18 July 2024

அம்மாவிடம் இருந்து போன் வந்த போது காலை ஏழு மணியிருக்கும். அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாக இந்நேரத்திற்கு குன்னூர் குளிருக்கு இரண்டு கம்பளிகளை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பேன்.

எனது வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் வெலிங்டன் இராணுவ முகாம் இருக்கிறது. குளிருக்கு மெல்ல எழுந்து சுடு தண்ணீரில் குளித்து, சுடச்சுடச் சாப்பிட்டு விட்டு மெல்ல பத்து மணிக்கு அலுவலகத்திற்குச் செல்வேன். மாத இறுதி நெருங்குவதன் பொருட்டு அக்கவுண்ட்ஸ் முடிக்க வேண்டியிருந்ததால், அன்று நேரத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தேன்.

”விக்கி… உங்கம்மா போன் பண்ணி இருக்காங்கடா”

இந்த நேரத்தில் அம்மா ஒரு போதும் அழைக்கமாட்டாள். மாலை 7 மணிக்கு அழைத்தால் என்றால், ஒரு மணி நேரமாவது பேசுவாள். வீட்டில் ரோஜாச் செடியில் பூப்பூத்தது முதல் அப்பா திட்டியது, பக்கத்து வீட்டு அனிதா அக்கா தண்ணீர் பிடிக்கப் போட்ட தெருச் சண்டை வரை அன்று நடந்த எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டுத் தான் பேச்சை நிறுத்துவாள். இந்நேரத்தில் அழைக்கிறாள் என்றால் எதாவது முக்கியமானதாக இருக்கும் எனத் தோன்றியது. ஜூவை காலில் மாட்டிக் கொண்டிருந்த என்னிடம், பிரியா போனைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

”ம்மா… சொல்லுமா”

”தம்பி எங்கப்பா இருக்க?”

”இதென்னம்மா கேள்வி? குன்னூர்ல தா”

”தங்கம்ம்… நேத்துல இருந்து பாட்டிக்கு ரொம்ப முடியலப்பா. அப்பா உன்ன உடனே கிளம்பி வரச்சொன்னாருப்பா.. திவ்யாவும் கிளம்பி வந்திட்டு இருக்காப்பா” எனச் சொல்லியபடி விசும்பினாள்.

எனக்கு என்னச் சொல்வது எனத் தெரியவில்லை. இதயம் படபடத்தது. மனதை பெரும் பாரம் அழுத்துவது போல இருந்தது. ஜூ போடுவதை நிறுத்தினேன். அதற்குள் அம்மாவின் விசும்பல் அழுகையாக மாறியது. சில நொடிகளில் வெடித்து அழ ஆரம்பித்தாள். அம்மா இப்படி ஒருபோதும் அழுததில்லை. அவளின் அழுகை எனக்கு கண்ணீரை வரவழைத்தது. கண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கன்னத்தை ஈரமாக்கியது.

”ஏங்க… என்னாச்சு? எதும் பிரச்சனையா?” பிரியா பரபரத்தாள். பாட்டி சாகக் கிடக்கிறாள் என பிரியாவிடம் சொன்னேன். அவளும் அழத் துவங்கினாள்.

”ச்ச்ச்… அழாதே. ஒன்னும் ஆயிருக்காது”என அதட்டலோடு கூறி, அவளது அழுகையை நிறுத்தினேன்.

”வாங்க, நாமளும் ஒரு எட்டுப் போயி பாத்திட்டு வந்திடலாம்”

“ம்ம்ம்”

தூங்கிக் கொண்டிருந்த மகன் செழியனுக்குத் துணியை மட்டும் மாற்றி விட்டுத் தூக்கிக் கொண்டு பிரியா தயாராகி வந்து நின்றாள். அதற்குள் நான் அலுவலகத்திற்கு அழைத்து விடுமுறை சொல்லியிருந்தேன். அவசர விடுமுறைக்காகப் பலமுறை பள்ளியிலும், கல்லூரியிலும் பாட்டியை மரணிக்கச் செய்திருக்கிறேன் தான். என்றாலும், இந்த முறை பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கூறும் போது மனம் கனத்தது. மூவரும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளலூருக்கு கிளம்பினோம்.

சாலையை வெண் திரை போலப் பனி மூடியிருந்தது. எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டுக் கொண்டு வந்தன. குளிர் ஊடுருவிச் சில்லிட்டது. பிரியாவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், முன்னால் சென்ற வாகனங்களை வேகமாக முந்திச் செல்வதில் குறியாக இருந்தேன். சாலையை மூடியிருக்கும் பனி போல, மனதை பாட்டியின் நினைவுகள் முழுமையாக ஆக்கிரமித்தது.

முழுக்க நரைத்த தலை, சுருங்கிய கன்னம், பற்கள் அற்ற வாயுடன் சிரிக்கும் அவளின் முகம் நினைவுக்கு வந்தது. பாட்டிக்கு வீட்டையும், வெள்ளலூரையும் தவிர வேறு எதுவும் தெரியாது. வேறு எதுவும் அவளுக்குத் தேவையாகவும் இருக்கவில்லை. ராசு மாமன் தங்கைகளுக்குப் பங்கு தராமல் வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரக் கேட்ட போது, “முடியாது கண்ணு” என இரண்டே வார்த்தையில் முடித்துக் கொண்டாள். பாட்டியின் பிடிவாத குணமறிந்த ராசு அவளிடம் மட்டுமின்றி, இரண்டு தங்கைகளுடனும் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டான்.

”அவன் கெடக்குறான் கண்ணு” என்று சொன்னாலும், கோவில் நோம்பிகளுக்கும், நல்லது, கெட்டதுகளுக்கும் என எதற்கும் அழைப்பதில்லை என விசனப்படுவாள். அவளிருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து ஒட்டிக் கொண்டாள்.

”கண்ணு” என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லாமல் அவளால் பேச்சைத் தொடர முடியாது. ”அது வந்து கண்ணு?, ஏன் கண்ணு?” என எப்படியேனும் நான்கைந்து வார்த்தைகளுக்கு ஒரு முறை “கண்ணு” என்ற வார்த்தையை நுழைத்து விடுவாள். அதைக்கேட்டு மற்றவர்களுக்குச் சலித்து விட்டாலும், அவள் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருப்பாள்.

”ஏன் கண்ணு, என் பேரன்ன பாத்த உனக்கு எளக்கநாட்டமா போச்சா?” என திவ்யா என்னைக் கிண்டல் செய்யும் போதெல்லாம் எனக்கு ஆதரவாகப் பாட்டியின் குரல் ஒலிக்கும். திவ்யா வாயைச் சுழித்துக் கொண்டு சிணுங்கியபடி செல்வாள். அம்மாவோ, அப்பாவோ எனக்கு ஏதேனும் செய்ய மறுக்கும் போது, வாஞ்சையோடு பாட்டிச் சொல்வாள். ”கண்ணு, நா இருக்கே”. அவளின் முதல் பேரன் என்பதால் என் மீது அன்பும், அக்கறையும் கூடுதலாக இருந்தது.

மேட்டுப்பாளையம் வந்த போது, வெளியில் சுளிரென முகத்தில் அடித்தது. பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்தபடி வந்த செழியன், ”ஆ… ஆறு” என மழலை மொழியில் சொன்னது கேட்டது. ஒவ்வொரு வார்த்தைகளாகப் பேசத் துவங்கியிருந்த செழியனின் மழலைச் சொல்லை இரசிக்கும் மனநிலை இல்லை. புழுதி பறக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெள்ளலூர் வருவதற்குள் ஒருவழியாகி விட்டது.

நேர நேரத்திற்குச் சாப்பிட்டுப் பழகியிருந்ததால் எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. “அங்க போன என்ன கிடைக்குமோ? எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாது” மனதிற்குள் நினத்துக் கொண்டேன். ”எனக்கு பசிக்குது” என பிரியாவிடம் சொன்னாலும் நன்றாக இருக்காது.

”ப்பிரியா”

”சொல்லு விக்கி”

”உனக்கு பசிக்குமில்ல. சாப்பிட்டு போயிடலாம்”

”இல்லப்பா வேணாம்”

”செழிக்குட்டிக்கு பசிக்கும். அவன் வயித்துக்கு எதாவது கொடுத்திட்டு போலாம்”

”ம்ம்ம். சரிப்பா”

ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினேன். சாப்பிடுவதில் குறியாக இருந்த என்னை, பிரியா ஒரு முறை ஏறயிறங்க பார்த்தாள். நான் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டேன். அவளும் எதுவும் சொல்லவில்லை. வீட்டிற்குச் சென்று நான் வண்டியை நிறுத்திய போது, அங்குப் பலரும் கூடியிருந்தனர்.

”விக்கி வந்துட்டான் ம்மா” திவ்யா சொன்னது காதில் விழுந்தது. அம்மா ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டு அழுதாள். பிரியாவிற்கு கண்ணீர் கொட்டியது. ”அத்தா” எனச் செழியன் அம்மாவைப் பார்த்து கைகளை நீட்டியபடி எடுத்துக் கொள்ளச் சொன்னான். அவள் எடுக்கவில்லை. அம்மாவின் அழுகையைப் பார்த்து மிரண்ட அவன், பிரியாவிடமே இருந்து விட்டான்.

பாட்டி வீட்டின் முன்பிருந்த திண்ணையில் பாயில் கிடத்தப்பட்டு இருந்தாள். பாயைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியிருந்தது. இரண்டு மகள்கள், மருமகன்கள்,பேரன், பேத்திகள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பெரும் கூட்டம் சுற்றி உட்கார்ந்திருந்தது. எல்லோரது கண்களும் கலங்கியபடி, பாட்டியைப் பார்த்தபடி இருந்தது. பேச்சு மூச்சின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அவள், இப்பவோ அப்பவோ என இழுத்துக் கொண்டிருந்தாள். பாட்டிக்கு நினைவு தப்பி இருந்தது. கடந்த முறை பார்த்ததை விட உடல் மெலிந்து, கன்னம் சுருங்கியிருந்தது.

கொஞ்ச நாளாகவே “ந்நா ரொம்ப நாளீக்கு இருக்க மாட்டே கண்ணு. இருக்க மாட்டே” நாக்கு குழறியபடி பாட்டி அடிக்கடி சொல்லிட்டு இருந்தாள். ஏதோ மந்திரம் போல ஓயாது இதை சொல்லிட்டு இருப்பது அவளுக்கு ஒரு வழக்கமாக இருந்தது. இதைச் சொல்லும் போது எல்லாம், அவளின் சுருக்க கன்னத்தில் கண்ணீர் படரும். ’சாவு பயத்தில் இதை சொல்கிறாளா, இல்லை சாவு வரமாட்டிங்குதுனு சொல்கிறாளா என்பது அவளுக்கே வெளிச்சம்’ என நினைத்துக் கொள்வேன். இப்போது எந்த ஒரு வார்த்தையும் அவள் வாயிலிருந்து வரவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு பாத்ரூம் செல்லும் போது, கால் இடறி கீழே விழுந்த பாட்டி படுத்த படுக்கையாகி இருக்கிறாள். ”வயசாகிப் போச்சு. இனி மருந்து மாத்திரை எல்லா வேஸ்ட். இருக்குற வர நல்லா வைச்சு பார்த்துக்கங்க” என வீட்டிற்கு வந்து பார்த்த டாக்டர் சொல்லிச் சென்றிருக்கிறான். நேற்று மாலை முதல் பேச்சு மூச்சின்றி பாட்டி படுத்துக் கிடக்கிறாள் என்பதை ஒவ்வொருவரின் பேச்சிலிருந்தும் உணர்ந்து கொண்டேன்.

பாட்டி கண் விழித்தபடி படுத்திருந்தாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. “அம்ம்மா, இங்க பாரு யாரு வந்திருக்காங்கனு” என என்னைக் காட்டிச் சொன்னாள். அதேபோல பிரியாவையும், செழியனையும் காட்டினாள். பாட்டியிடம் எந்த அசைவும் இல்லை. அம்மா மீண்டும் அழத் துவங்கினாள்.

”ம்மா… சும்மா அழுதிட்டே இருக்காதே” அதட்டலோடு சொன்னேன். அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை. அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக “என்னை தெரிகிறதா?” என பாட்டி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தினர். அவள் சிறு அசைவுமின்றி கிடந்தாள். அவளது கண்கள் வெறுமனே பார்த்தபடி இருந்தது.

சற்று நேரத்தில் ராசு மாமா குடும்பத்தோடு வந்தார். ”அய்யோ… அண்ணா. அம்மாவ பாருணா” என அம்மா அவனைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். பல ஆண்டுகளாகப் பேசாமல் இருந்தவரிடம், ஒட்டிக் கொண்ட அம்மாவிடம் எந்த சலனமும் இருக்கவில்லை. வேகமாக வந்த சரஸ்வதி அத்தை அழுகையோடு வந்தாள். கண்ணீரைத் தாரை தாரையாகக் கொட்டினாள்.

”ம்மா இங்க பாரு, உன்மகன் வந்திருக்கான்” என அம்மா சொல்லி வெடித்து அழுதாள். பெருங்குரலெடுத்துக் கத்தியபடி கதறினால். அதைப் பார்த்து குழந்தைகளும் அழத் துவங்கின. ஓயாமல் அழுகைகள் ஒலித்தது. அந்த அழுகை என்னையும் தொற்றிக் கொண்டது. மெல்ல வெளி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

”சும்மா ஒப்பாரி வைக்காதீங்க. நீங்க வைக்குற ஒப்பாரியிலையே போயி சேந்திடப் போறாங்க” அப்பா சற்றே கோபமாகச் சொன்ன பின்னரே, அழுகை ஓய்ந்தது.

”கொஞ்சம் எல்லா தள்ளி நில்லுங்க. காத்து வரட்டும்”. அனைவரும் சற்று விலகி நின்றனர்.

”எதையாவது சாப்பிடுறீயா ம்மா” விம்மியபடி அம்மா கேட்டாள்.

”அம்மா, என்னை விட்டு போயிடாத” சித்தி சொன்னாள். ஆளாளுக்கு வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டு இருந்தனர். அவ்வப்போது அம்மா பாட்டியின் வாயில் டம்ளர் கொண்டு வந்த தண்ணீரை ஊற்றினாள்.

நண்பகலுக்கு மேலாகி விட்டது. அப்பா சொன்னபடி கடையிலிருந்து உப்புமாவும், டீயும் வாங்கி வந்தேன். யாரும் சாப்பிடும் மனநிலையில் இல்லை. உப்புமாவை யாரும் தொடக்கூட இல்லை. சிலர் மட்டும் டீயை டம்ளரில் பிடித்துக் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பா அவரது நண்பர்களுடன் சேரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பாட்டியின் பக்கம் அழுகை அதிகமாக இருந்ததால், செழியனைத் தூக்கிக் கொண்டு அப்பாவிற்கு அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தேன்.

”இதுவரை ஐம்பது, அறுபது எழவுக்கு போயிருப்பேன். சாவுங்குகிறது அந்தந்த வயசுல வந்திடனும். அப்போ தா எல்லாத்தும் நிம்மதி” என சொன்னப் பெருமாள் மீது அப்பா ஒரு கோபப்பார்வை வீசினார். அப்பாவின் கோபம் பற்றி அறிந்திருந்த அவர், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை. அரசியல், ரியல் எஸ்டேட் என பேச்சு நீண்டது.

எந்த முடிவும் இன்றி கிழவி இழுத்துக் கொண்டே இருந்தாள். நேரம் ஆக ஆக கூட்டம் குறையத் துவங்கியது. “எதாவதுனா கூப்பிடுங்க” என்றபடி பக்கத்து வீட்டுக்காரர்களும், உறவினர்களும் கிளம்பத் துவங்கினர். பதினைந்து பேர் மட்டும் வீட்டிலிருந்தோம். இரவு கடையிலிருந்து வாங்கி வந்த பரோட்டாவைச் சாப்பிட்டனர்.

மாலை நேரத்துக்கு பின்பு கிழவிக்கு கொஞ்ச கொஞ்சமாக நினைவு வந்தது. குடும்பத்தார் கேட்பது எல்லாம் புரிய ஆரம்பித்தது. செய்கைகள் செய்ய ஆரம்பித்தாள். குடும்பத்தினருக்கு சற்றே ஆறுதல் வந்தது. சில மணி நேரங்களில் எழுந்து உட்காரும் அளவிற்குத் தேறிவிட்டாள். மெல்ல ஒவ்வொரு வார்த்தையாக பதில் சொல்ல ஆரம்பித்தாள். பாட்டியின் உடல் எந்த மருந்து, மாத்திரையும் இன்றி தேறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நள்ளிரவிற்கு சற்று முன்பாக ராசு குடும்பத்துடன் கிளம்பிச் சென்றார். நீண்ட நாளுக்குப் பின்பு மொத்தக் குடும்பமும் கூடியிருந்ததால், நள்ளிரவைத் தாண்டியும் பேசியபடி தூங்கிப் போனோம். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், மறுநாளும் வீட்டிலேயே இருந்தேன். தங்கை, சித்தி குடும்பத்தினரும் இருந்தனர். காலையில் நான் கண் விழித்த போது, செழியனுக்கு அம்மா இட்லி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

”செழிக்குட்டி இந்தம்மா” ஓடியாடிக் கொண்டிருந்தவன் பின்னால் அம்மா இட்லிக் கையோடு ஓடிக் கொண்டிருந்தாள். படுத்திருந்த பாட்டி மெல்ல கைகளை ஊன்றியபடி, சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். நான்கு விரல்களை மடக்கி பெருவிரலை வாய்க்கு நேராக நீட்டியபடி பாட்டி செய்கை செய்தாள். பாட்டியின் உடல் நன்றாகத் தேறியிருப்பது தெரிந்தது.

”சித்தி, பாட்டி தண்ணீ கேக்குறாங்க போல”

சித்தி ஒரு சொம்பில் தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்தாள். ”வேணாம்” எனச் சொன்ன பாட்டி, மீண்டும் செய்கை செய்தபடி ”ட்டீ” சற்று சத்தமாக சொன்னாள்.

சித்தி சமையலறைக்குச் சொல்வதைப் பார்த்து, ”ந்நீ வேணா. நீ நல்லா வைக்க மாட்ட. சாந்தாவ வைக்கச் சொல்லு” திக்கித் திணறி பாட்டி சொன்னாள். எனக்குச் சிரிப்பு வந்தாலும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். அம்மா எதையும் கேட்காதது போலச் செழியனுக்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

”சாந்தா ட்டீ வை” பாட்டி மீண்டும் சொன்னாள். கண்டு கொள்ளாமல் இருந்த அம்மாவைப் பார்த்து, ”உங்கம்மா டீ கேக்குறாங்க. வைச்சுக் கொடு போ” அதட்டலுடன் அப்பா சொன்னார்.

”பொழுதினுக்கும் டீ, டீயுனு கேட்டுக்கிட்டே இருக்கா. எழுந்திருச்சதும் மொத வேலெயா டீயத் தா குடிச்சா. இப்போ மறுபடியும் வேணுமாம். அந்த உடம்புல இரத்ததுக்கு பதுலா, டீத்தண்ணி தா ஓடும் போல” சடைந்தபடி சென்ற அம்மா, அனைவருக்கும் சேர்த்து வைத்துக் கொண்டு தந்தாள். டீயை பாட்டி ஊதி ஊதிக் குடித்தாள்.

செழியனை அம்மா மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவன் அவளது மடியிலேயே மலம் கழித்திருந்தான். அம்மா ஒரு காகிதத்தில் அள்ளி எடுத்துப் போட்டு விட்டு, அவனது கால்களைக் கழுவி விட்டாள். பின் சேலையை மாற்றிக் கொண்டு வந்து செழியனை மடியில் மீண்டும் வைத்துக் கொண்டு கொஞ்சத் துவங்கினாள்.

இட்லியைத் தட்டத்தில் போட்டு சாம்பார் ஊற்றி, பாட்டியிடம் சித்தி கொண்டு போய் வைத்தாள். பாட்டி நான்கு விரல்களால் இட்லியைப் பிய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி, குளிக்கச் சென்றேன். குளித்து விட்டு வரும் போது பாட்டி இட்லியைச் சாப்பிட்டு விட்டு, அத்தட்டத்திலேயே கைகளைக் கழுவி வைத்திருந்தாள். என்னை அருகே வருமாறு பாட்டி கூப்பிட்டாள்.

”சொல்லுத்தா”

”கண்ணு, இந்த காசு” என்றபடி தலையணைக்கு அடியிலிருந்த சுருக்குப் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டையும், சில சில்லறைக் காசுகளையும் எடுத்து நீட்டினாள்.

”எதுக்குத்தா?”

”போயி ரொட்டி வாங்கிட்டு வா கண்ணு” ஒரு நிமிடம் நான் திடுக்கிட்டேன்.

”இல்ல. என்கிட்ட காசு இருக்கு. நா வாங்கிட்டு வாரேன். இதெ நீயே வைச்சுக்க”

தலையை ஆட்டியபடி பாட்டி சுருக்குப்பையில் பணத்தை போட்டுக் கொண்டாள்.

”கிழவிக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு போல. இப்போ தானே சாப்பிட்டா. அதுக்குள்ள என்ன? நீ சும்மாயிருப்பா” அம்மா சொல்ல, ”அட, விடும்மா” என அலட்சியப்படுத்தியபடி ரொட்டி வாங்கி வந்து தந்தேன். தண்ணீரில் நனைத்து பாட்டி சாப்பிட்டாள்.

சற்று நேரத்தில் திவ்யாவின் மாமனாரும், மாமியாரும் பாட்டியைப் பார்க்க வந்தனர். இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு, சில தின்பண்டங்களையும், பழங்களையும் பாட்டிக்கு அருகே வைத்துச் சென்றனர். அவர்கள் மற்றவர்களுடன் பேசிவிட்டுச் செல்வதற்குள் பாட்டி ரொட்டி பாக்கெட்டில் பாதியைச் சாப்பிட்டு முடித்திருந்தாள். அம்மா ஒரு கோபப்பார்வையை மட்டும் வீசி விட்டு வீட்டிற்குள் சென்றாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு பாட்டிக்கு அருகே சென்ற அப்பா, ”மதியம் என்ன சாப்பிடுறீங்க?” எனக் கேட்டார்.

”கெளுத்தி மீனு கொழம்பு கண்ணு”

அப்பா என்னைப் பார்த்தபடி, ”டேய் விக்கி, பாட்டிக்கு கெளுத்தி மீனு வேணுமாம். போயி வாங்கிட்டு வா” என்றார்.

”கெழவி கெட்ட கேட்டுக்கு கெளுத்தி மீனு கேட்குதாக்கும்?” அம்மாவின் சிவந்த முகத்தில், கோபம் கொப்பளிப்பது தெரிந்தது.

”ந்நா ரொம்ப நாளீக்கு இருக்க மாட்டே கண்ணு” பாட்டி குழறியபடி சொன்னாள். நான்கைந்து கடைகளுக்குச் சென்று, தேடியலைந்து ஒரு வழியாக வாங்கி வருவதற்குள் ஒரு மணியாகி இருந்தது. திவ்யாவும், பிரியாவும் சமையலுக்கு உதவ, அம்மாவும், சித்தியும் சேர்ந்து சமைத்தனர். அப்பா வீட்டிற்கு முன்பாக வளர்ந்திருந்த வாழை மரத்திலிருந்து இலைகளை வெட்டி எடுத்து வந்தார். மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். பாட்டியும் சாப்பிட்டு முடித்தார்.

”ம்மா, நாங்க கிளம்புறோம். இப்போ போன தா நாளீக்கு வேலைக்கு போக முடியும்”

”அதுக்குள்ள ஏன்ப்பா போறா?”

”இல்லம்மா வேலை நிறைய இருக்கு. அடுத்த வாரம் வரோம்”

”சாந்தா” எனப் பாட்டி கூப்பிட்டாள். “என்னெ?” அம்மா அதட்டலாகக் கேட்டாள். பாட்டி எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள். பாட்டி அணிந்திருந்த நைட்டி ஈரத்தில் நனைந்திருந்தது. மலத்தின் வாசம் மூக்கை துளைக்கவும், பாட்டியை அம்மா கடிந்து கொண்டாள்.

”அதுவேணும், இதுவேணும்னு வாங்கி வக்கனையா திங்கத் தெரியுது. ஒன்னுக்கு, ரெண்டுக்கு வந்தா உன்னால சொல்ல முடியாதா?”

”……………”.

”கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடுறாளா? ஒரு வாரமா ஒரே ரோதணையா போச்சு” என வசைபாடியபடி, அம்மா பாட்டிக்கு உடை மாற்றி விட்டுக் கொண்டிருந்தாள். பிரியா, செழியனைத் தூக்கிக் கொண்டு முன்னால் செல்ல, துணிப்பைகளைத் தூக்கியபடி பின்னால் சென்றேன்.

”எழவெடுத்தவளுக்கு சாவு வந்து தொலைய மாட்டிங்கு. என் உசுர வாங்குறதுக்குனே வந்திருக்கா” என்ற அம்மாவின் புலம்பல் வார்த்தைகள் காதில் விழுந்தது. அவ்வார்த்தைகளில் ஒரு கணம் திடுக்கிட வைத்தது. அம்மாவின் புலம்பலைக் கேட்டும், கேட்காதபடி இருவரையும் பார்த்து ஒரு விரக்தியான புன்னகையை உதிர்த்துக் கொண்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

எழுதியவர்

பிரசாந்த் வே
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x