29 April 2024

புரொஃபஸர் சிவகுரு ஆறு நாற்காலிகளுக்கு அப்பாலிருந்து கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தன்னிலைப் பெற்றவராகத் தன் மேசையில் இருந்த ஆய்வுத் தாள்களில் கவனத்தைத் கொண்டு வந்தார்.. அவர் பார்த்தது மேடம் லிசியின் மேசையை, லிசி தனது இருக்கையில் 70 கிலோ உடலை முன் நகர்த்தி அமர்ந்து வழக்கம்போல் பாதி கீழ்ப்பார்வையால் தனது மார்பகங்களைப் பார்த்துக் கொண்டாள். பிறகு, வாயிற்படியை அவ்வப்போது பார்த்துக் கொண்டே கையில் இருந்த தாள்களைப் புரட்டிக் கொண்டு திருத்தங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தத்தாள்கள் அவளின் அருகில் எல்லாவற்றிற்கும் ஆம் என்று தலையை ஆட்டியபடி நின்று கொண்டிருக்கும் ஜெனிடாவினுடையவை. ஜெனிடா, மேடம் லிசியிடம் ஆய்வு மாணவியாகச் சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது.

ஜெனிட்டாவை தனக்குப் பதிலாக வகுப்பிற்குச் செல்லுமாறு நைச்சியமாகச் சொன்னாள். “இன்னைக்கு ஒரு தலைப்பு பாத்து முடிச்சிடலாம்னு நினைச்சேன் வகுப்பு வேற இருக்கு”. ஜெனிடா புரிந்து கொண்டு நான் போகிறேன் எனச் சென்றாள். அவள் சென்றவுடன் லிசி கையிலிருந்தத் தாள்களோடு சிவப்பு மை பேனாவையும் மேசையில் வைத்தாள். நாற்காலியை பின் நகர்த்தி எழுந்து சென்று அறையின் முன் இருபக்கமும் நீண்டிருந்த தாழ்வாரத்தில் நின்றுகொண்டாள். இடுப்பில் கைகளை வைத்து அப்படியே இடது வலது என் இருபக்கமும் திரும்பித்திரும்பித் தனது பிருஷ்டங்களைப் பார்த்தாள். திரும்ப கழுத்திற்கு கீழ் குனிந்து பார்த்துக் கொண்டாள். இப்பார்வையிடல்கள் முடித்தவுடன் பெரிய வேலையொன்றை முடித்தாற்போன்ற முகபாவனை அவளிடம் தோன்றியது. தாழ்வாரத்திலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி மைதானத்தின் குறுக்கே கழிவறை சென்றுவிட்டு வந்த வேறொரு துறை பேராசிரியரிடம் பேச ஆரம்பித்தாள்.

ஆராய்ச்சி மாணவிகளின் அடைசலான அறையில் உடைந்துபட்ட நாற்காலி பெஞ்சுகளோடு அமர்ந்திருந்த விமலா, சாயிராபானுவிடம் அங்கிருந்து தெரியும் லிசியைக் கண் காட்டி “இதுக்கு ஜெனிடாவைப் பிடிக்கறதுக்கு வாய்ப்பே இல்ல” என்றாள். அவள் லிசியை கோசலா என்று குறிப்பது வழக்கம். கோசலாவின் குணம் வேறு அது ஜெனிடாவிற்குப் புரியவில்லை என்றாள். பேராசிரியர் சிவகுரு லிசியைப் போலவே தோற்றம் இருப்பவர்களைத்தான் லிசிக்கு பிடிக்கும் என்றதை நினைவுபடுத்தி ‘நீ கூறுவது சரி’ என்றாள் சாயிரா. இருவரும் இதே கல்விக் கூடத்தில் முதுநிலை முடித்து மேற்கொண்டு ஆய்வு மாணவிகளாகத் தொடர்கிறார்கள். இடத்தைப் பற்றியும் பேராசிரியர்கள் குறித்தும் ஜெனிடாவிடம் அவ்வப்போது கூறிவருபவர்கள். ஜெனிடாவிற்கு இந்தச் சூழல் முற்றிலும் புதுசு.

அடுத்த நாள் பேராசிரியர்களின் அறையில் ஜெனிடா எழுதியிருந்தக் கட்டுரைத் தாள்களை லிசியிடம் கொடுத்து விட்டு அவள் அருகில் நிற்கையில் சாயிரா கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் லிசி முனகினாள். எதற்கோ இனிப்பு கொடுத்த ஜூனியர் மாணவியிடம் வேண்டாம் என்று மறுதலிக்கும் ஜெனிடாவைக் கண்டு லிசி, ‘அதான் அப்படியே வடிவா இருக்கற எங்கள மாதிரியா எல்லாம் தின்னுக்கிட்டு‌ ‘என்றாள்‌ ஆத்திர முனகலாக.. உண்மையில் அந்த இனிப்பை ஜெனிடா மறுதலித்ததற்கு காரணம் மேடம் லிசியின் முன்னும் மற்ற பேராசிரியர்கள் முன்னும் எப்படி உண்பது என்ற சங்கோஜத்தில்..

ஜெனிடா திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானவள். தொடர்ந்து படிக்கும் சூழல் பெற்றவளில்லை. ஒவ்வொரு படிப்பிற்கும் வருடக்கணக்காக இடைவெளி விட்டு படித்துக் கொண்டிருப்பவள். இயற்கையோ செயற்கை சூழலோ அப்படித்தான் சாத்தியப்படுத்தியது. ஆனால் இடைவெளிக் காலங்களில் படிப்பினைத் தொடர தலையால் தண்ணீர் குடித்து மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டு முட்டி மோதிக் கொண்டிருப்பாள். பின்னர் அது ஒரு நாள் நடந்தேறும். இந்தக் கல்விக்கூடத்தில் ஒரு தோதான நாளில் ஆய்வு மாணவியாகச் சேர்ந்து கனவுகளோடு தொடர்கிறாள்.

முதலில் பாஷ்யத்திடம்தான் ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள். பாஷ்யத்தினுடைய அலப்புதலின் பொருட்டாக அவரிடத்தில் சிக்கல்கள் உறுதியாக உட்கார்ந்து விட்டிருந்தன. அவர் உருவாக்கிக் கொண்ட சிக்கல்கள் என்றில்லாமல், அவர் அறியாமல் அவர் மேல் ஏற்றப்பட்டிருந்த சிக்கல்கள் என்று சிக்கல் வலைகளுடன் பரபரப்பாக?! கல்லூரிக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் மனிதர். இதில் இரண்டாவது வகைமையின் கீழ் பாஷ்யத்தை பழிவாங்குவதாக நினைத்து ஜெனிடா பழி வாங்கப் பட்டாள். ஆய்வு தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்தச் சிக்கல்களால் தொடர்ந்து ஜெனிடா நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் பாஷ்யம் வழி ஏற்படுத்துவதாக நினைத்து நிலைமையை மேலும் சிக்கலாக்கினார். பலனாக ஜெனிடா ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் நாட்களைச் சந்தித்தாள். மனதின் வேதனை, தொடர்ந்த சலிப்பூட்டும் பயணம் பசிக்கு உண்ண முடியாமல தவித்த அலைக்கழித்தலில் உடலும் வலுவிழந்து பலவீனத்தை வெளிப்படுத்தியது. முட்டாள்கள் கொடுத்துக் கொண்டிருந்த இடர் நகர்வுகள் எதையும் எதிர்கொள்ள பாஷ்யத்திற்குக் கைவரவில்லை என்று உடன் பயின்ற ஆய்வு மாணவர்கள் ஜெனிடாவிடம் கூறினார்கள்!!

ஜெனிடாவும் பாஷ்யமும் ஆய்வை முன் நகர்த்தும் பொருட்டு முதல்வரை சந்திக்கச் செல்வதற்கு முன்னரே பாஷ்யத்தின் சிக்கல்கள் முன்சென்று இருக்கைப் பிடித்து அமர்ந்திருந்தன. உபயம் சக பேராசிரியர்கள் மற்றும் லிசி. அது தெரியாமல் அவர்கள் சென்றனர். முதல்வர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் முழியர் அனைவரது வாய்களுக்கும் செவிகளைக் கொடுத்துவிட்டு செவிகளின்றி மழுங்கலாக வாய்ப்பு எதிர் நோக்கிப் பாய்வதற்குத் தயாரான சிம்பன்ஸியாக இருந்தார். சரியாக அந்த நேரத்தில் அவர்களின் உள்நுழைவு நடந்தது. இது இல்லையெனில் அது, அது இல்லையெனில் இது என்று எதெதுவோ எடுத்துப் பேசிக் குதறிப் போட்டார். குரலும் தொனியும் நான்கு சிம்பன்ஸிகளாகக் குதித்தன. மூக்கு வரை மேலுதட்டைத் தூக்கி விரித்து சிம்பன்ஸிகள் உர் உர் என்றன. முழிகள் நிலையற்று உருண்டன. அவர் சொன்னது சரி நம் மேல்தான் தவறு என்று நினைத்தாள் ஜெனிடா. சுயக் கழிவிரக்கம் சுரந்தது. முழியர் வாயிலிருந்து அது இது என்றிருந்தது இறுதியாய் ஒன்றிற்கு வந்து நின்றது. அவர் கூறிய ஆவணங்களை அவர் சொன்னதைப் போன்றே புதிதாகப் பின்பற்றுவோமென்று முடிவு செய்து நடத்தினாள். பாஷ்யமும் அவ்வாறே நடக்கக் கூறினார். ஜெனிடாவைத் தவிர வேறெந்த ஆய்வாளருக்கும் இந்தப் போக்கு கடைப் பிடிக்கப் படவில்லை. மீண்டும் முதலிலிருந்து…

இதற்கிடையில் மேதினி உள்ளே வந்தாள்.

மேதினி இங்கு ஒரு பக்கவாட்டு கதாபாத்திரம். முக்கியமில்லை ஆனால் மேதினிகள் உள்ள உலகில் நீங்கள் எத்தனைக் கவனமாக இருந்தாலும் வேலைக்கு ஆகாது. மேதினி சிறுசிறு சாதியக் குழுக்களை உருவாக்கிக் கொண்டு செயல்படுபவள். லிசியைப் போன்றே முதுகலை படித்து முடித்தவுடன் பேராசிரியராக அரசு வேலையில் அமர்ந்தவள். தற்போது இலட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவள். மேதினியிடம் ஒருவர் எத்தனை அன்பாகவும் சரியாகவும் நடந்தாலும் மாற்று சாதிய வரிசை சார்ந்தவராயிருந்தால் நேரம் பார்த்து தூஷிக்கப்படுவார்கள். தண்டிக்கப் படுவார்கள். எதாவது ஒரு வகையில் இடர் கொடுப்பாள்‌. அவளுக்கு ஜெனிட்டாவைக் கண்டதும் வெல்லம் சாப்பிட்டது போலிருந்தது. ஜெனிட்டாவும் மேதினியும் வயதில் ஒரு சில வருடங்களே வித்தியாசப் பட்டவர்கள். ஜெனிட்டா இன்னும் படித்துக்கொண்டு அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் தான் நாற்காலியில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சி மேதினியை புளகாங்கிதம் அடைய வைத்தது. ஆனால் அந்த மகிழ்வு ஸ்திரப்படவில்லை. ஏனெனில் மேதினி நினைத்தது போல் இல்லை ஜெனிடா. அவளைக் கண்டுகொள்ளாமல் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்தாள். மேதினியைக் கண்டு பொறாமை கொள்ளவில்லை. ஏக்கம் கொள்ள வில்லை. ஆற்றாமையில் பிதற்றவில்லை. இதனால் வருந்திய மேதினி‌ அவ்வப்போது மற்ற ஆய்வு மாணவர்களிடம் ஜெனிட்டாவைக் குறித்து எதையாவது பற்ற வைத்து மனதை ஆற்றிக் கொண்டிருந்தாள்.

இந்நிலையில் முதல்வர் முழியரிடம் சிக்கிக்கொண்டு கலவரமடைந்திருந்த ஜெனிடாவைக் கண்டதும் மேதினிக்கு மகிழ்ச்சி பிறந்தது‌. பாஷ்யத்திடம் தனியே பேசிவிட்டு வந்தாள். அடுத்த நாள் மேலும் சிக்கலாகிக் கொண்டிருந்த ஆய்வை சிக்கல் கயிற்றில் இறுக்கி விட எண்ணி செயல்படத் துவங்கினாள். பாஷ்யத்திடம் அவருக்கு வேண்டுவது போலவும் பேராசிரிய சங்க உறுப்பினர்களிடம் மேலும் முடிச்சை இறுக்குவதாகவும் ஜெனிடாவிடம் அன்பு மொழியில் அவளுக்கு ஏற்றார் போலவும் பேசத் தொடங்கினாள். மற்ற ஆய்வு மாணவிகளிடம் சென்று சாதிய ரீதியிலானத் தூண்டுதல்களை நடத்திக் கொண்டிருந்தாள். ஜெனிபர் யாரிடமும் பேதம் பார்க்காமல் நன்றாகப் பழகியிருந்தக் காரணத்தால் எவ்வளவு முயன்றும் மேதினி நினைத்தவை நடக்கவில்லை.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பிரயாணம் செய்து இக்கல்விக் கூடத்திற்கு வருகிறாள். போக வர தோராயமாக ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆய்வில் தொடர்ந்த இழுபறி, இடைவெளி விட்டு படித்துக் கொண்டிருக்கும் தனது நிலை, நேரத்திற்கு உண்ண முடியாமை, பயணத்தின் சோர்வு, நகராத ஆய்வு என்று பேருந்தில் பயணிக்கையில் மனம் கலங்கும். கண்ணீர் வரும். இத்தனையிலும் ஆய்வு அசையாது ஒரே இடத்திலேயே நின்றது. வருடங்கள் கடந்தன. பல்கலைக்கழகம் குறிப்பிடும் அவகாசத்திற்குள் ஆய்வை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் வருடங்களை நீட்டிக்க விண்ணப்பித்து முறையிட வேண்டும். மன உளைச்சலைத் தரும் செயல். மாற்றுவழி எதுவும் பாஷ்யத்தின் மூளைக்கு எட்டவில்லை. நெருங்கிய உறவோ நட்போ விட்டுத் தலைமுழுகு. வேறு பல்கலைக்கழகம் வேறு ஆய்வு எனத் தொடர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்கள். ஜெனிடா பல்கலைக்கழக பதிவாளர் வரை சென்று கேட்டதில் அவர்கள் மேல் புகார் தரக் கூறினார்கள். அது இன்னும் காலத்தை நீட்டிக்கும். புகாரை சங்கங்களின் கூட்டமைப்புகள் நீர்த்து போகச் செய்து விடும். ஜெனிடா விசாரித்த வகையில் ஒருவரும் வழி சொல்பவராக இல்லை. பதிலாக கீழ்ப்படிந்து அடிமையாகு, அங்கேயே தொடர்! என்றார்கள். சொன்னவர்கள் பேராசிரியர்களே! இனத்தைக் காப்பதற்கு அவர்களால் இயன்றது. ஒவ்வொரு காலக்கெடு நேரத்திலும் பல்கலைக்கழகம் சென்று அவகாசத்தை நீட்டித்து பணத்தொகையைக் கட்டிக் கொண்டு வந்தாள். ஜெனிடா நினைத்தது போன்று அவளது ஆய்வு முறைமைகளில் தவறுகள் இல்லை. தலைமை முழியர் மற்றும் சிலரால் பாஷ்யத்தை பழிவாங்கும் பொருட்டு திட்டமிட்டு ஏற்படுத்திய இடர் என்பதைப் பிறகு அறிந்து கொண்டாள்.

பாஷ்யமும் பணிஓய்வு நாளை எட்டியிருந்தார். தொடர்ந்து முதல்வரிடம் வெகுமதிகளாக வசவுகளையும் நிராகரித்தலையும் எதிர் கொண்டு சலித்துப் போயிருந்தார். அதனால் இனி, தான் ஆய்வு வழிகாட்டியாகத் தொடர்வது சாத்தியமில்லை என்று சில ஆலோசனைகளை ஜெனிடாவிடம் கூறிவிட்டு ஓய்வு பெற்றார். சிவகுரு முன்வந்து ஆய்வினை முடித்துத் தருவதாகக் கூறினார். தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியை தனியே ஒரு ஆள் வேலைக்கமர்த்தி வெடுக்கென்று இழுத்து விட்டுக் கொண்டிருப்பது போல் அல்லல் பட்டுக் கொண்டிருந்த ஜெனிடா அதிலிருந்து விடுபடப் போகிறோம் என்ற மகிழ்வில் சரி என்று பேராசிரியர் சிவகுருவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து நிம்மதி கிடைத்ததென சிநேகிதர்களுடன் சேதியைப் பகிர்ந்து கொண்டாள். ஆசுவாசமாயிருந்தது. ஏனெனில் சிவகுரு விரைவாக ஆய்வுகளை முடித்துத் தருவதில் வல்லவர். அதுவும் இவளுடையது நான்கு வருடங்களைக் கடந்து விட்டிருந்தது. இரண்டு மாதங்களில் வாய்மொழித் தேர்வையும் முடித்து விடலாம் என்றார். எல்லோரும் அவருக்கு நண்பர்கள். காரியத்தை விரைந்தும் பிசிறின்றியும் முடிப்பவர். இரண்டு நாட்கள் கழித்துச் செல்கையில் நிலைமை தலைகீழாயிருந்தது. சிவகுரு ஆய்வு குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில் லிசி கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மேடம் லிசி ஜெனிடாவை அழைத்து தன்னிடம் மாணவியாகச் சேருமாறு கூறினாள். வேறு வழியில்லை. துறைத் தலைமை! அப்படித்தான் லிசியிடம் ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள்.

ஜெனிட்டாவின் ஒவ்வொரு தலைமுடியையும் ஒருவர் மெளனமாக இடைவெளியுடன் இழுத்து விட்டுக் கொண்டிருந்த கடந்தகால நிலை மாற்றம் பெற்று அப்படியே முடிக்கு ஒருவர் வீதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடியை இழுத்துப் பிடுங்க ஆரம்பித்த நிலை ஏற்பட்டது.‌ முன்னதை விட வலி கூரிய நகங்களால் அழுந்தப் பற்றியது. மேடம் லிசி முதுகலை பட்டம் பெற்று முடித்த கையோடு பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவள். அங்கு இருக்கும் ஒவ்வொரு பேராசியரும் ஒவ்வொரு வகையிலான முயற்சி, வேறு போக்கிடம், அறிதலின் போதாமை என்று சில காலமேனும் கடத்திப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அதிகபட்சம் ஐம்பத்தி இரண்டு வயதில் பணி பெற்றவர்களும் உண்டு. அந்த வகையில் லிசியின் பணிக்காலம் என்பது மிக அதிகம். ஆகையால் துறைத் தலைவர் மற்றும் துணைமுதல்வர் பதவியும் சங்கங்களின் முன்னணி நபர்களில் ஒருவராகவும் கலைப்பண்பாட்டு துறைகளின் பொறுப்பாளராகவும் இருந்தாள். இந்தியாவில், ஆணைகளும் விதிமுறைகளும் கழுதைகளே ஆனாலும் பொதி சுமக்கா விட்டாலும் ஒரே துறையில் வருடங்களை விழுங்கிய ‘அனுபவக் கழுதைகளை பதவி ஆசனங்களில் அமர வைக்கப் பாடுபட்டன.

லிசி இல்லாத நேரத்தில் சிவகுரு அன்று எட்டு நிமிடங்கள் கவனித்துக் கொண்டிருந்ததை நினைவுப்படுத்தி ஜெனிடாவிடமும் அருகில் இருக்கும் பேராசிரியர்களிடமும் விவரித்துக் கொண்டிருந்தார்.

“அவ்வளவு நேரமா குனிஞ்சு அப்படியே சிலை மாதிரி ஜெனிடா நின்னுட்டுருக்கு. லிசிக்குலாம் மனசாட்சியே இருக்காதா”

பேராசிரியர்கள் எல்லோரும் தனிப்பட்ட முறையில் ஜெனிட்டாவிடம் ‘உச்’ கொட்டுவதோடு அவர்களின் கடமையை நிலைநிறுத்திக் கொண்டனர்

லிசியைப் பற்றி நேரடியாகச் சொல்வதென்றால் எல்லோரும் அவள் காலை நக்க வேண்டும் என்று விரும்புவதை, சக ஆய்வு மாணவி விமலா ஒரு செவிலியைப் போன்ற உடல்மொழியோடன் கூறுவாள்.

“நாளுக்கு மூனு டைம் காலைல வந்தோன ,சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படினு டைம் டேபிள் போட்டுச் சரியாகச் செய்துரணும்”

அப்படியென்றால் ஹிஹி மேடம் நீங்க எவ்வளவு வேலை செய்யறிங்க எவ்வளவு திறமைசாலி என்ற வரிசையில் காலையில் சாப்பிடவில்லையா களைப்பாக இருக்கிறதா, (இருப்பது நாளுக்கு இரண்டு வகுப்புகள்) என்று பேசிவிட்டு சாப்பிட்டு வருகிறேன் பாத்ரூம் சென்று வருகிறேன் என்று அவளின் கண் அசைவிற்கு காத்திருப்பதாகவும் நடக்க‌ வேண்டும். இப்படியான வார்த்தைகளால் உயரத்திலேயே வைத்திருக்க வேண்டும்.

இதில் முதல் வரிசையில் இருப்பது பேராசிரியர்கள். அதனால் எல்லாம் அவர்களிடம் நன்றாகப் பேசி விடுவாள் அவர்களுக்கான வேலைகளைச் செய்து விடுவாள் என்பதில்லை. அதனைக் கண்டு மகிழ்ச்சி கொள்வாள். பழி வாங்கும் நடவடிக்கைக் குறையும் அவ்வளவுதான். அவள் கையெழுத்திட வேண்டிய, அவள் பணியாற்ற வேண்டிய, அவள் ஊதியம் வாங்கும் காரணத்திற்குண்டான கோப்புகளை அவளிடம் கொண்டு போகையில் ஒரு வழி கிடைத்தல்தான் இந்த நாவருடல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறைமை உண்டு. பேராசிரியர்கள் என்றால் ஒரு மாதிரி, மாணவர்கள் என்றால் ஒரு மாதிரி! இதில் ஐஸ் வைப்பது என்பது அவ்வப்போது எல்லாம் இல்லை. பார்க்கும் போதெல்லாம் செய்ய வேண்டும். கூடவே அவள் செய்ய வேண்டிய வேலைகளையும் மற்றவர்கள் செய்ய வேண்டும்.

அடுத்த இரண்டு நாட்கள் ஜெனிடாவை வரச் சொல்லி விட்டு சந்திக்கவில்லை. அவ்வப்போது நடப்பதுதான். மூன்றாம் நாள் போய் நின்ற ஜெனிடாவிடம் முக்கியமான வேலை இருக்கிறது காத்திரு என்று கூறிவிட்டு மேசையில் கோப்புகளை விரித்து வைத்தப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். விமலாவும் சாயிராபானுவும் பார்த்து விட்டு வந்து உனக்கு வேலை நடக்கப் போவதில்லை என்று சொல்லி இரக்கத்துடன் பார்த்தார்கள். கல்லூரி நேரம் முடிந்து எல்லோரும் சென்றுவிட ஜெனிடாவை லிசி அழைத்தாள். இருகைகளாலும் எழுதியிருந்தத் தாள்களோடு அவசரமாக ஓடினாள். முகத்தைக் கட்டளையிடும் பாவனையில் வைத்துக் கொண்டு “நாளைக்கு நேரத்தோட வா” என்று சொல்லி விட்டு தோள்பையை மாட்டிக் கொண்டு வராண்டாவில் நின்று திரும்பித் தன் பின்புறத்தைப் பார்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

ஜெனிட்டா வெறிச்சோடியிருந்தக் கல்லூரி மைதானத்தைக் கடந்து பேருந்து நிலையம் சென்றாள். வந்த பேருந்துகள் எல்லாம் ஜனத்திரளை நிறைத்துக் கொண்டிருந்தன. பரபரப்பன வேளை. நேரம் கடத்தினால் வீட்டுக்குச் செல்கையில் மிகத் தாமதமாகி விடும். கும்பலாக இருந்த ஒரு பேருந்தில் ஏறி நின்று கொண்டாள். ஊர் வரும் வரை இடம் கிடைக்கவில்லை. அடுத்த நாள் லிசி குறிப்பிட்டது போல முன்னதாக வந்து அவள் இருக்கையில் இருக்கும் நேரம்பார்த்து அருகில் சென்றாள். ஜெனிடாவைப் பார்த்தது முந்தைய நாளின் நிகழ்விற்கு வருந்துவது போல் அழகாக
” டேய் ஜெனிடா போய் உட்கார்டா இன்னைக்கு முடிச்சிட்டுதான் வீட்டுக்குப் போறோம் இங்கப் பாரு சாப்பாடு எடுத்து வந்துட்டேன் கல்லூரி நேரம் முடியட்டும்”
என்றாள். ஜெனிடா இயந்திரமாகச் சிரித்துவிட்டு ஆய்வு மாணவிகளின் அறைக்குச் சென்று காத்துக் கொண்டிருந்தாள்.

லிசியிடம் கையெழுத்து வாங்குவதற்கு நீங்கள் நிற்கையில்தான் அவளுக்கு அவளது வகுப்புக்குப் போகாததே நினைவிற்கு வரும். நாளொன்றுக்கு சிரமேற்கொண்டு இரண்டு வகுப்புகள்‌ போவாள். அதையும் இப்படி அறிவிலியாகத் தன்னை முன்வைத்து அம்மா தாங்கள் இப்போது வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி யாரும் கூறாததினால், மறந்து போயிருப்பாள். வகுப்பு மாணவர்களில் ஒருவர் நீங்கள் வகுப்பிற்கு வர வேண்டும் இது உங்கள் விரிவுரைக்கான நேரம் என்று உரைப்பார்கள். ஆனால் பாருங்கள் அது ஒரே ஒரு முறைதான். அதனால் மறந்து போய் அமர்ந்திருக்கும்போது ஜெனிடா தாஸ்தாவேஜுகளோடு கையெழுத்து வாங்க அருகில் செல்கையில் செல்லமான வார்த்தைகளோடு ‘வகுப்பிற்குப் போ’ என்று சொல்வாள். சிவ முறைகள் நேரடியாகச் சொல்வாள். சில நேரங்களில் மறைமுகமாகச் சொல்வாள். கைகளில் ஆய்வுத் தாள்களை வைத்தப்படி

“இன்னைக்கு இத முடிச்சிரலாம்னு பாத்தேன் வகுப்பு வேற இருக்குது” இதோ நான் போகிறேன் என்று உடனே மூன்றாவது மாடிக்குச் சென்று அவர் வகுப்பு எடுக்க வேண்டிய மாணவர்களோடு சிறிது கலந்துரையாடி வகுப்பு முடித்து வருகைப் பதிவேடு எடுத்து முடிக்கும் தருவாயில் ஒரு மாணவி நீங்கள் கையெழுத்திட வேண்டாம் என்பாள். இது போன்று ஆராய்ச்சி மாணவர்கள் வகுப்பிற்குப் போகும் பாடவேளைகளில் அந்தந்த மாணவர்களே பதிவேட்டில் கையெழுத்திடுவது வழக்கம். பின்னாளில் அவர்கள் பணிக்குச் செல்லும் போது அது உதவலாம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். உங்களை நாங்கள் வகுப்பிற்கு அனுப்பவில்லை உங்களின் நன்மைக்காக முதல்வர்தான் கூறினார் என்னும் சாட்சிக் கோர்வைக்கும் தர்க்கம் உடையதே ஆய்வுமாணவர்களின் கையொப்பம். ஆனால் அதுவும்கூட நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாயிருந்தாள் மேடம் லிசி.

ஜெனிட்டா சரியான நேரத்தில் உணவு உண்ண முடியாதது மனச் சோர்வு உடற்சோர்வு ஒரே மாதத்தில் இரண்டு மாதவிடாய் சுழற்சியைக் கொண்டு வந்தது, நலிவுற்ற மனது உடலை சுய ஊக்க மொழிகளை அளித்து இழுத்து வந்தாள். அன்று மாலையில் லிசி பேசினாள்.

“காலேல சீக்கிரமா வந்துடு”

“வந்துடறேன் மேடம்”

அடுத்த நாள் அலுவலர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் எவரும் வருவதற்கு முன் வந்தாள். மைதானத்தில் இரண்டு நாய்கள் திசைக்கொன்றாக நடந்து கொண்டிருந்தது. யாருமற்ற அறையில் காத்திருந்தாள். இது போன்றே நான்கு மாதங்கள் தொடர்ந்தது.

ஆய்வின் ஒரு பகுதியாக ஆய்வு குறித்த அலசல்களும் சுருக்கக் குறிப்பும் கல்லூரியில் வழங்கி பல்கலைக்கழகத்தில் சான்று பெறும் நிகழ்வு உண்டு. பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ளும் அச் சிறு கூட்டத்தில் தன்னை ஆய்விற்கு தகுதியுடையவராக ஆய்வு செய்பவர் நிரூபணம் செய்தல் வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்த போதுதான் பாஷ்யம் முழியரால் முன்பு விரட்டியடிக்கப்பட்டார். தற்போது லிசியின் மேற்பார்வையில் தொடர்கிறது. நிகழ்வில் இனிப்பு காரத்துடன் டீ காஃபி போன்ற பானங்களில் எதாவது ஒன்றை ஆய்வாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே பல்வேறு இடையூறுகளில் தத்தளித்துக் கொண்டிருப்பவள் என்று நல் எண்ண துறைப் பேராசிரியர்கள் சத்யமும் அவரது இணையரான பேராசிரியரும் ஜெனிடாவை பெயருக்கு ஒரு கூட்டம் செய்து கையொப்பங்களைப் பெற்று அனுப்பி விடலாம் என்றனர். (சத்யமும் அவரது மனைவியும் ஏதாவது ஒரு வகையில் அவ்வப்போது தேறுதல் வார்த்தைகளை அளித்தனர். ) சிவகுரு அவளைப் பற்றித் தெரிந்து வாய் திறக்கவில்லை. இது புதிய நடைமுறையல்ல. லிசி முடியலே முடியாது என்றாள். அந்நாளுக்கு தயாரானார்கள்.

சுருக்கக் குறிப்பு அளிக்கும் கூட்டத்தில் இதுவரை செய்த ஆய்வையே புறக்கணித்து வேறு திரும்பச் செய்ய வேண்டும் என்று ஒரு பேராசிரியர் கூறினார். லிசி ஆமோதித்தாள். ஜெனிட்டாவை நிற்கவைத்து அவள் பேசிக் கொண்டிருந்தாள். குறுக்கிட்ட பேராசிரியர் சிவகுரு திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும் எனில் சாதரணமில்லை செலவு அதிகம் ஆகுமென்று படபடவெனக் கணக்கிட்டு உத்தேசத் தொகையைக் கூட்டத்தினர்முன் கூறினார். சத்யமும் அவரது மனைவியும் அதனை ஆமோதித்தனர். இது சரியான ஆய்வு முறைதான் என்றனர். கூடுதலாக கால அளவும் நீளுமென்றனர்.

லிசி இதனை எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அதிகக் கோபம் வந்தது. சிவகுரு கூறியதை மாணவர்களிடம் நற்பெயர் வாங்கிய மேலும் இரண்டு பேராசிரியர்கள் ஆமோதிக்கவும் செய்தனர். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட லிசி ஒருசில பேராசிரியர்கள் ரகசியமாக ஜெனிடாவுக்கு வழி காட்டுவதாகத் தான் நினைத்திருந்த சந்தேகம் ஊர்ஜிதமானதாக நினைத்தாள். முக்கியமாக சிவகுரு நெருக்கமாக இருக்கிறார் என்று கற்பனையில் நினைத்தாள். ஒருவாறாகக் கூட்டம் முடிந்து ஃபைல்களோடு நடக்கையில் மேடம் லிசி பற்களைக் கடித்துக் கொண்டு ஜெனிடாவிடம் கூறினாள்.

“உன்ன பத்து தடவையாவது மாடியேற வைக்கறேனா இல்லயா பார் ”

“மேடம் என்ன மேடம் சொல்றீங்க” நெருங்கிக் கேட்டாள்

“ஒன்னுமில்ல வா”

எங்கோ வலையில் மாட்டியப் பன்றியின் சத்தம் ஒலித்தது.
அதற்குள் லிசி முனகியிருந்த வார்த்தைகளை உள் வாங்கியிருந்தது புத்தி. மாடியேற வைப்பது என்பது இருபது மீட்டர் கடந்து அந்தக் காலத்தைய பெரிய அளவிலான முப்பது படிக்கட்டுகளில் ஏறி முதல்வர் அறைக்கும் அலுவலகத்திற்கும் ‘இதைக் கேட்டு வா, கொடுத்து வா’ என்று அலைய வைப்பது மற்றும் வேலையைத் தாமதப்படுத்துவது, அனைத்து முறைமைகளும் முறையாக முடித்தப்பிறகும் வேண்டுமென்றே இப்படிச் செய்தல்‌. லிசி அவற்றைச் செவ்வனே நடைமுறைப் படுத்த ஆரம்பித்தாள். அவள் தேர்ந்தெடுத்தார்களைக் கொடுமை செய்யும் குணத்தினள் என்று ஒருவர் கூறினார். இதற்கிடையில் லிசி சிவகுருவை அழைத்து தனது ஆய்வு மாணவர்களின் விஷயங்களில் தலையிட்டால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் அளிப்பேன் என்று கேவலமாக மிரட்டி வைத்தாள். மிரட்டல் நன்றாகப் பலன் அளித்தது.

லிசி ஒரு நாள் தனது பின்புறங்களை பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு நேராக இருந்த அறையில் அமர்ந்திருந்த விமலா யதார்த்தமாகச் சிரித்து விட்டாள். ஃபோனில் எதுவோ பேசி சிரித்தாள். லிசி அதனை‌ வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள். தலைமைப் பீடத்தைப் பயன்படுத்தி விமலாவின் ஆய்வுக்குள் தலையிட்டாள்.

லிசியின் வாழ்நாள் முழுவதும் என்ன செய்கிறேன் பார் என கருவிக் கொண்டு மற்றவர்களைத் தண்டிப்பதாகவே கழிந்தது. இடர்களை அளித்துவிட்டு வார இறுதியில் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பாளென விமலா கூறினாள். அப்பொழுதுதான் அடுத்த வாரம் புதிய பழிவாங்கலையேற்படுத்தி துன்புறுத்தல்களைத் துவக்க இயலும் என்றார்கள்!

இப்போது அரசாங்கம் லிசிக்கான பதவி உயர்வுகளை வரிசையாக அளித்துக் கொண்டிருந்தது. இன்று முதல்வர் அடுத்து இயக்குநர். சில தகிடுத்தனங்களைச் செய்யின் கூடுதலாக ஓய்வு பெறும் வயதை நெகிழச் செய்யவும் அரசு இயந்திரம் தயாராக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றிற்காக சில ஆய்வுக்கட்டுரைகள் அளிக்க விமலா, சாயிராபானு, ஜெனிட்டா சென்றிருந்தனர். கட்டுரைகளை அளித்து விட்டு, திரும்பி வந்து கொண்டிருக்கையில் பிரிவுபச்சார நிகழ்வில் பேராசிரியர்கள் குழுமியிருந்த அறைக்கு முன்
பேராசிரியர் சிவகுரு எதிர்பட்டார். என்ன ஏதென்று விசாரித்துவிட்டு அவரவர் ஆய்வு குறித்துக் கேட்டார். ஜெனிட்டாவை நினைத்து வருத்தப் படுவதாகக் கூறினார். சாயிராபானு ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று வருந்தினாள். விமலா தனது ஆய்வு வழிகாட்டியைப் பற்றிக் கூறி முடிக்கையில் மூக்கு நுனி துடித்தது. ஜெனிட்டாவின் தொய்ந்து போன முகத்தைத் கண்டு சிவகுரு

“இங்க எல்லாமே பணமும் செக்ஸூம்தாம்மா அதையும் தவிர இவளைப் போன்ற வதை வல்லுநர்கள் தனி ரகம். அதுவும் நீ பாக்க லட்சணமா இருக்க பொறாமை வேற…. ” என்று கூறிவிட்டு அமைதியானார். தூரத்திலிருந்து மேதினி அழுக்கான விழிகளில் அவர்களைப் பார்த்தாள்.. ஜெனிடா சுருண்ட மனதோடு அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்….பிறகு
“அவ்வளவுதான் இங்க உலகம்” என்று சொல்லிக் குனிந்தவாறு அக்கூட்டத்தினுள்ளே கலந்தார்.


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x