28 April 2024

ச்சை மலையில் இருந்து வழி தவறி மலையடிவாரத்திற்கு வந்த மாலி  எனும் மலையாடு; தனது குட்டிகளோடு ஒவ்வொரு முறையும் மலைக்கு ஏறிச் செல்லும். வழி தெரியாமல் திரும்பவும் காட்டுக்குள்ளே வந்துவிடும்.

மாலிக்கு கேசு, வீரு என்ற இரண்டு குட்டிகள். ஒரு நாள் காட்டில் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது “அம்மா இந்த மலையடிவாரமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நாம் இங்கேயே இருந்து விடலாமா” என்று கேட்டது கேசு குட்டி.

“மலையடிவாரம் அழகாகத்தான் இருக்கிறது. உணவும் கிடைக்கிறது. ஆனால் இது நமக்குப் பாதுகாப்பான இடமில்லை கண்ணா.  நம் மக்கள் வாழும், நம் நண்பர்கள் உறவினர்கள் வாழும் இடம் தான் நமக்கு பாதுகாப்பு கண்ணா” என்று கூறியது மாலி.

“மலையில் புலி, சிங்கம் மாதிரியான ஆபத்தான விலங்குகள் அங்கே இல்லையா அம்மா” என்று கேட்டது கேசு.

“இருக்கின்றன கண்ணா. ஆனால் இங்கு விட அங்கு நம்மால் சுலபமாகத் தப்பித்து விட முடியும்” என்று கூறியது மாலி.

மாலி இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று “ஓடுங்கள்! ஓடுங்கள்! ஓடுங்கள்!” என்று கத்த ஆரம்பித்தது மாலி. அம்மாவின் குரல் கேட்டவுடன் கேசுவும் வீருவும் தலை தெறிக்க ஓடின.  ஓடின.. ஓடின.. ஓடிக்கொண்டே இருந்தன. நீண்ட தூரம் சென்றபின் இரண்டும் அந்தக் காட்டில் இருந்த ஒரு சிறு குன்றின் மேல் ஏறி நின்றன.

பெருமூச்சு விட்டபடி திரும்பிப் பார்த்தன. எங்கோ தூரத்தில் புலி ஒன்று., மானை கடித்துக் குதறிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்த குன்றுக்கு வந்து சேர்ந்த மாலி “அப்பாடா எப்படியோ தப்பித்தோம்” என்றது.

“ஏன் அம்மா என்ன ஆயிற்று? எதற்காக எங்களை ஓட சொன்னீர்கள்” என்று கேட்டது வீரு.

“அதோ அந்த மானை அடித்துக் கொண்டிருக்கும் புலி, முதலில் நம்மைத்தான் துரத்தியது. மானைப் பார்த்தவுடன்.. நம்மை விட்டு விட்டு மானைப் பிடித்து விட்டது. நல்ல வேலை நாம் தப்பித்தோம்” என்றது மாலி.

“நீங்கள் இருவரும் ஏன் இந்த குன்றின் மேல் ஏறி நின்று இருக்கிறீர்கள் என்று தெரியுமா?” என்று கேட்டது மாலி.

” இங்கே வந்து ஏறி நின்றால் தப்பித்து விடுவோம் என்று தோன்றியது அம்மா; அதனால்தான் ஓடி வந்தோம்” என்று கூறின.

“உண்மைதான். மலைகளில் இருக்கும் பொழுதும் இது போன்ற ஒன்று தான் நம்மை காப்பாற்றும். நாம் மலைக்குச் சென்றவுடன் அது பற்றி உங்களிடம் நிறைய கூறுகிறேன்” என்று கூறியது மாலி.

சிங்கம் புலிக்கு இருப்பது மாதிரி பெரிய கால்களாக இருந்தால் நம்மால் சுலபமாக ஓடி இருக்க முடியும் அம்மா. நம்முடைய கால்களில் கொப்பி போட்டது போல் இது என்ன இப்படி. அதுவுமில்லாமல், அந்த கால் குழம்புகளுக்கு இடையில் பஞ்சு போன்ற இருப்பதால் அடிக்கடி முள்வேறு குத்தி விடுகிறது” என்று கூறியது கேசு.

“கேசு! இந்தக் கால் அமைப்புதான் நமக்கு முக்கியமான ஒரு பலம் தெரியுமா?” என்று கேட்டது மாலி.

“அப்படியா அம்மா எப்படி?” என்று கேட்டது வீரு.

“இந்தக் கால்களால்தான் நம்மால் மலை சரிவுகளில் ஏற முடிகிறது. அந்த பஞ்சு போன்று இருக்கும் நடுப்பகுதி மலையின் சரிவுகளைப் பற்றிக் கொள்வதற்கு சுலபமாக இருக்கிறது” என்று கூறியது.

காடுகளில் சுற்றி அலைந்து புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுதும், எங்காவது ஆறுகளில் சென்று நீர் அருந்தும் பொழுதும், இப்படி செல்லும் இடங்களில் எல்லாம் அங்கிருக்கும் பிரச்சினைகளைக் கூறும்.

அந்தப் பிரச்சனையை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதைப் பற்றிக்கூறும். எப்பொழுதும் விழிப்பாக செயல்பட வேண்டும் என்று கூறும். பார்வை சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். எதிரிகள் எங்கிருந்தும் வரலாம் என்பது பற்றிக் கூறும்.

விடாமுயற்சியாக மலையில் ஏறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தன.
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மலைச் சரிவுகளின் வழியாக மேலே மேலே சென்று முடிவில் மலை உச்சியை அடைந்தது.

பெருத்த மகிழ்ச்சியோடு மாலி தன் இரண்டு குழந்தைகளையும் வாரி அணைத்துக்கொண்டு “நாம் வென்றுவிட்டோமடா கண்ணா!

நம் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். இனி நம்மை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று கூறியது.

அதுவரை காடுகளில் வாழ்ந்த கேசுவும் வீருவும் காடுகளில் எங்கு தண்ணீர் இருக்கிறது எங்கு உணவு இருக்கிறது எது பாதுகாப்பான இடம் என்று அறிந்து வைத்திருந்தது.

மலை அவர்களுக்கு புதிதாக இருந்தது. தினமும் காடுகளை எப்படி சுற்றிக் காண்பித்து காடுகளில் இருப்பதைப் பற்றி விளக்கியதோ அதேபோல் மலையையும் மாலி சுற்றி காண்பிக்கும்.

மலைக்கு வந்து சில நாட்கள் கழித்து ” நான் உங்களை  தங்க முக்கோணம் இருக்கும் இடத்திற்கு நாளை அழைத்துச் செல்லப் போகிறேன்” என்று கூறியது மாலி.

“தங்க முக்கோணமா அப்படி என்றால் என்ன அம்மா?” என்று கேட்டது வீரு.

“அதுதான் நம்மைக் காப்பாற்றும் மாய முக்கோணம் மந்திர முக்கோணம்” என்று கூறியது மாலி.

இப்படிக் கூறியதைக் கேட்டது முதல் தங்க முக்கோணத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது கேசுவுக்கும் வீருவுக்கும்.

அடுத்த நாள் மாலி அந்த மலையின் விளிம்பில் இருக்கும் ஒரு சிறு முக்கோணம் போன்ற ஒரு பகுதிக்கு தனது குட்டிகளை அழைத்துச் சென்றது

அந்த இடத்தைப் பார்த்தவுடன் வீருவும் கேசுவும் முதலில் பயந்துவிட்டன. அம்மா இங்கு நின்று பார்த்தால் பயமாக இருக்கிறது. இங்கிருந்து கீழே விழுந்தால் அவ்வளவுதான் நாம் சுக்கு நூறாக நொறுங்கி விடுவோம் அம்மா” என்று கூறியது வீரு.

“ஆமாம் கண்ணா! ஆனால் இந்த இடத்தை பற்றிக் கொண்டு தைரியமாக நின்றோம் என்றால் எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் நாம் அதனிடமிருந்து தப்பித்து விட முடியும்” என்றது மாலி.

“என்ன அம்மா சொல்கிறீர்கள்! எனக்கு எதுவுமே புரியவில்லை” என்று கேட்டது வீரு.

“யாருமே செல்லத் தயங்கும் பாதை.யாருமே நிற்கத் தயங்கும் இடம். அதுதான் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.

உனக்கு ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அவரைப் பற்றிக் கொள். உனக்கு ஒன்று நல்லது செய்கிறது உன் உயிரைக் காப்பாற்றுகிறது என்றால் அதை விடாமல் பெற்றுக்கொள்.

இந்த இடத்துக்கு நான் வைத்த பெயர் தான் தங்க முக்கோணம் இது போன்ற தங்க முக்கோணம் மலையைச் சுற்றி ஏராளமான இடத்தில் இருக்கின்றன. அத்தனை முக்கோணங்களையும் நான் அறிவேன். எங்குச் சென்றாலும் இந்தத் தங்க முக்கோணம் என்னைக் காப்பாற்றி விடும். நீங்களும் உங்கள் உயிருக்கு ஒரு துன்புறுத்தல் வரும் பொழுது ஓடிச் சென்று இந்தத் தங்க முக்கோணத்தில் நின்று கொள்ளுங்கள்.

இங்கு யாரும் உங்களை எதுவும் செய்து விட முடியாது” என்று கூறியது மாலி.

“அம்மா எனக்கு எதுவுமே புரியவில்லை அம்மா. இங்கு நின்றால் மட்டும் ஏன் நம்மைத் துரத்தும் விலங்குகள் இந்த இடத்திற்கு வராது என்று கூறுகிறீர்கள். இதில் ஏதாவது மந்திரம் இருக்கிறதா அம்மா” என்று கேட்டது கேசு.

” ஆமாம் கண்ணா. இது மாய முக்கோணம், மந்திர முக்கோணம், தங்க முக்கோணம்” என்றது அம்மா.

“அம்மா இது எல்லாம் நம்பும் படியாக இருக்கிறதா? நீங்களே சொல்லுங்கள். இதில் வந்து நின்றால் நாம் தப்பித்துக் கொள்வோமாம். போங்கம்மா” என்று கூறியது கேசு.

மலையின் மீது நடந்து சென்று கொண்டே இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தன மாலியும் அதன் இரண்டு குட்டிகளும்.

ஒரு நாள் கேசு தன் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தன. அந்த நேரம் தூரத்தில் சிங்கம் கர்ஜிக்கும் கர்ஜனை கேட்டது.

கேசுவும் நண்பர்களும் ஓட ஆரம்பித்தார்கள். எங்கெங்கோ ஓடினார்கள். திரும்பிப் பார்த்தால் மிக அருகில் சிங்கம் ஓடி வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் ஒரு தங்க முக்கோணம் கண்ணில் தென்பட்டது. எப்படி இருந்தாலும் இன்று சிங்கத்திடம் அகப்பட்டு விடுவோம். அது உறுதி. எதற்கும் அம்மா சொன்னதைத்தான் கேட்டுப் பார்ப்போமே என்று அந்தத் தங்க முக்கோணத்தில் ஓடிச் சென்று நின்றது கேசு.

அதன் பிறகு சிங்கம் அதன் அருகில் செல்லாமல் வேறு ஒரு திசையை நோக்கிச் சென்றது. இதைப் பார்த்த கேசுவுக்கு அதிர்ச்சி. உண்மையாகவே இதில் ஏதோ மாயம் இருக்கிறது என்னவென்று அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறே அம்மா இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.

“அம்மா! அம்மா! இன்று ஒரு அதிசயம் நடந்தது. தங்க முக்கோணம் என்னைக் காப்பாற்றி விட்டது” என்று சத்தமாகக் கூறிக்கொண்டே அம்மாவை வந்து வாரி அணைத்துக் கொண்டது.

அங்கு நடந்த அனைத்தையும் அம்மாவிடமும் வீருவிடமும் கூறியது கேசு. தங்க முக்கோணம் எப்படித் தன்னை காப்பாற்றியது என்று அம்மாவிடம் கேட்டது கேசு.

“அந்த இடம் மலையின் ஓரத்தில் இருக்கிறது. சிறிய பகுதியாக இருக்கிறது. புலியோ சிங்கமோ அல்லது இது மாதிரியான விலங்குகளோ நாம் இங்கு நிற்கும் போது தாவிக் குதிக்கும் பொழுது ஒரு வேலை கீழே விழுந்து விடும் என்ற பயத்தால் வருவதில்லை” என்றது மாலி.

“அந்த இடம் மிகக் குறுகலான இடம்.‌அந்த இடத்தில் நாம் நின்று இருக்கும் பொழுது ஏதாவது ஒரு விலங்கு தாவிக் குதித்தால் நம்மோடு சேர்ந்து அதுவும் மலையடிவாரத்திற்கு உருண்டு உருண்டு உருண்டு உயிரைவிடும். அந்தப் பயத்தில்தான் இந்த இடத்தில் நிற்கும் போது நம்மை நெருங்குவதில்லை சரியா அம்மா” என்று கேட்டது வீரு.

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும். தகுதியை வளர்த்துக் கொள்ள நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடமிருந்து நாம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும். எதையும் துணிவாகச் செய்யும் தைரியம் வேண்டும். விடாமுயற்சியும் வேண்டும். பெரியவர்கள் ஒன்றைக் கூறினால் அதன் பின் என்ன உண்மை இருக்கிறது என்பதைக் கேட்டறிய வேண்டும். நாம் யார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான இடம் என்று ஒன்று உண்டு” என்று கூறியது மாலி.

அன்றிலிருந்து தான் வாழும் பச்சைமலையில் எங்குச் சென்றாலும் அங்கு இருக்கும் தங்க முக்கோணத்தைத் தன் வீடாக மாற்றிக் கொண்டன.

கேசுவம் வீருவும் தன் அம்மாவோடு மகிழ்வாக வாழ்ந்தன.


 

எழுதியவர்

சரிதா ஜோ
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர்.

கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள்

சிறார் சிறுகதை தொகுப்புகள் :
நீல மரமும் தங்க இறக்கைகளும்,
கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி,
கிளியோடு பறந்த ரோகிணி,
யார் தாத்தா நீங்க?,
சின்ன வாத்தியார்.

சிறார் நாவல்கள் :
மந்திரக் கிலுகிலுப்பை,
நிழலைத் திருடிய பூதம்,
பேயாவது பிசாசாவது,
கடலுக்கடியில் மர்மம்,
சரசுவதிக்கு என்ன ஆச்சு?,
வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x