8 December 2024
Kaviji11

த்தனை நேரம் அமர்ந்திருந்தான் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் அத்தனை நேரமும் அமர்ந்து தான் இருந்தானா என்றும் தெரியவில்லை. மதிய நேரத்தில் ஒரு மயான அமைதி இருக்கிறது. அதில் மாற்றி யோசிக்க முடியாத தூரங்கள் கிட்டத்திலேயே சுழலுவதை உணர்ந்தான். அழுகைக்கும் அமைதிக்கும் இடையே சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத தகிப்பு அவனை ஆட்டுவித்தது.

ஒற்றைக் காக்கை அங்கும் இங்கும் சுற்றி அலை மோதுவதை அவன் கவனம் திரும்பிய நொடி காட்டி கொடுத்தது. என்ன செய்வதென தெரியவில்லை. திரும்பி பார்த்தாலும் திரும்ப பார்த்தாலும் ஒன்றும் புலப்படவில்லை. தூரத்தில் இருந்து சுற்றத்தில் எங்கும்… எங்கும் ஒரு மனிதன் இல்லை. யாரிடமாவது சொல்லி அழ வேண்டும். அல்லது அழுவதற்கு தகுந்த வெற்றிடத்தை ஆட்கொள்ள வேண்டும். அவன் அங்கேயே சுற்றி சுற்றி நகர்ந்தான். அவன் யுகமற்ற தோரணையை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் முகமே வளைந்து நெளிந்து அவன் உடலை தழுவுவது போன்ற கற்பனையை ஒரு கட்டத்துக்கு மேல் உணரவும் முடியவில்லை. நாளொன்று நகர்ந்திருக்க வேண்டும். இனியும் யாரும் வருவார்கள்.. யாராவது வருவார்கள்.. யாராவது வந்து தானே ஆக வேண்டும் என்று இருக்க முடியாது. ஏதாவது செய்ய வேண்டும்.

எந்த நாளின் எந்த மதியம் என்று சொல்வதற்கில்லை. மதிய நேரத்து மயக்கத்தின் நிறம் செம்மண் பூசிக் கொண்டு பரந்து விரிந்து சரிந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது கீழே எட்டி எட்டி பார்க்கும் குணம் முளைத்தவன் போல அவன் உடல்மொழி இருந்தது.

காடும் வானமும் அந்தரத்தில் தொங்குவது போல இருக்க… மண்ணும் காற்றும் சந்தனத்தில் கலந்தது போன்ற நிறம்… ஏமாற்றும் உவகையை அவனொரு அந்திக்குள் முழுங்கி விட வேண்டும். அப்படித்தான் பார்த்தான். எழுந்து நடக்க ஆரம்பித்தான். தொடுவானத்தில் எறும்பூர்வதாக தூரத்தில் ஒரு கற்பனை நம்பலாம். காட்சிக்குள் நுழைந்தவன் காற்றுக்குள் மிதந்தான்.

என்ன இந்த உலகம்… கொஞ்சம் காட்டுக்குள் நகர்ந்து விட்டால் மூச்சு விட பயந்து விடுமோ. ஒரு மனிதனையும் காணவில்லை. பறவைகள் அற்ற மரங்கள் பயப்படுத்தின. சிறகற்ற பறவைகள் பார்க்க சகிக்கவில்லை. எல்லாமே கனவு மாதிரி இருந்தது. ஒன்றுக்கொன்று ஒட்டாமல்… ஒன்றுக்கொன்று பிரியாமல்… ஒன்றோடு ஒன்றாக ஒன்று அதுவும் அவனாக அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஒற்றைக் காக்கை… குரல் மாற்றி எதுவோ சொல்லிக் கொண்டிருந்தது. வட்டமடிப்பதற்கு பதிலாக சதுர செவ்வகம் செய்து கொண்டிருந்தது. வானத்தில் ஒரு ஓட்டையென… விழுந்து விட்ட கோட்டையென அவன் நிற்கும் இந்த காட்டின் தொங்கல் இருந்தது. நடந்தான். நகர்ந்தான். ஓடவும் செய்தான். இதை முன்னமே செய்திருக்க வேண்டும். சரி இப்போதாவது செய்ய தோன்றிய நினைவலைகளுக்கு நன்றிகள் சொன்னான். ஆனாலும் உள்ளே துக்கம். ஒரு துக்கம் இன்னொரு துக்கத்தை தூக்கி பிடித்துக் கொண்டே அவன் தோளில் சுமையைக் கூட்டியது.

இந்த மனிதர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.

காட்டுக்குள் சுற்றுலா வரும் ஒரு குடிகாரனையும் காணவில்லையே. புதருக்குள் குடி புகுந்திருக்கும் ஜோடி புறாக்கள் ஒன்றைக் கூட காணவில்லையே. சரி அவன் எப்படி இங்கு வந்தான். அந்த மண்ணாங்கட்டியும் மறந்து போயிருக்கிறது.

அவன் இன்னும் வேகமாய் நடந்தான். காட்டுக்குள் திசை இருக்காது என்று நடக்க நடக்க உணர முடிந்தது. காட்டுக்குள் தொலைந்து போவதும் கடலுக்குள் கரைந்து போவதும் ஒன்றுதான். காலத்தின் சுவடுகளாகி விடுவோம். வீட்டுக்கு கிடைக்க மாட்டோம். திடும்மென எழுந்த வீட்டின் நினைப்பில் விழிகள் எரிந்தன. இதயம் உரிந்தது.

அழுகையைத் துடைக்க கைகள் எழவில்லை. கைகளைப் பற்றி ஆறுதல் சொல்ல காற்றுக்கும் வலிமை இல்லை. வானம் தான் தெய்வம். காட்டிக் கொடுக்கப்பட்ட ஆள் ஒற்றைப் பாலத்தில் அமர்ந்து பூமி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சோகம் அவனோடு போல.

கடவுளே நன்றி. அழுத கண்கள் சிரித்தன. முகம் இரைக்க அவன் அருகே சென்ற போது… எப்படியும் வீடு சேர்ந்து விடும் நம்பிக்கை வந்தது.

“யார்ரா இது… இந்த காட்டுக்குள்ள…?” என்றபடியே தலை நிமிர்ந்து பார்த்த ஒற்றைப் பாலத்துக்காரன்… ஆச்சரியப்பார்வையோடு என்ன என்பது போல கண்கள் சிமிட்டினான்.

பேச்சு குழற அவன் சொல்லி முடிக்கையில் எங்கிருந்தோ வந்த காற்று அவர்களை சுழன்று மணல் அள்ளி வீசியது. செம்மண் பூமியில் சித்திரம் உதிர்ந்ததாக அந்த நேரத்து காட்சி அங்கே அலைந்தாடியது.

அப்படியா விஷயம் என்று கண்கள் விரிந்தவன்… சரி வா என்று அவனோடு அவன் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான். வந்த வேகத்தில்… ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இப்ப என்ன செய்வது என்பது தான் பாலத்துக்காரனின் முகமும் யோசித்தது.

“நாம ஒன்னும் பண்ண முடியாது…. சரி வா.. எங்க ஊருக்குள்ள போய் எங்காளுங்ககிட்ட சொல்வோம் ” – சொல்லிக்கொண்டே வேகமாய் வேறொரு தடத்தின் வழியே கண்டுபிடிக்காத ரயிலாக தடதடத்தான். பின் தொடர்ந்தவனுக்கு அது ஒன்று தான் வழி.

வேகமாய் சென்றவர்கள் நின்ற இடத்தில் இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… மாசமாக இருந்த ஆலமரம் அசையாமல் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

“யார்ரா இது… புதுசா….!” என்று இருவரில் ஒருவர் கேட்க… அதெல்லாம் இருக்கட்டும்… என்று கண்ட காட்சியை விவரித்தான்.

“என்னையா இப்பிடி சொல்றீங்க… ஏய் யப்பா… பார்த்து கவனமா இருக்க கூடாது..? சரி எந்த ஊரு நீ.. இங்க எப்படி வந்த…!’ கேட்டார்கள்.

அவனுக்கு அழுகை தான் வந்தது. வீட்டுக்கு போக வேண்டும் என்று முனகினான்.

“சரி சரி.. வீட்டுக்கு போலாம். அழாத. சூதானமா இருக்க வேண்டிய பசங்க… இப்பிடி வந்து மாட்டிக்கறீங்களே….”

“யோ பெருசு… வியாக்கியானம் பேசற நேரமா இது. ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாரு….?” என்றான் ஒற்றைப் பாலத்துக்காரன்.

மூவரும் அவனை அழைத்துக் கொண்டு ஊருக்குள் செல்ல… ஊரே கண்கள் விரிந்து பார்த்தது.

இந்த காட்டுக்குள் இப்படி ஒரு ஊரா என்று அவன் அதிசயித்தான். ஆளாளுக்கு புது ஆளை வரவேற்றார்கள். விசாரித்தார்கள். என்ன விஷயம்… எங்கிருந்தாம் என்று பல தரப்பட்ட விசாரிப்புகள். பார்வைகள்.

பெருசுக்கெல்லாம் பெருசுக்கு விஷயம் போக…

“எப்பா… நாம என்ன பண்ண முடியும். தெரிஞ்சு தான் பேசறீங்களா… காடுங்கறது தனி உலகம். இங்க வந்து மாட்டிக்கிட்டா.. அப்புறம் வெளிய போறது… முடியாத காரியம். இப்ப என்னாச்சு. பேசாம இங்கயே இருந்தற வேண்டியது தான. அதான் நாமெல்லாம் இருக்கோம்ல…. என்னப்பா சொல்ற…?” என்றது.

அவன் அழுகையின் சத்தம் ஐயோ ஐயோவென ஓங்கியது. அவன் உடல்மொழியில் இருந்த ஓங்காரம் பார்க்க பாவமாய் இருந்தது.

“பெரியவரே என்ன சொல்றீங்க..! அந்த பையன் பயந்து போயி இருக்கு. வீட்டுக்கு அனுப்பி வைக்கிறதுதான் முறை….” படித்தவள் மாதிரி இருந்த ஒருத்தி… உறுத்தாமல் பேசினாள்.

“அட ஆத்தா… கொஞ்சம் கம்முனு இரு. இங்க… எப்பிடி எங்கன்னு போயி வழிய கண்டுபிடிக்கிறது….” கூட்டத்தில் இருந்து ஒரு குரல் யோசனைக்கு வித்திட்டது.

“வழக்கம் போல நாமதா ஏதாவது செய்யணும்…” என்றான் வாலிபன் ஒருவன்.

சற்று நேரம் அங்கே அமைதி அல்லாடியாது. உலகத்தில் இப்பிடி எல்லாம் இடம் இருக்குமா என்று புதியவன் யோசித்தான். பார்த்தான். பயம் அவனுள் பந்தொன்றாய் ஏறி இறங்கி சுழன்று கொண்டே இருந்தது. இல்லாத வெளிச்சம் திடும்மென சுழன்று இல்லாத இருளை காட்டி விட்டு அணைந்து கொள்வது போல… தெரிந்த காட்சியெல்லாம் பிரமையா பிரேமையா என்று புரியவில்லை.

புதியவன் புத்திக்குள் கால் வழுக்கிய திடும் சத்தம் பாறையில் விழுந்து கொண்டே இருந்தது.

இப்போது நிறைய காக்கைகள் வதனத்தைப் பிடிக்க தொங்கி கொண்டிருப்பது போல அங்கே வானத்தை பிடித்து தொங்கி கொண்டிருந்தன. கழுகின் சத்தம் தூரத்தில் மினுங்குவதை பார்க்க நன்றாக இருந்தது.

யோசித்து முடிவுக்கு வந்து விட்டார்கள். முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற தீர்க்கம் கொண்ட கண்களில் பெருமூச்சு. சொல்லி வைத்தாற் போல திடும்மென அங்கிருந்து வந்த மழைக்கு இங்கிதம் இல்லை. சிந்து பாடும் குரலை அறுத்து போடும் அலப்பறை அது.

“சரி நீங்க உள்ள போங்க. நாங்க என்ன ஏதுன்னு பாத்துட்டு வர்றோம்” என்று பெருசு உட்பட நால்வர் அணி மழைக்குள் நனைந்தபடியே மேற்கே பார்த்து பயணிக்கத் தொடங்கியது.

இத்தனை நேரம் அழுது தவித்த புதியவனுக்கு என்னவோ ஆறுதல் இது. அவர்களோடு அந்த அறைக்குள் அமர்ந்திருப்பது கொஞ்சம் தைரியத்தைத் தருவதாக இருந்தது.

வெளியே காற்றும் மழையும். எதுவோ எங்கிருந்தோ எங்கேயோ அடித்துக் கொண்டு போகிறது. ஒருவரையொருவர் ஆறுதலாக பார்த்துக் கொண்டவர்கள்… ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. இது என்ன மாதிரி அறை என்றும் புரியவில்லை. ஒரு குகைக்குள் அறை செய்தது போல இருந்தாலும்.. உள்ளே பரவிய சூடு ஒரு வகை ஆசுவாசத்தைக் கொடுத்தது. கதவைத் திறந்து கொண்டு எது வந்தாலும் இவர்களைத் தாண்டி தான் தன்னிடம் வர முடியும் நின்ற நம்பிக்கை.. அவனை அச்சத்தில் இருந்து மீட்டுக் கொண்டிருந்தது. ஒரு கூட்டமாக அந்த அறையில் இருப்பது ஒரு அந்நியோன்ய ஓவியம் போல உணர்ந்தான். இதே போல தன் வீட்டில் சிறு வயதில் மின்சாரம் இல்லாத ஒரு மழை நாளை கடந்த நினைவு அவனுள் வெம்மையை கிளர்த்தியது. தாத்தாவைத் தாண்டி… அப்பாவைத் தாண்டி… அம்மாவைத் தாண்டி… அக்காவைத் தாண்டி… அண்ணன்களைத் தாண்டி தான் தன்னிடம் அந்த இரவின் சத்தம் வர முடியும் எனும் போது அத்தனை பயத்திலும் ஒரு குதூகலம் உணர்ந்ததை நினைத்துக் கொண்டான். உறவுகள் கூடி இருக்கையில் இருக்கும் திகிலும் கூட தித்திக்கும் தான்.

அவன் நினைவை அசைத்தது….கதவின் கிழிசல் வழியே உள்ளே நெளிந்து நெளிந்து ஊடுருவும் காற்றின் குளுமை. அது குத்தீட்டி கொண்டு குத்துவதாக இருக்கிறது. ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என காற்றின் குரலில் கழுத்தை இறுக்கிய இரவின் அணுக்கம்.

ஒருவரோடு ஒருவர் நெருக்கி பழுப்பு மஞ்சள் மங்கிய வெளிச்சத்தில் ஒரு நிம்மதி மிதந்து கொண்டிருந்தது. மனதுக்குள் இருந்த பயம் போய்… இதயத்தில் இருந்த ஈரம் கசிய தொடங்கி விட்டது. இந்த வாழ்வு கொண்ட உறவுகளின் சிறகுகள் அவன் நெற்றியில் சிறகடிக்கும் காட்சி அவனை நடுங்க செய்தது. ஊரும் உறவும் வீடும் சொந்தமும் எத்தனை பலம் என்று அவன் விசும்பினான். அவனை ஆற்றுப் படுத்தினார்கள். போனவர்கள் எப்படியும் காரியத்தை சாதித்து தான் வருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடையே கண்கள் சிமிட்டன. புதியவனுக்கு அவன் வீட்டில் இருப்பது போன்று தோன்றிய போது சுவரோரம் சரிந்து சூடாய் ஆனான். இத்தனை நேரம் இருந்த குளிர் அவனை விட்டு அகன்றது. அவன் தலையை தடவிக் கொடுத்தவளுக்கு அவன் வயது தான் இருக்கும். ஆனாலும் ஆதுரம் அந்த தடவலில்.

“எல்லாமே அனுபவம் தான். பயப்படாதா. இந்த காற்றும் மழையும் கவன ஈர்ப்பு தான். காதுள்ள கண்கள் கவனிக்கும்…” என்று கிசுகிசுத்தாள்.
எது வந்தாலும்…. பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதான சூழல்மொழியில் சின்னஞ்சிறுசுகள் ஒடுங்கி குறுகி… இருக்கும் சந்துகளில் எல்லாம் சரிந்து கொண்டார்கள். அது ஒரு விளையாட்டு மாதிரி. ஒன்றுக்கொன்று ஆதரவு போன்ற அம்சம் அது. பார்க்கவே ஒரு பிரெஞ் ஓவியம் போல இருந்தது. மின்சாரமற்ற இரவில் என்ன மாதிரி வெளிச்சம் இது. மனதுக்குள் ஒளிர்வது என நினைக்கையிலேயே இத்தனை நேரம் இருந்த துக்கம் அவனிடம் இல்லை. பாதுகாப்பாக உணர்ந்தான். ஆனாலும் வெளியே வீசும் காற்றின் குரல்… அவனை மீண்டும் சிந்திக்கத் தூண்டியது.

*

“இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்துல யார் வருவா.. நாம இன்னும் கொஞ்சம் வெளிய போகணும்..” என்றவனை… பெருசு அமைதிப் படுத்தி கண்களாலே சற்று தூரம் காட்டியது. ஒரு குட்டி பேருந்து மழைக்குள் சித்திரம் திட்டியபடியே வெளிச்சத்தை உமிழ்ந்து உமிழ்ந்து மிதந்து கொண்டிருந்தது. இரவுக் காட்டுக்குள் எல்லாமே மிதப்பது போல தான் இருக்கிறது. கண்கள் கூர்ந்தவனுக்கு காட்சி வலை வீசியது.

‘இந்த நேரத்துல….!’

“விளங்கா பயலுக… டூர் போறேன்னு வந்துருப்பானுங்க…” என்று சொல்லி….” எப்டியோ ஆள் கிடைச்சிருக்கு… வேலையை ஆரம்பிங்க….” என்றது பெருசு.

மழை வலுத்தது. காற்றின் குரலில் கழுத்து கிழிந்தது. பேருந்து ஆடி ஆடி போய்க் கொண்டிருக்கிறது. உள்ளே “அசைந்தாடும் காற்றுக்கும்…அழகான பூவுக்கும் காதலா….” பாடல் முணுமுணுப்பு காற்றோடு கலந்து காதின் நுனியில் தொங்கிக் கொண்டிருப்பது கேட்கிறது.

“அட இதெல்லாம் பத்தாதப்பா… இன்னும் கொஞ்சம் காத்து ஊதுங்க…” என்றது பெருசு.

நால்வரில் ஒருவன் வாயை குவித்து காற்றை பேருந்தை நோக்கி இன்னும் வேகமாய் பெருக்கெடுத்தான். அதே நேரம் நால்வரும் காற்றோடு காற்றாய் நகர்ந்து பேருந்துக்கு அருகே சென்று ஒற்றைப்பாலத்தில் அமர்ந்து விட்டார்கள்.

“இப்பெல்லாம் எவன் பயப்படறான். புழுங்கி சாகர வாழ்க்கைல பிசாசுங்க மாதிரி இப்பிடி காட்டுப்பக்கம் வந்தர்றானுங்க..”

“சரி சரி… தத்துவமெல்லாம் இருக்கட்டும். உள்ள பூந்தரலாம்….”

நால்வரும் காற்றினூடாக பேருந்து ஜன்னல் வழியே உள்ளே புகுந்து விட… பேருந்து சட்டென நின்று விட்டது. அதே பழைய டெக்னிக்.

” நடுக்காட்டுல பஸ் நின்றுச்சே… எவனுக்காவது பதற்றம் இருக்கா பாரு. பாதி பேரு மப்புல பிளாட். மீதி பேரு காதுல பாட்டு கேட்க. அதுல பாதி பேரு மொபைல்ல கண்ண மாட்டி செத்த மாதிரியே உக்காந்துருக்கானுங்க…”

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒன்னும் பண்ண முடியாது போல. அடேய் மயிராண்டிகளா எங்கள கவனிங்கடா…

வாய் மட்டும் தான் அசைகிறது. குரல் பேருந்துக்குள் வெளியே வரவேயில்லை. பெருசு நமட்டு சிரிப்பை களுக்கியது.

“இத்தா பெரிய காட்டுல… அடிக்கற காத்துல… என்னவோ இங்க தப்பா இருக்கேன்னு ஒருத்தனுக்காது தோணுதா.. இடியட்ஸ்…” நாக்கை துருத்திக் கொண்டு ஒருவன் முன்னால் சென்று முகத்தை ஆட்டி ஆட்டி பயமுறுத்தினான்.

அவன் எதிரே என்னவோ வந்து நம்மை என்னவோ செய்கிறதே என்று அவனால் உணரவே முடியவில்லை. உணர்வு செத்த பயலுக.

ஓட்டுனர் என்ஜினில் கோளாறு என்பதாக புரிந்து கொண்டு சரி செய்ய காற்றைத் திட்டி.. காட்டைத் திட்டி… வீட்டில் இருக்கும் அவர் பொண்டாட்டியைத் திட்டி… என்ன மனுஷனுங்க இவனுங்க. சூடு சொரணையே இல்லாம இருக்கானுங்க…. பேசாம பஸ்ஸ பள்ளத்தாக்குல உருட்டி விட்ரலாமா…” கோபம் கொண்டவன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அரூபம் காட்டினான்.

“உஷ்ஷ்…. பேசாம இருங்க…” என்று பெருசு ஜாடை காட்டியது. சுற்றுலாக்காரன்களில்… ஒருவன் கண்களில் அசைவு. மூடியிருந்தாலும் அது இடது வலது என்று நகர்ந்தபடியே இருந்தது. நால்வரும் கூர்ந்து கவனித்தார்கள்.

*

ஜானி தன் மனைவியோடு டூர் வந்திருக்கிறான். புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் மனைவி. அவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் இருந்து அந்த நிழல் வட்டத்தை தாண்டி யாரோ கத்துவது கேட்கிறது.

தலைக்குள் ஆழத்தில் இருந்து எழும் குரல் அவன் காதுக்கு வந்துசேர நேரம் பிடித்தது.

“இப்டி பாருப்பா…..இப்டி…இப்டி….” நிலா வெளிச்சத்தை தன் காதல் மனைவி முகத்தில் பொங்க விட்டு போஸ் பார்த்துக் கொண்டிருந்தவனை அந்த குரல் மீண்டும் தொந்தரவு செய்தது. கிளிக்குவது அனிச்சையாய் நிற்க… கழுத்து திரும்பி மேலே பார்த்தது. அவர்கள் நிற்கும் இடம் சரிவான புல்வெளி. சுற்றிலும் பனித்துளி படர்ந்த சில்லிருப்பு. இரவும் நிலவும் கொட்டமடிக்கும் புல்வெளி தேசம். ஒற்றை மரம் கண்டதும் உற்சாகம் பொங்க போட்டோ பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். திரும்பிய வேகத்தில் தூரத்தில் தெரிந்த சிறு வெளிச்சம் அந்த குரலின் முகத்தை அசைத்துக் காட்டியது.

“என்ன சொல்றான்…?” என்று யோசித்து கண்கள் கூர்ந்து கவனிக்க…

“அங்க நிக்காத… மேல வா… நிக்காத… மேல வா…” அவன் கத்திக் கொண்டிருக்கிறான். கத்துகையில் புடைக்கும் அவன் குரல் மேலிருந்து கீழே வருகையில் உடைந்து நொறுங்குகிறது. நரம்பு துடிக்கும் கழுத்தில் இருந்து… காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றம் உணர முடிந்தது.

என்னவோ சீரியஸ். புரிந்து விட்டது. ஆனால் ஏன் நிக்க கூடாது…” கண நேர யோசனை. அதன் வழியாகவே பழையபடியே முன்னால் திரும்பினான்.

திக்கென்று ஆனது. மனைவியைக் காணவில்லை.

அய்யயோ என்று சுதாரிப்பதற்குள்… கால் பெருவிரலை ஊன்றி ஊன்றி குதித்து குதித்து ஒரு பெண் வேகு வேகு என நடந்து வந்து கொண்டிருக்கிறாள். என்ன கருமம் இது என்று இன்னும் கூர்ந்து பார்க்கையில்.. அவள் முகம் வாய் வரை சரியாக இருக்கிறது. அதற்கு மேல் கிழிந்து உயரமாக இருக்கிறது. உயரம் என்றால் முழங்கை அளவு உயரம். கையில் இருந்த கேமரா எப்போது நழுவியது என்று தெரியவில்லை. கால்கள் மேல் நோக்கி எப்போது ஓடத்தொடங்கின என்றும் தெரியவில்லை. ஓட ஓட சறுக்கி விடும் பனி துளிகள் முளைத்த புல்வெளி சதி செய்தது. புல்வெளிகளின் சிலிர்ப்புகள் திடும்மென வளர்ந்து கழுத்துடைத்து கதறுகின்றன. செத்தொழி செத்தொழி என்று கூக்குரலிடும் கழுகு… பக்கத்தில் அமர்ந்திருந்த மரத்தில் விரிந்திருந்தது.

என்னடா நடக்குது. கிறுகிறுக்கும் உடல்மொழியில் தவியாய் தவித்து ஓடுகிறான். தொண்டை அறுக்கும் சத்தத்தோடு அந்த பெண் தாவி தாவி நடந்து வந்ததை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அலறி அடித்து மேலே ஓடுகிறான். நிழல் வட்டம் தாண்டிய பிறகு அந்த பிசாசு பிரேக் அடித்தாற் போல நின்று விட்டது.

நின்று மூச்சிரைக்க வாயை திறந்து திறந்து மூடியது. மலைப்பாம்பின் வாய் திறந்து திறந்து மூடுவது போல.

ஓரளவிற்கு புரிந்து கொண்டான். மேலே நிற்காதே என்று கத்தியவன் ஊர்க்காரன். உதவி தான் செய்திருக்கிறான்.

“பயப்படாதீங்க. இந்த வட்டம் தாண்டி அது வராது….” மெல்ல இறங்கி அவன் அருகே வந்த உதவியவன்… கண்கள் நடுங்க தொடர்ந்தான்.

” இந்த இடத்துல பகலே இருக்காது. எப்பவும் ராத்திரி தான். எங்களுக்கு தெரியும். இந்த வளையத்தை தாண்டி உள்ள யாரும் போக மாட்டோம். புதுசா வர்றவங்க வந்து இந்த மாதிரி மாட்டிக்குவாங்க…”

ஜானியின் கண்களில் பயம். அழுகை. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டதை நினைத்து அலறுகிறான். மனைவியை எப்படி கண்டுபிடிப்பது.. எங்க போயிருப்பா… இதென்ன பேய் பிசாசுன்னு… ஒன்றும் விளங்கவில்லை. நின்றபடியே அங்கும் இங்கும் அலை மோதுகிறான்.

அந்த இடமே ஒரு வளைவில் இருள் குவிந்து கிடப்பது போல இருந்தது. வட்டத்தில் இருந்து எழும் பனி துகள்கள்.. இரவை கொப்பளித்து துப்புவது போல இருக்கிறது. எல்லாம் மாயம் போல இருக்கிறது. மாயத்தின் மையத்தில் மனம் கழன்று உருளவது போல நம்புகிறான். இன்னமும் அங்கே அந்த விளிம்பில் நின்று வாய் கிழிந்த முகம் உயர்ந்த அந்த பெருவிரல்காரி பார்த்துக் கொண்டிருப்பது அச்சத்தில் உறைய வைக்கிறது. அங்கிருக்கும் அவள் கண்கள் அவனை ஊடுருவி துளைப்பதை அவனால் உணர முடிகிறது. மூச்சு வாங்கியது.

திக்கென ஆஹ் என மூச்செடுத்து விழித்தான். அவன் முகம் நடுங்கியது. உடல் வியர்த்து கொட்டியது. கால்கள் திடு திடுத்தன. அவன் கண்கள் அங்கும் இங்கும் பேருந்துக்குள் அலை மோதின. பேயறைந்தவனாக பதறினான்.

பெருசு முகம் சிரிக்க… “சூப்பர்டா தம்பி… உன் கனவு வேலை செஞ்சிருச்சு போல. பொணம் மாதிரி தூங்கினவனை எழுப்பிட்டியே…”.

“என்னவோ இவன் ஒருத்தன் எழுந்துகிட்டான்… பாரு எவனாவது அசையறானுங்களா… இப்பெல்லாம் ஒருத்தனுக்கும் பேய் பயம் இல்ல. இந்த லாரன்ஸ்னு ஒருத்தன் பேய் படமா எடுத்து பேயை பிரெண்டாக்கி விட்டுட்டான். அதான்… சரி சரி தலைவன் முழிச்சிட்டான். அடுத்து என்ன….” நான்கில் சின்னது சிரித்துக் கொண்டே சிலாகித்தது.

“அடுத்து இவனை கீழறக்கி அங்க கொண்டு போகணும்…”

“கீழ இறங்குவானா…?”

“ஏன் இறங்க மாட்டான். அவனுக்கு என்னவோ உணர்ந்துருச்சு. பாரு.. முழிக்கறத….”

ஜானி எதையோ உணர்ந்து விட்டான். கனவில் காணாமல் போன மனைவியின் கண்களில் தடுமாறினாள். இன்னும் கல்யாணமே ஆகாத தனக்கு வந்த இந்த கனவை திரும்ப திரும்ப நினைத்தான். அதே இடம். அதே சுற்றளவு. கனவில் காணாமல் போன அவளின் குரலை இப்போது கேட்க முடிந்தது. அவன் கண்கள் கூர்மையாகி ஜன்னல் வழியே எதையோ தேடின. அதே நேரம் பேருந்துக்குள் அங்கும் இங்கும் சுழன்றன. என்னவோ சரி இல்லை என்பதை அவன் மூளை உணருகிறது. யாவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். ட்ரைவர் கூட அயற்சியில் கவிழ்ந்திருந்தார்.

கூட நின்று அவனையே உற்று நோக்கி கொண்டிருந்த நான்கில் ஒன்று செய்யும் சித்து காட்சிக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. நமட்டு சிரிப்பு வேறு. ம்ம்ம்.. தேடு தம்பி தேடு.. என்று இல்லாத குரலால் இழுத்து இழுத்து சொன்னது அவர்களுக்குள் கேட்டது. இவனுக்கு கேட்கவில்லை.

பெருசு தட்டிக் கொடுத்தது.

“இன்னும் இன்னும்… அழுத்தம் குடு…”

“ஸ்ஸ்ஸ்… சத்தம் போட்டு பேசாத….”

“ஆமா பேசினா மட்டும் இவனுங்களுக்கு கேட்றவா போகுதா… இவனுங்க கவனத்தை ஈர்க்கறதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு…. அய்யயோ ” கனவு செய்வதில் வல்லவன்…. இன்னும் பலமாக காற்று ஊதுவதிலும் கவனம் குவித்தான்.

எங்கிருந்தோ அழைக்கும் காற்றில் கசியும் அவன் கனவு குரல் ஜானியை பேருந்தை விட்டு இறங்க தூண்டியது. மெல்ல வண்டிக்குள் பார்த்தான்.

“இவனுக்கு என்னவோ உணர முடியுது. நமக்கு துருப்பு சீட்டு இவன் தான். இவனுக்கு தான் நம்ம அலைவரிசை கொஞ்சமாவது செட் ஆகி இருக்கு…..” பெருசு அர்த்தமாய் தலையை ஆட்டியது. மற்றவர்கள் ஆமோதித்து கூடவே பின் தொடர்ந்தார்கள்.

ஜானிக்கு என்னவோ உணர முடிகிறது. கூட யாரோ இருப்பது போல தெரிகிறது. அவன் கையைப் பற்றி யாரோ இழுத்து போவது போல இருக்கிறது. அவன் முதுகை பிடித்து யாரோ தள்ளுவது போல இருக்கிறது. அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நகர்கிறான். என்னவோ உந்துகிறது. கனவின் வழியே நிஜத்தை பார்க்கும் சுயம் அவனை நிஜத்தின் வழியே கனவை அடையும் மாயையும் உணர்த்துகிறது.

இல்லாத தனது மனைவியின் குரல் எப்படி இந்த காட்டில் என்று யோசிக்கிறான். தலையில்தான் தன் உடல் இருப்பதாக ஒரு பாரம் அவனை அழுத்துகிறது.

அவனையே கவனித்துக் கொண்டு அவனோடு முன்னும் பின்னும் மெல்ல நகரும் நால்வர் அணியும். காற்றையும் மழையையும் கொஞ்சம் கூட்ட வேண்டும் என்று ஊதுகிறவன் முடிவெடுக்க… அடுத்த கணம் காற்று கூடி விட்டது. மழையின் வேகமும் கூடி விட்டது.

“பயந்துகிட்டு பஸ்க்கே வந்தற போறான்… கொஞ்சம் கம்மி பண்ணு” என்று பெருசு கட்டளையிட காற்றும் மழையும் குறைந்து மனைவியின் குரல் அதிகமானது. சட்டென தன் காதருகே கூட எதுவோ வண்டு போல முணுமுணுத்ததை உணர முடிகையில் திக்கென நின்று சுற்றி மெல்ல முகத்தை அசைத்து இரவை பார்க்கிறான். கொஞ்சம் அமைதியா இருங்க என்று அவனின் சைகையை உணர்ந்து மாற்றி மாற்றி ஜாடை செய்து கொள்ளும் நால்வர் அணி திக்கென அசையாமல் அவனை சுற்றி நிற்கிறது. நால்வர் கண்களும் அவன் மீதிருக்க… அவன் கண்கள் இருளில் துழாவுகிறது.

என்னவோ தன்னை சூழ்ந்திருக்கிறது என்று உணர்ந்தபோதிலும்.. கனவில் காணாமல் போன மனைவியைத் தேடி அவன் கால்கள் அவனையும் அறியாமல் அந்த ஒற்றையடியில் நடக்கத் தொடங்கின. அப்பாடா என்று ஆனது அதுங்களுக்கு.

“அப்டித்தான். அதே தான். போ போ… மகராசனா இருப்ப.. போ போயி அவனை கண்டு பிடி. பாவம்யா அது. புதுசு. தடுமாறுது…” மெல்ல மெல்ல அவனோடு நடந்தபடியே பெருசு கண்களைத் துடைத்துக் கொண்டது.

“என்ன கண்ண கசக்கிட்டு… வேலையை பாரு பெருசு. அவனை அப்படியே நகர்த்து. அவன் மனசை ஆக்கிரமி. இன்னும் போக சொல்லு…” போ போ என்று சுற்றிலும் சூழ்ந்து நடந்தபடியே ஆளாளுக்கு வெற்றிடம் உந்துகிறார்கள்.

கனவில் பார்த்த வட்டம். சுதாரித்துக் கொண்டான். கிழிந்து உயர்ந்த முகம். பெருவிரல் பிசாசு. எங்காவது இருக்கிறதா என்று திடு திப்பென அங்கும் இங்கும் சுழன்று பார்த்தான் ஜானி.

“ஐயோ ராசா… அது எங்க வேலை. இங்க அது வராது. நீ இன்னும் கொஞ்சம் போ… சொன்னா கேளு…”

காதுக்குள் என்னவோ கீச் கீச் அலைவரிசை. ரேடியோ ஒலி அலைகள் போல ஆனால் அதில் சொற்கள் வளைந்து நெளிவது போல உணர முடிகிறது. காடும் இரவும் அவனை தேவ தூதனாக்கி இருக்கிறது. காற்றும் மழையும் அவனுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது.

உள்ளிருந்து தோன்றும் நிழல் வழி அவனை இழுத்து சென்றது. பகலே இல்லாத வட்டத்துள் வந்து விட்டான். இங்கு தான்… காணாமல் போனாலே மனைவி.. ஐயோ.. டூருக்கு வந்து தொலைத்து போவேனா… ம்ஹும்… அவன் அகம் தேடியது. தலை தவழ்ந்தது. இரவின் குளிர் விலகி விலகி அவனை நகர்த்தும்படி மாயம் செய்யும் அதுகளுக்கு… மனிதர்களோடு பேசுவதற்கு நேரடியாக சொற்கள் இல்லை என்பது தான் போராட்டம்.

“பாவம் அந்த புதியவன். என்னாச்சோ.. ஏதாச்சோ. வீட்டுக்கு போகணும்னு துடிக்கறான்பா. உடம்புங்கறது தான் அடையாளம். அதுல உயிர் இல்லனா கூட… அது அதுக்கு சொந்தமான வீட்டுக்கு போயிரணும். பையன் செத்துட்டான்னு தெரிஞ்சா கூட வார துக்கம்… மாச துக்கம் தான். பையன காணோம்ங்கறது கால துக்கம்…”

பெருசு வழக்கம் போல முனகியது,

மனசு விடாம வழி காட்டு. இன்னும் கொஞ்ச தூரம் தான். பாலத்தில் அமர்ந்திருந்தவன் வழி இழுத்துக் கொண்டே முன்னால் சென்றான். நிழல் போல எதுவோ வழி காட்டுவதாக அதை தொடர்ந்தே ஜானியும் சென்றான். இருளில் ஒளி சிதறல்கள் உணர்ந்த ஜானிக்கு வழியெல்லாம் மனைவியைக் காணோம்ங்கிற பதற்றம் தான்.

சட்டென நின்ற அந்த புள்ளியில்… புதியவன் நின்று அமர்ந்து நடந்து வெறித்துக் கிடந்த அந்த இடத்தில் அந்த புதியவனின் உடல் கிடந்தது.

புதியவன் தன் உடலை தானே பார்த்து வெறித்து நின்ற ஆரம்ப காட்சி அங்கே மீண்டும் ஒரு முறை வந்து போனது.

திக்கென்றது. திகில் அடித்தது. கனவில் இருந்து வெளியேறிய மனதோடு நினைவில் இருந்தும் தடுமாறிய கணத்தோடு ஜானிக்கு தலை வழியே வெளியேறிக் கொண்டிருந்தது மூச்சு. தலையில் இருந்த சுமை நகர்ந்து நினைவு வந்தது. அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. வாய் குழறியது. எங்கிருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்கொண்டது. தூரத்தில்… மேட்டில் ஒளி கூட்டமாய் பேருந்து நிற்பது தெரிய… எங்க வந்திருக்கிறோம்.. எப்படி வந்திருக்கிறோம் என்று தடுமாறினான். கனவில் காணாமல் போனது மனைவி. இங்கே யாரோ ஒருவனின் பிரேதம். என்ன நடக்கிறது. தலையை சுற்றியது. கால்கள் நடுங்கின.

“ஒன்னும் பயப்படாத… இங்க ஒரு பாடி கிடக்குது.. யாராவது வாங்கன்னு யாருக்காவது போன் பண்ணி உதவி கேளு” என்று வெற்றிடத்தில் இல்லாத வார்த்தைளை கொப்பளித்தது பெருசு.

வார்த்தைக்கள் வந்த திசை துளியை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு என்னவோ புரிந்து விட்டது. ஏதோ சத்தம். சொற்கள். பேச்சு.

என்ன புரிந்ததோ… அலைபேசியை எடுத்து நூறுக்கு அடித்தான். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து விடும். நால்வர் கூட்டத்துக்கு நிம்மதி. அதே நேரம்.. சட்டென முடிவெடுத்தவனாய்… யோசனையின் தொடர்ச்சியாய்… நெற்றிக்குள் ஓடும் காட்சியின் நீட்சியாய்….ஜானி இன்னும் கொஞ்ச தூரம் அதே வழியில் மீண்டும் தேடிக்கொண்டே சென்றான். பாறையை ஒட்டி இருக்கின்ற மேல்நோக்கிய சரிவை அண்ணார்ந்து பார்த்தபடியே அவன் நடை வேகமெடுத்தது.

“என்னாச்சு..? எங்க போறான்…!” என்று யோசித்தபடியே நால்வர் கூட்டம் குழப்பத்தோடு அவனைப் பின் தொடர…

அதே நேரம் சிறு சிறு குழிமேடுகள் நிரம்பிய குகைக்குள்….

“ஒன்னும் பயப்படாத புதியவா… உன் உடம்ப எப்பிடியும் கண்டு பிடிச்சி வீட்டுக்கு கொண்டு போயிருவாங்க. நம்மாளுங்க போயிருக்கங்கள்ல. ஏதாவது பண்ணுவாங்க. நீ தைரியமா இரு..” என்று ஒரு கிழவி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே துக்கத்தின் குரல் உடைய… “என்ன விடுங்க… நான் செத்தது செத்துட்டேன். என் மனைவி.. அந்த பாறைய ஒட்டி இருந்த மரத்துல தொங்கிட்டு இருக்கா…” என்றான். நா தழுதழுத்தது. அவனுக்கு எல்லாமே நினைவுக்கு வந்து விட்டது.

“செல்பி எடுக்க அருவி கொட்டற பாறை ஓரத்துல நின்னோம். அப்ப வழுக்கி விழுந்து நான் பாறைல மோதி செத்துட்டேன். அவ உருண்டு தூக்கி வீசி மரக் கிளைல மாட்டி தொங்கிட்டு இருக்கா….காப்பாத்தணும்….!”


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x