3 December 2024
kaviji6

நீண்ட நாள் ஆசை. இப்படியெல்லாம் ஆசை வருமான்னு தெரியல. ஆனால் ஆசைன்னு வந்துட்டா அதுல எல்லா ஆசையும் அடங்கும் தான.

நகுலன் நல்லவனா கெட்டவனா தெரியாது. ஆனால் நடுவில் நின்று ஆறு கடக்கும் தொங்கு பாலம் என்பது அவனைப் பற்றி அவனே புரிந்து கொண்டது. கட்டடம் கட்டும் ஆட்கள் அந்த கட்டடங்களுக்கு அருகிலேயே சிறு சிறு தகர வீடுகள் செய்து அதில் குடியிருப்பது இயல்பு தானே. ஆனால் அந்த இயல்பில் ஒரு நாள் வாழ்வு எப்படி இருக்கும் என்று ஒரு யோசனை. நாலைந்து நாட்களாக கவனித்து… ஒரு கிடுகிடு அப்பார்ட்மென்ட்டை கண்டடைந்து விட்டான். உள்ளே போயிருந்த கட்டிங் வேறு… பயங்கர தைரியத்தை தந்திருந்தது.

முள் செடிகளுக்கு இடையே பதுங்கி நின்று கவனித்ததில்… மஞ்சள் குண்டு பல்பு எரிய வரிசையாய் பெட்டி பெட்டியாய் இருந்த தகர வீடுகள் தகதகத்து கொண்டிருந்தன. வாசலில் விறகடுப்பு எரிய… வேகும் சோற்றில் பற்கள் காட்டும் முன்னிரவு. பசிக்கு காத்திருத்தல் வேறு. பசியோடு காத்திருத்தல் வேறு. வேர் பிடித்து அசைக்கும் இரண்டாம் வரிக்கு தான் ஒவ்வொரு வீடும் காத்திருந்தது. குளிப்போர் ஓரமாய் கிடக்கும் பாதி உடைத்த ஸ்லேபில் நின்று இடுப்பு துண்டு நனைய நீர் அள்ளி அள்ளி ஊற்றி கொண்டிருந்தார்கள். பகல் முழுக்க பாறையாய் இறுகி கிடக்கும் உடம்பும் மனதும் பரபரவென இளகும் நேரம் இது. கனிவு கண்களில் கூட… பீர் குடிப்பவன் ஓரமாய் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.

தமிழை இத்தனை அழகாய் மாற்ற ஒரு பீகார்காரனுக்கு வாய்த்திருக்கிறது. உதடு ஓட்டும் வார்த்தைகளுக்கு உள்ளம் பிரிந்துணரும் பாவனை என்று மழலைக்கும் மாவிலைக்கும் இடையே தடதடக்கும் மாங்கொழுந்து அசைவது போல பீகார்காரிகளின் பரபர பேச்சும்… பார்வையும்.

பெட்டி பெட்டியாய் இருக்கும் வீட்டில் எப்படி இத்தனை பேர் இருக்கிறார்கள். நிரந்தரம் இல்லாத குடியிருப்பு. எங்கு வேலை… எத்தனை நாளோ… அங்கு அந்த கட்டடம் ஒட்டிய தகர கூடாரங்களில் வாழ்வு. நிரந்தர முகவரி இல்லாத ஒரு தேசாந்திரி மாதிரியான போக்கு… அவர்கள் மேல் அவனுக்கு ஈர்ப்பை இன்னும் கூட்டியது. பார்களில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது கூட ஒரு பீரை இருவர் பிரித்துக் கொண்டு குடிப்பது ஆச்சரியமாக இருக்கும். இங்க முழுசா ரெண்டு பீர் இருந்தாலும் பத்த மாட்டேங்குது… அவனுங்க ஒரு பீரை ரெண்டு பேர் அழகா பங்கிட்டுக் கொள்கிறார்கள். பாக்கு போடுவதில் கூட நிதானமாக செயல்படும் அவர்களின் போக்கு மீது எப்போதும் நகுலனுக்கு ஆர்வம் உண்டு. பேருந்தில் கூட அந்த பேருந்தே அவர்களுக்கு… விட்டது போல… பேசிக் கொண்டு ஏறுவதும்… தொடர்ந்து அவர்கள் மொழியில்…. பேசிக் கொள்வதும்… ஒரு விதமான ட்ராமா பார்ப்பது போலவே இருக்கும். பொது இடங்களில் இருக்கும் இறுக்கத்தை களையும் இயல்பு வாய்த்தவர்கள்.

எப்படி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா இருக்கிறதோ அப்படி இங்கு கூட ஒரு குட்டி பீகார் உருவாகி கொண்டிருக்கிறது. காலை 7 மணி முதல் எட்டு எட்டரை வரை அப்பப்ப்பா… வெடுவெடுவென எத்தனை பீகாரியன்ஸ் பஸ் ஸ்டாப்பில். ஒருவனுக்கு கூட தொப்பை இருந்து பார்த்ததில்லை. மாடு மாதிரி என்ன… மாட்டை விட கூடுதலாக உழைக்கும் வர்க்கம் அவர்கள். அவர்கள் பெரும்பாலும் நம்மை கண்டு கொள்வதில்லை என்பதில் நகுலனுக்கு தெளிவு உண்டு. எப்போதும் எங்கும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும் அவர்களின் வீடும் வாழ்வு முறையும் எப்படித்தான் இருக்கும்…என்ற ஆவல் எப்போதும் உண்டு. அவர்கள் சுடும் சப்பாத்தியை ஒருமுறையாவது தின்று விட வேண்டும் என்று உள்ளே பொங்கும் தீர்க்கத்தை இதோ ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“அலோ யாருங்க.. இங்க என்ன பண்றீங்க…?”

அவன் ஸ்லாங்கை எழுத்தாக்க இயலாது போல திரும்பிய நகுலனுக்கு முதலில் திக் என்றாலும் மறுபடியும் திக்கென்றே இருந்தது. இந்த முள்ளு செடிக்குள்ள இவன் என்ன பண்றான்… யோசிக்கும் போதே… பொந்துக்குள் செல்லும் பாம்பின் வேகத்தோடு நகுலனை நெருங்கி இருந்த பீகார்காரன்… கண்களில் குண்டு பல்பு எதிரொலிக்க… “யாருப்ப்பா…. இங்க என்ன பண்ற… திருட வந்திருக்கியா…?” என்றான்.

திரும்பி ஒரு திடு திப்போடு பார்த்தாலும்.. சகஜ நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டே…. “ஆமா அப்டியே பொக்கிஷமா வீட்டுக்குள்ள வெச்சிருக்கற… திருட வர்றாங்க….அட ஏன்யா… ஒண்ணுக்கு போலான்னு வந்தேன்யா….” என்று பாவ்லா காட்ட… “இதே வேலையா போச்சு… பொம்பளைங்கள ஒளிஞ்சு ஒளிஞ்சு பாக்க வர்றது..” என்று சகட்டுமேனிக்கு அவன் மொழியில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டான்.

சற்று நேரத்தில் உள்ளே அலைபேசியில் அமிதாப் பச்சன் பாடல் கேட்பவன்.. காத்ரீனா கைஃப்பின் ஆட்டம் பார்க்கிறவன்.. குளித்துக் கொண்டிருப்பவன்…. சோறு ஆக்குபவள்…. பீர் குடிக்கிறவன் யாவரும் வரக்கூடும். அல்லது ஒவ்வொருவராக எட்டிப்பார்க்க கூடும்..

“பையா கோச்சுக்காத பையா… ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க போறேன்.. அது தான் லொகேஷன் பாக்க வந்தேன்.. பிலிம் பிலிம்…” என்று ஜாடை காட்ட அவன் அவனையே பார்த்தான். ஆனால் அவனையும் அறியாமல் அமைதி ஆகி இருந்தான். பிலிம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் ஒன்று உண்டோ… சமயோசித மூளையை தானே மெச்சிக் கொண்டான் நகுலன்.

படக்கென்று பாக்கெட்டில் இருந்து கோட்டர் பாட்டிலை எடுத்து… சாப்பிடுவோமா என்று ஜாடைத்தான்.

ஹிந்தி படம் ஓடுற தியேட்டருக்கு மயங்காதவனும்… கோட்டர்ல கட்டிங்க்கு மயங்காதவனும் எங்க இதுலயே இல்ல என்று பேசவில்லையே தவிர அதுவரை இருந்த உக்கிரம் அவன் கண்ணில் இல்லை. அவன் பரபரவென பிளாஸ்டிக் டம்ளரை எடுத்து வர முற்பட்டான். தடுத்து நிறுத்திய நகுலன்…. செய்வன திருந்த செய்… என்பதாக பேக்கில் இருந்து இரண்டு பிளாஸ்டிக் கோப்பைகளை எடுத்து… வைக்க… அங்கேயே ஒரு சிறு அமர்விடம் ஜிவ்வென உய்விக்கப்பட்டது. மது மடமடவென மனசில் இடம் பிடித்து தந்து விடும்.

பாதி பாதி ஊற்றினாலும்… மீதிக்கு நீர் தேவைப்பட்டது. அவன் மீண்டும் எழ முற்பட… ம்ஹ்ம்… கோட்டரே இருக்கு.. வாட்டர் இருக்காதா.. என்பது போல பார்த்துக் கொண்டே பேக்கில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கவிழ்த்தினான். அடுத்த சில நொடிகளில் இருவரும் சரக்கை வாயில் கவிழ்த்தி கண்களை வானத்தில் திறந்தார்கள்.

மடமடவென பையா பேச ஆரம்பித்திருந்தான்.

இங்க வேலை முடிஞ்சு அப்புறம் எங்க போவீங்க… பீகார்ல எங்க இருக்கீங்க… இப்டி மூணு மாசம் ஆறு மாசத்துக்கு இடம் மாறிக்கிட்டே இருந்தா… உங்க புள்ளைங்க எப்பிடி படிக்கும்… எதுலயுமே உங்களுக்கு பற்று இருக்காதா… மாசம் எவ்ளோ சம்பாதிப்பீங்க… எப்பிடி இந்த சின்ன வீட்டுக்குள்ள இத்தனை பேரு இருக்கீங்க… இன்னும் ஒரு கோடவுன் கேள்வி நகுலனிடம்…

முதுகில் இருந்து கொஞ்ச நேரம் யோசித்தவன்….” வா பையா… சப்பாத்தி சாப்பிடலாம்” என்று கையைப் பற்றி இழுக்க ஆரம்பித்து விட்டான். என்னவோ யோசித்து என்னவோ செய்யும் நேர்த்தி போதைக்கு உண்டு.

“அடேய்…! என்ன இது…? உங்க வீட்டுல ஏதும் சொல்ல போறாங்க.. வேண்டாம்… நாம இங்கயே பேசுவோம்….” தன்னை குறுக்கி தன்னையே இருத்தினான். அவன் எதற்கும் அசையவில்லை. காதை கட்டிங்க்கு தாரை வார்த்து விட்டான். பாதி வாசலுக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டிருந்தான். குடி ஒரு சோஷலிச கவர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

முதல் வீட்டில்… நுழைந்ததுமே மொத்த வீடுமே அது தான் போல. ஒருவன் தலைக்கு குளித்து விட்டு வெற்றுடம்போடு கால் மேல் கால் போட்டு படுத்தபடியே பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாம்பல் பூத்த உடல் அது. வெளுத்த யோசனையோடு அவன் பார்வை எங்கோ நிலை குத்தி இருந்தது.

அடுத்த வீட்டில் இரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெரும்பசி போல. வேகம் இருந்தது கைக்கும் வாய்க்கும் இடையே.

வாசலில்… ஈரமும் சாரமும்… மிச்ச வெயிலின் சூடும் என்று தூரத்து அனல் அங்கே அசைவதை உணர முடிந்தது. ஒரு பாலைவன மேட்டில்…. படர்ந்திருக்கும் குடிசைகள் போல தான் நகுலனுக்கு சடுதியில் சிந்தனை வந்தது.

அடுத்த வீடு அவன் வீடு தான். குனிஞ்சு உள்ள வா பையா என்றான். உள்ளே சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தாள் ஒரு முக்காடிட்ட பெண்.

உட்கார்ந்தபடியே திரும்பினாள்.

இளையராஜா ஓவியம் போல அது. மஞ்சள் புடவையில்.. நெகு நெகுவென வழிந்த சூரியனாக… விறகடுப்பின் எதிரொளிப்பில் அவளின் ஒரு பக்கம் பட்டு தகிக்க… வியர்ந்த முகத்தில்… வெக்கை படற… மூக்குத்தி நட்சத்திரமாய் ஜொலித்தது.

“அஞ்சியா….” என்று லக லக தகவென அவன் மொழியில் பொழிந்தான்.

கண்களில் சிறு புன்னகை. கூடவே சிறு வெட்கம்… அஞ்சியாவுக்கு.

“சப்பாத்தி சுடு” என்று நகுலனை பார்த்து அவருக்கும் என்பது போல ஜாடை செய்தான்.

இந்த வாழ்வில் எது ஒன்றின் தொடக்கமும் எங்கோ ஏதோ ஒன்றின் முடிவோடு பொருந்தி இருக்கும். அது பல போது நம் அறிவுக்கு உட்படாமல் சைடு வாங்கி போய்க் கொண்டிருக்கும். இந்த காட்சியே வேறு. கணம் ஒன்றில் நெற்றி சுருக்க ஆரம்பித்திருந்தான் நகுலன். என்னவோ யோசனை. அவள் கண்களில் இருள் புரியாத வெள்ளை நிலாக்கள் படக் படக்கென… முளைத்தன.

மூளையை விட இதயம் வேகமாய் யோசித்தது பையாவுக்கு. வேகமாய் மரப்பெட்டிக்கு பின்னால் கையை விட்டு ஒரு கோட்டரை எடுத்து பொதுவாக கையில் வைத்துக் கொண்டு சிரித்தான். சடுதியில் அந்த தகர கொட்டகைக்குள் தங்க முலாம் ஜொலித்ததாக ஒரு கற்பனை நகுலனுக்கு. பார்வையை அவள் பக்கமிருந்து திருப்பி பாட்டில் பக்கம் கூமாச்சினான்.

பரபரவென அமர்ந்தார்கள். படபடவென அருந்தினார்கள். மூச்சில் சரக்கு முயங்கியது. ஆளுக்கொரு ரவுண்ட்.. இரு ரவுண்ட்… மூன்று ரவுண்ட்… அவன் அழ தொடங்கி விட்டான். அழுகைக்கு தமிழ் ஒத்துழைக்க வில்லை. அவன் மொழியோ நகுலனுக்கு பத்தவில்லை.

இருவரையும் பார்த்தவள் கண்களில் பெரும் சோகம் சடுதியில் தீ மூட்டியது. ஆனாலும் கைகள் சப்பாத்தியை சுடுவதில் தீவிரமாய் இருந்தன.

“எல்லாரும் ஊருல பையா… காசு அனுப்பனும்… ஊர்ல வேலை இல்ல.. பட்டிக்காடு… வறண்ட பூமி… ஊரு பக்கம் போயி நாலைஞ்சு வருஷம் ஆச்சு… ரெஸ்ட்டே இல்ல பையா.. கொசு கடி… சூடு தாங்கல பையா… இந்தா இது இல்லனா தூக்கம் கூட வராது… ” காலி பாட்டிலை கால் நீட்டி காட்டி… தலையணையில் சரிந்து அமர்ந்தவன்… கண்களில் பேரலைச்சல். வாயில் தமிழும் அவன் மொழியும் கழுத்தை பிடித்து மாறி மாறி புரண்டு கொண்டிருந்தது.

குடித்தவன் பேசும் பேச்சில் முக்கால்வாசி உளறலும்…கால்வாசி உணரலும்… எப்போதும் இருக்கிறது. இப்போதும் இருக்கிறது.

“டைட் ஹவுசல வேலை செய்யும் போது ஆபீஸ்க்கு இவுங்கள மாதிரியே ஒரு பொண்ணு தண்ணீ கொண்டு வருவா… அப்பிடியே இவுங்க மாதிரியே தான் இருக்கும்….. சின்ன உருவம்…. குட்டியூண்டு ஃபேஸ். சிரிச்ச மாரியே இருக்கிற நெத்தி…. என்ன பேசினாலும் புரியாது…. ஜாடைதான்…” எதிரே இருந்த முக்காலியில் அமர்ந்திருந்த நகுலன் பொதுவாக இருவரையும் பார்த்து பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

குடித்தவர்கள் பதில்களுக்கு காத்திருப்பதில்லை. பதிலாக பேசுவது மட்டும் தான் ஒரே வழி. கேட்பது குறித்த மறதி நேர்த்தியாய் ஓர் இயல்பு செய்து விடுகிறது.

“மரியாத இல்ல… மனுசனாவே மதிக்கறதும் இல்ல… எப்பவும் வேலை வேலை வேலை தான்… விடிஞ்சதுமே என்னவோ விரட்டற மாதிரியே இருக்கும்… வெயில் சூடு வேற… எட்டாவது மாடி கான்கிரீட் நாளைக்கு… சம்பளம் ஏத்த மாட்டேங்கிறாங்க….”

அவன் மொழியிலும் சுமை இருக்கும் போல… தொண்டைக்குள் அழுந்த எதையோ அடக்கி அடக்கி கண்கள் சொருகியது. வாய் திறந்து திறந்து மூடும் மூச்சில்… பிராண்டி நெடி.

” கட்டடத்துக்குள்ள விசிட்டிங் போகும் போது எதிர் எதிரே பாத்துக்குவோம்… நான் திரும்பிகிட்டாலும் அவ பாத்துகிட்டே இருப்பா. நேருக்கு நேரா பார்ப்பா. விடாம பார்ப்பா. கனவுல கூட அவ பார்த்துகிட்டே இருக்கற மாதிரி வந்துருக்கு….”

நகுலனுக்கு புலம்பல் சில் பீர் குடிப்பது போல… ஏதேதோ பேசினாலும்… எல்லாவற்றிலும் ஒரு தொடர்பு இருப்பதை அவன் சொற்கள் விட்டு விலகவில்லை.

இருவரையும் மாறி மாறி பார்த்தவள்…புலம்பிக் கொண்டிருப்பவனை… தலையை நிமிர்த்தி சப்பாத்தியை உருளைக்கிழங்கில் துவட்டி ஊட்டினாள். அவன் மென்றுகொண்டே… “அண்ணன் பொண்டாட்டிய இப்பிடி கூட வெச்சிக்கிட்டு… அந்த கட்டைல போறவன்… கட்டடத்து மேலருந்து விழுந்து… செத்து….” ஏக் என்று விக்கல் வேறு. தண்ணீரை வாய்க்கு கொடுத்து விட்டு மீண்டும் இரண்டு வாய் ஊட்டினாள். பேச்சு குறைய வாய் மெல்லுவதில் கவனம் குவித்திருந்தது.

கண்களை திறப்பதும்… நெற்றியை சுருக்கி பார்ப்பதும்… “அவ பேரு…. பேரு கூட……. நல்ல பேரு… மறந்து போய்ட்டேன்… 10 வருஷம் இருக்கும்… இல்லல்ல ஒரு 12 வருஷம் இருக்கும்…” மீண்டும் வாயை பேசுவதற்கு திறந்தான். அதே உருளைக்கிழங்கு துவட்டிய சப்பாத்தியை நகுலனுக்கும் ஊட்டினாள். புலம்புவதை நிறுத்தி வாய் மெல்ல அசை போட ஆரம்பித்தது. ஆழ்மனம் விழித்துக் கொள்ள இன்னும் இன்னும் வாய் திறந்தான். அடுத்தடுத்த வில்லைகளை ஊட்டியவள்….கண்களை துடைத்துக் கொண்டாள்.

“குடிச்சிட்டு கட்டடத்துல ஏறாத ஏறாதன்னு எத்தன தடவ சொல்லி இருப்பேன்… கேட்டானா…” என்று புலம்பியது…. புலம்பல் ஓய்ந்திருந்த பையாவுக்கும் கேட்கவில்லை…. நகுலனுக்கும் கேட்கவில்லை…

இருவருக்கும் நடுவே பழுப்பு சேர்ந்த குண்டு பல்பு வெளிச்சம் என அமர்ந்திருந்தவள் நினைவில்… கட்டடத்தில் இருந்து விழுந்த தன் கணவனை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி போனவன் முகம் கிட்டத்தட்ட நகுலன் சாயலாக ஒரு கணம் வந்து போனது.


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x