“மாப்ள ! எப்படி இருக்க?”
வாரச்சந்தை இரைச்சலிலும் கணீரென கேட்டது, அக்குரல். எடைக் கூடிய காய்கறி பைகளை இரண்டு கைகளிலும் சுமந்து கொண்டிருந்த எனக்கு, வேறு யாரையோ யாரோ அழைக்கிறார்கள் எனத் தோன்றியது. இருந்தாலும் அக்குரல் என்னைக் கேட்டது போலவும் இருந்தது. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தேன்.
”வெங்காயம்… வெங்காயம்…. பெரிய வெங்காயம், மூணு கிலோ நூறு… நூறு… மூணு கிலோ நூறு” சற்றுத்தள்ளி ஒருத்தி கூவிக் கொண்டிருந்தாள்.
மாலை நேர மஞ்சள் நிற வெயில் சந்தையெங்கும் இரைந்து கிடந்தது. சாக்குப்பை மீது கொட்டப்பட்டு இருந்த தக்காளிகளைக் கயல் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தாள். நேர்கோட்டில் கோடு போட்டது போல வரிசையாக தரையில் சாக்கை விரித்து காய்கறிகளைப் பரப்பி வியாபாரிகள் கடை விரித்திருந்தார்கள். சற்று இடைவெளியில் மற்றொரு வரிசை என ஆறெழு வரிசைகள் இருந்தன. அனைத்து வரிசைகளிலும் கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருந்தது. கூட்டத்தில் யார் அழைத்தது என்பது புலப்படவில்லை.
எடை போட்ட தக்காளிக்கு பணம் கொடுத்து விட்டு, அவற்றை என்னிடம் இருந்த பையில் கயல் கொட்டினாள். அவள் நகர்ந்து செல்ல நானும் பின்னால் சென்றேன். பலரின் பேச்சு சத்தங்கள் சேர்ந்து, தெளிவற்ற இரைச்சலாக காற்றில் அலைந்து கொண்டிருந்தது. காய்கறிகளைச் சுமந்தபடி கூட்டத்தில் இருந்து வெளியேறி நடக்கத் துவங்கினோம்.
“மாப்ள எப்படி இருக்க?” மீண்டும் அதேகுரல். என்னை நெருங்கி ஒலித்தது. அக்குரல் எனக்கு நெருக்கமான குரலாக இருந்தது. அது செல்வம் மாமாவின் குரலாக இருக்கும் எனத் தோன்றியது. அது அவராக தான் இருக்க வேண்டும் என மனம் விரும்பியது. அவரைப் பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகி இருக்கும். மனம் பரபரக்க குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தேன்.
“என்ன மாப்ள தெரியலய்யா?” என காக்கி உடையில் மூச்சிரைக்க வலது கையில் வெள்ளை வேஷ்டியின் முனையையும், இடது கையில் துணிக்கடை பையையும் பிடித்துக் கொண்டு செல்வம் மாமா கூட்டத்திற்குள் இருந்து முந்தியடித்து வந்தார். அவர் வாயெல்லாம் பல்லாக இருந்தது. மாநிறத்தில் சராசரி உயரத்தில் இருந்த அவரது தலை முடியும், தாடியும் பாதிக்கும் மேல் நரைத்திருந்தது. பார்த்த மாத்திரத்தில் ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் காய்கறிகளை வாங்குவதை விட்டு விட்டு, ஓடோடி வந்திருப்பதைப் பார்த்த உடனே தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறு சிரிப்பை உதிர்த்து விட்டு, பேச்சற்று நின்றிருந்தேன். ஓடோடி வந்த செல்வம் மாமா, என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். சந்தையில் இருந்தவர்களின் கண்கள் எல்லாம் எங்கள் மீதிருப்பது போல தெரிந்தது. சற்றுத் தொலைவில் நான் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த, கயல் கோபம் கலந்த சிறு முறைப்புடன் காய்கறிகளை வாங்க கூட்டத்திற்குள் கலந்து விட்டாள்.
“மாமா… நீங்களா? எப்புடி இருக்கீங்க?” அவரது பிடியில் இருந்து மெல்ல விடுவித்துக் கொண்டே கேட்டேன். அவர் எனது கையினைப் பிடித்துக் கொண்டே பேசினார்.
“நா நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்க மாப்ள?”
“நல்லா இருக்கேன் மாமா”
”என்ன கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு சுத்து கூடிட்ட போல, பொண்டாட்டி நல்ல கவனிப்பா?” என இடுப்பில் கிள்ளியபடி சிரித்தார்.
“அதெல்லா இல்லீங்க மாமா. அக்கா நல்லா இருக்காங்களா?”
“மல்லி நல்லாயிருக்கா. அவ உன்ன தா கேட்டிட்டே இருந்தா. வீடு புனியசனைக்கு கூப்பிட்டா கூட வர முடியாத அளவுக்கு சார் ரொம்ப பிசியாக்கும்”
“இல்ல மாமா. கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதனால தா வர முடியல. நேத்து தா சென்னையில இருந்து ஒரு வாரம் லீவ்ல ஊருக்கு வந்தேன். நானே உங்களை நேருல வந்து பாக்கணும்னு இருந்தேன்”
”உன்னத்தா நாலு மாசமா பாக்கணும்னு நெனச்சுட்டே இருந்தோம். நல்லவேள உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோசம். நா ஒரு ஆகாவலி மாப்ள… உன்ன நிக்க வெச்சுட்டே பேசிட்டு இருக்கேன். வா… வீட்டுக்கு போலாம். அக்கா உன்ன பாத்தா ரொம்ப சந்தோசப்படுவா”
“இல்ல மாமா, இன்னிக்கு வேலெ இருக்கு. இன்னொரு நாள் வாரேன்”
“ச்ச்ச்… நீ வந்தாகணும். அவ்வளவு தான். அதுவுமில்லாம உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேண்டியிருக்கு”
“சரி. போயி காய்கறி வாங்கிட்டு வாங்க. நா வெயிட் பண்ணுறேன்”
“அது கெடக்குது. அப்புறம் வாங்கிக்கலாம்.” என்றபடி எனது கைகளைப் பிடித்தபடி செல்வம் மாமா நடக்க ஆரம்பித்தார். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்த கயலும் எங்களுடன் இணைந்து கொண்டாள். சந்தையில் இருந்து வெளியே வந்தோம். வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் நின்றார்.
“என்ன முக்கியமான விசயம் மாமா?”
“டேய் மாப்ள… அந்த கடவுள் புண்ணியத்துல ஒரு கொழந்த கெடச்சிருக்கு.”
“சூப்பர் மாமா. வாழ்த்துகள். ரொம்ப சந்தோசம். இதத்தானே மொத்தல்ல சொல்லியிருக்கணும்”வார்த்தைகளை அருவி போல கொட்டினேன். மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அவர் முகம் மலர சிரித்தார்.
இப்படி அவர் சிரித்து எத்தனை வருடங்களாகி விட்டது என நினைத்தபடி, “என்ன மாமா தத்தெடுத்து இருக்கீங்களா?” எனக் கேட்டேன்.
“நீ வூட்டுக்கு வா சொல்லுறேன்” என்றவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு, கடைக்கு சென்று இனிப்புகளையும், பலகாரங்களையும், குழந்தைக்கு நான்கைந்து துணிகளையும் வாங்கிக் கொண்டு வந்தோம்.
அதற்குள் “என்கூட இருக்கேனு சொல்லிட்டு, இப்படி ஒறமொறைக்கு போன எப்புடி?” என சிணுங்கிய கயலை, “ஒரு எட்டு போயி பாத்திட்டு வந்திடலாம். பீளிஸ்… அவங்கள பாத்து பேசி ரொம்ப நாளாச்சு. நைட் படத்துக்கு போலாம்” என ஒரு வழியாக சமாதானப்படுத்தி இருந்தேன். கயலும், நானும் அவரது ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் குலுங்கியபடி சென்றது.
மல்லிகா அக்காவும், செல்வம் மாமாமும் எனக்கு உறவினர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. செல்வம் மாமா வீட்டில் அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டாலும், அவளது வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களது வீட்டிற்கருகே இருந்த ஒரு வீட்டை வாங்கி, குடியேறி இருந்தார்கள்.
அவர்களது வீட்டின் முன்பு பெரிய காலியிடம் இருக்கும். விடுமுறை நாட்களில் அந்த இடம் தான், எங்களது தெருவின் விளையாட்டுக் களம். கிரிக்கெட், கபாடி என பையன்கள் சேர்ந்து விளையாடுவோம். பெண்கள் வந்தால் கண்ணாமூச்சி, தாயம், சீட்டுக்கட்டு என ஆடுவோம். விடுமுறை நாட்கள் எல்லாம் ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும்.
அவர்களது வீட்டில் தான் டிவி இருக்கும். டிவிக்கு என தனியாக ஒரு அறையை ஒதுக்கி இருப்பார்கள். வாரவாரம் துர்தஷனில் சக்திமான் நாடகம் பார்க்க ஓடி விடுவேன். கிரிக்கெட் லைவ் என்றால் சொல்லவே வேண்டாம். தெருவே அந்த வீட்டு திண்ணையில் கூடி குடியிருக்கும்.
மேட்ச் முடியும் வரை மணிக்கணக்கில் டிவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். திடீரென கரகரவென புள்ளியாக தெரிந்தால், பெரிய டிஷ் அண்டேனா சுற்றி செல்வம் மாமா சரி செய்வார். அவர் சுற்றச் சுற்ற அண்டேனா இடதும், வலதுமாக, மேலும் கீழுமாக செல்லும். அப்போது நான் “தெரியல… தெரியல… தெரியுது. இன்னும் கொஞ்சம்” என கத்திக் கொண்டிருப்பேன். அம்மா வந்து திட்டி அழைத்துச் செல்லும் வரை அவர்களது வீட்டிலேயே கிடப்பேன்.
மல்லிகா அக்கா பெயருக்கேற்ப மல்லிகைப் பூப்போல இருப்பாள். நெற்றியில் சிறு திருநீறும், அதற்கு கீழ் சந்தனமும் வைத்திருப்பாள். விரித்திருக்கும் கண்களும், சிரித்த முகமும் அழகூட்டும். என்னை அவளது உடன்பிறவாத தம்பியாக கருதினாள். ”கண்ணா” என வாஞ்சையோடு அவள் அழைப்பது அவ்வளவு அழகாக இருக்கும். எனக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட்கள் வாங்கித் தருவாள். அதனாலேயே எனக்கும் அவளைப் பிடிக்கும்.
மலர்ந்த மல்லிகைப் பூப்போல இருந்த மல்லிகா அக்கா, நாளாக நாளாக வெயிலில் வாடி வதங்கிய பூப்போல மாறிக்கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் தொலைந்து வெகுநாளாகி இருந்தது. விரிந்த கண்கள் அடிக்கடி கண்ணீர் உதிர்ப்பதை பார்க்க முடிந்தது. அவளது முகத்தில் ஏதொவொரு ஏக்கம் கூடிய தவிப்பு நிரந்தரமாக குடியேறியிருந்தது.
“எதும் விசேசமில்லையா?” என சுற்றும் முற்றும் ஒயாமல் ஒலித்த ஒரே கேள்வி அவளைத் தவியாய் தவிக்க வைத்தது.
“என்ன மாப்ள விசேசம்?” ஆட்டோ தடதடவென ஓடிக் கொண்டிருந்தது. உடல் குலுங்கியது.
”ஒன்னுமில்லீங்க மாமா”
“கொழந்தை எத்தனை வருச ஆசை தெரியுமா மாப்ள?. கொழந்த இல்லனு உன் அக்கா அழறப்போ எனக்கு நீ கொழந்த. உனக்கு நா கொழந்தனு வெளியே சொல்லிக் கிட்டாலும், மனசு உள்ளுக்குள்ள கெடந்து தவியா தவிக்கும். இத்தன வருசத்துக்கு அப்புறமாச்சு அந்த ஆண்டவனுக்கு இரக்கம் வந்துச்சே?” என்றபடி மாரியம்மன் கோவிலை கடக்கும் போது கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
நான் மெலிதாக சிரித்தேன். “ஓ. நீ தா கடவுள நம்ப மாட்டியாச்சே. நீ நம்பலனாலும் எனக்கு இந்த மாரியம்மா தா பையன கொடுத்திருக்கா” செல்வம் மாமா தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.. கயல் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவள் அப்படித்தான். அவளுக்கு முக்கியத்துவம் இல்லாத சமயங்களில் எல்லாம், அவள் எதுவும் பேசமாட்டாள்.
மல்லிகா அக்காவிற்கு பிடிக்கும் என்பதாலேயே, செல்வம் மாமாவை எனக்கும் பிடிக்கும். நான் வளர வளர அவர்களது வீட்டிற்கு செல்வது குறைந்தாலும், நின்றுவிடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வந்தேன். இருவரும் என்னிடம் மனம் விட்டு பேசுவார்கள். எப்போதும் என்னிடம் சொல்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அவர்களிடம் எதாவது இருக்கும்.
திருமணமான புதிதில் ‘அத்தனை ஆசையாக வளர்த்து ஆளாக்கியவர்கள், ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை’ என அவளது பெற்றோரை நினைத்து மல்லிகா அக்கா அழுது புலம்புவாள். பின்னர் “கொழந்த பொறந்தா எல்லா சரியாயிடும்” என தேற்றிக் கொள்வாள்.
ஆண்டுகள் ஓடினாலும், அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை. அந்த ஏக்கம் அவளைப் போட்டு வாட்டி எடுக்கும். தவியாய் தவிப்பாள். கண்ணீர் விட்டு கதறி அழுவாள். செல்வம் மாமா ஆறுதல் சொன்னாலும், அழுது தீர்ப்பாள். ”கவலைப்படாதக்கா. எல்லா சரியாயிடும்” என பல நாட்கள் வெகு நேரம் நானிருந்து சமாதானம் செய்து வந்திருக்கிறேன்.
யாரிடம் பிரச்சனை என்பதை ஒருமுறை கூட இருவரும் வெளிப்படுத்தியதில்லை. அதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவர். மருத்துவமனை, மருத்துவமனையாக அழைந்து திரிந்தார்கள். இலட்ச இலட்சமாக செலவு செய்தார்கள். யார் யாரோ சொன்னதை எல்லாம் கேட்டு, எதை எதையோ செய்தார்கள்.
‘போகாத கோவில் இல்ல. வேண்டாத தெய்வமில்ல. பண்ணாத பூஜை, பரிகாரமில்ல’ என கோவில்களை சுற்றி வந்தனர். உச்சமாக ஒரு சாமியாரிடம் மந்திரித்த தொப்புள் கொடி வரை வாங்கி வந்து சாப்பிட்டும் பார்த்து விட்டாள். எந்த பலனுமில்லை. வேறு திருமணம் செய்து கொள்ளும்படி உறவினர்கள் சொன்ன போது, செல்வம் உறுதியாக மறுத்து விட்டார். மல்லிகா அக்காவின் அத்தனை கவலைகளையும் கண்ணீராக கடத்தி விட்டாலும், செல்வம் மாமா ஒருபோதும் கலங்கியதில்லை. மனக்கவலைகளை குடியில் தொலைத்தார்.
மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் செலவு செய்தது போதும் என்ற முடிவுக்கு வருவதற்குள் பத்தாண்டுகள் ஓடி விட்டது. ஒரு குழந்தையை தத்தெடுக்க எடுத்த முயற்சிகள், கடுமையான சட்டதிட்டங்கள் முடக்கிப் போட்டது. கடைசியாக செல்வம் மாமாவின் தங்கையின் மூன்று பெண் குழந்தைகளில், கடைசிக் குழந்தையை வளர்க்க எடுத்து வந்தார்.
சில காலம் அக்காவின் முகத்தில் தொலைந்திருந்த மகிழ்ச்சி, அக்குழந்தையுடன் இருக்கும் போது மீண்டும் வந்தது. இருவரும் அன்பை மாறி மாறி பொழிந்தார்கள். குழந்தையை தாங்கு தாங்கு என தாங்கினார்கள். வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கிக் குவித்தார்கள். அவளது தாயை விட மல்லிகா அக்கா நன்றாக பார்த்துக் கொண்டாள். செல்வத்தின் தங்கை என்ன நினைத்தாலோ, ஆறு மாதத்தில் மீண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள். அவளுக்காக வாங்கிய பொம்மைகளையும், அதுநாள் வரை சேர்த்திருந்த மகிழ்ச்சியையும் மூட்டை கட்டி பரணில் தூக்கிப் போட்டனர். அவள் மீண்டும் வாடிய மல்லிகைப் போல மாறிவிட்டாள்.
கடைசியாக மல்லிகா அக்கா வீட்டிற்கு சென்று ஒரு வருடத்திற்கும் மேலியிருக்கும். எனது திருமணத்திற்கு பத்திரிகை வைக்க சென்றிருந்தேன். இரண்டு பூனைகள், மூன்று நாய்கள், ஒரு கிளி, நான்கு குருவிகள், முயல்கள், கோழிகள், மீன்கள் என வீடு முழுக்க செல்லப் பிராணிகள் நிறைந்திருந்தன. அவற்றை குழந்தைகளாக பாவித்து வளர்க்கிறார்கள் என்பது புரிந்தது.
சிறிது நேரம் பேசிய போது, அவளது பேச்சில் குழந்தை இல்லாத தவிப்பு அதிகமிருந்தது. இடையிடையே வெடித்து அழுது புலம்பினாள். செல்வம் மாமாமும், நானும் சமாதானம் செய்தோம். வீட்டை விட்டு வெளியே வந்த போது, ’அக்காவிற்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் எப்படி எல்லாம் வளர்த்திருப்பாள்?’ என நினைத்தபடி வந்தேன். சென்னைக்கு நான் வேலைக்கு செல்லவும், அவர்களை சந்திப்பது தடைபட்டு போனது.
ஆட்டோ ஒரு சாலையில் இருந்து திரும்பி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. வரிசையாக வீடுகள் பெட்டி பெட்டியாக காட்சியளித்தன. ஆங்காங்கே புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு கொண்டிருந்தன. கருப்பு நிற கேட் போடப்பட்டு இருந்த ஒரு வீட்டின் முன்பு ஆட்டோ நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கினோம். நீல நிற வண்ணம் பூசப்பட்ட மூன்று மாடி கட்டிடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. வீட்டின் முன்பு கொஞ்சம் காலியிடம். நான் தயங்கியபடி நின்றிருந்தேன்.
“வா மாப்ள. நம்ம வூடு தா. ஊருல எடம் வித்ததுல கொஞ்சம் காசு வந்துச்சு. இத்தன நாளா செலவு பண்ண என்னயிருந்துச்சு? அதுதா வூடு நல்லா கட்டிட்டேன். இப்போ தான் பையன் வந்துட்டான்ல” என்றபடி செல்வம் மாமா வீட்டிற்குள் அழைத்தார்.
“மல்லி, இங்க பாரு யாரு வந்திருக்காங்கனு?”
மல்லிகா அக்கா குழந்தையோடு வெளியே வந்து பார்த்தாள். வழக்கமாக மென்சோகம் அப்பி களையிழந்து இருக்கும் முகத்தில், அன்று முகமெல்லாம் புன்னகை பூசியிருப்பது போல இருந்தது. மல்லிகை போல மலர்ந்த முகம் அவளை இன்னும் அழகாக காட்டியது. என்னைப் பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து நின்றாள். “கண்ணா” என்றபடி பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வடிந்தது.
“அக்கா, அழாதீங்க” என சமாதானம் செய்தேன். எவ்வளவு சொல்லியும் பத்து நிமிடங்களுக்கு அழுகை நீடித்தது. எனக்கும் கண்களில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் வடிந்தது. அதனை கைகளால் துடைத்துக் கொண்டேன். குழந்தையும் சேர்ந்து அழத் துவங்கியதும், அவளது அழுகை நின்றது.
“செழியா, இங்க பாரு கண்ணா மாமாடா”
“ரொம்ப அழகா இருக்கான்க்கா” என்றபடி கன்னத்தை தொட்டபடி சொன்னேன். குழந்தை மெல்ல சிரித்தது.
“இந்தா கண்ணா” என குழந்தையை என்னிடம் கொடுத்தாள். சிறு படபடப்புடன் இரண்டு கைகளிலும் துண்டினால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை தாங்கினேன். பூப்போல எடையில்லாமல் இருந்தது. குழந்தை அவ்வளவு அழகு. நல்ல வெள்ளை நிறம். கொளுகொளுவென பிடித்து வைத்த லட்டு போல இருந்தது. நீண்ட தலைமுடிகள். நெற்றிலும், கன்னத்திலும் திருஷ்டிக்காக கண் மை அப்பியிருந்தார்கள்.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.
“பாரு கண்ணா. உன்ன பாத்து சிரிக்குறான்?”
”………….”
“மாமாவ இங்கயே இருக்கச் சொல்லலாமா செழிக்குட்டி?”
“…………”
“மாமாவ பிடிச்சிருக்கா?”
“……………….”
“அத்தையைப் பாரு. என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கானு பாரு” என அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே சென்றார்கள். குழந்தையின் இயல்பான ஒவ்வொரு செய்கையும், புதுப்புது அர்த்தங்கள் சொன்னார்கள். அக்குழந்தை மீதிருந்த அக்கறையும், அன்பும் ஒவ்வொரு செயலிலும், வார்த்தைகளிலும் தெரிந்தது.
வீடு முழுக்க குழந்தைக்காக விதவிதமான பொம்மைகளையும், புதுப்புது துணிகளையும் குவித்திருந்தார்கள். கடந்த முறை வீட்டிற்குள் உலாவிக் கொண்டிருந்த செல்லப் பிராணிகள், எல்லாம் வாசலுக்கு வெளியே அனுப்பியிருந்தனர். வெகு நேரம் பேசியதில் மல்லிகா அக்காவும், கயலும் ஒட்டிக் கொண்டார்கள்.. மல்லிகா அக்கா சமையல் செய்ய செல்ல, கயல் குழந்தையைப் பார்த்துக் கொண்டு எதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஜன்னலுக்கு வெளியே இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது.
செல்வம் மாமா என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். பிராந்தி பாட்டிலை எடுத்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியபடி, ஒன்றை என்னிடம் நீட்டினார்.
“இல்ல வேணா மாமா”
“அட கொஞ்சம் குடி மாப்ள. கயல் கேட்டா நா பேசிக்குறேன்”
டம்ளரை வாங்கி கொஞ்சமாக குடித்தேன்.
“மாப்ள… பையன் வந்ததுக்கு அப்புறம் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?. ஒரு கொழந்த இவ்வளவு சந்தோசம் தரும்னு நினைச்சு கூட பாக்கல”
“ஆமா மாமா. உங்கள பாத்தாலே தெரியுது”
மீண்டும் ஒரு ரவுண்டு ஊற்றிக் கொடுத்தார். அதனை வாங்கியபடி கைகளில் வைத்துக் கொண்டேன். ”கொழந்தைய தத்தெடுத்தீங்களா?”
குடித்து முடித்து “இல்ல மாப்ள” என்றார். “அப்புறம் எப்புடி மாமா?” தயக்கத்துடனும், குழப்பத்துடனும் கேட்டான்.
“சித்திரை கனி அன்னிக்கு மாரியம்மன் கோவிலுக்கு சவாரிக்கு போனப்போ, என் பிரண்டு ஒருத்தன் போன் பண்ணினான். அவனுக்கு தெரிஞ்ச எடத்துல ஒரு கொழந்த இருக்கு, வளர்க்க முடியுமானு கேட்டான். எனக்கு என்ன சொல்லுறதேனே தெரியல… இத்தன வருசங்கழிச்சு அதுவா வர்ரத வேண்டாம்னு சொல்ல மனசு இல்ல. அக்கா கிட்ட கேட்டிட்டு சொல்லுறேன்னு வைச்சுட்டேன்”
ஒரு ஆப்பிள் துண்டை எடுத்துக் கடித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
”இத்தன வருசமா நாம பட்ட கஷ்டமெல்லா ஒரு கொழந்தைக்கு தானே? அக்காவும் சரினு சொல்லிட்டா. அப்புறம் ரெண்டு பேரும் கொழந்தைய வாங்கிட்டு வந்தோம். அப்ப இருந்து வாழ்க்கையே மாறிடுச்சு மாப்ள. குழந்தையை பாத்துக்கணும்னு அக்கா வேலைக்கு போகுறதில்ல. நானும் முன்ன மாதிரி குடிக்குறதில்ல. இன்னிக்கு உன்ன பாத்த சந்தோசத்துல குடிக்கிறேன்” என ஒரு ரவுண்ட் ஊற்றினார். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.
“மாமா, பிரச்சனை எதுவும் வந்திடாது தானே?”
“இல்ல மாப்ள. மத்தவங்க கிட்டயெல்லா தத்தெடுத்து இருக்கேனு சொல்லியிருக்கேன். என் பையன்னு சொல்லுறதுக்கு பர்த் செர்டிபிகேட் வாங்கிடேன்”
“எப்புடி மாமா?”
“காசு கொடுத்தா உசுரோட இருக்கறவனுக்கே டெத் சர்டிபிகேட் கொடுக்குற ஊருல, பொறந்த கொழந்தைக்கு பர்த் சர்டிபிகேட் வாங்குறது ஒன்னும் கஷ்டமில்ல மாப்ள” என ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தபடி குடித்தார். நானும் பதிலுக்கு பற்களை காட்டியபடி சிரித்து வைத்தேன்.
“கொழந்த யாருதுனு எதாவது தெரியுமா மாமா?”
“இல்ல மாப்ள. எவ்வளவு கேட்டும் அவன் சொல்லல. ஏதொவொரு காலேஜ் பொண்ணுக்கு பொறந்த கொழந்தைனு மட்டுந்தா சொன்னான். அது ஊருக்கு தப்பா தெரியுற மாதிரி, என்ன உறவுல வேணா பொறந்தும் இருக்கலாம். ஆனா இப்போ அவன் என் பையன் மாப்ள… செழியன் செல்வக்குமார்” பெயரை அழுத்தமாக சொன்னார்.
“சரிங்க மாமா”
“மல்லினால கொழந்தைக்கு பால் தர முடியாது. அவனுக்கு தாய்ப்பால் கிடைக்காது. அதத் தவிர அவனுக்கு வேற எதுவும் கிடைக்காததுனு எதுவும் இருக்கக்கூடாது.. ஊரே ஆச்சரியப்படுற மாதிரி அவனை வளர்த்து ஆளாக்கி காட்டுறேன் பாரு மாப்ள” என மீசையை முறுக்கிக் கொண்டார்.
“கண்டிப்பா மாமா. இப்பவே இவ்வளவு பண்ணுற நீங்க, பையன நீங்க நல்லா பாத்திப்பீங்க”
“ஆமா மாப்ள. இனி அவன் தான் எல்லாம். அவனுக்காக தா நாங்க ரெண்டு பேரும் வாழுறோம்.”
“ம்ம்ம்”
சாப்பிட மல்லிகா அக்காவும், கயலும் அழைப்பது கேட்டது. இருக்கையில் இருந்து எழுந்த என்னை “கொஞ்ச நேரமிரு மாப்ள. போலாம்” என மீண்டும் அமர வைத்தார்.
அவரிடம் அதனை எப்படி கேட்பது என்பது குழப்பமாக இருந்தது. தவறாக நினைத்து விடுவாரோ என தயக்கமாக இருந்தது. இருந்தாலும் இப்போது விட்டால், எப்போதும் கேட்க முடியாது எனத் தோன்றியது.
தொண்டையை செருமியபடி, “மாம்மா” என இழுத்தேன்
“சொல்லு மாப்ள”
“நீங்க தப்பா நினைக்கலான நா ஒன்னு கேக்கட்டுமா?” தயங்கி தயங்கி கேட்டேன்.
“என்னானு கேளு மாப்ள”
“மாமா, ஒருவேள ஒரு நா பையனோட அம்மா வந்து கேட்டா என்ன பண்ணுவிங்க?”
“அட இவ்வளவு தானா? இதுக்கு தா இப்படி இழுத்தியா?” என்றபடி சிறிது நேரம் யோசித்தார். எதுவும் பேசவில்லை. அவரின் முகம் சுருங்கியது. சட்டென வியர்த்துக் கொட்டியது. இதனைப் பார்த்து எனது மனம் தவித்தது. ’என்ன சொல்வாரோ?, கேட்டிருக்கக் கூடாதோ?’ என என்னை நானே திட்டிக் கொண்டேன்.
நீண்ட பெரு மூச்சு விட்டபடி பேசத் துவங்கினார். “இந்தக் காலத்துல கொழந்தை எங்க இருக்குனு அவனம்மா கண்டு பிடிச்சு வரது ஒன்னும் கஷ்டம் மில்ல. அப்படி அவனோட அம்மா வந்து கேட்கலாம்….”
“………………….”
மிச்சமிருந்த பிராந்தியை ஊற்றி கொஞ்சம் தண்ணீரை கலந்து, ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, உள்ளங்கையில் உதடுகளை துடைத்துக் கொண்டார். ”சும்மா இல்ல மாப்ள. மூணு மாடிக்கு வூடு கட்டி வைச்சிருக்கேன். அப்படி அந்தப் பொண்ணு வந்தா… ஒரு மாடில தங்கியிருந்து அவளோட கொழந்தைய பாத்துக்கட்டும். நா என் பையனை பாத்துப்பேன்” வார்த்தைகள் குழறியபடி வெளிப்பட்டன.
எதிர்பாராத அந்தப் பதிலில் உறைந்து போனேன். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். செல்வம் மாமாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அந்தக் கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவரது முகம் தவிப்பில் தள்ளாடிக் கொண்டிருந்தது.