- Still i rise
இருப்பினும் நான் எழுகிறேன்
உங்கள் சரித்திரப் பக்கங்களில்
என்னைப் பற்றிய கசப்பான,திரிக்கப்பட்டப் பொய்களை எழுதிவைக்கலாம்..
அழுக்குப் புழுதியில் என்னை அமிழ்த்தி வைக்கலாம்.
ஆனாலும் ஒரு தூசியைப் போல நான் எழுவேன்
என் மேதாவித்தனம் உங்களுக்கு உறுத்துகிறதா?
ஏன் இருளடைந்து கிடக்கிறீர்கள்?
என் வீட்டின் முன்னறையில் பொங்கிவழியும் எண்ணெய்க் கிணறுகள் இருப்பதைப் போலத்தான்
நான் நடந்து கொள்கிறேன்.
சந்திர சூரியர்களைப் போல
அலைகளின் உறுதியுடன்
நம்பிக்கைகள் துளிர்த்தெழ
நான் மீண்டெழுகிறேன்.
குனிந்த தலையுடன் தாழ்ந்த விழிகளுடன்
வீழும் கண்ணீர்த்துளிகளெனத் துவளும் தோள்களுடன்
உளமுருகி அழுகைகளால் சோர்ந்து
நான் உடைந்து போவதை நீங்கள் பார்க்க விரும்பினீர்களா?
என் அகந்தை உங்களைக் காயப்படுத்துகிறதோ?
நீங்கள் அதைப் பெரிதாய் எடுத்துக்கொண்டீர்களா என்ன?
என் வீட்டின் கொல்லைப்புறத்தில் தான்
தங்கச் சுரங்கங்களைத் தோண்டுவது போல்
நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் வார்த்தைகளால் என்னைத் துளைக்கலாம்.
உங்கள் பார்வைகளால் என்னைக் கொத்தலாம்.
உங்கள் வெறுப்பினால் என்னைக் கொல்லலாம்.
ஆனாலும் காற்றைப் போல நான் எழுவேன்.
என்னுடைய கவர்ச்சி உங்களை மன அமைதியைக் குலைக்கிறதா?
ஆச்சர்யத்தை அளிக்கிறதா?
என் தொடையிடுக்குகளில் வைரத்தைக் கண்டெடுத்தது போல்
நான் நடனமாடுகிறேன்.
வரலாற்றின் அவமானக் குடில்களிருந்து …
நான் எழுகிறேன்.
வலிமிகுந்த கடந்த காலங்களிலிருந்து…
நான் எழுகிறேன்.
நானொரு கருங்கடல்.
பாய்ந்தும் பரந்தும்
விரிந்தும் சீறும்
அலைகளில் நான் தாங்கிக் கொள்கிறேன்.
பயங்கரமான அச்சுறுத்தும் இரவுகளைப் பின்னுக்குத் தள்ளி
நான் எழுகிறேன்.
அதிசயத்தக்க அழகான விடியலாய் நான் எழுகிறேன்.
என் முன்னோர்கள் அளித்த பரிசுகளுடன்
அடிமையின் கனவும் நம்பிக்கையும் நானேயாகி
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்
நான் எழுகிறேன்.
- Caged bird
கூண்டுப் பறவை
ஒரு சுதந்திரப் பறவை
காற்றின் திசையில் பாய்ந்து
அதன் போக்கில்
கீழ்நோக்கி மிதக்கிறது.
பின் செந்நிற சூரியக் கிரணங்களில்
தன்னிறகுலர்த்தி
விண்ணையளக்கிறது.
ஆனால்
குறுகிய கூண்டிலடைப்பட்டிருக்கும்
பறவை எப்போதாவது
கம்பி வழியே எட்டிப் பார்க்கிறது.
அதன் சிறகுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
அதன் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அதனால் வாயைத் திறந்து பாடத் தொடங்குகிறது
கூண்டுப்பறவை இன்னமும்
தானறியாதவற்றைப் பற்றிய
ஏக்கத்துடனும்
பயத்துடனும்
பாடலிசைக்கிறது.
தூரத்து மலைகளில்
அதன் ராகம் கேட்கிறது.
கூண்டுப் பறவைக்கான
விடுதலை கீதமாக.
சுதந்திரப் பறவை
வேறொரு தென்றலை எண்ணிக் கொண்டிருக்கையில்
அசையும் மரங்களிடை
இளங்காற்று மென்மையாய்
வீசுகிறது.
விடியலின் வெளிச்சப் புல்வெளியில்
கொழுத்த புழுக்கள் காத்திருக்கின்றன.
வானத்தை தனக்கானதாய் அது எண்ணிக் கொள்கிறது.
கூண்டுப்பறவையோ
தன் கனவுகளின் கல்லறைமேல்
நின்று கொண்டிருக்கிறது.
அதன் நிழல் கூட நடுநிசிக் கனவாய்ப் பயமுறுத்துகிறது.
அதன் சிறகுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
அதன் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அதனால் வாயைத் திறந்து பாடத் தொடங்குகிறது.
கூண்டுப்பறவை இன்னமும்
தானறியாதவற்றைப் பற்றிய
ஏக்கத்துடனும்
பயத்துடனும்
பாடலிசைக்கிறது.
தூரத்து மலைகளில்
அதன் ராகம் கேட்கிறது.
கூண்டுப் பறவைக்கான
விடுதலை கீதமாக.
மூல ஆசிரியர் குறிப்பு :
மாயா ஏஞ்சலோ (Maya Angelou, Marguerite Annie Johnson, ஏப்ரல் 4, 1928 – மே 28, 2014, செயின்ட் லூயி, மிசௌரி) ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குனர், குடிமை உரிமைப் போராளி. இவர் இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவர் திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்டவர். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.
நன்றி : விக்கிப்பீடியா
எழுதியவர்
-
புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால்.
சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
இதுவரை.
- நேர்காணல்26 November 2022மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பூக்குழி
- கவிதை-மொழிபெயர்ப்பு31 January 2022மாயா ஏஞ்சலோ- கவிதைகள்
- மரபுக்கவிதை19 October 2021போற்று பெண்ணை
Superb. Very nice poems and nicely translated.