1.

“செகப்புன்னா செகப்பு இப்படியொரு செகப்ப நா பார்த்ததில்லப்பு, வடக்கத்தியா இருப்பா பொலுக்கு” வாழை இலையில் சம்பா அவலை வைத்தபடியே சொன்ன ஆச்சியை ஏறிட்டுப் பார்த்தேன். ஆச்சிக்கு ஊருக்குள் புதிய மனிதர்கள் யார் வந்தாலும் உடனே செய்தி வந்துவிடும்.

“யாரச் சொல்லுதிய ஆச்சி” தேங்காய்த் திருவலை அவலின் மேல் போட்டு வாழைப்பழமொன்றை உரித்து அதனுடன் சேர்ந்து பிசைந்து வாயில் ஓர் உருண்டையை போட்டுக்கொண்டே கேட்டேன்.

“அதாம்ப்பு நம்ம காரவீடுக்காரர் வாடகைக்குன்னு கெட்டிப்போட்டிருக்காருல்லா அங்க புதுசா குடி வந்திருக்கா…”

ஆச்சி சொன்னவுடன் அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆச்சி சொல்லும் அந்த வாடகைவீட்டின் அருகேயிருக்கும் மைதானத்தில்தான் மாலை ஆனதும் அனைவரும் கூடி கிரிக்கெட் விளையாடுவோம். இலையில் மிச்சமிருந்த அவலை வாயில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வளவுக்குள் நுழைந்து அங்கிருக்கும் படலையை திறந்து தெருவில் இறங்கினேன். நேராக கொட்டாச்சி வீட்டிற்குப் போனேன். கயிற்றுக்கட்டிலில் சொகமாக உறங்கிக்கொண்டிருந்தான் கொட்டாச்சி. ஊரில் எல்லோரும் கருப்பு என்றால், கொட்டாச்சியோ அண்டங்காக்கை கருப்பு. சமயத்தில் நம்மேல் உரசினால் நம்மீதும் ஒட்டிக்கொள்ளுமோ எனத் தோன்றும் கருப்பு. ஊரில் நடக்கும் மொத்த சேட்டைகளுக்கும் சொந்தக்காரன் கொட்டாச்சி. கொஞ்சம் மணலை அள்ளி வாய்பிளந்து உறங்கும் அவனது முகத்தில் தூவி விட தோன்றியது. அப்படிச் செய்தால் இவ்வுலகில் இதுவரை ஜனித்திடாத கெட்டவார்த்தைகளால் திட்டுவான் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு, அவனை உசுப்பினேன்.

“யோல கொட்டாச்சி, பகல்ல என்னம்ல ஒறக்கம்…எந்தில”

சொப்பனத்தில் மோகினியைப் பார்த்தவன் போல மலங்க விழித்தபடி எழுந்தவன் கண்களை கசக்கிவிட்டுக்கொண்டே கேட்டான்,

“செருக்குயுள்ளா…ஒறங்குதேம்னு தெரியுதுல்லா..பொறவு எதுக்குல உசுப்புத”

வடக்கத்தி விசயத்தை காதில் ஓதியவுடன் அவனது முகம் பிரகாசமடைந்தது.

“அடிச்சக்கைனைனா…எவம்ல அது நம்ம ஊருக்குள்ள நமக்குத் தெரியாம, இப்பவே போறோம்…அப்படி என்ன சொவப்புன்னு பாத்துப்புடுதோம்” சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நான் பின் தொடர்ந்தேன்.

தெருவில் ஒன்றிரண்டு ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்த்தபடி நின்றிருந்தன. மதிய வேளை என்பதால் ஆள் நடமாட்டமில்லை. ஐஸ் விற்கும் குமார் அண்ணன் ஐஸ்பெட்டி இருக்கும் சைக்கிளை தள்ளிக்கொண்டு “ஐசேய் ஐசேய்…பால்ஐஸ்…சேமியாஐஸ்…ஐசேய்’ என கூவிக்கொண்டு போனார். ஒன்றிரண்டு சிறுவர்கள் கால்சட்டை பைகள் நிறைய கோலிக்காய்கள் குலுங்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.

கொட்டாச்சியும் நானும் வடக்கத்தியின் வீட்டின் அருகேயிருக்கும் மைதானத்திற்குள் இறங்கினோம். அங்கே மிகப்பெரியதொரு வாதுமை மரம் இருந்தது. அதன் நிழலில் இரண்டு பசுக்கள் படுத்துக்கொண்டே அசைபோட்டபடி இருந்தன. அந்த மரத்தின் கிளைகள் வடக்கத்தி வீட்டின் காம்பவுண்ட் சுவர் வரை நீண்டிருந்தன. கொட்டாச்சி வேகமாக மரத்தில் ஏறி அவளது வீட்டைச் சென்றடையும் கிளையின் மீது உட்கார்ந்துகொண்டான்.

“யோல சொடல, மரத்துல ஏறாம என்னல நட்டாம நிக்க, வெரசா ஏறுல” மேலிருந்து கத்தினான் கொட்டாச்சி. நானும் ஏறிச்சென்று அவன் அருகில் அமர்ந்துகொண்டேன். அங்கிருந்து பார்த்தால் வடக்கத்தியின் வீட்டு முற்றமும் பக்கவாட்டில் இருக்கும் கதவும் தெரிந்தது. அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். பத்து நிமிடங்கள் கழித்து கதவு திறந்தது. கொட்டாச்சி வாயைத் திறந்தபடி அசைவற்று உட்கார்ந்திருந்தான். எனக்கும் வடக்கத்தியைப் பார்க்கும் ஆவல் அதிகமானபோது அந்தக் கதவின் வழியே வெளியே ஓடிவந்தது சடை நாயொன்று. பழுப்பு நிறத்தில் உடலெங்கும் புசுபுசுவென்ற ரோமங்கள் காற்றிலாட இவ்வளவு சிறியதொரு நாயை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ‘என்னல நாயிக்கு ஒடம்பெல்லாம் மயிரா இருக்கி’ முதல் முதலாக சடைநாயை பார்த்த வியப்பில் என் காதோரம் கிசுகிசுத்தான் கொட்டாச்சி. அப்போதுதான் அந்த நாயைத் துரத்தி வந்த தேவதையை எங்களது கண்கள் கண்டு இமைக்க மறந்தன.

2.

அப்படியொரு மென்பாதங்களும் அதன் மேல் தவழ்கின்ற மெல்லிய வெள்ளிக்கொலுசும் சன்னமாய் அதிர படிக்கட்டில் இறங்கி நாயைத் துரத்திக்கொண்டு ஓடிய அந்தப் பெண்ணிற்கு இருபத்து ஐந்து வயதிருக்கலாம், அவள் ஓடுகையில் ஈரக்கூந்தல் காற்றில் ஓர் இறகைப் போல மிதந்தது. நீண்ட விரல்களும் நகப்பூச்சும் வெயிலில் மிளிர்ந்து அடங்கியது. எதிர்க்காற்று அவளது மேனியெங்கும் தழுவிச் சென்ற கணம் அவளுடல் சிலிர்த்து பெண்ணுருவிலிருந்து தேவதையுருவம் பெற்றது போல் தோன்றிற்று. இப்படி ஓர் பேரழகியை இவ்வூர் இதற்கு முன் கண்டதில்லை என மனதிற்குள் நினைத்துக்கொண்டே கொட்டாச்சியைப் பார்த்தேன். அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

“ஏம்ல அழுவுத”

“இம்புட்டு சொவப்பையும் அழகையும் இத்தன வருசம் பார்க்காம இருந்துப்புட்டேனேன்னுட்டு அழுவுதேன்…பெத்தாவளா இல்ல செஞ்சாவளான்னே தெரியமாட்டிக்கி…யாருல இந்த சிகப்பி” கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கேட்டான்.

“எனக்கெப்படில தெரியும். ச்சும்மா மயிலு கணக்கால்லா இருக்கா”

“மயிலு சொவப்பாவல இருக்கும்?”

“பதினாறு வயதினிலே மயிலுல முட்டாக் கிறுக்கா”

“ஓ நம்ம ஶ்ரீதேவிய சொல்லுதியா? அதுவுஞ் சரிதாம்ல அப்படித்தான் இருக்கா, செரி வூட்ல வேற ஆளயே காங்கல…அம்மையும் ஐயாவும் தென்படலயே…”

“செத்த நேரம் பேசாம மயில பாப்போம். பொறவு அப்பனாத்தா யாருன்னு தேடுவோம்” என்றபடி சடைநாயின் பின்னோடும் மயிலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

அவள் நாயைப் பிடித்து அதைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் மறைந்து போனாள். மீண்டும் எப்போது வருவாள் என்று சிறிது நேரம் காத்திருந்து பார்த்தோம். வெயில் உக்கிரமாக இருந்தது. மரத்திலிருந்தாலும் அனல் காற்று புழுதியை வாரி இறைத்தபடியே இருந்ததால் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கீழே இறங்கி குளத்தை நோக்கி நடந்தோம். கொட்டாச்சி பேயடித்தவன் மாதிரி இருந்தான். அவன் முகமெங்கும் கேள்விகள் குடியிருந்தன. எங்கிருந்து வந்திருப்பாள்? ஏன் வந்திருக்கிறாள்? எவ்வளவு நாள்கள் நம்மூரில் இருப்பாள்? எனக்குள் எழுகின்ற கேள்விகள் அவனுக்குள்ளும் எழும்பியபடியே இருந்ததை அவனது கண்கள் காட்டிக்கொடுத்தன.

குளக்கரை படிக்கட்டில் அமர்ந்தபோது வெயிலின் உக்கிரம் குறைந்தது போலிருந்தது.

“கட்டுனா இப்படி ஒருத்தியத்தாம்ல கட்டனும் இல்லன்னா இந்தக் குளத்துல குதித்து செத்துரணும் பாத்துக்க” கொட்டாச்சி ஆளே மாறியிருந்தான். போன மாதம் பக்கத்து தெரு செல்வம் காதல் தோல்வியில் தூக்கமாத்திரை விழுங்கி சாகக்கிடந்தான்.

“போவரதுக்கு மின்னாடி நாலு பேர கொன்னுப்புட்டு போவனும்ல, அதவுட்டுப்புட்டு மயிராட்டாம் மாத்திரையை விழுங்கியிருக்க…வெக்கங் கெட்ட மூதி” என்று மருத்துவமனையிலேயே அவனைத் திட்டி தீர்த்தான் கொட்டாச்சி. அவனா இப்படி பேசுவது என்று ஆச்சர்யத்துடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சொவப்பா இருந்தா அழகுன்னு ஒனக்கு யாருல சொன்னாவ?” அவனைச் சீண்டினேன்.

“யோல ஒனக்கென்ன மண்ட கிண்ட கொழம்பி போச்சா…அவ சொவப்பு மட்டுமா? மூஞ்சி மோரய எல்லாம் நீயும் பாத்தீல்லா? செதுக்கி வச்ச செல மாரி இருக்கா, நா முடிவு பண்ணிட்டேன் கட்டுனா ஒண்ணு இவள மாரி ஒருத்திய கட்டணும் இல்லாட்டி இவளையே…” என்றவன் ஏதோ நினைத்தவனாய் படக்கென்று எழுந்தான்.

“என்னல படக்குன்னு எந்திரிச்சிப்புட்ட? போயி மயிலு வீட்டுல பொண்ணு கேக்கப் போறியாக்கும்?” சிரிப்பை அடக்க முடியாமல் கேட்டேன்.

“ஏன் எனக்கென்னல கொறச்ச? இனி மயிலு குயிலுன்னு மருவாதி இல்லாம பேசுனன்னு வெய்யி செவுள்ளய்யா வெச்சிப்புடுவேன்…இனி அவ எம் பொஞ்சாதி. உனக்கு தங்கச்சி மொற. புரியுதா சொடல?”

“அடேங்கப்பா…பாத்து முழுசா முப்பது நிமிசம் ஆவல அதுக்குள்ள பொஞ்சாதிங்க…நீ போனவருசம் ஒம்போதாப்பு பெயிலானதுக்கே ஒங்க ஐயா உன் ட்ரவுசர் கிழிய கிழிய அடிச்சாரு. ஒங்க ஐயாகிட்ட போயி சொகப்பா ஒருத்திய பார்த்தேன்…என்னை விட மூத்தவா மாரி இருக்கா…கட்டி வெய்யிங்கன்னு சொல்லிப் பாரு…ஒந்தோல உரிச்சி தொங்கவிட்டுப்புடுவாவ…அதுக்கென்னல செய்யப் போற?”

“அடிச்சாத்தாம்ல ஐயா. அம்மை எதுக்கு இருக்காவ…அவியள போயி பொண்ணு கேக்கச் சொல்லுவோம்”

“ஓ சரிங்க மாப்புள்ள…அவ ஒன்னைய விட மூத்தவ..அதுக்கு என்ன செய்யப் போறிய?” சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டேன்.

“ஏ வயசெல்லாம் ஒரு பிரச்சினையால…எங்க ஆச்சிகூட எங்க தாத்தாவ விட மூத்தவியதானாம். வக்காலி! அந்த காலத்துலயே வயசு பாக்காம கட்டிக்கிட்டிருக்காவ…அதெல்லாம் பாத்துக்கிடலாம், நீ இனி மாப்புள்ள தோழன் மாரி பேசு…கிறுக்கு கூவாட்டம் பேசாம இரி செரியா?” என்னை அதட்டிவிட்டு ஒரு கல்லை எடுத்து குளத்தில் எறிந்தான். சிற்றலையில் குளத்தில் மிதக்கும் அமலைச் செடிகள் அசைந்தாடின.

3.

வடக்கத்தியை பற்றிய பேச்சால் நிரம்பியிருந்தது எங்கள் கிராமம். குழாயடியில் பெண்கள் சண்டையை நிறுத்திவிட்டு அவளது நிறத்தைப் பற்றியும் அழகைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். கள்ளுக்கடை பெஞ்சுகளை ஆக்கிரமித்திருந்த பெரிசுகள் முதல் தட்டான் பின்னால் ஓடுகின்ற சிறுசுகள் வரை வாயைத் திறந்தால் வடக்கத்தி எனும் சொல்லே முதன்மையாக வந்து விழுந்தது. அவள் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் விசித்திரமானதாக இருந்தன. அவள் தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ரம்பை என்றொரு கூட்டம் நம்ப ஆரம்பித்தது. ரம்பை அல்ல அவளொரு யட்சி என்றும் இரவானால் ஓட்டைப் பிரித்து வீட்டிற்குள் இறங்கி உறங்குகின்ற ஆண்களிடம் உறவுகொண்டு அவர்களைக் கொல்ல முற்படுவாள் என்றும் வதந்திகள் பரவியிருந்தன. அதுவரை வீட்டிற்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் உறங்கிய ஆண்கள் கூட வீட்டிற்குள் கட்டிலைப் போட்டுக்கொண்டு ஓட்டை எப்போது திறப்பாள் என வெறித்தபடி உறக்கம் தொலைத்தனர்.

எங்கள் ஊர் மருத்துவமனைக்கு வந்திருக்கும் நர்ஸ்தான் அவள் என்பது தெரிந்தவுடன் மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்தது. உடை முள்ளை எடுத்து கையில் கீறிக்கொண்டோ அல்லது அருவாள் முனையால் கீறிக்கொண்டோ மருத்துவமனைக்கு படையெடுத்தனர் சபலக்காரர்கள். அவள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அவள் வீட்டில் அந்த சடை நாயும் அவளது தங்கையும் மட்டுமே இருந்தனர். அவள் வடக்கத்திக்கு எதிர்பதமாக இருந்தாள். கொட்டாச்சி அளவிற்கு அண்டங்காக்கை நிறம் அல்ல, ஆனாலும் நல்ல கறுப்பு. களையான முகமும், அகன்ற விழிகளும் கொண்டிருந்தபோதும் ஏதோவொன்று அவளிடம் இல்லாதது போலிருந்தது.

அவளது நட்பைப் பெற ஊருக்குள் பெரும் போட்டி நிலவியது. தங்கை மூலமாக வடக்கத்தியை வளைக்க திட்டமிட்டுத் திரிந்தனர் இளவட்டங்கள். அவளோ அதிகாலை எழுந்தவுடன் தன் எம்.எயிட்டியில் பக்கத்து டவுனுக்கு வேலைக்கு போகிறவள் மாலைதான் வீடு திரும்புவாள் என்பதால் அவளது நட்பைப் பெறுவதும் கடினமாகப் போயிற்று.

வடக்கத்தி மருத்துவமனைக்கு தன் வீட்டிலிருந்து கிளம்பி ஒய்யாரமாக நடந்து போகும்போது தெருவிலிருக்கும் வீட்டுச் சன்னல்களுக்கும் கதவுகளும் திருட்டுக் கண்கள் முளைத்தன.

கொட்டாச்சியும் அவளைக் கவர்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தான். அதுவரை சலூன் பக்கம் அதிகம் தலைகாட்டாதவன் தன் சூப்பிய பனங்காய் போலிருக்கும் தலை முடியை ‘அண்ணே ஸ்டெப் கட்டிங் வெட்டி வுடுங்கண்ணே’ என்றபடி சலூன்காரரைப் பார்த்து கண்ணடித்தான். ‘இதெல்லாம் ஒரு மண்டை இதுக்கெல்லாம் ஒரு ஸ்டெப் கட்டிங்கால, என் கெரகம்’ என்றபடி அவர் தனக்குத் தெரிந்த வகையில் முடியை வெட்டிவிட்டிருந்தார். அதுவரை அரை ட்ரவுசரில் வலம் வந்த கொட்டாச்சி வடக்கத்தியைப் பார்த்த நாளிலிருந்து பேண்ட்டுக்கு மாறியதைக் கண்டு அவன் வீட்டு ஆடுகளே அதிர்ச்சில் உறைந்து நின்றன.

தினம் காலையும் மாலையும் அவள் மருத்துவமனைக்கு செல்லும்போதும் திரும்பும்போதும் சைக்கிளில் ஒற்றைக் கையை விட்டபடி ஓட்டுவதும், வேகமாக அவளை உரசுவது போலச் சென்று கட் அடித்து திரும்பி நிற்பதும் என அவனது கோணங்கித்தனங்கள் கட்டுக்குள் அடங்காமல் இருந்தபோதும் அவள் கொட்டாச்சியை ஒரு புழுவைப் பார்ப்பதுபோலத்தான் பார்த்துக் கடந்து சென்றாள்.

4.

இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. அவளைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்து அவளும் ‘நம்மூர்க்காரி’ என ஏற்றுக்கொண்ட ஊரார் தங்கள் வேலையைப் பார்க்கத் துவங்கியிருந்தனர். குட்டிக்கரணங்கள் பல அடித்தும் கொட்டாச்சியால் அவளது கடைக்கண் பார்வையை எட்ட முடியாததால் சோர்வுற்றவன் மீண்டும் அரை ட்ரவுசருக்கே மாறியிருந்தான்.

“என்னல கொட்டாச்சி ஒம் பொஞ்சாதிய பாக்க அரை ட்ரவுசர்லயா போவ” வேண்டுமென்றே சீண்டினேன்.

“ஏ அவ பாக்கதாம்ல மயிலு மாரி இருக்கா…நானும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு பாத்துப்புட்டன்…ம்ஹும் நமக்கு இவ சரிபட்டு வரமாட்டா…இந்த கொட்டாச்சிக்கு ஏத்தவ இன்னும் பொறக்கல பொலுக்கு”

“பேசாம அவ தங்கச்சிக்காரிகிட்ட போயி பேசிர வேண்டியதுதானல…அவளப் புடிச்சா மயிலப் புடிச்ச மாரிதான?”

“நானும் ரெண்டு நாளா அவளப் புடிச்சிப்புடலாம்னுட்டுதான் அவிய தெரு முக்குல காத்துக்கெடந்தேன்… எப்ப வாரா எப்ப போரான்னே தெரியமாட்டிக்கி”

“நீ மயிலுக்குன்னா நாள் பூரா காத்துக்கிடப்ப…அவ தங்கச்சிக்கின்னா பத்து நிமிசம் பாத்துப்புட்டு கெளம்பியிருப்ப”

“ஆமா சொடல…அதுவுஞ்சரிதான், பேசாம இன்னிக்கு சாயங்காலம் அவ வூட்டுக்கே போயி பேசிப்புடலாம்னு நெனைக்கேன், நீ என்னம்ல சொல்லுத?”

“ஆறுமணிக்கு பெறவு போ…அக்காளும் தங்கச்சியும் அப்பத்தான் வீட்டுல இருப்பாவ…ஒருவேள வெளக்கமாத்தால அடி வாங்கினன்னு வெய்யி…ஒன் ஊத்தவாய மூடிக்கிட்டு அவ வீட்டுப் பக்கம் தல வெச்சி படுத்துராத….இந்தக் காதலு மயிரெல்லாம் ஒனக்குச் செரிப்படாதுன்னுட்டு தலமுழுகிறணும் செரியா?”

“மொத மொத அவ வூட்டுக்கு போறேங்கேன்…நாலு நல்ல வார்த்த சொல்லி அனுப்பவனுட்டு பார்த்தா…நீயெல்லாம் எனக்கு சேக்காளின்னு இனிச் சொல்லாதல மயிராண்டி” அவனது கண்கள் கோபத்தில் துடித்தன.

“ஒன் நல்லதுக்குத்தான் சொன்னேன்ல, எக்கேடும் கெட்டு ஒழி” சொல்லிவிட்டு என் வீட்டிற்கு போய்விட்டேன்.

5.

அடுத்த இரண்டு நாட்கள் கொட்டாச்சியை ஊரில் எங்கும் பார்க்கமுடியவில்லை. வெளியூருக்கு வேலைக்கு போய்விட்டானா என்று கூட யோசித்துப்பார்த்தேன். கொட்டாச்சி வேலைக்கு போனால் உலகம் வெடித்துவிடும் என்று தெரிந்ததால் அவனது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தபோது தொங்கிய முகத்துடன் எதிரில் வந்தான்.

“என்னல ஒலக அதிசயமா இருக்கி…மொகர வாடிக்கெடக்கு?”

“ஏன் என் மொகரல்லாம் வாடக்கூடாதா?” குரல் கம்மியிருந்தது.

“என்ன கொரலும் கிணத்துக்குள்ள இருந்து கேக்கு? வடக்கத்தி வாரியல் பிய்ய அடிச்சிப்புட்டாளோ?”

“அப்படி அடிச்சிருந்தாகூட செரி நம்ம மயிலுதான் நம்மள அடிச்சிருக்கான்னுட்டு ஓடி வந்திருப்பேம்ல…ஆனா மனசல்லா சரிச்சிப்புட்டா அந்தக் களவாணி சிறுக்கி”

ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று மாலை என்ன நடந்தது என்பதை கொட்டாச்சி சொல்லி முடித்தபோது லேசாய் தலைசுற்றுவது போலிருந்தது.

“இப்படி எல்லாமால ஊருக்குள்ள நடக்கு” நம்ப முடியாமல் கேட்டேன்.

“பொறவு நான் என்ன பொய்யா சொல்லுதேன். ஒனக்கு நம்பிக்கை இல்லன்னா நீ போயி பாருல…” சொல்லிவிட்டு போய்விட்டான்.

அன்றிரவு உறக்கம் வரவில்லை. எப்படி இது சாத்தியமாகும்? இதன் பின்னாலிருக்கும் காரணம் என்ன? கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தன. மறுநாள் மாலை வடக்கத்தியின் வீட்டிற்கு போய் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தபடி உறங்கிப்போனேன்.

6.

மைதானத்திலிருக்கும் வாதுமை மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு அவளது வீட்டை நோட்டம் விட்டேன். அவளது வீடு இருக்கும் தெருவில் அதிக நடமாட்டமில்லை. சூரியன் மறையத் துவங்கியிருந்தது. முதலில் தங்கச்சிக்காரி வீட்டிற்குள் போனாள். அதன் பிறகு பத்து நிமிடங்கள் கழித்து வடக்கத்தி மருத்துவமனையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். வீட்டின் கேட்டை அவள் திறந்தவுடன் ஓடி வந்து காலுரசியது சடைநாய். அதைத் தூக்கிக் கொஞ்சியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். நான் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டேன்.

வீட்டிற்குள் நுழைந்த வடக்கத்தி நாயை இறக்கிவிட்ட மறுகணம் பின்புறமாக அவளைக் கட்டிப்பிடித்து ஒரு சுழற்று சுழற்றினாள் அவளது தங்கை. இருவரும் முத்தமிட ஆரம்பித்தக் கணத்தில் வடக்கத்தி அவளது முகத்தின் அருகே தன் முகத்தைக் கொண்டு சென்று ஏதோ சொன்னாள். தங்கைக்காரி திறந்திருந்த முன்வாசற்கதவை காலால் எட்டி உதைக்க அது படாரென்று மூடிக்கொண்டது. எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

சடை நாயின் குரைப்புச் சத்தம் சன்னமாக கேட்கத் துவங்கியிருந்தபோது நான் வெகுதூரம் வந்திருந்தேன்.

அன்றிரவு எவ்வித கேள்விகளுமின்றி உறங்க ஆரம்பித்தேன். கனவில் தன்பால் காதலர்கள் இருவர் ஊரைவிட்டு ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடின இரண்டு கால் சடை நாய்கள்.


 

எழுதியவர்

ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x