28 January 2025
01kjsashok story

1

காடுகள் மலைகள் சூழ்ந்த நிலத்தில் அவள் பிறந்ததாக எண்ணிக் கொண்டாள். அங்கே இலையும், கனியும் வாசனைகளாக காற்றில் கலந்திருக்கிறது. விலங்குகள், பூச்சிகளின் ஓசைகள், எங்கும் பேரிரைச்சலாக நிறைந்திருக்கிறது. பிறப்பும் இறப்பும் தம்மிடம் இல்லை என்பதை திருமணமான மூன்றாவது வாரத்தில் பாலகிருஷ்ணன் இறந்தபோது அறிந்தாள். அன்றிலிருந்து மென்னொலிகள் எதிர்படும் பூச்சிகளின் உலகத்தில் வாழத்தொடங்கினாள். பாலகிருஷ்ணன் சிறுகுழந்தையின் மென்வாசனையை உடலில் கொண்டவன். காடுகளையும் மலைகளையும் அறிந்திராத சிறுவனின் பயம் கொண்ட முகம் அவனுக்கு. அவளுடன் இருக்கும் தனிமையை அவன் பயத்துடன் எதிர்கொண்டதாக இப்போது நினைவுகூற முடியும்.

அவன் ஒவ்வொரு நாளையும் அவள் கண்களில் வழியே அறிய வந்தவன் போல் இருந்தான். அவன் இறந்ததும் அவனது தனிமையும் கனவும் தன்னுள் வந்துவிட்டதாக எண்ணினாள். மொத்தமே பதினெட்டு இரவுகள். நீரின் அலைகளில் தெரியும் கரிய முகம்போல அவ்விரவுகள் அவளை தூக்கி பறந்து கொண்டிருக்கிறது. அம்மா வீட்டு விருந்திற்கு வந்தவன். மழையில் ஆண்டன்னாவை சரிசெய்யச் சென்று மின்சாரம் தாக்கி இறக்க, அவளும் புறாவின் குறுகல்களுடன் இங்கேயே அடைந்துபோனாள்.

தன் வாழ்வில் விரைவாக வந்து சட்டென மறைந்து போனவன். அப்படியும் அவன் கொடுத்தவை பல. அவை பூனையின் மென்மயிர்போல இதமானவை. அவள் நினைத்தால் அந்நினைவுகளை திரும்பி நினைவிற்கு கொண்டுவரமுடியும். ஆனால் அவள் என்றும் மறவாதிருக்க நினைப்பது அவன் கொடுத்த பொம்மைகளைதாம். அவள் விரும்பி கேட்டாள் என்பதற்காக அவள் அன்னையிடமிருந்து சண்டையிட்டு அதை வாங்கிக் கொடுத்தான் பாலகிருஷ்ணன். அம்மா அன்று முழுதும் அழுது, அவளுக்கு அந்த பொம்மைகளிடம் இருக்கும் அன்னியோன்யத்தை பிரித்துவிட்டதாக அரட்டிக் கொண்டிருந்தாள்.

பொம்மைகளுடன் எளிதில் இணங்கிச் செல்லமுடியவில்லை. எல்லா திசைகளிலும் இருக்கும் திசை தெய்வங்கள் அவற்றிற்கு உதவின. ஆனால் அவள் கேட்க எண்ணுவதை அவை அவளுக்கு அளித்தன. சொல்லமுடியா காதல் இன்பங்களை அவள் காதில் ஓதி அவளை கிளர்ச்சியுறச் செய்தன. அவளால் நடக்க முடியா சமயங்களிலும் தனி உலகை அடைந்திடமுடியும் என்பதை உணர்த்தியவை.

முனைகளில் பித்தளை பூன்கள் போட்ட அழகிய பெட்டி. திறந்ததும் அந்துருண்டையின் நறுமணம் அடித்தது. சற்று நேரங்கழித்து பாச்சங்களின் வாசம் மேலேழும். நறுமணம் என அவள் நினைப்பதற்கு காரணம் அப்புதிய வாசனை அவள் அதற்கு முன் அறிந்திருக்கவில்லை. அவள் மாமியார் வீட்டில் பாச்சங்களின் நாற்றம் மட்டுமே எப்போது அடிக்கும்.

கதவு இடுக்குவழியே எட்டிப்பார்க்கும் பூனைகளை போன்று நின்றிருந்தன பொம்மைகள். மனம் குளிர்ந்தது. அவற்றை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். சிறுவிரல்களின் நெளிவுடன் தம்மை மேலே அழைக்க சொல்லும் உடல்மொழியை இப்போது கொண்டிருந்தனதனித்தனியாக தினசரி பேப்பர்களை சுற்றப்பட்டு சிறு இடைவெளியின் வழியே மூச்சுவிடப் பழகியிருந்தன. ஒன்றை எடுத்ததும் மற்றொன்று கைகளை விரித்தது. மேலே வந்த பொம்மையின் முகத்தில் இருந்த பேப்பரை விலக்கியதும் மென்சிரிப்பை உதிரித்து தன் விசுவாசத்தை காட்டியது. வெளியே வைத்ததும் ஒவ்வொன்றாக தங்களுக்குள் அப்பாடா என்னும் அசதி ஒலி எழுப்பின. மாலினி சிரித்துக் கொண்டாள்.

மரபொம்மைகள், மண் பொம்மைகள், பீங்கான் பொம்மைகள் என்று பலதும் விரலளவிலிருந்து முழமளவிற்கு இருந்தன. முழுதும் வெளியே எடுத்துவைத்தபின் இருட்டில் கைகளை துலாவி ஒன்றை ஒன்று நலம் விசாரிக்க தொடங்கின. பல்லியின் வால்போலிருந்த சிறுவிரல்களை தொட்டு மகிழ்ந்தன. எடுத்து வைத்த களைப்பில் கூந்தலை பின்னே தூக்கி கட்டினாள். கழுத்தில் வெளிவந்த வியர்வையை துடைத்து கால்களை சற்று நேராக்கி அமர்ந்து கண்களை மூடி அமர்ந்தாள். வலப்பக்க சன்னல் வழியாக காற்று பலமாக வீசியது. காற்றி வேகத்திற்கு அவள் உதடுகளை குவித்து மூச்சை வெளியிட்டாள். ஒலியற்ற இருளில் துணுக்குற்றுஎன்ன பேசாம இருக்கீங்க எல்லாம், ம்..” என்றாள்.

ஆசுவாசப்படுத்தும் ஒலிகள் சின்ன மூச்சொலிகள் போல கேட்டன. தயக்கம் தெரியும் கண்களை சிமிட்டி ஒன்றைஒன்று நோக்கின. முதலில் செட்டியார் தான் பேசத் தொடங்கினார். ஆசுவாசமாக அமர்ந்திருந்ததால் சட்டென வார்த்தைகள் வந்தன குடுமிவைத்த மண்டையை குலவிபோல ஆட்டி, “எங்க காலத்துல நா பார்த்த தண்ணிய இந்த உலகத்துல யாராவது பார்த்திருக்காங்களா?” செட்டிச்சி “உக்கும்” என்று நொடித்தாள். அவளது அமுங்கிய கழுத்து சீராக வலப்பக்கம் சென்று வந்தது.

முதலில் அமைதி பின் சிரிப்பொலிகள் மெல்ல எழுந்தன. கூட்டத்தை சேர்க்கும் ஆவல் செட்டியாரின் முகத்தில் தெரிந்தது. தன்வயப்படுத்தப்பட்ட எதையும் அவர் சொல்லாமல் இருப்பதில்லை. மனதை மயக்கும் சொற்களில் அதை வெளிப்படுத்தவும் அவர் தயங்குவதில்லை. “இப்பவும் தண்ணி குடிக்கிறாங்களே ஏதோ பேருக்கு”. அதற்குள் லேசாக கனைத்துக் விட்டு மீரா பேசத்தொடங்கினாள். “என்குரலால் எம் தலைவன் கிருஷ்ணரை பாட எனக்கு வாய்ப்பே அளிப்பதில்லை. அப்படி அளித்தாலும் கேட்க ஆள் இருக்கிறதா?” என அலுத்துக் கொண்டாள்.

மாலினி லேசாக சிரித்துக் கொண்டாள். இருமுலைகளுக்கு நடுவே வேர்வைதுளி ஓடியது. கைகளால் துணியோடு சேர்த்து அழுத்தி நிறுத்தினாள். இரவின் வெட்கை இப்போது கூடியிருந்தது.

நீரிலிருந்து தலை உயர்த்தும் பாவனையுடன் தலையை திருப்பி பார்த்தது கொக்கு. பார்க்கும் திசைகளிலெல்லாம் பெருமிதம் பொங்குவது போலிருந்தது அதன் பார்வை. தன் தலையை லேசாக ஆட்டி, “எனக்கு ஒரு ஜோடியும் இல்ல, நல்ல அழகான ஆண் கொக்கு எப்ப வாங்குவாங்களோ” என்றது. மாலினி வலிஅழுத்தும் தன் பரந்த இடைமீதிருந்த பார்வையை கிழிறக்கி அதை நோக்கினாள். அதன் உயரத்திற்கே கருமை நிறத்தில் இருந்த ஒரு புறா ஒன்று சிறகசைப்பது போல தன் உடலை அசைத்துநான் வருகிறேன் எனக்கு என்ன குறைச்சல்” என்றது. “சீச்சீ எனக்கு பிடிக்கல” என்று கூறி மேலும் கீழும் அசைந்தது கொக்கு. உம்மென்றிருந்த சில பொம்மைகளும் எல்லா பொம்மைகளுடன் சேர்ந்து சிரித்தன. புறாவின் முகத்தில் வென்றுவிட்டோம் என்கிற பெருமிதம் மிதந்தது.

தசாவதார செட், அஷ்டலெக்ஷ்மி செட்கள் இருட்டில் அமைதியாக அவர்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தன. வராகம் தன் மூக்கிலிருந்த உலகத்தை கையில் எடுத்துக் கொண்டு சற்று நீண்ட மூச்சை இழுத்து விட்டது. தன் சிறிய குடையை சுற்றியவிட்டபடி வாமனன், “ரொம்ப மூச்சு வாங்காதேஎன்றது. அஷ்டலெக்ஷ்மியில் ஒன்றுரொம்ப குளுருதே என்னைய திரும்பி பெட்டியிலேயே வெச்சுடுங்க”, என்றது. “இப்பதானே வந்தோம் கொஞ்ச நேரம் சும்மா இரு” என்றது பாவைவிளக்கு. கோபியர் கூட்டத்தில் இருந்த சிறிய கோபிகை,ஆமாம் எனக்கும் குளிருது” என்றது. இருட்டில் அடுப்படியில் சில பொருட்கள் தடுமாறிவிழும் ஓசை எழுந்தது. பொம்மைகள் எல்லாம் பயந்து அத்திசையை நோக்கின. மாலினியும் திரும்பி நோக்கினாள். இருட்டு ஒரு கவசம்போல முன்நின்றது.

திரையை கிழித்துக்கொண்டு வெளிவரக்கூடும் என நினைத்தாள். பயங்கொண்ட விலங்கின் உடல்மொழி அவளுக்கு வந்துவிட்டது போலிருந்தாள். சட்டென அவசரமாக எல்லா பொருட்களையும் வேகமாக எடுத்து பெட்டியில் அடுக்கினாள். மூடி, கவனமாக பூட்டை மாட்டி பூட்டினாள். அந்த அவசரத்திலும் பொம்மைகள் சரிந்து விழாமல் இருக்க நேராக பெட்டியை மெதுவாக தூக்கினாள். கைஉயரத்தில் இருந்த சிறு பரணையில் கீழிருந்த ஆட்டுக்கல்லில் ஏறி வைத்தாள்.

கீழே இறங்கியபோது அம்மா நின்றிருந்தாள். அவள் சேலையின் வியர்வை கலந்தவாசம் அவள் அருகில் வரை வந்தது.

“என்னடி, மணி இப்ப” என்றாள்.

“மணி பதினொன்னு இருக்கும் ஏன்”

“போடி, ரெண்டாவுது, அந்த பொம்மையோட விளையாண்டுண்டு இருக்கியா, எடுறீ அதெல்லாம்

“உன் வேல பாத்து போயிடு, நா பொல்லாதவலா மாறிடுவேன் பாத்துக்க”

“நா உனக்கு மேல பொல்லாதவடீ உன்னய பெத்தவ, எங்கடி வெச்சுருக்க அதெல்லாம், பரண்லயா”

“ஆமா உனக்கு அது எட்டாது போ”

“போறேன்டீ ஆனா ஒரு நா அது என் கைக்கு வரும்”

இருளில் அவள் மறைவது நீரில் அமிழும் குடம் போலிருந்தது. அம்மாவால் அதை எடுக்க முடியாது என்று அறிந்த மகிழ்வில் தூங்கச் சென்றாள்.


2

த்மாவதி கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தமர்ந்தபோது விடியலின் அறிகுறிகள் தெரிய தொடங்கியிருந்தன. அமர்ந்து கைகளை பின்னால் தூக்கி முடியை இறுக்கமாக முடிச்சிட்டுக் கொண்டாள். சிறு நூல்களின் சேர்க்கைபோலிருந்தது ஜடை, முடிச்சிட்டதும் சிறிய எலியின் வால் போலாகியது. பக்கத்தில் பாஸ்கரன் பாவப்பட்ட ஜன்மம் போல கிடந்தான். கால்கள் கறுத்து இன்னும் வளர்சியடையாத பிள்ளையாக பள்ளி சென்றுவந்த அதே டிராயரும் சட்டையுமாக தூங்கிக் கொண்டிருந்தான்

அவனை எழுப்ப மனம் வரவில்லை. வெறும் சோற்றை உண்டுவிட்டு பள்ளி செல்லும் அவனுக்கு தூக்கம்தான் நல்ல மருந்து. என்றாவது ஒரு நாள் நல்ல உணவை உண்பான். கைநிறைய காசும் பொருளும் கிடைக்கும், புதையலாககூட அது கிடைக்கலாம். அவன் சம்பாதித்து தன்னையும் மகளையும் காக்ககூடும்.

வயதிற்கு வந்த மாலினி பாவாடை மேலேறி தொடை தெரிய படுத்துகிடந்தாள். அவளை தட்டி எழுப்பியதும், எப்போதும் போன்ற ஓலங்களை எழுப்பிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டாள்.

பாவாடையை சரி செய்துவிட்டு கொல்லைக்குச் சென்றாள். இருட்டின் குரல்கள் மனதின் அதிர்வுகள் போல எதிரொலித்தது. தட்டிவைத்த உள்ளறைக்கு சென்று முடித்துவிட்டு, பல் துலக்கி வெளியேறினாள். மனதில் எப்போது போன்றதொரு அதிர்வு நின்றிருந்தது. அந்த இருளில் அதை கண்டுவிட பதபதைத்துவிட்டாள். வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டிகாஷனுக்கு கொஞ்சமாக இருந்த காப்பித்தூளை வரட்டி வரட்டி எடுத்து போட்டாள். உள்ளறைக்கு சென்றாள். பழைய தட்டிகள் வைத்து செய்த தலையணை பரணையின் மூலையில் யாருக்கும் தெரியாவண்ணம் இருந்த அடர் பழுப்பு வண்ணத்தில் இருந்த பெட்டியை அடிவழியாக விரல்களால் தள்ளி பின்பக்கமாக மெதுவாக கீழே இறக்கினாள்.

அவளுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து பெட்டியை திறந்ததும் இருட்டு அறையில் வெளிச்சம் பெட்டியிலிருந்து மட்டும் வந்ததாக நினைத்துக் கொண்டாள். செவ்வகப்பெட்டி இருட்டில் இன்னும் கருமையாக அதன் முனைகள் பளபளப்புகளுடன் தெரிந்தது. மென்காற்று வீசி சூழலை இயல்பாகியிருந்தது.

உள்ளே சிறு அதிர்வுகள் தெரிய ஒவ்வொன்றும் தன்னை நிலைநிறுத்தும் அவசரத்தில் அசைந்துக் கொண்டிருந்தன. நாயை கழுத்தில் வருடல்களால் அமைதிபடுத்துவதுபோல ஒவ்வொன்றாக தன் விரல்களால் அதன் கழுத்தில் மீட்டினாள். ஒன்றை வெளியே எடுத்து வைத்தும் மெல்ல அசைந்து மெலிந்து நின்றது. காற்றின் வேகத்தில் தன்னை மறந்தவளாக கண்கள் சொக்க நிலைத்த கண்களோடு அவற்றை பார்வையிட்டாள். ஒன்றன் பின் ஒன்றாக வந்த அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை, அதுவும் தேக்குமரம். தேக்கு மரத்தின் வாசனையோடு முந்திரி எண்ணையின் வாசம் அடித்ததை மூக்கின் அருகே வைத்து முகர்ந்து கண்டறிந்தாள்.

பளபளப்பு கொண்டிருந்த யானையின் பெருவடிவத்தை மட்டும் சற்று தொலைவு வைத்து ரசித்தாள். பெருத்த வயிற்றில் என்னென்ன இருக்கும் என நினைத்துக் கொண்டாள். அன்றைய உணவு இருக்கலாம், பெண் என்பதால் வயிற்றில் அதன் பிள்ளை இருக்கலாம். அதன் வாலசைவில் அதன் குதுகூலம் தெரிந்தது. யானை, குதிரை, மயில், தோகைவிரித்த மற்றொரு மயில், அழகிய கொம்புகள் கொண்ட மான், சிரிக்கும் பெருத்த வயிறு கொண்ட சீனன்.

வளைவு மூக்குத்தி துளையில் வைத்து அவள் அழகுபடுத்தியிருந்த மரப்பாச்சியை எடுத்தாள். நிமிர்ந்த மார்ப்போடு நின்றிருந்தாள். அவளை தன் இளம் வயதில் தன்னைப்போலவே இருப்பதாக எண்ணியது. இப்போது இவள் மட்டும் அப்படிதான் இருக்கிறாள். அவளுக்கு பெயர் மீனாட்சி என்று வைத்திருந்தாள். தன் உடல் தளர்வை ஒப்பிட்டுஎன்னடீ, அழகி மீனாட்சி எப்படி இருக்க“.

மெல்லச் சிரித்து தன் இளமையை தக்கவைக்கும் அழகிய முறுவலில்உம் நல்லாருக்கேன்” என்று பதிலளித்தாள். சரஸ்வதியும், லஷ்மியும் ஒரேயளவு கொண்டவை. இருவரும் தாமரையில் அமர்ந்திருந்தார்கள். சரஸ்வதி கையில் வீணை, அவள் சேலை அழகிய மடிப்புகளையும், மடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த இடது உள்ளங்காலின் குழைவும் இருந்தது. ஒட்டியாணம் அவள் இடையை பிடித்து இருந்தது. லக்ஷ்மியின் இரண்டு பின்னங்கைகளிலும் தாமரைகள். நெஞ்சில் அழகிய காசுமாலை, அதன் விலைமதிப்பை இன்றைய கணக்கில் யோசித்துப் பார்த்தாள். நிச்சயம் லட்ச கணக்கில் இருக்கும். காலை மடித்து வைத்து ஒரு கையில் விறியுடன் இருக்கும் செட்டிச்சி, கூடவே பக்கத்திலேயே நின்று அவளை கவனிக்கும் செட்டி. ஐய்யப்பன், விநாயகர், ஏடுடன் ஒரு கையில் உடைத்த தந்தத்துடன் இருக்கும் மற்றொரு விநாயகர், சிங்கத்துடன் இருக்கும் துர்கை, ராதையிடம் கொஞ்சம் கிருஷ்ணன், சில வண்டிகள், கூண்டுவண்டி, வைக்கோலுடன் செல்லும் காளைகளை கொண்ட மாட்டுவண்டி, ரயில் என்ஜின்.

ஒவ்வொன்றும் தன்னளவில் அழகியலை கொண்டிருந்தன. சின்ன பூமிப்பந்து போன்றிருந்த உருண்டையிலும் அதன் செதுக்கல் இருந்தன. தன் உறவை வெளிப்படுத்தும் அதன் செழுமையை ரசித்தபடி இருந்தாள். இருட்டு முடிந்து விடியல் வர தொடங்க அவை மேல் சூரிய ஒளியின் கதிர்கள் சேலையின் வண்ண விரிப்புபோல பரவியது. வெளிச்சத்தின் துளி அங்கத்தை தடவும் விரல்கள் போல தொட்டது. வெம்மை கூடுவதை விரும்பாதவளாக அவற்றை ஓவ்வொன்றாக உள்ளே எடுத்து வைத்தாள். வைக்கும்போது அவள் வைத்த பெயர்களை சொல்லி அழைத்து வைத்தாள்.

பாஸ்கரனை அழைத்தபோது அவன் வளர்ந்திருந்தான். அவனது வளத்தி அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருநாளும் சில விரக்கடை வளர்வானா என நினைத்தாள். ஆனால் கூடவே மாலினி வளர்வதும் எரிச்சலாக இருந்தது. அவள் அகலத்தில் வளர்வதாக நினைத்தாள். அவள் மாரின் செழுமை பார்க்கும்போது பத்து பிள்ளைகளை பெறுவாள் என தோன்றியது. அவளுக்கான ஆண் கிடைக்க வேண்டுமே.

“பாஸ்கரா ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து அக்காவுக்கு கட்டி வெக்கனும்டா” என்றாள்

“ஆமா அது ஒன்னுதான் இப்ப கொறச்சல், நம்ம சாதிசனத்துல ரெண்டாம் கல்யாணம் கட்டிக்க யார் இருக்கா அதச் சொல்லு”

ஒவ்வொரு நாளும் அவள் தன் கணவனின் கனவோடு எழுகிறாள் என தோன்றும். எழும்போது சிரித்து தலைவாரி பொட்டிட்டு மார்ப்புகள் குலுங்க அடுப்படிக்கு சென்றாள்

பாலகிருஷ்ணன் இறந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக தன் கனவுகள் தேய்வது தெரிந்திருக்க வேண்டும். கண்களின் கீழே கருமை படர்ந்த நெளிந்த உதடுகளோடு எழுந்தாள். பக்கத்தில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து தூக்கி வீசினாள். பொருட்களின் கனம் பொருத்து அது விழுந்த இடத்தில் மற்றொரு பொருள் இருந்து உடைந்தது. உடைந்தது என்னவோ அவள் மனம் தான். மற்றொரு உடைவில் அவள் மனம் திருப்தியடைகிறது.

பாஸ்கரனுக்கு வரன் வந்தபோது முதலில் கொண்டாடியது மாலினிதான். பெரிய வேலையில்லை சாதாரண நாட்டுமருந்து கடை வைத்திருக்கிறான். வருமானம் வருகிறது. மூன்று ஜீவன்கள் உயிர் வாழ்கிறார்கள். இன்னொரு ஆள் விட்டிற்கு வந்து அவள் ஒரு உயிரை உருவாக்கி எல்லா ஜிவனத்தை மறுஆக்கம் செய்வாளா என்று சலிப்பாக இருந்தது. மாட்டின் கண்களின் மினுக்கம்போல சிறு நம்பிக்கைதான்.

****

அன்னலெக்ஷ்மி மலர்களின் பூக்கூடைபோல உள்ளே வந்தாள். குழுங்கி தன் பெரும் உடலால் இல்லத்தை நிறைந்தாள். எதுவும் அவளுக்கு அதிகம் தேவைப்பட்டது. பாஸ்கரனுக்கு அவள் சொல்லின் பொருள் விளங்க சில நாட்கள் தேவைப்பட்டது.

வந்த ஒருவாரத்தில் பாஸ்கரனை தன் கையில் வைத்துக் கொண்டாள். அவள் சொல்லுக்கு ஆடினான். பாஸ்கரனின் கண்களில் இருந்த காதல் இதற்குமுன் பார்த்திராதது. பார்க்காத நிலத்தின் மீதான ஆர்வத்தை ஒத்தது அவன் செயல்கள். துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது அமர்வில் அவள் உட்காராமல் நாட்கள் நீண்டு தலை முழுகாமல் ஆனதும் அவள் அதிகாரம் வளரதொடங்கியது.


3

பாஸ்கரனிடம் அன்னம் பொம்மைகளின் செட் தனக்கு வேண்டும் என கேட்க ஆரம்பித்தபோதுதான் மாலினி விழித்துக் கொண்டாள். மாலினி பாதி கனவில் விழித்துபோல உணர்ந்தாள். தனக்கேயான அவ்வுயிரிகளை பிரித்தெடுக்க நினைக்கும் அவளது செயலை வன்மையாக எதிர்த்து நின்றாள். அவள் உடலின் தளர்வை தன் உள்ளத்திற்கு காட்டாமல் எழுந்து நின்று கத்தினாள். வீடு ஒரு விநாடி அதிர்ந்து நின்றது. உள்ளிருந்த பொருட்கள் ஒரசைவை காட்டி நின்றன.

பாலகிருஷ்ணன் தன்னுடலை தழுவிய பொழுது மகிழ்வோடு உணர்ந்த உடல்பாரத்தை இப்போது சண்டையில் எதிர்நிற்பதில் தெரிந்தது மாலினி. அவன் பிரிந்த வேட்கை இப்போது வெளியேறியது. “அன்னம், உனக்கு இங்க என்ன வேலையோ அத செய்யப்பாரு நாளைக்கு நா செத்துபோவன் பாரு அப்பகூட உனக்கு அந்த பொம்மைக கிடைக்காது. என் சிதையில அதையும் போட்டுதான் எரிக்க சொல்வேன்”.

“நீ செத்தோன்ன வந்து பாக்கபோறியா என்ன? அதையும் பார்த்திடலாம்” என்றாள்.

பாஸ்கரன் வந்ததும் அவனிடம் புகார் கொடுத்தாள். “பாருடா உன் பொண்டாட்டிய, நா வெச்சிருக்கிற பொம்மைங்க அவளுக்கு வேணுமாம்”

“என்னடி அது” என்றவனிடம், “கொலு வெக்கிறதுக்கு பொம்மைங்க வேணும்தானே!, நீங்க தானே ஆம்பள வாரிசு, உங்களுக்குதான் அந்த சொத்துங்க வந்து சேறும். அதோடில்லாம புருஷன் செத்த மூளிங்க அத தொடப்பிடாது”

மாலினி தன்னை மறந்தவளாக மாறினாள். நிலம் அதிர கீழே விழுந்து தரைதளத்தின் மொத்த இடத்தையும் பிடித்துக் கொண்டாள். இடவலம் என்றில்லாமல் எல்லா திசைகளிலும் அவளுடல் பிரண்டு எழுந்து நின்றது. அம்மா பத்மாவதி தளர்ந்தபடி வந்து பார்த்து “டேய் அவ மேல சாமி ஏறிடுச்சுடா” என்றாள்.

பாஸ்கரன் கோபத்தின் பிடிப்பில் எரிச்சல் கொண்டவன் போல “என்னம்மா புதுசா சொல்ற”, “ஆமாம்டா அவளுக்கு சின்ன வயசுல காமாட்சி வந்து உடம்புல ஏறி குதியாட்டம் போட அருள்வாக்கெல்லாம் சொல்லியிருக்கா, நீ சின்னப் புள்ள இப்ப அவ கையையும் காலையும் ரெண்டு பேரு புடிச்சாதான் நிப்பா சீக்கிரம் புடிடா, நீயும் புடிடீ” என்றாள்.

அந்த கைகளில் ஈரம் இன்னும் இருந்தது. நிழல் கண்ட கண்கள் இருள்கொள்வது போல இருந்தாள். கண்களில் இருந்த பாவம் அவன் அறிந்த ஐம்பது ஆண்டுகளில் அறிந்திராத சேர்க்கை. யாரை நோக்குகிறாள் என்று அவள் கண்களில் தெரியவில்லை. பிறந்த பிள்ளையின் முதிர்ச்சியற்ற கண்கள் அவை. உடலில் இருந்த திணவு அவள் இதுவரை சேர்த்துவைத்திருந்த காலத்தின் பாரம் அது. பற்களில் தெறிப்பு கேட்டு அவன் சற்று பயந்து தலையை பின்னோக்கி வைத்துக் கொண்டான்.

சட்டென எழுந்தமர்ந்தாள். சம்மணமிட்ட கால்களின் மேல் அவள் உடல் தூக்கி நிறுத்தப்பட்டது போலிருந்தது. பெருத்த இடை ஆட இடம்வலமென அவள் உடல் ஆடிக் கொண்டிருந்தது. கிட்டித்த பற்களின் இடையே அவள் பெருத்த ஓசை வெளிப்பட்டது. ம்… என்ற அதிர்வு சுவர்களில் மோதி மீண்டும் வந்தடைந்தது. “என்ன தாயி வேணும்” உனக்கு குனிந்து அவள் காதில் கேட்பதுபோல வாயில் கைவைத்து கேட்டாள் பத்மாவதி. 

சட்டென வீட்டில் இந்தனை நபர்களா! எங்கிருந்து வந்தார்கள் என்று அதிர்ந்து நோக்கினான் பாஸ்கரன். வீட்டின் எல்லா மூலைகளிலும் தலைகள் தெரிந்தன. சுற்றி அமர்ந்திட்ட மனிதர்களுக்கு நேரத்தின் அருமை தெரியவில்லையோ என நினைத்தான். எல்லா காலங்களிலும் மனிதர்கள் இப்படிதானா என எண்ணினான். அவள் பேசுவதை கேட்க நின்றிருந்த அமர்ந்திருந்த கூட்டத்தின் செய்கை அவனை துணுக்குற வைத்தது. எப்போதும் வேலை வேலை என்றிருக்கும் அவனுக்கு தெய்வத்தின் சன்னதம் புரியவில்லை.

“என் வீடுடி இது நா இங்கதான்டி இருப்பேன். எனக்கு செய்யவேண்டிய காரியங்களை முறைப்படி செய்யுங்கடி உங்களுக்கு வேண்டியத நாந் தர்றேன்”

“அம்மா தாயே, உனக்கு வேண்டியத கொடுக்கிறோம் தாயி, இந்த வீட்டுல பரணுக்கு கீழே இருக்குற அம்மன் கோலத்துக்கு தினம் வெளக்கு ஏத்தி கும்பிடறேனே தாயி”

“எனக்கு சக்கரப்பொங்கல், கலவசாதம் படையல் வெச்சியாடி, எந்த அம்மாவசைக்கும் நா வாரேனடி”

“செய்றோம் தாயி, செய்றோம் தாயி”

“ம் இந்த முற செய்யுடி”

“என் புருஷன் செத்துப்போயி அம்பது வருஷமாயிடுச்சு இன்னும் இந்த கட்ட இங்கேயே இருக்கு, எனக்கு எப்ப தாயி, காடு கூப்பிடும்”

ம் என்ற உருமல்கள் எழ மயங்கி விழுந்தாள் மாலினி, கேள்விகளை சுமர்ந்திருந்த பத்மாவதி திகைத்து நின்றிருந்தாள்.


4

ன்னம் கதவிடையே காதுகளை வைத்து ஒலியை கூர்ந்து கவனித்தாள். ஒலிகளில் எந்த மாறுபாடு எழுந்தாலும் அவளுக்கு புரிந்துவிடுகிறது. இந்த பொம்மைகளுக்காகவா இப்படி அடித்துக் கொள்வது என அவள் மனம் துணுக்குற்றாலும் அதில் ஒரு வெற்றி தனக்கு வேண்டியிருப்பதை அவள் அறியாமலில்லை.

ஓரிரண்டு சொற்களை தவிர அவள் அதிகம் பேசுவதில்லை. பேச்சு நீண்டு ஒன்று உள்ளே செல்லும் அல்லது வெளியேறும். உள்ளேறும் எண்ணங்களைவிட வெளியேறு எண்ணங்கள் குறித்துதான் அதிகம் கவலைக் கொண்டாள். அவள் பெட்டியை மெல்ல ஓசையெழுப்பாமல் திறந்தாள். அப்படியும் சிறு கீரீச் என்கிற ஒலி அவளைச் சுற்றி வந்தது. அவள் அமர்ந்திருந்த இடம் அறையின் மையம் என்று காட்டின அவ்வொலிகள். உத்திரத்தின் நேர் கீழ் எட்டா உயரத்தில் இருந்த சிறிய புதியவகை பரணையில் அப்பெட்டி இருந்தது. குதிரை ஏணியால் ஏறி எடுத்திருந்தாள்.

கனமான இரும்பு பெட்டி, கீல்களில் எண்ணெய்விட்டு நன்கு துடைத்து பளபளக்கும் பெட்டி. பலவண்ணங்கள் கொண்ட மண், பீங்கான், மரப் பொம்மைகள் நீளவாக்கில் அடுக்கடுக்காக அடுக்கப்பட்டிருந்தன. தனித்தனி சிறுசிறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தவைகளில் அழகாக பொருந்தியிருந்தன.

ஒன்றை எடுத்தாள், பரந்தவிரிந்த கொம்புகள் கொண்ட புதிய ஓசையை கொண்டு துள்ளி ஓடக் காத்திருக்கும் அழகிய புள்ளி மான், மண்ணில் செய்தது. அதன் அழகு நிமிர்ந்து நிற்கும் தன் மார்ப்பை இளகச் செய்தது. சட்டென உடல் குளிர்ந்தாள். தன் முன்னே இருக்கும் ஒவ்வொரு பொம்மைகளையும் வெளியே எடுக்க அதன் கனபரிமாணம் அறைமுழுதும் நிறைவதும் கண்களில் ஓரங்கள் வரை துள்ளல் பாடல் ஒன்று இசைக்கப்படுவதையும் கண்டாள்.

அதுவரை இருந்த தூக்கம் கண்களிலிருந்து உடலிலிருந்து வெளியேறியதை அறிந்தாள். உடல் முழுபாரத்தையும் இழந்துவிட்டிருந்தது. எழுந்ததும் அவளுக்கு நிற்க மட்டுமே இடம் இருந்தது. அந்த சிறிய இடத்தில் தன் உடல் குழுங்க அசைந்தாள், தாளலயத்தில் இதயம் துடிக்க கால்களை மாற்றிமாற்றியும் கைகளை நான்கு திசைகளிலும் சுழல நடனமிட்டாள். அந்நடனம் அவள் அறிந்த ஒரு புது பரவசத்தை அளிக்க தொடங்கியது. நாளை நடக்க இருக்கும் கொழுவிற்கு தன்னை இப்போதே தயார்படுத்தியிருப்பதை கண்டுக் கொண்டாள். சிணுங்கள் உதட்டசைவு அடங்கியதும் ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து வைத்தாள். பெட்டி நிறைந்தது மனம் நிறைவது போலிருந்தது.

முதல் சூரிய கதிர்களுக்கு பலமணிநேரம் முன்னே அவள் எழுந்துவிட்டிருந்தாள். சூர்யகதிர்களை அவளை தொடுமுன் அவள் தயாராகிவிட்டாள். குளிரின் இதம் உடலை அரிக்கும்முன்னே தயாராக இருந்தாள். படிகளை அமைத்தாள் வெண்மையான துணியால் படிகளை மறைத்து மேலே குழிவுகளுடன் கட்டினாள். தன் பெட்டியை இறக்கி அதன் ஒவ்வொரு பொம்மைகளையும் வெளியே எடுத்து துடைத்து வைத்தாள். பத்மாவதி வந்து சொல்ல, அன்னம் பூஜைஅறை இருந்த செல்ஃபில் விளக்கேற்றிவைத்து பித்தளை தட்டில் தேங்காய் வெத்தலை வைத்து சூடம் கொழுத்தி சாமிக்கு காட்டிவிட்டு, படிகளுக்கு காட்டி பொட்டிட்டாள். தேங்காயை உடைத்து வைத்துவிட்டு, பொம்மைகளை ஏற்றினாள்.

ஏழுபடிவரிசை முதல் மேல்படியில் தசாவதாரங்கள். அகன்ற பெரிய உருவங்கள், கீழே அஷ்டலெக்ஷ்மிகள், அதன் கீழே விநாயகரும் முருகர் ஐயப்பன், சரஸ்வதி உருவங்கள், அதன் கீழே ராமானுஜர், சங்கரர், ராகவேந்திர போன்ற மகான்கள் அதன் கீழே காட்டு விலங்குகள், அதன் கீழே மரங்கள் செடிகள் போன்ற செட்கள், அதன் கீழே பலவகை பொம்மைகள், மனித உருவங்கள். அவை ஊடே சீரியல் செட் சென்று ஒளிவீசியது. சின்னச் சின்ன அசைவுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொளிகளால் கூடம் நிறைந்தது. கண்ணைப் பறிக்கும் அழகிய தோற்றம் அதற்கு வந்துவிட்டிருந்தது.

மஞ்சளில் விநாயகர் செய்து ஊதுபத்தி ஏற்றி, தீபாரதனை ஏற்றி வைத்து கீழே விழுந்து வணங்கினாள். பாஸ்கரன் அவளுடன் நின்று அவளை இடித்துக்கொண்டே எல்லா பூசைகளையும் செய்தான். படிகளின் அழகை கண்டு கண் வைத்து விடுவார்கள் என்று அவள் எண்ணினாள். அதற்குதிருஷ்டி வைப்பது போல ஒரு அரக்கனின் உருவம் கொண்ட கரிய லட்டு திருடன் பொம்மையை முன்னே வைத்தாள்.

வீடு நிறைந்தது. எல்லா மனிதர்களும் வந்ததும், அன்னத்தின் குரல் மாறியதை பாஸ்கரன் உணர்ந்தான். அவளை திரும்பி பார்த்தபோது உடல் அதிர்ந்து நின்று கால்களை மாற்றி மாற்றி வைத்து கைகளை தூக்கியிருந்தாள். தலை பின்னல் அவிழ்ந்தது. உடல் ஒரு மடங்கு அதிகரித்து நின்றிருந்தது. “யேய் என்னடி இது உன்னய பெருசா செய்ய சொன்னா சிறுசா செஞ்சிருக்கா, யாருடு உனக்கு சொன்னது” என்றாள். அவள் சொன்னது பத்மாவதியை பார்த்துதான் என மற்றவர்களுக்கு புரிய தாமதமானது, உடனே புரிந்துக் கொண்ட பத்மாவதி, “சொல்றேன் அம்மா பெருசா செய்யறேன். உனக்கு என்ன வேணுமோ செய்யறேம்மா” என்றாள்.

“உனக்கு வீடுதான் இனி வாழ்க்க பயப்படாம இரு” என்று முடித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் மயங்கி விழுந்தாள் அன்னம். அவள் கண்கள் திறந்தபோது உள்ளறையில் சிறுவட்டத்தில் தன்னுடல் குறுக கதவுஇடுக்கு வழியாக நடப்பவைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மாலினி.


 

எழுதியவர்

கே.ஜே. அசோக்குமார்
தஞ்சாவூரைச் சார்ந்த சிறுகதையாசிரியர். இவரின் “சாமத்தில் முனகும் கதவு “ மற்றும் “குதிரை மரம் &பிற கதைகள்” என இரண்டு சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x