17 September 2024

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியை தீர்க்கமாக நம்மிடம் நம்ப வைத்து இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆரோக்கிய மனநிலையில் சிரிப்பதற்கும், மன அழுத்தத்தில் சிரிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை என்றாவது நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே கூறுவேன்.

அதற்கேற்ப விஞ்ஞான ரீதியாக எபிநெஃப்ரின், நார் – எபிநெஃப்ரின், கார்டிசால் ஆகியவை மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்களாகும். ஒரு மனிதன் மனம் விட்டுச் சிரிக்கும் போது அந்த ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறது என்கிறார்கள்.

மூளையில் எபிநெஃப்ரின், நார் – எபிநெஃப்ரின், கார்டிசால் மற்றும் எண்டோர்பின்கள் இவர்களுக்குள் ஏற்படும் கெமிக்கல் மாற்றத்தால் ஒரு மனிதன் சமூகப்பிராணியாக ஏற்றுக்கொள்ள முடியாத நபராக மாறி விடுகிறான்.

சிரித்த முகமாய் இருப்பதைப் பார்ப்பதற்கு எத்தனை லட்சணமாய் இருக்கும் என்று அடிக்கடி நம் வீடுகளில் கூறிக்கொண்டே இருப்பார்கள். சிரித்த முகம் நம்மை ஆரோக்கியமாக இருக்க வைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் எல்லா உண்மைகளும் அப்படியே இருக்காது என்பதே வாழ்வில் முரணாக நம் மூளை நமக்கு அப்ப அப்ப ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும்.

அப்படிப்பட்ட பாடமாக நமக்கு நாமே சொன்னால், ஒரு மனிதனின் சிரிப்பு நம்மைக் கலவரப்படுத்தி இருக்கிறதா? சிரிப்பு சில நேரங்களில் மனிதனைக் கலவரப்படுத்தும் என்கிறார் இயக்குநர் பார்க்கர் ஃபின்.

சிரிப்பைப் பார்த்துப் பயப்படும் அளவிற்கு Smile என்ற தலைப்புடன் டைரக்டர் பார்க்கர் ஃபின் ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சிரிப்பைப் பார்த்துப் பயந்து இருக்கீங்களா என்று உங்களைப் பார்த்து நான் கேட்டேன், உண்மையில் நான் பயந்து இருக்கிறேன். கவுன்சிலிங் சைக்காலஜி படிக்கும் போது தான் மனநல மருத்துவமனைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது. முதன் முதலாக அப்படி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் பேஷன்ட்கிட்ட பேசிட்டு வரச் சொன்னார்கள். அங்கு அட்மிட் ஆகி இருக்கும் நோயாளிகளின் சிரிப்பைப் பார்க்கும் போது வாழ்வின் மீதான ஒட்டு மொத்த வெறுமையையும் என்னால் உணர முடிந்தது.

அந்த வெறுமையைத் தான் Smile படம் பேசுகிறது.

Smile படம், Laura hasn’t slept என்கிற ஒரு குறும்படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டது. திரில்லர் மற்றும் Post Traumatic Stress Disorder (PTSD) மனநோய் சார்ந்த ஒரு படமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

டாக்டர். ரோஸ் ஒரு மனநல மருத்துவமனையில் சைக்காலஜிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவரது கண்காணிப்பில் சில நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஒரு நாள் இவரது மருத்துவமனைக்கு ஓர் இளம்பெண் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுகிறார். அந்தப்பெண் தான் சாகப் போவதாகவும், அவருக்கு நெருக்கமானவர்களும் சாகப் போவதாகவும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.

டாக்டர். ரோஸ் சைக்காலஜிஸ்ட்டாக அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு மனநோய் இருப்பதாகவும், ஆடிட்டரி மற்றும் விஷூவல் ஹாலுசினேஷன் ஏற்பட்டுள்ளது என்கிறார். அதற்கோ அந்தப்பெண் தானும் படித்த பெண், தனக்கும் இந்த நோய் பற்றிய விவரமெல்லாம் தெரியும் என்கிறார். ஆனால் இவை தன்னை மீறி, தன்னைத் தொடர்ந்து வரும் ஒருவரின் சிரிப்பு ரொம்ப தொந்தரவு படுத்துகிறது என்கிறார். அந்தச் சிரிப்பைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று கூறுகிறார். இப்படி இருவருக்கும் இடையே உரையாடல் போய்க்கொண்டு இருக்கும் போதே அந்தப் பெண், டாக்டர். ரோஸ் முன் சிரித்துக் கொண்டே தன்னுடைய கழுத்தை அறுத்துச் சாகிறார்.

அந்தப் பெண்ணின் மரணமும், அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளும் ஒரு பேய்ப்படம் போல் காண்பித்து இருந்தாலும், உளவியல் நிபுணர்களுக்கும் மனதளவில் பிரச்சனைகள் ஏற்படும் போது, எந்த அளவுக்கு ரியாக்ட் செய்கிறார்கள் என்பதே படத்தின் நோக்கமாகப் பார்க்கிறேன்.

இறந்த பெண்ணும் படித்த பெண் தான், டாக்டர் ரோஸும் மனநல நிபுணர் தான், ஆனாலும் மனதில் ஏற்படும் தடுமாற்றங்களிலிருந்து அனைவருமே தப்பிக்கப் பார்க்கிறார்கள். மனம் என்கிற கடலுக்குள் இருந்து தப்பித்தார்களா என்றால், இன்னும் ஆழமாக மனதுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்றே படம் அழுத்தமாக நம்மிடம் சொல்கிறது.

எப்படி மனதுக்குள் சிக்குகிறார்கள் என்று பார்த்தால், நிஜ வாழ்க்கையிலிருந்து, ஒதுங்கி இருக்கிறோம் என்பதே தெரியாமல் ஓர் உலகுக்குள் சென்று இருப்பார்கள். ஆனால் அது தெரியாமல் அவர்களும் யதார்த்தமானவர்கள் என்றே கூறுவார்கள். உதாரணமாக இந்தப் படத்தில் ஒரு சீனில் டாக்டர்.ரோஸ் வீட்டில் இருக்கும் பூனை காணாமல் போனதாகத் தேடுவார்கள். ஆனால் ரோஸின் தங்கை மகனுக்கு அந்தப் பூனையை இறந்த உடலுடன் பார்சல் செய்து பிறந்தநாள் பரிசாக ரோஸ் கொடுத்து இருப்பார். ஆனால் தான் எதுவும் செய்யவில்லை என்றே கூறுவார்.

மருத்துவமனையில் அந்தப் பெண் இறந்ததைச் சட்ட ரீதியாகப் பார்ப்பதற்கு வந்த போலீஸிடம் தனக்கும் உதவி செய்யுமாறு ரோஸ் கேட்பார். அவரது உதவியுடன் உளவியல் நிபுணரா மாறி, அந்த கேஸ் ஸ்டடியுடன், தான் எங்குச் சிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தேட ஆரம்பிப்பார்.

எந்த ஓர் உளவியல் நிபுணரும் தன்னுடைய வாழ்வில் நடந்த மனக்காயங்களிலிருந்து ஓரளவு விடுபட முயற்சி செய்வார்கள். அப்படி அந்தக்காயங்களால் மறுபடியும் உணர்ச்சி வசப்பட நேர்ந்தாலும், அதிலிருந்து வெளிவருவதற்கான அடிப்படை செயல்களைச் செய்து மனதைச் சரிசெய்வார்கள். ஆனால் ரோஸ் விஷயத்தில் அவருடைய அம்மா தற்கொலைக்கு முயற்சி செய்வதற்காக விஷத்தை விடுவார். அதன் பின் அவரால் அந்த வலியைத் தாங்க முடியாமல், தன்னைக் காப்பாற்றி விடுமாறு ரோஸிடம் கூறுவார். ஆனால் ரோஸ் சிறுவயதாக இருந்த காரணத்தினால் அம்மாவின் வலியின் கதறலைப் பார்த்துப் பயந்து வெளியே ஓடி வந்து விடுவார்.

தன்னுடைய தாயைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற குற்றவுணர்வு அவரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதாகக் கூறுவார். உளவியல் தியரியில் அவமான உணர்வும், குற்ற உணர்வும் மிகவும் ஆபத்தான உணர்வாகக் கூறுவார்கள். இந்த இரண்டு உணர்வும் மனிதனை எந்த ஓர் எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதே விஷயமாகும். அதனால் இந்த உணர்வில் இருக்கும் யாரையும் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும் சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உளவியல் நிபுணர்கள் தெளிவாக இருப்பார்கள்.

டாக்டர்.ரோஸ் அப்படிதான் அந்தக் குற்ற உணர்வுக்குள் செல்லாமல், தன்னை காப்பாற்றிக் கொண்டு இருப்பார். ஆனால் தன் கண் முன்னே, தன்னை பார்க்க வந்த நோயாளி, இறந்ததும், சிறுவயதில் தன் அம்மாவும் இறந்ததும் சேர்ந்து அவரின் மனதை ஒரு சேரக் குழப்பி விடும். அந்தக் குழப்பம் அவருக்குள் இருக்கும் உணர்வை இன்னும் அதிகமாக்கும். தன்னுடைய குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முயற்சி செய்வதே படம் முழுக்க திரில்லிங்காக காண்பித்து இருப்பார்கள்.

ஆழ்மனம் மேலெழும்பி வந்துள்ளது என்ற வரி உண்மையானால், டாக்டர் ரோஸின் சிரிப்பும் நம்மை அதிர வைக்கும் என்பதே நிஜம்.


 

எழுதியவர்

காயத்ரி மஹதி
காயத்ரி மஹதி
தமிழகத்தின் மதுரை மாநகரைச் சார்ந்த இவர் மனநல ஆலோசகராக உள்ளார். மனநலம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதுடன், இலக்கியம் சார்ந்த நூல் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x