17 September 2024

புயேவ் நகரம், ஒபெரிசா நதிக்கும் மேலே ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. அதன் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. அவை தேவாலயங்களையும் மங்கலான நீதிமன்றங்களையும் சுற்றிச் சிக்கலான தெருக்களில், பலவண்ண கதவுகளுடன் மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தன. நெருக்கமான வீடுகளின் தொகுப்புக்களைப் பிளந்துகொண்டு, தெருக்கள் இலக்கற்று, வளைந்து நெளிந்து இங்குமங்குமாகச் சென்றன. மிகவும் குறுகலான ஒற்றையடிப் பாதைகள், மனைகளின் வேலியோரத்திலும் கிட்டங்கிச் சுவர்களின் ஓரத்திலும் சென்றன. குன்றின் மேலிருந்து பார்த்தால் அந்த நகரத்தை யாரோ குச்சியைக் கொண்டு கிளறிவிட்டதைப் போலவும், அதிலிருந்த ஒவ்வொன்றையும் கலைத்து குழப்பிவிட்டது போலவும் தெரிந்தது. மாபெரும் ஜிட்னயா தெரு, நதியிலிருந்து தொடங்குமிடத்தில், மரங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் தொகுப்பினூடே உள்ளூர் வணிகர்களின் (பெரும்பாலானவர்கள் ஜெர்மன் காலனியவாதிகள்) கல் கட்டிடங்கள், அச்சுறுத்தும் வகையில் நேரடியாகப் பிளந்துகொண்டு சென்றன. அவற்றின் ஓரத்தில் தோட்டங்கள் பசுமைத் தீவுகளாக அமைந்திருந்தன. அவை தேவாலயங்களை ஒருபுறமாக ஒதுக்கி விட்டிருந்தன. அங்கிருந்து அந்தப் பாதை பேரவைச் சதுக்கத்தின் வழியாக இன்னும் தடுக்க முடியாத வகையில் நேராக) தொடர்ந்து செல்கிறது, அந்த நேர்வழி செடிகொடிகள் இல்லாத வழியில் சென்று, தேவதூதர் செயின்ட் மைக்கேலின் மடத்துக்குச் சொந்தமான பைன்மரத் தோட்டத்தை அடைகிறது.  அங்கு பழைய சிவப்பு ஃபிர் மரங்களின் மறைவுக்குப் பின்னால் புதருக்குள் அந்த மடம் இருந்தது, அந்தப் பிர்மரங்களின் அடர்த்தி விண்ணுலகையே தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது, வெயில் காயும் தெளிவான நாட்களில் துறவி மடத்தின் சிலுவைகள், நிரந்தர அமைதி நிலவும் காடுகளின் பறவைகள் சறுக்கிக்கொண்டு பறப்பது போல, ஒளிர்ந்து, ஒரு நிலையான வரவேற்பை தெரிவித்து அந்த இடத்தைக் காண்பிக்கும். 

ஜிட்னயா தெரு நான் குறிப்பிட்ட சமவெளிக்குச் செல்லும் முன்பு ஒரு பத்து வீடுகள் அந்தத் தெருவிலிருந்து விலகிப் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் வழியில் இருந்தன. அவை பள்ளத்தாக்கின் இடவெளிகளில் மறைந்துவிட்டிருந்தன. அந்தச் சிறிய, தட்டையான வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு சன்னல்களே இருந்தன. அந்த வீடுகள் டோல்மாசிகா புறநகர்ப்பகுதியாக அமைந்திருந்தன. இந்தப் புறநகர்ப் பகுதியை முதலில் உருவாக்கியவர்கள் நிலஉரிமையாளர் டோல்மாசேவின் வேலையாட்கள் தாம் என்று சொல்லலாம். அந்த நில உரிமையாளர் அனைத்துப் பண்ணையடிமைகளும் சட்டபூர்வமாக விடுதலை செய்யப்படுவதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது பண்ணையடிமைகளை விடுதலை செய்திருந்தார், அதன்பிறகு, (1861 ஆம் ஆண்டு), அவரது நடவடிக்கைக்காக, கடுமையாக இழிவுசெய்யப்பட்டு, அந்தக் குற்றத்தின் பொருட்டு அவர் துறவுமடத்தில் தங்கவேண்டியதாயிற்று, அங்கு அமைதியாகப் பத்தாண்டுகளைக் கழித்தார், அவர் புனிதப் பயணிகளை அல்லது புதியவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் விதித்திருந்த தடை காரணமாக, இறப்பு அவரைத் தழுவிக்கொள்ளும்வரை, மறைந்தே வாழ்ந்தார்.  

அந்த நேரத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, டோல்மசோவின் வேலையாட்கள் குடிமக்களாக மாற்றப்பட்ட போது, அவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே குடிசைகளிலேயே இப்போது வசிப்பவர்களும் புறநகர் வாசிகளாகவே இருந்தனர். அதே காலகட்டத்தில், ஜிட்னயா தெரு தவிர புயேவ் நகரம் முழுவதும் எரிக்கப்பட்டிருந்தாலும், அந்தக் குடிசை வீடுகள் எரிக்கப்பட்டு அவர்கள் ஒருபோதும் விரட்டியடிக்கப்படவில்லை. மேலும் எல்லா இடங்களிலுமே நகர்ப்புறத்திற்குள் செல்பவர்கள் உறுதியாக அழிக்கப்படாத அடுப்புக் கற்களைக் காணலாம்.

அந்தப் புறநகர், நான் சொன்னது போல, இந்தப் பக்கத்துக் கடைசியிலும் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கின் சரிவுப் பகுதியில் ஒரு கை நீள ஆழத்தில் இருக்கிறது, அதன் சன்னல்கள் பள்ளத்தாக்கின் விரிந்த வாய்ப்பகுதியை நோக்கி அமைந்திருக்கின்றன. அங்கிருந்து மோக்ரியையும் (ஓபெரிசா நதிக்கு அப்பாலுள்ள சதுப்பு நிலங்கள்) ஃபிர் மரங்களின் சதுப்புநிலக் காட்டையும் காணலாம். அங்குதான் மங்கிய செந்நிறத்தில் மாலைச் சூரியன் வீழ்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பள்ளத்தாக்கு சமவெளிக்கு குறுக்கே செல்கிறது, பின்னர் நகரின் மேற்குப் பகுதியை நோக்கி வளைந்து சுற்றிச் செல்கிறது, ஒவ்வொரு வசந்தகாலத்திலும் அதிகரிக்கும் களிமண் வண்டலைச் சுமந்து கொண்டு சென்று கீழ ஆற்றில் சேர்க்கிறது, அதனால் ஆற்றின் ஓட்டத்தைக் குறைக்கிறது, சேற்றுநீரை சதுப்பு நிலங்களை நோக்கித் திருப்பிவிடுகிறது, இந்தச் சதுப்பு நிலங்களை உப்புக்கடல் ஏரியாக மாற்றுகிறது. இந்தப் பிளவுக்கு “மாபெரும் பள்ளத்தாக்கு” என்று பெயர், அதன் செங்குத்தான பக்கவாட்டுப் பகுதிகளில் தவிட்டுக் கொட்டை மற்றும் மஞ்சள்மலர்க் கொத்துக்கள் நிறைந்த மரங்கள் மிகுதியாக வளர்ந்திருக்கின்றன, அவை கோடைக் காலத்தில் கூட அவற்றின் உட்பகுதிகள் குளிர்ச்சியாகவும் ஈர்பபதத்துடனும் இருக்கின்றன, அதனால் அது நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதியின் ஏழைக் காதலர்களுக்கு வசதியாகச் சந்திக்கும் இடமாகவும் பயன்படுகிறது.  அவர்கள் தேநீர் அருந்துவதற்கும், அடிக்கடி பயங்கரத் தகராறில் ஈடுபடுவதற்கும் அவை சாட்சியாக இருக்கின்றன, மேலும் வசதிபடைத்தவர்கள் செத்துப்போன தங்கள் நாய்கள், பூனைகள் மற்றும் குதிரைகளைக் கொண்டுவந்து புதைப்பதற்கும் அந்த இடம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஜந்தார்ம்ஸ்கி ஊற்று என்ற பெயருள்ள ஒரு சிற்றாறு, மகிழ்ச்சியாக இசைத்துக்கொண்டும் பள்ளத்தாக்கைத் தூய்மைப்படுத்திக்கொண்டும் செல்கிறது. அந்தச் சிற்றாறு தெள்ளத் தெளிந்த குளிர்ந்த நீருக்காக புயேவ் நகரெங்கும் கொண்டாடப்படுகிறது. பனியைப்போல குளிர்ந்த அதன் நீர் எரிக்கும் கோடையிலும் பற்களைக் கிடுகிடுக்கச் செய்யும். இந்த நீரை டோல்மாசிகா வாசிகள் தங்கள் தனிப்பட்ட சொத்தாகக் கணக்கில் வைத்துக் கொண்டுள்ளார்கள், அதனால் அதைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், வேறு யாருக்கும் தரமால் அவர்கள் மட்டுமே பருகுகிறார்கள், அதனால் முதிய வயதிலும் இளமையாக வாழ்கிறார்கள், சில நேர்வுகளில் வயதைக் கணிப்பது கூட சாத்தியமில்லாமல் போகும். மேலும் வாழ்வாதாரத்துக்காக, அந்தப் புறநகர்ப் பகுதி மக்கள் வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, காட்டுக்கோழியை வேட்டையாடுவது, மற்றும் திருடுவது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள் (முறையான புறநகர்ப் பகுதியிலுள்ள, (இட்சுலான் என்ற துணைப் பெயரில் அழைக்கப்பட்ட ஒரு மெலிந்த காசநோய் பாதிக்கபட்ட எலும்பும் தோலுமாய் இருக்கும்) செருப்புத் தைப்பவர் கோர்கோவ் தவிர, ஓரே ஒரு கைவினைக்கலைஞர் கூட இதில் ஈடுபடுவதில்லை; அதேவேளையில், பெண்களைப் பொருத்தவரை குளிர்காலத்தில் அவர்கள் காளான்களுக்ககாவும், பிற விளைபொருட்களுக்காவும் மடாலயத் தோட்டத்தைத் தூய்மைப்படுத்துவார்கள், மேலும் ஆற்றின் அக்கரையில் உள்ள காட்டையும் ஹக்கிள்பரி பழங்களுக்காகத் தூய்மைப் படுத்துவார்கள். புறநகர்ப் பகுதியின் பெண்களில் இருவர் குறி சொல்வதையும் கூடச் செய்கிறார்கள், அதேவேளையில் வேறு இருவர் எளியமையான ஆனால் பெருமளவுக்குப் பணம் ஈட்டுகிற விபச்சாரத் தொழிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் விளைவாக, புறநகர்ப் பகுதியிலிருந்து வேறுபட்டிருப்பதால், அந்த நகரம் புறநகர்ப் பகுதியின் ஆண்கள் அனைவரும் திருடர்கள் என்றும் பெண்கள் அனைவரும் பண்புகெட்டவர்கள் என்றும் நம்புகிறது. அதனால் நகரம் எப்போதும் புறநகர்ப் பகுதியைக் கட்டுப்படுத்தவும் அடியோடு அழிக்கவும் பாடுபடுகிறது, அதேநேரத்தில் புறநகர்வாசிகள் நகரவாசிகளுக்குப் பதிலடிகொடுக்கும் வகையில் வழிப்பறி, தீவைப்பு, மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள், அதேநேரத்தில் அந்த நகரவாசிகளை அவர்களுடைய ஒழுக்கக் கருத்துக்கள், கஞ்சத்தனம், பேராசை ஆகியவற்றுக்காகவும் அவர்களுடைய வசதியான வாழ்க்கைக்காகவும் வெறுக்கிறார்கள். 

அந்தப் புறநகர்ப் பகுதி மிகவும் ஏழ்மையிலிருக்கிறது, குடிகாரர்களைத் தவிர, பிச்சைக்காரரகள் கூட அங்கு செல்ல மாட்டார்கள். அங்கு செல்லக் கூடிய ஒரே உயிரினம் நாய்கள் மட்டுமே. அவை விலாப்பக்கம் வாலைச் சுருட்டிக்கொண்டு, முற்றம் முற்றமாக அலைந்து, இரத்தமற்ற நாக்குகளைத் தொங்கவிட்டுக்கொண்டு, மனிதர்களைக் கண்டதும் பள்ளத்தாக்கை நோக்கி ஓடுவதற்குத் தயாராக எப்போதும் கால்களை வைத்துக்கொண்டு, அல்லது அவற்றின் உரிமையாளர்களுக்கு அடிமையாக வேலை பார்க்காமல் அவர்கள் அவற்றை உதைக்கலாம் அல்லது சபிக்கலாம் என்ற நிலையில் இருந்துகொண்டு, அவை எப்படி உயிர்வாழ்ந்திருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. 

சுருங்கச் சொன்னால், அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு குடிசையின் ஒவ்வொரு பிளவிலும், அவற்றின் சன்னல்களின் இருண்ட கண்ணாடிகளும், வழுவழுப்பாகப் பாசி படிந்துள்ள அவற்றின் வரிச்சலுடன் வேயப்பட்டிருந்த கூரைகளும், இரசியாவின் கொடிய வறுமையால் தூண்டப்பட்டு, எந்த நம்பிக்கையும் இல்லாமல் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன.  

டோல்மாசிகான்களின் கொல்லைப் பகுதியில் பிர்ச் மரங்களும், வெண்பூ மரங்களும் களைகளும் மண்டிக்கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் வேலிகளில் முட்செடிகள் நடந்து செல்வோரின் உடைகளையும் கால்களையும் பதம் பார்க்கும். அதேவேளையில் அடர்த்தியான காஞ்சூரிச் செடிகள் வேலிக்கும் கீழே நீட்டிக்கொண்டு, சிறிய குழந்தைகளைக் கீறி வைக்கின்றன. அந்தக் குழந்தைகள் பட்டினியால் மெலிந்து, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டும், ஒயாமல் அழுதுகொண்டும் இருப்பார்கள். மேலும் ஒவ்வொரு வசந்தகாலத்திலும் அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திப்தீரியா நோயால் உயிரிழப்பார்கள், அதேவேளையில் செம்புள்ளி விஷக்காய்ச்சலும், தட்டம்மையும் பெருந்தொற்றாகப் பரவும், அதேபோல பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறாக அந்தப் புறநகர்ப்பகுதி எங்கும் வாழ்வின் ஒலி பெரும்பாலும் அழுகையாக இருக்கும் அல்லது வெறிபிடித்த சாபமாக இருக்கும். இருப்பினும், பொதுவாக, டோல்மாசிகாவில் வாழ்க்கை அமைதியாகவும் மந்தமாகவும் இருக்கிறது. வசந்தகாலத்திலும் இப்படித்தானிருக்கும், பூனைகள் கூட வீரிட்டலறுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளும். அங்கே பாடக்கூடிய ஒரே உள்ளூர் ஆள் ஃபெலிட்ஜடா மட்டும்தான். அவளும் குடித்திருக்கும்போது மட்டும்தான் பாடுவாள். ஃபெலிட்ஜடா ஒரு துடுக்குத்தனம் கொண்ட, சூழ்ச்சிக்கார பெண்தரகி, அவள் தனித்தன்மையுடன் கூடிய ரம்பம் அறுப்பதுபோன்றும், தவளைகள் விட்டுவிட்டுக் கத்துவது போன்றும் தடித்த குரலில் கண்களை மூடிக்கொண்டு, தொண்டைக் குமிழை நீட்டிக்கொண்டு பாடுவாள். உண்மையில், அந்த இடத்தின் பெண்கள்தாம் கொந்தளிக்கும் வகையில் தகராறில் ஈடுபடுவார்கள், வெறிக்கூச்சலிடுவார்கள், நாளின் பெரும்பகுதியை பாவாடைகளை உயர்த்திக்கட்டிக்கொண்டு, தெருவைக் கூட்டிப்பெருக்குவதில் செலவழிப்பார்கள், சிறிது உப்புக்காகவோ, மாவுக்காகவோ, ஒரு கரண்டி எண்ணெய்க்காகவோ கெஞ்சுவதை நிறுத்துவதில்லை, அவர்களிடம் அடிவாங்கிக்கொண்டு அவர்களுடைய குழந்தைகள் வலியால் துடித்து அழுவார்கள், வறண்டுபோன மார்புகளைக் குழந்தைகளின் வாய்களில் திணிப்பார்கள், அவர்களுடைய துன்பம் நிறைந்த வாழ்க்கை நிலைமைகளைச் சரிசெய்வதற்கான இடையறாத முயற்சியில் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளவும் மோதிக்கொள்ளவும் கூச்சலிட்டுக்கொள்ளவும் செய்வார்கள்.  ஆம், அனைவரும் பரட்டைத் தலையுடனும் அழுக்கடைந்தும் இருக்கிறார்கள், இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றத்துடன் முகம் ஒடுங்கி எலும்பும் தோலுமாய் இருக்கிறார்கள், அவர்களுடைய கண்கள் திருடர்களின் கண்களைப் போல அமைதியிழந்திருக்கின்றன.  உண்மையில், எந்த ஒரு பெண்ணும், நோயுற்று வீங்கிய நிலையில் தவிர, பருத்த உடலுடன் இருக்கமாட்டாள், கண்கள் மங்கலாக இருக்கின்றன, அவர்கள் நடப்பதற்கே கடும் முயற்சி தேவைப்படும். இருப்பினும், நாற்பது வயதை அடையும்வரை, பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கருத்தரிக்கிறார்கள், வசந்தகாலம் வரும்போது பெரும் வயிற்றுடனும் விழிகளுக்குக் கீழே நீலநிறக் குழிவிழுந்தும் நடந்து செல்வதைக் காணமுடியும். இதுவும் கூட, குழந்தைகள் இல்லாதபோது அதே தீவிர ஆற்றலுடன் உழைப்பதைத் தடுத்துவிடவில்லை. சுருக்கமாகச் சொன்னால், அந்த இடத்தில் வசிப்பவர்கள், ஊசி, நூலுடன் எப்போதும் ஒரு கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டிருக்கும் பொறுமையற்ற கரங்களைப் போல, ஒரு கரடுமுரடான, அருவருப்பான முறையில் இடையறாமல் பிரிவதும் சேர்வதுமாக இருப்பார்கள்.


அந்தப் புறநகர்ப் பகுதியில் தலைமையான நபர் எனது வீட்டுரிமையாளர் அன்டிபா வோலோகோனோவ் ஆவார், அவர் வயதானவர், “பலதரப்பட்ட சாமான்களுக்கான” ஒரு கடை வைத்திருக்கிறார், மேலும் அடமானம் பிடித்து வட்டிக்கும் பணம் தருகிறார். 

துரதிர்ஷ்டவசமாக, அன்டிபா நீண்டகாலமாக மூட்டுவாத வலியால் துன்பப்படுபவர். அதனால் அவரது கால் வளைந்துவிட்டது, அவரது விரல்கள் முறுக்கிக்கொண்டு, வீங்கி, வளைக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. அதனால் அவர் எப்போதும் அவரது கைகளை அவரது சட்டைக் கைகளுக்குள் மறைத்துக்கொள்வார், இருந்தாலும் அவற்றுக்கு பெரிதாகப் பயன்கள் இல்லை, அவர் அவற்றை வெளியே எடுத்தாலும் கூட அவை இடம்பெயர்ந்துவிடும் என்பது போல பயந்துகொண்டே எச்சரிக்கையுடன் செய்வார்.

இன்னொருபுறம், அவர் ஒருபோதும் நிதானம் தவறமாட்டார், பரவசமும் அடையமாட்டார். 

“அந்த இரண்டு விடயங்களுமே எனக்குப் பொருந்தாது, ஏனென்றால் எனது இதயம் வீங்கி, எந்த நேரமும் செயலற்றுப் போகலாம்.” 

அவரது முகத்தைப் பொருத்தவரை, கன்ன எலும்புகள் உயர்ந்திருந்தன, சில இடங்களில் அடர் சிவப்பு கொப்புளங்கள் இருந்தன; ஒரு கிர்கிஜின் முகத்தைப் போன்று அமைதியானதாகத் தெரிந்தது; தாடை ஆடியபோது, நரையும் சிவப்பும் கலந்து, சணலைப் போன்றும் எப்போதும் ஈரத்தோற்றத்துடன் இருந்த முடியும் ஆடியது; தெளிவின்றியும் எப்போதும் மாறிக்கொண்டிருந்த விழிகள் நிரந்தரமாகச் சுருங்கின; அடர்த்தியான, பலவண்ணங்கொண்ட புருவங்கள் விழிகளுக்கு மேலே ஆழ்ந்த நிழல்களை ஏற்படுத்தின; நெற்றிப்பொட்டுக்களில் பல நீல இரத்தநாளங்கள் ஒழுங்கற்ற, அடர்த்தியில்லாத, முடிகளுடன் இருந்தன. இறுதியாக, இந்த ஒட்டுமொத்த ஆளுமையும் எப்போதும் மாறக்கூடியதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. 

மேலும், அவருடைய நடக்கும் பாணி எரிச்சலூட்டும் வகையில் மெதுவானதாக இருந்தது; அவரே வெட்டி வடிவமைத்த அவருடைய மேலங்கி காரணமாக, அது இன்னும் மிகுதியாகத் தெரிந்தது, அதில் மதகுருக்கள் அணியும் நீண்ட அங்கியைப் போன்ற உள்ளுடையும் அதற்கு மேல் அணியும் சட்டையும் இடுப்பு வரையுள்ள கோட்டும் அடங்கியிருந்தன. அவருடைய கீழுடை அவரது கால்களை அடிக்கடி தடுக்காமலிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது, அவர் நின்று அதற்கு ஒரு உதை கொடுக்க வேண்டியிருக்கிறது. இவ்விதமாக, நிரந்தரமாக அந்தக் கீழுடைகள் கந்தையாகிக் கிழிந்துபோயின. 

“அவசரப்பட வேண்டிய அவசியமில்லை,” என்பது அவருடைய வழக்கமான கருத்துரை. “எப்போதும் உரிய நேரத்தில் ஒருவர் சந்தைப் பகுதியில் சண்டையில் வெல்கிறார்.”         

அவருடைய பேச்சு தாழ்ந்த குரலில் விட்டுவிட்டு கேட்கிறது, அதில் தெய்வீகச் சொற்கள் பால் அவருக்குள்ள பெரும் விருப்பத்தைக் காட்டுகிறது.  அப்படிப்பட்ட ஒரு சொல்லின்போது, அவர் இடை நிறுத்துகிறார், அதன் பிறகு, உளரீதியாக அந்தச் சொல்லுடன் மிகவும் அடர்த்தியான, மிகவும் கறுப்பான, முற்றுப்புள்ளியைச் சேர்த்துக்கோன்டிருந்தார். இருப்பினும் அவர் எப்போதும் யாருடனாவது நீண்ட உரையாடலில் ஈடுபடுகிறார், அவரது உள்நோக்கம் தாம் ஒரு முதிய ஞானவான் என்ற பெயரை விட்டுச் செல்லவேண்டும் என்பதைப் போல இருந்தது. 

அவரது எளிய குடிசையில் தெருவைப் பார்த்து மூன்று சன்னலகள் இருக்கின்றன, மற்றும் அதில் ஒரு தடுப்புச் சுவர் சம அளவில் இல்லாத இரண்டு அறைகளைப் பிரிக்கிறது. பெரிய அறையில் ஓர் இரசிய அடுப்பு இருக்கிறது, அதில் அவரே வசிக்கிறார்; சிறிய அறையில் எனது வசிப்பிடம் இருக்கிறது. ஒரு நடைவழி பொருட்கள் வைக்கும் அறையை இரண்டு அறைகளிலிருந்தும் பிரிக்கிறது, அங்கு ஒரு கதவுக்குப் பின்னால் கழிப்பறை, அதற்கு ஒரு கனத்த, பழைய பாணியிலான தாழ்ப்பாளும் பல இரும்பு மற்றும் பித்தளைத் திருகாணிகளும் இருக்கின்றன.  அன்டிபா அண்டைவீட்டார் தன்னிடம் அடமானம் வைக்கப்பட்ட, தேநீர்க் கெட்டில்கள், உருவச் சிலைகள், குளிர்கால உடைகள் இன்னபிற, பொருட்களை பாதுகாக்கிறார். இந்தப் பண்டக அறையின் பெரிய சிறுவெட்டுக்கள் உள்ள சாவியை அவர் எப்போதும் அவருடைய அரைக்கால் சட்டைகளை மாட்டும் உலோகத் தகட்டுக்குப் பின்புறமாக வைத்திருப்பார்; மேலும் அவர் ஏதாவது திருட்டுப் பொருளை வாங்கி வைத்திருக்கிறாரா என்று விசாரிக்கக் காவல்துறையினர் வருகிறபோது, அவர் அந்தச் சாவியை நீண்ட நேரம் வயிற்றைச் சுற்றிக் கட்டியுள்ள கச்சையில் வைத்திருப்பார், பின்னர் அதை வெளியே எடுப்பார். இதற்கிடையில், கண்காணிப்பாளர் அல்லது துணைக் கண்காணிப்பாளரிடம் ஆரவாரமாகச் சொல்லுவார்:

“நான் ஒருபோதும் அந்தவகைப் பொருட்களை எடுத்துக்கொள்வதில்லை. நான் சொல்வதில் உள்ள உண்மையை ஒருமுறைக்கு இருமுறையாக நீங்கள் நேரிலயே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.”   

அவர் உட்காரும்போதெல்லாம் அந்தச் சாவி நாற்காலியின் இருக்கையிலோ பின்புறமோ உரசிக் கடகடவென்று சத்தத்தை ஏற்படுத்தும்; அந்த நேரத்தில் அவர் தனது கரத்தைக் கடினமாக வளைத்து, சாவி சத்தம் எழுப்பாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அந்தத் தடுப்புச் சுவர் மிகவும் தடிமனான ஒன்றல்ல என்பதால் அவர் விடும் ஒவ்வொரு மூச்சும் அவரது ஒவ்வொரு அசைவும் எனக்குக் கேட்கும். 

ஒருநாள் மாலை, பனிமூடிய சூரியன் ஆற்றுக்குக் குறுக்கே செம்பொன்னிற பைன் மரக்காட்டை நோக்கி சரிந்து செல்லும்போது, இருளார்ந்த குறுகிய தோற்றத்திலிருந்து பள்ளத்தாக்கின் கரடுமுரடான முகத்துவாரப் பகுதி வழியே இளஞ்சிவப்பு பனித்திவலைகளைப் பார்க்கலாம். அன்டிபா வோலோகோனோவ், பக்கவாட்டில் ஒடுங்கியிருக்கிற, கைப்பிடியில் பச்சை ஆக்சைடு பூசிய, நீள்குழாய் கொண்ட ஒரு தட்டையான தேநீர்க் கெட்டிலை அடுப்பில் வைத்தார். பின்னர் சன்னலுக்கு அருகில் உள்ள மேசையருகே அமர்ந்துகொள்வார். 

அவ்வப்போது, எப்போதும் ஒரு துல்லியமான பதிலை எதிர்பார்ப்பதை உள்ளடக்கிய ஒரு தொனியில் தொடுக்கப்படும் கேள்விகளால் மாலை அமைதி கெடுவதை நான் கேட்பேன். 

“தாரிகா எங்கே?” 

“அவன் தண்ணீர் கொண்டுவர ஊற்றுக்குச் சென்றிருக்கிறான்,” ஒரு மெல்லிய் குரலில், குறைகூறும் தொனியில் பதில் வரும். 

“உங்கள் சகோதரி எப்படி இருக்கிறார்?”

“இன்னும் வலியோடுதான் இருக்கிறாள்.”

“அப்படியா? சரி, இப்போது நீ போகலாம்.”

தனது தொண்டையைச் சரி செய்துகொள்வதற்கு மெலிதாக ஒரு இருமல் இருமிவிட்டு, அனத முதியவர் நடுங்கிக்கொண்டே உச்சக் குரலில் பாடத் தொடங்கினார். 

ஒருமுறை ஒரு துப்பாக்கிக்குண்டு எனது மார்பில் பலமாகத் தாக்கிவிட்டது, அந்த வலியை நான் பெரிதாக உணரவில்லை. ஆனால் அந்த வலியை ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்திருக்காது, ஏனென்றால் காதலின் சுவாலை அதை அடக்கிவிட்டது!

தேநீர்க் கெட்டிலின் இஸ்ஸ் சத்தத்தையும் கொதிக்கும் குமிழிச் சத்தத்தையும் தாண்டி, தெருவில் கனத்த காலடிச் சத்தம் ஒலித்தது, மேலும் தெளிவற்ற குரல் சொல்கிறது:

“அவர் ஒரு நகரவை உறுப்பினர் என்பதால் அவர் அப்படி நினைக்கிறார், அவர் புத்திசாலியும் கூட.” 

“ஆம், அப்படிப்பட்ட ஆட்கள் மிகவும் கர்வமாக வளர்வதற்குப் பொருத்தமானவர்கள்.”

“ஏன், அவருடைய மூளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்தாலும் எனது காலணிகளில் ஒன்றுக்குக் கொழுப்புப் பூசக் காணாது!”

அந்தக் குரல்கள் தேய்ந்து மறைந்ததும் அந்த முதியவரின் உச்சக்குரல் புதிதாகக் கசிந்தொழுகும் ரீங்காரமாக ஆகியது:

“ஏழை மனிதனின் கோபம் … மினிகா! ஹாய்! நீயா! இங்கே வா, நான் உனக்குச் சிறிது சர்க்கரை தருகிறேன். உன் அப்பா எப்படி இருக்கிறார்? தற்போது குடிக்கிறாரா?”

“இல்லை, அடக்கமாக இருக்கிறார், அவர் கேவாசும் முட்டைக்கோசு சூப்பும் மட்டும் எடுத்துக்கொள்கிறார்.”

“பிழைப்புக்கு என்ன செய்கிறார்?” 

“மேசைமுன் அமர்ந்து, சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.”   

“உன் அம்மா அவரை மீண்டும் அடிக்கிறாரா?”

“இல்லை, அடிப்பதில்லை.”

“அம்மா ––அவர் எப்படி இருக்கிறார்?”

“வீட்டில்தான் இருக்கிறார்.”

“சரி, சென்று வா.”    

அடுத்து அங்கே சன்னலுக்கு முன்பாக மென்மையாக ஃபெலிட்ஜா வந்து நின்றாள், அந்தப் பெண்ணுக்கு வயது நாற்பது இருக்கும், அவளுடைய விழிகள் பருந்தைப் போலக் கூர்மையாக இருந்தன, அழகான உதடுகள் ஒரு கள்ளச் சிரிப்புடன் அழுந்திக்கொண்டன.  அந்தப் புறநகர் முழுவதிலும் அவள் நன்கு அறியப்பட்டவள், அவளுக்கு முன்பே ஒரு மகன் இருந்தான், அவன் பெயர் நிலுஷ்கா, அவன் உள்ளூர் “கடவுளின் முட்டாள்.” அனைத்து நிகழ்வுகளிலும் எது சரியான நடைமுறை என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஒப்பாரியிலும், இறுதிச் சடங்குகளிலும், பண்டிகைகளிலும் அனைத்தும் அவளுக்கு அத்துபடி. இவற்றுக்காகத் தேவைப்பட்டவர்களைத் தேந்தெடுக்கவும் அவளுக்குத் தெரியும்.  கடைசியாக, அவளுக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால், இடதுபக்கம் சாய்ந்து சாய்ந்து நடப்பாள்.

அவளுடைய சக பெண்கள் அவளுடைய இரத்த நாளங்களில் “கண்ணியமான ஒரு சொட்டு இரத்தம்” இருப்பதாகக் கூறுவார்கள், ஆனால் அந்தக் கூற்றில் அவள் ஒவ்வொருவரையும் அதே ஆர்வமற்ற மரியாதையுடன் நடத்துவாள் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. இருந்தபோதிலும், அவளிடம் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது, ஏனென்றால் அவளுடைய கைகள் மெலிந்தும் நீண்ட விரல்களுடனும் இருக்கும், அவளுடைய தலை செருக்குடன் அமைதியாக இருக்கும், அவளுடைய குரல் உலோகத்தைப் போல கணீரென்று இருக்கும், இருந்தாலும் அந்த உலோகம் மந்தமாகவும் துருப்பிடித்தும் இருந்தது போல இருக்கும். அவள், தான் உட்பட, ஒவ்வோருவரைப் பற்றியும் மிகவும் கரடுமுரடாகவும் வெளிப்படையாகவும்   பேசுவாள், இருப்பினும் அந்தச் சொற்கள் மிகவும் எளிமையாக இருக்கும், அவளுடைய பேச்சு கேட்பதற்கு மன உலைச்சலைத் தருவதாக இருக்கலாம், ஆனால் ஒருபோதும் ஆபாசமாக இருக்கிறது என்று சொல்லமுடியாது.

எடுத்துக்காட்டாக, இன்னும் ஒரு நேர்த்தியான வாழ்க்கையை வாழலாமல்லவா என்று ஒருமுறை வோலோகோனோவ் அவளைக் கண்டித்ததை நான் கேட்டேன்:

“நீ இன்னும் சுயகட்டுப்பாடோடு இருக்க வேண்டும், நீ ஒரு பெண் என்பதையும் நீயே உனது சொந்த எஜமானி என்பதையும் பார்த்துக்கொள்,” என்றார் அவர். 

“அது எனது பிறவிக் குணம் எனது நண்பரே, பாருங்கள், நான் நிறையப் பொருத்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள், எனது வயிற்றில் பட்டினியின் வேதனையைத் தாங்கிக்கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அப்போதுதான் எனது கண்கள் அவமானத்தின் அடையாளத்தைக் கண்டுகொண்டன.  எனவே ஒவ்வொரு பெண்ணையும் போல, நான் அன்பால் என்னை நிரப்பிக்கொண்டேன். ஒரு பெண் அன்பொளியாக ஆகிவிட்டால், அவள் தனது தோற்றத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டு, கடவுள் அவளுக்குக் கொடுத்த உடலைப் பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை அல்லவா; ஆகவே நான் ஒரு பானை பீரைப்போல என்னை விற்கிறேன், மேலும் ‘விரும்பும் யாரும் இதைப் பருகிறார்கள், அதேவேளையில் அப்போதும் அதில் பானம் இருக்கவே’ செய்கிறது.”

“அப்படிப்பட்ட பேச்சைக் கேட்பது ஒருவரை அவமானமாக உணரச் செய்கிறது,” வோலோகோனோவ் ஒரு பெருமூச்சுடன் சொன்னார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவள் வெடித்துச் சிரித்தாள். 

“என்ன ஓர் ஒழுக்கமான மனிதர்!” என்பதுதான் அவருடைய கருத்துக்கு அவளுடைய பதில் கருத்தாக இருந்தது.

இப்போது வரை ஒரு தாழ்ந்த தொனியில் அன்டிபா எச்சரிக்கையுடன் பேசியிருந்தார், அந்தப் பெண்ணோ உரத்துச் சவால்விடும் தொனியில் பதிலளித்து வந்தாள்.

“உள்ளே வந்து சிறிது தேநீர் அருந்திச் செல்கிறாயா?” அடுத்து அவர் சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்துக் கேட்டார். 

“வேண்டாம், நன்றி. கடந்து செல்லும்போது நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்!”  

“அவ்வளவு உரத்துப் பேசாதே. நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?”

“ஓ, அப்படிப்பட்ட ஒரு விடயம்!”

“எதைப் பற்றியுமில்லை, நான் கற்பனை செய்துகொள்கிறேன்.”

“ஆம், ஒவ்வொன்றைப் பற்றியும்.”

“அனைத்தையும் படைத்த கடவுளுக்குத்தான் எல்லாம் தெரியும்.”

அதன்பிறகு அந்த ஜோடி ஒன்றாகச் சேர்ந்து சிறிதுநேரம் கிசுகிசுத்தனர். அதன் பிறகு அந்த முதியவரை அசைவற்று உட்கார்ந்திருக்கச் செய்துவிட்டு, ஃபெலிட்ஜடா வந்தது போலவே திடீரென்று மறைந்துபோனாள்.  அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டார்:

“அந்த ஏவாளின் காதுகளில் பாம்பு விசத்தை ஊற்றவேண்டும்! …. இருப்பினும் கடவுளே, என்னை மன்னித்து விடுங்கள், ஆம், மன்னித்து விடுங்கள்!” 

“அந்தச் சொற்களில் ஒரு துகள் கூட உண்மையான வருத்தம் இல்லை.” அதைவிட, எதையாவது குறிப்பிட்டுச் சொல்லும் சொற்களில் அவரிடம் பலவீனமில்லை, ஆனால் புறநகர்ப் பகுதியின் எளிய மக்களின் முறைதவறிய சொற்களைப் பயன்படுத்துவதில் அவர் பலவீனமாக இருந்ததால் அவர் அந்தச் சொற்களை உதிர்த்தார் என்று நான் நம்புகிறேன்.


சில நேரங்களில் வோலோகோனோவ் வயதானதால் சோர்ந்து போனவராக, மிகவும் மெதுவாகத் தடுப்புச் சுவரைத் தட்டிவிட்டு, சத்தம்போடுவார்:

“தங்கியிருப்பவரே, என்னோடு சிறிது தேநீர் அருந்த வருவீர்களா?”

எங்கள் பழக்கத்தின் தொடக்க நாட்களில் அவர் என்னை நிலையான சந்தேகத்தோடுதான் பார்ப்பார். என்னை ஒரு காவல்துறை துப்பறியும் ஆள் என்றே கருதிவந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அதற்குப் பின்னர் எனது முகத்தை மிகுந்த ஆர்வத்துடன் ஆய்வுசெய்து பார்த்தார். பின்னர் உத்தரவிடுவது போல நீளமாகப் பேசினார்:

“இழந்த சொர்க்கம், அழிந்த சொர்க்கம் எப்போதாவது படித்திருக்கிறீர்களா?”  

“இல்லை, மீண்ட சொர்க்கம் தான் படித்திருக்கிறேன்,” நான் பதிலளித்தேன்.

அவர் ‘எனது தேர்வு குறித்து உடன்பாடில்லை’ என்பதற்கு அடையாளமாக தனது செந்நிறத் தாடியை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு, என்னை அவதானிக்க இட்டுச் சென்றது: 

“ஆதாம் ஏன் சொர்க்கத்தை இழந்தான் என்பதற்கான காரணம் என்னவென்றால் அவன் அவனைக் கெடுப்பதற்கு ஏவாளை அனுமதித்தான் என்பதுதான். அதன் பிறகு அவன் ஒருபோதும் அதை மீண்டும் அடைய கடவுள் அவனை அனுமதிக்கவில்லை. ஏனென்றால் சொர்க்கத்தின் வாயில்களுக்குத் திரும்புவதற்கு யாருக்குத் தகுதியுள்ளது? ஒரே ஒரு மானிடனுக்குக் கூட இல்லை.”

மேலும், உண்மையில், இந்த விடயத்தில் கருத்துமோதலில் ஈடுபடுவது காலத்தை வீணடிப்பதாகிவிடும் என்று அறிந்தேன், ஏனென்றால் அவர் நான் சொல்வதை வெறுமனே கவனித்துக்கொண்டிருந்தார், அதன் பிறகு, அதை மறுக்கும் முயற்சியில் ஈடுபடாமல், முன்பு போலவே அதே தொனியில், சரியாக அதே சொற்களை, அவரது கூற்றை, மீண்டும் சொன்னார்:  “ஆதாம் ஏன் சொர்க்கத்தை இழந்தான் என்பதற்கான காரணம் என்னவென்றால் அவன் அவனைக் கெடுப்பதற்கு ஏவாளை அனுமதித்தான் என்பதுதான்.”

அதேபோல, பெண்கள் தாம் எங்கள் மிகவும் வழக்கமான உரையாடலின் பொருளாக இருந்தார்கள்.

ஒருமுறை அவர் சொன்னார், “நீங்கள் இளைஞர், ஆகவே நீங்கள் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போதும் உங்கள் வழியில் தடைசெய்யப்பட்ட பழம் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளும் கடப்பாடுடையவர். இது ஏனென்றால் மனித இனம் பாவத்தை நேசிப்பதற்கு அடிமையாக இருக்கிறது, அல்லது, வேறு சொற்களில் சொல்வதானால், பாம்பை நேசிப்பதற்கு. ஆம், வரலாறு பலமுறை உறுதிப்படுத்தியிருப்பது போல, வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் முதன்மையான தடையாக இருப்பது பெண்ணே. முதன்மையாகவும் முக்கியமாகவும் பெண்தான் அமைதியின்மையின் முதல் ஆதாரம். ‘விசம் ஏறியது என்பதால், பாம்பு உங்களுள் தனது பற்களை செலுத்தும்.’ பாம்பு என்பது நம்முடைய சதை ஆசைதான், பாம்பின் தூண்டுதலால்தான் கிரேக்கர்கள் நகரங்களைத் தரை மட்டமாக்கினார்கள், டிராயும் கார்திஜீனாவும் எகிப்தும் சூறையாடப்பட்டன, அலெக்சாண்டர் பாவ்லோவிட்ச்சின் [பேரரசர் முதலாம் அலெக்சாண்டரின்] சகோதரிக்கான ஒரு காதல் வெறியை ஏற்படுத்திய பாம்பு இரசியா மீது நெப்போலியனின் படையெடுப்பைக் கொண்டுவந்தது. இன்னொருபுறம், மொகமதிய தேசங்களும் யூதர்களும் மிகவும் தொடக்க காலங்களிலிருந்தே விடயத்தைச் சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டன, மேலும் தங்கள் பெண்களை தமது வீடுகளின் பின்கட்டுக்களில் மூடி வைத்தனர்; மிகமோசமான ஊதாரித்தனம் நிலவ நாம் அனுமதிக்கிறோம்; நமது பெண்களுடன் கைகோர்த்து நடக்கிறோம், பெண்களை மருத்துவர்களைப் போல பட்டம் பெறவும், பல்லைப் பிடித்து இழுக்கவும் எஞ்சிய எல்லாவற்றையும் செய்யவும் அனுமதிக்கிறோம். ஒரு மருத்துவச்சிக்கு அப்பால் முன்னேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதுதான் உண்மை, ஏனென்றால் ஒரு பிள்ளைபெறும் விலங்காக சேவை செய்யவேண்டும், அல்லது ஒருபோதும் திருமணத்தைச் சுவைத்திராத பெண் என்று அழைக்கப்படுபவளாக இருக்க வேண்டும். ஆம். பெண்ணின் பணி அதோடு முடிந்துவிட வேண்டும்.”

அங்கு அடுப்புக்கு அருகே இருண்ட சுவரில் “விதிகளும் ஒழுங்குமுறைகளும்” என்று தாளில் எழுதி ஒட்டியிருக்கிறது, அதில் சரி/தவறு என்று குறியிடப்பட்டிருக்கிறது, மேலும் மஞ்சள் தாள்களில் ஒரு சிறிய கடிகாரத்தின் பெண்டுலம், அதன் எடைகளாக ஒரு பக்கம் சுத்தியலும் குதிரை லாடமும் இன்னொரு பக்கம் செப்பு உலக்கையும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் பல உருவச் சிலைகள் அவற்றின் வெள்ளி அணிகலன்களுடன் மின்னிக் கொண்டிருந்தன, அந்த கருப்பு முகபாவங்களைக் கொண்ட உருவங்களின் மேலே முலாம் பூசப்பட்ட ஒளிவட்டங்கள் இருந்தன. அதேவேளையில், ஜிட்னயா தெருவிலும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும்           பசுமையான தாவரங்களைப் பார்த்தபடி (பள்ளத்தாக்குக்கு அப்பால் அனைத்தும் பிரகாசமாகவும் அழகாகவும் தெரிகின்றன), கவர்ச்சியற்ற இரும்புச் சட்டங்களுடன் கூடிய ஓர் அடுப்பும், நடைவழிக்கு எதிர்ப்புறம் புழுதிபடிந்து, மங்கலான வெளிச்சத்துடன் பொருள்கள் வைக்கும் அறை காய்ந்த காளான், புகையிலை, சணல் எண்ணெயின் வாடையை நிரந்தரமாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. 

வோலோகோனோவ் அவருடைய கடுமையான, கொதிக்கும் தேநீரை ஒடுங்கிப்போன ஒரு பழைய தேநீர்க்கரண்டியைக் கொண்டு கலக்கிவிட்டு, அதை ஒரு சிறிது உறிஞ்சிக்கொண்டு, ஒரு பெருமூச்சுடன் கூறுகிறார்:

“எனது வாழ்க்கை முழுவதிலும் அனுபவத்தைப் பெறுவதிலேயே ஈடுபட்டு வந்துள்ளேன், அதனால் இப்போது எனக்குப் பெரும்பாலான விடயங்கள் தெரிகின்றன, அவற்றைக் கவனத்துடன் கேட்கவேண்டும். வழக்கமாக, மனிதர்கள் நான் சொல்வதை மிகவும் கவனத்துடன் கேட்பார்கள், ஆனால் அங்கும் இங்குமாக ஒரு வாழும் ஆன்மாவை ஒருவர் காணலாம் என்றாலும் எஞ்சியவர்களைப் பற்றி இப்படிக் கூறலாம்: ‘டேவிட்டின் வீட்டில் பயங்கரமான விடயங்கள் வந்துசெல்லலாம், நெருப்பு காமத்தை எரித்துவிடும்.’”  

பார்வைக்கு அந்தச் சொற்கள் சாத்தியமானால், விந்தையான மற்றும் அயலான நிகழ்வுகளின், என்னைச் சுற்றி எப்போதும் நிகழும் இன்னும் விந்தையான நாடகங்களின், சுவர்களின் உயரத்தை அதிகரிப்பதற்கான செங்கற்களை பிரதிபலிக்கலாம். 

அந்த முதியவர் தொடர்கிறார், “எடுத்துக்காட்டாக, நமது முன்னாள் மேயர் மித்ரி எர்மோலீவ் போலுகோனோவ் அவரது காலத்துக்கு முன்பே இறந்துகிடக்கிறாரா? ஏனென்றால் அவர் பல செருக்கான திட்டங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டார். எடுத்துக்காட்டாக, அவர் தனது மூத்த மகனைக் கல்வி கற்பதற்கு கசானுக்கு அனுப்பினார் —– அதன் விளைவாக, பல்கலைக் கழகத்தில் மகனின் இரண்டாமாண்டின் போது, அவன் — மகன் – தன்னுடன் ஒரு சுருள்முடி கொண்ட யூதப்பெண்ணை அழைத்து வந்து, தனது தந்தையிடம் கூறினான்: ‘இந்தப் பெண் இல்லாமல் என்னால் வாழமுடியாது — என்னுடைய ஒட்டுமொத்த ஆன்மாவும் ஆற்றலும் அவளிடம் கட்டுப்பட்டுள்ளது.’ ஆம், உண்மையான தேர்ச்சிதான்! அந்த நாளிலிருந்து துரதிர்ஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் நிகழவில்லை, அதனால் யாஷ்கா குடிக்கத் தொடங்கினான், அந்த யூதப்பெண் கவலையடைந்தாள், மித்ரியும் நகரைச் சுற்றித் திரிந்தான், “என்னை வந்து பாருங்கள், எனது சகோதரர்களே, எவ்வளவு ஆழத்தில் நான் மூழ்கிவிட்டேன்’ என்று பரிதாபமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான். மேலும் இறுதியாக, அந்த யூதப் பெண் கருக்கலைந்து, இரத்தப் போக்கினால் இறந்து போயிருந்தாலும், கடந்த காலம் சரி செய்ய முடியாததாக இருந்தது. அதேவேளையில் மகன் மோசமான நிலைக்குச் சென்று குடிபோதைக்கு அடிமையானான், ‘அந்தத் தந்தை அகாலமாக மரணமடைந்தார்.’ ஆம், ‘ஜுடாயாவின் முள்தாங்கி குழுமத்தால்’ அந்த இரண்டு மனிதர்களின் உயிர்கள் பறிபோயின. எங்களைப் போல, ஹீப்ரூவுக்கு அவனுக்கான தலைவிதி இருக்கிறது. தலைவிதியை ஒரு குச்சியால் விரட்டிவிட முடியாது. நம்மில் ஒவ்வொருவரின் தலைவிதியும் வேகமின்றி இருக்கிறது. அது மெதுவாகவும் அமைதியாகவும் நகர்கிறது, அதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. ‘காத்திரு,’ அது சொல்கிறது. “முன்னோக்கித் தள்ளுவதற்கு முயற்சி செய்யாதே.’” 

அவர் உரையாட, உரையாட, வோலோகோனோவின் கண்கள் முடிவின்றி வண்ணத்தை மாற்றிக்கொள்கின்றன— இப்போது ஒரு மங்கலான சாம்பல் நிறத்தில் இருக்கிறது, சோர்ந்துபோன தோற்றத்தை வெளிப்படுத்துகிறது, இப்போது நீலநிறத்தில் மாறுகிறது, ஒரு துயரமான தோற்றத்தை அடைகிறது, இப்போது (எல்லாவற்றையும் விட அடிக்கடி) நடுநிலையான வெறுப்பின் பச்சை மின்னல்களை வெளியிடத் தொடங்குகிறது.

“அதேபோல, ஒரு காலத்தில் சக்திவாய்ந்த குடும்பமாக இருந்த கபுஸ்தின்கள் காலப் போக்கில் தரைமட்டமாகி ஒன்றுமில்லமால் போனார்கள். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் எப்போதும் மாற்றத்திற்கு ஆதரவாக இருந்தார்கள், மேலும் புதிய எதுவானாலும் அதற்கு அர்ப்பணித்துக் கொண்டார்கள். உண்மையில், அவர்கள் ஒரு பியானோவை நிறுவும் வரை சென்றார்கள்! நல்லது, அவர்களில் வாலென்டின் மட்டுமே இன்னும் அவரது சொந்தக் கால்களில் நிற்கிறார், மேலும் அவர் (அவர் நாற்பது வயதுக்கும் குறைவான ஒரு மருத்துவர்) ஒரு நம்பிக்கையிழந்த குடிகாரர், நீர்க்கோவை நோயால் தீவிரமான பாதிப்புக்குள்ளானவர், ஆஸ்துமாவுக்கு இரையானவர், அதனால் அவரது புற்றுநோய்க் கண்கள் பயங்கரமாகத் துருத்திக் கொண்டிருந்தன. ஆம், கஸ்புதின்கள், போலுகோனோவ்களைப் போல, இறந்து போனவர்களாக எழுதப்படலாம். 

அவருடைய பேச்சு முழுவதிலும், வோலோகோனோவ் மறுத்துகூறுவதற்கியலாத திடநம்பிக்கை கொண்ட ஒரு தொனியில், அவர் தெரிவித்ததற்கு மாறாக விடயங்கள் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்பதை உட்பொருளாகக் கொண்ட ஒரு தொனியில் பேசுகிறார், உண்மையில், அவரது கரங்களில், வாழ்க்கையின் நிகழ்ச்சிப்போக்கு மிகவும் விளக்கவியலாத, மிகவும் வேதனை நிறைந்ததாக ஆகிறது; தவிர்க்க முடியாமல் ஆணையிட்ட ஒன்றாக சட்டத்தைப் போல ஆகிறது. 

“அதே விடயம்தான் ஆஸ்முகின்களுக்கும் நிகழும்,” அவர் அடுத்துக் குறிப்பிடுகிறார். ஒருபோதும் ஜெர்மானியர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கும், அவர்களுடன் எந்த வணிகமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கும் உங்களுக்கு அவர் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இரசியாவில் வீட்டோடிருக்கும் எந்த ஒரு மனைவியும் பீர் காய்ச்சலாம்; இருப்பினும் நமது மக்கள் அதைக் குடிக்க மாட்டார்கள்—–அவர்கள் சாராயத்துக்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள். இரசிய மக்கள் குடிப்பதில் தங்கள் நோக்கத்தை உடனடியாக அடையவேண்டும் என்று விரும்புவார்கள்; மதியிழக்கச் செய்வதற்கு, ஐந்து கையளவு பீரை விட வோட்காவின் ஒரு கையளவு மிகுதியாக வேலை செய்யும். ஒருமுறை நமது மக்கள் ஒரே மாதிரியான எளிமையை விரும்பினார்கள்; ஆனால் இப்போது அவர்கள் பிறவியிலேயே பார்வை இழந்து, இப்போது திடீரென்று பார்வை பெற்றவர்களைப் போல ஆகியுள்ளார்கள். உன்மையிலேயே ஒரு மாற்றம்தான்! முப்பத்துமூன்று ஆண்டுகளாக முரோமின் இலியா [இரசிய கிராமியப் பாடல்களில் அடிக்கடி சந்திக்கும் மிகவும் பாரம்பரியமான முரோமெட்ஜ் மற்றும் ஒருவேளை தீர்க்கதரிசி எலிஜாவுடன் ஒருமித்ததாக இருக்கலாம், இருந்தாலும் பல்சமய இடிக்கடவுள் பெருனுக்குப் பல பெருமைகள்.] அவரது இறுதி வருவதற்கு முன்புவரை காத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்; மேலும் ஓர் அவமானப்பட்ட நிலையில் அமைதியாகக் காத்திருக்க முடியாத அனைவரும் ….”

இதற்கிடையில் மேகங்கள் வெண்பனியாலான அன்னப் பறவைகளைப் போல உருவாகி, ரோஜா வண்ண விண்ணில் பயணித்து, வான்வெளியில் மறைந்தன, அதேவேளையில் அவற்றுக்குக் கீழே, பூமியின் மீது, பள்ளத்தாக்கு ஒரு கரடியின் உரித்துப் பரப்பிய தோலைப் போல இருந்தது, அதை கட்டுக்கதைகளில் வரும் ஓர் இராட்சதன் சதுப்பு நிலத்திலும் கானகத்திலும் தஞ்சம் புகுவதற்கு முன்பு விரித்திருப்பதைப் போல காணலாம். உண்மையில் அந்த நிலப்பரப்பு எனக்கு பழங்காலப் பல்வகை அற்புதக் கதைகளை நினைவுபடுத்துகிறது, அதேபோல மனித வாழ்வின் குறைபாடுகளுடன் மிகவும் விந்தையான முறையில் பழகக்கூடிய அன்டிபா வோலோகோனோவும் மிகவும் தீவிரமாக அவற்றை விவாதிப்பதற்கு அடிமையானார். 

ஓரிரு கணம் அவர் அமைதியாக இருக்கிறார், சீறும் ஒலியுடன் தனது உதடுகளை மூடிக்கொண்டு, தேநீர்த் தட்டிலிருந்து சிறிது காவி-நிற தேநீரைப் பருகுகிறார், அதை அவரது வலது கரத்தின் சீரற்ற விரல்கள் அவற்றின் விளிம்புகளைச் சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தன. அதன் பிறகு, அவருடைய மீசை வறண்டு போயிருந்தது, அவனது குரலின் அளவு விவிலியச் சங்கீதங்களிலிருந்து உரத்துப் படிப்பவரின் குரல்களில் தொனியில் அதன் பேச்சைத் தொடர்கிறது. 

“அசீவ் என்ற பெயரிலுள்ள ஒரு முதியவர் ஜிட்னயா தெருவில் வைத்திருக்கும் கடையைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த மனிதருக்குப் பத்து மகன்கள் இருந்தார்கள், இருப்பினும், அவர்களில் ஆறுபேர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துபோனார்கள். எஞ்சியிருந்தவர்களில் மூத்தவன், ஒரு நேர்த்தியான பாடகன், அவன் முன்பு ஊதாரியாகவும் புத்தகப் புழுவாகவும் இருந்தான்; அவன் தாஷ்கண்டில் ஓர் அதிகாரியின் பணியாளாக இருந்தபோது, எந்தக் காரணத்துக்காகவோ தனது எஜமானர், எஜமானி இருவருக்கும் துரோகமிழைத்தான், உண்மையில், அவன் தனது எஜமானியுடன் காதல் செய்துவந்தான் என்பதுதான் அந்தக் கதை, அவ்வாறு செய்ததற்காக அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னொரு மகன், கிரிகோரி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு, மனநிலைப் பிறழ்வுக்கு ஆளானான். இன்னொருவன், அலெக்சி குதிரைப்படை வீரனாகப் படையில் சேர்ந்தான், ஆனால் இப்போது ஒரு சர்க்கஸ் வீரனாக நடித்துக் கொண்டிருக்கிறான், மேலும் ஒருவேளை அவன் குடிகாரனாகவும் ஆகிவிட்டிருப்பான். மேலும் எல்லோரையும் விட இளையவனான நிகோலாய், ஒரு சிறுவனாக இருந்தபோதே ஓடிவிட்டான், இறுதியாக ஆர்க்டிக் பெருங்கடலில் மீன் பிடிப்பதற்கான ஒரு விலைமதிப்புமிக்க திட்டத்துடன் நார்வே வந்து சேர்ந்தான். இரசியர்களாகிய நமக்கு சொந்த மீன்கள் இருந்தன எஞ்சியும் இருந்தன என்ற உண்மையை அவன் கவனிக்கவில்லை, ஓர் உள்ளூர் மடாலயத்திடம் அவனுடைய தந்தை அவனுக்காக ஒதுக்கீடு செய்தவற்றை மட்டுமே பெற முடிந்தது. ஆர்க்டிக் கடல்களின் மீன்களுக்கு அவ்வளவு தேவை இருக்கிறது! இருப்பினும் நிகோலாய் காத்திருந்திருந்தால் மட்டுமே, இன்னும் பொறுமையாக இருந்திருந்தால் மட்டுமே, அவன்—“

இங்கு வோலோகோனோவ் தனது குரலை தாழ்த்திக் கொள்கிறார், ஒரு கோபங்கொண்ட நாய் ஊளையிடுவதைப் போலத் தொடர்கிறார்:

“எனக்கும் கூட மகன்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவன் குஷ்காவில் (அதற்கு ஒரு சன்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது), இன்னொருவன் குடிபோதையில் மூழ்கி இறந்துவிட்டான், மேலும் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர், இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கின்றனர். இவர்களில் கடைசியாள், ஸ்மோலென்ஸ்கில் ஒரு தங்கும் விடுதியில் பரிசாரகராக இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும், அதேவேளையில் மற்றவன், மெலன்டி, ஒரு மதக் கல்வி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, திருச்சபைக்காகக் கற்பிக்கப்பட்டான், அங்கிருந்து ஓடிவிடத் தூண்டப்பட்டு, தொல்லையில் சிக்கி, பின் இறுதியாக சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டான். இப்போது அங்குதான் இருக்கிறான்! ஆமாம், அந்த இரசியனை ‘செல்வாக்கில்லாத’ தனிநபர் என்று அழைக்கலாம், அந்தத் தனிநபர் அவமானத்தால் தலைகுனியாத வரை, விரைவிலேயே கோழிக்குஞ்சின் இறகைப்போல காற்றில் அடித்துச் செல்லப்படுகிறான்-— ஏனென்றால் நாம் மிகவும் தன்னம்பிக்கையுடனும் அமைதியிழந்தும் இருக்கிறோம். இப்போதைக்கு முன்புவரை, நானே ஒரு ஏமாளியாக இருந்துவந்துள்ளேன், சமநிலையிழந்த மனிதனாக இருந்து வந்துள்ளேன்: ஏனென்றால் இளைஞர்கள் ஒருபோதும் அவர்களுடைய சொந்த முக்கியத்துவமின்மையை உணர்வதில்லை, அல்லது காத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்திருப்பதில்லை.”   

இலையுதிர்காலத்தில், குளிர்ச்சியான காற்று வீசும் ஒரு நாளில், கசியும் ஒரு குழாயிலிருந்து வடியும் நீரைப் போல, முதியவரிடமிருந்து இரக்க உரைகள் கசிகின்றன. தனது நரைத்த தாடியைத் தடவிக்கொண்டு, அவர் பேசுகிறார், அவர் ஒரு தீய சூனியக்காரனாக, இந்தத் தொலைதூர, மலட்டு, சதுப்பு, பள்ளத்தாக்குப் பகுதியின் எஜமான இருக்கவேண்டும், – அவர்தான் இந்த வசதியற்ற, வெற்றுக்களிமண் பள்ளத்தாக்கில் முதன்முதலாக நகரை உருவாக்கியிருக்க வேண்டும், அந்த வீடுகளை குவியலாக சிக்கலான தெருக்களில் கொட்டியிருக்க வேண்டும், வேண்டுமென்றே காரணமில்லாமல் கரடுமுரடான, கடினமான மற்றும் கொடுமையான இருத்தலை உருவாக்கியிருக்க வேண்டும், மேலும் மனிதர்களின் மூளைகளைத் தொடர்ச்சியற்ற மூடத்தனத்துடன் தாறுமாறாக்கியிருக்க வேண்டும், உயிர் குறித்த அச்சத்தில் அவர்களுடைய இதயங்களை எரித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கத் தொடங்கும்வரை பேசுகிறார். ஆம், அவர்தான் குளிர்காலத்தின் நீண்ட ஆறுமாதங்களின் போது, சமவெளியிலிருந்து நகரின் மீது கொடூரமான பனிப்புயலை ஏவி விடுபவராகவும் நகரின் கட்டிடங்களின் மரச் சட்டங்கள் நொறுங்கும்வரை உறைபனி நசுக்கச் செய்பவராகவும், கடுங்குளிர் பறவைகளை சுருட்டித் தரையில் விழச் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது,. கடைசியாக, அவர்தான் ஏறத்தாழ ஒவ்வொரு கோடைக் காலத்திலும் இரவில் பயங்கர வெப்பம் கொடுமையாகச் சூழ்ந்திருக்கவும் அப்போது ஏறத்தாழ வீடுகளை உருகவும் செய்பவராக இருக்க வேண்டும் என்ற கருத்தால் நான் ஆட்கொள்ளப்படுகிறேன். 

இருப்பினும், ஒரு விதியாக, அவர் தாடியை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு வெறுமனே அவருடைய வலிமையான பற்களைக் கொண்ட தாடையின் மெல்லும் அசைவுகளைச் செய்துகொண்டு, முழுமையாக அமைதி காக்கிறார். அப்படிப்பட்ட நேரங்களில் அவருடைய கண்களில், எரியும் தீக்கங்கு போல ஒரு நீலநிற நெருப்பு இருக்கிறது, அதேநேரத்தில் அவருடைய வளைந்த விரல்கள் புழுக்களைப் போல வளைந்து நெளிகின்ற்ன, அவருடைய வெளித்தோற்றம் அப்பட்டமான ஒரு நேர்மையற்ற மந்திரவாதியுடையதைப் போல ஆகிறது.

ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன்:

“மனிதர்கள் குறிப்பாக எதற்காகக் காத்திருக்க வேண்டும்?”  

சிறிது நேரம் அவர் தனது தாடியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார், எனக்குப் பின்னாலிருந்த ஏதோ ஒன்றை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது போல, கண்களைச் சுருக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் அமைதியாகவும் கற்பிக்கும் வகையிலும் கூறினார்:

“என்றாவது ஒரு நாள் ஒரு விந்தையான மனிதன் தோன்றுவான், அவன் ஆதியற்ற ஒரு சொல்லை இந்த உலகுக்கு அறிவிப்பான். ஆனால் நம்மில் யாருக்கு அந்த மனிதன் தோன்றுகிற நேரம் தெரியப்போகிறது? ஒருவருக்கும் தெரியப்போவதில்லை…. மேலும் நம்மில் யாருக்கு அந்தச் சொல் நிகழ்த்தப்போகும் அற்புதங்கள் தெரியும்? யாருக்கும் தெரியாது.”

******************

முன்னொரு போது எனது அறையின் சன்னலைக் கடந்து ஓர் அழகான, சுருள்முடிகொண்ட முட்டாள் நிலுஷ்காவின் தங்கத் தலை கடந்து செல்வது தெரிவது வழக்கம், அவன் பூமியால் அன்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றைப் போலத் தெரிவான்.  ஆம், பழங்கால தேவாலயம் ஒன்றின் தெற்கு அல்லது வடக்கு வாயில்களை அலங்கரிக்கும் ஒரு புனிதச் சித்திரத்தில் இருக்கும் தேவதையைப் போல நிலுஷ்கா இருந்தான், ஏனென்றால் மெழுகுப் புகையும் எண்ணெயும் படிந்த அவனுடைய சிவந்த முகமும், குளிரில் மின்னும் அவனுடைய வெளிர் நீலநிறக் கண்களும், விண்ணுலகப் புன்னகையும், அவனுடைய முழங்கால் வரை நீண்ட செந்நிற மேலங்கியுடன் கூடிய தோற்றமும், கருநிறத்தைக் காட்டிய அவனுடைய பாதங்களின் அடிப்பாகமும் (அவன் எப்போதும் விரல்நுனியில்தான் நடந்தான்), ஒரு பெண்ணின் நேரான, வெளுத்த கெண்டைக் கால்களைப் போன்ற அவனுடைய மெலிந்த கெண்டைக் கால்களும், பொன்னிறக் கீழ்ப்பகுதியும் தெரிய அவன் தெருக்களில் நடந்தான். 

சிலநேரங்களில் ஒரு காலில் நொண்டிக்கொண்டு, புன்னகை செய்துகொண்டு, கரங்களை ஆட்டிக்கொண்டு, அவனுடைய நீண்ட மேலங்கியின் கைப்பகுதிகளும் மடிப்புக்களும் விரிந்து சிறகடிக்க, ஒளிவட்டத்துக்கு நடுவே நகர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிந்தான், நிலுஷ்கா திக்கித் திக்கி முணுமுணுத்துகொண்டே      குழந்தைத்தனமான சிறுபாடலைப் பாடுவான்:

ஓ, கட– வுளே, என்னை மன்னியுங்கள்! ஓ–நாய்கள் ஓடுகின்றன, நா—ய்கள் ஓடுகின்றன, வேட்டைக்காரர்கள் ஓநாய்களைக் கொல்வதற்குக் காத்திருக்கின்றனர். ஓ, கட—வுளே, என்னை மன்னியுங்கள்!

இதற்கிடையில், அவன் உற்சாகமிக்க, மகிழ்ச்சியான சூழலைப் பரப்புவான், அதற்கு இணையாக அந்த வட்டாரத்தில் ஒருவராலும் அப்படிச் செய்யமுடியாது. ஏனென்றால் அவன் எப்போதும் மிருதுவான இதயம் கொண்டவனாகவும், சாராம்சத்தில் தூய்மையான கள்ளங்கபடமற்றவனாகவும் இருந்தான், நல்ல இயல்புள்ள புன்சிரிப்புக்களையும், இரக்கமுள்ள மன உணர்வுகளையும் தூண்டிவிடுவதற்கு அது ஒருபோதும் தவறியதில்லை. உண்மையில், அவன் தெருவில் அலைந்து திரியும்போது, அந்தப் புறநகர்ப் பகுதி மக்கள் அதன் வாழ்க்கையை ஆரவாரமின்றி வாழ்பவர்களாகவும், வெளிப்புறத் தோற்றத்திற்கு மிகவும் கண்ணியமானவர்களாகவும் தெரிந்தார்கள், அதனால் அந்த வட்டார மக்கள் தங்களுடைய சொந்தக் குழந்தைகள் மீது காட்டியதைவிட மிகவும் அவனுக்குச் சலுகை காட்டினார்கள், மோசமானவர்கள் கூட அவனிடம் மிகவும் நெருக்கமாகவும் அன்புடனும் இருந்தார்கள்.        அவனுடைய நேரடியான, மெலிந்த சிறு தோற்றம், தேவாலயங்களையும், தேவதைகளையும், கடவுளையும், சொர்க்கத்தையும் மனதில் கொண்டுவந்து, அவனைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் பொன்னிறப் புழுதியின் மத்தியில் பறப்பதுபோலத் தெரிந்தது இதற்கான காரணமாக இருக்கலாம். எந்த நிகழ்விலும், அனைவரும் அவனைச் சிந்திப்பவனாக, ஆர்வம்கொண்டவனாக, சிறிது பணிவுகொண்ட ஒருவனுக்கும் மேலாகப் பார்த்தனர். 

ஒரு கண்ணாடித் துண்டில், அல்லது சூரிய ஒளியில் மின்னும் ஒரு செம்புத் துண்டின் மீது, ஓர் ஒளிக்கீற்றைப் பார்த்த போதெல்லாம் நிலுஷ்கா அந்த இடத்திலேயே நிலைத்து நின்றுவிடுவான், மரணத்தின் சாயலுக்கு மாறிவிடுவான், புன்னகையை இழந்துவிடுவான், இயல்புக்கு மாறாக அவனுடைய கண்கள் மங்கிப்போய், தொல்லைக்குள்ளாகி வீங்கியிருக்கும். மேலும் அவனுடைய மொத்த வடிவமும் பயங்கரத்தால் முறுக்கிக்கொண்டுவிடும், அவனுடைய மெலிந்த கரம் அவனைச் சுற்றிக்கொண்டிருக்கும், அவனுடைய முழங்கால்கள் நடுங்கிக்கொண்டிருக்கும், அவனுடைய சிறுகட்டான உடலைச் சுற்றிலும் அவனுடைய மேலங்கி உதறிக் கொண்டிருக்கும், அவனுடைய அவயங்கள் கல்லாகி விடும், அவன் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து நின்றுகொண்டே இருப்பான், யாரோ ஒருவர் அவனுடைய கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்வரை நெடுநேரம் அங்கேயே நின்றுகொண்டிருப்பான். 

இந்தக் கதையில் வருவது இதுதான், நான் எழுதிக்கொண்டிருக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு, முதல் நிகழ்வாக, “முட்டாளாகப் பிறந்து,” ஒரு பெருநெருப்புப் பற்றி எரிந்தபோது, அவன் இறுதியாகப் பகுத்தறிவை இழந்துவிடுகிறான், அப்போதிருந்து சூரிய ஒளியைத் தவிர, எந்த வகையிலும் தீயைப் பிரதிபலிக்கும் எந்த ஒன்றும் அவனை பேரச்சத்தில் உணர்விழந்த ஊமையாக ஆக்கிவிடும். இயல்பாகவே அந்தப் புறநகர்ப் பகுதி மக்கள் அவனைப் பெரும் கவனமெடுத்துப் பார்த்துக்கொண்டார்கள்.

“அதோ போகிறான் கடவுளின் முட்டாள்,” என்றுதான் அவர்கள் குறிப்பிடுவார்கள், “அவன் இறப்பதற்கு வெகுநாட்கள் பிடிக்காது, பிறகு அவன் ஒரு புனிதராக ஆகிவிடுவான், நாம் அவன் முன்பு வீழ்ந்து வணங்குவோம்.”

இருப்பினும், அவனது தியாகத்தை முரட்டுத்தனமாகக் கேலி செய்யும் அளவுக்குச் சென்றவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். எடுத்துக்காட்டாக, அவன் தாண்டிக் குதித்துச் செல்லும்போது, அவனுடைய குழந்தைத்தனமான குரல் அவனுடைய சிறுபாடலை எழுப்பும், யாரோ ஒரு சோம்பேறி அல்லது இன்னொருவன் ஒரு சன்னலிலிருந்து அல்லது வேலியின் சிறிய இடைவெளியிலிருந்து கத்துவான்:

“ஹேய், நிலுஷ்கா! தீ! தீ!”

அதைக் கேட்டு அந்த தேவதை முகம்கொண்ட முட்டாள், அவனுடைய கால்கள் முழங்கால்களுக்குக் கீழே துண்டிக்கப்பட்டுவிட்டது போலச் சட்டென்று கூனிக் குறுகிவிடுவான், பின்பு வெறிபிடித்தவன் போல தனது தங்கத் தலையை எப்போதும் மண்படிந்திருக்கும் கரங்களால் அழுத்திப்பிடித்துக் கொள்வான், அருகாமையில் உள்ள வீடு அல்லது வேலிக்குள் மண்ணில் அழுந்தித் தவழ்ந்துகொண்டே செல்வான். 

அதன்பிறகு அவனை அச்சுறுத்திய நபர் மனம் வருந்திவிட்டு, சிரித்தவாறே சொல்வான்: 

“கடவுளே! என்ன ஒரு முட்டாளாக இருக்கிறான்!”

அவன் ஏன் அந்த அளவுக்கு அந்தப் பையனை அச்சுறுத்தினான் என்று கேட்டால், அவன் பின்வருவது போலப் பதிலளிப்பான்:

“விளையாட்டுக்காக அப்படிச் செய்கிறேன். ஒருவன் மற்றவர்களையப் போல உணரமுடியாத போது, அவனைக் கேலி செய்வதற்கு மக்களைத் தூண்டுகிறான்.” 

எல்லாம் அறிந்த அன்டிபா வோலோகோனோவைப் பொருத்தவரை, நிலுஷ்கா குறித்து அடிக்கடி பின்வருமாறு குறிப்பிடுவார்:

“கிறித்துவும் கூட பயங்கரத்தினூடே நடந்துசெல்ல வேண்டியிருந்தது. அவரும் கூடத் துன்புறுத்தப்பட்டார். ஏன் அப்படி? ஏனென்றால் அவர் எப்போதும் நேர்மையிலும் வலிமையிலும் தாக்குப்பிடிக்கக் கூடியவராக இருந்தார். எது மெய்யானது எது பொய்யானது என்பதை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கண்ணால் காண்பதையே மெய்யானது என்று தவறாகக் கொள்வதும், தங்களை நிரூபித்துக் கொள்ளக் காத்திருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் அவசரப்படுவதும்தான் பூமியில் பெரும்பாலான பாவங்களுக்குக் காரணம்.” 

அதனால் வோலோகோனோவ், எஞ்சியவர்களைப் போலவே, நிலுஷ்கா மீது மிகுதியான கவனத்தைச் செலுத்தினார், மேலும் அடிக்கடி அவனுடன் உரையாடல்களிலும் ஈடுபட்டார். 

“இப்போது நீ கடவுளைப் பிரார்த்திக்கிறாயா” அவருடைய வளைந்த விரல்களில் ஒன்றை வானை நோக்கி நீட்டியும், இன்னொரு கரத்தை பறட்டையாகவும் பல்வண்ணத்திலும் இருந்த தாடியைப் பற்றிக்கொண்டே ஒருமுறை கேட்டார்.

அதற்கு நிலுஷ்கா மர்மமாக நீட்டிக்கொண்டிருந்த அந்த விரலை அச்சத்துடன் உற்றுப்பார்த்தவாறே, நெற்றியையும் தோள்களையும் வயிற்றையும் இரண்டு விரல்களாலும் கட்டைவிரலாலும் இழுத்துக்கொண்டு, மெலிந்த, வெளிரிய உச்சரிப்பில் இசையுடன் கூறினான்:

“விண்ணகத்தில் இருக்கும் எம் தந்தையே—“

“விண்ணகத்தில் என்ன இருக்கிறது.”

“ஆம், விண்ணகத்தின் விண்ணகத்தில்.”

“ஆ, நல்லது! கடவுள் புரிந்துகொள்வார். அவர் ஆசீர்வதிக்கப்பட்ட அனைவருக்கும் நண்பரே.” [முட்டாள்கள்; உளரீதியாகக் குறைபாடுள்ள நபர்கள் கடவுளுக்கு நெருக்கமான உறவில் இருப்பார்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறார்கள்.]

உருண்டையாக இருக்கும் எதிலும் நிலுஷ்காவுக்குப் பெருத்த ஆர்வம் இருந்தது. குழந்தைகளின் தலைகளை வருடிக்கொடுப்பதில் அவனுக்கு அலாதியான இன்பம் இருந்தது; பின்னாலிருந்து ஒரு குழு மெதுவாக அணுகும்போது, அவன் தனது பிரகாசமான, அமைதியான புன்னகையைச் சிந்துவான், அவனுடைய எலும்பும் தோலுமான விரல்களை நெருக்கமாக வெட்டப்பட்ட முடிகளில் மென்மையாக அலசுவான், அதனால் குழந்தைகள் அதை விரும்ப மாட்டார்கள், எனவே எச்சரிக்கையுடன் அந்த இடத்தைவிட்டுத் தொலைவாக ஓடிவிடுவார்கள், பின்னர் அந்த முட்டாளைத் திட்டுவார்கள், நாக்கை நீட்டிக் காட்டுவார்கள், மூக்கின்வழி ஒன்றாகச் சேர்ந்த முழங்குவார்கள்:

“நில்கா, புட்டிப்பால் நில்கா, பிடரியில்லாத கழுத்து” [இந்த வாசகத்தின் கவர்ச்சி காரணமாக இரசியச் சொற்களின் சந்தம் வந்திருக்கலாம்: “நில்கா, புடில்கா, பஷ்கா பெஜ் ஜடில்கா!”]

இருப்பினும் அவனைக் குறித்த அவர்களுடைய அச்சம் பரிமாறிக் கொள்ளப்பட்டதில்லை, அல்லது, அதற்காக அவர்கள் அவனை ஒருபோதும் தாக்கியதும் இல்லை.  அவ்வப்போது ஒரு பழைய காலணி அல்லது மரக்கட்டையை அவனிருந்த திசையில் குறிபார்க்காமல், உண்மையில் அவன் மீது குறிபார்த்து வீசும் விருப்பமின்றி வீசினார்கள். 

மேலும், வட்டமாக இருக்கும் எதையும் — எடுத்துக்காட்டாக, ஒரு தட்டு அல்லது ஒரு பொம்மையின் சக்கரம் நிலுஷ்காவின் கவனத்தை ஈர்த்தால், உருண்டை அல்லது பந்து போல, அதை அவன் தடவிக்கொடுத்தான். அந்தப் பொருளின் வட்டவடிவத் தன்மைதான் அவனுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பொருளை அவன் மீண்டும் மீண்டும் உருட்டும்போது, அதன் தட்டையான பகுதியை உணர்ந்ததும் அவன் முணுமுணுத்தான்:

“ஆனால் இன்னொன்று என்ன ஆயிற்று?”          

“இன்னொன்று” என்பதன் பொருள் என்ன, என்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அன்டிபாவாலும் முடிந்ததில்லை. அந்த முட்டாளை அருகில் அழைத்து அவனிடம் கேட்டார்:

“ஏன் நீ எப்போதும் ‘இன்னொன்று என்ன ஆயிற்று’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறாய்?”     

உலைச்சலும் பதட்டமும் அடைந்த நிலுஷ்கா வெறுமனே புரிந்துகொள்ள முடியாத பதிலை முணுமுணுத்தான், அப்போது அவனுடைய விரல்கள் அவன் வைத்திருந்த அந்த வட்டவடிவப் பொருளை திருப்பி, திருப்பி உருட்டிக் கொண்டே இருந்தன.

“ஒன்றுமில்லை,” அவன் நீட்டிப் பதிலளித்தான்.

“என்ன ஒன்றுமில்லை?”  

“இங்கு ஒன்றுமில்லை.”

“அவன் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு முட்டாளாக இருக்கிறான்,” வோலோகோனோவ் ஒரு பெருமூச்சுடன் கூறினார், அவருடைய கண்கள் தியான நிலையில் இருண்டிருந்தன. 

“ஆம், அப்படிச் சொல்வது முட்டாள்தனமாக இருந்தாலும்,” என்றவர் மேலும் “சிலர் அவனைக் கண்டு பொறாமைப்படுவார்கள்” என்று சேர்த்துக்கொண்டார். 

“அவர்கள் ஏன் பொறாமைப்பட வேண்டும்?”

“ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களுக்காக. முதலில், அவன் எந்தக் கவலையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறான்—அவன் வசதியாக வைத்துக்கொள்கிறான், மரியாதையைக் கூட பெற்றிருக்கிறான். அவனை ஒருவராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதால், ஒவ்வொருவரும் அவனைக் கண்டு அஞ்சுகின்றனர், அறிவில்லாத மனிதர்கள் “கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,” அவர்கள் புரிந்துகொள்ளும் தன்மை உடையவர்களை விடவும் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு புத்திசாலியான மனிதனால் தான் இப்படிப்பட்ட விடயத்தைக் கையாள முடியும், அப்படியில்லாதவர்கள் ‘ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர்’ ஒரு புனிதராக ஆகிவிடுகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், அதேவேளையில் புரிந்துகொள்ளும் தன்மையுடையவர்களில் சிலர் சென்றுவிட்டார்கள்—நல்லது, எங்கே சென்றுவிட்டார்கள்? ஆம், உண்மைதான்!

மேலும், இன்னொரு மனிதரின் முகத்திலிருந்து எடுக்கப்பட்டவை போலத் தெரிந்த அடர்த்தியான புருவங்களைச் சிந்தனையுடன் சுருக்கிக்கொண்டு, அவருடைய கரங்களை சட்டைக் கைகளுக்குள் திணித்துக்கொண்டு, வோலோகோனோவ் நிலுஷ்காவை தனது தெளிவற்ற பார்வையில் விவேகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றார். 

அந்தப் பையனின் தந்தை யார் என்று உறுதியாக ஃபெலிட்ஜடா ஒருபோதும் சொல்லவில்லை, ஆனால் குறைந்தபட்சம் அது எனக்குத் தெளிவற்ற சொற்களில், தெரியவந்தது, அவள் இரண்டு மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தாள், ஒருவர் இளைஞரான “நில அளவை மாணவர்,” இன்னொருவர் விபோரோட்கோவ் என்ற பெயருள்ள ஒரு வணிகர், அந்த ஆள் மொத்த நகரத்துக்கும் மிகவும் மூர்க்கத்தனமான அடங்காத போக்கிரியாக இருந்தான். ஆனால் அவளும் அன்டிபாவும் நானும் நுழைவு வாயில்களில் அமர்ந்து வம்பளந்துகொண்டிருந்த போது, நிலுஷ்காவின் தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று நான் அவளிடம் விசாரித்தேன், அவள் அசட்டையான முறையில் பதிலளித்தாள்:

“நாசமாகப் போனவன்! இன்னும் உயிருடன் இருக்கிறான்!” 

“அப்படியானால் அவன் யார்?” 

வழக்கம்போல, ஃபெலிட்ஜடா தனது மங்கிவிட்ட, ஆனால் இன்னும் அழகாயிருக்கும் அவளுடைய நாக்கின் நுனி உதடுகளில் நக்கிக் கொள்வதற்கு முன்பு பதிலளித்தாள்:

“ஒரு துறவி.”

“ஆ!” வோலோகோனோவ் எதிர்பாராத சைகையுடன் வியப்புத் தெரிவித்தார். “அப்படியானால், அது விடயங்களை விளக்குகிறது. எல்லா நிகழ்வுகளிலும் ந்மக்கு விடயங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு கோட்பாடு இருக்கிறது.” 

அதன்பிறகு, நிலுஷ்காவின் தந்தை, வணிகராகவோ “இளம் நில அளவை மாணவராகவோ” அல்லாமல் ஏன் ஒரு துறவியாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அவர் எங்களுக்கு எந்த விவரங்களையும் விட்டுவிடாமல் நீண்ட நெடிய விளக்கமளித்தார். மேலும் வோலோகோனோவ் சொல்லச் சொல்ல, வழக்கத்துக்கு மாறாக உற்சாகமானார், தனது கை முட்டிகளைப் பிசைந்துகொண்டு, உள ரீதியாக காயமடைந்தவரைப் போல ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொள்ளும் வரை சென்றார், பின்னர் சீற்றத்துடனும் கண்டிக்கும் வகையிலும் அந்த பெண்ணிடம் கூறினார்:

“இதை ஏன் முன்பே எங்களிடம் நீ சொல்லவில்லை? இது உனது மட்டுமீறிய கவனக்குறைவு.”

ஃபெலிட்ஜடா அந்த முதியவரை ஏளனத்துடன் பார்த்தாள், அவள் கண்களில் துடுக்கத்தனம் மின்னியது. இருப்பினும், திடீரென்று தனது புருவங்களைச் சுருக்கி, ஒரு போலியான பெருமூச்சுவிட்டு, புலம்பினாள்:

“ஆ, அப்போது நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தேன், எல்லோரும் என்னை விரும்பினார்கள். அந்த நாட்களில் நான் நல்ல மனம் படைத்தவளாகவும் மகிழ்ச்சியான இயல்புடையவளாகவும் இருந்தேன்.”

“ஆனால் அந்தத் துறவி இந்தப் பிரச்சனையில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்துவருவதை நிரூபிக்கக் கூடும்,” அன்டிபா சிந்தனையுடன் குறிப்பிட்டார்.

“ஆம், பலரையும் விட, தனது இன்பத்துக்காக அவர் என்னைத் துரத்தித் துரத்தி வந்தார்,” நினைவுகூறும் தொனியில் ஃபெலிட்ஜடா தொடர்ந்தாள். இது வோலோகோனோவ் இருமுவதற்கு இட்டுச் சென்றது, அவர் எழுந்து நின்றார், தனது கரத்தை அந்தப் பெண்ணின் அடர்சிவப்பு வண்ண வழுவழுப்பான ஆடையின் கைப்பகுதியில் கைவைத்துக் கண்டிப்புடன் சொல்கிறார்: 

நீ என்னுடைய அறைக்கு வருகிறாயா, உன்னிடம் செய்துகொள்ள எனக்கு ஒரு வணிகப் பரிவர்த்தனை இருக்கிறது.”

அதற்கு அவள் உடன்பட்டு, புன்னகை செய்தவாரே என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள். அப்படியே அந்த இணை சென்றுவிட்டது—அவர் அவருடைய கோணலான கால்களை கவனமாக மாற்றி மாற்றி அடி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார், அவள் அவருடைய அடிகளைக் கவனித்துக்கொண்டே எந்த நிமிடத்திலும் அவளுடைய இடது பக்கம் சாய்ந்து விழுந்துவிடுவது போல இருந்தாள். 

அப்போதிருந்து, ஃபெலிட்ஜடா ஏறத்தாழ அன்றாடம் வோலோகோனோவிடம் வந்து சென்றாள்; அப்படி ஒருமுறை இரண்டு மணிநேரத்தின் போது, அந்த இணை தேநீர் அருந்துவதில் ஈடுபட்டிருந்த போது, அந்த முதியவர் தீவிரமான, ஒரே சீரான, போதனை செய்யும் தொனியில் பின்வருமாரு கூறுவது தடுப்புச் சுவரின் வழியே காதில் விழுந்தது:

“இந்தக் கதைகளையும், வதந்திகளையும் எச்சரிக்கையில்லாமல் ஒதுக்கித்தள்ளிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவற்றுக்கு சந்தேகத்தின் பயன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் சொல்வதெல்லாம் எங்களுக்குப் புரிந்துகொள்ள இயலாததாகத் தெரியலாம், இருப்பினும் அதில் —– போன்ற ஒரு பொருள் பொதிந்திருக்கலாம்.”

“ஒரு பொருள் பொதிந்திருக்கிறது என்று சொல்கிறீர்களா?”

“ஆம், ஒரு பொருள், அது இறுதியாக உனக்கு ஒரு தரிசனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒருநாள் நீ அடர்ந்த வனத்திலிருந்து ஒரு தெய்வீக மனிதனின் குழந்தை வருவதைக் காணலாம், அவன், ‘ஃபெலிட்ஜடா கடவுளின் சேவகியே, மிகவும் இருண்ட ஆன்மாகொண்ட பாவியே’ என்று உரத்துக் கத்துவதைக் கேட்கலாம்.”  

“வரவிருக்கும் தீமையின் முன்னறிவிப்பா, உறுதியாகவா!”

“அமைதியாக இரு! முட்டாளே! உன்புகழை நீயே பாடுவதற்குப் பதிலாக உன்னை நீயே குறைசொல்லிக் கொள்கிறாயா. அந்தக் காட்சியில் அந்தத் தெய்வீக மனிதன், ஃபெலிட்ஜடா முன்னே செல், உன்னைச் சந்திக்கும் ஒருவர் உன்னை நிகழ்த்துமாறு சொல்வதைச் செய்!’ மேலும் முன்னே சென்றால், அந்தத் தெய்வீக மனிதன் நாம் பேசிக்கொண்டிருக்கும் துறவியாக இருப்பதைக் காணலாம்.”

“அ – அ – ஆ!” அந்தப் பெண் இன்னும் எதோ சொல்லப்போவது போல இழுத்தாள்.

“சொல், முட்டாளே!”

“பாருங்கள்—-“

“இம்முறை நான் உன்னை நிந்தித்துவிட்டேனா?”

“இல்லை, ஆனால்—“

“அந்தத் தெய்வீக மனிதன் ஒரு தடியைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒரு மேய்ப்பனாக இருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது.” 

“சரிதான்,” ஃபெலிட்ஜடா ஒப்புக்கொண்டாள்.

அதேபோல, இன்னொரு நிகழ்வின்போது, அன்டிபா தனிப்பட்ட முறையில் அவருடைய துணையிடம் முணுமுணுத்ததை நான் கேட்டேன்:

“அவன் சொல்வதெல்லாம் மிகவும் எளிமையாக இருக்கிறது என்பது ஒரு ஆதரவான சமிக்ஞை அல்ல. ஏனென்றால், பார், அது முழுமையாக அந்த விவகாரத்துடன் ஒத்திசைவாக இருப்பதில்லை—அப்படிப்பட்ட ஒரு தொடர்பில் சொற்கள் மர்மமாக இருக்க வேண்டும், மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் விளக்கமளிக்கப்படக் கூடியவையாக இருக்க வேண்டும், எந்த அளவுக்குச் சொற்களுக்குக் கூடுதலான பொருள்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அந்தச் சொற்கள் மனித இனத்தால் மதிக்கப்பட்டுக் கேட்கப்படுகின்றன.”

“ஏன் அப்படி?” ஃபெலிட்ஜடா வினவினாள். 

“ஏன் அப்படி?” வோலோகோனோவும் எரிச்சலுடன் எதிரொலித்தார். “அப்படியானால், நாம் யாரையும் எதையும் மதிக்கக் கூடாதா? தனது சக மனிதர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பவன் தான் மதிப்பதற்குத் தகுதியானவன்; மேலும் சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்காதவர்கள் அரிதாகத்தான் இருக்கிறார்கள். இந்தக் கருத்தில் நீ கவனம் செலுத்த வேண்டும்—- மாறுபடும் பொருள்கொண்ட சொற்களை, மிகவும் அருவமான சொற்களை, மிகவும் கம்பீரமான சொற்களை நீ அவனுக்குக் கற்பிக்க வேண்டும்.”

“ஆனால் எனக்கு அப்படிப்பட்ட சொற்களைத் தெரியாதே.”

“நான் உனக்கு ஒரு சிலவற்றைத் திரும்பச் சொல்வேன், ஒவ்வொரு இரவும், அவன் படுக்கைக்குச் செல்லும்போது, நீ அவனுக்கு அதைத் திரும்பச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக: ‘அடோம் இன்போல்னெனி, பொகய்டெஸ்’ [வஞ்சம் நிறைந்த மனிதர்களாகிய நீங்கள் வருந்த வேண்டும்]. திருச்சபையில் கடைபிடிக்க வேண்டிய மிகச்சரியான சொற்களைக் குறித்துக்கொள். எடுத்துக்காட்டாக, ‘துஷென்பிட்ஜி, பொழாலெய்ட் போகா, ஒகாய்ன்னி,’ [ஆன்மாவைக் கொலைசெய்பவர்கள், சபிக்கப்பட்டவர்களே, கடவுளுக்கு முன்பு வருத்தம் தெரிவியுங்கள்.] என்பதை விட ‘துஷென்பிட்ஜி, பொழாலெய்ட் போகா, ஒகாய்ன்னீ,’ என்று சொல்லவேண்டும், ஏனென்றால் முந்தைய குறுகிய வடிவம் சரியான ஒன்றல்ல. ஆனால் ஒருவேளை அந்த இளைஞனுக்கு நானே நன்றாகச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.”    

“உறுதியாக அதுவே சிறந்த திட்டமாக இருந்திருக்கும்.”  

எனவே அந்த நேரத்திலிருந்து வோலோகோனோவ் நிலுஷ்காவைத் தெருவில் ஆர்வத்துடன் தடுத்துநிறுத்தி அவனிடம் ஏதோ ஒன்றை அவரது இரக்கப் பாணியில் திரும்பத்திரும்பச் சொல்வார். ஒருமுறை அவர் அவன் கையைப் பற்றி, தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று, அவனுக்கு உண்ண ஏதாவது கொடுத்து, இணங்கவைக்கும் முறையில் கூறினார்:

நான் சொல்வதை அப்படியே சொல். ‘அவசரப்படாதீர்கள் மக்களே’ உன்னால் அதைச் சொல்ல முடியுமானால் சொல்ல முயற்சி செய்.”

‘“ஒரு விளக்கு,”’ நிலுஷ்கா நயமாகத் தொடங்கினான்.

“’ஒரு விளக்கா?’ ஆம், சரி, சொல், நான் உனக்கு ஒரு விளக்கு—“

“நான் அதைப் பாட விரும்புகிறேன்.” 

“அதற்கு அவசியமில்லை, இருந்தாலும் இப்போது அதை நீ பாடவேண்டும். இப்போதைக்கு உனது பணி, விடயங்களைச் சரியாகப் பேசக் கற்றுக்கொள்வதாகும். எனவே நான் சொல்வதைத் திரும்பச் சொல்—-“ 

“ஓ, கட-வுளே, கருணை காட்டுங்கள்!” அந்த முட்டாளிடமிருந்து அமைதியான சிந்தனையுடன் வந்தது. அதன்பிறகு அவன் ஒரு குழந்தையின் இணங்க வைக்கும் தொனியில் சேர்த்துக்கொண்டார்:

“நாம் அனைவரும் இறந்தே ஆகவேண்டும்.”

“ஆம், ஆனால் சொல்லு, சொல்லு,” வோலோகோனோவ் நட்பு முறையில் அறிவுறுத்தினார். “இப்போது நீ என்ன உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறாய்? நீ எனக்குச் சொல்லாமலேயே அந்த அளவுக்கு எனக்குத் தெரியும்— நாம் ஒவ்வொருவரும் அவரவர் மரணத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது எப்போதும் எனக்குத் தெரியும், சிறிய நண்பனே. இருப்பினும் நீ புரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு இன்னும் புரிந்துகொள்ளவில்லை.”

“நாய்கள் ஓடுகின்றன—“

“நாய்களா? இப்போது, போதும், சிறியவனே.”

“நாய்கள் கோழிகளைப் போல ஓடுகின்றன. அவை இங்கு பள்ளத்தாக்கில் ஓடுகின்றன,” மூன்று வயது குழந்தையின் உச்சரிப்பில் நிலுஷ்கா தொடர்ந்து முணுமுணுத்தான்.

“இருந்தபோதிலும், அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்கே ஒரு பொருளிருக்கலாம். ஆம், அதில் மாபெரும் விடயம் இருக்கலாம். இப்போது, சொல், ‘அவசரப்படுவோருக்கு முன்பு நரகம் தோன்றும்.’”   

“இல்லை, நான் ஒன்றைப் பாட விரும்புகிறேன்.”

ஓரு குழப்பத்துடன் வோலோகோனோவ் கூறினார்:

“உண்மையிலேயே உன்னைக் கையாளுவது கடினமான வேலைதான்!”

அத்துடன் அவர் சிந்தனையுடன் தரையில் நீண்ட அடிகளை எடுத்துவைத்து விரைந்தார், அப்போது அந்த முட்டாளின் குரல் நடுங்கும் உச்சரிப்பில் கத்தியது:

“ஓ கட-வுளே, எங்கள் மீது கருணை காட்டு!”

******************************************* 

இவ்வாறாக மகிழ்ச்சி நிரம்பிய அந்தப் புறநகர்ப் பகுதியின் அருவருக்கத்தக்க, அற்பமான, ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்குத் தவிர்க்கவியலாதவனாக நிலுஷ்கா தன்னை நிரூபித்துக்கொண்டான். அந்த வாழ்க்கைக்கு வண்ணமூட்டினான், உணர்வின்மையையும், அருவருப்பையும் மிதமிஞ்சிய தன்மையையும் நிறைவானதாக்கினான். அவன் முறுக்கிக்கொண்டு, செல்லரித்துப் போன, அனைத்துப் பழங்களும் இலைகளும் இலையுதிர்காலக் காற்றில் உதிர்ந்து வெறும் கிளைகள் மட்டும் இருந்த ஒரு பழைய மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் மறக்கப்பட்ட ஆப்பிளைப் பிரதிபலித்தான்.  அதைவிட, ஒரு கந்தலாகிப் போன, மண்ணரித்த, தொடக்கமும் முடிவும் இல்லாத, அதன் பக்கங்களில் அடங்கியிருக்கும் எதுவுமே புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதால், இனிமேல் படிக்கவே முடியாத, படிப்பதற்குத் தகுதியற்றதாக ஆகிவிட்ட ஒரு பழைய புத்தகத்தின் பக்கங்களில் தப்பிப் பிழைத்த ஒரே ஒரு சித்திரத்தைப் பிரதிபலித்தான்.

அவனுடைய கருணைமிக்க புன்னகையைப் போலவே, அந்த இளைஞனின் பரிதாபகரமான, வினோதமான உருவத் தோற்றம் உடைந்த வேலிகளையும், பூஞ்சக் காளான் மொட்டுக்களையும், காஞ்சூரிச் செடிகளையும் கடந்து சென்று சட்டென்று மறைந்தது. இது இரசிய மரபுக்கதைகளின் மிகவும் நேர்த்தியான, மிகவும் புகழ்பெற்ற ஆளுமைகளின் காட்சிகளை ஆயத்தமாக மனதில் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும். தங்களுடைய ஆன்மாக்கள் குறித்த அச்சத்தில், அவர்கள் உலக வாழ்க்கையைத் துறந்து, மனித இனத்தைக் கைவிட்டு, இயற்கையின் கொடிய விடயங்களான தங்களை காடுகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் விரைந்துவிடும் நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குத் தெரிவிப்பதுபோல, ஒருவரின் உளக் காட்சியின் முன்பு முடிவற்ற தொடராக அணிவகுத்து நிற்கும். அதேநேரத்தில் ஒருவரின் நினைவுக்கு, கண் தெரியாத, குறிப்பாக ஏழைகள் தொடர்பான கவிதைகள், தெய்வீக மனிதன் அலெக்சி தொடர்பான கவிதை மீண்டும் மீண்டும் வந்து போகும். மேலும் இரசியா தனது துயரமும் அச்சமும் கொண்ட ஆன்மாவையும், அதன் எளிய மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வருத்தத்தையும் உள்ளடக்கியிருக்கும் ஆனால் அழகான ஆனால் போலியான, பற்பல வடிவங்கள் உளக்காட்சியில் தோன்றும். இருப்பினும் அது ஒருவரை ஏறத்தாழ மனக் குழப்பத்திற்குள் ஆழ்த்திவிடும் ஒரு நிகழ்ச்சிப்போக்காக இருந்தது. 

ஒருமுறை, நிலுஷ்கா மூளைச்செயல்பாட்டு குறையுள்ளவன் என்பதை மறந்துவிட்டு, நான் அவனிடம் பேசுவதற்கும், அவனுக்கு ஒரு நல்ல கவிதையை வாசித்துக் காட்டுவதற்கும், உலகில் இளமையின் நம்பிக்கைகள் மற்றும் எனது சொந்தச் சிந்தனைகள் ஆகிய இரண்டையும் அவனிடம் சொல்வதற்கும் கட்டுக்கடங்காத ஆசை கொண்டேன்.

அப்படிப்பட்ட ஒரு தருணம் ஒருநாள் வாய்த்தது, அப்போது பள்ளத்தாக்கின் விளிம்பில் அமர்ந்துகொண்டு, எனது கால்களை பள்ளத்தில் தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் காற்றில் மிதந்துவருவது போல என்னை நோக்கி வந்தான். பெண்ணின் விரல்களைப் போல மிருதுவாக இருந்த அவனுடைய விரல்களில் அவன் ஒரு பெரிய இலையைப் பிடித்துக்கொண்டிருந்தான், அவன் அதை உற்றுப்பார்த்தான், அவனுடைய தெளிவான நீல விழிகளின் புன்னகை அவனை தலையிலிருந்து பாதம் வரை ஊடுருவி நிறைந்திருந்ததைப் போல இருந்தது. 

“எங்கே செல்கிறாய் நிலுஷ்கா?” நான் கேட்டேன்.

ஒரு தொடக்கத்துடன் அவன் தனது தலையையும் கண்களையும் விண்ணை நோக்கி உயர்த்தினான். பின்னர் அவன் பள்ளத்தாக்கின் நீல நிழலை மிரட்சியுடன் பார்த்தான், அவன் கையிலிருந்த இலையை என்னிடம் நீட்டினான், அந்த இலையின் நரம்புகள் மீது ஒரு செவ்வண்டு ஊர்ந்துகொண்டிருந்தது. 

“ஒரு புகான்,” அவன் குறிப்பிட்டான்.

“அது அப்படித்தான். அதை எடுக்க நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்?”

“நாம் அனைவரும் செத்துப்போவோம். நான் அதை எடுத்துக்கொண்டு சென்று புதைக்கப் போகிறேன்.”    

“ஆனால் அது உயிரோடு இருக்கிறது; ஒருவர் உயிர்களை அவை இறப்பதற்கு முன்பு புதைக்கக் கூடாது.”

நிலுஷ்கா கண்களை ஒன்றிரண்டு முறை மூடித் திறந்தான்.

“நான் ஏதாவது பாட விரும்புகிறேன்,” அவன் குறிப்பிட்டான்.

“அதைவிட, ஏதாவது சொல்லலாமே.”

அவன் பள்ளத்தாக்கை மீண்டும் பார்த்தான்—அவனுடைய இளஞ்சிவப்பு மூக்குத் துவாரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன, ஒழுகிக் கொண்டிருந்தன—பின்னர் அவன் சோர்ந்துபோய்விட்டவன் போல பெருமூச்சுவிட்டான், மேலும் தன்னுணர்வு ஏதுமில்லாமல் ஒரு மோசமான சொல்லை முணுமுணுத்தான். அவன் அப்படிச் செய்தபோது அவனது கழுத்துக்கும் கீழே வலது பகுதியில் ஒரு பெரிய மச்சம் இருந்ததைக் கவனித்தேன், மேலும் வெல்வெட் போன்ற பொன்னிற மெல்லிறகால் மூடப்பட்டு, ஒரு தேனீயைப் போன்று வடிவத்தில் இருந்தது, அது பார்வைக்கு ஒரு இரத்தநாளத்தின் வலுவற்ற துடிப்பின் மூலமாக உயிரின் வெளித்தோற்றத்தைப் பெற்றிருப்பதைப் போலத் தெரிந்தது. 

அப்போது அந்தச் சிறுவண்டு பறப்பதற்குத் தயாரிப்புச் செய்துகொண்டிருந்ததைப் போல தனது மேற்புற சிறகுகளை உயர்த்தியது; அதன்மீது நிலுஷ்கா ஒரு விரலை வைத்து அழுத்தி அது பறப்பதைத் தடுக்க முயற்சி செய்தான், அப்படிச் செய்ததில், அந்த இலையைக் கீழே விட்டுவிட்டான், அதனால் அந்தச் சிறுவண்டு தன்னை விடுவித்துக்கொண்டு தாழப் பறந்து சென்றது. அதையடுத்து, அந்த அசடன் குனிந்து கரங்களை முன்னோக்கி நீட்டிக்கொண்டு, மெதுவாக அதைப் பின்தொடர்ந்து சென்றான், அது அவனே தனது உடலை மெதுவாகப் பறக்கச் செய்வதற்கு முயற்சி செய்ததைப் போல இருந்தது, ஆனால் பத்தடிகள் தாண்டியதும் நின்று, தனது முகத்தை வான் நோக்கி உயர்த்தினான், அவனுடைய கரங்கள் அவனுக்கு முன்பு தொங்கிக் கொண்டிருந்தன அவனுடைய உள்ளங்கைகள் என்னுடைய கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் மீது வைத்திருப்பதைப் போல வெளிப்புறமாகத் திரும்பியிருந்தன. 

பள்ளத்தாக்கிலிருந்து வில்லோ மரங்களின் பசுமையான சிறு கிளைகளும் மங்கலான மஞ்சள் மலர்களும் சாம்பல் நிறப் புதர்ச் செடிகளும் சூரிய ஒளியைப் பார்த்து மேல்நோக்கி வளர்ந்திருந்தன, அதேவேளையில், பாம்புத் தாவரத்தின் ஈரப்பதத்துடன் கூடிய வட்டவடிவ இலைகளைப் போல பள்ளத்தாக்கின் களிமண் வரிவரியான பிளவுகளுடன் இருந்தது. மேலும் எங்களைச் சுற்றிச் சிறிய பறவைகள் வட்டமிட்டுத் திரிந்துகொண்டிருந்தன, இரண்டு பக்கப் புதர்களிலிருந்தும் பள்ளத்தாக்கின் படுகைகளிலிருந்தும் அழுகிய ஈரநாற்றம் மேலே வந்துகொண்டிருந்தது. இருப்பினும், எங்கள் தலைகளுக்கு மேலே வானம் தெளிவாக இருந்தது, சூரியன் இப்போது வானத்தின் ஒரே ஆக்கிரமிப்பாளனாக இருந்தான், ஆற்றுக்கும் குறுக்கே இருண்ட சதுப்புப் புதர்களின் திசையில் மெதுவாக மறைந்து கொண்டிருந்தான்; ஜிட்னயா தெருவின் கூரைக்களுக்கு மேலே வெண்பனிநிறப் புறாக்களின் கூட்டம் எச்சரிக்கையுடன் சிறகடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது, அதேவேளையில் அடித்துப் பெருக்கிக் கொண்டிருந்தது போல அவற்றுக்குக் கீழே காற்றில் கருப்பு துடைப்பம் ஆடிக்கொண்டிருந்தது. வெகுதொலைவிலிருந்து ஒரு கோபங்கொண்ட முணுமுணுப்பை, நகரின் துயரம் தோய்ந்த, மர்மமான முணுமுணுப்பைக் கேட்க முடிந்தது. 

ஒரு முதியவரைப் போல குறைகூறி முணுமுணுக்கும் புறநகர்ப் பகுதியின் ஒரு குழந்தை அழுகையில் அதன் குரலை உயர்த்திக் கொண்டிருந்தது; அந்தச் சத்தத்தைக் கவனித்தேன், அது எனது மனதில் ஓர் எழுத்தர் ஒரு கைவிடப்பட்ட, பாழ்பட்ட தேவாலயத்தில் வழிபாட்டு வாசகங்களை வாசித்துக் கொண்டிருந்ததை நினைவுபடுத்தியது. தற்போது ஒரு கருஞ்சிவப்பு நாய் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு எங்களைக் கடந்து சென்றது, அதன் கண்கள் ஒரு குடிகாரப் பெண்ணின் கண்களைப் போல அழகாக இருந்தன. 

மேலும் அந்தச் சித்திரத்தை முழுமையாக்குவதற்கு, அங்கு புறநகர்ப் பகுதியின் அருகாமையில், பள்ளத்தாக்கின் விளிம்போரத்தில் ஒரு குடிசை இருந்தது, அந்தக் குடிசைக்கு அருகில், முகம் சூரியனை பார்க்க, முதுகுப் பக்கம் நகரிருக்க, பறந்து செல்லத் தயாராக இருந்தது போல ஒரு மெலிந்த பையன் நின்றுகொண்டிருந்தான், அவன் அனைவருக்கும் அந்நியமாக இருந்த அதேவேளையில், அவன் நிரந்தரமாக விளங்கிக்கொள்ள முடியாத புன்னகையுடன் அவனுடைய தேவதை போன்ற கண்களால் அனைவரையும் அனபாய்த் தடவிக் கொடுத்தான். ஆம், தேனீயைப் போல இருந்த அந்தப் பொன்னிற மச்சத்தை இன்றுவரை என்னால் பார்க்க முடிகிறது!

************************************ 

இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நண்பகல் நேரம், நிலுஷ்கா இன்னொரு உலகிற்குக் கடந்து சென்றான். அந்த நாள், பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு, அன்புடன் தானமாக அவனுக்கு அளிக்கப்பட்ட ஓரிரண்டு அப்பங்களை அவனது அன்னையிடம் கொடுத்துவிட்டு, கூறினான்:

“அம்மா, உங்கள் மடியில் படுத்துக்கொள்கிறேன், நான் இறுதியாகப் படுக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்.”   

இருப்பினும் அந்தச் சொற்கள் ஃபெலிட்ஜடாவை எந்த விதத்திலும் வியப்படையச் செய்யவில்லை, ஏனென்றால் அதற்கு முன்பும் பலமுறை படுக்கைக்குச் செல்லுமுன் அப்படிக் கூறியிருக்கிறான்:

“ஒருநாள் நாம் அனைவருமே இறந்துதான் ஆகவேண்டும்.”

அதேநேரத்தில், அதற்கு மாறாக, முந்தைய நேர்வுகளில் நிலுஷ்கா முதலில் தனது சிறிய பாடலைப் பாடாமல், அதன்பிறகு “கடவுளே, எங்களுக்குக் கருணை காட்டுங்கள்!” என்ற நிரந்தரமான, உலகளாவிய மந்திரத்தை உச்சரிக்காமல் ஒருபோதும் உறங்கச் சென்றதில்லை, அவன் இம்முறை வெறுமனே தனது கைகளை அவனுடைய மார்பின் மீது வைத்துக்கொண்டு, கண்களை மூடி, உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அந்த நாள் ஃபெலிட்ஜடா உணவருந்திவிட்டு, பின்னர் அவளுடைய சொந்த வேளை நிமித்தமாக கிளம்பிச் சென்றாள்; அவள் மாலையில் திரும்பிய போது, அவளுடைய மகன் இன்னும் தூங்கிக்கொண்டே இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள். அடுத்து, அவனை நெருங்கிச் சென்று பார்த்தபோது, அவன் இறந்து போயிருந்ததை உணர்ந்துகொண்டாள். 

புறநகர்ப் பகுதி குடியிருப்போரில், அவளுடைய குடிசைக்கு ஓடிவந்த சிலரிடம், அவள் வருத்ததுடன் நடந்ததைக் கூறினாள்: “அவனுடைய சிறிய பாதம் நீலமாக மாறியிருந்ததைப் பார்த்து உணர்ந்துகொண்டேன்; பிரார்த்தனைக்குச் சற்று முன்புதான் அவனுடைய கரங்களை சோப்புப் போட்டுக் கழுவிவிட்டேன், அவனுடைய கைகளைவிட பாதங்கள் குறைவாக வெளுத்திருந்ததை நான் குறிப்பிட்டேன். அந்தக் கரங்களைத் தொட்டுப் பார்த்தபோது, அது விறைத்துப் போயிருந்ததைக் கண்டேன்.” 

ஃபெலிட்ஜடாவின் முகத்தில், அவள் இதை விவரிக்க விவரிக்க, ஒரு பதட்டம் தெரிந்தது. அதேபோல, அவளுடைய அவயங்கள் சிவந்து போயின. இருப்பினும் அவளுடைய சோர்வுற்ற கண்களில் வழிந்த கண்ணீர் மூலமாக ஒரு வகை நிம்மதி உணர்வு இருந்தது, அது ஒருவகை மகிழ்ச்சி உணர்வாக இருந்ததாகவும் ஒருவர் கூறலாம். 

“அடுத்து நான் இன்னும் நெருக்கமாகச் சென்று பார்த்தேன், பிறகு அந்த உடலுக்கு முன்பாக மண்டியிட்டு விழுந்து தேம்பினேன்: ‘ஓ எனது கண்ணே, நீ எங்கே இருக்கிறாய்? ஓ, கடவுளே, என்னிடமிருந்து அவனை எங்கே எடுத்துச் சென்றுவிட்டாய்?” 

அடுத்து ஃபெலிட்ஜடா தனது தலையை இடது தோள் மீது சாய்த்துக்கொண்டு, தன்னுடைய கண்களுக்கும் மேலாக குறும்புத்தனமாகப் புருவங்களைச் சுருக்கிக் கொண்டாள், தனது கைகளால் மார்பைப் பற்றிக்கொண்டு, ஒப்பாரி வைத்தாள்:

ஓ, எனது புறா போய்விட்டது, எனது ஒளிவீசும் நிலவு போய்விட்டது, எனது விழிகளின் நட்சத்திரமே, இவ்வளவு விரைவில் மறைந்துவிட்டாயே! உனது ஒளி ஆழ்ந்த இருளில் மூழ்கிவிட்டது. காலம் அதன் வட்டத்தை நிறைவு செய்ய வேண்டும், இரண்டாவது வருகையின் எக்காள ஒலி, —

“இங்கு பார்! நாக்கை அடக்கு!” வோலோகோனோவ் எரிச்சலுடன் உறுமினார்.  

என்னைப் பொருத்தவரை, அன்று, நான் காட்டுக்குள் நடந்துகொண்டிருந்தேன், நான் திரும்பி வரும் போது ஃபெலிட்ஜடாவின் குடிசையின் சன்னல்களுக்கு முன்பு அந்தப் புறநகர்ப் பகுதியின் முன்னாள் குடியிருப்புவாசிகள் கொந்தளிப்புடன் கூடி நின்று, சத்தமேதுமின்றி, மெதுவாகத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் மாற்றி, மாற்றி கால்விரல்களை உந்திக்கொண்டும் கழுத்தை உயர்த்திக்கொண்டும், கருத்த சன்னல் இடைவெளிகளில் உற்றுப் பார்த்துக் கொண்டும் இருந்தனர். ஆம், அவர்கள் ஒரு தேன்கூட்டின் மீது மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப் போலத் தெரிந்தனர், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்களின் முகங்களில் ஒரு பதட்டத்தின் நடுக்கமும் எதிர்பார்ப்பும் இருந்தது. 

வோலோகோனோ மட்டும் ஃபெலிட்ஜடாவை முழங்கையில் இடித்து, ஓர் உரத்த அதிகாரத் தொனியில் கூறினார்:

“நீ அழுவதற்கு மிகவும் தயாராக இருக்கிறாய், ஆனால் இந்தப் பையனின் இறப்பின் மிகவும் சரியான சூழ்நிலைகளைப் பற்றி முதலில் கேட்க விரும்பவேண்டும்.”       

இவ்வாறு அழைக்கப்பட்டதும், அந்தப் பெண் தனது மேலாடையின் கைப்பகுதியில் கண்களைத் துடைத்துக்கொண்டு, உதடுகளை நக்கிக்கொண்டு, ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, அன்டிபாவின் சிவந்த, கடுகடுப்பான முகத்தை உற்சாகத்துடனும், வெட்கமின்றியும் குடிபோதையில் இருக்கும் ஒருவரைப் போன்று உற்றுப் பார்த்தாள். அவளுடைய வெண்ணிறத் தலைக்கட்டு அணியின் கீழ் அவளுடைய நெற்றிப் பொட்டுக்கள் மீதும் அவளுடைய வலது கன்னத்தின் மீதும் பொன்னிற முடியின் ஒரு சில கற்றைகள் விழுந்திருந்தன; உண்மையில், அவள் எழுந்த போது, அவள் தலையையும் மார்பையும் ஆட்டினாள், நெட்டி முறித்து, மேலாடையிலிருந்த சுருக்கங்களை சரி செய்துகொண்டு, அவளுடைய வயதை விடக் குறைவாகத் தெரிந்தாள். இப்போது ஒவ்வொருவரும் கவனத்துடன் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர், இருந்தாலும் அதில் ஒருவிதப் பொறாமையுணர்வு இல்லாமலில்லை. 

திடீரென்று, கண்டிப்புடன் அந்த முதியவர் கேட்டார்:

“இந்தப் பையன் உடல் நலமில்லை என்று ஏதாவது சொன்னானா?”

“இல்லை, ஒருபோதும் இல்லை,” ஃபெலிட்ஜடா பதிலளித்தாள். “ஒருமுறை கூட அவன் ஓருபோதும் அதைப் பற்றிப் பேசியதில்லை—ஒருமுறை கூட.”

“அவனை அடிக்கவில்லையே?”   

“ஓ, என்னிடம் எப்படி அப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம், குறிப்பாக அதை, ——–அதை?” 

“நீ அடித்தாய் என்று நான் சொல்லவில்லை.”

“சரி, நான் எந்த ஒருவருக்கும் பதில் சொல்ல முடியாது, ஆனால் குறைந்தபட்சம் அவனுடைய உடலில் எந்தக் காயமும் இல்லை, நான் மேலங்கியைத் தூக்கிப் பார்த்தபோது, காலிலும் முதுகிலும் கீறல்களைத் தவிர வேறு எதுவுமில்லை.”

அவளுடைய தொனியில் இப்போது ஒரு புதிய மணியின் ஒலியைப் போன்ற, உத்தரவாதத்தை அதிகரிக்கும் ஒரு மணியொலி கேட்டது, அவள் முடித்த போது அவளுடைய பிரகாசமான கண்களை மூடிக்கொண்டு, கவர்ச்சிகரமான, மென்மையான, அதிலும் காதில் விழக்கூடியவகையில், ஒரு பெருமூச்சு விட்டாள்.

இப்போது யாரோ ஒருவர் முணுமுணுத்தார்:

“அவள் அவனை அடிப்பது வழக்கமாகத்தான் இருந்தது.”

“என்ன?”

“எப்போது பார்த்தாலும் அவனிடம் அவள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது வழக்கம்.”

இது இன்னுமொரு டசன் அல்லது அந்த அளவுக்கு பதில் வரவழைக்கும் கேள்விகளுக்கு இட்டுச் சென்றது; அதன்பிறகு அன்டிபா, சிறிது நேரம், ஒரு பொருளுல்ல மௌனம் காத்தார், மேலும் கூட்டமும் கூட, திடீரென்று உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டது போல அமைதியாகவே இருந்தது. நீண்ட நேரம் சென்ற பின்புதான், தொண்டையைச் சரி செய்துகொண்டு, அன்டிபா கூறினார்:

“நண்பர்களே, கடவுள், அவரது முடிவற்ற கருணையினால் இங்கு ஒரு சிறப்பு வருகைதர மனமிரங்கியுள்ளார் என்று நாம் கருத வேண்டும், அதில் நாம் அனைவரும் அறிவிழந்த ஒரு சிறுவனிடம், நம் அனைவருக்கும் தெரிந்த அதே ஒளியை அறிந்துணர்ந்துள்ளோம், அவன் பூமியில் உயிர் வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருடன் நெருக்கமான ஒன்றிணைவைக் கடைபிடித்துள்ளான்.”

பின்னர் நான் அங்கிருந்து அகன்றேன், ஏனென்றால் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தின் சுமை எனது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிறது, நான் நிலுஷ்காவை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக ஏங்கிக் கொண்டிருந்தேன். 

ஃபெலிட்ஜடாவின் குடிசையின் பின்பகுதி சிறிது தரையில் அழுந்தியிருந்தது, அதனால் முன்பகுதி, அதன் குளிர்ச்சியான சன்னல் கண்ணாடிகளுடனும் அவற்றின் சட்டத்துடனும், தொலைதூர வானத்தை நோக்கி உயர்ந்து ஒரு சிறிது சரிந்திருந்தது. நான் எனது தலையைச் சாய்த்து, திறந்த கதவின் வழியாக நுழைந்தேன். நுழைவாயிலின் அருகில் நிலுஷ்கா சுவருக்கு அருகே இருந்த ஒரு பேழையில் படுத்திருந்தான். அவனுடைய தலைக்கடியில் இருந்த ஒரு அடர் சிவப்புத் தலையணைத் துணியின் மடிப்புக்களில் தொடங்கி, அவனுடைய வெளிர் நீல நிலத்திலிருந்த வட்டமான, கள்ளங்கபடமற்ற முகத்தில் தலைமுடியின் பொன்னிற சுருள்கள் தொங்கிக்கொண்டிருந்தன, விழிகள் மூடியிருந்தாலும் உதடுகள் இறுக அழுத்திக்கொண்டிருந்தன, அவன் இன்னும் கூட அவனுடைய பழைய அமைதியான, ஆனால் மகிழ்ச்சியான வழியில் புன்னகை பூத்துக்கொண்டிருந்தது போலத் தெரிந்தது. பொதுவாக, அடர்த்தியான துணியாலான விரிப்பின் மீது அவனுடைய உயரமான, மெலிந்த உருவம், அதன் வெறுங்கால்களுடன், மென்மையான கரங்களுடன், மணிகட்டுக்கள் மார்பின் மீது படிந்திருக்கக் கிடந்தது. அது ஒரு தேவதையைப் போல இருந்தது என்பதை விட எனது பாலகப் பருவத்திலிருந்து மிகவும் பிரபலமான ஒரு பழைய, கருத்துப் போன, ஒரு குழந்தை இயேசுவின் சிலையின் தோற்றத்தையே எனக்கு நினைவூட்டியது.  

கருஞ்சிவப்பு இருளில் அனைத்தும் அசைவின்றியிருந்தன. ஈக்கள் கூட ரீங்கார ஒலியெழுப்பவில்லை. தெருவிலிருந்து மட்டும் நிழல் படிந்த சன்னல் மூலமாக ஃபெலிட்ஜடாவின் கடுமையான, கரடுமுரடான வெறுப்பூட்டும் ஒலி வந்து வந்துகொண்டிருந்தது, அது ஒரு விந்தையான, துயரம் தோய்ந்த சொல் வடிவங்களைக் குறிப்பதாக இருந்தது:

“எனது நெஞ்சு வெதுவெதுப்பான, சாம்பல் மண்ணில் அழுந்திக் கிடக்க, சாம்பல் மண்ணே, எனது முதிய தாயே, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், உன்னைப் போல ஒரு தாயான நான், வலியில் துடிக்கும் ஒரு தாயாக, உனது கரங்களில் இந்த எனது மகனை, இறந்துவிட்ட எனது மகனை, இந்த எனது மாணிக்கத்தை, எனது இதயத்தின் இரத்தத் துளியை, —– தழுவிக்கொள்.” 

திடீரென்று கதவருகில் அன்டிபா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் தனது புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் முரட்டுத்தனமான, நிதானமற்ற குரலில் கூறினார்:

“அழுதது போதும் பெண்ணே, நல்ல பெண்னே, ஆனால் இப்படிப்பட்ட பாடல்களைப் பாடுவதற்கு இதுவல்ல தருணம்—இவை ஒரு கல்லறைத் தோட்டத்தில், ஒரு கல்லறையின் பக்கத்தில் பாடுவதற்கான பாடல்கள். சரி, தயக்கமில்லாமல் அனைத்தையும் என்னிடம் சொல். எனக்கு அனைத்தும் தெரிய வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.”

அதன்பிறகு, தனது நடுங்கும் கரங்களை மடித்துக்கொண்டு, அவர் கவனமாக அந்த உடலை ஆராய்ந்து பார்த்தார், கடைசியில் அவரது கண்கள் அந்தப் பையனின் இனிய அவயங்களில் நிலைத்தன. பின் அவர் வருத்தத்துடன் முணுமுணுத்தார்:

“இவன் எவ்வளவு அசாதாரணமாக வளர்ந்திருக்கிறான்! ஆம், இறப்பு அவனை விரிவடையச் செய்துவிட்டது, ஆம், அப்படித்தான் இருக்கும்! நானும் விரைவிலேயே நீட்டிப் படுத்துவிட வேண்டியிருக்கும்தான். ஓ, அது இப்போதுதான்!”

பின்னர் அவருடைய வளைந்த விரல்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தி, அந்தப் பையனின் மேலங்கியின் சுருக்கங்களைச் சரி கால்களை மூடி வைத்தார். அதன் பிறகு அவர் தனது சிவந்த உதடுகளை அந்த ஆடையின் ஓரத்தில் அழுத்தினார். 

அந்தக் கணத்தில் நான் அவரிடம் கூறினேன்:

“அவனிடமிருந்து நீங்கள் எதை விரும்பினீர்கள்? ஏன் அவனுக்கு விந்தையான சொற்களைக் கற்பிப்பதற்கு முயற்சி செய்தீர்கள்.” 

நிமிர்ந்துகொண்ட அவர், மங்கலான கண்களால் பார்த்துவிட்டு, அன்டிபாத் திரும்பக் கூறினார்:

“அவனிடமிருந்து நான் விரும்பியது என்ன?” அந்தத் திரும்பக் கூறல் அவர் நேர்மையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தாலும், தன்னையே இழிவுபடுத்திக்கொள்ளும் வகையில் தலையை அசைத்து அவர் கூறியதாவது:

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவனிடமிருந்து நான் எதை விரும்பினேன் என்பது எனக்கே தெரியவில்லை. கடவுள் சத்தியமாக எனக்குத் தெரியாது. இருப்பினும், இறப்பின் முன்பு ஒருவர் உண்மையைப் பேசுகிறேன், எனது நீண்ட வாழ்நாளில் நான் ஒருபோதும் ஏதேனும் ஒன்றை அந்த அளவுக்கு விரும்பியதில்லை என்று சொல்கிறேன்… ஆம், நற்பேறு அதை எனக்கு வெளிப்படுத்தும் என்று நான் காத்திருக்கிறேன்; மேலும் நற்பேறு பேச்சிழந்தும் நாக்கிழந்தும் எப்போதும் இருந்துவந்துள்ளது. அது வேறு வகையாக எதிர்பார்க்கப்படுமானால் எனக்கு முட்டாள்தனமாக இருந்திருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருநாள் ஏதோ ஒரு அற்புதம், ஏதோ எதிர்பாராதது நிகழக்கூடும்.” 

ஒரு குறுகிய நேரச் சிரிப்புடன், அவர் தனது கண்களால் உடலைச் சுட்டிக்காட்டி, மேலும் உறுதியாகத் தொடர்ந்தார்:

“ஆம், இப்படிப்பட்ட ஓர் ஆதாரத்திலிருந்து எதையும் எதிர்பார்த்திருப்பது ஆதாயமற்றதாக இருந்தது. ஒருவரின் விருப்பமில்லாமல் எதையும் அடைவது எப்போதும் சாத்தியமில்லை. இதுதான் வழக்கமாக நடப்பது. ஃபெலிட்ஜடா, உண்மையில் ஒரு புத்திசாலிப் பெண்தான் (இருந்தாலும் இரக்கமில்லாதவள்), அவளுடைய மகனைக் கடவுளின் முட்டாளாகப் பெற்றதால், அவள் அவளுடைய முதிய வயதில் சில வசதியை அடைவாள்.”

“ஆனால் நீங்களே அதைத் தெரிவித்த நபர்? நீங்கள்தான் அதை விரும்பினீர்கள்?”

“நானா?”

தற்போது, தனது கரங்களை சட்டைக் கைகளுக்குள் திணித்துக்கொண்டு, சோர்வாகவும் உடைந்துபோனவராகவும் மேலும் கூறினார்: 

“ஆம், நான் அதை விரும்பினேன். உண்மையில், அதை ஏன் இந்த இடத்தின் ஏழை மக்களுக்கு வசதியைக் கொண்டுவந்திருக்கும் என்று பார்க்கக் கூடாது? சிலநேரங்களில் அவர்களுடைய கசப்பான, கலக்கமான வாழ்க்கைக்காக, அந்த வாழ்க்கை போக்கிரிகளின், தீயவர்களின் வாழ்க்கையாக இருக்கலாம், இருப்பினும் அதுதான் நம்மிடையே நீதிமான்களையும் [பாவம் செய்யாத ஒரு நபர்] உருவாக்கியுள்ளது.”

அந்தி வானம் முழுவதும் இப்போது நெருப்புப் பிழம்பாய் இருந்தது. காதில் ஒரு துயர ஓலம் விழுந்தது:

பூமியை பனி வெண்மை போர்த்தி மறைத்திருந்த போது, பனிபடர்ந்த சமவெளியில் ஓநாய்கள் நடந்து சென்றிருந்தன. அவை வசந்தத்தின் வெதுவெதுப்பில் உற்சாகத்துடன் ஓலமிடுகின்றன, நானோ மரணமுற்ற குழந்தைக்காக துயர ஓலமிடுகிறேன். 

வோலோகோனோவ் ஒரு கணம் கவனித்தார். பின்னர் உறுதியுடன் சொன்னார்:

“இவை வெறுமனே அவளுக்கு வரும் திடீர் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான். அதைத் தான் எதிர்பார்க்க முடியும். பாடல் அல்லது தீமையில் இருப்பது போலக் கூட அவளுக்குப் பிடிப்பு இல்லை, அப்படித்தான் இரக்கமும், அது இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் இதயத்தில் உறுதியாய்ப் பதிந்துள்ள போது, அது எல்லைகள் அறியாது. ஒருமுறை இரண்டு வணிகர்கள் அவளை அழைத்துச் சென்றனர், அவளை முழு நிர்வாணமாக ஆக்கினார்கள், அவளை ஜிட்னயா தெருவின் வழியே அவர்களுடைய வண்டியில் வைத்து ஓட்டிச் சென்றனர், அவர்களுடைய வாகனத்தின் மத்தியில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டனர், ஃபெலிட்ஜடா அவர்களுக்கு நடுவில் நிமிர்ந்து நின்றாள்—ஆம், ஆடையில்லாமல்தான்! அதன்பிறகு அவர்கள் அவளைச் சாகும் அளவுக்கு அடித்தார்கள்.”

நான் இருண்ட, குறுகிய முன்கூடத்திற்கு வந்தபோது, என்னைப் பின்தொடர்ந்து வந்த அன்டிபா முணுமுணுத்தார்:

“அவளுடையதைப் போன்ற ஒரு புலம்பல் உண்மையான துயரத்திலிருந்து மட்டுமே வரும்.”

ஃபெலிட்ஜடாவை குடிசைக்கு முன்பு பார்த்தோம், அவளுடைய முதுகு சன்னலை மறைத்திருந்தது. அங்கு அவளுடைய கரங்கள் மார்பில் அழுந்தியிருந்தன, அவளுடைய ஆடை தாறுமாறாக இருந்தது, அவள் தன்னுடைய அலங்கோலமான தலையை விண்ணை நோக்கி உயர்த்தியவாறு இருந்தாள், அதேவேளையில் மாலைத் தென்றல் அவளுடைய நேர்த்தியான செம்பொன்னிற முடியைக் கிளர்த்தி விட்டது, அவளுடைய சிவந்த, கூர்மையாக வரையறுக்கப்பட்ட அவயங்களின் மீதும் தீவிரமாகத் துருத்திக்கொண்டிருந்த கண்கள் மீதும் தாறுமாறாகப் பரவச் செய்திருந்தன. அவள் கரகரத்த குரலில் தொடர்ந்து புலம்பப் புலம்ப, ஒரு விசித்திரக் கவர்ச்சியும் பரிதாபகரமான, அசாதாரணத் தோற்றமும் இடையறாமல் அவளுடைய வலிமையை கூட்டிக்கொண்டே இருந்தது:

“ஓ உறைபனிக் காற்றே, கொடூரமான, முரட்டுத்தனமான காற்றே, எனது இதயம் துடிப்பதை நிறுத்தும் வரை என் நெஞ்சை அழுத்து! எனது இரத்த ஓட்டத்தை நிறுத்து! நான் உதிர்க்கும் இந்த வெப்பமிகு கண்ணீரை குளர்பனியாய் உருகச் செய்!”

அவளுக்கு முன்பு ஒரு பெண் நிறுத்தப்பட்டிருந்தாள், கருணையுடன் தியானம் செய்வோரின் துயரமிகு தோற்றத்தில் அவள் இருந்தாள். அந்தப் பள்ளத்தாக்கின் இருண்ட திறப்பின் மூலமாக, பைன்மரங்களின் கூர்மையான கருப்பு நுனிகளால் தனது வட்டத்தகடு கிழிபட, சூரியன் சதுப்புக் காட்டில் அமிழ்ந்துவிடுவதற்கு முன்பாக, புறநகர்ப்பகுதிக்குக் கீழே மூழ்கிக்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஏற்கெனவே அவனைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றும் சிவந்திருந்தது. ஏற்கெனவே அவன் காயப்படுத்தப் பட்டிருந்தான், இப்போது இரத்தம் சிந்தி மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்.  


– மக்சீம் கார்க்கி

தமிழில் : நிழல்வண்ணன்           

 

எழுதியவர்

நிழல்வண்ணன்
நிழல் வண்ணன் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் ந.இராதா கிருட்டிணன். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர்; வழக்கறிஞராக பணிபுரிகிறார். கார்ல் மார்க்ஸ் வாழ்கை வரலாறு, ஸ்டாலின்: அரசியல் வாழ்க்கை வரலாறு, லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர் , மாவோவின் நெடும்பயணம் உள்ளிட்ட நூல்களோடு மார்க்சிய நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மக்சீம் கார்க்கியின் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x