நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க பூத்து நின்ற மகள் தைலம்மா மீது கொள்ளைப்பிரியம். அவர்களைவிட தத்தா வீரய்யனுக்குத் தான் பேத்தி மீது கணக்கில் அடங்காத பாசம்.
தைலம்மா பிறந்த நாளில் மஞ்சக்கொல்லை தாண்டி காட்டுக்குள் கருக்கலில் போகும் பழக்கம் ஆரம்பித்தது வீரய்யனுக்கு. பேத்தி வளர வளர வீரய்யன் தாத்தாவின் காட்டு போக்கு வரத்தும் கூடிக் கொண்டே போனது.
“அப்படி என்ன தான் வயசான காலத்துல காட்டுக்குள்ள வேல?” என்ற மகன் மூப்பனின் கேள்விக்கு புன்முறுவல்தான் பதிலாகக் கிடைக்கும்.
விடிந்து ஆரஞ்சு நிறத்தில் வானம் தெளியத் தொடங்கும் பொழுதில் இடுப்பில் குடுவையைக் கட்டிக் கொண்டு பனந்தோப்பு நோக்கி மூப்பன் கிளம்பும் போது, சொம்பு நிறைய நீச்சுத் தண்ணியை குடித்துவிட்டு காடு நோக்கி வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார் வீரய்யன் தாத்தா.
“பனி கொட்டுது. இந்த கருக்கல்ல காட்டுல என்ன வேல மாமா?” என்ற மருமகள் வடுகச்சி கேள்விக்கும் புன்னகை தான் பதிலாகக் கிடைக்கும். தனது வயதொத்த கிராமத்து பெரியவர்களிடம் மட்டும், “காட்டுக்குள்ள குயில் தோப்பு இருக்கு. நாள் தவறாம தோப்பை பார்த்து வந்தா தான் நாலு வாய் கஞ்சி இறங்கும்” என்பார் வீரய்யன்.
மூப்பன் இடுப்பு குடுவையில் பதனீர் சீவும் அருவா பெட்டி இருக்கும். ஒரு நாளைக்கு ஐம்பது பனைக்குக் குறையாமல் ஏறி இறங்கிவிடுவான் மூப்பன். மூப்பன் இறக்கும் பதனீரை பானையில் நிறைத்து நாச்சிவலசு கிராமம் முழுக்க விற்று வருவாள் வடுகச்சி. மிஞ்சும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி பரணில் சேமித்து வைத்து விற்று காசாக்கிவிடுவாள் கைகாரி வடுவச்சி.
பதனீர் ஊற்றிக் கொடுக்க பட்டை பிடிக்க அளவாக வெட்டிய பச்சை ஓலைகள் குடிசை வாசலில் கிடக்கும். ஓலைகளின் நரம்பில் ஒட்டி இருக்கும் சாமைகள் காற்றில் அசைவதைப் பார்த்தபடியே வளர்ந்தாள் தைலம்மா. நாச்சிவலசு மாதா கோவில் குருத்தோலை ஞாயிறுக்கும், புனித வெள்ளிக்கும் தைலம்மா குடிசையில் இருந்துதான் பனை ஓலை குருத்துக்கள் போகும். தைலம்மா வீட்டு பனை ஓலைப் பட்டையில் கஞ்சி ஊற்றித்தான் மாதா கோவில் திருவிழாவில் கிராமத்து மக்கள் குடிப்பார்கள். தைலம்மா வீட்டு குருத்தோலைகள் தங்க நிறத்தில் மின்னும்.
மேரி மாதாவும் குறைவில்லாத அறிவை தைலம்மாவுக்கு அருளினாள். ஆத்தாவுக்குத் துணையாக கருப்பட்டி காய்ச்ச விறகுக்காக ஓடித் திரியும் நேரம் போக மற்ற நேரங்களில் பாடப் புத்தகத்துக்குள் மூழ்கிவிடுவாள் தைலம்மா. சுக்குக் கருப்பட்டி, புட்டுக் கருப்பட்டி, ஓலைக் கருப்பட்டி என விதவிதமான கருப்பட்டிகளை விற்று தைலம்மாவை படிக்க வைத்தாள் வடுகச்சி. குடிசைக்குள் நீருற்றுப் பெட்டி, பனையோலைப் பெட்டி, பனைப்பாய், கடகம் என விதவிதமான பனை ஓலையில் முடையப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக்கும்.
நாளெல்லாம் மூப்பனும், வடுகச்சியும் உழைத்தும் கைக்கும் வாய்க்கும் சரியாகத்தான் இருந்தது. இதெல்லாம் தெரியாமல் சீவப்பட்ட பாளையில் இருந்து பால் சுரப்பது போல தைலம்மா அறிவு சுரந்து கொண்டிருந்தது. பள்ளி இறுதி வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த தைலம்மாவுக்க நகரத்து மருத்துவக் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிட்டது. கல்லூரி படிப்புக்கு கட்ட வேண்டிய தொகையைக் கேட்டு மூச்சே நின்றுவிட்டது மூப்பனுக்கும், வடுகச்சிக்கும். உடைமர முள் தைத்த வேதனையோடு விட்டத்தை வெறித்து நின்ற மகனையும், மருமகளையும் தனது வழக்கமான புன்னகையோடு பார்த்தார் வீரய்யன் தாத்தா.
குயில் தோப்பு ரகசியத்தை அன்றுதான் உடைத்தார் தாத்தா. தைலம்மா பிறந்த போது காட்டுப் பகுதி நிலத்தில் பத்து மாமரம் நட்டு வளர்க்க ஆரம்பித்து இருந்தார் வீரய்யன் தாத்தா. மூன்று ஆண்டுகளில் பூத்தும் காய்த்தும் பத்து மரங்களும் தைலம்மாவோடு வளர்ந்து பெரிய தோப்பாக மாறியிருந்தது. வருஷ வருமானத்தை ரகசியமாக சேமித்து வைத்திருந்தார் வீரய்யன் தாத்தா.
பேத்தியை மருத்துவ கல்லூரியில் சேர்க்க கொஞ்சமும் மலைக்கவில்லை வீரய்யன் தாத்தா. மேரி மாதா அருளும், குயில் தோப்பு மாம்பழ வாடையும் அவருக்குள் தித்திப்பாக நிறைந்து இருந்தது.
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு
ஏழையானலும் வயதானாலும் உழைக்க தயங்காத வீரய்யன் தாத்தா, அவரது சேமிப்பு தன் பேத்தியின் படிப்புக்கு உதவுவது பாராட்டுக்குரியது. குடும்பம் சமூகம் சிறப்பாக அமைய, கல்வி வழி சிறப்பதே நன்று!
நன்றி
சொல்லும் கதைக்கேற்ப கையாளப்படும் மொழியால், அநாவசிய விளக்கங்களைக் கழித்து நேர்க்கோட்டில் கதை வந்து முடிந்தது சிறப்பு.
நன்றி