18 July 2024

ன்னவோ எப்படியோ… அவளை அந்தியில் யாருக்கோ பிடித்து விடும்.

காலையில் இருந்து தலை தெறிக்க நடந்தும் ஓடியும்…திண்ணையோ, மர நிழலோ கண்டால் படுத்துக் கொண்டும்… மனதால் அலையும் ருக்மணி ஊருக்குள் ஒரு பொருட்டல்ல. அவள் காலம் நேரம் கடந்த மனுஷி. கண்களின் பார்வை மட்டுமல்ல… நாக்கு கூட தடம் புரண்டு தான் இருக்கும். தன் பெயரை துக்குமணி என்று சொல்லும் போது புதிதாய் காண்போருக்கு,  கேட்போருக்கு என்ன பெயர் இது என்ற குளறுபடி இருக்கும். அது ருக்குமணி என்பதில் அவள் முகம் விரிந்து கண்கள் நாசியில் இணையும் காட்சியில்… அவள் ஒரு சிறுமியோ என்ற பாவனைகூட நம்மைத் தொற்றும்.

“என்ன ருக்கு எங்க மாமனை கட்டிக்கிறியா…?” என்று வம்பிழுக்கும் பிரேமாக்காவிடம் பட்டென இன்னும் கொஞ்சம் நெருங்கி…

” தாறு…. ந்தானு… போ போ… உன் மாமந் வேத்தி சத்தை தான் போத்ருக்கான்… எதனக்கு புதிக்கல. மச்தூட்டுகார பையன்.. பிரதாத் பேந்து சத்தை போத்து தூப்பரா இதுப்பா.. அவன்தா கத்திக்குவே… பேந்து சத்தை போத்து தூப்பரா இதுப்பா” எனும் போது அவள் நெற்றியில் பெண்மை பூக்கும். மார்புகள் கூட சற்று ஏறி இறங்கும். கண்களில் காமம் மின்னுவதை காணவே அவளிடம் வம்பிழுப்போர் உண்டு.

தென்னத்தோப்புக்குள் வைத்து பாவாடையை உருவ நினைத்த பெரியசாமி புலவருக்கு இன்று வரை சரியாக ஒண்ணுக்கு போக முடியாது. பிராண்டி எடுத்து ஊரைக் கூட்டி விட்டவள் ருக்கு. ஆனால் அதே நேரம் தனக்கு பிடித்தவர்களை மடக்கி விடுவதில் அவள் வெள்ளந்தி இல்லை. வில்லி. ஐயோ இதுவா என்று பாவனை காட்டும் எத்தனையோ பேர் அந்தி சாய அத்துவான காட்டு அடிவாரத்தில் அவளை சீண்டிய பொழுதுகள் உண்டு. நேரம் காலம் கூடி அவளுள் கீர்த்தி குடியேறுகையில்… சீண்டல் தீண்டல் ஆகும். ஆனால் எல்லாமே பெரும் ரகசியமாகவே இருப்பது தான்.. அவளின் உருட்டு முழியின் உள்ளார இருக்கும் அவள் அடிக்கடி தவற விடும் ஒற்று.

பெரும் சண்டைக்காரன் கூட…” பேந்து சத்தை போத்து… தூப்பரா இருக்க” என்று ஒரு கண்ணை மூடி மூக்கை பாதி வளைத்து அவள் … தொல்கையில்…ச்சே சொல்கையில் சிரித்து விடுவான். சிணுங்கி சீனை மாற்றி விடும் சித்து அவள் நடையில் கூட உண்டு. உடை எப்போதும் பாவாடை சட்டை தான்.

பணம் கொட்டும் வீட்டில் தவ மகளாய் ருக்குவின் வருகை பூமிக்கு பாரம் என்பது போல தான் ஆனது ஒரு கால கட்டத்துக்கு பிறகு. காசுக்காக கட்டியவன்… வயிற்றில் இரண்டு மாத கருவோடு விட்டு சென்று விட்டான். துக்கம் தாளாமல் பனைமரம் ஏறி உச்சியில் அமர்ந்தவாறே ஒரு பானை கள்ளையும் குடித்து கையை விட்டவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. உள்ளிருந்த கருவுக்கு ஓராயிரம் சேதம். சிதறி… குருதி ஆட்டத்தில் நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டு மாண்டது.

ஒரு வாரம் தான். பழைய சோகம் பட்டம் விட… புது சோகத்துக்கு அலைந்து திரியும் ருக்குவை எதில் சேர்க்க என்பது தான் அவள் வீட்டாருக்கு உண்டான பெரும் கவலை. பேன்ட் சர்ட் போட்டு ஊருக்குள் யார் வந்தாலும்… ஓடி போய் முன் நின்று “பேந்து சத்தைல தூப்பரா இதுக்க” என்று புருவம் தூக்கி விடுவாள். ஆண் மனதின் ஆழ் அரிப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும். மீண்டும் வயிறு வீங்கி நிற்பவளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வயிற்றை கழுவ வேண்டும். அது ஒரு நீண்ட நெடிய துயர வழிப்பு.

அவள் எதிரே வருகிறாள் என்றால் இளவட்டங்கள் அய்யயோ…என்று அலறி அடிக்கும். அதுவும் எவனாவது அன்று பேண்ட் சட்டை அணிந்திருந்தால்… அவ்வளவு தான். சந்து பொந்துகளில் புகுந்து விரட்ட ஆரம்பித்து விடுவாள். வெளியே ஐயோ லூசுப்புள்ள என்று பேசுவோரில் எத்தனை பேர் மாலை மயக்கத்தில் ஆல மரம் ஒட்டி ஒத்தையடியில் மலை ஏறும் மண் பாதைக்கு அவளை அழைத்து செல்வார்கள் என்று தெரியாது. அந்த வகையில் எல்லாருமே அவள் முன் அம்மணமாக தான் அலைகிறார்கள். அவர்களை அவள் இனம் கண்டு கொள்வாள். அது தான் புரிபடாத இருள் தேச இணுங்குதல். இதற்காகவே ஒரு ஜோடி பேண்ட் சட்டையை ரகசியமாய் உடல் ஆளும் ஆட்களும் ஊருக்குள் இருந்தார்கள்.

அவர்கள் என்னவோ உயிர் போற விஷயத்தை பேசிக்கொண்டிருக்கையில்… இடையே புகுந்து…” பேந்து சத்தை போத்து புதுதா ஊதுகுள்ள ஒதுத்தர் வந்துதுகார்…. பாத்துதீங்களா….” என்பாள்.

“யாருடி இவ.. இங்க என்ன நடக்குது..!” என்று கோபம் காட்டினாலும்… பற்கள் தெரியாமல் ஈ காட்டிக் கொண்டு கண்கள் திறந்து நாசியில் எட்டி குதிக்க நிற்பதை கொண்ட அவளைக் கண்டதும் லபக்கென்று சிரித்து விட்டு….”நாங்க பாக்கல சாமி… நீயே தேடி கண்டு புடிச்சுக்கோ… வம்ப பாத்தியா… ” என்று சொல்லி கிண்டல் அடித்து நமட்டு சிரிப்பை விளாசுவார்கள். அதுவும் தெரு குழாய்ல தண்ணி புடிக்கும் பொம்பளைங்க பேசிக்கற ராத்திரி விவரங்கள் காமசூத்ராவை மிஞ்சும் தந்த்ராக்கள்.

“ஏய்.. தத்தனமா பாத்தி…. எங்க முதுங்ககா பொதிச்ச… மதக்கவே இல்ல.. எங்க தோத்ததுல வந்து பொதி… அதிந்து போத்து குதம்பு வெச்சா தும்மா எத்தூத்துக்கு மதக்கும்…” என்று வாய் பேசிக் கொண்டிருந்தாலும்… ரத்னமா பேரன் மயிலு மீது தான் கண்கள் இருக்கும். அவனும் பேண்ட் சட்டை போடுபவன் தான்.

சரி சரி… என்று சமாளித்துக் கொண்டே ரத்னமா பாட்டி பேரனை பின் வாசல் வழியாக கல்லூரிக்கு விரட்டும். வீதிக்கே களுக் சிரிப்புக்கான நேரம் தான் அவள் வீதி அளக்கையில்.

“என்ந்ன உன் புதுசன் ஒது தினுசா பாக்குதான். வேத்தி சத்தை போத்து கந்திராவியா இதுக்கா… இதெல்லாந் வேந்தான்னு தொள்ளு… நான் பேந்து சத்தை போத்தவனதா கத்திக்குவேன். குதந்த பெத்துக்குவே…” என்று மலர்விழியிடம் சொல்லி விட்டு குறுக்கு நடை நடப்பவள் மீது கோபப்படுவதா…. பரிதாபம் படுவதா என்று தெரியாமல் அந்த காட்சியை காணும் அந்த நேரத்துக்கு கண்கள் அனைத்தும் உச் கொட்டும். அதே நேரம் அவள் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் போது எதிரே கேட்டுக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல… அக்கம் பக்கத்தில் இருப்போர் கூட படக்கென்று சிரித்து விடுவார்கள். ஒரு சிரிப்பு மூட்டல் தான்… ருக்குவின் வாழ்க்கை. ஆனால் அவள் வீட்டுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது அது.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை இரண்டு மாத தொப்பையோடு மருத்துவச்சி வீட்டு பின் கதவை தட்டுவது ருக்குமணியின் வீட்டாருக்கு தலை மேல் விழும் தொடர் இடி. அடித்தும் பார்த்தார்கள். சோறு போடுவதை நிறுத்தினார்கள். லூசுக் க்கு கொழுப்பு அடங்கட்டும் என மொட்டை அடித்து பார்த்தார்கள். கொன்று விடலாம் என்று கூட யோசனை வந்தது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாம் என்ற போது அம்மாகாரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். செத்தாலும் என் கண்ணு முன்னாலயே சாகட்டும் என்று வேண்டினாள்.

ஒத்த புள்ளை இப்பிடி செத்த புள்ளையா சுத்துதேன்னு தான் ஒவ்வொரு நாளும் அந்த வீட்டின் கனம் ஏறிக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை கலைக்கும் போதும் ‘குதந்தை…. குதந்தை’ என்று கத்துவாள். கத்துவது அவள் இயல்பென்று…. நடக்கும் வேலை நடக்கும். வயிற்றை கழுவி விட்டே பாதி தென்னத்தோப்பை வாங்கி விட்டாள் மருத்துவச்சி. வேறு வழி இல்லாத போது எது இருக்கிறதோ அது தான் வழி. தலையில் கால் முளைத்தது போல இன்னும் எத்தனை நாளைக்கு நடப்பது. ருக்குவின் அப்பாவுக்கு மீசை அதுவாகவே கீழிறங்கி கொண்டது. இப்போதெல்லாம் மற்றவர் பஞ்சாயத்துக்கு கூட அவர் போவதில்லை.

எல்லாமே ஒரு வாரம் தான். அந்த உள் நிகழ் கொலை முடிந்து ஒரே வாரம் தான்.. வீதிக்கு வந்திருப்பாள். பேண்ட் சட்டை போட்டவர்களை எல்லாம் சந்தேகத்தோடு பார்க்கும் ருக்குவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.. அது ஒரு வியாதியாகவே மாறியது. அப்படி சட்டென சென்று நீ தானா அது என்று கேட்டு விட முடியாதே. எங்கு எப்போது எப்படி அது நடக்கிறது என்று கணிக்கவே முடிவதில்லை. அதிகாலை, நடுச்சாமம், அந்தி மாலை., வெயில் மதியம், முன் பகல்.,பின்னிரவு.. என்று அவள் எப்போது எப்படி வீட்டிலிருந்து தப்பிக்கிறாள் என்றே தெரிவதில்லை. வீட்டுக்கு வரும் பால்காரன், சலவைக்காரன், பக்கத்தூர் நண்பர் மீசைக்காரன் என்று வருவோர் எல்லாம் மிக கவனமாக வேட்டி சட்டையில் தான் வருவார்கள். ஆனாலும் யாரை நம்புவது.

எப்படி எப்படியோ சொல்லி பார்த்தும் அவளுக்கு விளங்கவில்லை. அவளுக்கு காமத்தின் வழியே தன் இருத்தலை உணர்வதை சொல்லவும் தெரியவில்லை. அத்தனை அடிக்கு பிறகும் அவள் கண்கள் பேண்ட் சட்டை போட்டவர்களை தேடவே செய்கிறது. அத்தனைக்கும் பிறகும் புதிதாய் வீதிக்குள் வருவது போல அவள் நடப்பதே பறப்பது போல தான். காலையிலேயே குளித்து சிங்காரித்து பேண்ட் சட்டை காரர்களை தேடி கிளம்பி விடும் அவளை… கட்டி போட்டும் பார்த்தார்கள். தன் விரலை தானே கடித்துக் கொண்டு சுவற்றில் தலையை முட்டி… என்று ருக்குவின் ஆங்காரத்துக்கு தன் உடலே பலம். அதுவே பலவீனம்.

யார் சொல்லியும் கேட்காதவள்… கிறுக்கு வாத்தியார் சொன்னால் அன்று முழுவதும் அவர் வீட்டு திண்ணையிலேயே சத்தம் காட்டாமல் அமர்ந்திருப்பாள். வீதியில் செல்லும் யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டாள். கிறுக்கு வாத்தியாரிடம் பேசிக்கொண்டே இருப்பாள். கிறுக்கு வாத்தியாருக்கு அவள் பேசுவது நன்றாக விளங்கும். அவர் சொன்னால் கொஞ்சம் மட்டுப்படுவாள் என்பதால் அவளை அடக்க வேண்டும் என்ற பட்சத்தில் கிறுக்கு வாத்தியாரிடம் கிசுகிசுத்து போவார்கள் வீட்டார். அந்த பள்ளியில் ஒன்றாவது முதல் மூன்றாம் வகுப்பு வரைக்கும் அவர் ஒருவர் தான் வாத்தியார். அரசாங்க பள்ளி தான் என்றாலும்… அந்த பள்ளியின் அரசாங்கம் அவர் தான். மதியம் வரை தான் பாடம். அதன் பிறகு குழந்தைகளை சாப்பிட வைத்து தூங்க சொல்லி விடுவார். முழித்தவர்களுக்கு முதுகில் சுளீர் என விழும். சாப்ட்டதுக்கு அப்புறம்.. அதும் அடிக்கற இந்த வெயிலுக்கு என்னத்த படிச்சாலும் ஒன்னும் ஆகாது. தூங்கி எழுந்து சாயந்திரமா நல்லா விளையாண்டா போதும். அதான் காலைலருந்து மதியம் வரை படிக்கறோமே… போதும் போதும் என்பார். வகுப்பில் தினம் ஒரு பாரதி கவிதை இருக்கும். தினம் ஒரு குறள் வகுப்பு முடிவில். அவரின் பிலாசபி ஓரளவுக்கு ஊருக்குள் ஒத்து போவதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எப்போதும் சட்டை இருக்காது. வேட்டியை மடக்கி பஞ்சகட்சம் தான்…ஆடை பாதி…. ஆளும் பாதி தான் அவர்.

கிறுக்கு வாத்தியாருக்கு மூன்று பிள்ளைகள். மூன்றாண்டுகளுக்கு முன் ஏறி கரை உடைந்து தண்ணீர் சூழ்ந்து கொண்டதில்… அவர் மட்டும் தான் தப்பித்தார். வீட்டோடு குடும்பமுமே முழ்கி போனது. பத்து நாள் யாரிடமும் பேசாமல் இருந்தார். பிறகு வகுப்புக்கு வந்து விட்டார். எப்போதாவது அவராகவே பேசிக் கொள்வதும் உண்டு. அவ்வப்போது ஊர் கோடியில் இருக்கும் குன்றின் மீது நின்று வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. ஏரி மீது காரி துப்புவதும் நடக்கும். யாருமில்லாத போது ஏரியையே கொலை செய்வது போல மூத்திரம் போவார். அருணாச்சலம் கிறுக்கு வாத்தியார் ஆனது இப்படித்தான்.

எப்போதெல்லாம் நினைவுகளால் மூழ்குவாரோ அப்போதெல்லாம் ருக்குவின் குரல்… அவர் சோகம் களைக்க வந்து விட்டிருக்கும்.

“கிதுக்கு வாத்தியா… எதக்கு குதந்த வதும் போது.. பேந்து சத்தை போத்து இங்க கொந்து வந்து விதுதேன்… பாதம் கத்துக் குது” என்று வயிற்றில் இரண்டு மாத மேடு இருக்கையில் எல்லாம் சொல்வாள்.

சட்டென நொடியில் மனம் சரிந்து அவளுக்காக கவலைப்பட்டாலும்… “சரி ருக்கு… படிக்க வெச்சிடலாம்…. இந்தா… இந்த முறுக்கு தின்னு” என்று நீட்டுவார். அவர் கண்கள் அந்த மேடிட்ட சின்ன வயிறையே ஆதரவாக காணும்.

உள்ளே அவரின் மனைவி, மகள்கள் புகைப்படத்துக்கு முன் விளக்கெரிவதை பார்க்க அவளுக்கு அத்தனை ஆசையாக இருக்கும். ஊது பத்தியின் வாசம் அந்த அறையை கோயிலாக்கி இருக்கும். பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பாள். பிறகு அருள் வந்தவள் போல ஆவென சிரித்துக் கொண்டே ஓடுபவள்… சட்டென.. வயித்து புள்ளத்தாச்சி இப்பிடி ஓடி ஆடி உடம்ப அசைக்க கூடாது என்று ராணிக்காவுக்கு மொட்டுக்கிழவி ஒருமுறை சொன்னது நினைவுக்கு வர…. ஓட்டத்தை குறைத்து விட்டு வயித்தை தடவிக் கொண்டே “பேந்து சத்தை போத்து விதறேன்…” என்று முனங்கியபடியே கீழே பார்த்துக் கொண்டே பார்த்து பார்த்து நடப்பாள்.

ஊரே நல்ல ஊர் தான். எல்லாம் ஒன்னும் மண்ணுமாக அன்னந்தண்ணி புழுங்குபவர்கள் தான். ஆனால் இவள் கிறுக்கி என்று தெரிந்தும்… எப்படி இது சாத்தியமாகிறது. அவர்கள் சும்மா இருந்தாலும்… இவள் தானே அவர்களை சுத்து போடுகிறாள். உடல்… எல்லா நேரமும் பேச்சு கேட்கும் என்று சொல்ல முடியாது தானே. அதனுள் இருக்கும் மிருகம் எப்போது எப்படி வெளியே வரும் என்று தெரியாது தானே. உலகம் எப்போதும் விழித்துக் கொண்டேவா இருக்கிறது. அதன் கண்களும் சிமிட்டுகிறது. அப்போது இருள் சூழ்ந்த இலகு எங்கும் பரவிட எதிலிருந்தும் ஆடை அகலும் சம்பவங்கள் வெகு இயல்பென்று எல்லாரும் அறிந்தேதானே இருக்கின்றோம். ருக்குவின் தீராத பேந்து சத்தை மோகத்துக்கு அவள் ஆடைகளை பலி கொடுக்கிறாள். அதில் அவள் ஒரு சமநிலையை செய்து கொள்கிறாள். தன்னை தானே… தான் இல்லை என்று புரிய அவளுக்கு அது போன்ற தருணங்கள் தேவைப்படுகின்றன போல.

பகலில் அவளை கண்டு பயந்தோடும் கூட்டம் தான்… எந்த நேரத்திலோ அவள் மீது பாய்ந்தாள்கிறது.

அப்படி இதோ மீண்டும் வயிற்றைத் தள்ளிக் கொண்டு வருகையில்… வீடு முழுக்க வீக்கம். மாட்டை அடிப்பது போல அடித்தார்கள். வீட்டுக்குள் தள்ளு முல்லு… களேபரம். யாரு…. யாரு கூட படுத்த என்று பச்சை பச்சையாய் கேட்ட போதும் கதவை கட்டிக் கொண்டு நின்றாள். அவள் சொல்ல எதுவுமில்லை. வாய்க்குள் மெல்ல எதுவோ இருந்தது. அவளுக்கு எது புரிகிறது எது புரியவில்லை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக புரிந்தது. எப்படி எந்த வகையில் யோசித்தாலும்… இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. எழவு வீடு போல வீடு இருள் அடைந்து கிடந்தது.

“எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சமோ…  இப்பிடி இவள சனி புடிச்சு ஆட்டுதே….!??” அம்மாகாரி அடி வயிறு பற்ற அழுதாள்.

கிழவிகள்.. பெருசுகள்…. சொந்த பந்தமெல்லாம் கூடி விட்டன. விடிய விடிய பேசியவர்களின் கண்களில் கருணை குறைந்து கொலை வெறி ஏறிக்கொண்டிருந்தது. பெரிய வீட்டில் என்னவோ நடக்க போகிறது…. ஊருக்குள் அரசல் புரசலாக கழுதை காது முளைத்து கொண்டிருந்தது. இரவும் நிலவும் நடுங்கின. மாய சுழல் அந்த வீட்டை மொய்க்க தொடங்கி வெகு நேரம் ஆகி விட்டது.

கிசுகிசுத்துக் கொண்டார்கள். ரகசியம் கசிந்து விடாத காப்புகளை வீடு முழுக்க செய்தார்கள். செய்வது சரியா தவறா என்று யாருக்கும் விளக்கம் உணர முடியவில்லை. ஆனால் தேவை என்று மட்டும் ஒரு சேர ஒருமித்தார்கள். பாவம் எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. அது புண்ணியம் தான் என்று செய்ய போகும் செயலுக்கு கொள்கை மூட்டினார்கள். நெஞ்சில் எரியும் தீயிக்கு தான் எரிச்சல் அதிகம். உணர்ந்தாளா என்று தெரியவில்லை. ருக்கு திக்கு தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டாள் என்று மட்டும் அந்த டவுன் டாக்டருக்கு தெரிந்தது.

இரவு கொழுந்து விட்டு எரிய சூட்சுமம் வீட்டை சுற்றி காவல் காத்தது. அசுர அழுத்தம் கழுத்து இறுகி தவித்தலைந்தது. காச் மூச் பறவை பட்சிகள் கப் சிப்பானது. தூரத்தில் இருக்கும் ஏரியின் அசைவு நிலவை மூழ்கடிப்பதிலேயே குறியாய் இருந்தது. நீரின் ஊசி முனை பட்டு மேல் எழுந்து ஊருக்குள் நுழைந்த காற்றுக்கு காதுகள் இல்லை. ஊமையாக இருப்பதும் தான் இப்போதைய தேவை.

கவிச்சை வீசும் விடியல் அது. ஆனால் அந்த விடியலில் சுமை இல்லை. இது எந்த விடியல் என்று நினைவும் இல்லை. காலத்துக்கும் சுமையேற்ற சூரியன் தான் இனி. இரவெல்லாம் சுமை இல்லாத நிலவு தான் அவள் வழி. ஊரெல்லாம் சுற்றினாள்.

“என்ன ருக்கு…. பத்து நாளா ஆளயே காணம்… டவுனுக்கு பெரிம்மா வூட்டுக்கு போயிந்தியா” என்று கேட்ட ரமா தேவிக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எதிரே வந்த பேந்து சத்தைக்காரனை ஏறடுக்கவும் இல்லை. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு எல்லாம் அது குழாயில் தேன் சொட்டும் ஆச்சரியம்.

“என்னாச்சு… புடிச்சிருந்த பேந்து சத்தை பேயை அடிச்சு ஓட்டிட்டாங்களா… என்ன நடந்துச்சு….!???”

ஆளாளுக்கு சூரிய ஓட்டையில் இருந்து நீர் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆலமரம்… ஒத்தை வழி… குன்றடி… வேப்ப மரத்தடி… ஆத்து பால அடிவாரம்… எங்கெல்லாமோ சுற்றினாள். மண்டைக்குள் சுழலும் வண்டை வெளியிலெடுத்து போட முடியவில்லை. கால் கொண்ட கண்களில் குருட்டு வேகம். மூச்சிரைக்க திடுமென வந்து நின்ற இடம் கிறுக்கு வாத்தியார் வீடு.

“என்ன ருக்கு ஆளையே காணோம்…! முறுக்கு திங்கறியா…?” என்று உள்ளே சென்று திரும்பிய போது அவள் அழுது கொண்டிருந்தாள். கிறுக்கு வாத்தியார் கண்களை ஒருமுறை துடைத்துக் கொண்டார். இதுவரை ருக்கு அழுது பார்த்ததே இல்லை… இந்த ஊரில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அத்தனை அடிக்கும் இடி தாங்கி போல பார்த்துக் கொண்டே நிற்கும் அவள் கடைசியாக அழுதது.. பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து…கரு உடைந்து நொறுங்கிய போது தான். அதன் பிறகு இந்த நாலைந்து வருடத்தில் இது தான் அழுகை.

“என்னாச்சு …? எதுக்கு அழற…!” கேட்டுக் கொண்டே அவள் தலையை ஆதரவாக தடவினார்.

அவள் மூச்சு வாங்கினாள். ஏங்கி ஏங்கி எதையோ சொல்ல முயற்சித்தாள். சொற்களும் ஏங்கலும் சேர்ந்து மூக்கு ஒழுக… கண்களில் ஒரு கிறுக்கு வாசல் திறந்து கொண்டது போல இருந்தது.

“சரி சரி… அழாத..” என்று கண்ணீரைத் துடைத்து விட்டார். துடைக்க ஆரம்பித்த பிறகு தான் இன்னும் வேகமாய் கண்கள் உடைந்து கொட்ட ஆரம்பிக்கிறது கண்ணீர்.

மூச்சுக்கும்.. அழுகைக்கும் இடையே… தம் கட்டி.. “குதந்தை வதாது… இதி குதந்தை வதாது… இதி குதந்தை வதவே வதாது… வதாது… தத்தியமா வதாது…” அவள் சொல்லிக் கொண்டே அழுகையை இடையே இடையே அள்ளிக் கொண்டாள். நெற்றி வேர்த்து முகம் நடுங்கி கொண்டிருந்தது.

ஏன் இதையே திரும்ப திரும்ப சொல்றா என்பது போல இன்னும் கூர்ந்து கவனித்தார் கிறுக்கு வாத்தியார். அவர் நெற்றியில் வழக்கத்துக்கு மீறிய இன்னொரு கோடு.

ஏன் வராது என்று அனிச்சையாகத்தான் கேட்டிருக்க வேண்டும். கண்கள் நடுங்க ஓர் இயல்பு அங்கே மெல்ல அஇயல்பாக மாறுவதை அவரும் உணர்ந்தே தான் இருந்தார்.

“கதுப்பை பை எதுத்துதாங்க…. கதுப்ப பை.. கதுப்பை பை…” மூச்சிழுத்துக் கொண்டதற்கு உயிர் முழுக்க கொட்டியது போல ஒரு ஏங்கலோடு உடல் நடுங்கியபடி மறுபடியும் சொன்னாள். கதுப்பை பை வெத்தி எதுத்துதாங்க…. இதி குதந்தை வதாது..” அவள் இரு கைகளும் குழந்தையை தூக்கியிருப்பது போல சேர்ந்து அவள் அடி வயிற்றை தடவியது. அவள் உடல் கூனி குறுகி விட்டது.

அழும் அவள் முகம் வயிற்றையே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தது. அவள் உடல் குலுங்குவதை சுற்றிலும்… வீடு நுழைந்த சூரிய கதப்பு. அவர் செய்வதறியாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் தலைக்குள் இன்னொரு முறை ஏரி உடையும் சப்தம்.

“கற்ப பைய எடுத்துட்டாங்க….  இனி குழந்தை வரவே வராது..” மீண்டும் மீண்டும் அவள் மொழியில் அவர் காதில் ஈட்டி இறங்கியது.

மெல்ல வீட்டுக்குள் சென்ற கிறுக்கு வாத்தியார்… சுடர் சூழ மாலையிட்டிருந்த மனைவி மக்கள் புகைப்படத்தையே பார்த்தார். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவருக்கு பின்னால் இருந்த சுவற்றில்… நேற்று புதிதாக தைத்து வாங்கி வந்திருந்த ‘பேந்து சத்தை’ வெற்று பிண்டமாய் தொங்கி கொண்டிருந்தது.


Art Courtesy  : pinterest.ph

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x