26 February 2024

காலையில் செங்கல்பட்டு டோலில் வாகன நெரிசல் சத்தம் கேட்டுக் கண்விழித்தபோதுதான் என்னோடு சேர்ந்து சென்னை கிளம்பிய தென்மாவட்டத்தினரின் எண்ணிக்கை கண்டு ஆச்சரியப்பட்டேன். ஏதோ நானொருவன்தான் அதிசயமாய் சென்னைக்குப் போய் வேலைபார்க்கப் போகிறேனென்றெண்ணி அம்மாவும் அப்பாவும் சொக்கங்குளம் முழுக்கத் தம்பட்டம் அடித்து பெருமை பீத்திக் கொண்டதோடில்லாமல், நேற்றிரவு மொத்தக் குடும்பமும் வந்திருந்து ராக்காத்தப்பத்தா கையால் திருநீறு பூசிப் பேருந்தில் ஏற்றிவிட்டனர். ஆனால் கண்ணுக்கெட்டும் தூரம் வரை கார்களும், பேருந்துகளும், பேருந்துகள் நிரம்ப என்னைப்போல் வேலை தேடியும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் வேலையோ தொழிலோ சம்பந்தமாகவோ, மருத்துவ அல்லது பிற தேவைகளுக்காகவும் நாள்தோறும் மாநிலம் முழுவதிலுமிருந்து சென்னை வருவோர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் உச்சத்தில்தானுள்ளது… 

பக்கத்து இருக்கை ஆசாமி வேறு; எந்த ஊரோ, என்ன ஆளுங்களோ! பேருந்தில் இரவு ஏறிய மட்டில் தூங்க ஆரம்பித்தவன் இன்னும் எழும்பவில்லை… விடும் குறட்டையைப் பார்த்தால் காலனியாயிருப்பானோ என்னவோ! கையோ காலோ பட்டுத் தொலையுமேயென்னும் பதட்டத்திலும், முதல் சென்னைப் பயணமென்பதாலும் நிம்மதியான தூக்கமேயில்லை. இந்த இம்சைக்குத்தான் எங்கவூர் பேருந்துகளில் பக்கத்திலிருக்கும் காலனிகளுக்கு நிறுத்தமேயில்லை. பேருந்தில் ஏற வேண்டுமானால் பக்கத்திலிருக்கும் காலனி சார்ந்த ஊருக்கு நடந்து சென்றுதான் ஏற வேண்டும். அப்படியேறும்பட்சத்திலும் சீட்களிலமர அனுமதி கிடையாது. இதைவிட எங்கப்பா, தாத்தா காலத்தில் காலணிக்காரர்களுக்குப் பேருந்தில் ஏறவே அனுமதியில்லை. எல்லாம் காலப்போக்கில் சமத்துவம், சமூகநீதி யென்று கிளம்பிய வெட்டிவேர்களின் விளைவு.. 

இந்த வயிற்றுப் பசி வேறு… பாழாய்ப்போன டிரைவர் இரவு உணவிற்கு நிறுத்திய நெடுஞ்சாலை உணவகத்தில், அப்போதுதான் கண்ணசந்த சமயம் சன்னல்களில் தட்டி எழுப்பி விட்டனர். அதையும் சட்டை செய்யாமல் தூங்குவோரை எழுப்புவதற்காகவே தேர்ந்தெடுத்து ஒலிபரப்பப்படும் பாடல்கள் வேறு… அதற்கும் ஈடுகொடுத்து அசராமல் தூங்கிக் கொண்டிருந்தான் அந்த சன்னலோர இருக்கைக்காரன். சரி எதையாவது சாப்பிடலாமென்றெண்ணி உள்நுழைந்தால், ஏதோ கீழ உள்ளவனுக்குப் பரிமாறுவது போல, ப்ளாஸ்டிக் தட்டில் இலை கூட இல்லாமல் உணவு பரிமாரப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சாப்பிடும் எண்ணமே மலையேறிவிட்டது. அந்தத் தட்டில் சாப்பிட்டவர்களெல்லாம் யார் யாரோ? என்னாளுங்களோ! வெளியில் நின்று பேப்பர் கப்பில் ஒரு டீயை மட்டும் குடித்துவிட்டு பஸ்ஸிலேறினேன். 

வீட்டிலிருந்து சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பையும் பக்கத்து நகரத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தவுடன் சொந்த ஊரிலேயே ஏதாவது வேலை தேடலாமொன்றால், பன்னிரண்டாவதில் நான் எடுத்த மதிப்பெண்ணிற்கு மென்பொருள் பொறியியல் தான் எடுக்க முடிந்தது.  மென்பொருள் படித்தவன் சொந்தவூரில் என்ன வேலை செய்து பிழைப்பது…? எல்லாம் இந்த இட ஒதுக்கீட்டால் வந்தவினை. அந்தக் கும்பலுக்கிடையில் எங்கள் ஆசைப்படி படிக்கவும் வேலை செய்யவும் எப்படி முடியும்! கிடைத்ததைத்தான் படித்தாகவேண்டும், படித்த பாவத்திற்கு அலைந்து திரிந்துதான் வேலை தேடியாக வேண்டும். சொந்த ஊரிலிருக்கும் வரை இப்படியான பாடுகளை அனுபவித்திருக்க வேண்டியிருந்திருக்காது. தங்களுக்கு வாழ்வளித்த, அவர்களை ஆண்டவர்களிடம்  நன்றியில்லாமல் அவர்களையே இப்படி அலையவிடும் போக்குதான் இந்த போக்கத்தவர்களின் விசுவாசம்.

“மாப்ள எம்மவங்கிட்ட பேசிட்டேன்… நீ கோயம்பேடுல எறங்கவும் அவனே வந்து உன்னக் கூப்டு பேயிருவான்!” மாரியப்ப மாமா சொன்ன தைரியத்தில் வந்திறங்கியவனுக்கு நல்ல மரியாதை குடுத்தான் அவன் மகன் குமரேசன்… நான்கு அழைப்புக்களைத் தவறவிட்டு, ஐந்தாவது அழைப்பில் தூக்கக் கலக்கத்தில் பதிலளித்தவன் பேருந்து எண்ணைக் கூறி, அதிலேறி சரியாக எட்டாவது நிறுத்தத்தில் இறங்கிவிட்டு அழைக்கச் சொல்லி வைத்து விட்டான்… 

சென்னையிலிருக்கும் ஊர்க் காரர்களுக்கு ஊரிலிருப்பவர்களைக் கண்டால் எளக்காரம்; ஊரிலிருப்பவர்களுக்கோ உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் சென்னையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் தனி மரியாதை. அந்த மரியாதை, மகுடம் மண்ணாங்கட்டிக்காக மட்டுமல்ல; மஞ்சுவுக்காக… தாய்மாமன் மகள் மஞ்சுவை, நன்கு படித்துப் பட்டணத்தில் வேலை பார்ப்பவருக்குத்தான் கட்டித்தருவதென்று பிடித்த பிடியிலிருக்கிறார். உள்ளூரிலிருக்கும் என் சேக்காளி இளவட்டங்களெல்லாம் வயது வந்தும் வராமலும் கூட குடித்துக்கொண்டு ஊர்ப் பஞ்சாயத்துகள், அடிதடியென்று திரிவதைக் கண்கூடப் பார்ப்பதாலுண்டான மனநிலையது. நாளைக்கே அவருக்கொன்றென்றாலும் அதே இளவட்டங்களைத்தான் ஒத்தாசைக்கு அழைப்பார். தவிர சுத்துப்பட்டியில் சொக்கங்குளத்தின் மீது ஒரு பயமும் மரியாதையும் இன்னும் இருக்கிறதென்றால் அது அந்த இளவட்டங்களை வைத்துத்தானே!..! ஆனாலும் தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கத் துளியும் சம்மதிக்கமாட்டார்.

கடங்காரன் குமரேசனுக்கு ஏழெட்டு முறை போன் செய்து வரும் வழியை உறுதிப்படுத்திக் கொண்டு ஒருவழியாய் வீடு வந்து சேர ஒருமணி நேரமாகிப் போனது… வீட்டுவாசலின் ஸூ மற்றும் செருப்புக் குவியல்களைக் கடந்து உள்நுழைய, இருக்கும் இரண்டே அறைகளின் கதவு, சன்னல், துணிக்கொடி என அழுக்குத் துணிகளில்லாத இடமேயில்லை. படுத்த படுக்கை விரித்தபடியிருக்க, படுக்கை தவிர்த்த இடங்களிலெல்லாம் வாரங்களும் மாதங்களுமாய்ப் போட்ட குப்பைகளெல்லாம் போட்டபடியிருந்தது. சமையல்மேடையில் உணவுக் கழிவுகளும், சமைத்த பாத்திரங்களும் எச்சித் தண்ணீர் நிரம்பி அப்படி அப்படியே கிடந்தது. சென்னை சம்பாத்யமென ஊரே மெச்சும் மாரியப்பன் மகன் வீடுக்கு, எங்கவூர் வண்ணான் வீடு எவ்வளவோ தேவலை… 

பாத்ரூமிலிருந்து ட்ரௌசரும் வாயில் ப்ரஸூமாய் வெளியே வந்த குமரேசன், இல்லையில்லை குமரேசண்ணன் சுருதியேயில்லாமல் வரவேற்று உக்காரச் சொல்லிவிட்டுப் போய் வாய் கொப்புளித்து வந்தான்… உடன் தங்கியிருக்கும் மற்ற பன்றிகள் இன்னும் தூக்கத்தில் தான் இருந்தன… என்ன ஊரோ; என்னாளுங்களோ! போனும் கையுமாய் வந்தவன், துளி புன்னகை கூட முகத்திலில்லாமல், “வீட்ல எல்லாம் நல்லாருக்காங்களா?, உனக்கு எந்த ஏரியால இன்டர்வியூ?, கம்பெனி பேர் என்ன?” முகத்தைக் கூடப் பாராமல் போனைப் பார்த்தபடியே  கேட்டுவிட்டு என் பதில்களைக் கூட முழுதாய்க் காதில் வாங்கிக் கொள்ளாமல், “இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… இல்லன்னா நானே வந்து ட்ராப் பண்ணிடுவேன்… பஸ் ரூட் சொல்லிட்டா நீயே போயிடுவேல்ல? அப்றம் எப்பிடிப் பழகுறது! வேலை கெடச்சிட்டா தனியாதான போயாகணும்..?” இன்னும் போனைப் பார்த்தபடியே அவனாகவே பேசிவிட்டு வேலைக்குக் கிளம்பத் தொடங்கினான். ஊரில் செருப்பணியாமல், துண்டைக் கக்கத்தில் சொருகியபடி வாசலைவிட்டு இறங்கித் தெருவில் நின்றபடி அப்பாவை சாமியென்றழைத்துப் பேசும் தெக்கஞ்சேரிக்காரனிடம் அப்பா பதில் பேசும் தோரணை… 

குமரேசனைத் தொடர்ந்து நானும் அவசரவசரமாய்க் கிளம்பி, அவன் காட்டிய கையேந்தி பவனிற்குக் காலை உணவிற்காகச் சென்றேன். அதே ப்ளாஸ்டிக் தட்டில், ப்ளாஸ்டிக் தாளை விரித்துப் பரிமாரினார் கடைக்காரர். என்ன ஆளுங்களோ! எந்த ஊரோ! கையில் கட்டியிருக்கும் பச்சைக் கயிறைப் பார்த்தால்… நினைக்கும் போதே, அவரே கேட்டார். “தம்பிக்கு எந்தவூரு? புதுசாருக்கு! குமரேசன் ப்ரண்டோ!?”, தலையாட்டிக்கொண்டே, ” ம்ம்ம்.. அவர் ஊருதான்… இண்டர்வியூக்கு வந்தேன்…” என்றேன். 

“சரியாப் போச்சி! எனக்கும் மதுர தான் தம்பி… இங்க வந்து பத்து வருசத்துக்கும் மேலாச்சு… இட்லி வைக்கவா?”

தலையாட்டிக் கொண்டே “ஆனா நாங்க மதுர இல்லையே! சொக்கங்குளம்… “

“ஹே..ஹே..ஹே…! இங்கவுள்ளவனுக்கு தமிழ்நாட்டுல விழுப்புரத்துக்கு வடக்க இருக்றதெல்லாம் சென்னை, விழுப்புரத்துக்குத் தெக்க இருக்கதுலாம் மதுரதான்… உன் ஊரு, பின்கோடெல்லாம் வாங்கி உனக்கென்ன லவ் லெட்டரா அனுப்பப் போராய்ங்க!”

இதற்கு மேல் அவர் எந்தவூரென்று அறிய என்ன வழியிருக்கப் போகிறது! அவர் சொன்னபடியே அவரும் விழுப்புரத்திற்கு தெற்கேயென்பதால் நம்மவூர்தான் என்றெண்ணிக் கொண்டே தட்டை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன். தவிர இரவிலிருந்து சாப்பிடாததால் பசியில் அதற்கு மேல் ஆராய வேண்டுமெனத் தோன்றவில்லை. சாப்பிட்டு முடித்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தேன். இரண்டு பேருந்து ஒரு, புறநகர் ரயிலில் ஏறிப் போக வேண்டுமாம். 

பேருந்தில் கூட்டத்தில் இடி வாங்கி, மிதி வாங்கி, அதிகாரமாய் உக்கார்ந்துகொண்டே டிக்கெட் குடுத்தபடி எல்லோரிடமும் கடுகடுவென்றிருந்த கண்டக்டரிடம் நிறுத்தம் கேட்டுத் திட்டு வாங்கி ரயில் நிலையத்திலிறங்கினேன். கிட்டத்தட்ட என்னைத் தவிர என்னைக் கடந்து போன எல்லோரிடமும் திரவிய வாசனை, அத்தனை கூட்டத்திலும் எல்லோர் உடையும் நேர்த்தியும் ஆடம்பரமுமாய்… யாரையுமே இன்னார், இந்த ஊர் என்று துளியும் அடையாளப்படுத்திட முடியாது. அங்கிருப்பவர்களும் அதற்கென நேரம் ஒதுக்க வழியில்லாதவர்களாய் காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோல் ஓடிக்கொண்டிருந்தனர்.

ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து உள்நுழைந்தால், காலை நேரத்தில் பேருந்தையும்விட ரயிலுக்கென்றே காத்திருக்கும் கூட்டமான கூட்டம். கூட்டத்தைப் பார்க்கையிலே கிரக்கமாய் வந்தது. தற்செயலோ அதிர்ஷ்டமோ எனக்கருகில் வந்து நின்ற அந்தக் கூட்டமில்லாத பெட்டியிலேறினேன். பெட்டியிலிருந்தவர்களோ என்னை ஒரு நொடி தீண்டத்தகாதவனைப் போல் வித்யாசமாய்ப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டனர். நம்மள விட மேல் சாதியாகவோ, இல்ல நம்மாளுங்களவோ இருப்பவர்கள் போன்ற தோரணை!. எல்லோரும் நான் யாரோ, என்ன ஆளோவெனப் பார்க்கிறார்கள் போலென நினைத்து என் நிறுத்தத்தில் இறங்கினால் அது முதல்வகுப்புப் பெட்டியாம். பரிசோதகரிடம் சிக்கி முந்நூறு தண்டம் கட்டி வெளியேறுகையில்தான் அந்தப் பெட்டியிலிருந்தவர்களது பார்வையின் அர்த்தம் விளங்கியது. அங்குமிங்குமிருந்த ஆட்டோக்காரர்களிடமும், பெட்டிக் கடைக்காரனிடமும் விசாரித்து ஒரு வழியாய் இடத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்றேன். கேட்ட கேள்விக்குத்தான் பதில் கிடைத்ததேயொழிய நான் யார், எந்தவூரென்பது குறித்து அவர்களுக்கு எந்த அபிப்ராயமும் எழுந்ததாகத் தெரியவில்லை. 

பகலா, இரவா எனத் தெரியாதளவுக்கு அனைத்து விளக்குகளும் எரிந்து அலுவலகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெளியேயிருந்த வெப்பமோ, கூட்டத்தினாலான புழுக்கமோ மறந்து போகும்படி அறை முழுக்க குளிரூட்டியால் குளுகுளு வென்றிருந்தது. எனக்கு வழங்கப்பட்ட நேர்காணல் படிவத்தைத் தெரிந்தவரைக்கும் அரைகுறையாய் பூர்த்தி செய்து கொடுத்தேன். என்னோடு சேர்த்து நேர்காணலுக்கு வந்திருந்த மற்ற பத்து பேருடைய படிவங்களும் சேகரிக்கப்பட்டு, எங்களுக்கு எதிரேயிருந்த கண்ணாடி அறைகளில் இன்னும் வந்திருக்காத மேலாளருக்கான அறையினுள் கொண்டு சேர்க்கப்பட்டது. 

பொதுவாகவே பள்ளிக்காலத்திலிருந்தே தனிக் கண்ணாடியறை, மழுங்கச் சவரம் செய்யப்பட்ட முகத்தையோ பார்த்தாலே ஒருவித பயமும் படபடப்பும் தொற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. அதுவும் கூட்டத்தோடில்லாமல் தனியாய் அவர்களை நேர்கொள்வதென்றால் இன்னும் கிலிதான். ஒரு கணத்தில் அங்கிருந்து எழுந்து போய் விடலாமே என்றிருந்தது. அலுவலகத்தின் பிரதான வாசல் திறந்து உள்நுழையும் அந்த நபரைப் பார்த்ததும் ஒவ்வொரு மேசையாய் எழுந்து வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லா முகத்திலும் கடமைக்காகவன்றி இயல்பான மரியாதையிருந்தது. அந்த வணக்கங்களைச் சிந்தாமல் சிதறாமல் சேகரித்துக் கொண்டு பதிலுக்குத் தன் புன்னகையைப் பண்டமாற்றிக் கொண்டு வந்தபடி அந்தக் கண்ணாடி அறையினுள் நுழைந்தவர் என்னைக் கடக்கையில்தான் கவனித்தேன்; இது எங்கேயோ பார்த்த முகம்… எந்த ஊரோ; என்ன ஆளுங்களோ! எனும் கேள்விகளுக்கு நினைவில் அடுத்தடுத்து வந்துவிழுத்தது பதில்கள்… சொக்கங்குளத்தையடுத்த தெக்கஞ்சேரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தடியப்பன் மகன்.

சொக்கங்குளத்திலிருந்து ஆளாளுக்கு வசதிப்பட்ட எண்ணிக்கையிலான ஆட்டுக்குட்டிகளை வாங்கித் தடியப்பன் மற்றும் அவனைப் போன்ற இன்னும் சில மேய்ப்பர் களிடம் விட்டால் அவற்றை வளர்த்து காசாக்கித் தர வேண்டியது தெக்கஞ்சேரி மேய்ப்பர்களின் பணி… இருபது ஆடுகளுக்கு ஒரு ஆட்டு வருமானம் மேய்ப்பனுக்கானது. ஒவ்வொரு மேய்ப்பனும் குறைந்தபட்சமாய் நூற்றைம்பது, இருநூறு ஆடுகளை மேய்த்து வந்தனர். அப்படியாக முதலீடேயில்லாமல் குறைந்தபட்சம் பத்து, இருபது ஆடுகளின் உரிமையாளராயிருப்பர். அதோடு ஒவ்வொரு புஞ்சையிலும் கிடை போடும் பணமும் மேய்ப்பனுக்குத்தான். அப்படியும் திருப்தியடையாத பேராசைக்காரர்கள் பணம் தேவைப்பட்ட காலத்தில் ஆட்டைத் திருடி விற்றுக் காசாக்கித் தின்றுவிட்டு, பூச்சி கடித்தது, ஆடு அரிசி தின்றதெனப் பொய் சொல்வதுண்டு; துளியும் விசுவாசமில்லாத் திருடர்கள். 

“தடியனிடம் அப்படிப் பேச்சு ஒருபோதும் வந்ததில்லை; வாக்குக்கும் விசுவாசத்திற்கும் கட்டுப்பட்டவன்” என்று அடிக்கடி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவின் ஆடுகளுக்கும் கூட அவன் தான் மேய்ப்பன். எனக்கு விவரம் தெரியத் தடியனைப் பேர் சொல்லித்தான் அழைத்திருக்கிறேன். அவனும் என்னைச் சின்ன முதலாளியென்றுதான் அழைப்பான். அவ்வாறே அப்பா அவனைத் தடியனென்றும் பள்ளியில் படிக்கையில் அவனோடு ஆடு மேய்க்க வரும் அவன் மகனைச் சின்னத்தடியனென்றும் அழைப்பார். அப்படித்தானே அழைத்தாக வேண்டும்! எப்படியும் எனக்கு ஐந்தாறு வயது மூத்திருந்தவனின் பெயரெல்லாம் எனக்கு நினைவில்லை; சின்னத்தடியன்தான். 

சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் பள்ளிப் படிப்பு முடித்து மேற்படிப்புப் படிப்பதற்கான பணத்தேவை குறித்து அப்பாவிடம் உதவி கோரியபோது, “ஏன் தடியா! ஒம்மவன் படிச்சு வெளியேறிப் போயிட்டா நாளைக்கு என் உடுப்படியெல்லாம் யாரு எம்மவனா மேய்க்க முடியும்? படிச்சவரைக்குமே அதிகந்தான்! பேசாம உன் வேலையப்பாத்துட்டு ஊரோட இருக்கச் சொல்லு” என்றார். அத்தனையாண்டுகளாய் படியளந்தவரின் பேச்சுக்கு மரியாதையின்றி, பிள்ளையைப் பட்டணம் அனுப்பிப் படிக்க வைப்பதாய் செவிவழிச் செய்தி.. சோத்துக்கும் மாத்துக்கும் எங்களை எதிர்பார்த்தேயிருந்தவன், படிப்புக்கு எங்கள் தயவெல்லாம் தேவைப்படவில்லை.. அதான் உதவித்தொகையும், இட ஒதுக்கீடும் கொட்டிக் கிடக்கிறதே! அடுத்த சில ஆண்டுகளிலேயே தன்னிடமிருந்த ஆடுகளை பிற மேய்ப்பர்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டதாய்ச் சேதி சொல்லிக் கொண்டு ஊரைக் காலி செய்துவிட்டுப் போனதில் தடியன் மீது அப்பாவுக்கு ஏக கோபம். தடியன் போனபின் அப்பாவின் ஆடுகள் அடுத்தடுத்து சேதமடைந்ததில் விரக்தியடைந்து மொத்த உடுப்படிகளையும் விற்க வேண்டிய நிலை. அதன்பின் தடியன் குறித்த எந்த சேதியும் அறிந்திடவில்லை. இன்றுதான் சின்னத்தடியனைப் பார்த்திருக்கிறேன்… 

நாங்கள் அடக்கியாண்டவன் கையில் அதிகாரம் இருக்குமிடத்தில் எனக்கென்ன உதவி கிடைத்துவிடப் போகிறது.. எப்படியும் இந்த வேலை எனக்கில்லையென்றாகிவிட்டது… இருந்தாலும் அவுங்கப்பன் செய்த துரோகத்துக்கு சின்னத்தடியனைப் பார்த்து ஒருவார்த்தை நியாயம் கேட்டுவிட்டுப் போகவே அவனது உதவியாளர் அழைப்பதற்காகக் காத்திருக்கிறேன்… 

மாறாக கண்ணாடியறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த சின்னத்தடியன், என் பெயர் சொல்லி அழைத்து, சிரித்த முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கையில், மொத்த அலுவலகமுமே என்னைப் பெருமையாய்ப் பார்த்தது. ஆனால் அவன் எந்த ஊர், என்ன ஆளென்று தெரிந்ததால் எனக்குத்தான் தொட்டுத் தோளில் கைவைத்து விட்டானேயென்றிருந்தது.. உள்ளே சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன், அப்பாவையும், ஊரையும் விசாரித்துக் கொண்டான். ஆடுகளோடேயிருந்து பழக்கப்பட்ட அவன் அப்பா தடியன், அவற்றைப் பிரிந்து சென்னை வந்து ஊர் நினைவாகவேயிருந்து சுகமில்லாமல் இரண்டாண்டுகளுக்கு முன் இறந்த செய்தியைத் தெரிவித்தான். அதுபோக சென்னையில் எனது தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை அக்கறையாய் விசாரித்துக் கொண்டவன், எனக்கு வேலை வாங்கித் தர அவன் பொறுப்பேற்றுக் கொள்வதாய் உறுதியளித்து அனுப்பி வைத்தான்.

சமீப காலமாய் ஊரில் வருமானம் குறைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர் ஆனந்தப்படுவாரேயென்று வேலை கிடைத்த செய்தியைக் கூற அழைத்தேன்… “நம்ம தடியன் மவன்தான்பா இங்க மேனேஜராயிருக்கான்! இங்க அவனுக்கு அவ்ளோ மரியாத… அவன் வச்சதுதான் சட்டம்! ஆனாலும் இன்னும் நம்மாளுங்க மேல மரியாத கொறயல! என்னையக்கண்டதும் உக்காரப் பயந்து போயி எந்திருச்சு வெளிய வந்துட்டான். எதுக்கும் பயக்காத, எல்லாத்தயும் நான் பாத்துக்குறேன்னு சொல்லி, அவனுக்குக் கீழயே ஒரு வேல போட்டுக் குடுத்துட்டான்.” என்றேன்.

திடீரென்று கோபம் கொண்டவராய், “அந்தத் தாயோளிகிட்ட கைகட்டி நீ வேல பாக்கப் போறியாக்கும்? ஒரு மசுரும் தேவயில்ல… வேற வேல கெடச்சாப் பாரு… இல்லன்ன நாய் கணக்கா ஊருக்கு வந்து நாலு ஆடு வாங்கி மேச்சுக் கஞ்சியக் குடிச்சிட்டுக் காலத்த ஓட்டு” என்றுவிட்டுப் போனை வைத்தார்.


 

எழுதியவர்

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x