18 July 2024

சுந்தரேசன் பேருந்து நிலையத்தின் கடைக்கோடியிலிருந்த பெட்டிக் கடையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து கோல்ட் ஃபில்டரை வாங்கி, அருகில் தொங்கிக் கொண்டிருந்த சற்றே தடித்த சணல் கயிற்றின் முனையில் எரிந்து கொண்டிருந்த கங்கில் அதைப் பற்ற வைத்து., ஆழமாக ஒரு இழுப்பு இழுத்தான். சிகரெட்டின் புகையை கால் நிமிடத்திற்கு தனக்குள்ளேயே வைத்திருந்து விட்டு பின் குனிந்தவாறு பாதியை மூக்கின் வழியாக வெளியேற்றி, மீதியை வாய் வழியாக ஊதினான்.  பின் நிமிர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றி ஒரு நோட்டமிட்டான். நிலையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரண்டு பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அந்தப் பேருந்துகள் இனி காலை நான்கு மணிக்கு மேல்தான் கிளம்பும். இரவு பத்தரை மணிக்கு மேல் சிறிய நகரமான அவ்வூரில் இருந்த அந்த சிறிய பேருந்து நிலையத்தில் அரை மணிக்கொருதரமோ அல்லது முக்கால் மணிக்கொருதரமோ தான் மொஃபசல் பஸ்கள் வரும். இப்போது தான் ஒரு பஸ் யாராவது ஏறுவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்து பின் யாரும் ஏறாமலேயே கிளம்பிச் சென்றது.  அவனும் யாருக்கோ காத்திருப்பது போலவே காத்துக் கொண்டிருந்தான். சிகரெட் கொஞ்சம் கொஞ்சமாய் புகையாகவும் சாம்பலாகவும் கரைந்து கொண்டிருந்தது.

அங்கங்கே திறந்திருந்த கடைகள் எல்லாம் ஒவ்வொன்றாக அடைக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு ஒரு மிதமான இருள் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துவிடும். அதற்கு பின்னர் அவன்  சிகரெட் வாங்கிய இந்தப் பெட்டிக் கடையும் ஐந்து கடைகள் தள்ளி இருந்த டீக்கடையும் எதிர் புறத்தில் இருந்த நகராட்சி கட்டணக் கழிப்பிடமும் மட்டுமே திறந்திருக்கும். அங்கே மட்டுமே விளக்குகள் எரியும். அது தவிர அரசு பேருந்து கழகத்தின் டைம் கீப்பருக்கென்று இருந்த ஒரு சின்ன அறையில், அறைக்குள் ஒன்றும், அதன்  சன்னலுக்கு அருகில் ஒன்றுமாய் இரண்டு ட்யூப் லைட்டுகள் எரிந்து கொண்டிருக்கும். இப்போது  அங்கே ஒன்றிரண்டு பேர் அடுத்து வரவிருக்கும் பஸ்ஸைப் பற்றி டைம் கீப்பரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

சிகரெட்டின் நெருப்பு அதன்  பஞ்சு நுனிவரை வந்தவுடன் கடைசி இழுப்பை அதி வேகமாக உறிஞ்சியவன்  அதைக் கீழே போட்டான். அது வரை கடையின் பின்புற தகரத்திலிருந்த கைப்பிடி போலிருந்த ஒன்றைப் பிடித்திருந்த தனது இடக்கையை எடுத்து இதுவரை தொங்க விட்டிருந்த, முட்டிக்குக் கீழே சிறு வயதில் போலியாவினால் பாதிக்கப்பட்டு மிக ஒல்லியாய் சூம்பிப் போயிருந்த தன் இடது காலில் ஊன்றி அதை நேரடியாக கீழே எறிந்த சிகரெட்டின் மீது வைத்து இன்னும் மிச்சமிருந்த நெருப்பை அணைத்தான். ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்ததால் தொடையில் ஏற்பட்ட சின்னதான ஒரு வலியை போக்குவதற்காக நடக்க ஆரம்பித்தான். அதை நடையென்று சொல்ல முடியாது. வலது காலை ஊன்றி தொங்கிக் கொண்டிருக்கும் இடது காலில் கையை வைத்து அழுத்தி இடது காலை ஊன்றும் பொழுது கையை முட்டியில் ஊன்றுவதற்காக சற்று குனிந்து, இடது காலை ஊன்றி, வலது காலை ஊன்றும் பொழுது நிமிர்ந்து, பின் இடது காலை ஊன்ற மீண்டும் குனிந்து என்று ஒருவித ஆட்டத்தைப் போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தான்.  நேராக பஸ் நிலையத்திற்குள் வரும் வாசலை நோக்கி நடந்து பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தான்.  சற்று தள்ளி இருந்த சிறு சுவர் ஒன்றில் சாய்ந்தபடி பேண்ட்டின் வலது பக்க பாக்கெட்டில் இருந்த தனது மிகச் சிறிய சாம்சங் போனையெடுத்து மணி பார்த்தான். இரவு பதினொன்றேகால். மீண்டும் அதை பாக்கெட்டுக்குள் போட நினைத்தவன்., அதில் சற்று முன் அழைத்த எண்ணிற்கு  ஒரு மிஸ்டு கால் கொடுத்து உடனே அணைத்தான். பின் நன்றாக அந்தச் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். பாக்கெட்டிற்குள் போனை வைப்பதற்கு முன் அதில் பேட்டரி எவ்வளவு இருக்கிறது என்றும் பார்த்துக் கொண்டான். கண்டிப்பாய் அதில் சற்று நேரத்திற்குள் அழைப்பு வருமென்று அவனுக்குத் தெரியும். இப்போது அவன் அடுத்து வரும் பஸ்ஸிற்காகவும் போன் காலிற்காகவும் காத்திருந்தான்.

சுந்தரேசன் அங்கே நின்று கொண்டிருந்தபோது ஒரு ஆட்டோ அவனுக்கருகில் வந்து நின்றது. அதை ஓட்டி வந்த கணேசன் அவனிடம்  “என்ன சுந்தரம் சாப்பிட்டியா? நான் இன்னும் சாப்பிடலைப்பா.. நீயும் சாப்ப்பிடலேன்னா வர்ரியா நைனார் கடையில பரோட்டா சால்னா வாங்கித் தர்றேன்.. ” என்று கூப்பிட்டான்.

“வீட்டுக்குப் போகலையாண்ணே.. நைனார் கடைக்கு சாப்பிட போற.. ”என்று பதிலுக்கு சுந்தரேசன் கேட்டான்.

“வீட்டில அவங்க அவங்கம்மாவுக்கு உடம்பு முடியலன்னு பாக்கப் போயிருக்காங்கப்பா.. அதான் சாப்பிட்டுட்டு போலாமேன்னு வந்தேன். உன்னைப் பாத்தேனா அதான் கேட்டேன். உனக்கு இன்னிக்கு யாரும் கஸ்டமர் கிடைக்கிலயா…”

“இல்லேண்ணே.. இப்போதான் வந்தேன்.. அடுத்த பஸ்ஸில யாராச்சும் கிடைப்பாங்களான்னு பாக்கணும்..”

“யாராச்சும் கிடைச்சா என்னைக் கூப்பிடுறயா? நான் வேணா ட்ராப் பண்றேனே.. ஒரு முப்பது ரூவா கிடக்குமேப்பா.. பரோட்டா காசு…”

“சரிண்ணே.. ஆனா ஏம் மொபல்ல காசில்லைண்ணே.. மிஸ் கால்தான் கொடுப்பேன்.. உடன்னே வந்துருவியா…”

“ஏ.. கண்டிப்பா வர்றேம்பா.. நீ ஆளைப் புடிச்சி வைய்யி….. ” என்றவாறு கணேசன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு போனான்..

கணேசன் போனதும் மீண்டும் ஒருமுறை போனையெடுத்துப் பார்த்தான் சுந்தரேசன். அதில் கால் ஏதும் வந்திருக்கவில்லை. திரும்பவும் மிஸ் கால் கொடுக்கலாமா என்று யோசித்தான். வேண்டாம்.  ‘வேலை முடிஞ்சா நானே கூப்பிடுவேம்ல.. சும்மா சும்மா கால் பண்ணாதேன்னு எத்தனை தரம் சொல்றது’ன்னு செம்பகம் திட்டும். போனை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான். வயிறு லேசாய்ப் பசிப்பது போலிருந்தது. கணேசண்ணங்கூடவாவது சாப்பிட போயிருக்கலாம். சட்டைப் பாக்கெட்டில் இருபத்தைந்து ரூபாய் இருந்தது. இன்னுமொரு சிகரெட் பிடிக்கலாமா வேண்டாம். இருக்குற காசுக்கெல்லாம் சிகரெட்டா புடிக்கிறயான்னு அதுக்கும் செம்பகம் திட்டும்.  அடுத்த பஸ்ஸிலாவது யாராவது வெளியூர்க்காரன் வந்தா நல்லா இருக்கும்.

அந்த ஊரில் ஒரு லேத்துப் பட்டறை இருந்தது. காமராசு தான் ஓனர். அவர்கிட்டே நல்லா தொழில் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். ரோட்டுல ஓடுற எந்தக் காராயிருந்தாலும் சரி ஒருதரத்துக்கு இரண்டு தரம் பாத்தான்னா அதுக்கு கதவு, பானெட்டு, டிக்கின்னு எது வேணுமோ அதை அந்தக் கார் கம்பனிக்காரனாட்டம் அச்சு அசலா அதே மாடல்ல, அதே வளைவு நெளிவோட தட்டி ரெடி பண்ணிருவாப்பல.. அதனால காமராசு லேத்துப் பட்டறை ஊரு உலகத்துக்கெல்லாம் பேமசு. ஒருதரம் வட நாட்டுலேர்ந்து இந்தி மட்டுமே பேசத் தெரிஞ்ச ஒருத்தன் வந்து இப்படியெல்லாம் செய்யறது தப்பு. ஓம்பேர்ல கேசைப் போட்டு கோர்ட்டுக்கு இழுத்துருவேன்னு காமராசை மிரட்டிப் பாத்தான். ஒன்னால முடிஞ்சதப் பாத்துக்கப்புன்னு அவனை விரட்டிய கதை ஊரெல்லாம் பேச்சாய்க் கிடந்தது. அதனால் காமராசு பட்டறைக்கு வெளியூரிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்த வண்ணமிருந்தனர்.

அப்படி வருபவர்களை பஸ் ஸ்டாண்டிலேயே மறித்து அருகிலிருந்த ரத்னா லாட்ஜுக்கு அழைத்துச் செல்வான் சுந்தரேசன். அப்படி அவன் அழைத்து செல்வர்கள் லாட்ஜ் ரூம் பிடித்திருந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்றால் லாட்ஜ் மேனேஜர் ஒரு இருபது ரூபாய் தருவார். வெளியூர்க்காரர் நேரடியாய் போய்விட்டால் அந்த இருபது ரூபாயும் கிடைக்காது. ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு இரண்டு  பேரையாவது பிடித்து விடுவான் சுந்தரேசன். வருபவர்களெல்லாம் மோட்டார் ஓர்க் ஷாப் வத்திருப்பவர்களோ அல்லது அது சம்பந்தமான  தொழில் செய்பவர்களாகவோ  இருப்பார்கள். அவர்களுக்கும் சல்லிசான வாடகையில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தங்க  ரூம் கிடைத்தால் போதுமென்று நினைப்பவர்கள் தான் இந்த ஊரில் இரவு தங்க வருபவர்கள். அப்படி ஆட்களை பஸ் ஸ்டாண்டில் பார்த்தவுடனேயே கண்டு பிடித்துவிடுவான் சுந்தரேசன்.

இன்று யாரும் மாட்டவில்லை. இப்படி ஆட்கள் மாட்டாத நாட்களிலெல்லாம் சுந்தரத்தின் பாடு அதோகதிதான். ஆனால் சுந்தரேசன் ஆள் பிடிப்பதை மட்டும் செய்வதில்லை. லாட்ஜில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான சாப்பாடு, தண்ணீர் பாட்டில், சிகரெட், வேண்டுமென்றால் குவார்ட்டர், ஹாஃப் எல்லாம் வாங்கித் தருவான். அவர்கள் தரும் ஐந்தோ பத்தோ ரூபாய்க்கு அவர்கள் சொன்னதையெல்லாம் வாங்கி வருவான்.  சிலபல சமயங்களில் லாட்ஜ் மேனேஜருக்கும் சாப்பாடு வாங்கி வருவான். அவர் சொன்ன வேலைகளையெல்லாம் செய்வான். அவர் நல்ல மனநிலையில் இருந்தால் பத்து ரூபாய் கொடுப்பார். இல்லையென்றால் தர மாட்டார். இவனும் ஒன்றும் சொல்லாமல் எல்லாம் செய்வான்.

சுந்தரேசனுக்கென்று யாரும் கிடையாது. அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான். எப்போது இந்த ஊருக்கு வந்தான். எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் இப்படி சொற்பக் கூலியோடு வேலை செய்வதினால் பார்ப்பவர்களெல்லாம் ஏதேனும் ஒரு வேலை சொல்வார்கள்.  இவனும் செய்வான். தருகிற காசை பெற்றுக் கொள்வான்.  இராத்திரி வேளைகளில் ரத்னா லாட்ஜுக்கருகில் தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்பவரிடம் சாப்பிட்டுவிட்டு பன்னிரண்டு மணி வரை ஆள் பிடிப்பான்.

இன்றும் அப்படித்தான் ஆள் பிடிக்கத்தான் காத்திருந்தான். பஸ் வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. செம்பகத்திடமிருந்தும் போன் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சுந்தரேசன் சாய்ந்த வாக்கில் நின்று கொண்டிருந்தான். அப்போதுதான் அவர் வந்தார்.

“ஏம்பா நீ இந்த ஊர்தானா? பஸ் ஸ்டாண்ட் பக்கம் லாட்ஜேதும் இல்லையே..? உனக்குத் தெரியுமா ?” என்று கேட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்காப்புல வந்த மாதிரி சுந்தரேசனுக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.  “தெரியும் சார். நான் கூட்டிட்டுப் போறேன்.  ரத்னா லாட்ஜ் நல்லாருக்கும் சார்.” என்றான்.

“எங்கிட்டுப்பா இருக்கு.? இங்கன நல்லா தேடுனேனே.”

“கொஞ்சம் தூரந்தான். நடந்தா பத்து பதினைஞ்சு நிமிசத்துல போயிரலாம். ஆட்டோன்னா சீக்கிரம் போயிரலாம்.”

“ஆட்டோ எதுவுமே காணோமேப்பா”

“எனக்குத் தெரிஞ்ச ஆட்டோக்காரர் இங்கிட்டுத்தான சாப்பிடப் போயிருக்கிறாரு. வர்ற நேரந்தான். நா ஒரு மிஸ் கால் கொடுத்தா உடனே வந்துருவார் சார்.  கூப்பிடவா.?”

“வேணாம்ப்பா.. எங்கிட்டு இருக்குன்னு சொல்லேன். நானே போய்க்கிறேன்.”

“நாங்கூட்டிட்டுப் போறேன் சார். மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான். நாஞ்சொன்னா அவரு நல்ல ரூமா கொடுப்பாரு.”

“உன்னால நடக்க முடியுமா..? கால் வேற…”

“என்ன சார் இப்படிச் சொல்லீட்டீங்க..  வாங்க கூட்டிட்டுப் போறேன்.”

இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

“எந்த ஊரு சார்?.  இங்கிட்டு என்ன வேலையா வந்தீங்க.?  காமராசண்ணே லேத்துக்கு வந்தீங்களா..?”   என்று சுந்தரம் அவரிடம் பேச்சுக் கொடுக்க, அவர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.  “இல்ல சார் பேசிட்டே போனா தூரம் தெரியாதேன்னு கேட்டேன்.” அவன் பேசாமல் நடக்கவே இவனும் பேசாமலேயே நடந்து வந்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் லாட்ஜுக்கு வந்து விட்டார்கள். மேனேஜரிடம் அழைத்துப் போய் விட்டான்.

மேனேஜரோ  “ஏம்பா நீயே ரூமைக் காட்டிர்றியா?” என்று சுந்தரேசனைக் கேட்க, அவர் சொன்ன அறையை புது நபருக்கு காட்டினான். அவரும் வாடகையெல்லாம் பேசி முடித்து   “சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா?” என்று கேட்டார்.  “இங்க ரூம் மட்டுந்தான் சார். சாப்பாடெல்லாம் வெளியேதான். உங்களைக் கூட்டிகிட்டு வந்தானே சுந்தரேசன் அவங்கிட்ட சொல்லுங்க . வாங்கித்தருவான். பத்தோ இருபதோ கூடக் கொடுங்க. என்ன வேணும்னாலும் வாங்கித் தருவான்.” என்றார்.

சுந்தரேசன் மேனேஜர் மேஜைக்குச் சற்றுத் தள்ளியிருந்த வாட்டர் டிஸ்பென்சரிலிருந்து தண்ணீர் பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மேனேஜரும் புது நபரும் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் காதில் விழவே செய்தது. இருந்தாலும் கவனிக்காத மாதிரி தண்ணீர் குடிப்பதிலேயே கவனமாயிருந்தான்.

புதிதாய் வந்தவர் சாப்பாடு வாங்கித்தர சொல்லப் போகிறார். அங்கேயே அவர் காசிலேயே இரண்டு பரோட்டாக்களை வாங்கிச் சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணினான். இரண்டு பரோட்டாவும் சால்னாவும் பத்து ரூபாய். அதில் இன்னொரு சிகரெட் பிடித்து விடலாம் என்று நினைத்தவாறே தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். அவர் இவனை எப்போது கூப்பிடுவார் என்று காத்திருந்தவாறு இருந்தான். மேனேஜர்தான் அவனைக் கூப்பிட்டு சாருக்கு என்னென்ன வேணுமோ வாங்கி கொடு என்று கூறினார்.

இவன் அதைக் கேட்டதும் அந்த புது நபரின் பக்கத்தில் போய் நின்றான். அவர் இவனைப் பார்த்தவிதத்தில்  ‘பலே ஆளப்பா நீ’  என்று சொல்வது போலிருந்தது. சட்டைப் பையிலிருந்து காசையெடுத்து நீட்டினார். ஒரு பிரபல மதுவின் பெயரைச் சொல்லி குவார்ட்டரும் கூடவே முட்டைப் பொறியலும் நாலு பரோட்டாவும் சுக்கா வருவலும் வாங்கிட்டு வரும்படி கூற இவன் மனதிலும் ஒரு புது கணக்கொன்று விழுந்தது. உடனே வாங்கி வருவதாகச் சொல்லி இவன் லாட்ஜை விட்டு வெளியேறினான்.

அப்போது அவன் போன் மணியணிடித்தது. எடுத்துப் பார்த்தான். செம்பகந்தான். பேசினான்.  “எங்க இருக்க. சாப்பிட்டியா?” என்று அவள்தான் கேட்டாள்.  “இன்னும் இல்லை. ரத்னாவில் இருக்கேன். ஒருத்தர கூட்டியாந்தேன். சாப்பாடு வாங்கியாரச் சொன்னாரு. போயிட்டிருக்கேனெ”ன்று சொன்னவன்  “இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்” என்று போனை வைத்தான்.

செம்பகந்தான் எம்மேலே எவ்வளவு பிரியமாய் இருக்கிறாள். இப்படி ஒரு பிரியத்துக்கு என்ன செய்ய. என்னாலதான் ஒன்னுஞ் செய்ய முடியறதில்ல. ஒத்தக் கால வச்சுகிட்டு நானும் என்னதான் பண்ண.?  ஆனாலும், அவ பிரியமாத்தான் இருக்கிறா. எனக்கும் அவள விட்டா யாருமில்ல. அவளுக்கும் என்னய விட்டா யாருமில்ல. பெரிய கிழவி இருந்த வரைக்கும் அது ஏங்கிட்ட செம்பகத்த பேசவே விடாது. பொசுக்கு பொசுக்குன்னு கோவப்படும். அது போன பிறகுதான் செம்பகத்தோட பேசவே முடியுது. பெரிய கிழவி செத்துப் போனப்ப செம்பகம் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டாள். அந்தச் சோகத்திலிருந்து அவள காப்பாத்துறதுக்குள்ள எனக்குத்தான் பெரும்பாடாய்ப் போயவிட்டது. அப்பத்தான் செம்பகத்திற்கு எம்மேல பிரியமே வந்துச்சு. ஒரு வகையில பெரிய கிழவி செத்துப் போனதும் சரிதான். ஆனாலும் இந்தக் கடவுளு அவளுக்கு இப்படியொரு கஷ்டத்தக் கொடுத்துருக்கக் கூடாது. எம்புட்டு அழகு செம்பகம். எனக்கு காலும் கையும் ஒழுங்கா இருந்திருந்தா அவள கஷ்டமில்லாம பாத்துருக்கலாம். இப்படி அவ கஷ்டப்படுறத பாத்துட்டு இருக்கும்படியா இருந்துருக்காது. என்னையை சாப்பிட்டியான்னு கேட்டாளே, நான் அவளை சாப்பிட்டியான்னு கேக்கலையே. அவ்வளவுதான் நமக்கு புத்தி. செம்பகம் பசி தாங்க மாட்டாள். சாப்பாட்டிருப்பா. என்று தனக்குள்ளே செம்பகத்தைப் பற்றி நினைத்து தன்னுடனேயே பேசியவாறு மதுபானக் கடைக்கு போய் அவர் கேட்ட சரக்கை வாங்கிக் கொண்டான். அருகிலேயே இருந்த இரவு நேர ரோட்டோர பரோட்டாக் கடையில் மற்ற சாப்பாடு அயிட்டங்களை வாங்கிக் கொண்டு லாட்ஜுக்கு வந்தவன் நேராக அவரிடம் கொண்டு போய்க் கொடுத்தான்.

அவர் அவனை ”நீ சாப்பிட்டியாப்பா?” என்று கேட்டதும் தான் அவனுக்கு தான் சாப்பிடவில்லை என்பதும் அதுவரை போட்ட கணக்கெல்லாம் செம்பகத்தின் நினைப்பில் மறந்து போய்விட்டான் என்பதும் நினைவில் வந்தது.   “என்னப்பா சாப்பிட்டியான்னுதானே கேட்டேன். பதிலே சொல்லாம நிக்கிறியே?” என்றவர், பாட்டிலைத் திறந்து சரக்கை க்ளாஸில் ஊற்ற ஆரம்பித்தார். ஜக்குல இருந்த கொஞ்சத் தண்ணீரையும் க்ளாசில் ஊற்றியவர் தண்ணீ காலியாயிடுச்சு. கீழே போய் புடிச்சிட்டு வாரயா என்று கேட்கவும்., சரியென்று ஜக்கை எடுத்துட்டு கீழே போனான். கீழே போய் தண்ணீர் பிடித்துக் கொண்டு மீண்டும் மேலே வந்தான்.  “சாப்பிட்டியான்னு கேட்டேனே” என்றார் அவர் மறுபடியும். “இல்லைங்க சார் நீங்க காசு கொடுத்தீங்கன்னா போய் சாப்பிடுவேன்” என்று  சொன்னான்.

அவர் சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்ததும் இவனுக்கு கண்ணெல்லாம் விரியத் தொடங்கியது. ‘பரவாயில்லையே இவ்வளவு தரப்போகிறாரா’ என்று நினைத்தவாறு நிற்க, அவர் அரைப் பாக்கெட் சிகரெட் வாங்கிவரச் சொன்னார். அவ்வளவுதானா என்று எண்ணியவன் “சரிசார் என்று சொல்லி வாங்கிவரப் போனான். அதுக்குள்ள இப்படி நினைச்சுட்டோமே என்று நினைத்தான். அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு  போய் சிகரெட் வாங்கிவிட்டு தானும் ஒரு சிகெரெட்டை வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டான். இந்த சிகரெட்டை அவரிடம் காசை வாங்கிக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு பற்ற வைத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டான்.

சுந்தரேசன் சிகரெட்டை கொண்டு போய் அவரிடம் கொடுக்க ,அவர் அறைக்குப் போன போது அவர் குவார்ட்டரை முடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார். இவன் அவர் பக்கத்தில் சிகரெட் பாக்கெட்டையும் மிச்சக் காசையும் அவர் அருகில் வைத்து விட்டு வாசல் பக்கம் வந்து நின்று கொண்டான். சாப்பிட்டதும் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தான். அவரோ அவசர அவசரமாய் பரோட்டாவையும் சுக்கா வருவலையும்  விழுங்கிக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடுவதை பார்க்கப் பார்க்க இவனுக்கு பசி வயிற்றைப் பிடுங்க ஆரம்பித்து விட்டது. ஒரு நிமிடம் அவரிடமிருந்த பரோட்டாவை பிடுங்கித் தின்று விடலாமாவென்று கூட நினைத்தான்.

ச்சே! வேண்டாம் அசிங்கம். சாப்பிட்டதும் காசை கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

அறைக்குள்ளிருந்து  பெரிதாய் ஏப்பச் சத்தமொன்று வந்தது. இவன் மெல்ல அவரைப் பாரத்து “வேறெதாவது வேணுமா சார்” என்று கேட்டான். அவரோ நிதானத்தை இழக்கத் தயாராய் இருந்தார்.

“வேற எதுனாச்சுன்னனா..?”

“இல்ல சார். வேற ஏதும் வேணுமான்னு கேட்டேன்” என்றான் சுந்தரேசன்.

அவருக்குள்  ஏறிய போதை மெல்ல அவருக்குள் சாத்தானை விழிக்க வைத்திருந்தது. “நீ என்ன வேணும்னாலும் வாங்கிட்டு வருவியாமே. மேனேஜர் சொன்னானே. நிசமா.. இல்ல சும்மானாச்சுக்கும் சொன்னானா…”

“சும்மால்லாம் இல்ல சார். எதுன்னாலும் வாங்கியாரேன்…”

“அது கிடைக்குமா.?”

“எது சார்….?”

“அதான்யா குட்டி. கேட்டதெல்லாம் வாங்கியாந்த. இதையும் வாங்கியாரயா..”என்று தள்ளாடியபடியே கேட்கவும் சுந்தரேசனின் முகத்தில் ஒரு குரூரப் புன்னகை ஒன்று தோன்றியது.

“உங்களுக்கில்லாததா.. ? ஆனா கொஞ்சம் செலவாவும் பரவாயில்லையா…..?”

“பரவாயில்ல சொல்லு.. கூட்டியாரயா…. சொல்லு….”

“இங்கன கூட்டியாற முடியாது. மேனேஜர் ரொம்ப  ஸ்டிரிக்ட்டு. ஆட்டோ கூப்பிடுறேன். ஆட்டோவுக்கு எறநூறு. எனக்கு எறநூறு. அது போக பொண்ணுகிட்ட எவ்வளவுண்ணு அவகிட்டேயே கேட்டுகுங்க.” என்றபடி கணேசனுக்கு மிஸ் கால் கொடுத்தான்.

சிரிப்பு மாறாமலேயே செம்பகத்தின் எண்ணை அழைத்தான்.

– சுரேஷ் பரதன் 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x