல பார்ப்பாள்.

அதே போலொரு யாருமற்ற ஒரு நாளில் அவள் வந்தாள். அந்த மென்மையான முத்தத்தை கொடுக்க கடவுளின் தூதுவன் மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறான் என்று , கடவுளை மனதுக்குள் வேண்டிக்கொள்ளும் அடுத்த வினாடி, அவளது கைகளை என் முதுகுக்கு பின்னால் சேர்த்து அவளது மார்போடு இறுக்கினாள். என் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது கண்டிப்பாக அவளுக்கு தெரிந்திருக்கும்.

இறுக்கினாள், இன்னும் அழுத்தமாக இறுக்கினாள். என்னையறியாமல் எனது கைகளும் அவளது முதுகை பிடிக்க சொன்னதுதான் தாமதம். கட்டிக்கொண்டேன். கட்டிபிடித்தல் என்றெல்லாம் அதை சொல்ல முடியாது. வேண்டுமானால் கலவி கொள்வதற்கு தயாராகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது எனது உதடுகள் அவளது உதட்டை கடிக்க சொன்னது. தாமதிக்கவில்லை. மென்மையாக கடித்தேன். அவளுக்கு வலித்திருக்க வாய்ப்பில்லை. அதை அவள் எதிர்பார்த்திருந்தது போலவே அவளும் எனது உதட்டை கடிக்க துவங்கினாள்.

காமம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மீறி அவளின்  மீது இறங்க எத்தனித்தபோது. யாரோ வீட்டிற்குள் வருவதுபோல் ஒரு உணர்வு. திடீரென அவளது கைகளும் எனது கைகளும், அவளது உதடும் எனது உதடும் அனிச்சையாகவே காமத்தின் கொடூர பசியிலிருந்து வெளியேறி வாசலை உற்று பார்த்தோம்.

“இவ்ளோ நேரமாடா தூங்குவ” அம்மாதான் திட்டுகிறாள்….

யாருமற்ற அறையில்தானே இருந்தோம். அம்மா எப்படி வந்தாள். இவள்தான் அம்மாவா. ஆமாம், என் அம்மாவேதான்.

மூடியிருந்த கண்கள் திறந்தன. மணி இப்போது 12 மணியோ அல்லது அதற்கு மெலோ இல்லை… காலை 8.30 மணியென்று சுவர் கடிகாரம் பல்லிழித்தது.

ஆமாம் நான் தூங்கிக்கிந்திருந்திருக்கிறேன். நல்லவேளையாக கனவாக இருந்திருக்கிறது. எல்லாமே கனவில் நடந்தவைதான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால் அந்த கனவில் வாந்த ‘மி’ என்றவளின் பெயர், என் இதயத்தின் ஆழத்திலிருந்து கண்களின் வழியாக எனக்கு காட்சிப்படுத்தியது. அதாவது, அவள் பெயர் என்னவெனில்..

வேண்டாம் விடுங்கள்.. அந்த அழகான காதல்.. அந்த விடையற்ற பிரிவு. அவளின் கடைசி வார்த்தை. இந்த துயரமான வாழ்வு.. யாவும் என்னோடே இருக்கட்டும்….

நீங்களும்தான்… நாளை அவளை சந்திக்க நேரலாம்… தயவு செய்து அவளிடம், நான் கனவில் பேசியதையும், இப்போது சொன்னதையும்  தயவு செய்து அவளிடம் சொல்லி விடாதீர்கள்…

ஏனெனில், என்னை விட்டு சென்றதற்கு, அவளிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்…


 

எழுதியவர்

பிறைமதி குப்புசாமி
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sri
Sri
1 year ago

கனவின் கதை என்று சொல்ல முடியாது.
உங்கள் வாழ்வின் சொந்த கதை பொல் ரசிக்கும் வகையில் கோர்த்த சொற்கள் என்னை அடுத்த பக்கததிற்கு எனது விழிகளை அழைத்து சென்றது..’மி ”’யாரென்று தான் அறியமுடியவில்லை.. அற்புதம்,,

இருந்தது

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x