தூரத்தில் மழை பெய்கிறது
இடையில் நதி ஓடுகிறது
இரண்டிற்கும் ஒரே நிறம்தான்
இங்கிருந்துப் பார்த்தால் இரண்டுமே நன்றாகத் தெரியும்
சத்தம்கூட கேட்டுக் கொள்ளலாம்
குறுக்கே இருக்கும் வேலிக்கம்பிகள் போலத்தான்
பரந்தாமா!
வறட்சியிலும் புடைத்துத் தெரிகிறது
வயிற்றின் மீது எலும்புகள்.
விடாமல் பெய்யும் மழையில்
தன் குஞ்சுகளுக்காக இரைத் தேடிப்பறக்கிறது காகமொன்று
இரைச்சிக் கடைகளில் மீந்த கழிவுகளை
ஏற்கனவே தன் குட்டிகளுக்காக
எடுத்துசென்றுவிட்டது தாய்நாய்
சாலையில் கிடந்த எலியின் சடலத்தை
கழுகொன்று இப்போதுதான் கொத்திப் போகிறது
மொட்டை மாடியில் வழக்கமாக சாதம் வைக்கும் பாட்டி
மழைக்கு முடங்கி வீட்டில் படுத்திருக்கிறாள்
என்னதான் செய்வது?
வெறும் வாயோடு கூட்டிற்கு திரும்புகிறது காகம்
மழையில் விளையாடிக்கொண்டிருக்கின்றன
காகத்தின் குஞ்சுகள்.
எழுதியவர்
-
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.
பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)
தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023அருஞ்சுரத்தி
- கவிதை26 November 2022சாய்வைஷ்ணவி கவிதைகள்
- கவிதை18 October 2021சாய் வைஷ்ணவி கவிதைகள்
Good