17 September 2024

ரு மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு தொடக்கப் புள்ளி. அந்தத் தொடக்கப் புள்ளியிலிருந்து பல விசயங்கள் ஆரம்பமாகின்றன. இந்தக் கதையைப் போல.  

பக்தவச்சலம் பவித்திராவாகிய நான், பீப்பி என்று என்னிரு பெயர்களின் இனிஷியல்களால் அழைக்கப்பட்ட நான், ஒரு தனியார் ஏர்லைன்ஸில் நேற்று வரை கொள்ளை கொள்ளையாய்  சம்பாதித்து இலட்சங்களில் பேங்க் பேலன்ஸ் கொண்ட நான், மிட் தேர்ட்டீஸ் வயது கொண்ட நான்,  இத்தலைநகரின் கொழுத்த பணக்காரர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வீடுகளைக் கொண்ட காலனியில் அமைந்த எனது ட்யூப்ளக்ஸ் வீட்டில், ஹாலிலிருந்து மாடிப் படிக்கட்டுகள் ஆரம்பமாகும் இடத்தில்,  படிக்கட்டுகளில் பின்பாதி உடலும் ஹால் தரையில் முன்பாதி உடலும் தலைகுப்புற கிடக்கும் நிலையில் பொட்டுத் துணியில்லாத நிர்வாணத்தில் மரணித்துப் போனேன்.

என் மரணத்தை நான் யாரோடும் தொடர்பு படுத்திக் கொள்ள போவதில்லை. அது உங்கள் பாடு. மரணித்தப் பின் யாரோடும் அல்லது எதனோடும்  என்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள என்னால் எப்படி முடியும். மரணமென்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விசயம். தனித்துப் பிறந்தாற்போல தனித்தே மரணிக்க வேண்டும். ஆனால் நான் இரண்டு உயிராய் மரணித்திருந்தேன்.

ஆம். என்னுடைய வயிற்றில் இரண்டரை மாத ப்யூட்டஸொன்று  வளர்ந்து கொண்டிருந்தது. அதோடு தான் நான் மரணித்தது. ஒருவேளை மரணத்திற்கு அது கூட காரணமாய் இருந்திருக்கலாம். அது குறித்து பிற்பாடு நாம் பேசலாம். மன்னியுங்கள். நாம் பேச முடியாது. நான் பேசுவேன். நீங்கள் கேட்க மட்டுமே முடியும். மரணத்திற்குப் பிறகு அப்படித்தான்.

இப்போது காலை ஏழரை மணியாகிறதா. அப்படியானால் நான் இறந்து போய் ஒரு ஏழு அல்லது எட்டு மணி நேரம் இருக்கலாம். ஆம். நள்ளிரவில் தான் நான் என் வீட்டு  மாடியிலிருந்து தலைகுப்புற விழுந்து இதோ இந்த நிலையில் இறந்து போனேன். ஏன் விழுந்தேன். நேற்று வழக்கத்திற்கு மாறாய் கொஞ்சம் அதிகமாய்க் குடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். சரி சரி. அப்படி எல்லாம் பார்க்காதீர்கள். தவறு அல்லது சரி என்பதெல்லாம் வாழும் உங்களுக்குத்தான். இறந்த எனக்கல்ல.  

அந்த சண்டிகர் பைலட்டான ஹார்வீ எனும் ஹர்வீந்தர் தான் நேற்று என்னுடன் குடித்தான். அவனுக்கு பன்னிரண்டு வருடப் பழய ஸ்காட்ச் ப்ளென்டெட் ப்ளாக் லேபிள் விஸ்கியென்றால் அரைத்துத்தான் கலக்கியிருந்தது. மொடாக் குடி குடித்தான். அவனை எங்கே. ஓடிவிட்டானா. சரியான பயந்தாங்கொள்ளிப் பயல். கூட வேலை பார்க்கும் பெண்ணுடன் குடித்துக் கும்மாளமிட்டு பின்னர் உடலுறவும் வைத்துக் கொண்டுவிட்டு இரவோடு இரவாக தன் வீட்டுக்குக் கிளம்பி விடுவதை அவன் எப்போதும் வழக்கமாக வைத்திருக்கிறான். நேற்றைக்கும் அதைத்தான் செய்திருப்பான். என் வயிற்றில் வளரும் கருவைப் பற்றி அவனிடம் நேற்று பேசலாமென்றிருந்தேன். அதற்குள் ஓடிவிட்டான் என்று நினைக்கிறேன்.  சரி போய்த் தொலைகிறான் விடுங்கள். அவன் எப்போதுமே தன் பெண்டாட்டிக்குப் பயந்த பயல்.  

நானொன்றும் என் புருஷனுக்கு பயந்தவள் கிடையாது தெரியுமா. இன்னும் சொல்லப் போனால் இராபர்ட் மத்தாயூ இப்போது என் புருஷனே இல்லை.  நான் தான் அவனை ஆறு மாதங்களுக்கு முன்பே டிவோர்ஸ் செய்து விட்டேனே. அவனொரு பொட்டை. மீண்டும் மன்னியுங்கள். சர்வ சதா காலமும் வீட் (அதுதான் கஞ்சா) எடுத்துக் கொண்டு  போதையிலேயே தான் இருப்பான். அவனோடு எப்படிக் குடித்தனம் நடத்த சொல்லுங்கள். ராபர்ட்டோடு சேர்ந்து வாழ்ந்த மூன்றாண்டு கால வாழ்க்கையில்,  கல்யாணத்திற்கு முன் லிவ்-இன்னில் இருந்த இரண்டாண்டுகள் தான் சொர்க்கம். அதற்கு முன்னெல்லாம் எனக்கு குடிப்பழக்கமே கிடையாது தெரியுமா. அதற்காக இராபர்ட் தான் எனக்கு குடிக்கச் சொல்லித் தந்தான் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவனுடன் இருந்த காலகட்டங்களில் தான், நான் தினமும் குடிப்பது வாடிக்கையாகிவிட்டது. 

இராபர்ட் அத்தனை சுவையாய் மார்ட்டினி தயாரிப்பான். இதோ மாடிப்படி ஏறி வலப்புறம் திரும்பினால் வரும் மாஸ்டர் பெட்ரூமில் இருக்கும் கார்னர் பார் அவன் ஆசைக்கு வைத்தது தான். அதில் அப்போதெல்லாம் வித விதமான மது வகைகளை நிரப்பி வைத்திருப்பான். அதுவும் காணாதென்று வீட்டின் தரை தளத்திற்கு கீழே ஒரு செல்லார் வேண்டுமென்று ரொம்பவே அடம் பிடித்தான். நான் தான் வைத்துத் தரவில்லை. அவனுக்கு அதில் கொஞ்சம் இல்லை ரொம்பவே வருத்தந்தான். 

இராபர்ட் வருந்தாத விசயம் தான் எது. மழை பெய்தாலும் வருத்தம். பெய்யாவிட்டாலும் வருத்தம். சுள்ளென்று வெயிலடித்தால் வருத்தம். கடுங்குளிர் அடித்தாலும் வருத்தம். தினமும் ஏதாவது ஒரு வருத்தம் அவனுக்கிருக்கும். வருத்தம் வந்தவுடனே அவனுக்கு கஞ்சா வேண்டும். சில சமயங்களில் கஞ்சா எடுத்துக் கொள்வதற்காகவே அவனுக்கு வருத்தம் வருவதாய்க் கூடத் தோன்றும். அவனுக்கு மட்டும் இத்தனைச் சுத்தமான மாரியுவானா எங்கிருந்து தான் கிடைக்குமோ தெரியாது. அவன் அதை சிகெரெட்டுக்குள் வைக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை லாவகமாய் சிகரெட்டுக்குள் வைத்துத் தருவான். கைக்குள் வைத்து இலைகளை நன்றாக கசக்கி பின் சிகெரெட்டின் தாள் கொஞ்சங்கூட கசங்காமல் அதனுள் இருக்கும் புகையிலைகளை பாதிக்கு மேல் உதிர்த்து கிண்ணத்தில் தட்டிவிட்டு அதனுடன் கைகளில் வைத்து கசக்கிய மாரியூவானா இலைத் துகள்களை மிக்ஸ் செய்து மீண்டும் சிகெரெட்டுக்குள் கச்சிதமாக திணிப்பதில் கில்லாடி அவன். நுரையீரல் முழுவதும் நிறையும் அளவுக்கு ஒரு நீண்ட இழுப்பு இழுத்துப் புகைத்தால் ஒரே இழுப்பில் முதுகினில் இரட்டைச் சிறகுகள் முளைத்துவிடும். அடுத்தடுத்த இழுப்புகளில் ஜிவ்வென்று பறந்தேவிடலாம். அத்தனை சுத்தமான சரக்கிற்காகவே அவனை டிவோர்ஸ் செய்யாமலிருந்து இருந்திருக்கலாம் தான். ஆனால் போதையில் அவன் பேசும் ஏச்சுப் பேச்சுக்களை அதுவும் என் சம்பாத்தியத்தில் உக்காந்து தின்னும் ஒரு பொட்டைப் பயலிடம் நான் ஏன் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் சொல்லுங்கள். அதனாலேயே தான் அவனை டிவோர்ஸ் செய்தேன். 

அது மட்டும் தானா காரணம். கல்யாணம் ஆன தினத்திலிருந்து மத்தாயூ என்னிடம் சதா ஒரு குழந்தை பெற்றுக் கொடு குழந்தை பெற்றுக் கொடு என்று பினாத்த வேறு ஆரம்பித்து விட்டான். நான் அவனுக்குச் சம்பாதித்துக் கொடுப்பது மட்டுமல்லாமல் குழந்தை வேறு பெற்றுக் கொடுக்க வேண்டுமாம். உவ்வே.. குழந்தை என்று சொன்னாலே எனக்குக் குமட்டிக் கொண்டு வந்து விடுகிறது. என்ன செய்ய.  புத்திசாலி பெண்கள் யாராவது குழந்தை பெற்றுக் கொள்வார்களா.. அதுவும் பத்து மாசம் வயிறு வலிக்கச் சுமந்து.. நாளெல்லாம் வாந்தி எடுத்து.. தள்ளாடி தள்ளாடி நடந்து.. வலிக்க வலிக்க யோனி பிளந்து பெற்றெடுத்து.. மார் கணக்க பால் சுமந்து…. தூக்கம் தொலைத்து பாலூட்டி.. தோள் வலிக்க சுமந்து.. பின் ஒரு நாள் அந்தக் குழந்தை என்னைப் போலவே ‘அப்பனும் வேண்டாம் அம்மையும் வேண்டாம்’ என்று சொல்லி ஓடிப் போகும்.. அப்படி ஒரு அவஸ்தையை ஒரு நாளும் நான் எனக்கு தரவே மாட்டேன். அதனால் தான் ராபர்ட்டை ஓடிப் போ என்று விரட்டி அடித்து விட்டேன்.  

ஆனால் பாருங்கள் இறந்து கிடக்கும் என் உடலுக்குள் ஒரு கரு இருக்கிறது. (கதையின் ஆரம்பத்தில் நான்காவது பாராவில் துவக்க வரியில் சொன்னேனே அதற்குள் அதை மறந்து விட்டீர்களா என்ன?)  நீங்கள் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படாமல் நான் ஏன் என் அம்மையும் வேண்டாம் அப்பனும் வேண்டாம் என்று ஓடி வந்துவிட்டேன் என்பதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்..  அப்படித்தானே..   

பக்தவச்சலம் என்ற என் அப்பன் ஒரு மோசமானவன். ஆம். அவனை அப்பன் என்று விளிப்பதே கூட கொஞ்சம் மரியாதை கூடுதலான விளிப்பு தான். அவன் இண்டியன் ஆர்மியில் லெஃப்டினென்ட் கர்னெல் என்றால் தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆர்மி மேஜர்களை, அவர்களின் கேப்டன்களை, அவர்களுக்கும் கீழே இருக்கும் சிப்பாய்களை மேய்த்துக் கொண்டு அலைய வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு, முதலில் அவன் என் அம்மாவை மேய்த்துக் கொண்டலைந்தான். பின் என்னையையும் மேய்ப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். யாராலும்  மேய்க்கப்படப் பிறந்தவளில்லை இந்த பவித்ரா என்பதை அவனுக்குப் புரிய வைக்க நான் முயன்ற போதிலெல்லாம் அவன் என்னை ஒரு நாயை அடிப்பது போல தன் பெல்ட்டால் அடித்து விளாறினான். அவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கிறது மரியாதை.  

அம்மாவோ, தான் வாங்கிய அடிகள் தாளாமலோ அல்லது நான் வாங்கிய அடிகளை காணச் சகிக்காமலோ, எதனாலோ தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள் ஸ்ட்ரோக்கில் விழுந்தாள். அப்போது எனக்கு ஒரு பதினாலு அல்லது பதினைந்து வயதிருக்கும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியும் வீடுமாய் இருந்தவள் ஒரு நாள் வீட்டின்  மூலைப் படுக்கை அறை ஒன்றில் நிரந்தரப் படுக்கையாகிவிட்டாள். இந்த அப்பன் எனும் கிராதகன் அம்மாவைக் கவனித்துக் கொள்ள நர்ஸை நியமிக்கிறேன் என்ற போர்வையில் தனக்கு ஒரு தொடுப்பை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்துவிட்டான். அவர்கள் இரண்டு பேரும் அம்மாவின் அறையிலேயே, அவள் விழித்திருக்கும் போதே, அவள் முன்னாலேயே நாய்களை மாதிரி… இப்படி ஒரு தடவை இரண்டு தடவை அல்ல அதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான் அந்தப் பாவி. சிறு பிள்ளை நானென்ன செய்வேன். 

அப்போது தான் நான் படித்த பள்ளியில் என் நண்பர்கள் எனக்கு மாரியூவானாவை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆனால் பள்ளி நண்பர்கள் மூலம் கிடைத்த அந்த மாரியூவானா பின்னாளில் ராபர்ட் தந்த அளவிற்கு அத்தனை தரமானதாய் இல்லையென்றாலும் அது எனக்கு, என் வீட்டின் கவலைகளை மறக்க மிகவும் அவசியமாய் இருந்தது. பாதி நினைவிலும் பாதி போதையிலும் தான் பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்தேன்.  எப்போதடா அந்த வீட்டிலிருந்து விடுதலை அடைவோம் என்றிருந்த எனக்கு இந்த ப்ரைவேட் ஏர்லைன்ஸின் க்ரவுண்ட் ஸ்டாஃப் வேலையும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சம்பாத்யமும் கிடைத்ததும் நிரந்தரமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினேன். அப்பனின் மீது உள்ள கோவம் வெறியாய் என்னை உழைக்க வைத்தது. அந்த வெறித்தனமான உழைப்புக்கு பக்கத்துனையாய் மாரியூவானா இருந்தது. படிப்படியாக உத்தியோகத்தில் உயர உயர சம்பளமும் உயர உயர நன்றாக வாழலாம் என்று தான் இதோ இந்த வீட்டை சொந்தமாய் வாங்கினேன். ஆனால் இன்று அந்த வீட்டின் நடுவில் இப்படி ஒட்டுத் துணியில்லாமல் இறந்து போவேன் என்று நான் ஒரு நாளும் நினக்கவில்லை.

நான் நானாக போதையில் தடுமாறி விழுந்தேனா.. எனக்கு இப்போது யோசிக்கையில் நினைவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கிப் போனால், அதாவது, நேற்று நடந்தவைகளை ஒரு மறு யோசனை செய்தால் ஒரு வேளை என்ன நடந்தது  என்று ஞாபகத்துக்கு வரலாம். 

நேற்று எனக்கு ஸிக்ஸ்-டூ-ஸிக்ஸ் ட்வெல்வ் அவர்ஸ் ட்யூட்டி. அதுவும் டெர்மினல் த்ரீயில். இன்டர்நேஷனல் ஃப்ளைட்ஸ் ஹாண்ட்லிங். மாலை ஐந்தரை மணிக்கு பீய்ஜிங்க் டூ ஹீத்ரூ லண்டன், வையா டெல்லி அன்ட் பாரீஸ் ஃப்ளைட் தான் என்னுடைய ஸ்கெட்யுலில் லாஸ்ட் ப்ளைட். எல்லாம் பக்காவாக முடிந்து அந்த ஃப்ளைட்டை பத்திரமாக டேக் ஆஃப் பண்ண வைத்து ட்யூட்டி ஹாண்டோவர் சார்ட்டில் கையெழுத்திட்டு அஞ்சனா ஜெயினிடம் ஒப்படைத்து விட்டு கார் பார்க்கிங் வந்தால் எனக்கென ஏர்லைன்ஸ் அமர்த்தியிருந்த கால் டாக்ஸியான இன்னோவாக்கு அருகில்  ஹார்வீ நின்றிருந்தான். அபுதாபி-டெல்லி-பாட்னா ஃப்ளட்டில் இருந்து டெல்லியில் இறங்கியிருந்தான் போல. அவன் வீடிருக்கும் ஃபரீதாபாத்திற்கிற்கு போக அவனுக்கென ஒரு தனி டாக்ஸி இருந்தாலும் ஏர்லைன்சின் டெர்மினல் லாஜிஸ்டிக்கில் விசாரித்து நான் போகவிருந்த இன்னோவாவைத் தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிறான். ஒரு பொம்பளையை சுகிக்கும் விசயத்தில் ஹார்வீ மாதிரி ஆண்களுக்கு புத்தி நன்றாகத் தான் வேலை செய்கிறது. இந்த சமயத்தில் யார் யாருக்காக டாக்ஸி காத்திருக்கிறதென்று லாஜிஸ்டிக்கில்  விசாரித்திருப்பான். என் பெயரைக் கேட்டதும் குடிக்கவும் செய்யலாம் கும்மாளமும் போடலாம் என்று அவனுக்குத் தோன்றியிருக்கும். உடனே நான் போகவிருக்கும் காரைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான். எனக்கும் அவனைப் பார்த்ததில் கொஞ்சம் உற்சாகமாய் தான் இருந்தது. 

ஹார்வீ ஒரு மாதிரியான சுதந்திரம் விரும்பி. அவனுக்கு எல்லா நேரமும் உற்சாகமாய் இருக்க வேண்டும். தன் உற்சாகத்திற்கு தடையிடும் எந்த விசயத்தையும் அவன் அனுமதிப்பதில்லை. தன்னுடைய உற்சாகத்திற்கு குறுக்கே வரும் யாரையும் உடனே கழட்டிவிடுவதில் ஜித்தனாயும் இருந்தான். குறிப்பாக எந்த வித கமிட்மெண்ட்டுக்கும் உட்படாதவனாய் இருக்க விரும்பும் ஹார்வீ என்னுடைய ஆண் பிம்பமாய் தெரிவான் சில சமயம். ஆனால் அவனின் பெண்டாட்டியை மட்டும் அவனால் ஏன் விட்டுவிட முடியவில்லை என்பது எனக்குள் எப்போதும் ஒலிக்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி. என் சந்தோசத்துக்குக் குறுக்காக நின்ற ராபர்ட்டை நான் கழட்டி விடவில்லையா..?. அது போல ஹார்வீயும் அவன் பெண்ட்டாட்டியை விட்டு ஒதுங்கியிருக்கலாம் தான். ஏனோ அதை அவன் செய்யவே இல்லை. டெல்லியில் இறங்கும் நாட்களில் யாருடனாவது குடித்து கும்மாளமிட்டுவிட்டு, அது அர்த்த இராத்திரிக்கு பின் ஆனாலும் கூட , அவனுக்கு தன் பெண்டாட்டியிடம் போய்விட வேண்டும். ஒரு நாளாவது அவன் தன் பெண்டாட்டிக்கு முன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அவன் ஒரு நாளும் ஏற்படுத்தித் தந்தானில்லை. 

மேலும் ஒன்றிரண்டு பெக்குக்கு அப்புறம் அவன் பாடும் பஞ்சாபி பாடல்களின் சுருதியும் வரிகளும் அத்தனை உற்சாகமானவை. ஒரு அழகிய சாயங்காலத்தை  மேலும் இனிமையாக்குபவை. ஒரு மணி நேரம் குடிப்பான். பின் அரை மணி நேரம் செக்ஸ். பின் இரட்டையராய் ஒரு குளியல். அதற்கு பின் வெரி பர்ட்டிகுலராய் ஹோம் டெலிவர்டு பஞ்சாபி ஃபுட் .  அப்புறம் கால் டாக்ஸி வரவழைத்து வீட்டிற்குப் போவான். 

நேற்று வழக்கத்தை விட மாறுதலாய் நேரே படுக்கையறைக்குத் தான் என்னை அழைத்துப் போனான். பின் தான் குடிக்க ஆரம்பித்தான். நான் என் நைட் ரோபில் இருக்க, அவன் தன் யூனிபாரம் பேண்ட்டில் இருந்தான். ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் ஸிட்டவுட்டில் இருந்த மூங்கில் மோடாவில் ஒன்றில் அமர்ந்து இன்னொன்றை டீ-பாய்யாக மாற்றி குடிக்க ஆரம்பித்திருந்தான்.  

நான் சிக்ரெட் லைட்டரைத் தேடினேன். பர்ஸில் எப்போதும் இருக்கும் லைட்டரைக் காணோம். பெட் ஸைட் டேபிளின் ட்ராயரைத் திறந்தேன். அப்போது தான் அந்த கவர் கண்ணில் பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இமேஜிங் சென்டரில் ஸ்கேன் செய்த ரிப்போர்ட். ப்ரெக்னென்ஸி கன்ஃப்ரம் என்று சொல்லி எதோ ஒரு டாக்டரின் கையெழுத்தோடு இருந்தது. அந்தக் கவருக்கு அடியில் இருந்த இன்னொரு லைட்டரை எடுத்த போது அது பற்றி ஹார்வீயுடன் பேச வேண்டும் என்று நினைத்தவள் ஹார்வீ குடிக்கும் போது பாடும் பாடலின் சுருதி விலகாமல் இருக்க வேண்டுமென்றால் இப்போதைக்கு அவனிடம் இது பற்றி பேச வேண்டாம் என்று எண்ணம் எழவே கவரை மேஜை மீது போட்டு விட்டு லைட்டரை மட்டும் எடுத்துக்கொண்டு அவனருகே போய் உட்கார்ந்தேன். 

ஒரு ப்ளாக் லேபிள் பாட்டில் முழுவதும் காலியானது. இருவரும் மாறிமாறி ஊற்றிக் குடித்திருந்தோம். ஹார்வீ இரண்டாவது பாட்டிலைத் திறந்தான். நான் நான்காவது சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அப்போது யாரோ முன் வாசல் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஸிட்டவுட்டில் இருந்தே நான் யார் வருவது என்று பார்த்தேன். ராபர்ட் மத்தாயூ. 

இவன் எதற்கு இங்கே வருகிறான். காசில்லாமல் போய்விட்டால் ராபர்ட்டுக்கு இன்னமும் இந்த பவித்ரா ஞாபகம் தான் வருகிறது. ஹார்வீயும் ரபர்ட்டைப் பார்த்தான். அவன் முகம் மெலிதாகச் சுருங்கியது. நான் கிளம்பவா என்று கண்ணாலேயே கேட்டான். வேண்டாம் இரு என்று நானும் சைகையாலேயே சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் வந்தேன். 

அதற்குள் மேலேறி வந்தி விட்ட ராபர்ட், நேராய் மூலை மினி பாரில் இருந்த ஹன்ட்ரட் பைப்பரை ஒரு க்ளாஸுக்குள் நீட்டாக ஊற்றி, பக்கத்திலிருந்த ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரிலிருந்து ஐஸ் ட்ரேயை எடுத்துப் பிதுக்கி, நான்கைந்து கட்டிகளை க்ளாஸுக்குள் போட்டுக் கொண்டு மேஜைக்கருகில் வந்து விட்டான். அவன் கண்ணில் அந்த இமேஜிங் சென்டர் கவர் தெரிய அதைக் கையில் எடுத்துத் திறந்து பார்த்தான். எனக்கு கோவம் தலைக்கேறி விட்டது. கொஞ்ச நாள் புருஷனாக இருந்த பாவத்துக்கும் அவன் கொடுத்த அற்புதமான மார்ட்டினிக்கும் மாரியூவானாவுக்காகவுமே அவன் அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து போவதை அனுமதித்தால், அவனெப்படி என் அனுமதியில்லாமல் என் சம்பந்தப் பட்ட கவர்களையெல்லாம் பிரித்துப் பார்க்கலாம். என்ன தைரியம்.. கோவத்தில் நான் கத்த ஆரம்பித்தேன். 

என் கத்தலையெல்லாம் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாத ராபர்ட்  நிதானமாக் கவரில் இருந்த ரிப்போரர்ட்டைப் படித்தான். நான் கர்ப்பமாய் இருப்பது அவனுக்கு புரிந்து விட்டது. கையிலிருந்த கண்ணாடிக் க்ளாஸை எதிரிலிருந்த சுவற்றில் ஓங்கி எறிந்தான். அது சுக்கல் சுக்கலாய் உடைந்தது. சுவற்றில் அடித்திருந்த ப்ளாஸ்டிக் எமல்ஸன் பெயிண்டில்  ஹன்ட்ரட் பைப்பர் ஒரு மாடர்ன் ஆர்ட்டைப் போல வடிய ஆரம்பித்தது. க்ளாஸ் உடைந்த சத்தத்தில் ஸிட்டவுட்டில் இருந்து எழுந்து வந்த ஹார்வீயை ராபர்ட் பார்த்தான்.  ராபர்ட்டின் கோபம் அப்போது உச்ச பட்சத்தை அடைந்திருக்க வேண்டும். 

என்னை விட இந்த பஞ்சாபி எந்த விதத்தில் உனக்கு உசத்தியாகிப் போனான். எனக்குப் பெற்றுத் தராத பிள்ளையை இவனுக்குப் பெற்றுத் தரப் போகிறாயா..  என்று கத்தினான் ராபர்ட். அவன் பேச்சில் மூச்சில் கஞ்சாவும் விஸ்கியும் கலந்த வாசம் குப்பென்று வீசியது. ஹார்வீ ஒன்றும் புரியாதவனாக என்னையையும் ராபர்ட்டையும் வினோத ஜந்துக்களைப் பார்ப்பது போல பார்த்தான். கோபமும் போதையும் மித மிஞ்சியிருந்த ராபர்ட்டோ ஹார்வியைப் பார்த்து ஏன்டா அடுத்தவன் பெண்டாட்டிக்கு அலையற (யார் யாருக்குப் பெண்டாட்டி.. போதையில் ராபர்ட் உளறுகிறான்.) என்று கத்திக் கொண்டே, ஹார்வீ எதிர்பார்க்காத  தருணமொன்றில் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்திவிட்டான். பொளக்கென்ற சத்தத்துடன் ஹார்வீயின் சில்லு மூக்கு உடைந்து குபுக்கென்று இரத்தம் கொட்டத் தொடங்கியது. யூ ட்ரங்கன் பாஸ்டர்ட் என்று  அப்போதும் ஆங்கிலத்தில் திட்டிய ஹார்வீ தானும் ஒரு மூர்க்கன் தான் என்று காண்பிக்க பதிலுக்கு ரபர்ட்டைத் தாக்கத் துவங்கினான். 

இரண்டு பேருக்கும் நடுவினில் நான் பாய்ந்து பாய்ந்து அந்தச் சண்டையை விலக்க முயற்சித்தேன். என்னை அவர்கள் இருவரும் தள்ளி விட்டுவிட்டு தங்கள் சண்டையைத் தொடர்ந்தார்கள். அப்போது தான் என் நைட்ரோபின் முடிச்சிட்ட கயிறு அவிழ்ந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மூன்று பேரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். அந்தச் சண்டையில் ஒரு முறை பின் மண்டை மாடிப்படி ரெய்லிங்கில் பலமாக மோத நான் மயங்கினேன். எனது உடல் தட தடவென  படிகளில் சரிந்தது.  அப்போது தான் ஏற்கனவே அவிழ்ந்திருந்த என் நைட் ரோப் என்னுடலை விட்டு கழண்டிருக்க வேண்டும். இதுவரை தான் என்னால் இப்போது யோசிக்க முடிகிறது. இப்படித்தான் நான் இறந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

இல்லை. மயங்கித் தானே உருண்டேன். அப்போது இறக்கவில்லையே.. லேசாக நினைவு வந்தது என்றுதான் நினைக்கிறேன். அப்போது என் அப்பன் முகத்தை நான் பார்த்தேனே… அவனும் நேற்று இராத்திரி இங்கே வந்தானா.. வந்தாலும் வந்திருப்பான். அவனும் கொஞ்ச காலமாக என் வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தான். நான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தின் மீதும் இந்த வீட்டின் மீதும் அந்தப் படு பாதகனுக்கு ஆசை பிறந்திருக்கிறது. அவன் வரும் போதெல்லாம் நான் அவனை விரட்டி அடித்திருக்கிறேன். ஒருவேளை மயங்கிக் கிடந்த போது வந்தவன் தான் என்னை கொன்றானா.. செய்தாலும் செய்திருப்பான்.. 

பெட்ரூமிலிருக்கும் என் வார்ட்ரோப் திறந்திருக்கிறதா என்று பாருங்கள்.. திறந்து தான் இருக்கிறதா.. அதன் அடித்தட்டில் ஒரு டாக்குமெண்ட் ட்ரே இருக்குமே.. அதுவும் வெளியே இழுக்கப்பட்டிருக்கிறதா.. காலியாய் இருக்கிறதா.. சரிதான். அதில் தான் இந்த வீட்டுப் பத்திரம் இருந்தது. அதை என் அப்பன் தான் எடுத்திருப்பான். ராபர்ட்டுக்கு காசு மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வீட்டுப் பத்திரத்தை பற்றியெல்லாம் அவன் யோசித்திருக்க மாட்டான். அவன் கொஞ்சம் அப்பாவி. என் அப்பனுக்குத்தான் அது தேவை. ஹார்வீக்கு காசு வீடு இதெல்லாம் விசயமாகவே இருந்திருக்காது. நான் மயங்கியதுமே பயந்து போய் ஓடியிருப்பான். 

ஆக பீப்பி என்கிற பவித்ரா பக்தவச்சலமாகிய நான் இப்பொழுது முழுவதுமாக இறந்துவிட்டேன். என் அப்பன் தான் என்னைக் கொன்றான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் என்னைக் கொன்றது இது இரண்டாம் முறை. வெகு காலத்துக்கு முன்னமே அவன் என்னை ஒரு முறை கொன்றுவிட்டான். ஒரு பெண் பிள்ளைக்கு நல்லன அல்லன சொல்லித்தராதவன் ஒரு அப்பனே இல்லை. இல்லையா.. 

இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே போலீஸ் வரலாம். வராமலும் போகலாம். எப்படி வரும். அவர்களுக்கு நான் இறந்து கிடப்பது எப்படித் தெரியும். இந்த  காலனியின் அமைப்பு அப்படி. மக்கள் அப்படி. தனியாய் இருக்கும் ஒரு பங்களா மாதிரியான வீட்டிற்குள் என்ன நடந்தது.. என்ன நடக்கிறது என்ற அக்கறை இல்லாமல் தான் இருப்பார்கள். நானும் நேற்று வரை அப்படித்தானே இருந்தேன். நீங்களாவது நான் இறந்து கிடப்பதை போலீஸுக்குத் தகவல் சொல்லுங்கள்.. இல்லையேல் நான் இங்கே நாறிக் கொண்டிருக்க வேண்டியது தான். 

இருங்கள்.. இருங்கள்.. யாரும் சொல்லாமல் நீங்கள் என் வீட்டிற்குள் எப்படி வந்தீர்கள்.. ஏன் வந்தீர்கள்.. நான் ஏன் என் கதையை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

யார் நீங்கள்..?


 

எழுதியவர்

சுரேஷ் பரதன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x