18 July 2024

லைதளத்தில் கண்ணகியின் பதிவைப் படிக்கப் படிக்க பாமாவிற்கு மனதில் காட்சிகள் ஓடியிருந்தன. மறக்கவில்லை. வாசித்துப் பல ஆண்டுகள் கடந்தும் கதையின் காட்சிகள் இன்றும் நினைவில் இருந்தன. அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். கதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று எத்தனையோ எழுதி விட்டாள். பொது நிகழ்வொன்றில்

இயக்குநர் தட்சிணாமூர்த்தியின் உதவியாளர் இவளுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்கையில் கையோடு இவளது சமீப நாவலை எடுத்துப் போனார். அதனை த.மூ வாசித்துவிட்டு உடனடியாக பாமாவை நேரில் சந்திக்க விருப்பம் கொண்டார். அப்போது த.மூ இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களையும் ஒரு ஹிட் படத்தையும் கொடுத்திருந்த இயக்குநர். தயாரிப்பாளர்களின் விருப்பப் பட்டியலில் முன்வரிசையில் இருந்தார். வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர். பாமாவிற்கு மகிழ்வும் ஆச்சரியமும் ஏற்பட்டது. இவ்வளவு நாட்கள் எழுதிக் கொண்டிருந்ததில் பெரிதாக எதுவும் சம்பாதித்து விடவில்லை. இப்போது பட வாய்ப்பு எட்டிப் பார்க்கிறது. பொருளாதார ரீதியாக உயர்வு. வாசிப்போரிடையே மட்டும் அறியப்பட்ட நிலையிலிருந்து பெரும்பாலோரிடையே

பிரபல்யமான நபராக ஆகலாம். மனதில் ஓடியதைப் பிரதிபலிப்பது போல கணவர், “இது நல்ல சான்ஸ்ப்பா மிஸ் பண்ணிடாத” என்றார்.

குறிப்பிட்ட ஹோட்டலில் பாமா காத்திருந்தாள். நல்ல கைத்தறி புடவை உடுத்தி எளிமையாகவும் சுத்தமாகவும் சென்றிருந்தாள். முகத்தில் பெருந்தன்மையான சிநேகப் புன்னகை இருந்தது.

தட்சிணாமூர்த்தி வந்தார். எதிர் பார்த்தது போலவே சில சம்பிரதாய வார்த்தைகளுக்குப் பிறகு சினிமா வியாபாரம் புகழ் குறித்துப் பேசினார். இணைந்து பணியாற்ற விருப்பம் என்று பாமா மகிழ்ச்சியுடன் கூறிவிட்டாள். இதனைக் கொண்டாடும் வகையில் த.மூவுடன் வந்திருந்த அசோசியேட் நபர் இனிப்பு ஆர்டர் செய்தார். சிறிதளவு சாப்பிட்டாள். வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லி ஒரு பார்சலைக் கொடுத்துவிட்டு காரில் பறந்தார். ஆட்டோவில் வீடு திரும்புகையில் பாமாவிற்கு பறப்பது போலிருந்தது. படத்தில் வசனம் எழுத ஒப்பந்தம் ஆகியிருக்கிறோம். பேர் பணம் புகழ்!

சமாதானப்புறா என்று படத்திற்குத் தலைப்பு வைத்தார்கள். ஆறுமாதங்கள் வேலை நடந்தது. படத்திற்கு பாமாவின் பங்கு அளப்பரியது என வாய்க்கு வாய் தட்சிணாமூர்த்தி பாராட்டினார். பாமா தனது வேலையைத்தான் செய்ததாகப் புன்னகை முகத்துடன் கூறினாள். முன்னோட்டக் காட்சியில் விநியோகஸ்தர்கள் வெற்றியை உறுதி செய்தார்கள். நாயகன் ஓடிவந்து இயக்குநரைக் கட்டித் தழுவிக் கொண்டான். இயக்குநர் பக்கத்தில் இருந்த பாமாவை உயர்த்திப் பேசினார். நாயகன் மரியாதையுடன் கை கொடுத்தான். பெருமையாயிருந்தது. வீட்டுக்குச் சென்றவுடன் மகனிடம் கூறினாள். துள்ளிக் குதித்தான். எதெதுவோ பேசினான். நட்சத்திர அந்தஸ்து!

சத்யம் தியேட்டரில் குடும்பத்துடன் சென்று சமாதானப் புறா பார்த்தாள். வசனங்களுக்காகக் கை தட்டினார்கள் விசிலடித்தார்கள். வாழ்நாளில் முதன்முறையாகத் திரைப்படம் பார்ப்பது போல உணர்ந்தாள்.

பிள்ளைகளின் நண்பர்கள், உறவினர்கள் போன் செய்து வாழ்த்தினார்கள். படம் மாபெரும் வெற்றி கண்டது. அடுத்தடுத்து சில நிர்வாகிகள் இயக்குநர்கள் தொடர்பு கொண்டார்கள். இணைந்து வேலை செய்வோம் என்றார்கள்.

திரைப்பட உலகில் பரவலாக அறியப்பட்ட நபராக ஆனாள். தொடர்ந்து பரபரப்பாக இயங்கும் வகையில் இல்லையென்றாலும் அவ்வப்போது வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. பெரிய நடிகர்களின் நட்பு வட்டத்திற்குள் வந்தாள். நேர்காணல்கள், மேடைப் பேச்சுகள், பரிந்துரைகள் என்று இயங்கிக் கொண்டிருந்தாள். எழுதிய கதைகளை விலை கொடுத்து வாங்கி இணையத் தொடர்கள், இணையத் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று எடுத்தார்கள். தொடர்ந்து எழுதினாள். குடும்பம் இவளுக்கென்று தனியே பதிப்பகம் ஆரம்பித்து விற்பனையில் ஈடுபட்டது.

இயக்குநர் த.மூ ஒரே சூத்திரத்தை வேறு வேறு வண்ணங்களில் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார். அதுதான் வணிக ரீதியிலான வெற்றிக்கு வழி என்று கூறினார்கள். பிறகு அவர் பாமாவுடன் இணையவில்லை. புதிய இயக்குநர்கள் அணுகினார்கள். இயக்குநர் குருநாதன் தன் முதல் பட வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது நடிகர் சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. அலட்டல் இல்லாத யதார்த்தமான மனிதன். குருநாதனின் ஆர்வம் கொப்பளிக்கும் கண்களை நடிகர் சந்திரனுக்குப் பிடித்துப் போனது. பழக்கத்தில் திறமையானவன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருப்பவன் என்று நினைத்தான். “நல்ல கதை கிடைச்சா சொல்லு வேலை பாக்கலாம்” என்று கூறினான். குருநாதனுக்கு சந்திரனின் அந்த நம்பிக்கை உரமானது. இரண்டு மூன்று கதைகளைக் கூறி ஒன்று உறுதியானது. சந்திரனின் பரிந்துரையின் பேரில் தயாரிப்பாளர் கிடைத்தார். கதையை மறுமுறை முழுவதும் கேட்ட தயாரிப்பாளருக்கு எதுவோ நெருட மனது ஒப்பவில்லை. வேறு கதையைக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டார். குருநாதன் சந்திரனிடம் பேசினான். சந்திரன் பொறுமையாக இருக்குமாறு சொன்னான்.

பிறகொரு நாள் விடியற்காலையில் உடனடியாக வருமாறு சந்திரனிடமிருந்து அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாகப் பல் துலக்கி முகம் மட்டும் கழுவிக் கொண்டு ஆட்டோ பிடித்து கலைந்த தலையுடன் போய் நின்றான். கைலியுடன் வந்து விட்டோமென்பதே அப்போதுதான் உணர்ந்தான். சந்திரன் பாமாவின் கதைகளை எடுத்துப் போட்டு வாசிக்கச் சொன்னான். இரண்டு நாட்கள் கழித்து வந்து திரைமொழிக்கு ஏற்றார் போல் இன்னும் நெகிழ்வானதாக வேண்டும். “புதுசா எழுதச் சொல்லி கேட்கலாம் ஸார்” என்றான். சந்திரனுக்கும் அந்த ஆலோசனை பிடித்திருந்தது. அமைதியாகக் கேட்டுக் கொண்டான். இரண்டு பக்கங்களுக்கு எழுதினால் போதும் நாம் விவரித்து திரைக்கேற்றவாறு காட்சி செய்து விடலாம் என்றான் குருநாதன்.

பாமாவிற்கு தயாரிப்பாளர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. நேரில் சந்திக்க வேண்டும் என்றார்கள். வந்தவளிடம் பரபரப்பாகவும் அதேசமயம் நெகிழ்வாகவும் இருக்கும்படி ஒரு கதையை எழுதித் தருமாறு கேட்டார்கள். மேலும் சில விண்ணப்பங்களை வெற்றிக்கென முன்வைத்தார்கள். அப்போதுதான் இவர்கள் கேட்கும் அத்தனை அம்சங்களும் உள்ளடங்கிய கண்ணகியின் பதிவு மின்னலடித்தது. அதனையே துருப்பாகப் பிடித்து ஒரு கதையை எழுதிக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து சரி ஒரு வாரத்தில் தருகிறேன் என்று உற்சாகமாக வீடு வந்தாள். வேறு வேறு கூட்டங்கள், நாவல் வேலை, பதிப்பக வேலையென்று கதையை எழுத முடியாமல் போயிற்று. ஒரு வாரம் கழித்து குருநாதன் போன் செய்து பேசினான். சந்திரனின் தேதிகளை வாங்கி வைத்திருப்பதாகவும் விரைவில் படத்தின் வேலையைத் துவக்க வேண்டும் என்று‌ தனது நெருக்கடியான நிலையைக் கூறினான். கதை வந்தவுடனேயே பணம் உடனடியாகக் கைக்கு வந்து விடும் என்றான். பாமா இந்த வாரத்தில் தந்து விடுவதாக உறுதியளித்தாள்.

கண்ணகியின் பதிவைத் தேடியெடுத்து மீண்டும் வாசித்தாள். கதையைப் போன்றே எழுதப்பட்டிருந்தது. இறுதியாக உண்மைச் சம்பவம் என்று குறிப்பு இருந்தது ‌. பாமாவிற்கு இதைச் செய்யலாமா வேண்டாமா என்று மனது ஊசலாட்டம் போட்டது. இந்த ப்ராஜக்ட்டிலிருந்து வெளியேறி விடலாமாவென நினைத்தாள். அப்படிச் செய்தால் அடுத்த வாய்ப்பு வராது நம்பகத் தன்மை கெடும். இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. தயார் செய்து விடலாமா…

என்ன செய்யலாம்? திடுக்கென்று ஒரு உணர்வு மேலெழுந்து அமுக்கியது. தலைவலித்தது. உடலின் பூனைமயிர்கள் நடுங்குவது போல அதிர்வு ஏற்பட்டது. மனதில் ஒரு குரல் கேட்டது ‘காசு முக்கியமில்லையா’.

இயக்குநரை அழைத்து கண்ணகியின் பதிவைக் குறுக்கி நாலைந்து வரி கதையாகக் கூறினாள். அவன் அவனது நடிகர் உள்ளிட்ட தனது குழுவுடன் பேசினான். அனைவருக்கும் திருப்தி வந்தது.. தகவலை பாமாவிடம் கூறி முழுதும் எழுதி முடித்துத் தருமாறு கேட்டான். வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்தில் உள்ள பூங்கா வரை போய் வந்தாள். வீட்டுக்கு வந்ததும் இருப்புக் கொள்ளவில்லை. அனிச்சையாகத் திரும்ப எழுந்து பூங்காவிற்குப் போய் கிராணைட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். எப்படி… கண்ணகியின் பதிவை அப்படியே பெயரை மாற்றி அனுப்பி விடுவது‌‌.. போன வருடம் தர்மம் என்ற தலைப்பில் பேசிய மேடைப்பேச்சு பலதரப்பிலும் இருந்து பாராட்டுப் பெற்றது நினைவுக்கு வந்தது. திண்டுக்கல் பகுதியிலிருந்து மானஷா எனும் பள்ளிச் சிறுமி போன் செய்து யூடியூபில் தர்மம் பேச்சைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்ததாகப் பேசினாள்.” மேடம் நீங்க தான் எனக்கு குரு உங்களை மாதிரி நான் வரணும்” என்ற கீச் குரலின் உற்சாகம் இப்பொழுதும் நெஞ்சில் இருக்கிறது.

ஒரு முடிவுடன் வீட்டுக்குச் சென்று படுத்தாள். விடிந்ததும் கடகடவென வழக்கமான வேலைகளை முடித்து வாகனத்தில் குருமூர்த்தி அறைக்குச் சென்றாள். குருமூர்த்தி வரவேற்று அமர வைத்தான். காலையில் கதை தயாராகிவிட்டது என்று செய்தி அனுப்பியிருந்தாள். அதனால் அவன் வாசிக்கத் தயாராக இருக்கும் தொனியில் தோற்றம் அளித்தான். கையில் வைத்திருந்த பையிலிருந்து வெள்ளை பேப்பரில் பிரதி எடுக்கப்பட்டிருந்த கண்ணகியின் பதிவைக் கொடுத்தாள். முகத்தில் பெருந்தன்மையான சிநேகப் புன்னகை இருந்தது. குருமூர்த்தி வலக்கையில் வாங்கிப் பக்கங்களைப் புரட்டினான். கதையின் இறுதியில் நீல மையில் எல். பாமா என்ற அழகான கையெழுத்து ஈரமாயிருந்தது.


 

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x