தொட்டுக்கொள்ளாத தூரத்தில்
மாடம் வைத்த முற்றத்தில்
அகலுறங்கி கிடக்கும்
கருங்காக்கையும் பசுங்கிளிகளுமுண்டு
மீந்த எச்சப்பழங்களை ஈக்கள் மொய்த்தொழுகும்
அரிசிமாக் கோலத்தின் சந்தியூடு நடுவே
பூசணிப்பூத் தரித்த சாணம் மணம் வீசாது
காய்ந்த சாமந்தியின் இதழ் வற்றிக் குருதி மணத்தில்
பசி மறந்து கிடக்கும் திரை மறைத்த பூஜையறை
அக்கா வீட்டுக்கு தூரமாயிருப்பதாய்
கொல்லைபுறத்துக் கிணற்றடி குறிசொல்லும்.
எனக்குத் தெரியும்
தூரமென்பது, ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லையே
ஆதலால் அறிவீர் என் அக்கா நான் தொடும் தொலைவிலில்லை .
தேவதாருவின் வேர்
ஒரு கோடிப் பிறப்புகளில் ஓரிரு
முறைதான் அவர் எனக்கு அப்பாவாயிருந்தது.
அதற்கு முன் அவர் தேவதாருவின் ஆணிவேராக இருந்திருக்கக்கூடும்.
அதுவுமில்லையென்றால்
காதுகள் நீண்ட கோவேருவின் குறுத்தெலும்பாயிருக்கலாம்.
ஒருவேளை தேர்ந்த சொற்கள்
தேடும் கவிஞனின் ஆழ்மன சிந்தனையாய்க்கூட இருக்கலாம்.
அவரின் நீண்ட தாடிகளில் ஒற்றை நரைமயிர் கண்டெடுத்த
ஓர் பசுமையான தினத்தில்தான் அவர் தன்
ஒட்டுமொத்த பிறப்புகளுக்கும் சேர்த்து புன்னகைத்தாராம்.
அந்த கோடையில் பெய்த மழை
சிவப்பாக இருந்தது.
அதில் பூத்த குறிஞ்சி தான் நான்.
எழுதியவர்
-
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.
பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)
தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023அருஞ்சுரத்தி
- கவிதை26 November 2022சாய்வைஷ்ணவி கவிதைகள்
- கவிதை18 October 2021சாய் வைஷ்ணவி கவிதைகள்