8 November 2024
7 kaviji

ன்று கடைசி நாள்.

பஸ் டிரைவர் வாழ்வு இன்றோடு முடிவுக்கு வருகிறது. மனம் உருக வேண்டினார்… மூர்த்தி.

வழக்கம் போலான வேண்டுதல் தான். பேருந்தை எடுப்பதற்கு முன் தேங்காய் உடைத்து… வேண்டிக் கொண்டு… சிறு புன்னகையை கீற்றாக்கிக் கொண்டு தான் கிளம்புவார். அவ்ளோ பெரிய பூ மரத்தடியே சின்னூண்டு சாமி. பார்க்கவே அழகாக இருக்கும். பார்த்து பார்த்து அந்த மரமும் சாமி ஆகி விட்டது போல ஓர் அதிர்வு அந்த இடம் முழுக்க எப்போதும் பரவி இருக்கும்.

“மூர்த்திண்ணா தினமும் பேசுற சாமிதான. சீக்கிரம் வாங்க….” பழக்கப்பட்ட பயணி தான்.. ஜன்னல் வழியே கத்தினான்.

வந்து வளைந்து… திரும்புவதற்கு வாகாக நின்றிருந்த பேருந்துள் வழக்கமாக ஏறுபவர்கள் ஏறி அமர்ந்திருந்தார்கள். ட்ரைவர் வந்ததும் ஏறி கொள்ளலாம் என்றவர்கள் கீழே நின்று சேட்டா கடை கட்டஞ்சாயாவை குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன… சாமி கும்புட்டுட்டு வேகமா பஸ்க்குள்ள வருவார்னு பார்த்தா ஒத்தையடில யானையை விரட்டற மாதிரி வேகு வேகுன்னு போறாரு…” ஒருவர் கிண்டல் அடிக்க… இன்னொருவர்…” அட… வருவார்யா….ட்ரைவர்க்கெல்லாம் என்ன யூரின் டேங்க் ரெண்டு நாளைக்கு தாங்கற மாதிரியா படைச்சிருக்கு…” என்றவர் சிரித்துக் கொண்டார்.

அது நடையா… ஓட்டமா தெரியவில்லை. ஒற்றையடி கடந்து தேயிலை சால் குறுக்கில் வேக வேகமாக இறங்கி கொண்டிருந்தார்.

எப்படி நம்பாமல் இருப்பது.. பேசியது சாமியாச்சே. திரும்ப திரும்ப மனதில் அந்த குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

“இத்தன வருச சர்வீஸ்ல எந்த பிரச்சனயும் எனக்கு வந்ததில்ல. ரோட்டுல போற எல்லா உயிரும் என் உயிர் மாதிரி தான் நினைச்சிருக்கேன். இன்னைக்கும் அதே மாதிரி நல்லபடியா ட்ரிப்பை முடிக்க அருள் பூரி ஆண்டவா….” – வேண்டிய மறுநொடி.. ஒரு காட்சி கண்ணில் தெரிந்தது.

உள்ளிமலை கொண்டை ஊசி வளைவில்… இரு இளைஞர்கள்.. பைக்கில் வேகமாய் ரைட் ஏறி வந்து நிறுத்த முடியாமல் மோதுவது போன்ற காட்சி. மனதின் கண்களை மறுபடி மறுபடி தேய்த்துக் கொண்டார். தான் ஹாரன் அடித்தோமா என்று யோசித்தார். அடித்திருக்கிறார். வளைவில் என்ன வேகமோ… அந்த வேகம் தான் பேருந்தும். ஆனால் பைக் அப்படி இல்லை. கிறுக்குத்தனமான வேகம். அடித்த வேகத்தில் பேருந்தில் மோதி பிறகு தூக்கி எறியப்பட்டு பக்கவாட்டில் இருந்த பாறையில் மோதி… இருவருமே அதே இடத்தில் பலி. இருசக்கர வாகனமோ தலைகீழ் கரப்பானாக கிடந்தது.

“ஐயோ…..!” என கண்களை திறந்தவருக்கு அன்று சாமி சரியாக இல்லை போல தோன்றியது. சாமி முகத்தில் பதற்றம்.

“கடவுளே…. என்ன விளையாட்டு இது. குத்தம் குறை இல்லாம என் சர்வீஸை முடிக்கணும்னு பாக்கறேன். அதே நேரம் ரெண்டு உயிர்ங்க… அப்பிடி எதுவும் ஆகிடக்கூடாது..” – யோசித்தார். தடுமாற்றமும் தவிப்பும்.. அவரை ஸ்தம்பிக்க செய்தது. நிஜமாகவே அவரோடு பேசியது….. கடவுளா….? இல்லை தனக்கு ஏற்பட்ட பிரமையா….! அவரால் யோசிக்க முடியவில்லை. உள்ளிமலை கொண்டை ஊசி வளைவில் சற்று நேரத்தில் நிகழப் போகும் விபத்து மூர்த்தியை வியர்க்க வைத்து… நடுங்க செய்தது.

“ஏன் இன்னைக்கு இப்படி எல்லாம் எண்ணப் புரளல். ஒருவேளை இது நிஜமா நடந்துட்டா….?!”

அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுளே நேரில் வந்தாலும்… கடவுள் என்று நம்புவதற்கு ஒன்று வேண்டுமே. அதை தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறார். புலி அடிச்சான் பாறையைத் தாண்டி விட்டார். சோலையில் இருந்து…. “சொல்லு சொல்லு… வந்து சொல்லு” என்பதாக சிணுங்கிக் கொண்டே ஓடி வரும் ஓடையைத் தாண்டி தேயிலை மரம் ஒன்றின் பின்னால் நின்று எதிரே வந்து….. கொண்டை ஊசி வளைவில் வளைய போகிற சாலையையே பார்த்தார். நெஞ்சுக்குள் இந்த மொத்த வாழ்வின் ஒலிப்பான் சத்தங்களும் துடித்தன.

“என்ன பண்ண போற….?” என்ற கடவுளின் ரகசிய குரல்…. இன்னமும் காதோரம் காற்றாட்டியது. தேயிலை மரம் அசையாமல் காட்சிக்கு சாட்சியாக நின்று கொண்டிருந்தது.

கடவுளை சந்தேகிப்பது பற்றி பிறகு யோசிக்கலாம். மனிதனை காப்பாற்றுவது பற்றி தான் இந்த பதற்றம். கடவுள் சமிக்கை காட்டின நேரத்துக்கு இந்த இடத்துக்கு இப்போது பேருந்து வந்து திரும்பியிருக்க வேண்டும். கடவுள் காட்டிய காட்சியின்படி…. இதோ அந்த கிறுக்கர்கள் தாங்கள் தான் பைக்கையே கண்டு பிடித்தோம் என்ற கொண்டாட்டத்தோடு வந்து விட்டார்கள். மன கண்களில் தெரிந்த அதே இளைஞர்கள்.. அதே பைக். கடவுள் காட்டி கொடுத்தது சரிதான். பேருந்து வந்திருந்தால்… இருவரும் பரலோக ராஜ்யத்துக்கு பக்காவாக பார்சல் தான்.

“டேய் தம்பிகளா கொஞ்சம் நில்லுங்க…” என கத்திக் கொண்டே நடு சாலைக்கு ஓடினார்.

யார் அது என்பது போல பார்த்த பைக்காரன் அங்கும் இங்கும் தடுமாறி திசைமாறி மூச்சிரைத்து… அப்படி இப்படி ஒரு வழியாக வண்டியை நிறுத்தினான். ஹேண்டில் பார் முகம் திரும்பி கவிழ்ந்து கொண்டது.

“யாரு இது…! பொள்ளாச்சி பஸ் ட்ரைவர் மாதிரி இருக்கே…” என்றான் அவரையே கூர்ந்து பார்த்த பின்னால் அமர்ந்திருந்தவன். அவன் வாய் குழறியது.

அசையாமல் அவர்களையே ஒரு கணம் உற்றுப் பார்த்தார்.

” என்னண்ண்ணா…. என் விஷயம்…என்ன வேனும்….”- வாய்க்குள்ளாகவே கேட்டார்கள். கண்கள் சுழன்று சுழன்று பம்பரம் தேடின.

இருங்க என்பது போல கையை காட்டி ஜாடை செய்து விட்டு…. வேகமாய் திரும்பி அங்கும் இங்கும் தேடினார். சாலையோரம் தேடிய பார்வை… அப்படியே ஒவ்வொரு மரமாக ஏறியது. தேயிலை மரம் தாண்டி… அப்படியே சவுக்கை மரத்துக்கு தாவியது தீர்க்கமான அந்த பார்வை.

“ஆ… இது தான் சரி..” என உள்ளே உந்தி தள்ள.. ஒரு எகுறு எகிறி சவுக்கை விளாறு ஒன்றை ஒடித்து கையோடு பிடித்தபடி இறங்கினார். இறங்கிய வேகத்தில் இருவரையும் மாறி மாறி விளாச ஆரம்பித்தார்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத இருவரும் நிலை குலைந்தார்கள். அனிச்சையாக பைக்கை விட்டு இறங்கியும் விட்டார்கள்.

“யார்னா நீ… என்ன.. ஏன்…” என்பதற்குள் அடி சும்மா சகட்டுமேனிக்கு விழுந்து கொண்டிருந்தது. கையைக் கொண்டு அடியை தடுக்கும் விதமாக போதும் போதும் போல காலை உதறிக் கொண்டிருந்தார்கள்.

“ஹெல்மெட் எங்க… ஹெல்மெட் எங்கடா…” என்று ஓட்டியவனுக்கு விழுந்த அடி… “லைசன்ஸ் காட்டு” என்று தொடர்ந்து விழுந்தது.

“அவன்கிட்ட லைசன்ஸ் இருக்கா இல்லையானு கேட்டயா…?” என்று… பின்னால் அமர்ந்திருந்தவனுக்கும் விழுந்தது.

“இந்த வயசுல குடிக்கவே கூடாது. இதுல குடிச்சுட்டு வண்டி வேற ஓட்டுவீங்களா…” சவுக்கை விளாறு பிய்ந்து தொங்கியது.

“எதுக்குடா இவ்ளோ வேகம்… எதுக்கு….? வளைவுல ஹாரன் அடிக்கணும்னு தெரியாதா… ஏன் அடிக்கல…? பைக்ல கண்ணாடி எங்க.. கண்ண்ணாடி…. எங்க…?”

அடி… முதுகு தோல் பியிந்திருக்கும். அடிச்ச போதையெல்லாம் தேயிலை மரத்துக்கு உரமாகி இருக்கும்.

“ஐயோ… அயோ….” என கத்தி தடுமாறி….” அதெல்லாம் கேக்க… நீங்க யாரு….. இருங்க பசங்கள கூட்டிட்டு வந்து..”

அதுக்கும் அடி.

“யாருன்னா கேக்கற… யாருன்னா கேக்கற…. நான்…நான்….. உங்க அப்பா…. உங்க மாமா….. உங்க சித்தப்பா….. உங்க பெரிப்பா….உங்க ஊர்க்காரன்… ஏன் உங்க ஊர் சாமின்னே வச்சுக்கோயேன்….”

முட்டிக்கு கீழே விளாறு பதித்த முத்தங்கள் கால சுவடுகள் தான் இனி அவர்களுக்கு.

போதை தெளிந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற சிந்தனையில்… தேயிலை மரத்தின் அடியே சோர்ந்து அமர்ந்து விட்டார்கள். வந்த வழியே வேகமாய் அங்கிருந்து கிளம்பி இருந்தார் டிரைவர் மூர்த்தி.

அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து அரை மணி நேர தாமதமாக… உள்ளிமலை கொண்டை ஊசி வளைவை வெகு கவனத்தோடு கடந்தது.

பக்கவாட்டில் தேயிலை மரத்தடியே அமர்ந்து அடிபட்ட இடத்துக்கு மண் பூசி எரிச்சல் அடக்கிக் கொண்டிருந்தார்கள் பைக்கான்கள். எந்த சேதாரமும் இல்லாமல் பைக் ஓரமாய் நின்றிருந்தது.

முகத்தில் சாந்தம். மனதில் நிம்மதி. இதயத்தில் மெல்லிசை. மூர்த்தியின் கண்கள் தேயிலை மரத்தடியே அமர்ந்திருக்கும் இருவரையும் கருணை பொங்க மேவியது.

உச்சியில் கை அசைத்துக் கொண்டிருந்த சாமியை மூர்த்தி பார்த்தாரா என்று தெரியவில்லை.


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x