30 April 2024

ருவம் தப்பிய ஒரு மழை இப்படி அடைத்துப் பெய்யுமென்று யார் நினைத்திருக்கக் கூடும். சினுசினுவென தூவானம் போட்டு ஆரம்பித்த மழை இப்போது வலுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பூமியோடு கொண்டுவிட்ட திடீர் மோகமென வானம் இரண்டு மணி நேரமாய் ஊற்றோ ஊற்றென ஊற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு நாள் மழையால் யாருக்கு என்ன இலாபம் அல்லது யார் யாருக்கு என்னென்ன நட்டங்கள் உண்டாகும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் மழையின் தாரைகளில் மனதை இலயிக்கவிட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த சுந்தரிக்கு அவளின் அன்றாடப் பாடுகளிலிருந்து இன்னுமொரு நாள் விடுதலையை மழை தன்னோடு கொண்டு வந்திருந்தது.

“நாளைக்கு இருட்டுறதுக்குள்ளே வந்துரு”ன்னு சொல்லி அனுப்பிய கணவன் அவளுக்காகக் காத்திருப்பான். கூடவே அவன், அவளுக்காகவே விட்டு வைத்திருக்கும் வேலைகளும் காத்திருக்கும். இந்த இரண்டு நாட்களாய் அவன் வீட்டு வேலைகள் எதையுமே செய்திருக்க மாட்டான். வீடு பெருக்கியிருக்க மாட்டான். கழற்றி எறிந்த துணிகளை அழுக்குத் துணிக் கூடையில் போட்டிருக்க மாட்டான். வெளியிலிருந்து வாங்கி வந்து சாப்பிட்டு பின் மீந்த உணவுக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் போட்டிருக்க மாட்டான், படுக்கையை மடித்திருக்க மாட்டான். எல்லாமுமே அவனுக்கு சுந்தரி தான் செய்ய வேண்டும். அதனாலேயே அவள் இருட்டுறதுக்குள்ள வந்துவிட வேண்டும்.

இந்த திடீர் மழை நின்றால் மட்டும் தான் ஊருக்குள் மரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு வரும் ஆறு மணி மினி பஸ்ஸைப் பிடிக்க முடியும். அதைப் பிடித்தால் கூட அவன் சொல்லியிருந்த அந்த “இருட்டுறதுக்குள்ளே” வீடு சென்றடைய முடியாது. அந்த மினி பஸ்ஸை தவறவிட்டாலோ, கூட்டு ரோடு வரை நடந்தே சென்று அங்கே அத்தி பூத்தாற்போல நின்று செல்லும் ஏதோ ஒரு ரூட் பஸ்ஸிற்காக எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் என்றே தெரியாமல் காத்திருக்க வேண்டும். அதன் பின் வீட்டிற்கு போய் சேர்வதற்கு எத்தனை மணியாகுமோ தெரியாது.

மழையோ இப்போதைக்கு விடுவதாய்த் தெரியவில்லை. மழையோடு நனைந்தே போய் பஸ்ஸைப் பிடிக்கலாமென்றால், இந்தக் கொட்டும் மழையில் இந்த சின்ன ஊரிலிருந்து யார் போகப் போகிறார்கள் .. அல்லது.. இங்கே யார் வந்து இறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி மினி பஸ்காரனுக்கு வந்து பஸ் ஊருக்குள்ளேயே வராமல் போய்விடக் கூடிய சந்தர்ப்பங்களும் சுந்தரியின் நினைவிலாடின.

கணவனின் “இருட்டுறதுக்குள்ளே”வில் ஆரம்பித்த எண்ணச் சங்கிலி மினி பஸ் வருமா வராதா வரை பின்னிப் பிணைந்த போதிலும் நீட்டிய கையில் விழுந்து தெறிக்கும் மழைத்துளிகள் அவள் முகத்தில் புன்னகையை அரும்பச் செய்தன. என்னவோ இந்த மழை இன்று தனக்காகவே வந்தது போலத் தோன்றியது. மழைக்கு ஏது வர்க்க பேதம். எல்லாருக்கும் பொதுவாய் வீசுகிற காற்றைப் போல, எல்லாருக்கும் பொதுவாய் காய்கிற நிலவைப் போல, எல்லாருக்கும் பொதுவாய் சுட்டெரிக்கிற சூரியனைப் போல, இன்று இந்த மழையும் கூட எல்லாருக்கும் பொதுவாகவே பொழிகிறது. இன்றைக்கு நான் சுந்தரிக்காக பெய்தேன் என்று மழை யாரிடமாவது சொல்லவா போகிறது.. அப்படியே மழை யாரிடமேனும் சொன்னாலும் கூட அதை அவர்கள் நம்பவா போகிறார்கள்..

மழை அப்படிச் சொன்னாலும் சொல்லாவிடினும், அதை யாரேனும் நம்பினாலும் நம்பாவிடினும், இந்த மழை இன்று எனக்காகவே பெய்கிறது என்பதை நான் நம்பத்தான் போகிறேன் என்று சுந்தரி தனக்குத் தானே சமாதானமாய்ச் சொல்லிக் கொண்டாள். இன்றைக்கு முன்னால் என்றைக்குப் பெய்த மழையில் நானிப்படி முகத்தில் நீர் தெறிக்க கை நீட்டி அமர்ந்திருந்தேன்.. யோசித்துப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு இது தான் முதல் தடவை மாதிரி தோன்றியது.

‘முப்பத்தைந்து வயது வரை யாராவது தன் கைகளை மழையில் நீட்டாமல் இருந்திருப்பார்களா என்ன.. ஒரு நாளேனும், ஒரு பொழுதாகிலும் நீட்டி நனைக்கத் தானே செய்திருப்பார்கள். நானும் அப்படி நனைத்திருப்பேன் தான். ஆனால் அது இப்போது சட்டென ஞாபகத்துக்கு வர மாட்டேனென்கிறது. அவ்வளவு தான்.’ தனக்குத் தானே ஒரு பொய்ச் சமாதானமும் செய்து கொண்டாள் சுந்தரி.

ஒரு முறை கூட்டு ரோட்டிலிருந்து கொட்டுகிற மழையில் நனைந்து கொண்டே வீடு வந்தது ஞாபகம் வந்தது சுந்தரிக்கு. கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். போட்டிருந்த காட்டன் தாவணி சட்டையோடு சட்டையாக ஒட்டிக் கொள்ள, நனைந்த சட்டையோ வெள்ளை நிற உள்ளாடையோடு திரண்டிருந்த மார்பகங்களையும் வெளிக்காட்ட முயல, கையிலிருந்த நீண்ட ரெக்கார்டு நோட்டைப் பாதுகாப்பு அரணாகப் பிடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடி வர எத்தனிக்க, மழையில் தொப்பலாய் நனைந்த ஈரப் பாவாடையோ அவளை வேகமாக நடக்க விடாமல் தடுக்க, எத்தனை முறை அந்த மழைக்கால மாலையைச் சபித்திருப்பாள். அதன் பின்னான நாட்களில் குடையில்லாமல் கல்லூரிக்குப் போனதேயில்லை அவள். அந்தக் குடைக்குள் இருந்தபடிக்கும் கூட தன் கையை வெளியே நீட்டி நனைத்த மாதிரியான நினைவுகள் கூட இல்லை அவளுக்கு. அன்று மழையைச் சபித்ததனால் தான் தன்னால் இப்படி நிதானமாய் மழையை இரசிக்கும் பாக்கியம் இதுவரை தனக்குக் கிட்டவேயில்லை போலும் என்றும் நினைத்துக் கொண்டாள்.

முதுகுக்குப் பின்னால் ஏதோ அரவம் கேட்க, மழையிலிருந்த தன் கவனத்தை மாற்றாமல் திரும்பிப் பார்த்தாள் சுந்தரி. அம்மா நின்றிருந்தாள். அம்மா தன்னை பார்க்கும் தொனியிலிருந்து அவள் தன்னை மறந்து விட்டாள் என்பது தெரிந்துவிட்டது. அம்மாவுக்கு அல்சைமர். எதுவும் சட்டென மறந்துவிடும் ஒரு நோய்.

“எப்பத்திலிருந்து மழை பெய்யுது.” அம்மா கேட்டாள். அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் அம்மாவிடம் ஆறு மணி பஸ்ஸை பிடிக்க முடியாமல் மழை பெய்து கொண்டிருப்பதைச் சொல்லிவிட்டு, அதன் பின்னர் தான் சுந்தரி வராண்டாவிற்கே வந்திருந்தாள். அம்மா அதையும் மறந்துவிட்டாள்.

“சுந்தரி வந்திருந்தாளே! போயிட்டாளா..?” அம்மா மறுபடி கேட்டாள். அவளது இந்தக் கேள்வி சுந்தரிக்கு பழகிவிட்டிருந்தது.

“அம்மா.. நாந்தான் சுந்தரி.”

அம்மா அதைக் கவனிக்காமலேயே.. “சித்ரா வந்தப்புறம் தானே போறதா சொன்னா.. அதுக்குள்ள போயிட்டாளா. ?”

“அம்மா.. அம்மா.. சித்ரா இன்னும் வரலை. நான் இன்னும் போகலை. மழை விட்டாத்தான் போக முடியும் .. மழை விடுற மாதிரி தெரியலை. வராண்டாவுக்கு எதுக்கு வந்த.. எதுனாச்சும் வேணுமா..?”

“நான் எதுக்கு வந்தேன்.. படுத்திருந்தேன். இங்கே எதுக்கு வந்தேன்.? தெரியலையே. மறந்துட்டேன் போலிருக்கு. மழை பெய்யுதே.. மாடியில சேலை அலசிக் காயப் போட்டிருந்தேன். நனைஞ்சிரும். சித்ரா எங்க காணோம்.? நீ யாரடி பொண்ணே..? சித்ராவை பாக்க வந்தியா.? ஏன் மழையில உக்காந்திருக்க.. உள்ள வாயேண்டியம்மா.”

இப்படி பேசுவது அம்மா இல்லை. அவளது அல்சைமர் தான். சில சமயங்களில் அவள் இப்படித்தான் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள். அவள் படுக்கையைவிட்டு எதற்காக எழுந்திருந்திருப்பாள். இயற்கை உபாதையாய்த் தான் இருக்கவேண்டும்.

“பாத்ரூம் போனுமாம்மா..”

அம்மா அதற்குப் பதில் சொல்லாமலேயே நின்றாள். சுந்தரி மெல்ல எழுந்து அம்மாவின் அருகில் போனாள். திரும்பவும் கேட்டாள்.

“அம்மா பாத்ரூம் போகனுமா.. ”

“அப்படித்தான் போல இருக்கு. எதுக்கும் ஒரு தரம் போயிட்டு வர்றேன்” என்ற அம்மா நிலைப்படி தாண்டி உள்ளறைக்குள் காலை வைத்தாள். அப்படித் தாண்டும் போது அங்கேயே நின்ற வாக்கிலேயே சேலையோடு அம்மாவுக்குச் சிறுநீர் கழிந்தது. அம்மா பதறிப் போய் காலை இங்கே அங்கே வைக்க முயன்று தடுமாறினாள். சுந்தரி அம்மாவை அவள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள். அம்மா முகஞ்சுளித்தாள். தன்னைத் தானே அருவருப்பாய் உணர்ந்திருப்பாள் போல.

“பரவால்லம்மா.. முழுசும் போயிடு.. அப்புறமா துணி மாத்திக்கலாம்.” அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா நின்றவாறே முழுவதுமாய் சிறுநீர் கழித்தாள். முடிந்தவுடன் சற்றே ஆசுவாசமானாள். சுந்தரி வராண்டாவிலிருந்து உள்ளறைக்குப் போகும் கதவைச் சாத்தினாள். அம்மாவின் துணிகளையெல்லாம் அங்கேயே கழட்டிப் போட்டு விட்டு அவளை பாத்ரூமிற்கு கூட்டிப் போனாள். ஏற்கனவே ஆன் செய்து வைத்திருந்த கெய்ஸரிலிருந்து வெந்நீர் பிடித்து அதனுடன் குளிர்ந்த நீர் கலந்தாள். வெதுவெதுப்பான அந்த நீரில் அம்மாவைக் கழுத்துக் கீழே குளிப்பாட்டினாள். உடம்பின் மேல் நீர் பட்டதும் அம்மாவுக்குத் தன் நினைவு திரும்ப வந்திருக்க வேண்டும்.

“சுந்தரி.. நீ இன்னும் போகலையா..? இன்னைக்கு வந்துருன்னு மாப்பிள்ளை சொன்னதாகச் சொன்னேல்ல.. சித்ரா இன்னுமா வரலை.? மழை விடவே இல்லையா.?. ஆறு மணி மினி பஸ்ஸை பிடிக்க முடியாது போலயே..

“பரவால்லம்மா. நான் அவர்கிட்ட போன் பண்ணி சொல்லிக்கிறேன். என்ன கொஞ்சம் கோபப்படுவாரு. பாத்துக்கலாம்.”

சுந்தரி அம்மாவைக் குளிப்பாட்டி, மாற்று உடை உடுக்க வைத்தாள். பின் ஹாலுக்கு வந்து அம்மா சிறுநீர்க் கழித்த ஈரத்தை பினாயில் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்தாள். அம்மாவின் நனைந்த பழைய உடைகளை எடுத்து வாஷிங்மெஷினில் போட்டு அதை ஓடவிட்டாள். அம்மாவின் சிறுநீர் வாடை தன் மீதும் அடித்தாற் போல் அவளுக்குத் தோன்றியது. உடனே அவளுக்குக் குளிக்க வேண்டும்போல இருந்தது. மழையோ இன்னும் விட்ட பாடாய் இல்லை. அவளுக்குச் சட்டென ஒரு யோசனை வந்தது.

வராண்டாவைத் தாண்டி, முற்றத்தைத் தாண்டி, தெருவாசல் கதவை நோக்கிப் போனாள். அதை இழுத்துச் சாத்தினாள். தன் சேலையைக் களைந்து முற்றத்து வராண்டாவில் எறிந்தாள். வெறுமனே பாவாடை ரவிக்கை மட்டும் அணிந்தவளாய் தலைக்கு மேல் வலக் கையை ஒரு சிறு குடை போலப் பிடித்தவாறு வராண்டாவிலிருந்து முற்றத்தில் இறங்கினாள். பாட்டம் பாட்டமாய் பெய்துகொண்டிருக்கும் ஒரு பெரு மழையைச் சிறு கை கொண்டு தடுத்துவிட முடியுமா. சுந்தரியின் தலையில், நெற்றியில், முகத்தில், மார்பில், முதுகில், கைகளில், உடையில்லாத அவளது இடுப்பில், கால்களில், பாதங்களில், என அவளது அங்கமெங்கும் தன் பெருந்துளிகளால் நனைக்கத் தொடங்கியிருந்தது மழை.

மழை மேலும் வலுக்க ஆரம்பித்தது. மெல்லத் தன்னை மறந்தாள் சுந்தரி. மழை.. மழை.. மழை.. மழை மட்டுமே அவளின் நினைவுகள் பூராவும் ஆக்கிரமித்து இருந்தது. மினி பஸ்ஸை மறந்தாள். உள்ளே அடுக்களைக்கு அடுத்த அறையில் படுத்திருக்கும் அம்மாவை மறந்தாள். அம்மாவுக்கு இருக்கும் அல்சைமரை மறந்தாள். அம்மா நின்ற வாக்கில் சிறுநீர் கழிப்பதை மறந்தாள். அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸாக இருக்கும் தன்னுடைய தோழி சித்ரா வரவில்லை என்பதை மறந்தாள். சித்ரா வந்தால் தான் தன் கணவனிடம் திரும்பிப் போக முடியும் என்பதை மறந்தாள். தன் கணவனை மறந்தாள். அவன் சொல்லியிருந்த அந்த “இருட்டுறதுக்குள்ள வந்துரு”வை மறந்தாள். வரமுடியாது என அவனுக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்ததை மறந்தாள். மழை .. மழை.. மழை .. மழை.. மழை .. மழை.. என மழை மட்டுமே அவளை அந்த நிமிடம் ஆக்கிரமித்திருந்தது.

மெல்லக் கால்களை சற்றே விரித்து தன்னைத் தானே சுற்றும் ஒரு கோளென அவள் மெல்லச் சுற்ற ஆரம்பித்தாள். அவள் சுற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவளது பாவாடை ரங்க ராட்டினமாய் சுற்றத் துவங்கியது. அதிலிருந்தும் இப்போது நீர்த் தாரைகள் வட்ட வட்டமாய் விழ ஆரம்பித்தது.

சுந்தரி தன் தலையை உயர்த்தி அண்ணாந்து மேலே பார்த்தாள். வானமே தெரியவில்லை. கோடு கோடாய் விழும் மழை மட்டுமே அவளுக்குத் தெரிந்தது. ஆ’வென வாய் பிளந்து வாய்க்குள் மழை நீரை ஏந்த முற்பட்டாள். பெரிய பெரிய துளிகளாய் அவள் வாய்க்குள் நீர் விழுந்து நிறைய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மழை நீரை அருந்தத் துவங்கினாள்.

வெளிக் கதவை யாரோ தட்டும் சத்தம் சன்னமாய்க் கேட்டது. ஏதோ பிரமை என நினைத்த சுந்தரி, மழையிலேயே இலயித்துக் கிடந்தாள். இப்போது கதவு தட்டும் சத்தம் கொஞ்சம் பலமாகக் கேட்க, சுந்தரி வராண்டாவில் களைந்து எறிந்த சேலையைப் பார்த்தாள். பின் கதவைப் பார்த்தாள். யார் வரப் போகிறார்கள் இப்போது. சித்ராவாகத்தான் இருக்கும். எதற்கும் கதவு சாவித்துவாரம் வழியாகப் பார்ப்போம் என்று கதவை நெருங்கினாள். பார்த்தாள். ஆமாம். சித்ராவே தான்.

சின்னக் குடை ஒன்றைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு பாதி நனைந்தும் பாதி நனையாமலும் சித்ரா வாசலில் நின்று கொண்டிருந்தாள். இப்படி நனைந்து தான் வரவேண்டுமென்றால் கையில் அந்தக் குடை எதற்கு என யோசித்தவாறே கதவைத் திறக்கப் போன சுந்தரிக்கு தான் பாவாடை ரவிக்கையில் நிற்பது சட்டென நினைவுக்கு வர, கதவை ஒருக்களித்தாற்போல கொஞ்சமாய்த் திறந்து, கழுத்து மட்டும் வெளியே தெரியுமாறு ஒரு கையை நீட்டி சித்ராவின் கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைச் சாத்தினாள்.

“சின்னப்புள்ளையா நீ.. இப்படி மழையில நனைஞ்ச்சுட்டிருக்கே” என்று கேட்ட சித்ராவை சிரித்தபடியே பார்த்த சுந்தரி அவளையும் மழைக்குள் இழுத்துவிட்டாள். “என்ன பண்ற சுந்தரி?” என்று கேட்டவளைச் சட்டை செய்யாமல் அவள் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தாள். சித்ராவால் ஒழுங்காகச் சுற்றமுடியாதவாறு அவளது நனைந்த சேலை தடுக்க, அவள் கீழே விழப் பார்த்தாள். சுந்தரி, சித்ராவின் சேலை முந்தானையைப் பிடித்து இழுத்து, சேலை முழுவதையும் அவிழ்த்துப் போட்டாள். மெல்ல மெல்லச் சுந்தரியின் சந்தோசம் சித்ராவைப் பற்றிக் கொண்டது. இருவரும் வேகவேகமாக ஒருவரது கைகளை இன்னொருவர் இறுகப்பற்றிக் கொண்டு இரட்டை இராட்டினங்களாய்ச் சுற்றினார்கள். இருவருக்கும் தலை கிறுகிறுக்கும் வரை சுற்றியவர்கள் ஒரு நேரத்தில் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அப்படியே முற்றத்துத் தரையில் பொத்தென்று உட்கார்ந்தார்கள். சித்ராவின் தோளில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சுந்தரி. மூசு மூசுவென அவள் மூச்சுக் காற்று சித்ராவின் தோளின் மீது விழுந்தது.

சித்ராவின் தோளில் உஷ்ணமாய் விழுந்த சுந்தரியின் மூச்சுக்காற்று, அவளுக்குள் எதோ ஒரு சிலிர்ப்பை உருவாக்கிற்று. அவள் தன் முகம் சுந்தரியின் மார்புகளுக்கு மத்தியில் உரசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். தன்னைப் போல இன்னொரு பெண்ணின் மார்பில் தானே தான் முகம் புதைத்திருக்கிறோம். ஆயினும் இது என்ன.. மெல்ல மோகம் மேலெழும்புகிறதே. விலகி விடுவோமா என ஒரு கணம் யோசித்தாள். விலகாமல் அப்படியே அணைத்துக் கொண்டிருப்பதில் கிடைத்த அந்த புதுச் சுகத்தினையும் தான் விரும்பத் துவங்கியிருப்பதை அவள் உணர்ந்தாள்.

சுந்தரிக்குள்ளும் அதே மாதிரியான ஒரு மாறுதல் அந்தக் கணத்தில் நிகழத் துவங்கியிருந்தது. சித்ராவின் அனல் மூச்சு அவள் மீது விழவிழ அவளுக்குள்ளும் மெல்ல மெல்லச் சிறு தணல் ஒன்று எழுந்தது. புஸ் புஸ்ஸென அடுத்தடுத்த மூச்சு மோதல்களில் தணல் பல நாக்குகளை நீட்டிநீட்டி தீயாய் மாறிற்று. எழும்பிய தீயின் உஷ்ணம் சட்டென உடலெங்கும் பரவியது. அது பரவிய வேகத்தில் சித்ராவை அப்படியே இறுக்க வைத்தது. இழுத்து அணைக்க வைத்தது. சுந்தரி சித்ராவை இறுக்கித் தழுவினாள்.

சித்ரா, சுந்தரியின் கன்னம், நெற்றி, காது மடல்கள் என ஒவ்வொரு அங்கமாய் முத்தமிட்டாள். சுந்தரியும் அதற்கு இசைவாய் தன் அங்கங்களை அவளுக்கு சுவைக்கக் கொடுத்தாள். இருவர் மீதும் பெய்து கொண்டிருந்த மழை இருவருக்குள்ளும் எரியத் துவங்கிய அனலை ஊதி ஊதி பெரிதாக்கியது. இருவரும் மெல்ல எழுந்து சுந்தரியின் அம்மா படுத்திருந்த அறைக்கு எதிராக இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தார்கள்.

சித்ரா சுந்தரியின் அம்மாவை இந்த அறையின் வாசலிலிருந்தே பார்த்தாள். அவளது நெஞ்சுக் கூட்டில் சீரான சுவாசம் மேலெழுந்து கீழிறங்குவதிலிருந்து அம்மா நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தாள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. சித்ரா இந்த அறையின் கதவைச் சத்தமின்றிச் சாத்தினாள். மழையருந்திய இரண்டு பெண் பறவைகள் வெம்மை தேடி ஒரு கான்கிரீட் கூட்டிற்குள் நுழைந்து கொண்டன. வெளியே பெய்து கொண்டிருந்த மழை மேலும் வலுக்கத் துவங்கியது.


 

Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Naanal
Naanal
7 months ago

அழகான இரசிக்கத் தக்க விவரணைகளுடன் கதை சிறப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள் அண்ணா

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x