18 July 2024

  பெரிதாக எந்தச் சிந்தனையும் திட்டமிடலுமின்றியே அந்த நம்பரை குறித்து வைத்து, சின்ன க்யூரியாசிட்டியில் அழைப்பு விடுத்தான். பாடகி வசுந்தரா தாஸ் பேசுவது போல் ஒரு குரல் ‘ஹலோ’என்றது. இது கோ-இன்ஸிடென்டா?, அதிர்ஷ்டமா? என்று தெரியவில்லை. வசுந்தரா தாஸின் இனிப்பான, வெண்ணெயில் வழுக்கும் செர்ரி போன்ற குரல் மீது ஒரு கிறக்கம் உண்டு திவாகருக்கு. ஷக்கலக்க பேபி-யில் விழுந்தவன்தான். ஊரே ஷ்ரேயா கோஷல் பின்னால் போய்க்கொண்டிருந்த போதும்; அதற்குப் பிறகு எத்தனையோ பேர் வந்த போதும் இவன் தனி ரோட்டில்  ஒடிக்கொண்டிருந்தான்.’ஸ்வீட்டான குரல்னா அது வசுந்தரா குரல்தான்’ என்பதில் இவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. பேசினாலும் பாடினாலும் அதே இனிமை என்று கண்கள் மூடி சிலாகிப்பான். மூளையின் ஒரு பகுதியை வசுந்தரா குரலை மட்டுமே பதித்து வைக்க பயன்படுத்திக் கொண்டான். ஷக்கலக்க பேபி பாட்டின் முடிவில் இசை நின்றப் பிறகு, “ஏ போய்யா” என்று வலிக்காமல் சொல்வதே இசைதான் என்று நண்பர்களுடன் வாதிடுவான். பத்திக்கிச்சு பாடலில்  “ஓ. ‌. கண்ணே” என்கையில் மூச்சு வாங்கி ஹஸ்கியாகவும்; ஹஸ்கியிலேயே சத்தமாகவும் உச்சரிக்கும் போதே ஏறிய போதை இறங்குவதற்கு நீண்ட நேரமாவதாகக் கூறியிருக்கிறான்.  அந்த  “ஓ… கண்ணே”  மட்டும் ரெகார்ட் செய்து தனியே வைத்து இருக்கிறான்.  நண்பர்கள் மனது சரியில்லை என சிகரெட், ஆல்கஹாலைத் தேடிப் போகையில் திவாகர் அந்த ரெகார்டை ஓட விட்டு, ஹெட் செட்டுடன் உட்கார்ந்து விடுவான். நண்பர்களுக்கு எங்கே வசுந்தரா தாஸ் குரல் கேட்டாலும் இவன் நினைவுதான் வரும். அவ்வளவு பேசியிருக்கிறான். அதனாலேயோ என்னவோ ஃபோன் குரல் வசுந்தரா தாஸின் குரலை நெருங்கியக் குரலாக ஒலித்தவுடன் அதே குரலாகவே ஒலித்தது. அவனைப் பொறுத்தவரை இது அவனது லக். ’குரலை அள்ளிச் சாப்பிட ஆசை வருமா! எனக்கு வசுந்தரா தாஸ் குரலை அப்படியே அள்ளிச் சாப்பிட  ஆசை வரும்’ என்பான் நண்பர்களிடம்… அவர்கள் இப்படி ஒரு பைத்தியமா என்பது போல் பார்ப்பர்.

     திரும்பவும் அதே குரல்தானா என்பதை உறுதி செயதப்பின், ”இந்த எண் உங்களுடையதா?” என்றான்.

”எஸ்! உங்களுக்கு என்ன வேணும்?” என்றது மறுமுனை

“நாந்தாங்க திவாகர்.”

“ஓ ….நீங்களா ?”

அடுத்த வார்ததை பேசுமுன் திவாகருக்கு மனம் சுணங்கியது. நாம் பேசுவது பிடிக்கவில்லையோ என்று நினைக்க வைத்தது இந்த’ ஓ…’ எனும் நெளிந்த ஒற்றை வார்த்தை.  ஆனால், அடுத்த நிமிடமே உற்சாகம் ஊற்றெடுத்தது மறுமுனையின் குழைவான கேள்வியில். 

“இன்னைக்குததான் உங்களுக்கு பேச தோணுச்சா” என்றது வசுந்தரா தாஸ் குரல்.

“ஹி ஹி இல்லைங்க. நீங்க பேசுவீங்களோ இல்லையோனுதான்”

“அப்படி இல்லை திவாகர்; நான் எல்லார்ட்டயும் பேச மாட்டேங்கிறது உண்மைதான். ஆனா எல்லாரும் ஒரே மாறி இல்லைல?”

“என்னங்க சொல்றீங்க? ஒரே குழப்பமா இருக்கே “

”சரி அத விடுங்க,அதே ஊர்தானா?அதே பேர்தானா? வேறா?” என்றது வசுந்தரா தாஸ் குரல்.

“ஏங்க நாந்தான் அத கேட்கணும். நானெல்லாம் நிஜ பேர், நிஜ ஊர்தான் போட்டுருக்கேன்”.

 “ஹ.. ஹ..” வசுந்தரா தாஸ் குரல் வீணை மீட்டியது போல் சிரித்தது.

“ஆமா என் பேர கேட்கவேயில்லையே”

“சொல்லுங்க ! சொல்லுங்க !! அது ஒரிஜினல் பேர் இல்லன்னு மட்டும் தெரிஞ்சது”

“ம்…என் பேர் அஜிதா. அஜினு கூப்பிடுவாங்க. ,பி ஃபார்ம் படிச்சுட்டு இருக்கேன்; 3வது வருஷம். ஆமா நீங்க என்ன படிச்சுருக்கீங்க திவாகர்?”

“அதும் புரொஃபைல்ல  போட்டுருக்கறதுதாங்க.M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுருக்கேன். நந்தனத்துல ஒரு கம்பெனில குப்பைக்கொட்டிட்டு இருக்கேன். ஊர் சேலம்; இங்கச் செனனைல 3 பேரோட சேர்ந்து ரூம் எடுத்து தங்கியிருக்கேன்”.

தொடர்ந்த பேச்சு, சில விசாரிப்புகளுக்குப்பின் அஜிதாவிற்கு இவனைப் பிடித்தது. முகநூலில் 2 வருடமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதுதான் முதன்முதலில் போனில் பேசிக்கொள்கிறார்கள்.

திவாகருக்கும் அவள் மேல் நல்அபிமானம் இருந்தது. பேசுகையில் அது உறுதியானது. இருவரும் ஃபோட்டோ வைக்கவில்லை; ப்ரொஃபைலில் இயற்கை காட்சிகளும்  குழந்தைகள் படமுமாய் மாறி மாறி வைப்பார்கள். அதனால், முகம் தெரியாது.. முதனமுதலில் பேசுவதினால் மனம் தன்னை அறியாமல் அக்குரலுக்குரிய உருவத்தை வரையத்தொடங்கியது. அஜிதா இவனது குரல் தன் பள்ளிப்பருவ ஆசிரியர் ஒருவரின் குரலுடன் ஒததிருப்பதாய்க் கூறினாள். அடுத்தடுத்து பலமுறைப் பேசியபோதும் நேரில் சந்திப்பது பற்றி பேசிக்கொள்ளவில்லை இருவரும். படிப்பு,வேலை, சினிமா, நண்பர்கள் என பேசிக்கொண்டனர். திவாகர் நகைச்சுவையாய் பேசி அவளை நிறையச் சிரிக்க வைத்தான் .

அன்று மாலை ஜிம் சென்றுவிட்டு ரூமிற்குள் நுழைந்தவனுக்கு, கல்லூரி நண்பன் வில்சன் அறையில் இருப்பது கண்டவுடன் சந்தோஷம் பூத்தது. ஆச்சரியமுடன்,

“எங்கேடா இங்க ? “

“அடேய் … நான் இன்னைக்கு உன்னை பாக்க வரேனு சொன்னது கூட நினைப்பில்லையா உனக்கு ? அந்தளவுக்கு சாட்டிங்கா?” என்று கண்ணடித்தான். திவாகர் வழிந்து சிரித்துக்கொண்டே. 

“இருடா.. அஞ்சு நிமிஷத்துல ரெடியாகி வந்துடறேன்” என போனவன்; பத்து நிமிடத்தில் ரெடியாகி எதிரில் நின்றான். மற்ற நண்பர்களிடம் சொல்லிவிட்டு, காஃபி ஷாப் நோக்கி பைக்கில் விரைந்தார்கள்..

“மச்சி! அப்புறம் என்னடா ட்ரீட்டெல்லாம் கிடையாதா?”

“எதுக்குடா?”

“ம் நீ குளிச்சதுக்கு. கேட்கறான் பாரு கேள்விய டேய்! நீ அஜிதா கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கியே செட்  ஆகிருக்குல அதுக்குதான்”.

“செட் ஆச்சுனுலாம் சொல்ல முடியாது மச்சி. பிடிச்சிருக்கு. பொதுவான விஷயங்களைதான் பேசிட்டு இருக்கோம்” 

“ஏன்டா உலகத்தில் ஆம்பளையே இல்லையா? ஏன் உங்கிட்ட மட்டும்  பேசிக்கிட்டுருக்கு அந்தப் பொண்ணு. அப்ப அதானே?”

காஃபி ஷாப்பில் ஒரே டேபிளில்  இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர் . பிளாக் காஃபி  ஆர்டர் செய்து விட்டு கேட்டான் திவாகர், 

“ஏன்டா இதுலாம் சரி வரும்கிறியா?”

“நேரில் பாக்குறப்ப என்ன பேசினாடா ?”

” நேர்லயா !!? இன்னும் பாத்துக்கிட்டதே இல்லியே”

“த்தூ. … ” 

”இந்தக் காலத்தில்  இப்படியாடா” என்று  தலையில் அடித்துக் கொண்டான். 

“என்னதான் செய்யச் சொல்ற. .நாங்க அது பத்திலாம் யோசிக்கவே இல்லை பேசிக்கவும் இல்லை. ஆனா, நைட்டு படுக்கறப்ப அவகிட்ட பேசினது மனசுல ஓடும். அப்ப மட்டும் அந்த குரலுக்கான உருவம் இப்படி இருக்குமானு கற்பனை செய்துட்டே தூங்கிடுவேன். ஷாப்பிங் மால், கல்யாணம் இப்படிக் கூட்டம் கூடும் இடங்களில் எல்லாம் என்னைத் தாண்டி போற பொண்ணுங்க சாயல் அஜிதாவுக்கு  இருக்குமா, இப்படி  இருக்குமா, அப்படி  இருக்குமானு நினைச்சுட்டு இருப்பேன் ” .

“என்னடா கதை சொல்லிட்டு இருக்க…ம் அப்புறம்..?” அந்த ’ம்ம்’- ஐ இரண்டு சென்டிமீட்டருக்கு நீட்டித்துக் கேட்டு, நக்கலாகச் சிரித்தான் வில்சன்.

“ஙே. ..”

“அப்புறம் என்ன அவ குரல் மட்டும் ரீங்காரம் உடுதா மனசுல?

அட வெண்ணெ போ போய் முதல எப்ப மீட் பண்றதுன்னு பேசு. அப்புறம் என்கிட்ட பேசு போடா” என எழுந்து கொண்டான்.  ”அடுத்த வாரம் பாக்கலாம்டா பை “.

 

திவாகர் பதிலுக்கு பை சொல்லி எழுந்தான். வில்சன் பேசியது பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இவன் அறைக்குள் நுழையவும் மொபைல் அழைக்கவும் சரியாக இருந்தது.  “அடடா ரூமிலேயே வச்சிட்டு போய்ட்டமே” பாய்ந்து சென்று  எடுத்தான். ’அவளேதான்  3 மிஸ்டு கால்ஸ். இன்னைக்கு என்ன இத்தனை அழைப்பு! இப்படிச் செய்ய மாட்டாளே’ அழைப்பை ஏற்க விரல் கொண்டு போகையில் அழைப்பு துண்டிப்பானது.. இவன் அழைப்பு விடுத்தான். மறுமுனையில் அஜிதா செல்லமாகக் கோபித்தாள். 

“எனன திவாகர் இது, ஆர்வமா கால்செய்யறப்போ இப்படி  எடுக்காம  எங்க போய்ட்டிங்க?”

“அஜிதா நான் பக்கத்தில் இருக்கிற காஃபி ஷாப் போய்ட்டேங்க. ஃபிரண்ட் வந்திருந்தான்”

“சரி சரி”

“நீங்க எதுக்காக கால் செஞ்சீங்க அஜிதா; எனி ஹேப்பி நியூஸ் ?”

“ஆமாம் ஒரு சர்ப்ரைஸ்”

”என்ன?”

“நாம மீட் பண்ணப் போறோம் நாளைக்கு. உங்க ஏரியாவுல நீங்க இப்ப போன அதே காஃபி ஷாப்பில்”

திவாகருக்கு ’ச்சக்’ சென்று குதூகலம் மனதில் உட்கார்ந்து கொண்டது. “அட ரொம்ப சந்தோஷம்.சர்ப்ரைஸ் நியூஸ்! நீங்க என்ன கலர் டிரஸ் போட்டு வருவீங்க” 

“நான்  ஆரஞ்ச் கலர் ஷால்ங்க மறந்துடாதீங்க. நீங்க?”

“நான் உங்களை கண்டுபிடிச்சு  பேசறேன். நேர்ல பாத்துக்குங்க” சிரித்தான். அவளும் சிரித்தவாறே போனை வைத்தாள். 

 ‘என்னடா இது! ’ ஆச்சரியப் பட்டவனாய் உடனே, வில்சனுக்கு அழைப்பு விடுத்து செய்தியைக் கூறினான். 

“நீயா இந்த மீட்டிங்  ஏற்பாடு பண்ணுவனு அவ வெயிட் செய்துருப்பா… இந்த மாக்கானுக்கு புரியாதுனு; அவளே ஏற்பாடு பண்ணிட்டா போல” என கிண்டல் செய்தான்.  இவனும் ‘அப்படித்தான் போல’ என்று சிரித்தான்.

 “டேய் மச்சி மீட்டிங் முடிஞ்ச உடனே  எனக்கு கால் பண்ணனும் மறந்துடாத” என்று சொல்லி போனை வைத்தான்.  ‘நேரம் கேட்க மறந்துட்டமே’ என்று நினைத்துத் திரும்ப மொபைலை எடுத்தான். வாட்ஸப் மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘ஆரஞ்ச்’ என்று ஒரு மெசேஜ், அடுத்து ‘ஈவ்னிங் 5.30’  என்று ஒரு மெசேஜ். அடுத்து மூ‌ன்று ஸ்மைலி.

இவன் ‘k k’ என்று அனுப்பி, பதிலுக்கு ஆறு ஸ்மைலி போட்டு; நான்கைந்து ஆர்ட்டின்களை அனுப்பி வைத்தான். அலைபேசியின் பாடல் வரிசையில் இருந்து ‘தீபாவளி தீபாவளி நீதான்டி’ என்ற வசுந்தரா தாஸின் பாடலை வழிய விட்டான். 

5.30 மணிக்கு காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தான் திவாகர். அதிக சிரமமிருக்கவில்லை  இருந்த சில டேபிள்களில் அவளை எளிதாகக் கண்டு பிடித்தான். அவள் ஆரஞ்ச் கலர் துப்பட்டாவுடன் முதுகுக் காட்டி ஒரு ஜீன்ஸ் பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். இவன் முகம் பார்க்கும் ஆவலில் இரண்டே எட்டில் விருட்டென சென்று அருகில் நின்றான்.  “ஹாய் அஜிதா!” அஜிதாவை விட  அஜி தோழி மிக ஆச்சரியப்பட்டு பார்த்தாள்.  தன்னைப் பற்றி பேசியிருப்பார்கள் என்பது தெரிந்தது. சந்தோஷமாக திரும்பிக் கை கொடுத்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்.  தான் உன்னிப்பாகக் கவனிப்பது தெரிந்து விடக்கூடாது என்ற கவனத்துடன் இருவரும் பார்த்துக் கொண்டனர். காஃபி ஆர்டர் செய்கையில் கவனித்தான் போனில் பேசிய  அதே வசுந்தரா தாஸ் குரல். காஃபிக்கு பின் அருகிலிருக்கும் பார்க்கிற்குச் சென்றனர். அஜிதாவின் தோழி திவாகரின ஃபேஸ்புக்  புரொஃபைல் பெயரைக் கேட்டு வாங்கி திவாகரின் ஃபோட்டோவைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட நாள் பழகிய நண்பர்களுக்கேயுரிய  அந்நியோன்யத்துடன் பேசிக்கொண்டனர்.

சந்திப்பு முடித்து ரூமிற்கு வர திவாகருக்கு ஏழு மணியாயிற்று.  அறைக்கு யாரும் திரும்பியிக்கவில்லை. தனியே படுத்து நடந்தவற்றை அசை போட்டுக் கொண்டிருந்தான். மனம் வெறுமையைத் தழுவியது. ஏன்??? திரும்ப எவ்வித சமாதானத்திற்கும் இடமின்றி அஜிதா குறித்து சிந்தித்தான்.  அவளின் குரலுக்கு இவன் நினைத்து இருந்த உருவம் இது இல்லை…

மனதை லேசாக்க, ப்ளே லிஸ்டை க்ளிக செய்தான். 

“ரொம்ப இயல்பா

நடப்பவன் வேண்டும்

வெளிப் படையாய் இருப்பவன் வேண்டும்” 

என்று வசுந்தரா பாடினார். உடும்புப் பிடியாக மனம் அதையே நினைத்தது. எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாகத்தானே கிளம்பினோம். ஆனால், ஏன் இந்த ஏமாற்ற எண்ணம் சுழன்றடிக்கிறது. என்னையுமறியாமல் மனம் குரலுக்கான உருவத்தை,  சிணுங்கலை,  கொஞ்சலை கற்பனைச் செய்து, எதிர் பார்த்து இருக்கிறது. எல்லோருக்குள்ளும் இதுதான் நிகழுமா? இல்லை, எனக்குள் மட்டும் புது பழக்கம் புகுந்து கொண்டுள்ளதா? 

ஏன்  மனம் ஏற்க மறுக்கிறது? அப்படி  ஒன்றும் அவள் இச்சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிற அழகு இலக்கணத்திலிருந்து முற்றும் விலகி விடவில்லைதான். ஆனால் நான் எதிர் பார்ப்பதுதான் என்ன? அந்தக்  குரலின் உருவம் எப்படி இருக்கும் என்று மனம் கற்பனை செய்து கலங்குவது ஏன்? தலையை, கையில் பிடித்துக் கொண்டான். சிந்தனையின் சிக்கலில் தலை சூடேறியது.  அஜிதாவை வாழ்க்கைத் துணையாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்த மனம் இன்று நிலைத் தடுமாறுகிறது . குழப்பத்தோடு வில்சனுக்கு அழைப்பு விடுத்தான். மறுமுனையில் பேசிய வில்சனிடம் அனைத்தும் ஒப்புவித்தான்.  

வில்சன், “விடுடா உனக்கு செட்  ஆகாது. இவ்வளவு குழப்பத்தோடு நீ வாழ்க்கையை ஆரம்பிக்கிறதா?”

என்று இவனது கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். திவாகருக்கு மனசு வறண்டது.  காதல் ஏக்கம் பெருக்கெடுத்தது. தன் மேலேயே வெறுப்பு வந்தது  இரக்கமும் சுரந்தது. நிலை கொள்ளாமல் தவித்தான். 

மொபைல்  திரையை இடக்கை கட்டைவிரலால் அசுவாரசியமாக மேல்நோக்கி அசைத்துக் கொண்டிருந்தான். காணொளிக் காட்சிகள் மாறிமாறி தோன்றி மறைந்து கொணாடிருந்தன. அதில் இலயிக்க முடியவில்லை.  மனவறட்சி ! ஏதேதோ சிந்தனை அலைக்கழித்தது. இருட்டில் பாலைமணலில் நிற்பது போலிருந்தது. அலுத்து உச் கொட்டியவாறு மொபைல்  திரையை அணையச்செய்கையில் அந்த ஜீன்ஸ் பெண்ணின் முகம் ஒளிர்ந்தது. ப்ளே லிஸ்ட் தொடர்ந்தது. 

“தண்ணீரில் சிற்பம் நீ

கோடைக்கால தாகம் நான்

உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..”


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Siraj
Siraj
1 year ago

ஊர் சேலம்… வசுன்த்ரா குரல் பிடிக்கும்.. என்னடா இது நமக்கு மேட்ச் ஆகுது 😜

சிவரஞ்சனி
சிவரஞ்சனி
1 year ago

இந்தக் கதையின் முடிவை வேறு விதமாக, அதாவது.. அந்த பெண் இவனை நிராகரிப்பது போலிருந்தால் நல்லா இருந்திருக்கும். எழுதப்பட்ட முடிவும் ஒகே. ஒரு வாசகன் ஆவல் இது. சாய்ஸ் ஏன் எப்பவும் ஆண் பாத்திரத்திற்கு இருக்கணும்ப்!

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x