சாயந்திரம் அஞ்சு மணி ஆகியும் சூரியன் சளைக்காமல் காந்திக் கொண்டிருந்தது.
பஸ்ஸை விட்டு இறங்கியதும் மருதாம்பா சேலையை இழுத்து முக்காடு போட்டுக்கொண்டாள்.
“சே! எதிர்வெயில் மூஞ்சியில அடிக்குது. நல்லவேளை பஸ்ல எவளும் வரல. இல்லாங்காட்டி இப்ப என்னாத்துக்கு கோயிலுக்குப் போறனு நோண்டி நொங்கெடுத்திடுளுவாளுங்க.”
கால்களை வீசிபோட்டு வேகமாக நடந்தாள். ரோட்டோரம் வயலெங்கும் கத்தரியும் மிளகாயும் நட்டு வைத்திருந்தார்கள். மறுபக்கத்தில் சூரிய காந்திப் பூக்கள் முகந்திருப்பி நின்று கொண்டிருந்தன.
கோயில் குளம் காய்ந்து கிடந்தது. பக்கத்து தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவிக் கொண்டவள்
“செங்கலாச்சி இன்னைக்காச்சும் நல்வாக்கு கொடு தாயே“
கோபுரவாசலில் நெடுங்கிடையாக விழுந்தாள்.
அரசும் வேம்பும் இணைந்து நின்ற மேடையில் பதித்திருந்த வேலில் முந்தானையில் முடிந்திருந்த எலுமிச்சையை சொருகி வேண்டினாள்.
“ஏன்த்தா! மதியமே வந்திருந்தா யாகத்தில கலந்திருக்கலாமில்லே“
வெற்றிலை பாக்கை நீட்டியபடியே கேட்டாள் மலர்.
ஆரம்பத்தில் மரத்தடியில் துணியை விரித்து பூ பழம் விற்றவள், ஆத்தா அருளால் கீத்து போட்ட கடை போட்டுவிட்டாள். எல்லோருக்கும் படியளக்கிற ஆத்தா ஏனோ இவ பக்கம் கண்ணு தொறக்கல.
“ஏட்டி இன்னிக்கு விரிச்சி கேட்கலாமா?”
“கேட்கலாம் ஆத்தா. ஊரு சனம் பூரா உள்ளே குந்தியிருக்கு. நாச்சியாத்தாவும் இங்ஙனத்தான் இருக்காவோ.”
ஆத்தா கண்ணு தொறவே!
ஓட்டமும் நடையுமாய் உள்ளே நுழைந்தவள் மாகாளியை அரக்கப்பரக்க கும்பிட்டு சூலத்தடிக்கு வந்தாள்.
இரண்டு செப்புக்குடங்களில் மஞ்சள்நீரை நிரப்பி, வேப்பிலை உருவி போட்டிருந்தது.
சூலத்தம்மன் மஞ்சள் ,சிவப்பு பாவாடை கட்டி கம்பீரமாய் நிற்க; எதிரில் தட்டில் வெற்றிலை, பாக்கு, பணம் எனஆளாளுக்கு வைத்திருந்தார்கள்.
இடதும் வலதுமாய் வரிசை கட்டி உட்கார்ந்திருந்தார்கள்.
ஆளாளுக்கு ஆயிரங்கவலை.
சூலத்தடியில் பதினோரு ரூபாய் வைத்து அழைத்தால் போதும்.
நாச்சியம்மாள் மேலிறங்கும் ஆத்தா அவரவர் குறையைச் சொல்லி வாக்குக் கொடுப்பாள்.
நாமாக எதுவும் கேட்க முடியாது. ஆத்தா நம் குறையைக் குறிப்பாய்ச் சொல்லி கைநீட்டி அழைப்பாள். சூட்சமமாய் பரிகாரஞ் சொல்லுவாள். எத்தனையோ பேருக்கு நல்லது நடந்திருக்கு.
இத்தோடு மூன்று தடவை மருதாம்பா வந்து விட்டாள். இவளை ஒரு தடவையும் ஆத்தா அழைக்கவில்லை. இந்த முறையாவது வாக்கு கிடைக்கணும்.
“அட… இதென்ன கோராமையா இருக்கு. ஏன்த்தா உனக்கென்ன குறை? மவனையும் மவளையும் கரையேத்தி விட்டு கணக்கா கட்டுசெட்டா இருக்கிறவ இங்கெதுக்கு?”
பேத்திப்புள்ளையோடு வந்த அஞ்சலை அதிசயித்தாள்.
கொடும கொடுமயின்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம். இந்த சிறுக்கி இங்கயும் வந்துட்டாள்ளா. தோண்டித் துளாவுவாளே!
மவனையும் மவளையும் கரையேத்தறவரைக்கும் அந்தப்பாடு.
முடிஞ்சதும் நிம்மதியா தலை சாய்க்க முடியுதா? மவளோட புருஷன் நடத்தற கடையில ஏதோ நஷ்டம். ஒரு வருஷமா ஒப்பாரி வைக்கிறா. “கைவளவி காதுமூக்கில உள்ளது வரை அடகு வச்சிட்டாவோ. இது தான் கடேசி. இப்பவும் முடியாட்டி விஷத்தை தின்னு சாவோம் னு சொல்றாவோ மா. ஆத்தா கிட்ட கேட்டு சொல்லு. தம்பியாரனுக்கு தெரிய வேண்டா. நாளை பின்ன இளக்காரமாயிடும்”
உடப்பொறந்தானுக்கே தெரியக்கூடாதுங்றவ அஞ்சலைகிட்ட சொன்னா ஆய்ஞ்சுட மாட்டா? வாயோடு வந்ததை மென்னு முழுங்கிகிட்டு “அடி ஆத்தி ஆயிரங்காசு அண்டையில இருந்தாலும் அகங்குமுறிக் கிடக்கிறதை ஆத்தாகிட்ட தானே ஆத்திக்க முடியும்? உங்குறையை சொல்லி நேர்ச்சை பண்ணாம எங்கொறைக்கு ஏழரையைக் கூட்டறவ“
“சரித்தா! கோச்சுக்காதே! அவரவருக்கு ஆயிரத்தெட்டு.”என்றவள் “ஏத்தா அங்ஙன பாரேன்“
நாச்சியாள் தலைக்குக் குளித்து மஞ்சள் புடவையில் கையில் வேப்பிலை கலசத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
உட்கார்ந்திருந்தவர்கள் சடசடவென எழுந்து, அவள் வரும் திசையை நோக்கி கும்பிடு போட்டு ஆத்தா! எனக் கதற ஆரம்பித்தார்கள்.
இனி கருவறை உள்ளே போய் 108 போற்றி படித்து தன்னை உருவேற்றி ஆங்காரமாய் வெளி வருவாள். அப்போது ரூபமே வேறு மாதிரி இருக்கும். நெற்றிக் குங்குமமும் அவளும் தீப்பிழம்பாய் ஜொலிப்பார்கள்.
”யாத்தா! இங்ஙனக்குள்ளே பாரு. அந்த மூலையில குந்தியிருக்கிறது நம்ம சாமி அய்யா புள்ளை சோமு மாறியில்ல?”
தூக்கிவாரிப் போட்டது மருதாம்பாளுக்கு.
இத்தனை நாள் கழிச்சு இவருக்கு இங்கென்ன வேலை?
“அய்யோ! நாச்சியம்மை பார்த்தா வாக்கு சொல்லுமா?”
“அடியே! வாயைக் கழுவு! ஆத்தாவுக்கு யாராயிருந்தா என்ன? எல்லாம் ஒண்ணு தான்.”
“இருந்தாலும் சத்தியஞ் சொல்லி சாட்டிவிட்டு போனவரை ஆத்தா அப்படியே உட்றுமா?”
மருதாம்பாளுக்கு வயிற்றை கலக்கியது. வாழ்வா சாவானு நொந்து கிடக்கையிலா இவரு வரணும். ஆத்தா இப்படி சோதிக்கிறியே.
என்னதான் ஆத்தானு காலடியில விளுந்து கும்பிட்டாலும் அவ்வோளும் பொம்பளை தானே! நல்லது கெட்டது நாலும் பார்க்காம பொறந்த மேனிக்கு பொழுதும் வாளறது தொயரந்தானே!
இந்த முணுமுணுப்புகள் நாச்சியம்மை காதிலும் விழுந்தன.
போகிறபோக்கில் தலையுயர்த்திப் பார்த்தாள்.
சோமு தான். இளைத்து கருத்து போய் ஒடுங்கியிருந்தான். தலையும் மீசையும் நரை கூடியிருந்தது.இவர் ஏன் இப்ப இங்கே? உடம்புக்குள் மெலிதாய் ஒரு நடுக்கம் பரவியது.
கொஞ்ச நாளாகவே உள்ளுக்குள் ஒரே காங்கையாய் இருந்துகொண்டிருக்கிறது. உடலுக்குள் பளிச் பளிச்சென்ற மின்னல்வெட்டுகள் தீயாய்ச் சுட்டெரிக்கிறது.
ஆத்தா இறங்கும்போது கூட ஆக்ரோஷம் கொப்பளிக்கிறது.
ஏடாகூடமா ஏதாவது சொல்லிவிட்டால் என்ன பண்ணுவது?
நெஞ்சுக்குள் குமிழி குமிழியாய்ப் பொங்கி வந்தது.
பேசாம இன்னைக்கு வேண்டாம்னு சொல்லிடலாமா?
அவள் யோசிப்பதற்குள் பூசாரி உடுக்கையைத் தட்டி அம்மன் பாடலை ஆரம்பித்து விட்டார்.
இயந்திரகதியில் பூக்களைப் போட ஆரம்பித்தாள். இதுவரை இல்லாத கிரகமாய் மனசு புரண்டு புரண்டு அழிச்சாட்டியம் செய்தது. இருபது வருஷத்து நினைப்பையெல்லாம் பாதாள கரண்டி போட்டு கரண்டியெடுத்தது.
*******
சாமி ஐயா.. கிராமம் முச்சூடும் அவர் சொன்னதை கேட்கும். காலால இட்டதை தலையால செய்யும். ஊரு நாட்டாமையா எத்தனையோ பஞ்சாயத்து பண்ணி தர்மத்தை நிலைநாட்டியவர். கொஞ்சம் தளர்ந்ததும் எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டோடு இருந்தார். ஆனாலும் உதவினு கேட்டா அவராட்டம் உபகாரம் செய்ய அங்கே ஆளில்லை.
சாமி தாத்தாவுக்கு நாச்சியம்மை மீது அளவில்லாத பாசம்.
திண்ணையில் பெரிய பிரம்பு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருப்பார். அதன் கைப்பிடியில் இரண்டு பெரிய கைகள் போல தேக்கு சட்டம் இருக்கும்.அதை இழுத்து ஒன்றன் மேல் ஒன்று வைத்து பேப்பர் படிப்பார்.
“தாத்தா நா இந்த நாற்காலியில உட்கார்ந்துக்கவா?”
“ஏ குட்டி என்னைக் கட்டிக்கிறியா? இந்த நாற்காலி சீதனமா தர்றேன்.”
“போ தாத்தா! அவள் பழிப்பு காட்டுவாள்.”
“மாட்டியா? அப்ப என் மவனைக் கட்டிக்க.”
சோமுவுக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். அவளைத் திரும்பிப் பார்க்காமல் போவான். நாச்சிக்கு ஏழு வயசு.
அடிக்கடி சொல்லி சொல்லி நாச்சி அவனை கட்டினவனாகவே நினைத்தாள். வயசுக்கு வந்த பிறகு அவனெதிரில் கூட போகமாட்டாள்.
சோமு சாமி தாத்தாவின இரண்டாம்தாரத்து மகன். அவன் பிறந்ததும் அவன் அம்மா ஜன்னி கண்டு இறந்துவிட்டாள்.
முதல் தாரத்து பெண்களான நாச்சியின் அம்மாவும் பெரியம்மாவும் தான் அவனை வளர்த்தார்கள். சோமு யாரிடமும் ஒட்டாமல் இருந்தான். அதுவும் காலேஜ் படிக்க பட்டணம் போன பின்பு அதிகம் ஊருக்கு கூட வருவதில்லை.
சாமி தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை மோசமாகியது. இனி பிழைப்பது அரிது என்ற நிலையில் சோமுவிடம் அந்த சத்தியத்தை வாங்கினார்.
“நீ நாச்சியைக் கட்டிக்கணும்“
நாச்சியின் அப்பா வீரய்யாவும் பெண்ணைக் கொடுப்பதாகச் சத்தியம் செய்தார்.
சோமுவும் சத்தியம் செய்தான். சாமி தாத்தா காரியம் முடிந்தது. நாச்சி தான் அழுது குமித்தாள்.
எல்லாம் முடிந்ததும் ஊர்ப்பெரியவர்கள் கல்யாண நாள் குறிக்க கூடிய போது அவசர வேலை இருக்கு முடிச்சிட்டு வரேனு போனவன் திரும்பவேயில்லை.
“அவன் வேறொரு பொண்ணோட ஒண்ணுமண்ணா பழகிட்டானாம். அதனால நாச்சியைக் கட்டிக்க மாட்டானாம்“
அம்மா சொன்னதும் அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அப்பத்தா அவனுக்கு வாசாப்பு விட்டது.
நாச்சிக்கும் ஏமாத்தமும் அழுகையுமாய் இருந்தது. வீட்ல சொன்னதை செஞ்சிட்டு கிடந்தவளுக்கு பெரிசா அபிப்ராயமுமில்லை. வேணாமினு விடவும் மனசில்லை.எது எப்படியோ கண்ணாலம் நடக்கப்போறதில்லைனு அப்பத்தா ஒப்பாரி வச்சப்ப கூட சேர்ந்து அழுதா.
சாமி தாத்தா ஊருக்கே சாமி மாதிரி. அவர் முன்னே போட்ட சத்தியத்தை நினைச்சு உள்ளூரான் யாரும் நாச்சியைக் கட்டிக்க முன்வரல. இளந்தாரிகள் சம்மதஞ் சொன்னாலும் ஆயி அப்பன் ஒத்துக்கல.
வீரய்யன் மவளை கன்னி கழிச்சிவிடணும்னு தலைகீழா நின்னார். சல்லடை போட்டு தேடியும் ஒண்ணும் வசப்படல.
கடைசியில அசலூர் காளி இரண்டாந்தாரமா கட்டிக்க சம்மதிச்சான். அம்பது வயசுக்காரனுக்கு வாக்கப்படணுமானு அம்மாவுக்கு தான் விசனம்.
தெக்குமுனி கோயிலிலே வீரய்யன் சத்தியத்தை விட்டேன் விட்டேனு சொல்லி நல்ல விளக்கு சூடங் கொளுத்தி அப்புறமாத் தான் பரிசம் போட்டது.
இந்த மாக்காளி முன்னே தான் தாலி கட்டியது.
சாந்தி முகூர்த்தம் வச்சு காளி நாச்சியைத் தொட வந்தப்ப தான் ஆத்தா முதன் முதலா நாச்சி மேலிறங்கினாள். சடாரென்று கீழே படுத்து பாம்பு போல வளைந்து தரையில ஊர்ந்து மாக்காளி கோயிலுக்குள்ள பூந்தா நாச்சி. தலைமேல கையை வச்சு புஸ் புஸ்னு அவ மூச்சு விடறப்ப அஞ்சுதலை நாகம் மாதிரியே இருந்தது.
ஒட்டு மொத்த கிராமமும் அதிர்ற மாதிரி ஓ வென ஓக்காளமிட்டு கண்ணு சிவக்க அவ நாக்கு இரண்டடிக்கு நீண்டதா சொல்லிகிட்டாங்க.
ஒரு படி சூடனை கொளுத்தி முழுங்கினாளாம். ஆறு சொம்பு பால் குடிச்சு வேப்பிலை கடிச்சிகிட்டு பூசாரிக்கு அவ சொன்ன வாக்கில காளி அரண்டு போனான்.
குறிச்சி மேட்டில ஓலைக்கொட்டாய் போட்டு அவளை தங்கவச்சு தொணைக்கு அப்பத்தாவை இருக்கச் சொல்லிட்டு ஓடினவன் தான் … அந்தப்பக்கம் தலைவச்சு படுக்கல.
அன்னையிலேந்து நாச்சியாத்தா செவ்வா வெள்ளி குறி சொல்ல ஆரம்பிச்சா.
காசு பணத்தை கையால தொடறதில்லை. காளி வீட்டிலிருந்து சேலை துணிமணி மூணு வேளை சோறு வந்திடும்.
பொழுதைக்கும் வெறிச்சு உட்கார்றதும் குறி சொல்றதுமா காலம் ஓடிடுச்சு.
நடுவில பூசாரி மேல வந்த ஆத்தா நாச்சியை கோயிலுக்குள்ளே குடிவரச் சொல்ல…
அப்பப்ப சனங்க தர்ற காசு ஆத்தாவுக்கு சேர்ந்து சுத்து வட்டாரத்தில ஆத்தாவும் பிரபலமாச்சு.
பூசாரி அம்மன் துதி முடிச்சு நாச்சி தலையில் வேப்பிலை வைத்தார்.
“வா தாயி! நல்வாக்கு சொல்லு.”
நாச்சிக்கு உடலெல்லாம் தகமிறி அடங்கியது. கண்ணு மூடியிருக்க தலை அரைவட்டமாய் சுழன்றது.
கூட்டம் மொத்தமும் உணர்ச்சி கொந்தளிப்பில்..
ஆத்தா! ஆத்தா என கரைந்தது.
மருதாம்பாளுக்கு இப்போது அவ கவலையை விட சோமு கவலை பெரிசா தெரிஞ்சது. ஆத்தா அவனைக் கூப்பிடுமா? மனசு கிடந்து அடிச்சிகிட்டு.
ஆத்தா பெருங்குரலெடுத்து கூச்சல் போட்டது. ஆக்ரோஷமாய் உறுமிப் பின் சோமுவை நோக்கி கையை நீட்டியது.
கோழை மனசுக்கு குணமுமில்லை மணமுமில்ல.
கொண்டவ வாழ, விட்டவளை தேடி வந்தவனே எழுந்திரிச்சு வா!
சோமு ஓடிவந்து நெடுஞ்சாண்கிடையாக ஆத்தாவின் காலில் விழுந்தான்.
“மன்னிச்சிரு ஆத்தா. நல்ல வாக்கு கொடு ஆத்தா.”
ஆத்தா உக்கிரமாய் விழித்தது. உள்ளுக்குள்ளிலிருந்து பெருங்கர்ஜனை வெளிப்பட்டது. சன்னதத்தின் உச்சியில் விபூதியை அள்ளி வீசியது.
“அவ அக்கினிகுண்டத்தில இருக்கா. அங்க அணையனுமின்னா இங்க ஏத்தணும்.ஆடிப் பௌர்ணமிக்கு பூக்குழி இறங்கி அவ காலடியைப் புடிச்சிக்கோ. அவ பாடு உன் பாடு.”
ஆத்தா சட்டென ஆசுவாசமாகி மலையேறியது.
எழுதியவர்
-
புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால்.
சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
இதுவரை.
- நேர்காணல்26 November 2022மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பூக்குழி
- கவிதை-மொழிபெயர்ப்பு31 January 2022மாயா ஏஞ்சலோ- கவிதைகள்
- மரபுக்கவிதை19 October 2021போற்று பெண்ணை
சிறப்பான கதை.