29 April 2024

“ஏய் முகிலு அப்பா கூப்புடுராரு காதுல விழல.”

“வர இரு.”

“முட்டைய என்னடா கைல தூக்கி வச்சிருக்க. கோவிலுக்கு போனும் நேரமாகுதில்ல.”

“போலாம் இரு. நா பாத்துகிட்டிருக்கல.”

“என்னத்த பாக்குற.”

“முட்டைக்குள்ள இப்போ எப்படி இருக்கும். முட்டைக்குள்ள குஞ்சி வந்துருக்குமா. நா பேசுறது கேக்குமா.”

“டேய் முட்டா பயலே எதுக்கு இப்படி முட்டைய ஆட்டுற. அப்பா வந்து தலைல கொட்டுனா தா அடங்குவ. நா அப்பாகிட்ட போய் சொல்லுற.”

“ஏ ஓடாதடி. வர இரு.”

 

அவன் எடுத்த முட்டையை தவுட்டின் மேல் இருந்த முட்டைகளுடன் வைத்து விட்டு கொட்டாயை தாண்டி வீட்டை சுற்றி முன் பக்க வாசலுக்கு ஓடினான். 

“அப்பா நா கூப்புட்ட அவ வரல. திரும்ப முட்டைய தூக்கி வச்சிகிட்டு நிக்குறா.”

“கோழிக்கு பதிலா அவனேயே அட காக்க சொல்ல வேண்டி தான. செருப்பால அடி அவன நேரமாகுது வாடானா.”

அவன் முன் பக்க கதவை திறந்தபடி உள்ளே வந்தான்.

“டேய் கூப்புடுற காதுல விழல.”

“அப்பா கிருஷ்ணா வீட்டுல இருந்தன். இப்போ தான் வந்த.”

“பொய் சொல்லுது நாய் கொல்ல வழியா தெருவ சுத்திட்டு வருது.”

“ஏய் நா பொய் சொல்லுல. நீதான்டி பொய் சொல்லுற.”

“சரி கம்முனு வுட. கெளம்பிட்டியா. வா போவோம். அப்பறம் அம்மா வேற கத்தும்.”

அன்று அவர்கள் கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் திருவிழா. ஊர் அம்மன் கோவில் சுத்துப்பட்டு கிராம நகர மக்களால் காலை ஒன்பது மணி பேருந்தை போல் நிரம்பி வழிந்தது. ஒருவரை ஒருவர் இடிக்காமல் அங்கு நடப்பது இயலாத காரியமாக இருந்தது. அவர்கள் கூட்ட நெரிசலையும், தெருக்கடை வியாபாரிகளின் பரபரப்பு பேச்சுகளையும் காவலர்களின் கெடுபுடி அதட்டல்களையும், நெரிசல்களுக்கு மத்தியில் ஓடும் அதிவேக வாகன பொறிகளையும் கடந்து கோவில் பின் பக்க வாயில் வழியாக பொங்கல் வைக்க தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பெரிய ஓலை தடுப்புக்குள் வந்தார்கள். 

“அப்பா …அம்மா அங்க இருக்கு பாரு.”

“இந்தாடா இந்த வறட்டிய எடுத்துட்டு போய் கொடு. நா வந்துடுற. நீயு போமா அம்மா கூட இரு. நா ரெண்டு நிமிசத்துல வந்துடுற.

அவன் அவர்களை அனுப்பிவிட்டு தடுப்புகளை கடந்து கூட்டத்தின் ஊடாக வெளியே வந்தான்.

டேய் சீனி போன் பண்ணா எடுக்க மாட்டேன்ற. எங்க தனியா சரக்கு போட்டுகிட்டிருக்கியா.”

யாப்பா கூட்டத்துல ஒரு சத்தமு கேக்க மாட்டேனுது. இன்னம் ஆரம்பிக்கல. கொளத்து பக்கத்துல கக்கூஸ் கட்டிவுட்டுருக்காங்க அங்க வா.

மாரி வந்துட்டானா.”

எல்லாரு வந்துட்டாங்க நீதாயா பாக்கி. சீக்கிரம் வா.”

வர இரு. ஆரம்பிக்காத.

அப்பா எங்கடா?

வரேனு சொன்னாருமா.”

யான்டா செருப்பு போட்டுட்டு வர மாட்டியா. தெருவெல்லா வெறும் காலோட வந்தியா.”

யாம்மா கொஞ்சம் வெறகு இருந்தா குடும்மா.”

அவங்களுக்கு ரெண்டு வறட்டிய குடுடி…

பையிலந்து வெல்லத்த எடு.”

எந்த பையி மா.”

பாரன். மஞ்ச பைய தொறந்து பாரு.

நீ யான்டா பொகைல மூஞ்ச காட்டிட்டு நிக்குற. இந்த கல்லுல உக்காரு.

இந்தாமா வெல்லம்.”

ஏலக்காயையு எடுத்து வெளிய வையி.”

என்னடா நிக்குற.”

அம்மா அந்தோணி வந்துருப்பான். கூப்புட்டு வந்துடுற.”

என்ன அந்தோணி அந்தோணினு. வீட்டு வேல ஒன்னு செய்யாத. அப்பா மாரியே சுத்து போ. சீக்கர வா.

“எப்போ சரக்கு வாங்குன.”

“நேத்தி ராத்திரியே வாங்கி வச்சிட்ட. சரி கதவ மூடிட்டு உள்ள வந்து நில்லு. போலிஸ்கார பாத்தானா தோல உருச்சிடுவான்.”

“என்னாடா அவ்வளவு தானா. இதல ஒன்னு ஏறாதே.”

“அப்பறம் கோட்டர்ல எவ்வளவு வரும்.”

“சும்மாவே இருந்துருக்கலா. இப்போ சொறிஞ்சி விட்ட மாதிரி ஆய்டிச்சி. வேற எங்கயு சரக்கு இருக்காதா.”

“கட இன்னைக்கிதா இல்லையே. வேற என்ன பண்ணுறது.”

“கக்கூஸலா நல்லா போட்டுருக்கானுங்க. ரெண்டு பீங்கான ஒடச்சி வீட்டுக்கு தூக்கிட்டு போய்டலாம்.” 

டேய் மாரி சாண்ட குடிக்கி நானே சரக்கு பத்தலனு இருக்கேன். இப்போ உனக்கு கக்கூஸு போனுமா.

சரி பரோட்டாவுக்கு போன்ன போட்டு பாரு.

அவ செடல் சுத்துரான்டா. சரக்கு வச்சிருக்க மாட்டா.

அப்போ வுடு அவ்வளவு தா. அப்பற பாத்துக்கலாம். யாருக்காவது கெடச்சா போன போடுங்க.

“டேய் அந்தோணி…..அந்தோணி….”

“அவ இப்போ தா குளிக்குறான்டா…வந்து திண்ணைல உக்காரு வருவான்.”

“ஏ முகிலு போலாம் டா.”

“ஏய் சாப்புட்டு போ.”

“ஏ வேணா போ. நா கோவில்ல பொங்க சோறு சாப்புட்டுக்குற. வாடா போலாம்.”

“போலாம்.”

“சரி முட்ட குஞ்சி பொரிஞ்சுதாடா.”

“இன்னம் இல்லையே. இன்னைக்கு காலைல கூட பாத்தன்.”

“இன்னமா வரல. முட்ட வுட்டு எவ்வளவு நாள் ஆச்சி.”

“செரியா தெரியலயே. இருவது நாள் ஆய்யிருக்கும்.”

“அப்போ வந்துடுடா. பாக்கலாம் இரு.”

அவர்கள் கோவிலை நோக்கி நடந்தார்கள். கோவிலின் முன்பக்க வாயில் எதிரில் சதுரமாக பத்தடிக்கு பத்தடி அகலத்தில் ஒரு அடி ஆழத்தில் குழி எடுக்கப்பட்டு விறகுகளும் மரக்கிளைகளும் எரிய விடப்பட்டிருந்தன. முகிலும் அந்தோணியும் ஐஸ் வண்டியையும் பலூன் வண்டியையும் கடந்து இடது புறமாக செடல் சுற்றும் இடத்திற்கு சென்றனர்.

“அப்பா என்ன இங்க நிக்குற. பொங்க வைக்க போல.”

“போறன் டா. நம்ம பரோட்டா செடல் சுத்துறா அதா பாக்க வந்த.” 

சரி பா ஒரு இருவது ரூவா குடு. ஐஸ் வாங்கிகுற.

டேய் ஏ கிட்ட இல்ல டா. ஆயா வந்துருக்கு பாரு. அதுகிட்ட வாங்கிக்கோ.”

ஆயாவா எப்போ வந்துது. எங்க இருக்கு.”

இங்க தான்டா நின்னுச்சி. எங்கயாது இருக்குன் பாரு.

சார் வணக்கம் சார்.

ஏய் அந்தோணி எங்க டா இங்க.”

சாமி கும்புட நானும் முகிலும் வந்தோ சார். முகிலு சார் வந்துருக்காரு பாரு.”

சார் வணக்கம் சார். அப்பா எங்க அறிவியல் வாத்தியாரு பா.

வணக்கம் சார். என்னோட பங்காளி செடல் சுத்துறான். அதான் பாக்க வந்த.

சரிங்க நல்லது. எனக்கும் நேத்தி கடன் இருக்கு. பெரிய கோவிலுக்கு காரு இழுக்க போற.”

நல்லது சார்.”

சரி அந்தோணி முகில் பாருங்க. நா வரன்.”

சரிங்க சார்.”              

டேய் முகிலு பசிக்குது டா உள்ள போனா சோறு போடுவாங்க வா டா.

இருடா ஆயா வந்துருக்கா பாத்தா காசு கொடுக்கும். வாங்கிட்டு போவோம்.

முப்பது அடி உயரத்திற்கு வேல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின் பக்கம் சாரம் கட்டி வேலின் தலைக்கு மேல் ஐந்தாறு ஆட்கள் நிற்கும் அளவிற்கு பலகை அடித்து வைத்திருந்தனர். உருகிப்போன கருத்த வெறும் உடலோடு சாரத்திலிருந்து தொங்கியபடி முதியவர் ஒருவர் வேலின் முகத்திற்கு அலங்காரமிட்டுக் கொண்டிருந்தார். சாரத்தின் மேல் நின்றவர்கள் இருவர் அதன் உச்சி கொம்புகளில் கயிறுகளை பிணைத்து மறுமுனையை கீழே தூக்கி போட்டனர். வேலின் நேர் எதிராக ஒரு அடி தடிமனுள்ள இரும்பு தடி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. 

மாப்புள எப்போ செடல் ஏறுற.”

இப்போ தான கம்பே எறக்கிருக்கானுங்க. எப்படியு சாயங்காலம் ஆய்டும்.

சரி டா. எதாவது காசு இருந்தா குடு. சீனு சரக்கு குடுக்குறனு வாய கெடுத்துட்டா.

இன்னைக்கு வெரதம் டா. நானே மஞ்ச துணிய சுத்திட்டு வெறும் ஒடம்போட உக்காந்திருக்கே. என்கிட்ட ஒன்னுமில்ல. கன்டத ஞாபகப்படுத்தாத.

ஆயா…..

முகிலு அம்மா எங்க?

அம்மா பொங்க வைக்குது. சரி பசிக்குது காசு குடேன்.

மாமா பெரிய கோவிலுக்கு ட்ராக்டர் இழுக்க போறா. அம்மாவ கூட்டிட்டு வாடா.

எப்போ இழுக்குது மாமா.

அவ்வளவு தா கெளம்ப போது. நீ ஓடி போய் கூட்டி வா திஷ்டி எடுக்கனு.

சரி இரு வர.”

கதவுக்கிட்ட வா. நா அங்க போற.

தொன்னையிலிருக்கும் சக்கரை பொங்கலை முகிலும் அந்தோணியும் வாயில் திணித்தப்படி முகில் அவன் அம்மாவையும் அக்காவையும் முன்பக்க கோவில் கதவருகே கூட்டிவந்தான்.

எண்ணெய நறையா போடுடா புண்ட….    கம்பிய தாங்கி புடி. நீ அந்த பக்கம் போடா. வாய நல்லா தொறப்பா. நாக்க உள்ள தள்ளு. இன்னம் நல்லா தொற.

பூசாரி கூர்மையான சூலம் கம்பியை எண்ணெய் தடவிய அவன் கன்னத்தின் ஒரு முனையில் குத்தி மறுமுனையில் சரக்கென இழுத்தார்.

கொஞ்ச நேர அப்படியே உக்காரு பா. ரெண்டு பக்கமு கம்பிய புடிங்க. கொஞ்ச நேர கழிச்சி கைய எடுங்க.

அம்மா.…சூலம் குத்தியாச்சா. டேய் மாமாவ தூக்கி வுடு.

ஹம் வேணா நா பாத்துக்குற என அவன் சைகை காட்டி மெதுவாக எழுந்து நின்றான். போலாம் என கை அசைக்க அனைவரும் கோவில் முன் கதவுக்கு நடந்தார்கள். மஞ்சள் சிவப்பு சேலை உடுத்திய பெண்கள் அவன் காலில் மஞ்சள் நீரை கொட்டினர். இருபக்கமும் கன்னத்தை கிழித்த படி பத்தடிக்கு நீட்டிக்கொண்டிருந்த கம்பி அவன் நடக்கும் அதிர்வுக்கு ஏற்றாற்போல் காற்றில் அலையாக அசைந்தாடியது. கதவருகே நின்று கொண்டிருந்த மேள வாத்திய கும்பல் அவன் வருவதை பார்த்தவுடன் வாத்தியங்களை இசைக்க தொடங்கினர்.

அவனை தொடர்ந்து இன்னும் நான்கு பேர் நாக்கில் வேலை குத்தியப்படியும் கை தோள் தசைகளில் வரிசையாக பத்திற்கும் மேற்பட்ட ஒரு அடி நீளமுள்ள இரும்பு கொக்கிகளை மாட்டி தொங்கவிட்டப்படியும் வந்து சேர்ந்தனர். துணை பூசாரிகள் சாங்கிய பாடல்களை பாட கதவருகே நின்று கொண்டிருந்த ட்ராக்டரின் முன் பக்கத்தில் நான்கு வேலைஆட்கள் கயிறுகளை பிணைத்து அதன் மறுமுனையில் இரும்பு கொக்கிகளை மாட்டிக் கொண்டிருந்தனர். பூசாரி அவன் முதுகில் எண்ணெய்யை எடுத்து பூசினார்.

முகிலு மாமா கைய புடிச்சிக்கோ.

பூசாரி ஒவ்வொரு கொக்கிகளாக வாங்கி எண்ணெய் தடவிய அவன் முதுகில் சரசரவென இறக்கினார். வழிந்து கொட்டிய இரத்தத்தை மஞ்சள் சந்தனம் கொண்டு அப்பினார். உடுக்கை, தவிலின் கொட்டும் நாதசுரத்தின் ஒலிகளும் அதிர பூசாரி செடல் கிளம்பலாம் என கத்தினார்.

செடல் கிளம்பும் நேரத்தில் அறிவியல் வாத்தியாரும் நுனி நாக்கில் இரண்டடி நீள சூலத்தை குத்தியபடி அவர்களுடன் வந்து இணைந்துக் கொண்டார். அவர் புதிதாக வாங்கிய ஐ20 (I 20) மகிழுந்தை முதுகில் நான்கு கொக்கிகள் கொண்டு பிணைத்துக் கொண்டார். செடல் இழுக்கப் போகிறவர்கள் மீது மஞ்சள் நீர் குடம் குடமாகக் கொட்டப்பட்டது. முகிலின் அம்மாவும் மற்ற சில பெண்களும் அவர்களுக்கு சூடம் சுற்றினார்கள். 

முகிலு மாமாக்கூட தொணைக்கு போய்ட்டு வா.”

நான்கு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பெரியக் கோவிலுக்கு அவர்கள் ஊர்வலம் கிளம்பியது. முன் வரிசையில் துணை பூசாரிகள் உடுக்கையை அடித்து பாடியபடி சென்றனர்.

“அம்மா சுந்திரி சவந்திரி நிரந்தரி பரம்பரி ஜோதியானவளே உமயே….

சந்தரி சுந்திரி சவந்திரி நிரந்தரி பரம்பரி ஜோதியான உமயே…

கண்டத்த நீக்கும் சுந்தரி மகமி ஆயிமகமாயி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மகரந்த நாயகி பத்திரகாளி தாயே மீனாட்சி விசாலாட்சி தயானந்தினி அஷ்டலட்சுமி அண்டமே பெயர் பெற்ற அங்கால பரமேஸ்வரி கீழிறங்கி வந்தருளும்மா…. வந்தருளும்மா……        

ஊர்வலம் கோவிலின் முகப்பை கடந்து தார் சாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ட்ராக்டரும் மகிழுந்தும் மேட்டில் ஏற முடியாமல் திணறியது. பூசாரிகள் ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா துணைக்கு வந்து நில்லம்மா என உடுக்கையையும் கொட்டுகளையும் அலறவிட்டுக் கொண்டிருந்தனர். பூசாரிகளின் குரல்களை தொடர்ந்து சூழ்ந்திருந்த கூட்டமும் செடல் இழுப்பவர்களும் பராசக்தி தாயே அம்மா…. என வெறிக்கொண்டு கத்தினர். ட்ராக்டரையும் மகிழுந்தையும் மக்கள் பின் பக்கமாக தள்ள முகிலின் மாமாவும் வாத்தியாரும் அவர்கள் முதுகு சதை கிழிந்து வர ஹாஹா…அம்மா…..எனக் கத்தி முன் இழுத்தனர். ட்ராக்டரும் மகிழுந்தும் மேடு ஏறி தார் சாலையை அடைந்தன. தார் சாலையின் சூடு பாதத்தை உருக்கி பசையாக்கியது. சாலையோரத்தில் நின்ற பெண்கள் வேகவேகமாக வந்து அவர்கள் காலில் நீரை இறைத்தனர். உடுக்கைகளின் தொடர் ஒலி முன் சென்றுக்கொண்டிருந்த நான்கு பேரையும் துணைக்கு நடந்து வந்து கொண்டிருந்த சில பெண்களையும் சாமி ஆட வைத்தன. 

முகிலும் அவன் ஆயாவும் செடல் இழுப்பவர்கள் வாயில் சிறிது எலும்பிச்சை சாறையும் சோடாவையும் ஊற்றி விட்டனர். மூன்று மணி நேர நடை பயணத்தில் செடல் பெரிய கோவிலை அடைந்தது. செடலை வரவேற்க நின்றுக்கொண்டிருந்த மக்களும் பூசாரிகளும் அவர்கள் தலையில் மஞ்சள் நீரை கொட்டினர். பூசாரிகள் அவர்கள் முதுகிலும் வாயிலும் பிணைத்திருந்த கொக்கிகளையும் கம்பிகளையும் உருவி எடுத்தார்கள். காயத்தில் மஞ்சளையும் வேப்ப இலைகளையும் குழைத்து அப்பினார்கள். முன்னரே வந்திருந்த வேறு செடல்கள் கூட்டம் ஆங்காங்கே மயக்கத்தால் சுருண்டு படுத்துக்கிடந்தன. முகிலின் மாமாவும் வாத்தியாரும் நேராக சாமி பார்க்க சென்றார்கள். முகிலும் அந்தோணியும் மீண்டும் கங்கை அம்மன் கேவிலுக்கு ஓடினார்கள். 

அவர்கள் கோவிலை அடைய மதியம் மூன்று மணி ஆனது. தொங்கும் செடலில் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். செடலில் நேர்த்திக்கடன் செலுத்த மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பரோட்டா காதிலும் மூக்கிலும் ஊசிகளை குத்திக்கொண்டு வரிசையில் நின்றிருந்தான்.

கால், தொடை, இடுப்பு, முதுகு சதைகளில் இரும்பு கொக்கிகளை தைத்து விமானம் போல் மேலே தூக்கி கொண்டிருந்தனர். நடப்பட்டிருந்த வேலின் முகத்தை அடைந்து அதை தொட்டு வணங்கி பலகையில் நின்றிருந்தவர்களிடமிருந்து பாலையும் நீரையும் வாங்கி வேலின் மீது திருமுழுக்கிட்டனர். பின் அவர்கள் கீழிறங்க அடுத்தவர்கள் ஏற ஆயத்தமானார்கள். 

குழியில் எரிந்துக் கொண்டிருந்த கட்டைகள் கருகி கனலாகி சாம்பல் பூத்து கிடந்தன. குளக்கரை வடக்கு முகத்தில் அறுபதடி ராட்டினம் தென்பட்டது. முகிலும் அந்தோணியும் ராட்டினத்தை நோக்கி ஓடினார்கள்.

மாலை ஐந்து மணி அளவில் கூட்டம் இரட்டிப்பானது. ஒரு பக்கம் ஒலிபெருக்கியில் காவலர்களின் வழிகாட்டும் நெறிமுறைகள் இரைந்தபடி இருக்க மறுபக்கம் ஒலிபெருக்கியில் சாமி பாடல்கள் அலற ஆங்காங்கே மக்களின் குலவைகளும் தவில்களின் கொட்டுகளும் பறைகளின் சத்தங்களும் சேர்ந்து கொண்டு அந்த இடத்தை கலவரமாக்கின.

சூரியன் இறங்க தொடங்கியவுடன் தீ மிதிப்பதற்காக மக்கள் கூடினார்கள். சிவப்பு வேட்டியை மடித்து பிட்டத்தில் தூக்கி சொருகி கொண்டு உடுக்கையை அடித்து பாடத் தொடங்கினார் தலைமை பூசாரி.

தீ மிதியா தீ மிதி மாரியாத்தா தீ மிதி

ஆயி மகமாயி அவ கண்ணு ரெண்டு தீப்பொறி 

தீப்பொறியா தீப்பொறி கோவை பழம் மாதிரி…”

பராசக்தி தாயே காத்து நில்லம்மா….என உடுக்கைகள் ஒலிக்க தலைமை பூசாரி உடல் நடுக்கம் காண தொடங்கியது. சிவந்து விரிந்து கருமை படிந்த கண்களும், காதிலும் மூக்கிலும் தொங்கும் குண்டலங்கள் அதிர சிலம்பு கால்கள் புழுதியை கிளப்ப சாமி ஆடிக்கொண்டே நெருப்பில் இறங்கினார்.

தொடர்ந்து எழும்பிய பறை முழக்கங்களும் தவில் கொட்டுகளும் அவரை வெறியேற்றிட நாக்கை ஹூம்ம் என கடித்துக்கொண்டு கால்களால் நெருப்பு துண்டுகளை நாலாப்பக்கமும் தூக்கி அடித்தார். அவர் தீயை விட்டு வெளியேற துணை பூசாரிகள் அவர் மேல் நீரை ஊற்றி சாந்தப்படுத்தினர். மயங்கி விழுந்த அவரை தாங்கி பிடித்தனர். எலும்பிச்சை பழங்களை அவர் தலையில் அடித்து நசுக்கினர்.

அவரை தொடர்ந்து ஊர் மக்கள் குறுக்கும் நெடுக்குமாக தீயில் ஓடத்தொடங்கினார்கள். அதில் சிலர் நாக்கில் சூடத்தை ஏற்றிக்கொண்டும் கையில் தீச்சட்டியை ஏந்திக்கொண்டும் ஓடினார்கள்.

மறுமுனையில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சேவல்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முகிலின் அம்மா ஒரு சேவலை ஏலத்தில் எடுத்தாள். அன்று இரவு எட்டு மணி அளவில் அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள். முகிலின் அப்பா வயிறு முட்ட குடித்துவிட்டு இடுப்பில் துணி இறங்க திண்ணையில் சரிந்திருந்தார். 

அடுத்த நாள் பெரும்பான்மையில் அந்த கிராமத்தில் யார் வீட்டிலும் மதியம் சோறு பொங்காது. அனைவரும் கோவிலில் போடும் இடும்பன் சோற்றுக்காக அடையை மொய்க்கும் தேனீக்கள் போல் முட்டிமோதிக் கொண்டு நிற்பார்கள். முகிலும் அவன் அக்காவும் குண்டான்களை தூக்கியபடி ஓடினார்கள். இருபது மீட்டர் தொலைவிலேயே காற்றில் கருவாடு வாசமும் விதவித காய்களின் கூட்டு கதம்ப நெடியும் மூக்கை துளைக்கும். குண்டானை நிரப்பிய முகில் அருகிலேயே குந்தியபடி சாப்பிட்டான். பின் மீண்டும் குண்டானில் குறைந்ததை நிரப்பிவிட்டு வீட்டை அடைந்தான். 

அந்த வார ஞாயிற்றுக்கிழமையில் ஏலத்தில் எடுத்த சேவலை அடித்து முகிலின் அம்மா குழம்பு வைத்திருந்தாள். 

ஏய் முகிலு முட்ட பொரிஞ்சி குஞ்சி வருதுடா.”

டேய் சாப்புட்டு போடா. பாதிலியே ஓடுது பாரு சனிய. செஞ்ச சோத்த திங்க இங்க பிரிகட்ட வேண்டியிருக்கு.

முதல் குஞ்சி ஓட்டை உடைத்துக்கொண்டு தளர்ந்து உடைந்த ஓட்டிலேயே பிசுபிசுப்பாக ஈரம் படிந்து படுத்துக்கிடந்தது. முகில் வேகமாக சென்று அதை அசைத்தான். மற்ற முட்டைகளை அடைகாத்திருந்த தாய் கோழி அவன் கையை கொத்தியது.

டேய் என்னடா பண்ணுற.”

ஏ குஞ்சி என்ன அப்படி கெடக்குது.” 

தானா ஏஞ்சிக்குடா அவசர குடுக்க.”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இரண்டாவது முட்டை ஓடு விரிசல் விட்டது. தாய் கோழி அலகால் விரிசல் விட்ட இடத்தை லேசாக கொத்தியது. முதல் ஓட்டை உடைத்த குஞ்சி கீச்கீச்என கத்தியபடி தட்டுத்தடுமாறி எழுந்து நின்றது. பின் அதன் உடலை குலுக்கியது. தொடர்ந்து பசிக்குரலில் கீச்கீச் என தன் தாயை பார்த்து கத்தியது. முகிலின் அம்மா வந்து எட்டி பார்த்தாள். கொட்டாங்குச்சியில் சிறிது அரைத்த மக்காசோளத்தை கொண்டு வந்து அதன் அருகில் வைத்துவிட்டு சென்றாள். கொக் கொக் கொக் கென சத்தம் எழுப்பிய தாய் கோழி முதலில் சோளத்தை கொத்தியது. பின் குஞ்சும் கொத்தியது. இரண்டாவது விரிசல் விட்ட ஓடும் முழுதாக பிளந்து கருப்பு நிற குஞ்சி அதனுள் சுருண்டு கிடந்தது. முகில் ஓட்டுடன் அதை கையில் எடுத்தான். அவன் அக்கா அவன் தலையில் நறுக்கென கொட்டி ஏசினாள்.

அடங்க மாட்ட நாயி.”

ப்பா என அடி விழுந்த வேகத்தில் முட்டையை தவிட்டில் விட்டான். விழுந்த வேகத்தில் ஓடு முழுதாக உடைந்து குஞ்சி கீச்கீச் என கத்த தொடங்கியது. கொழகொழப்பான நீர்மத்திலிருந்து தன் உடலை விடுவித்துக்கொள்ள சிரமப்பட்டது. கால்களை உதைத்து எழ முயற்சித்தது. 

அமைதியா நிக்குறதா இருந்தா நில்லு இல்லனா ஓடு நாயே.”

யாரு டீ நாயி. நீ தான் டீ நாயி என அவன் விரல்களை மடக்கி அவள் நெஞ்சில் பலமாக குத்தினான். அம்மா என கத்தி அவள் பின் கோவத்தில் அவன் மேல் பாய வந்தாள். அவன் பயத்தால் கொட்டாயை விட்டு ஓடினான். 

அப்படியே ஓடிடு நாயே. வந்தே தோடப்பகட்ட பிஞ்சிடும்.”

முடிஞ்சா வாடீ முத்தர குண்டி.

………அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!…..

ஏய் அந்தோணி….. அந்தோணி.”

சொல்லுடா…

முட்ட நேத்தி பொரிஞ்சிடுச்சிடா.”

ஏ…சூப்பர் டா. எத்தன குஞ்சி.”

ஒம்போது குஞ்சி.”

…….வாழ்த்துதுமே !

        வாழ்த்துதுமே !

டேய் என்னங்கடா குசுகுசுனு ஒரு நிமிசம் அமைதியா நிக்க முடியாது. போ கம்முனு க்லாஸ்க்கு…”

சரிங்க மிஸ்.

டேய் எனக்கு ரெண்டு குஞ்சி தரியா.”

வீட்டுல கேட்டு சொல்லுற டா.” 

அன்று வகுப்பறை முடிந்தவுடன் ஓட்டமும் நடையுமாக முகில் வீடு வந்து சேர்ந்தான்.

அக்கா எங்க டா நீ மட்டு வர…

….பதில் சொல்லுதா பாரு கோட்டான்.

அவன் புத்தக பையை தூக்கி தவுட்டு மூட்டையில் ஏறிந்து விட்டு கொல்லைக்கு ஓடினான். குஞ்சிகளையும் தாய் கோழியையும் காணவில்லை.

அம்மா….அம்மா…..

என்னாடா வந்தோனே கத்துற.”

கோழி குஞ்சிங்க எங்க ? ஒன்னத்தையு காணோம்.”

பின்னாடி தா மேயு பார.”

பின்னாடி இல்லையே. இப்போ தான் பாத்தன்.”

“அப்போ சாக்கடகிட்ட பாரு.”

அவன் வேகமாக வீட்டின் இடது புறமாக ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை சென்று பார்த்தான். குஞ்சிகள் தாயுடன் மேய்ந்து கொண்டிருந்தன. அவன் குஞ்சிகளை தூக்கி வந்து கொட்டாயிற்குள் விட்டு அரைத்து வைத்திருந்த மக்காசோளத்தை தூவினான். குஞ்சிகள் வேகமாக வந்து அதை கொத்தி எடுத்தன. 

டேய் முகிலே…. முகிலு பால் வந்துருக்கு பாரு. போய் வாங்கிட்டு வா.

என்னடா நீ வந்துருக்க. உங்க அம்மா எங்க.”

தெனமு நா தா வரன். என்ன அதுக்கு.”

டேய் சரி போடா. அம்மாவ கூப்புடு காசு பாக்கி இருக்கு பேசனு.

அம்மா பால்கார கூப்புடுறா. காசு தரனுமா.

சரி நீ பால உள்ள போயி வையி.” 

என்ன காசு தரனு.” 

ஒன்னுமில்ல சும்மா தா சொன்ன. நீ யா வெளிய வர மாட்டேங்குற.

உள்ள வேல இருக்குது. அதுக்கு என்ன. விசியத்த சொல்லுங்க.”

எப்படி இருக்க.”

எனக்கென்ன.”

மெலிஞ்சி போய்ட்ட. வர வழில தா பாத்த. அவரு குளத்து கரைல தா உக்காந்திருக்காரு. நல்லா பாத்துக்குறாரா. காசு பணம் தேவயிருக்கா. இருந்தா தயங்காம சொல்லு.”

நாங்க நல்லாயிருக்கோம். உள்ள வேல இருக்கு நா வரன்.

முகிலின் அப்பா கூத்துக்கட்டுபவர். நடுத் தெருவை சேர்ந்த அவரும் அவர் குழுவும் ஊர் திருவிழா, அரசியல் கூட்டங்கள் பெரிய இடத்து நிகழ்ச்சிகளில் கூத்துக்கட்டுவார்கள். வருடத்திற்கு பத்து கூத்தாவது கட்டுவார். வருமானம் சீராக இருந்தது. 

நான்கு வருடத்திற்கு முன் ஒரு அரசியல் கூட்டத்திற்காக கூத்து ஆட முன்பணம் வாங்கினார். அன்று வருகை தரவிருந்த அந்த அரசியல் கட்சியின் மேல் தலைவர்களை மகிழ்விப்பதற்காக கூத்தின் நடுவே கீழ் தெரு மக்களை இழிவுப்படுத்தி பாட நிர்பந்திக்கப்பட்டார். கூட்டம் சிறப்பாக முடிந்து அனைவரும் கலைந்தனர். ஆனால் அந்த கூத்து கீழ் தெரு மக்களிடையே புகைச்சலை கிளப்பியது.

அந்த வருடம் ஊர்திருவிழா நடைபெற அறிவிப்பு வந்த போது கீழ் தெரு மக்கள் முகிலின் அப்பா எங்களிடம் மன்னிப்பு கேட்காமல் கூத்து கட்ட கூடாது என்றனர். செய்வதறியாது நின்ற முகிலின் அப்பா பின்னால் அந்த அரசியல் கட்சி வந்து நின்றது. நடுத் தெரு மக்களுக்கெதிராக கீழ் தெரு மக்கள் கலவரம் செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். வாக்குவாதங்கள் பெரிதாகி கைகலப்புகளும் உண்டாகின. கீழ் தெரு இல்லாமலேயே திருவிழா நடைபெறும் என நடுத் தெரு இளைஞர்கள் அறிவித்தனர். ஊருக்குள் வெப்பம் அதிகமானது. ஊர் கலவரமாக மாறும் முன் ஊர் தலைவர்கள் திருவிழாவிற்கு கூத்தே தேவையில்லை என்று அறிவித்து விட்டனர். அதிலிருந்து எந்த நிகழ்ச்சிக்கும் முகிலின் அப்பாவை கூத்து கட்ட யாரும் அழைப்பதில்லை. அவர் பின்னால் நின்ற அரசியல் கட்சியும் நடுத் தெருவும் காணாமல் போனது. வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார். அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருந்த சாராய கடைக்கு சென்று குடிப்பார். இரண்டு வருடத்திற்கு முன்பு அவர்கள் ஊர் சாலை நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. பின் அரசாங்கம் அங்கு இரண்டு சாராயக்கடையை திறந்தது. அவரின் குடிப்பழக்கமும் வழக்கமானது.

மூன்று வாரங்கள் கடந்திருந்தன. மூன்று குஞ்சிகள் அடுத்தடுத்து நோய் கண்டு இறந்திருந்தன. இரண்டு குஞ்சிகளை காகமும் பாம்பும் தூக்கி சென்றிருந்தன. மீதமிருந்த குஞ்சிகளை முகில் கொட்டாய்குள்ளேயே வைத்து பார்த்து கொண்டிருந்தான்.

டேய் உள்ளயே வச்சிப்பியா. மேய வேணா.

காக்கா தூக்கிட்டு போய்டுது…

அதுக்கு என்ன செய்ய முடியும். தப்பிச்சி வரது தா வரும். சரி போ தாத்தாக்கு சோறு குடுத்துட்டு வா. ஒடம்பு சரி இல்லையாம்.” 

 

என்னடா மூஞ்ச தூக்கி வச்சிருக்க. சாப்புடுரியா.”

வேணா தாத்தா. குஞ்சிலா செத்து போதுங்க.

சாமிக்கு காசு கட்டி போடுடா. சாமி பாத்துக்கும். இதுக்கு எதுக்கு டா மூஞ்ச தூக்கி வச்சிருக்க.” 

அந்தோணியை இழுத்துக்கொண்டு முகில் முருகன் கோவிலுக்கு ஓடினான்.

சின்ன துணிய மஞ்சள்ல முக்கி எடுத்து அதுக்குள்ள ஒரு ரூவா காசும் அதோட குஞ்சிகளோட இறக ஒன்னு ரெண்டு வச்சி கட்டிக்கோ. சாமி முன்னாடி அதக்காட்டி இந்த குஞ்சிங்கள இனி நீ தா காப்பாத்துனு உன்னோட பொறுப்புனு சொல்லி உண்டியல்ல போட்டுட்டு திரும்பி பாக்காம வா.

டேய் அந்தோணி தாத்தா சொன்ன போல காசு போட்டாச்சி இனி ஒன்னு ஆகாதில்ல.

ஒன்னு ஆகாது டா. சரி கொளத்துக்கு போவோம்டா மீன் குஞ்ச உட்டுருக்காங்களாம்.

டேய் போடா போன தடவ மீன் குஞ்சினு எடுத்துட்டு போய் தொட்டில உட்ட. எல்லா தவள குஞ்சினு அம்மா போட்டு அடிச்சிடுச்சி.     

நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.

எதுக்கு தெனமு குடிச்சிட்டு வர. ஒடம்பு என்னத்துக்கு ஆகுறது.

குடிக்க கூடாதுனு தா நனைக்கிற. ஆனா குடிச்சிடுறன்.

இன்னம் ஒரு வருசத்துல பொண்ணு வயசுக்கு வந்துடு. நாளு காசு இல்ல கையில. இருக்குறதையு எடுத்துட்டு போய் குடிச்சி தீத்துடு போ.

அவள் புலம்பி தீர்த்துவிட்டு அரிசி பைகளை தூக்கி கொண்டு நியாயவிலை கடைக்கு சென்றாள். 

கார்டுக்கு பத்து கிலோ தாமா. பத்து கிலோ அப்பறம் வந்து வாங்கிக்கோங்க.

இதேதா எல்லா மாசமும் சொல்லுறிங்க.

நா என்னமா செய்யுறது அரிசி அவ்வளவு தா வருது. எல்லாருக்கு கொடுக்க வேணாமா.

சரி வுடுக்கா அவனுங்ககிட்ட என்னத்த மல்லுக்கட்டுறது. எனக்கு அரிசி வேணா. நீ வாங்கிக்கோ. எங்க வீட்டுல ஒன்னு ரேசன் அரிசி சாப்டாது.

தெனமு குடிச்சிட்டு வருது. வருமானம் எதுவும் வேணாமா. பசங்களுக்காவது ஊட்டமா எதாவது தர வேணாமா. ரெண்டு மாசமா தம்பிகிட்ட தா காசு வாங்கிட்டிருக்க.

பேசாம காட்டேரி படயல் ஒன்னு போட்டு விட வேண்டி தான. எங்க அக்கா பையன் இது மாதிரி தா தெனமு குடிச்சிட்டு வந்தா. காட்டேரிக்கிட்ட வேண்டி படயல் போட்டாங்க அதுலந்து சாரய கட பக்கமே போலயே. தெரியாம பாட்டல தொட்டாக்கூட அவ்ளோதான் அலறிடுவான். காட்டேரி வந்து அடிச்சுடுமில்ல.

ரவு பன்னெண்டு மணிக்கு ஆத்துக்கு போங்க. நடு ஆத்துல கருங்கோழி ஒன்ன அடிச்சி கிழக்கால படயல் போடுங்க. புடிச்சி வச்ச கோழி ரத்தத்த ரெண்டு சொட்டு அவர் தலைல விட்டுட்டு மீதிய நாலா திசையுல தெளிச்சி விடுங்க. சூடத்த ஏத்தி வச்சி அவர சொல்ல சொல்லுங்க.

தாயே காட்டேரி இனி நா குடிக்க மாட்டமா. இது ஓ மேல சத்தியம். மீறி குடிச்சா என்ன அடிச்சிடுமானு மனசு உருக கைய தூக்கி வானத்த பாத்து வேண்டிக்க சொல்லுங்க. படயல் போட்டதுல பாதிய உட்டுட்டு மீதிய அங்கேயே சாப்புட்டு திரும்பி பாக்காம வந்துடுங்க. எல்லா சரி ஆய்டும் என கோவில் பூசாரி வழிக்காட்ட அவர்களும் அது போலவே படயலிட்டு வீடு திரும்பினர்.

இனியாவது ஒழுங்கா இருயா. வேலைக்கு போய் குடும்பத்த பாரு. காட்டேரி மத்தது போல இல்ல கோவக்காரி பாத்துக்கோ. 

அடுத்த மாசத்துலந்து பால் வேணா.

யா என்ன ஆச்சி.” 

கட்டுபடியாகலங்க. நா பாத்துக்குற.”

நா என்னைக்கு உகிட்ட காசு கேட்டுருக்க.”

அதுக்குனு காசு கொடுக்காம இருக்க முடியுமா.”

நீ ஏ புரிஞ்சிக்க மாட்டேனுற. காசு பணத்துக்காகவா நா ஓங்கூட பேசுற. எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும். நீ லா எப்படி இருக்கனு தெரியுமா. அவருதா ஒன்னு புரியாம சுத்துறாரு.

அவரு தா சுத்துறாருனா நானு சுத்த முடியுமா. எனக்கு எங்கள பாத்துக்க தெரியும். அடுத்த மாசத்துலந்து பால் வேணா.

டேய் எதாவது படிப்போம் எழுதுவோனில்ல. எப்போ பாத்தாலு கோழி பின்னாடியே சுத்து.

முகிலு……ஏ முகிலு….

ஏய் அந்தோணி உள்ள வா டா.

குடிக்க தண்ணி குடுடா. ரோமன் ரேன்ஸ்* என்ன பண்ணுறான்.

அவன் தான்டா எல்லாரு முட்டவுட ரெடி பண்ணிகிட்டிருக்கா.”

ஹஹஹா…..

இன்னைக்கி காலைல பக்கத்துலந்து ப்ராக் லெஸ்னர்* வந்துட்டான்டா நம்ம வூட்டு கோழிங்களா அலறிடிச்சிங்க. சத்தம் கேட்டு ரோமன் ரேன்ஸ் கூரைலந்து குதிச்சி ப்ராக் லெஸ்னர ஒரே முட்டு தலைவன் தல தெறிக்க ஓடிட்டாயில்ல.

முகிலின் கோழி குஞ்சிகள் அனைத்தும் பெரிதாக வளர்ந்திருந்தன. அதில் ஒரே ஒரு சேவல் தான் வந்திருந்தது. முகில் பெரும்பான்மையான நேரத்தை சேவலுடனே கழித்தான். முகில் பள்ளியை விட்டு வந்தவுடனே சேவல் எங்கிருந்தாலும் அவனிடம் வந்துவிடும். இருவரும் ஒன்றாகவே உண்டு உறங்கி கழித்தார்கள். 

இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஓர் இரவு திண்ணையில் தூங்கிய முகிலின் அப்பா காலை எழவேயில்லை. அவன் அம்மா பதறி அடித்துக் கொண்டு வைத்தியரை கூட்டி வந்தாள்.

பயப்படாதமா நாடி சீராதா துடிக்குது. ஒடம்பு ரொம்ப கொதிக்குது. மருந்து தர. ரெண்டு நாள்ல சரியாய்டும்.” 

மருந்து கொடுத்த மூன்று மணி நேரத்தில் உடல் வியர்த்து கொட்டியது. ஆனால் மீண்டும் இரவு காய்ச்சல் எடுத்தது. உட்கொள்ளும் உணவு உள்ளே தங்காமல் வாந்தியாக வந்து கொண்டேயிருந்தது.

அடுத்த நாள் காலை உடல் நெருப்பாக கொதித்தது. அவர் சுயத்தை இழந்து பெனாத்திக்கொண்டிருந்தார். முகிலின் அம்மா அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். காய்ச்சல் நூற்றி ஏழு டிகிரி இருந்தது. மருத்துவர் ஊசியை செலுத்தி மருந்துகளை கொடுத்தார். காய்ச்சல் கட்டுப்பட்டது. மீண்டும் இரவில் எரிந்தது. நாளுக்கு நாள் உடல் நிலை சரிந்து கொண்டே சென்றது. உணவு ஏதும் தங்கவில்லை. வாயாலும் வயிற்றாலும் வெளிவந்துக் கொண்டே இருந்தது. தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றும் பலனில்லை. நடக்கும் திராணியை இழந்து கயிற்று கட்டிலிலும் திண்ணையின் மூலையிலும் எச்சில் ஒழுகும் வாயுடன் முடங்கி போனார். முகிலின் அம்மா அங்குமிங்கும் ஓடினாள். இருபது நாள் கடந்தும் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. முகிலின் தாத்தா ஊர் பூசாரியை அழைத்து வந்து மந்திரித்தார்.

ஒன்னு பயப்படாதம்மா காத்து கருப்பு எதாவது அடிச்சுதானு தெரியுல. குணப்படுத்திடலாம். சரி கடைசியா என்ன பண்ணிங்க. வீட்டுக்கு யாராவது வெளி ஆளுங்க வேற யாராவது புதுசா வந்தாங்களா.

அப்படி ஒன்னு இல்லைங்க.

எதாவது பூச போட்டிங்களா.

ஆமா சாமி அவுரு குடிக்க கூடாதுனு காட்டேரிக்கு படயல் போட்டோம்.

அப்படி சொல்லும்மா தாயி. வேல இங்க தா நடந்துருக்கு. அவன் அதுக்கப்பற குடிச்சானா.

இல்ல சாமி குடிச்ச மாதிரி தெரில. வேலைக்கு ஒழுங்கா தா போனாரு.

சரியா சொல்லும்மா. குடிச்சானா?

தெரில சாமி. எனக்கு பயமா இருக்கு. எங்களுக்கு யாருமே இல்ல…

ஏ இப்போ எதுக்கு கண்ண கசக்குற.

டேய் மாட்டு பயலே கேக்குதாடா. குடிகார நாயே எழுந்துரு. உன்மைய சொல்லு காட்டேரிக்கு படயல் போட்டோனே குடிச்சியா. உண்மைய சொல்லு மாட்டு பயலே.

ஒரு தடவ குடிச்சுட்ட….

அட நாசமா போறவனே…. எங்கள யான்யா இந்த பாடு படுத்துற…

ஏ வுடு கத்தாத. அதா நடந்து முடிஞ்சிருச்சில்ல. காட்டேரி தா அடிச்சிருக்கா. அவ உக்குரக்காரி யாருக்கும் கட்டுப்படமாட்டா. சுலபமா எறக்க முடியாது. சரி வுடு பயப்படாத சரி செஞ்சுடலாம். அவள கட்டுப்படுத்தனுனா முனியால தா முடியும். பொண்டாட்டிய அடக்க புருசதா சரி. நீ புள்ளைங்கள கூட்டிட்டு முனி கோவிலுக்கு ஓடு. அவன் கால்ல உழுந்து உ புருசன காப்பாத்த சொல்லு. தாலிய கலட்டி உண்டியல்ல போட்டுட்டு நேரா முருக கோவிலுக்கு ஓடு. அப்பன ஏவ புள்ளதா சரி. முனிய ஏவ சொல்லு உ புருசன காப்பாத்த சொல்லு. இந்த வாரம் செவ்வாகிழம சேவல் ஒன்ன முருகன் கோவிலுக்கு நேந்து வுடு. எல்லா ஒரு வாரத்துல சரியாய்டும். புருச எழுந்து உக்காந்தோனே முனிக்கும் காட்டேரிக்கும் கெடா வெட்டி சாராயம் சுருட்டு வச்சி படயல் போடு. தைரியமா போ. அவன வர திருவிழாவுக்கு செடல் சுத்த வையி.

பூசாரி சொன்னபடி அவள் செய்தாள். அவள் கையிலிருந்த காசெல்லாம் கரைந்திருந்தது. சனிக்கிழமை சேவலை நேந்துவிட பணமில்லாமல் தவித்தாள். சமையல் கட்டில் ஒரு மூலையில் முடங்கி கிடந்தவளை உரசியப்படி கொக் கொக்கென முகிலின் சேவல் அவள் மேல் ஏறியது.

அப்பாவோட சேவ தா முக்கியமா.

எனக்காக ரோமன் ரேன்ஸ் மட்டு தா மா இருக்கா. அவன குடுக்க வேணா மா. ப்ளீஸ் மா…. வேற சேவ வாங்கிக்கிளாமா அவன வுட்டுடு மா…. இப்டி தா கருப்பியவு தூக்கிட்டு போனிங்க….என முகில் மூக்கு ஒழுக கதறி அழுதான். 

வேற காசில்லடா. காசுக்கு எங்க போறது.

ஐய்யோ காசு வரும்மா. நா தாத்தாகிட்ட கேட்டு வாங்கியாற. ரோமன் ரேன்ஸ் பாவம் மா.…”

டேய் தாத்தா மட்டும் காசுக்கு எங்க போவும்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே முகில் எழுந்து தபதபவென வெளியே ஓடினான்.

டேய், டேய்…. எங்க போற…”

தாத்தாவிடம் அழுது புலம்பினான்.

ஏய் கிறுக்கு பயலே. இதுக்கா மூக்க சிந்துற சேவ ஆடு கோழி பன்னி எல்லா மனுச அடிச்சி திங்க தா டா இருக்கு. சரி போ இந்தா காசு கொண்டு போய் ஓ ஆத்தாக்கிட்ட குடு.

செவ்வாய்கிழமை சந்தையில் புது சேவல் ஒன்றை வாங்கி முருகன் கேவிலுக்கு நேந்து விட்டார்கள். 

ஒரு வாரம் கடந்திருந்தது. முகிலின் அப்பா உடம்பில் எந்த முன்னேற்றமுமில்லை. பின் ஒரு காலையில் சட்டென எழுந்து நின்றார். உடலில் புது இரத்தம் ஓடுவது போல் உணர்ந்தார். கண் பார்வையும் மற்ற புலன்களும் தெளிவாகின. மூச்சிக்காற்று முழு நுரையீரலையும் நிறப்பி விட்டு வெளிவந்தது. நாக்கு வறண்டு கிடந்தது. வேகமாக சமையல் அடுக்கிற்கு சென்று முழு பானை நீரையும் குடித்தார். அவர் மனைவியை அழைத்தார். “பசிக்கிது, உயிர் போர மாதிரி பசிக்கிது சாப்புட என்ன இருக்கு” என கேட்டார். பழைய சோற்றிற்கும் கம்ப கஞ்சிற்கும் நாக்கு அடங்கவில்லை. ருசியா எதாவது செஞ்சி போடன்டி என தட்டை வீசியெரிந்து கத்தினார். என்ன வேணு என்றாள். நேராக கொல்லைக்கு சென்றார். சேவல் மேய்ந்து கொண்டிருந்தது. அதை பிடித்து கழுத்தை ஒரே திருகாக திருகி மதியம் குழம்பு வைக்க சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

பள்ளியிலிருந்து திரும்பிய முகிலன் சேவலை தேடினான். செய்தி அறிந்து கத்தி கூச்சலிட்டான். அழுது புலம்பினான். அடங்கி ஒடுங்கி உறங்கி போனான். இரவு ஏழு மணி அளவில் எழுந்து அவன் சமையல் கட்டிற்கு சென்றான். அவன் அம்மா தட்டில் சோற்றை வைத்து கோழி குழம்பையும் வறுவலையும் போட்டாள். வேகமாக சோற்றை பிணைந்து வறுவலையும் சேர்த்து வாயில் திணித்தான். வீட்டிற்கு வெளியே ஒலிபெருக்கி சத்தம் கேட்டது. முருகன் கேவில் திருவிழா நடைபெறவுள்ளதால் நாளை அதாவது வெள்ளிக்கிழமை அன்று சுப நேரத்தில் காலை 6.30மணி அளவில் ஊருக்கு காப்பு கட்ட போகிறோம். அனைவரும் சுத்தபத்தமாக இருக்க அசைவம் சாப்பிடாமலிருக்க எண்ணெய் பலகாரங்கள் செய்யாமலிருக்க ஊர் நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர் தங்கள் விரதங்களை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கலாம். கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற அனைவரும் தாராளமாக நன்கொடைகளை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 ஒலிபெருக்கி சத்தம் அவர்கள் வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தது. வீதியில் சிறுவர்கள் காளி, முருகன், சிவன், ஐயனார் வேசமிட்டு ஆடியபடி சென்றனர். மஞ்சள் அழைப்பிதழ்கள் வீதியில் இறைந்துகிடந்தன.                        


*(அமெரிக்க மல்யுத்த வீரர்கள்)

எழுத்தாளர் தரணி ராசேந்திரனின் “ கடவுளை தரிசித்த கதை” சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை. எழுத்தாளரின் உரிய அனுமதியோடு கலகம்- கதைகள் சிறப்பிதழுக்காக வெளியிடப்பட்டுள்ளது. 

Art Courtesy : good4thesoul.tumblr.com

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x