3 December 2024
Arnika nasar

நான்காயிரம் சதுரஅடியில் அந்த கைக்கடிகார காட்சியறை முத்துப்பவளம் நகரின் பிரதான சாலையில் க்ளைடாஸ்கோப் வெளிச்சங்கள் பரப்பி டாலடித்தது.

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கைக்கடிகாரங்கள். 

பல்வேறு முத்திரைப் பெயர்களில் கைக்கடிகாரங்கள்.

டைட்டன்..

பாஸ்ட் ட்ராக்….

ரோலக்ஸ்…

பாசில் ந்யூட்ரா…

ஹெச்எம்டி…

டிஸாட்…

டைம் வியர்…

கேஸியோ..

ஸீகோ…

டைமெக்ஸ்…

ஓலவ்ஸ்…

ஓமேகா…

சிட்டிசன்..

டேக் ஹீயர்…

கார்டியர்..

ஜெனித்…

கணிணி முன் அமர்ந்திருந்தான் ஆதிரன். பௌதிகத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றவன். வயது 26. உயரம் 175செமீ. திருமணத்தில் விருப்பம் இல்லாத பிரம்மச்சாரி. மதம் சாராத ஆத்திகன்.

வாடிக்கையாளர்களுக்கு விற்பனை பிரிவு பெண்கள் பல்வேறு கைக்கடிகாரங்களை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தனர்.

ஆதிரன் ஸ்போட்டிபையில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் எதிரே ஒரு முதியவர் வந்து நின்றார். ஜடைஜடையாய் தலைகேசம் தொங்கியது. பால்வெண்மை நுரைப்பில் தாடி. நீலநிற அங்கி. கருப்புநிற காற்சட்டை இடதுகையில் பத்து கைகடிகாரங்களும் வலதுகையில் பத்து கைக்கடிகாரங்களும் கட்டியிருந்தார். நீள நுனியில் வீங்கிய மூக்கு.

“அன்பரே! நலமா?” என்றார் வந்தவர் ஆதிரனை பார்த்து.

‘நலம்.. நீங்கள் யார்?”

“நீண்டநாட்களாகவே நான் ஒரு கடிகார விற்பனையாளன். எனது காற்சராய் பையில் பல வினோதமான கடிகாரங்களை விற்பனைக்கு பதுக்கியுள்ளேன்…”                                

“உங்கள் பெயர் என்ன?”

“முராத்!”

“நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?”

“நான் ஒரு துருக்கி முஸ்லிம். எனக்கு என்ன வயதாகும் என நினைக்கிறாய்?”

“எழுபது!”

“இல்லை. எனக்கு வயது 169!”

“நன்கு தமிழ் பேசுகிறீர்கள்!”

“எனக்கு 46மொழிகள் பேச தெரியும்!”

“என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?”

“எல்லாம் ஒரு காரணமாகத்தான்…” குரலை ரகசியமாக்கினார் முராத். “என்னிடம் ஒரு விசித்திரமான கடிகாரம் உள்ளது. விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா?”

“காட்டுங்கள்!’

வலது காற்சிராய் பைக்குள் கைவிட்டு அதனை எடுத்தார் முராத். நீட்டும் போதே அது ஒரு வானவில் நிறத்தில் ஜாஜ்வலித்தது.

வாங்கினான் ஆதிரன். கண்களை அகட்டினான். நடப்பு நேரத்தை துல்லியமாக காட்டியது.

“மகனே! இது காலக்கடிகாரம்…இதன் மூலம் இறந்தகாலத்துக்கும் போகலாம் எதிர்காலத்துக்கும் போகலாம்… கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னும் கிறிஸ்து பிறந்தபின் நாலாயிரம் வருடங்களுக்கு பின்னும் போகலாம்…”

“பொய் சொல்கிறீர்கள்!”

“ஒரு நிமிஷம்!” கடிகாரத்தை வாங்கி பத்து நிமிடங்களுக்கு முன் வைத்தார் முராத். மீண்டும் முராத் வந்தார்… “அன்பரே! நலமா?”

“நான் இப்ப நம்புறேன் முராத் தாத்தா!’

“இந்த காலகடிகாரத்தை நீ அணிந்த கணம் உன்னை சுற்றி ஒரு வெப்பதடுப்பு கவசம் உருவாகிவிடும்… காலபயணத்தின் போது குளிர்நிலை தூக்கத்தில் இருப்பாய்…” செயல்முறை விளக்கங்களை அள்ளித்தெளித்தார் முராத்.

“இதனை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை!”

“இந்த காலகடிகாரத்தை ஆதிரன் எனும் இளைஞனுக்கு விற்க சொல்லி ஒரு அசரீரி எனக்கு உத்தரவிட்டது. இதனை வாங்க நீ பணம் எதுவும் தர வேண்டாம்!”

“பின்னே?”

“நீ உயிருக்கு உயிராக மதிக்கும் உணவு பழக்கம் ஒன்றை இந்த கடிகாரம் வாங்கிய கணத்திலிருந்து கைகழுவி விட வேண்டும்!”

“சரி, இந்த காலகடிகாரத்தை வைத்து நான் எங்கே போவது?”

“இறந்தகாலத்து பிரபலங்களில் உனக்கு மிகவும் யாரை பிடிக்கும்?”

“ஆன்மீக பிரபலங்களில் இயேசுநாதர் மிகவும் பிடிக்கும்!”

“இயேசுநாதரின் எந்த காலகட்டத்துக்கு போவது?”

“இயேசுநாதர் தனது 12 சீடர்களுடன் உணவருந்திய கடைசிவிருந்துக்கு போ கடைசி விருந்தை லியனார்டோ டாலின்ஸி அற்புதமாக வரைந்திருப்பார்!”

“கடைசி விருத்தில் நானும் கலந்துகொள்ள இயேசுநாதர் அனுமதிப்பாரா?”

“பேராசைப்படாதே ஒளிந்திருந்து கடைசி விருந்தை வேடிக்கை பார்!”

“நான் இயேசுநாதருடன் பேசவிரும்புகிறேன்!”

“இயேசுநாதர் கிமு 800-600ல் யூப்ரட்ஸிலிருந்து கிளம்பிய அராமைக் மொழி பேசுவார். அதன்பின் அராமைக் மொழி சிரியாவுக்கும் மெஸபடோமியாவுக்கும் பரவியது. இயேசுநாதருக்கு கூடுதலாய் கொய்ன் கிரீக் மொழியும் ஹிப்ருமொழியும் பேச தெரியும். நீயோ தமிழ்தான் பேசுவாய். எப்படி இருவரும் பேசிக் கொள்வீர்கள்?” முராத் சிரித்தார்.

“சைகை மொழி!”

“யார் கண்டது? இயேசுநாதர் கடவுளின் மகன்… அவர் தமிழ்பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிரபாராதததை எதிர்பார் பேரனே!”

“மீன் சாப்பிடும் பழக்கத்தை உங்களிடம் விலையாக கொடுத்து காலகடிகாரத்தை வாங்கிக் கொள்கிறேன்!”

“மகிழ்ச்சி!” காலகடிகாரத்தை கொடுத்தார் முராத்.

“நாளை எங்கிருப்பீர்கள் முராத்?”

“ஆப்கானிஸ்தானில் இருப்பேன்!”

“ஓவ்!”

“காலப்பயணம் எப்போது போகப்போகிறாய் ஆதிரன்?”

“இன்று நள்ளிரவு!”

“உன் காலப்பயணத்தை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் முடித்து ஊர் திரும்ப வாழ்த்துகிறேன்!” ஒரு அத்தர் பாட்டிலை பரிசளித்தார் முராத்

“பயணத்தின் போது இதனை பூசிக் கொள். நறுமணப்பாய்!”

விஷ்க்!

பார்க்கும் போதே முராத் சாலையின் இறுதிக்கு வழுக்கிப் போனார். அடுத்த மைக்ரோநொடி முராத் காணாமல் போனார்.

காலகடிகாரத்தை வெறித்தான் ஆதிரன்.

அதில் சிவப்பு நிற எழுத்துகள் மின்னின. ‘காலப்பயணம் மிகமிக ஆபத்தானது. தவிர்ப்பது நல்லது’

நக்கலாய் சிரித்தான் ஆதிரன்.

ள்ளிரவு

கைக்கடிகாரத்தை இடது மணிக்கட்டில் கட்டினான் ஆதிரன்.

முட்களை திருகினான்.

“ஏ காலக்கடிகாரமே… இயேசுநாதர் நடத்திய கடைசி விருந்தின் நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாக போ கடைசி விருந்து நடக்கும் வீட்டில் நான் இருப்பேனாகட்டும்!”

கோடி சர்ப்பச்சீறல் கிளைத்தது. வெம்மையும் குளிர்ச்சியும் சுழன்றடித்தது. சூரியன் வீழ்ச்சி சந்திரன் எழுச்சி. சந்திரன் வீழ்ச்சி சூரியன் எழுச்சி.

ஆயிரக்கணக்கான இன மக்களின் மொழிகள் உயர்ந்து ஒலித்து அடங்கின.

கிபி33 ஏப்ரல்மாதம் ஒன்றாம்தேதி புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு ஆதிரன் ஜெருசலேமின் செனகல் டேவிட் அரசர் கல்லறையின் மேற்தளத்தில் போய் நின்றான்.

வசீகரமான ஆண்குரல் கேட்டது.

எட்டினான் ஆதிரன்.

இயேசுநாதர் நின்றிருந்தார். முழங்கால் வரையிலான டுனிக் ஆடை அணிந்திருந்தார். மேலாடையாக உல்லன் சால்வை போர்த்திலிருந்தார். கால்களில் தோல் செருப்பு.

இயேசுநாதருக்கு யூதமுகம். வயது 32-33 இருக்கலாம். நீலக்கண்கள்.  குட்டை தலைகேசம். மெல்லியதாடி 166செமீ உயரம்.

சமையலறையில் ஒரு பெண் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஓ இவள்தான் மேரி மேக்தலினோ? 

தரையில் மேரியின் மகள் ஸாரா விளையாடிக் கொண்டிருந்தாள்.

கடைசிவிருந்து மேஜைக்கு இயேசுநாதரின் சீடர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் யார் யூதாஸ் இஸ்காரியட்?

தாமஸ் யூதாஸிடம், “யூதாஸே! விருந்துக்கு சரியான நேரத்தில் வந்து விட்டாய்!”

கட்டைகுட்டையாக இருந்த யூதாஸ் விகாரமாக சிரித்தார்.

இயேசுநாதர் உள்வாசலில் நின்றிருந்த ஆதிரனை பார்த்து விட்டார். “யார் நீ?” அராமைக் மொழியில் வினவினார்.

“நான் ஆதிரன் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்! ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் உங்களுக்கு பிந்தியவன் நான்.. காலபயணத்தில் உங்களை பார்க்க வந்துள்ளேன்!”

இயேசுநாதர் தமிழுக்கு மாறினார்.

‘நீ வந்த நோக்கம் என்ன?”

“யூதாஸின் துரோகத்திலிருந்து உங்களை தப்புவித்து ஜுடேயா ரோமன் கவர்னர் பான்டியஸ் பைலேட்டின் மரணதண்டனை தீர்ப்பிலிருந்தும் உங்களை தப்புவித்து சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறேன்!”

கடைசி விருந்து நடக்கும் மேஜையில் ரொட்டி, ஒயின், கோதுமை, பார்லி, காய்ந்த அத்திபழம், ஆலிவ் எண்ணெய், தேன் கொண்டு போய் வைத்தாள் மேரி மேக்தலின்

“என்ன சொன்னாய்?”

”யூதாஸை எனக்கு அறவே பிடிக்கவில்லை. யூதாஸை உங்கள் சீடர்கள் கூட்டத்திலிருந்து நிரந்தரமாய் விலக்கி வையுங்கள்!”

சிரித்தார் இயேசுநாதர். “சீடர்கள் என் வேலைக்காரர்கள் அல்ல எனக்கு சமமான நண்பர்கள்.. எனது பனிரெண்டு சீடர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் யூதாஸ்தான். யூதாஸுக்கு அடுத்து எனக்கு பிடித்தவர் பீட்டர். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நான் சிலுவையில் அறையப்படப் போகிறேன் அதற்கான காய் நகர்த்தல் முழுவதையும் நான்தான் செய்துள்ளேன்!”

“புரியல ஜுசஸ்!”

“பீட்டர் என்னை தெரியவே தெரியாது என மூன்றுதடவை சொல்லவும் யூதாஸ் என்னை முத்தமிட்டு ‘ராபி’ என கூறி என்னை காட்டிக் கொடுக்கவும் அவர்களை பணித்துள்ளேன். முதலில் மறுத்தார்கள் அன்பால் கட்டாயப்படுத்தி உள்ளேன்.. எல்லா கதைக்கும் ஒருமுடிவு வேண்டும் அல்லவா? நான் வந்த காரியம் முடித்து பரலோகத்தில் இருக்கும் பிதாவை சந்திக்க போகவேண்டும். நடப்பவை அனைத்துமே முன்னமே திட்டமிடப்பட்டவை மகனே!”

“கடவுளின் மகன் மனிதனாக பிறந்து ஏன் துரோகத்தால் கொல்லப்பட வேண்டும்?”

“இறைவனின் போதனைகளை மனிதன் இன்னொரு மனிதன் மூலமே காதுறுவான். என்னின் மரணம் பூமி மனிதர்களின் ஒட்டுமொத்த பாவங்களை கழுவி களையும்.” 

“ஓவ்!”

“நான் சிலுவையில் அறையப்பட்டு கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் அதன்பின் விண்ணேற்றமடைவேன்.. எனக்கு பின் கிறிஸ்துவம் தழைக்கும். உலகின் 240கோடி மக்கள் கிறிஸ்துவத்தை பின்பற்றுவர். கிறிஸ்துவத்தால் மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் அளவு இல்லாமல்  கிடைக்கும். யூதாஸின் முப்பதுவெள்ளிக்காசு துரோகமும் என் சிலுவை மரணமும் இல்லாமல் கிறிஸ்துவம் இல்லை!”

“ஓ மை காட்!”

“என் சீடர்களின் முடிவுகளையும் முன்னமே நானும் பிதாவும் எழுதி வைத்து விட்டோம். பீட்டர் ஒரு மீனவர். அவர் கிபி67ல் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார்!”

“டெரிபிக்!”

“பீட்டரின் சகோதரன் ஆன்ட்ரூவுக்கும் சிலுவை மரணம்..”

கண்களை அகட்டினான் ஆதிரன்.

“இடியின் மகன்கள் என ஜேம்ஸ் ஜான் சகோதரர்கள் அழைக்கப்படுவர். இருவருமே மீனவர்கள். ஜேம்ஸ் தலையை கொய்து கொல்லப்படுவார். ஜானுக்கு கிபி 98ல் முதுமை மரணம்!”

“எக்ஸ்ட்ராடினரி ஸ்கிரிப்ட்!”

“பிலிப் எனும் சீடர் கிபி 80ல் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்!”

“மீதி சீடர்கள்?”

“பார்த்லோமியா சிலுவையில் அறைந்து மரணம். தாமஸ் ஈட்டியில் குத்தி கிழித்து மரணம். மாத்யூ தலையை துண்டித்து மரணம். ஆல்ப்பஸின் மகன் ஜேம்ஸ் கல்லால் அடித்து கொலை. சைமன் ரம்பத்தால் இரண்டு துண்டாய் வெட்டப்பட்டு கொல்லப்படுவார். யூதாஸ் தூக்கு போட்டு தற்கொலை!”

“ஏன் இவ்வளவு துர்மரணங்கள்?”

“எல்லாவகை மரணங்களும் துன்பங்களிலிருந்து நிரந்தர விடுதலைதான்!”

“முடிவாக என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்?”

“எங்கள் கடைசி விருந்தில் கலந்து கொண்டு உன் காலத்துக்கு திரும்ப ஓடி விடு. உங்களுக்கெல்லாம் ஒரே ஒரு அறிவுரை.. எல்லாவற்றிலும் மிதமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் மக்களே!” இயேசுநாதரின் தலைக்கு பின் ஒரு ஒளிவட்டம் பூத்தது.

கடைசி விருந்து ஆரம்பித்தது.

எல்லாருக்கும் ரொட்டிதுண்டுகளையும் ஒயின் கோப்பைகளையும் இயேசுநாதர் வழங்கி அறிவித்தார். “ரொட்டித்துண்டு என் மாமிசம்.. ஒயின் என் இரத்தம்.. புசியுங்கள்!”

ஆதிரனுக்கு கடைசி விருந்து முடிந்ததும் கிபி 2023க்கு திரும்ப மனமில்லை. இயேசு நாதரை சிலுவையில் அறையும் வரை இருந்து பார்க்க உத்தேசித்தான்.

-யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார் இயேசுநாதர்.

சிலுவையில் அறைந்து கொல்லப்பட தீர்ப்பு வந்தது. அப்போது கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த ஆதிரனை பான்டியஸ் பார்த்து விட்டார்.

கடுமையாக விசாரிக்கப்பட்டான்.

சரியான பதில் இல்லாததால் ஆதிரனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

நான்குமீட்டர் உயரமும் இரண்டு மீட்டர் அகலமும் 75கிலோ எடையும் உள்ள சிலுவையை தனித்தனியே இயேசுநாதரும் ஆதிரனும் சுமந்தனர்.

மலை உச்சிக்கு வந்தததும் ஆடைகள் கிழிக்கப்பட்டு தலையில் முள்கிரீடம்  அணிவிக்கப்பட்டு இருகைகளையும் நேர்கோடாய் நீட்டி ஆணியடித்து ஒருகால்மேல் இன்னொரு கால் வைத்து ஆணி அடித்தனர். இரத்தம் பீரிட்டது.

இயேசுநாதர் பரலோகம் நோக்கி பெரும் குரல் எழுப்பினார். “ஏலி ஏலி லெமா சபக்தானி?” (என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர்?)

“விரும்பி சிலுவையை சுமக்கும் நீங்கள் இறைவனிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?”

“இதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வசனம். எல்லாம் சரி கடைசி விருந்தில் கலந்து கொள்ள வந்து சிலுவையில் சிக்கிக் கொண்டாயே… நீ ஒரு துரதிஷ்டசாலி!”

“இல்லை இல்லை இறைவனின் மகனோடு சேர்ந்து சிலுவையில் அறையப்படும் பாக்கியம் வேறு யாருக்கு கிடைக்கும்? நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்!”

ஆதிரன் ஆனந்தமாய் மரித்தான்.

தேவகுமாரனின் மாமிசமும் ரத்தமும் உலகின் அனைத்து மக்கள் வாயிலும் மானசீகமாக ஊட்டப்பட்டன.

அல்லேலூயா! (மகிமை உண்டாவதாக!)


 

எழுதியவர்

ஆர்னிகா நாசர்
சிதம்பரத்தில் வசித்து வரும் ஆர்னிகா நாசர்; முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம் ஆகிய பட்டங்கள் பெற்றவர். பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.

இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள், 100 நேர்காணல்கள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார். 300 இலக்கிய மேடைகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Selvam kumar
Selvam kumar
11 months ago

ஆகா மிகவும் அழகிய புனைவு, அழகு தமிழ் நடை வாழ்த்துகள், வளர்க…

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x