3 December 2024
pm ks

வானம் இருளின் திட்டுக்களை முழுமையாக விலக்கிக் கொள்ளாமல் விடியவா வேண்டாமா என்று யோசித்தபடியிருந்தது. வீட்டிற்கு அடுத்ததாக இருந்த காலி மனையில் வளர்ந்து கிடக்கும் மரங்களின் கிளைகளிலிருந்து கிளிகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டிருந்தது.

‘இந்த பிள்ளைய ஒருநாள் மிந்தி புறப்பட்டு வான்னு சொன்னா கேட்டுச்சா. இப்ப பாரு எட்டு மணிக்கு அங்க இருக்கணும் . இந்த பிள்ளைய இன்னும் ஆளக் காணல. போன போட்டா சுவிட்ச் ஆஃப்ங்குது.’ லலிதாவின் பார்வை வாசலில் தெய்வாவை தேடியபடி பரபரத்துக் கொண்டிருந்தது.

‘வந்திருவா சித்தி. விசனப்படாதீங்க. ’ கலா சமாதானப்படுத்தினாள்.

கலாவின் சமாதானமெல்லாம் துளியும் லலிதாவிற்குள் ஏறுவதாய் இல்லை. அவள் விழிகள் படபடப்பை விடுவேனா என்றன. தெய்வானைக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து லலிதாவிற்குள் குடியேறிய படபடப்பு; வருடங்களாகியும் சூடு குறையாமல் அப்படியே இருக்கிறது.

காலையில் சீக்கிரம் எழுப்பி அமர வைத்துவிட்டார்களே என்ற கோவத்தில் கலாவின் மூத்த வாண்டு முகத்தை உர்ரென்று தொங்கவிட்டிருந்தது. சத்தமில்லாமல் கண்ணிலிருந்து கன்னத்திற்கு இறங்கிக் கொண்டிருக்கும் கண்ணீர் வரிகளோடு.

‘உன்னோட சின்னவ தான. அவ எப்படி சமத்தா ஆச்சிக்கூட நின்னுகிட்டா. நீயும் நின்னுருக்கலாம்லா. ஒருநாள் தான. திரும்பி நில்லு’ குழந்தையின் முதுகில் சோப்பு போட்டுக்கொண்டிருந்தாள் கலா.

கலாவிற்கும் தெய்வாவிற்கும் இரண்டு வருடம், ஒருநாள் வயது வித்தியாசம். கலா கல்லூரி முடித்திருந்த அடுத்த வருடத்தில், அவளுக்கென்று வரன் பார்க்க ஆரம்பிக்கும் முன்னாலேயே எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் வீடு தேடி வந்து அமைந்தது. திருமணம் முடித்திருந்த அடுத்த மாதமே நல்ல செய்தி. ஐந்தாம் மாதத்தில் இருந்தபோது அம்மை போட்டு அதற்குமேல் அலுவலகத்திற்குப் போக முடியாமல் தவித்த பொழுது ‘நான் சம்பாதிக்கிறதே தாராளம் போரும். நீ வேற எதுக்கு கிடந்து கஷ்டபடுற.’ என்ற கணவனின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் வேலையைத் தூக்கியெறிந்து விட்டாள். அன்று அவளுக்கு இருந்த மனநிலை அப்படி. முதல் குழந்தையின் மூன்றாவது வயதில் இரண்டாவது குழந்தை என்று வேகமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில்; இரண்டாவது குழந்தையையும் பள்ளியில் சேர்த்து விட்ட பிறகு உருவாகியிருந்த வெற்றிடம் கையை விட்டுப் போயிருந்த வேலையின் நினைப்பை அவ்வப்பொழுது தலைதூக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. தனக்குள் இருக்கும் விடுபட்டவைகளை சொன்னால் உள்ளிழுத்துக் கொள்ளும் காதுகள் இல்லை என்று அவற்றை அவளுக்குள்ளாகவே பூட்டிக் கொண்டாள்.

‘நீயெல்லாம் இப்ப வேலை பார்திட்டா இருக்க. இந்த பிள்ளை வேலைய விட்டுட்டு ஒருத்தனுக்கு கழுத்த நீட்டுகதுக்கும் சம்மதிக்க மாட்டேங்குது. இவ சொல்லு கோட்டுக்கு கீழ வரவனுக்கு ஒன்னுல ஜாதகம் பொருந்தல, இல்ல அவுகளுக்கு நம்மள பிடிக்கல, நமக்கு அவுக குடும்பம் பிடிக்கலனு ஒன்னு மாத்தி ஒன்னு.’ திறந்துக் கிடந்தக் குளியலறை வாசலைப் பார்த்தபடி லலிதா புலம்பிக் கொண்டிருந்தாள். தண்ணீர் விழும் சத்தத்தோடு சில சிணுங்கல்களும் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தது.

‘அந்த மனுஷனும் என்ன போட்டுட்டு விதி முடிஞ்சிட்டுன்னு அவன் போக்குக்கு போயிட்டான். நான் கிடந்து சீரழியுறேன். இதாவது நல்ல படியா முடிஞ்சிட்டா  போதும். மேல இருக்கவனுக்கே வெளிச்சம்.’ லலிதாவின் ஆற்றாமையை வாசற்கதவின் க்ரீச் குறுக்கிட்டது.

வீட்டிற்குள் நுழையும் தெய்வாவை பார்த்து லலிதா முறைத்தபடி நின்றிருந்தாள்.

‘சாரிமா. ஜார்ஜர ரூம்ல மிஸ் பண்ணிட்டு கிளம்பிட்டேன். சாரி சாரி.’ தலையைச் சரித்து கொஞ்சலாக லலிதாவைப் பார்த்தாள் தெய்வா.

‘கடைசி நிமிஷத்தில அவசர கோலம் அள்ளித்தெளின்னு நின்னா அப்படிதான் ஆகும். முன்னகூட்டியே பாத்து எடுத்து வைக்கனும் .’

‘சாரிம்மா.. ..என் டார்லிங்ல.’ தெய்வா லலிதாவை கட்டிக் கொண்டாள்.

‘போதும். அப்டியே சிலிப்பி மலிப்பீருவா. ’ லலிதா தெய்வாவை உடலிலிருந்து பிரித்து விட்டாள்.

‘இது என்னடி , இப்படி வந்திருக்க.’ குழந்தையை இடுப்பில் இருத்தி வைத்து ஒற்றைக் கையால் தலை துவட்டிக் கொண்டிருந்தாள் கலா.

‘அச்சுக் குட்டி…..’ தெய்வா குழந்தையின் கன்னத்தில் செல்லமாக கிள்ளி வைத்தாள்.

கலாவின் இடுப்பிலிருந்த குழந்தையின் முகம் மாறாமல் உர்ரென்றே இருந்தது.

‘நல்லா கேளு. கேட்டா சொல்லுகா சுடிதார் போர் அடிக்க்குண்ணு. சும்மாவே சுத்தி இருக்கவங்க புள்ளைக்கு வயசாச்சுலான்னு ஜாடை மாடையா பேசுறாங்க. இதுல இவ வேற லீவுக்கு வரும்போதுலாம் இப்படி புடவைய சுத்திட்டு வந்து இறங்குகா.’

‘ஆமா எல்லாருக்கும் புடவை தான் போர் அடிக்கணும்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்னா. வருஷக்கணக்கா சுடிதார் போட்டு எனக்கு போர் அடிக்குது. ’

‘அந்தால பதிலுக்கு பதில் வாயாடிட்டு நிக்காம போய் புறப்படு.’ லலிதா அதட்டினாள்.

முதல் தடவைப் பெண் பார்ப்பதற்காகக் கிளம்பி வந்திருந்தபொழுது தெய்வா புதுப்புடவை வாங்கி, குரோம்பேட்டை விஸ்வநாதர் கோவிலில் அர்ச்சனைப் பண்ணி எடுத்து வந்திருந்தாள். அடுத்தடுத்த முறைகள் கடந்துபோகக் கண்டிப்பாகப் புதுப் புடவை வேண்டுமா என்றானது. இந்த முறை கிளம்பும்பொழுதே எதிர்பார்ப்புகள் கூடாதென்று மனதிடம் வலுக்கட்டாயமாகக் கட்டளையிட்டுக் கூட்டி வந்திருக்கிறாள்.

*****

கோவில் பிரகாரத்தில் ஐவருமாக உட்கார்ந்திருந்தார்கள். கலாவின் அம்மா சரிதா நேரடியாகக் கோவிலுக்கு வந்து மூவரோடும் இணைந்திருந்தாள்.

குழந்தை தெய்வாவின் மடியில் இருந்தது. ராமர் பச்சை நிறத்தில் நீலக் கரையிட்டிருந்த பட்டுப் புடவையைப் பாந்தமாக உடுத்தியிருந்தாள். முகத்தைப் பளிச்சிட்டுக் காட்டும் அரக்கு நிறப் பொட்டு. தோள்பட்டையில் உரசும் மல்லிச்சரம். கைக்கு இரண்டு தங்க வளையல்கள். சேலை மாராப்பு படபடக்காமல் பிடித்து வைத்துக் கொள்ளும்படியான கனத்த ஆரம். உட்கழுத்திற்கு ஓம் டாலரோடிருந்த மெல்லிய சங்கிலி என்று அம்சமாக அமர்ந்திருந்தாள்.

‘பூ நீயா கெட்டுனா.’ சரிதா லலிதாவிடம் கேட்டாள்.

‘இல்ல. தெக்கு வீட்டு பிள்ள கெட்டித் தந்தா.எனக்கு இவ்வளவு நெருக்கம் வராதுலா’

‘ம்ம். வீட்டுல பூத்ததுதான.’

‘ஆமா.’

‘இன்னும் வரக்காணலிய.’ எல்லோரின் கண்களும் கோவில் வாசலை ஒருமுறை திரும்பிப் பார்த்தது.

‘நம்ம அறக்க பறக்க ஓடியாந்தோம்.’

‘இன்னொருக்க போன போடு.’

‘கொஞ்சம் நேரங்கூட பாப்போம். மாப்பிள்ளைக்கு அப்பா பக்கத்தில வந்திட்டோம்னு தான் சொன்னாரு.’
‘இதுக்குதானாம்மா என்ன அந்த விரட்டு விரட்டுன.’

லலிதா பதில் பேசாமல் தெய்வாவை முறைத்ததில் தெய்வா வேறு பக்கமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

‘திருப்பி ஒரு அடி அடிச்சு கேட்டா கொள்ளாம். அரை மணிக்கூர்க்கு மேலாச்சுலா.’ லலிதா சொல்லி வாயை மூடுவதற்குள் சரிதாவின் சேலை மடிக்குழிவில் கிடந்த கைபேசி சிணுங்கியது.

‘நாங்க உங்களுக்காசிட்டி காத்துக் கிடக்கோம். நீங்க என்ன…’

‘… ’

இணைப்பைத் துண்டித்து விட்டுப் பதில் பேசாமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரிதா.

‘என்ன சொல்றாங்க. வராங்கல்லா.’ லலிதாவின் படபடப்பு ஒருபடி மேலேறியது.

தெய்வாவால் ஏதோ ஒன்றை ஊகிக்க முடிந்தது. அவள் அமைதியாகப் பெரியம்மாவின் முகத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அவங்க பொண்ண பாத்திட்டாங்களாம்.’

‘பாத்திட்டாங்களா. ’

‘ஆமா. கோவில்ல தான் இருந்திருக்காங்க அவங்களும்.’

‘கோவில்லியா. நம்ம வாசலையே தான பாத்துகிட்டு இருந்தோம்.’

‘அதுக எங்க பதுங்கி கிடந்து பாத்துகிச்சுகலோ. போட்டோல பார்த்தப்போ வேற மாதிரி தெரிஞ்சது. நேருல பார்க்கப்போ பையனுக்கு பொண்ண புடிக்கல, அதான் கிளம்பிட்டோம்ன்னு சொல்லுகான் மாப்பிள்ளைக்கு அப்பன்.’

தன்னைமீறி மேலெழும்பிய கண்ணீரை கட்டளையிட்டு நிறுத்திக் கொண்டாள் தெய்வா.

*****

கோவிலிருந்து லலிதாவை சமாதானப்படுத்திக் கூட்டி வருவது பெரும்பாடாய் போயிருந்தது. சரிதாவும் அவர்களோடு வீட்டிற்கு வந்திருந்தாள். லலிதாவும் சரிதாவும் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

கூடத்திற்கு வலப்பக்க அறையில் தெய்வாவோடு கலா பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘அந்த புள்ள உடஞ்சு போயிருக்கும். கூடவே இரு.’  சரிதா அழுத்தமாகச் சொல்லியிருந்தாள். அப்படியான எந்தக் கவலை ரேகைகளும் தெய்வாவின் முகத்தில் தடம் பதித்திருக்கவில்லை என்பதே கலாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

‘இது எங்க எடுத்த போட்டோ டி.’

‘ப்ளூ லகூன் ரெஸ்ஸாட்.’

‘எல்லாரும் ஸ்கூல் காலேஜ்ல தான் குரூப் போட்டவ வாங்கிட்டு வருவோம். நீ என்னடி ஆபிஸ் குரூப் போட்டேவை ஃபிரேம் போட்டு வச்சிருக்க. ‘

‘ஸ்கூல் படிக்கிறப்ப காசு இல்லாம எத்தனையோ குரூப் போட்டோ வாங்கமலேயே விட்டிருக்கேன். இப்ப ஈஸியா மொபைல்லியே கிடைக்குதுல. கிடைக்கும் போது அனுபவசிக்கிலாமேன்னுதான்.’

‘அது சரி. ’

‘எல்லாரும் மார்டனா நிக்கிறாங்க. நீ மட்டும் முடிய பிண்ணி போட்டுட்டு இப்படி நிக்கிற.’

‘அதுக்கென்ன.’

‘இல்லடி எல்லாரும் மார்டனா வர இடத்தில நீ இப்படி போன நல்லா இருக்காதுல.’

‘வந்தா வரட்டும் டி. எல்லாருக்காகவும் வேஷம் போட்டுட்டு போய் நின்னா தான் எனக்கு மூச்சு முட்டுகால இருக்கும். இதான் எனக்கு கம்பர்டபிள்.’

தெய்வாவின் கைப்பேசி இடைமறித்தது.

‘ …’

‘ஐ ப்ரிஃவேர் வீக்கேண்ட்.’

‘… ’

‘ஆஃப்லைன்தான் பர்ஸ்ட் ப்ரிவரென்ஸ். ஸ்லாட் இல்லேன்னா கேன் அட்ஜெஷ் வித் ஆன்லைன். ‘

‘… ’

‘ஓகே தேங்ய்யு.’

‘சிங்கிங் கிளாஸிற்க்கு கேட்டிருந்தேன். அதான் டீடெய்ல்ஸ் கேக்குறாங்க.’ பட்டுப் புடவையை மடித்துக் கொண்டிருந்தாள் தெய்வா.

‘சிங்கிங் கிளாஸ்ஸா? யாருக்குடி.’

‘எனக்குதான்.’

‘உனக்கா.’

‘இது முடிஞ்சு.’ புடவையை அலமாரிக்குள் வைத்து பூட்டினாள்.

‘சரி வா. மொட்டை மாடில போய் பூ பறிச்சி.’ தெய்வா நகர்ந்தாள். கலாவும் எழுந்து கூட நடந்தாள்.

*****

வானம் வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையேயான போராட்டத்தில் சத்தமில்லாமல் சிவந்து கிடந்தது.

‘என்னடி திடீர்னு பாட்டு கிளாஸ்.’

‘சும்மாதான்டி.’

‘சும்மாவா.இந்த வயசுலியா.’

‘ஒன்பது வயசா இருக்கப்ப அப்பாக்கிட்ட கேட்டேன். ஒழுங்கா படி. அதான் வாழ்க்கைக்கு உதவுமுன்னு முடிச்சு விட்டுடாங்க.’

‘அடிப்பாவி. அதுக்குண்ணு இப்ப போக போறியா.’

‘ ம்ம்ம்.’அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது என்பதாக தோளை உலுக்கிக் கொண்டாள்.

மடியில் பிடித்திருந்த நைட்டி படிப்பில் மல்லிகைப்பூவை நிரப்பிக் கொண்டிருந்த தெய்வாவை கலா இன்னும் வியந்துப் பார்த்தாள்.

‘எப்டி டி இப்டி’

‘ எது எப்டி. எது இப்டி.’தெய்வா சிரித்தாள்.

‘இல்ல அங்க இருந்து மெனக்கிட்டு பொண்ணு பார்க்கண்ணு கிளம்பி வந்திருப்ப.’

‘ஆமா.’

‘எப்படி உன்னால ஈஸியா எடுத்துக்க முடியுது. ’

‘வருத்தம் இல்லனு யாரு சொன்னா.’ மொட்டுக்கள் ஏதும் விடுபட்டிருகிறதாவென செடியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்

‘…’

‘புரியுதுடி ஏன் இப்படி கேக்குறேன்னு.’

‘வீட்டுல டைனிங்க் டேபிள்ல பார்த்தேல. என்னலாமே வச்சு அடச்சு போட்டிருக்கு.அப்பா இருக்கப்ப வாங்குனது.எனக்கு தெரிஞ்சு வாங்கின புதுசில கூடிப்போனா ஒருமாசம் அதுல உட்கார்ந்து சாப்பிட்டிருப்போம். அதோட முடிஞ்சு. அந்த அடுக்களைல அது எதுக்கு கிடக்குன்னு அதுக்கே இந்நேரத்துக்கு மறந்து போயிருக்கும்.’

‘என்னடி என்னென்னவோ உலருக.’

‘கிட்டதட்ட அப்படிதான்டி நம்மளும் வாழ்ந்திட்டு இருக்கோம். பிறந்த கொஞ்ச நாளுக்கு தான் கொண்டாட்டம். அப்புறம் எதைஎதையோ தூக்கி எதுக்குன்னே தெரியாம வாழ்க்கையில அடச்சிக்கிறோம்.அதை எதுக்கு சுமக்குறோம்ன்னு கூட தெரியாம சுமந்தபடியே முடிஞ்சும் போயிடுறோம். எனக்கு அப்படி வாழ்ந்திட்டு போக இஷ்டமில்ல.’

தெய்வாவின் மடியில் நிரப்பியிருந்த மல்லிகை மொட்டுக்களில் ஒன்றிரண்டு லேசாக விரிந்திருந்தன.


Note : The painting used in this story was edited by artificial intelligence. We confirm that we do not use the paintings for commercial purposes. The name of the original Artist is unknown. However, we thank him.

எழுதியவர்

பத்மகுமாரி
பத்மகுமாரி
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது சென்னையிலுள்ள ஐ. டி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இவர் எழுதும் சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இவரின் சிறுகதைகள் ”நட்சத்திரம்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வாசகசாலை பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x