23 November 2024
padmakumari -edai

கூடத்தின் நடுவே போட்டிருந்த சிவப்பு பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்த புத்தகப்பையின் மீதே கண்ணனின் முழு கவனமும் குவிந்திருந்தது. அவனால் அன்றைக்கான எந்த வேலைகளிலும் ஈடுபடமுடியவில்லை.

இன்னிக்குன்னு  பார்த்து தான் இவ இப்படி காய்கறி நறுக்குறேன் மாவு பிசையுறேன்னு எல்லா வேலையையும் இந்த சேர்கிட்ட உட்கார்ந்தே பாத்துகிட்டு இருக்கா. இந்த இடத்தை விட்டு அசைவனான்னுலா இருக்கத பாரு. ‘ வேணி இடத்தை விட்டு அசையாமல் இருப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது

காபி வேணுமா. ‘ நடு கூடத்தில் நின்று விழித்துக் கொண்டிருந்த கண்ணனை பார்த்து வேணிக் கேட்டாள்

‘… . ‘ பதில் சொல்லாமல் படுக்கையறைக்குள் போயிவிட்டான் கண்ணன்.

ஏற்கனவே திவ்யாவின் மதிப்பெண்னை நிஷாவின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு பேசியபொழுது வேணி கண்ணனை மிகவும் கடிந்துக் கொண்டாள்

ஒன்னாங்கிளாஸ் படிக்கிற பிள்ளைக மார்க்க போய் கம்பேர் பண்ணிகிட்டு இந்த வருத்து வந்துகிட்டு இருக்கீங்க. ‘

ஒன்னாங்கிளாஸ்ல ஆரம்பிக்கிறது தான் கடைசி வரைக்கும் இருக்கும். அஞ்சுல விளையாதது ஐம்பதுல எப்படி விளையும். ‘ 

அவளால முடிஞ்ச மார்க்க அவ எடுக்குறா. இவளால முடிஞ்சத இவா எடுக்குறாஇப்படி கம்பேர் பண்ணி அதுங்க மனசுல விசத்த விதைக்க கூடாது. ‘

அவன் கம்பெனில சாதரண வொர்க்மேன். அவன் பொண்ணே அவ்வளவு மார்க் வாங்குறப்ப, மேனேஜர இருக்க என்னோட பொண்ணு அவன் பொண்ணைவிட கூடுதல் மார்க் வாங்கணும்ன்னு இருக்கிற என்னோட எதிர்பார்ப்புல என்ன தப்பு. ‘

அப்படி சொல்லவரீங்க. ‘

ம்ம். ‘

அப்ப வொர்க்மேனோட பொண்ணு படிக்கிற அதே பள்ளிகூடத்தில, மேனேஜர் பொண்ண எதுக்கு படிக்க வைக்கிறீங்க. இந்த கேள்விய திவ்யா உங்ககிட்ட கேட்டிருந்தா? ‘

‘… . ‘

திவ்யாவ இன்னும் நல்ல படிக்கிறபடிக்கு என்கரேஜ் பண்ணுவோம். அதவிட்டுட்டு கம்பேர் பண்ணி பேச வேண்டாம். ‘

இந்த உரையாடலுக்குப் பிறகு கண்ணன் வேணியிடம் இரண்டு நாட்களுக்கு முகம் கொடுத்து பேசாமல் இருந்திருந்தான். அவளும் அவன் போக்கில் விட்டுவிடுவதென முடிவு செய்து கண்டுகொள்ளாமல் இருந்து விட்டாள்

அதன்பிறகு நடந்த முடிந்த தேர்வுகளின் முடிவுகள் வெளி வந்தபோதிலும், கண்ணன் நிஷாவின் மதிப்பெண்ணை பற்றி கணேஷிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு தான் இருந்தான் என்றாலும், அதனால் அவனுக்குள் எழுந்த மனக்குமுறல்களை அவனால் நேரடியாக வீட்டில் காட்டிக் கொள்ள முடியவில்லை

இன்னிக்கு பத்து மணிக்கு ஜார்ஜ பார்க்க போணும் சொன்னீங்கல்ல. கிளம்பலியா. மணி பத்து பத்தாச்சு.மெத்தையில் கவிழ்ந்து படுத்துக் கிடந்த கண்ணனின் வெற்று முதுகை தொட்டு எழுப்பினாள் வேணி

ம்ம் போணும். ‘ என்று சொல்லிவிட்டு இடது புறமாக ஒருக்களித்து படுத்து கண்ணை மூடிக் கொண்டான்

அம்மா தண்ணீ. ‘கண்ணின் நடவடிக்கையில் குழம்பி போய் நின்றிருந்தவளின் கவனத்தை திவ்யா மீட்டாள்

அத்த எனக்கும் தண்ணீ. ‘ மூச்சிரைக்க முட்டியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்த திவ்யாவிற்கு பின்னால் நிஷாவும் வந்து மேலும் கீழுமாக மூச்சிரைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்

கோர்ட்டஷில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தபோதிலும் மற்ற வீட்டு குழந்தைகளை விட திவ்யா நிஷாவிடம் தான் நெருங்கிய நட்பாக பழகினாள்.இத்தனைக்கும் அதே கோர்ட்டஷில் இருந்து ஐந்து பிள்ளைகள் திவ்யாவோடு ஒரே வகுப்பில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமெல்லாம் அதிகம் ஒட்டிக் கொள்ளாமல் திவ்யாவும் நிஷாவும் இருவராக விளையாடி மகிழ எத்தனை எத்தனையோ விளையாட்டுகளைக் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள். அடிக்கடி குசுகுசுவென்று ஏதோ பேசி ஓட்டைப்பல் தெரிய சிரித்துக் கொள்வார்கள். வேணிக்கு அவர்களை பார்க்கும் பொழுது, சிறு வயது தோழி ப்ரீத்தியின் நியாபகம் வரும். ப்ரீத்தியின் புட்டு கண்ணமும் சிரிக்கும் பொழுது அதில் விழும் குழியும் அத்தனை அழகாய் இருக்கும். இப்பொழுது திவ்யாவும் நிஷாவும் இருப்பதை போலதான் ப்ரீத்தியும் வேணியும் மற்றவர்களை தவிர்த்துவிட்டு அவர்களின் சிறுவட்டத்திற்குள் கைகோர்த்து திரிந்திருந்தார்கள். தினமும் மதிய சாப்பாடு முடிந்து ஆயாம்மா ஊற்றும் நீரில் கைநீட்டி கழுவிக் கொண்டபிறகு ப்ரீத்தி வேணியின் ஈரமான தாடையை, தனது யூனிபார்மின் முன் பக்கத்தில் குத்தி விடப்பட்டிருக்கும் கைகுட்டையால் மறக்காமல் துடைத்து விடுவாள். இன்று எங்கு எப்படி இருக்கிறோளோ என்று நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் வேணி

சேலத்தில இருந்து அக்காவோட மாமியார் இறந்துட்டாங்கன்னு போன் போட்டு சொன்னாங்க. இப்ப கிளம்பி போயிட்டு நாளைக்கு காலையில அடக்கம் முடிஞ்ச கையோடு கிளம்பி வந்திருவோம். ஒருநாளைக்காக நிஷாவ அலைக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன். அவளுக்கு சட்டு சட்டென்று மேலுக்கு முடியாம ஆயிடுது.அதனால…. ஸ்கூலுக்கு திவ்யாவ கூப்பிட போறப்ப நிஷாவையும் கூட கூட்டிகிட்டு வந்து ஒருநாள் உங்க வீட்ல விட்டு பார்த்துக்க முடியுமா. ‘ கணேஷனின் மனைவி தயங்கி தயங்கி கேட்டபொழுது  ‘அதுக்கென்ன தாராளமா பார்த்துகிடுகேன். ‘ என்றாள் வேணி

ரொம்ப தேங்க்ஸ்.’

அட இதுல என்ன இருக்கு. ஒருதருக்கு ஒருத்தர் உபகாரம இருக்க தான சுற்றி நாலு மனுசங்க இருக்கிறது. ‘

கண்ணன் தான் நேற்று மாலை இரண்டு பேரையும் பள்ளியில் இருந்து கூட்டி வந்தான். இருவருக்கும் கைகால் முகம் கழுவி, கொரி பண்டமும் காப்பியும் சாப்பிட வைத்து வீட்டுப்பாடம் எழுத அமர்த்தினாள் வேணி

சோசியல் மார்க் கொடுத்தாங்க. ‘ வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்த திவ்யா தலையை நிமிர்த்தி எதிரே சோபாவில் அமர்ந்திருந்த கண்ணனை பார்த்துச் சொன்னாள்

எவ்வளவு மார்க் . ‘

செவன்டி சிக்ஸ்’

கண்ணன் அடுத்ததாக குறுகுறுப்போடு நிஷாவின் பக்கம் கண்களை திருப்பினான்.  ‘ உனக்… ‘ அவன் கேள்வியை முடிப்பதற்குள் வேணியிடமிருந்து வந்த முறைப்பிற்கு கட்டுப்பட்டு நிறுத்திக் கொண்டான்

சரி ரெண்டு பேரும் சீக்கிரம் எழுதி முடிங்க. சீக்கிரம் முடிச்சிட்டா விளையாட விடுவேன். ‘ என்று வேணி குழந்தைகளின் கவனத்தை திருப்பி விட்டாள்

நிஷாவின் மதிப்பெண் என்னவாக இருக்குமென்ற தீவிர யோசனையால் கண்ணனால் இரவு சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. ஏதோ கடனுக்கு வயிற்றை நிரப்பி விட்டு எழுந்துக் கொண்டான். வேணி தூங்கியபிறகு நிஷாவின் புத்தகப்பையில் இருக்கும் விடைத்தாளை எடுத்து பார்த்து விடலாம் என்ற திட்டமிடலோடு வேணி எப்பொழுது தூங்குவாள் என்பதை மனதிற்குள் எதிர்பார்த்தபடியே வெளியே தூங்குவதாக நடித்தபடிகண்மூடிக் கிடந்தான். காலையில் வேணி எழுப்பிவிட்டபொழுது, ரயிலில் பையை தொலைத்துவிட்டவனின் மனநிலைக்கு இணையான பதற்றம் அவனுக்குள் வந்து தொற்றிக் கொண்டது. எப்பொழுது உறங்கி போனான் என்பதை எவ்வளவு யோசித்தும் அவனால் நியாபக படுத்திக் கொள்ள முடியவில்லை

சா பூ த்ரி’ திவ்யாவும் நிஷாவும் கூடத்தில் சாபூத்திரி போட்டுக் கொண்டிருந்தார்கள்

சுற்றி சுற்றி வட்டமிட்டும் எந்த சந்தர்ப்பமும் அமையாமல் கண்ணன் ஜார்ஜஜார்ஜை பார்க்க கிளம்பி போயிருந்தான். ஜார்ஜை பார்த்துவிட்டு வந்த அவன் வீட்டிற்குள் நுழையும்பொழுது வேணி திவ்யாவையும் நிஷாவையும் அடுத்தடுத்தாக அமர வைத்து வாழை இலையில் மதிய உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள்

இரண்டும் சேர்ந்து சாப்பிடும்போது கொஞ்சம் நல்ல சாப்பிடும்ல. அதை அதுகளுக்கு மட்டும் இரண்டு இலை அறுத்திட்டு வந்தேன். ‘ கண்ணன் கேட்காமலேயே வேணி சொன்னாள்

அவன் காதில் எதுவும் ஏறவில்லை

நன்றாக சாப்பிட்டு முடித்திருந்த திருப்தியில் ஒருவர் மேல் ஒருவர் கைப்போட்டபடி படுத்திருந்த திவ்யாவையும் நிஷாவையும் வேணி பூரித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். வேணியும் தூங்கினால் தனக்கு ஒரு மறுசந்தர்ப்பம் அமையும் என்ற மனக்கணக்கோடு கண்ணன் அமர்ந்திருந்தான்

விறுவிறுன்னு நட நேராச்சு. வீட்டுல அப்படி அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு ஓடுனது. ஊருப்பட்ட வேலை கிடக்கு.’  இரவு  வந்து அழைத்தபொழுது, புத்தகப்பையை தோளில் மாட்டிக் கொண்டு நகரவே மனமில்லாமல் இரண்டு கால் ஆமையை போல மெல்லமாக  திவ்யாவை திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்த நிஷாவை அதட்டினாள் கணேஷனின் மனைவி. வாழைப்பூவைப்போல சுருங்கிய முகத்தோடு நின்றுக் கொண்டிருந்த திவ்யாவை வேணி அவள் தொடையோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருந்தாள். கண்ணன் நிஷாவின் முதுகில் கிடந்த புத்தகப்பையை ஏக்கத்தோடு பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான். நாளையோ நாளான்னையோ கணேஷனிடம் கேட்டு நிஷாவின் மதிப்பெண்ணை தன்னால் அறிந்து கொள்ள முடியும் என்ற நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், உடனே அறிந்து கொள்ள முடியாமல் போன வருத்தம் அவனுக்குள் இருந்தது

உன்னால தான் என்னை என் அப்பா அடிச்சாரு. போ. உன் பேச்சு கா.’ என்று சண்டையிட்டு அந்த வருடம் பள்ளி முடியும் வரையிலும் பேசாமலேயே இருந்த ப்ரீத்தியின் ஏழு வயது முகம் வேணிக்குள் வந்துப் போனது. அடுத்த வருடம் பள்ளி ஆரம்பமானபொழுது ப்ரீத்தி வந்திருக்கவில்லை. அவள் அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக அவர்கள் குடும்பத்தோடு ஊர் மாற்றிப் போயிருந்தார்கள் என்ற விவரம் மட்டுமே வேணியை எட்டியது.


 

எழுதியவர்

பத்மகுமாரி
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் ”நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
மன்னர்மன்னன் குமரன்
மன்னர்மன்னன் குமரன்
1 year ago

இரண்டு நாட்களுக்கு முன்னால் சுந்தர ராமசாமியின் தனுவும் நிஷாவும் சிறுகதையை படித்திருந்தேன். அமெரிக்காவில் பேத்திகள் தனுவும் நிஷாவும் பக்கத்து வீட்டுக் காரர்களின் செடிகளையும் பாஞ்சாவையும் அழகாக கவனித்துக் கொள்வதை பார்த்து லயிக்கும் தாத்தாவின் இடத்தில் நான் இருக்க வேண்டுமென மனம் ஏங்கியது. திவ்யாவும் நிஷாவும் ஒருவர்மேல் ஒருவர் கைபோட்டு உறங்குவதை வேணி பூரித்துப் பார்க்கும் தருணத்தில் அதே ஏக்கம் எனக்குள். மனிதன் தன்னில் உயர்ந்தவரை (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) தனது இயக்கத்திற்கு ஒரு உந்துதலாக அண்ணாந்து பார்க்கிறான். குறைந்தவரை (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) இவனெல்லாம் என் பக்கத்திலா?! என்று குனிந்து பார்க்கிறான். குறைந்தவரின் வளர்ச்சியின் மீது ஒரு கண் வைத்துக் கொள்வதில் மனிதனுக்கு எப்போதும் சோம்பேறித்தனம் இருந்ததில்லை. கதையில் வரும் கண்ணனும் அந்த கோஷ்டிதான். வேணிகளைப் பார்க்கும் போது சமூகத்தின் வரப்பு கடலின் அக்கறை போல எட்டா தூரத்திற்கு விரிவதை கண் நோக்க முடிகிறது; நம்பிக்கையின் தேய்வுக்கு உயவெண்ணை கிடைத்தது போல. ‘பசுமரத்தாணி’ என்ற சொலவடை கதைக்குள் ஒரு ஊடல் செய்திருக்கிறது. ‘உன்னால தான் என்னை என் அப்பா அடிச்சாரு. போ. உன் பேச்சு கா.’ என்று கோபித்துக் கொண்டு போன ப்ரீத்தியின் நிகழ் மனநிலை வேணியின் மூலம் பிரதிபலித்திருப்பதாய் நான் உணர்கிறேன். மனம் பசுமையாய் இருக்கையில் அடித்த ஆணியையும் ஊருவி விட முடியும். ப்ரீத்தியின் பசுமனம் வேணியின் நினைவால் நம்பகம் பெறுகிறது. சமூகத்திற்கு கொடுக்கத் தகுந்த சத்துள்ள கதை.

என்னுடைய தனிப்பட்ட புரிதல்கள் என்று சில இருக்கின்றன. அவை இங்கு தேவையா என்று எனக்கு தெரியவில்லை. சொன்னால் இந்த மதிப்புரை இன்னும் கொஞ்சம் தெளிவுபடலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன். ‘எம் புள்ளயும் நல்ல துணி உடுத்தி நிக்கணும்ன்னு தான’ என்று திருமண விழாவிற்கோ திருவிழாவிற்கோ செல்லும் முன் புதுச் சட்டை எடுத்துத் தரும் அம்மா நினைவுக்கு வருகிறார்கள். குறைந்தவர்கள் (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) உயர்ந்தவர்களோடு (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) தங்களை ஒப்பிட்டுக் கொள்ளாமல் இல்லை. தன் மகவை சான்றோள்/சான்றோன் எனக் கேட்க ஏங்காத தாயில்லை. படிநிலைகள் பற்றியான முடிவுகளில் கீழ் படிகளில் நிற்பதே அறம் என்கிறார்கள். என் சிந்தை மட்டும் ‘சும்மா இருந்து நாப்பநாயிரம் சம்பளம் வாங்கிட்டுப் போறான்’ என்று வைது தீர்த்த அதே மேலாளரின் பதவிக்கு வரத் தகும் படிப்பை தன் மக்களுக்கு கொடுத்துவிடத் துடிக்கும் தொழிலாளர்களின் மனதை சுற்றி வருகிறது. தீர்வுக்கெல்லாம் வர முடியவில்லை. படிநிலைகளுக்கு இடையிலான முடிப்புகளை அவிழ்க்க நினைக்கும் தத்துவங்களின் மேல் இந்த சிந்தனை படிந்து விடுகிறது. இந்தக் கதையைப் படிக்கும் போதும்தான்.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x