25 July 2024

எத்தனையோ முறை சொல்லி விட்டாள் இசைநங்கை இப்படிச் செய்யாதே என்று பசுபதிக்கு மண்டையில் ஏறியதே இல்லை. வலியுறுத்திச்‌ சொன்னால் அவனுக்கு கண்மண் தெரியாதக் கோபம் வரும்.  முன்பு இருந்த நிலையிது இப்போது அப்படி இல்லைதான் ஆனால் உள்ளும் புறமும் முழுக்க மாறிவிடவில்லை என்பது இசைக்கு நன்றாகத் தெரியும்.  இசை அவளது தோழிகளிடம் எல்லா விஷயமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. இல்லையெனில் இந்த விஷயத்தில் அவர்களின் அபிப்பிராயம் கேட்கலாம். ஆலோசனை பெறலாம். சினிமா கதை, ஷாப்பிங் கதை, மாமியார் நாத்தனார் கதை பேசியிருக்கிறாளே தவிர பெட்ரூம் கதை பேசியதேயில்லை.

இசைநங்கைக்கு தோழிகளிடம் பேசவும் விருப்பமில்லை. ஒரு செய்தி கூறினால் பல செய்திகளாகக் குட்டிப் போடுமோ என்று பயந்தாள். முன் அனுபவம் அப்படியிருந்தது. பதின்ம வயது காலத்தில் இசைநங்கை வசித்த ஊரின் செல்வாக்கு மிகுந்த பையனொருவன் இசையின் பின்னால் சுத்தோ சுத்தென்று சுத்தினான். வீட்டில் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை பயமாயிருந்தது. அவன் சுற்றுவது இசைக்கும் பிடித்துதான் இருந்தது. ஓரிரு கடிதம் கூட கொடுத்திருந்தான். எப்படிப் பேசுவது என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டு மனிதர்களிடம் என்ன சொல்ல வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்று புரியாத நிலையில் அந்தப் பிடித்தம் மட்டும் மனதில் கொண்டு,

அவனுடன் ஓடிப் போய் விடலாமா என்று அல்லும் பகலும் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இசைநங்கை விடிய, விடிய போட்டுக் கொண்டிருந்தத் திட்டம் அவனுக்குக் கூட தெரியாது.

பிறகு ஒரு நாள் குடும்பச் சூழல் காரணமாக வேறு ஊருக்கு குடியேறினாள். அத்துடன் அவன் காதல் கதை முற்றுப் பெற்றது. இன்றைய தேதிக்கு அவன் நேரில் வந்து நின்றாலும் இசைக்கு அடையாளம் தெரியாது. அந்த அளவில்தான் பழக்கம் இருந்தது. நெருங்கி ஒரு நாள் கூட பார்த்தது இல்லை. தலைமுடியை வானத்தைப் பார்த்து  ஒரு கோதல் விடுவான். தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறாள். அது போல யாரேனும் செய்தால் அவன்தானோ என்று சிலகாலம் நினைத்துக் கொள்வாள். அப்படி ஒரு நாள் பிள்ளையார் கோவில் சந்து பக்கம் ஒருவனைக் கண்டு விட்டு, தோழி ஒருத்தியிடம் கூற அச்செய்தி சிலரிடம் பரவி திரும்ப அவளிடமே வருகையில், ” நீதான் அடிக்கடி அவன்கிட்ட பேசிட்டு இருக்கியாமே” என்று மாறியிருந்தது. இப்படி நான்கைந்து முறையாக அடிபட்டப் பின்னரே இனியெதுவும் யாரிடமும் சொல்வதில்லை என்ற முடிவிற்கு அப்போதே வந்திருந்தாள்.

மவுத் வாட்டரிங் பற்றிப் படித்த போது ஒன்றும் தோன்றவில்லை. அதுவும் ஒரு செய்தி எனக் கடந்து விட்டாள். ஒரு பழைய பாடலில் ‘வாயிலிருந்து வரும் அமிழ்து’ எனப் படிக்கையில்தான் ‘ச்சீய் என்றிருந்தது.  எச்சில் இனிக்குமா!

பசுபதிக்கு நேக்கு போக்கெல்லாம் கிடையாது. ஒரு விஷயம் வேண்டாமென்றால் ஏன் எதற்கு என்ற யோசனை இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம்தான் எல்லாவற்றிற்கும். இசைக்கு அப்படியில்லை. ஒரு விஷயம் நெருடினால் முடிந்த வரை அதன் விவரங்கள் சேகரித்து விலாவரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிடித்தாலும் அப்படித்தான். பிடிக்காவிட்டாலும் அப்படித்தான். இந்த ஆராய்ச்சி குணம்தான் அவளது பொறுமைத் தன்மைக்கு முக்கியக்காரணம்.

இதைப் பற்றித் தெரிந்து கோள்வோமென நினைக்கையில்தான் பழைய இலக்கிய வரிகள் சிந்தனையில் வந்தது. எச்சில் முத்தம் போன்ற சொற்பதங்களை நினைக்கையிலேயே உவ்வேக் என்றிருந்தது. அப்படியே ஒத்தி எடுக்கறது போல பத்தாதா அதென்ன எச்சில் விட்டுக் கொண்டு.. கல்லூரியில் படிக்கிற போது தோழிகள் அவன் அவளை லிப் டூ லிப் அடிச்சிட்டான்டி போன்ற கிசுகிசுக்களில் ஆர்வம் வரவில்லை.  அடிச்சிட்டானாம் அது என்ன அடிக்கிறதா என்று தனக்குள் கேட்டுக் கொண்டு ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வாள்.

பெண்களிடம் பேசத் தயங்கிய அவளது மனது டக்கென்று நண்பன் குமாரிடம் கேட்டு விடத் தீர்மானித்தது. அவனுக்கு அவளிடம் பொய் சொல்லவே தெரியாது. இசை ஒரு நிகழ்வு குறித்து என்ன நினைக்கிறாள் என்று அவள் சொல்லாமலேயே குமாரால் சொல்லிவிட முடியும். எங்கிருக்கிறாய் என்று குமார் கேட்டு இந்த இடத்தில் இருக்கிறேன் என்று மட்டும் இசைநங்கை கூறுவாள். அந்த இடத்தில் அவளுக்கு என்ன தேவை, எப்படி வர வேண்டும், இசையின் பாதுகாப்பு என்று அனைத்தும் சரசரவென்று மெல்லிய நகைச்சுவையூனூடே  கூறிவிடுவான். அத்தனை செளகரியத்தன்மை அவனிடம் பேசுகையில் உணர்வாள்.  இசையிடம் எந்தப் பூடகமும் இல்லாமல் பேசுவான். பேச அனுமதிப்பாள். அத்தகைய அனுசரிப்பு புரிதல் இருவருக்குமிடையே இருந்தது. இருக்கும். ஆகவே, குமாரிடம் இது குறித்துப் பேசவேண்டும் என்று இசைக்கு  தோன்றியது இயல்புதான். குமாரின் நேரம் சூழல் பற்றிக் கேட்டாள். அவள் எதுவோ பேசுவதற்காகக் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். எதிர் கேள்வி எதுவுமில்லை. உடனடியாக, மாலை நேரத்தில் பேசலாம் என்றான். ‘சொல் ஆழி வெண்சங்கே’ என்ற ஆண்டாளின் வரியிலிருந்து ஆரம்பித்து, பேசி

இப்படித்தான் எல்லாப் பெண்களுக்குமா இல்லை எனக்கு மட்டும் இப்படி ஒவ்வாமையா என்று கேட்டாள்.  குமார்,

“அதுக்கு நான் எல்லா லேடிஸ்கிட்டயும் இப்படிப் பழகியிருக்கணும்ல அப்பத்தானே சரியா சொல்லமுடியும்” என்றான் சிரிக்காமல்  இசைநங்கை சிரித்துவிட்டு ‘பதில் சொல்லு’ என்றாள்.

சின்ன வயதில் நெஞ்செல்லாம் வெளுப்பும் கருப்புமாக முடி கசகசத்துக் கிடந்த மாமா ஒருவர் இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் கேட்டார். பிடியின் இறுகல் காரணமாகக் கேட்டபடி கொடுத்து விட்டு ஓடி, வீட்டில் போய் நின்றுதான் மூச்சு விட்டாள். பதிலுக்கு அந்த மாமாவும் கொடுத்து விட்டுத்தான் பிடியை விட்டார். முகம் கை கால் எல்லாம் தண்ணீரில் கழுவி கண்ணாடிப் பார்க்கும் போது அந்த முடிகள் இன்னும் கண்களுக்கு வெகு அருகில் தெரிந்தன. திரும்ப கன்னத்தில் தோலோடு தோலாக ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரைப் பிய்த்தெடுப்பது போல் அந்த இடத்தைப் பிய்த்து அவளது சிவந்த கன்னம் மேலும் சிவக்கச் சிவக்க கழுவினாள். அன்றிலிருந்து எந்த ஆண் அருகிலும் நிற்பதில்லை. கைப்பிடிக்க நீட்டும் போதே ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நாலடி எட்டித்தான் நிற்பாள். யாரிடமும் கன்னம் நெற்றியில் கூட வாங்கியதில்லை.

இசை நங்கைக்கு என அமைதியான குணமும் பிறர் பேச்சை செவிமடுத்து நிதானமாகப் பதிலுரைக்கும் பாங்கும் உண்டு. அப்பாவியான முகக்களையில் மஞ்சள் கலந்த தோலின் நிறத்தோடு இருப்பவள். பேசுகையில் சில பெரியவர்கள் வாழ்த்துச் சொற்களோடு இரு கைகளாலும் நெற்றியில் இருந்து முகம் வருடி வாயில் இட்டுக் கொண்டதுண்டு, அவ்வளவுதான். ஆனால், முதன்முதலில் எச்சில் எல்லாம் வைத்து இப்படிக் கொடுக்க ஆரம்பித்தது பசுபதிதான். முதலில் திகைத்து விட்டுவிட்டாள். பிறகு,

வெப்பமாக கார்பன் டை ஆக்ஸைடை இரையவிட்டு மூச்சில் இடையூறு செய்து எச்சில் புகட்டிக் கொண்டு உவ்வேக் இது என்ன செயலோ .. இந்த எண்ணத்தோடு நெருங்கினாலே சீறிக் கொண்டு வரும் அந்தக் கரியமிலவாயுவை சுவாசித்து விடக்கூடாது என்றெண்ணி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு தம் கட்டுவாள். எவ்வளவு நேரம்தான் முடியும்! முகத்தை திருப்பி மூச்சு விட்டு, விட்டுத் திரும்புவாள். “ஆளை விடப்பா ஸாமி” என்று கூறி எழுந்து தண்ணீர் ஊற்றி கொப்பளித்து துணியினால் அழுந்த துடைத்துக் கொள்வாள். ரத்தம் பட்டென்று பாய்ந்து உதடு மேலும் சிவந்து தெரியும். பசுபதி கூட சொல்வியிருக்கிறான்

“அது ஏன்டி இசை இப்படி…உன் மேல தப்பே இல்லாம நான் கோவப்பட்டா கூட  அமைதியா போயிடற,  நகை நட்டு புடவனு கேக்குறது இல்ல, யார் கிட்டயும் எந்த வம்பு தும்பும் கிடையாது, ஆளு நல்லா வடிவா இருக்க , நல்ல‌ டிரஸிங் சென்ஸ் இருக்கு ஆனா இதுல மட்டும் ஏன் இப்படி இருக்க!!”

அது என்னவோ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள் என்பதாக அப்படித்தான் இருப்பேன் என்று இருந்தாள். இசையைக் கடிந்து கொள்ளவும் மனம் வராது பசுபதிக்கு நொடிக்கு நூறு முறை இசை இசை என்று அழைத்துக் கொண்டிருப்பான். கண் முன்னே இருக்கும் பெல்ட்டைக் கூட “இசை பெல்ட் பாத்தியா” என்று கேட்டு விட்டுத்தான் எடுத்து மாட்டிக் கொள்வான். இத்தனை நாளும்  இதுகுறித்து ஆழ்ந்து யோசிக்காமல் தவிர்த்து வந்தவளுக்கு இப்பொழுதேனோ அதுகுறித்த சிந்தனையே மூளையில் பரவியிருந்தது.

மாடியில் இருந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 4800 சதுர அடியில் 850 சதுர அடி மட்டுமே வீட்டிற்கு எடுக்கப் பட்டிருந்தது.. மற்றப் பகுதி அனைத்தும் தோட்டமாக பூக்கள், செடிகள், கொடிகள் மரங்கள் என்று செழித்திருந்தன.. இப்படி மாடியில் நின்று தோட்டத்தைப் பார்ப்பது இசைநங்கைக்கு அலுக்காத விஷயங்களில் ஒன்று. எப்படிப்பட்ட மன நிலையும் சாந்தமாக்கி விட்டு விடும். பிப்ரவரி மாதம் பிறந்து விட்டிருந்தப்படியால் பறவைகள் கீச் கீச்சென்று பாடிக்கொண்டு இணையுடன் திரிந்தன. ஒன்றுடன் ஒன்று மூக்கை ஈஷிக் கொள்வதும் வாயைப் பிளந்து இறகுகளுக்குள் ஒட்டிக் கொள்வதும் இணையாகப் மறப்பதும் அமர்வதுமாக இருந்தப் பறவைகளையே நீண்ட நேரம் பார்த்துக் கொணடிருந்து வானைப் பார்த்தாள்‌. தனது கேள்விக்கு நண்பன் குமார் கூறியது நினைவில் வந்தது.

“நான் உங்கிட்ட பொய் சொல்ல மாட்டேன், என்னால முடியாது. ஆனா பேசாம தவிர்க்கலாம்ல? இதுக்கு என் பதில் ‘நோ கமெண்ட்ஸ்.’ ஏன்னா கொஞ்ச நேரங் கழிச்சு பிறகு உன் மனசுக்குத் தெரியும். இது என் நழுவல் பதில் இல்ல. நீ தவிர்த்துக்கிட்டு இருக்கற. இன்னும்  யோசிக்காத பதில். எது ஒன்னையும் ஆழ்ந்து பாக்கறது உன் வழக்கம் ஆழ்ந்து மனசொன்றி செய்யறது பத்தி யோசி! தட்ஸ் இட்”

வானில் நீலதிற பஞ்சுப் பொதி‌போன்ற மேகக் கூட்டங்கள்  படிப்படியாக நகர்ந்து நிலவை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்.


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x