“காலை வணக்கம் ஐயா.. உள்ளே வரலாமா?..” என்ற ஒரு புதிய கணீர் குரல் வகுப்பறையின் வாயிலில் கேட்கிறது. ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களின் கவனமும் அங்கே குவிகிறது.
வகுப்பறையின் வாயிலில் அவர்கள் வயதை ஒத்த ஒரு மாணவன் சீருடையோடு நிற்கிறான். நல்ல திருத்தமான களையான முகம்; நன்கு இஸ்திரி செய்யப்பட்ட நேர்த்தியான சீருடை; பார்த்தவுடன் அனைவரையும் கவரக்கூடிய ஒரு சிறுவன்.
” வாப்பா..வா..நேற்று தான் பள்ளியில் சேர்ந்தாய்..இன்றே சீருடையுடன் வகுப்புக்கு வந்து விட்டாயா? மகிழ்ச்சி மகிழ்ச்சி.. உள்ள வாப்பா” என்று வகுப்பில் இருந்த தமிழாசிரியர் நடராஜ், அந்த மாணவனை அழைக்கிறார்.
அந்த மாணவனை அழைத்து தன் அருகே நிற்க வைத்து ” நம்ம வகுப்புக்கு வந்திருக்கிற புது மாணவன். இவனுடைய பெயர் செழியன். கோவையில் இருந்து இங்க வந்திருக்கான். கைதட்டி எல்லாரும் அவனை வரவேற்போம்” என்று ஆசிரியர் சொன்னதும் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியோடு கரவொலி எழுப்பினார்கள். கைதட்டல் அடங்கியவுடன்,
ஆசிரியர்” தம்பி… செழியன்.. உன்னப் பத்தி வகுப்பில் அறிமுகம் செய்துகொள் பா “என்று சொல்கிறார்.
” சரிங்கய்யா மிக்க நன்றி… !அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் செழியன். இனி உங்களுடைய வகுப்பில் அமர்ந்து, உங்களுடன் இணைந்து படிக்கப் போற ஒரு மாணவன். இதுவரை கோவையில் ஒரு தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்” என்று சொல்ல சொல்ல, சுரேஷ் எழுந்து
” தனியார் பள்ளியில் படிச்சிட்டு பிறகு எதுக்கு அரசாங்கப் பள்ளியில் சேர்ந்தாய்?”
” ரெண்டு விதமான காரணம் இருக்கு. ஒன்னு கொரோனா தொற்றுக்கு அப்புறம் என்னோட அப்பாக்கு வேலை இல்லாம போயிடுச்சு. இரண்டாவது காரணம், அரசாங்கப் பள்ளிகளை முன்னேற்ற வேண்டும் அப்படின்னு பல ஆசிரியர்களின் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் காரணம்”என்று சொன்னதும் , அனைவரும் ரொம்ப நெகிழ்வாக அந்த மாணவனை பார்த்தார்கள்.
“ரொம்ப மகிழ்ச்சி பா… உங்களைப் போன்ற மாணவர்கள் தான் அரசாங்க பள்ளியோடத் தரத்தை வெளியே உயர்த்திக் காட்ட போறீங்க..”என்று சொல்லிவிட்டு அவனை வகுப்பறையில் அமரச் சொன்னார்.
அவன் எங்கே உட்காரலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, சுரேஷ் சற்றே நகர்ந்து தன்னருகில் வந்து அமருமாறு செழியனை அழைத்தான். சுரேஷிற்கு பார்த்த உடனேயே ஏனோ செழியனை மிகவும் பிடித்திருந்தது.
செழியன் முன்பு படித்த தனியார் பள்ளியைப் போல அல்ல. இது பொள்ளாச்சி இருந்து 10 கீ.மீ தொலைவில் உள்ள கொல்லப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்த ஓர் உயர்நிலைப்பள்ளி.
நிறைய மரங்கள் சூழ்ந்த, சுத்தமான வகுப்பறைகள் கொண்ட பள்ளி. மேலும் ஆசிரியர்களின் ஈடுபட்டால் பற்பல விளையாட்டுகளும் கலைகளும் அங்கே பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது.. அதில் தமிழ் ஆசிரியர் நடராஜ் எப்போதும் மாணவர்களைப் பற்றியே சிந்திப்பவர்.
வந்து ஓரிரு வாரத்திலேயே, வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவ மாணவியர்களிடம் மிகுந்த நட்பு உணர்வோடு செழியன் பழகத் தொடங்கினான். மற்றவர்களைக் காட்டிலும் செழியனுக்கும் சுரேஷுக்கும் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இருவரும் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். பள்ளி விடுமுறை நாளன்று ஒரு நாள் தன்னுடைய ஓவியங்களைக் காட்டுவதற்காக சுரேஷ், செழியனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான்.
மிகப் பிரமாண்டமான வீடு. பார்த்தால் ஒரு மாளிகை போன்ற தோற்றம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா , சுரேஷ் மற்றும் அவன் தங்கை ராஜி ஆகியோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அனைவரிடமும் செழியனை அறிமுகம் செய்துவிட்டு, தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று தன்னுடைய ஓவியங்களைக் காட்டுகிறான். சுரேஷின் அம்மாவின் வற்புறுத்தலால், அன்று அங்கேயே மதிய உணவு அருந்திவிட்டு மாலை வீட்டிற்குச் செல்கிறான்.
அடுத்த நாள் சுரேஷ் வகுப்பிற்கு வந்ததும் “நேற்று உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று இருந்தேன். இப்ப கேட்கட்டுமா?” செழியன் தயக்கத்தோடு இழுக்கிறான்.
“என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்.. கேளு” என்று சுரேஷ் சொல்ல,
“இல்லப்பா.. உன் வீட்ட பார்த்தாலே நீங்க மிகப்பெரிய பணக்காரர்கள் அப்படின்னு தெரியுது. அப்போ பெரிய பெரிய பள்ளியில் தானே படிக்க வைக்க விரும்புவாங்க.. எப்படி அரசாங்கப் பள்ளியில் சேர்த்துவிட்டாங்க?”
சிரித்துக் கொண்டே சுரேஷ்” அட.. இதைக் கேட்கத்தான் இவ்வளவு தயங்கினாயா?.. எங்க தாத்தாக்கு நானும் தங்கச்சி ரொம்ப ரொம்ப இஷ்டம். அதுவு இல்லாம ஜோசியம் சம்பிரதாயம் இதெல்லாம் ரொம்ப நம்புற ஆளு எங்க தாத்தா. எனக்கு ஏதோ வாகனக் கண்டம் இருக்காம். அதனால பக்கத்திலேயே இருக்கிற பள்ளியில் படிக்கட்டும் என்று தாத்தா அடம் பிடிக்க அப்பாவும் அவர் மனசு கஷ்டப்படுத்த விரும்பாமல் சரின்னு சொல்லிட்டார். எங்களுக்கும் இந்த பள்ளி ரொம்பவே புடிச்சிருக்கு. ”
“ஓ இங்க கட்டங்களும் , கண்டமும் தான் பிரச்சனையா?” என்று சொல்ல இருவரும் உரத்த குரலில் சிரிக்கத் தொடங்கினார்கள்.
வகுப்பில் அருகருகே அமர்வது, ஒன்றாக விளையாடுவது, பள்ளி விட்டு ஒன்றாக மிதிவண்டியில் பயணிப்பது என்று எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..
இருவரின் நட்பும் வளர்ந்து கொண்டே சென்றது. விடுமுறை நாட்களிலே செழியனை தன்னுடைய வீட்டிற்கும் தோட்டத்திற்கும் எப்போதும் அழைத்துச் சென்று விடுவான்.. அவர்களுடன் தங்கை ராஜியும் இணைந்து கொள்வாள்.. விடுமுறை நாட்களிலும் ஒன்றாக விளையாடுவது …ஒன்றாக உணவருந்துவது.. ஒன்றாகப் புத்தகங்கள் வாசிப்பது. என்று ஒரே கொண்டாட்டமாக இருப்பார்கள்..
“கமலா .. கமலா… நான் போய் முடி வெட்டிட்டு வரேன்.. வெந்நீர் போட்டு வைம்மா” இன்று சுரேஷின் தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு, முடி திருத்துநர் கடைக்குச் செல்கிறார்.
இவரைக் கண்டதும், கடையின் உரிமையாளர் முருகன்” ஐயா… சொல்லியிருந்தா நான் வீட்டுக்கே வந்து இருப்பேன்.. எதுக்குங்க ஐயா.. இவ்வளவு தூரம் நீங்க வரணும்?”என்று மிக மரியாதையோடு சொல்கிறார்.
“இல்ல முருகா இங்க பக்கமா ஒரு வேற ஒரு வேலை.. அத முடிச்சிட்டு அப்படியே முடிய வெட்டிட்டு போயிடலாம்னு வந்தேன்”
“ஐயா ஒரே நிமிடம் இந்த வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்”என்று சொல்லிவிட்டு முருகன் அவரை அமர வைத்து விட்டுச் செல்கிறார்.
கடையைச் சுற்றும் முற்றும் தாத்தா பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கே தெரிந்த முகம்..கண்களில் படுகிறது.. செழியன் தான் அங்கே அமர்ந்திருக்கிறான். தாத்தா அருகில் இருப்பது தெரியாமல் அவன் ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தான்..
” தம்பி செழியன்… முடி வெட்டுறதுக்கு கடைக்கு வந்தாயா? ” என்ற தாத்தாவின் உற்சாகள் குரலை கேட்டதும் தான் அருகில் இருக்கும் அவரை கவனித்ததும், புத்தகத்தை அருகே வைத்து விட்டு எழுந்து நின்று ,
” வணக்கம் தாத்தா.. முடி வெட்ட வரவில்லைங்க தாத்தா…இது எங்க பெரியப்பாவோட கடை..இங்கு நிறையப் புத்தகங்கள் இருக்கும்..அவற்றை வாசிக்க இங்கு நேரம் கிடைக்கும் போது வருவேனுங்க தாத்தா..”என்று அவன் சொல்லச் சொல்ல தாத்தாவின் முகம் கோணியது..
(‘முருகனோட சொந்தக்கார பையனா இவன்.. அது தெரியாம பையனை நம்ம வீட்டுக்குள்ள விட்டு.. ஒண்ணா அவன் கூட உட்கார்ந்து சாப்பிட்டு.. என்று மனதுக்குள் கொந்தளிக்கிறார்) .
“தாத்தா ஒரு ஜூஸ் போய் கடையில் வாங்கிட்டு வரட்டுங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்..” என்று மெதுவான குரலில் சொல்லிக்கொண்டு அதற்குப் பிறகு செழியனை திரும்பிப் பார்க்கவே இல்லை.
அவனுடைய குழந்தை மனதிற்கு இந்த வேறுபாடு எதுவும் புரியவில்லை..
வழக்கம் போல அன்றைய ஞாயிற்றுக்கிழமை.. செழியன் தன் மிதிவண்டியில் சுரேஷின் வீட்டிற்கு மகிழ்வோடு வருகிறான். வராண்டாவில் தாத்தா ஈசி சேரில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். செழியனை பார்த்ததும்
“வீட்ல ஒருத்தர் இல்லப்பா எல்லாருமே ஊருக்கு போயிட்டாங்க.. நீ போயிட்டு வா” வேகமாய் சொல்கிறார்.
” சரிங்க தாத்தா ” என்று சொல்லிக் கொண்டே, அவன் தானே இன்னைக்கு வீட்டுக்கு வர சொன்னான் தாத்தா இல்லைன்னு சொல்றாரே.. ஒண்ணுமே புரியலையே… என்று யோசித்தபடியே வீட்டிற்கு திரும்பி செல்கிறான்.
நல்லவேளை யாரும் பாக்கல.. ஒரு முடி வெட்டுற பையனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தால் நம்ம வீட்டுக்குள்ள வருவான்.. என்று முணங்க்கிக் கொண்டே தாத்தா சென்று தன்னுடைய நாற்காலியில் அமர்கிறார்.
ஆனால், தன்னுடைய அறையில் இருந்து ராஜி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை தன் அண்ணனிடம் சொன்னால் வருத்தப்படுவான் என்று மனம் வாடுகிறாள்..
மதிய உணவு வேளை…
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது ” இந்த செழியன் பையன் ஏன் வரவே இல்லைன்னு தெரியல..அம்மா..நான் பத்து மணிக்கே வாடா என்று சொல்லி இருந்தேன் ” என்று சுரேஷ் புலம்பிக்கொண்டே சாப்பிடுகிறான்.
“அவனுக்கு வேறு ஏதாச்சும் வேலை இருந்து இருக்கும் கண்ணு.நீ சாப்பிட்டு விட்டுப் போய் அவங்க வீட்டுல பார்த்திட்டு வா ” என்று அவன் அம்மா சொல்லி முடிக்கும் முன்பு,
தாத்தா எதுவும் அறியாதவர் போல ” அட.. அவனுக்கு வீட்ல என்ன வேலையோ விடுப்பா விடு..நான் டவுன் ஆஸ்பத்திரிக்கு சாயந்திரம் கண்ணு செக் பண்ண போகனும்..என்கூட வா..நீ பாட்டுக்கு அங்க இங்க என்று ஓடிப் போய் விடாதே ” என்று சொல்லிக் கொண்டு ஓய்வெடுக்க தன்னுடைய அறைக்கு செல்கிறார்..
சிறிது நேரம் கழித்து மெதுவாக ராஜி தாத்தாவின் அறைக்குள் செல்கிறாள். பேத்தியைப் பார்த்ததும் “என் கண்ணு குட்டி… செல்லக் குட்டி… என்ன இது அண்ணன விட்டுட்டு தனியா தாத்தா ரூமுக்கு வந்திருக்க… ஏதாச்சும் வேணுமா? ” என்று பேத்தியை மடியில் அமர்த்தி வைத்து கொஞ்சுகிறார்.
“தாத்தா.. நான் ஒன்னு கேட்பேன்..”
“கேளுடா தங்கம்..”
“ஏன் தாத்தா செழியன் அண்ணா வரவே இல்லன்னு பொய் சொன்னீங்க?”
“அது அது வந்து அது வந்து…”
“நான் பாத்துட்டேன் தாத்தா பொய் சொல்லாம உண்மைய சொல்லுங்க..” என்று அவர் கண்ணை நேருக்கு நேர் பார்த்தபடி நிற்கிறாள்.
இனிமேல் பேத்தியிடம் மறைக்க முடியாது என்பதை உணர்ந்த தாத்தா,
“அது வேற ஒன்னும் இல்ல.. அவன் முடிவெட்டும் குடும்பத்து பையன்.. அவன் நம்ம வீட்டுக்குள்ள எப்படி வரலாம்.. அதெல்லாம் வரக்கூடாது.”
“ஏன் தாத்தா முடி வெட்டுறவங்களா இருந்தாலும் அவங்களும் மனுஷங்க தானே?”
“மனுஷங்க தான்டா தங்கம்… ஆனா நம்ம சாதி என்ன சனம் என்ன..”
“சரி தாத்தா நான் ஒன்னு கேக்குறேன்.. இந்த கொரோனா வந்தப்போ… நம்ம வீட்ல ஒன்னு நடந்துச்சு ஞாபகம் இருக்கா? ”
தாத்தா யோசித்துக் கொண்டே..” எதைச் சொல்றேன்னு எனக்கு புரியல கண்ணு..”
“கொரோனா நேரத்துல ஊரடங்கு அறிவிச்சிருந்தபோது, அப்பாவோட தலையில புழுவெட்டு பிரச்சினை வந்துச்சுல்ல தாத்தா. அப்ப தினமும் வீட்டுக்கு வந்து, அதுக்கு நாற்பது நாள் வைத்தியம் பண்ணி ,அதை இந்த முருகன் மாமா தானே சரி பண்ணுனாரு. அதுவும் இல்லாம எல்லாரும் கடைக்கு வந்தா தொற்று பரவிருன்னு வீட்டுக்கு போய் எல்லாருக்கும் முடிய வெட்டிவிட்டார் இல்ல..
அந்த ஒரு வருஷ காலம் முடிவெட்டாம எல்லாரும் இருந்து இருந்தா.. கரடி குட்டி மாதிரி இருந்திருப்பீங்க”
“அதுக்குத்தான் நம்ம பணம் கொடுத்தோம்ல”
“பணம் கொடுத்தோம் தாத்தா ..அதை விட உசுரு பெருசு இல்ல. அதுவும் இல்லாம நான் குழந்தையா இருக்கும்போது, எனக்கு பயங்கர காய்ச்சல் வந்து நினைவிழந்து வீதியில விழுந்து கிடந்த போது, அந்த முருகன் மாமா தானே கையிலேயே தூக்கி சுமந்து ஆஸ்பத்திரிக்கு ஓடுனாரு..”
பேத்தி சொல்ல சொல்ல தாத்தாவின் முகம் யோசனையில் ஆழ்கிறது.
“எந்த தொழில் செஞ்சா என்ன தாத்தா? நீ விவசாயம் செய்யற.. அழுக்குடையோடு நீ இருக்கும் போது அப்போது கேவலமான தொழிலாயிருமா… எல்லா தொழிலும் மேன்மைதான தாத்தா”
ஒரு அரசு அலுவலகத்தில் … நீ ஒரு விவசாயி தானே, பெரிய இவனா … என்று ஒரு பெரிய அதிகாரி தன்னை கேவலப்படுத்திய நினைவு தாத்தாவுக்கு மெல்ல வருகிறது..
மெல்லப் பெருமூச்சு விட்டுக் கொண்டே..
” ம்ம்… அவனவனுக்கு அவனவன் தொழில் பெருசுதான்..”
” ஆமாம் தாத்தா.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தாத்தா. எல்லா விஷயத்திலும் ரொம்ப நல்லவரா இருக்குற என் தாத்தா இந்த ஒரு விஷயத்துல மட்டும் இப்படி இருக்கலாமா? ”
என்று செல்லமாய் கொஞ்சிக் கொண்டே தாத்தாவின் கழுத்தை இறுகக் கட்டிக் கொள்கிறாள்.
ஒரு சின்ன புள்ள புத்திமதி சொல்ற அளவுக்கு நான் நடந்து கொண்டேன் பாரு.. என்று நினைத்துக் கொண்டே… பேத்தியை இறுகக் கட்டிக் கொள்கிறார்.
மாலை தோட்டத்தில் இருந்து வரும் போது, தன்னுடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த செழியனை பார்த்து ,
“டேய்…தம்பி.. செழியா.. உனக்கு நொங்குக் காய் பிடிக்கும் இல்ல வெட்டிக் கொண்டு வந்து வீட்ல வெச்சி இருக்கேன்.. நம்ம வீட்டுக்குப் போய் சுரேசு, ராஜி எல்லாரும் சேர்ந்து எல்லாம் சாப்பிடுங்க” என்று சொல்ல…
மகிழ்ச்சியோடு செழியனின் மிதிவண்டி சுரேஷின் வீட்டை நோக்கிப் பறக்கிறது.
எழுதியவர்
-
BE, MBA பட்டப்படிப்புகளை பயின்ற பூங்கொடி கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றியவர். தற்போது கட்டுமானத்துறை வேலையில் அவரின் கணவருக்கு உதவியாக பணிபுரிகிறார்.
குழந்தைகளுக்கான கதை சொல்லியாகவும் திகழ்கிறார் . ‘பூங்கொடி கதைசொல்லி’ என்ற Youtube வாயிலாகவும் , அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்றும், இணைய வழி நிகழ்வுகள் வாயிலாகவும் கதைகள் சொல்லி வருகிறார்.. கதைகள் வாயிலாக நற்பண்புகள் வளர்த்தல் பயிற்சியில் தமிழ் பாடம் கதைகள் மூலம் கற்பிப்பது எப்படி என்பதை அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் சுவடு இதழில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவற்றோடு கல்லூரி மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரைகள், ஆளுமை பயிற்சிகள் அளித்தவராகவும் திகழ்கிறார். புத்தகங்கள் குறித்தான விமர்சனங்களை தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளில் முன்வைக்கும் பூங்கொடி முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, உலகத் தமிழ் பேரியக்கம் வழங்கிய தங்க மங்கை விருது, முற்போக்கு கலை இலக்கிய மேடையின் கதைசொல்லி விருது போன்ற விருதுகள் பெற்றவர்.
கண்மணிகளின் கலாட்டாக்கள், மந்திரக் கோட் ஆகிய சிறார் இலக்கிய நூல்கள் இவரின் எழுத்தில் வெளியாகி இருக்கின்றன.
இதுவரை.
- சிறார் இலக்கியம்9 June 2023நீயும் நானும் ஒன்னுதா
- குறுங்கதை18 October 2021தகப்பன்சாமி
மிக அருமை!!!!