“அப்படியா நீ பார்த்தாயா? காடெல்லாம் சொல்றாங்க ஆனா நான் பார்க்கலையே” என்றது காட்டுக்கோழி.
நான் பார்த்தேன்பா. இப்ப வர்றப்பக் கூட பார்த்துட்டுத்தான் வந்தேன். பார்க்கவே. பயமா இருக்கு. நல்லா பெருசா கரு கரு என்று அய்யய்யோ நீ பார்த்தாலே கண்டிப்பா பயந்துருவே” என்றது முயல்.
நேற்றுக்கூட புள்ளிமான் பூஜா என்னிடம் பேசும்போது இதைத்தான் கூறியது. ஆனால் அது மரத்திலிருந்து தழைகளை உடைத்து சாப்பிட்டுட்டு இருந்ததாமில்ல”
“ஆமா ஆமா நிறையப் பேரு பார்த்திருக்காங்க. அது மரக்கிளைகளை செடி கொடிகளையும் உடைச்சு உடைச்சு சாப்பிட்டுட்டு இருந்தததாம். நம்ம காடே சின்னக் காடு. அது எவ்வளவு பெரிய விலங்கா இருக்கிறது. செடி கொடி சாப்பிடுற விலங்குகள் எல்லாம் பயந்து இருக்காமா”
“அது செடி கொடி மட்டும்தான் சாப்பிடுமா இல்ல விலங்குகளை பறவைகளைக் கூட சாப்பிடுமா? அது வெஜ்ஜா? நான்-வெஜ்ஜா?”
“யாருக்குத் தெரியும்.? புதிதாக வந்திருக்கு. இன்று நாம் எல்லாரும் சேர்ந்து சென்று அந்த விலங்கைப் பார்த்து யாரு , என்ன, ஏதுன்னு கேட்டுப் போடலாம் சரியா?”
“ஆனால் பக்கத்தில் போக பயமாக இருக்குமே. நம்மைப் பிடிச்சு சாப்பிட்டுட்டா?”
“பயமாகத்தான் இருக்கும். நம்ம காட்டிலேயே யார் தைரியமானவர்கள். ம்ம் சிறுத்தையைக் கூப்பிடலாமா? அதுதான் கொஞ்சம் தைரியமாக இருக்கும். சிறுத்தை சிங்கம் புலி இவங்களையெல்லாம் அழைத்து போய்க்கலாம். சப்போஸ் அது நம்மளை அடிக்க வந்தால் இவங்க அதை அடிச்சுடுவாங்க. சரியா?” என்று கேட்டது அதுவரை அவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த எறும்பு.
“அட எறும்பு சொல்றதும் சரியாத்தான் இருக்குது. யோசிப்போம்”
மாலை நேரம் காட்டில் உள்ள பெரும்பாலான விலங்குகளும் பறவைகளும் ஓரிடத்தில் கூடி நின்றன. புதிதாக வந்திருக்கும் விலங்கைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தன. அந்த நேரம் காட்டெருமையும் பன்றியும் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தன. காட்டில் இருக்கும் அனைத்து விலங்குகளுக்கும் காட்டெருமை மீதும் பன்றியின் மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது.
ஏனென்றால் காட்டெருமையும் பன்றியும் தான் அதிக நேரம் அந்தக் காட்டில் உள்ள நூலகத்தில் இருப்பார்கள். ஏதோ ஒன்றைப் படித்துக் கொண்டே இருப்பார்கள். காட்டில் ஏதாவது சிக்கல் என்றால் அவர்களை அழைத்துச் சிக்கலைத் தீர்த்து வைக்குமாறு கேட்பார்கள். இவர்களும் நூலகத்திற்குச் சென்று ஏராளமான நூல்களைப் புரட்டிப் பார்த்து அதற்கான தீர்வை கொண்டு வந்து முன் வைப்பார்கள்.
“அடடே! வாங்க வாங்க காட்டுல நடந்துகிட்டு இருக்கிற களேபரம் உங்களுக்குத் தெரியும் தானே?” என்று காட்டெருமையைப் பார்த்துக் கேட்டது புலி.
“தெரியும் தெரியும். அதுதான் காடு முழுவதும் தண்டோரா அடிச்ச மாதிரி அதையே ரெண்டு நாளா பேசிக்கிட்டே இருக்கீங்களே. நானும் எல்லாரும் பேசினதை வைத்து நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்தேன்”
“ஓஹோ அந்தப் புதிதாக வந்திருக்கின்ற விலங்கைப் பத்தி ஏதாவது தகவல் இருக்கிறதா?”
ஆமா ஆமா அந்தப் புதிதாக வந்திருக்கின்ற விலங்கு பத்தின ஒரு புத்தகத்தை நான் எடுத்துட்டு வந்து இருக்கேன். நான் படிப்பது எல்லாம் அந்த விலங்குக்கு ஒத்துப்போகிறதா என்று அந்த விலங்கைப் பார்த்த யாராவது சொல்ல முடியுமா?” என்று கேட்டவுடன். சிட்டுக்குருவியும் கழுகும் பறந்து வந்து காட்டெருமையின் முன்பு அமர்ந்து “நான் சொல்கிறேன் நான் சொல்கிறேன்” என்றன.
“சரி இருவருமே பொறுமையாக யோசித்து நான் அந்த விலங்கைப் பற்றி புத்தகத்தில் இருப்பதை படிக்கிறேன். புரிந்து போகிறதா என்று கூறுங்கள்” என்று ஒரு பாறையின் மீது அமர்ந்தது காட்டெருமை. அதன் பக்கத்தில் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்தது பன்றியும்.
காட்டெருமையைச் சுற்றிலும் காட்டில் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் அமர்ந்திருந்தன.
காட்டெருமை புத்தகத்தை விரித்து வைத்து முதல் பக்கத்தில் இருந்ததைப் படித்தது. “இந்த விலங்கு முற்றிலும் கருமையாக இல்லாமல் சற்று சாம்பல் கலந்த கருப்பு நிறத்தோடு இருக்கும்” என்று கூறியவுடன் “ஆமாம் நீங்கள் சொல்வது சரி காகம் அளவிற்குக் கருப்பு என்று கூறி விட முடியாது ஆனாலும் நீங்கள் சொல்வது போல் சாம்பல் கலந்த கருப்பு நிறம்தான்” என்று கூறியது கழுகு.
கழுகு கூறியதைக் கேட்டவுடன் அடுத்த பக்கத்தை எடுத்து “இந்த விலங்கிற்கு வால் சிறியதாக இருக்கும்” என்று படித்தது காட்டெருமை.
ஆமாம் ! ஆமாம் @ அதனுடைய உருவத்திற்கு ஏற்றவாறு இல்லை. மிகவும் சிறியதாகத்தான் இருந்தது. மிகச் சரியாகச் சொன்னீர்கள்” என்று கூறியது கூட்டத்தில் இருந்த அத்தனை பேரையும் முண்டி அடித்துக் கொண்டு வந்து முன்னாள் நின்ற காட்டுப் பூனை.
”அதன் எடை நாலாயிரத்திலிருந்து ஆறாயிரம் கிலோவிற்கு மேல்” என்று படித்துவிட்டு புத்தகம் சொல்வதைப் பார்த்தால் கிட்டத்தட்ட என்னைப் போல் இரண்டு மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் போல இருக்கிறதே”
“அப்படியும் சொல்லலாம். ஆனால் இன்னும் அதனுடைய உருவத்தில் வித்தியாசமாக ஒன்று இருந்ததே. நீங்கள் எதற்கு அடுத்த பக்கத்தைப் படியுங்கள் அந்த வித்தியாசம் வருகிறதா என்று நான் கூறுகிறேன்” என்றது முயல்.
பொறுமையாக அடுத்த பக்கத்தைத் திருப்பிய காட்டெருமை “இதனுடைய கொம்புகள் மற்ற விலங்குகளைப் போல் தலைக்கு மேலே இல்லாமல் வாயின் இரண்டு புறங்களிலும் இருக்கும்”
“ஆமாம் வாயின் இரண்டு புறத்திலும்தான் இருந்தன. அதுவும் வெள்ளை நிறத்தில் இருந்தன”
“ஓஹோ அப்படியா!” என்று அடுத்த பக்கத்தைப் புரட்டியது காட்டெருமை. “ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் புத்தகத்திலும் அந்தக் கொம்புகளை வெள்ளை நிறம் என்று தான் போட்டு இருக்கிறது” என்றது.
கடைசியாக “அந்த விலங்கின் வாய் மிக நீளமாக இருக்கும் பாம்பைப் போல்” என்று கூறியவுடன் துள்ளிக் குதித்து ஓடி வந்த மான் ஆமாம் ஆமாம் ஆமாம் சரியாகத்தான் சொன்னீர்கள். அதனுடைய வாய் அவ்வளவு நீளம். இதுவரை நான் எந்த விலங்கிற்கும் அதுபோலப் பார்த்ததில்லை. எவ்வளவு நீளம் தெரியுமா அந்த வாயின் வழியாகத்தான் மரத்தின் மீது இருக்கும் கிளைகளை டபக்கு டபக்கு என்று ஒடித்துச் சாப்பிடுகிற அளவிற்கு. நான் கூட நினைத்துக் கொண்டேன் நமக்கும் இப்படி வாய் இருந்தால் எவ்வளவு சுலபமாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று” என்றது.
சரி சரி அந்த விலங்கு வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று ஏதாவது பக்கத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், அதன் அருகில் செல்லவே பயமாக இருக்கிறது. அது இதுவரை எந்த விலங்கையும் எந்தப் பறவையும் பிடித்துச் சாப்பிடவில்லை. எதற்கும் அதைப் பற்றித் தெரிந்து கொண்டு அதன் அருகில் செல்லலாமே. அந்தப் புத்தகத்தில் இருக்கிறதா என்று தேடிப் பாருங்களேன்” என்றது சிட்டுக்குருவி.
அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிய காட்டெருமை ஒரு பக்கத்தில் வந்து நின்று “அது நான் வெஜ் சாப்பிடாது. வெஜ் தான்” என்று கூறியது.
“அய்யய்யோ !அது இருக்கும் உருவத்தையும் அது தினமும் சாப்பிடும் இலை தழைகளின் அளவையும் பார்த்தால் வருங்காலத்தில் எங்களுக்கு எந்தப் புல் பூண்டும் கிடைக்காது போலிருக்கிறதே” என்றது மான் “ஆமாம் ஆமாம் என்று நமக்குத்தான் சிக்கலோ” என்றது முயல்.
“மனிதர்கள் ஆக்கிரமித்து ஆக்கிரமித்துக் காட்டின் அளவே சிறியதாகி விட்டது. இதற்குள் நாம் அனைவரும் வாழ்வதே மிகவும் சிரமமாக இருக்கிறது. இதற்கிடையில் கொஞ்ச நாள்லயே காடு முழுவதற்கும் மரங்களையும் இது சாப்பிட்டு விடும் போல் தோன்றுகிறது என்ன செய்வது”என்றது சிங்கம்.
“என்ன காட்டில் இருக்கிற எல்லாப் பறவைகளும் விலங்குகளும் ஒன்று கூடி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ன விஷயம்” என்று கேட்டுக் கொண்டே வந்தது தகைவிலான் பறவை.
“அடடே வாங்க தலைவரே! வாங்க வாங்க” என்றது சிறுத்தை.
“எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் தலைவர் என்று கூறாதீர்கள் என்று. எல்லோரும் சமம். எங்குமே தலைவரும் இல்லை தொண்டனும் இல்லை. எதற்கு என்னை தலைவர் என்று அழைக்கிறீர்கள்” என்று கேட்டது தகைவிலான்.
அப்படி அல்ல காட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் பல்வேறு நிகழ்வுக்காக வேறு காடுகளுக்குச் சென்று வருகிறீர்கள். காடுகள் மட்டுமல்லாமல் கடல் தாண்டியும் ஆறுகள் தாண்டியும் சென்று வருகிறீர்கள். வரும்பொழுது ஏராளமான விஷயங்களை எங்களுக்குச் சொல்கிறீர்கள். அதன் வழியாக இந்த உலகத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம் அல்லவா? அது மட்டும் அல்லாமல் உங்களுடைய நலனில் மட்டுமல்லாமல் இந்தக் காட்டில் இருக்கும் அத்தனை பறவை விலங்குகளின் நலனிலும் நீங்கள் அக்கறை கொள்கிறீர்கள். அதனால் தான் தலை என்று கூறுகிறோம்”
ஒரு சக விலங்காக உங்களோடு பயணிக்கும் ஒரு பயணியாகத்தான் உங்களுக்கு அனைத்தும் செய்கிறேன். சரி இருக்கட்டும் என்ன இன்று இந்நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டது தகைவிலான்.
அதுவா தலை வேறொன்றும் இல்லை. காட்டில் ஏதோ ஒரு புதிய மிருகம் சில நாட்களாக நடமாடிக் கொண்டிருக்கிறது. அந்த மிருகம் இலைத்தலைகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. உருவத்தில் பெரியதாக இருக்கிறது. ஆமாம் இந்தக் காட்டெருமையை விடப் பெரியதாக இருக்கிறது. என்ன செய்வது அனைத்து மரங்களையும் செடி கொடிகளையும் அழித்துவிடும் போலிருக்கிறது. எங்களுக்கு உணவு கிடைக்காது. இனி நாங்கள் எப்படிக் காட்டில் வாழப் போகிறோம். அதுமட்டுமில்லாமல் காட்டில் இருக்கும் அனைத்து மரங்களையும் அழித்துவிட்டால் இது காடாகவே இருக்காதே” என்றது மான்.
அடடே அந்த விலங்கைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சொல்ல மறந்து விட்டேன் நான்தான் அந்த விலங்கை என்னோடு அழைத்து வந்தேன். கடந்த முறை அருகில் இருக்கும் டார்ஜல் காட்டிற்குச் சென்றபோது இந்த விலங்கை அங்குப் பார்த்தேன்”
“அடடே டார்ஜல் காட்டிற்கு சென்றீர்களா அந்தக் காட்டிற்குத் தான் மனிதர்களே செல்ல முடியாதே”
“ஆமாம் அதற்குள்ளும் இப்பொழுது நுழைய ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் காட்டின் ஒரு பகுதி மட்டும் மிகவும் அடர்ந்த காடாக இருக்கிறது அங்கு தான் இந்த விலங்கைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த விலக்கைப் பற்றிய தகவல்களை அவர்கள் கூறும் பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த விலங்கு அழிந்துவிட்டது என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த விலங்கு இருப்பது தெரிந்தால் அவ்வளவுதான் இதைக் கொண்டு போய் ஏதாவது ஒரு மிருகக் காட்சிச் சாலையில் வைப்பார்கள். இல்லை என்றால் இதையும் கொன்று விடுவார்கள். அதனால் தான் நாங்கள் இந்த விலங்கைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். இந்த விலங்கு எங்கள் காட்டில் நூற்றுக்கும் அதிகமாக இருக்கின்றன.
மனிதர்கள் வர முடியாத ஒரு காடாக இந்தக் காடு இருப்பதால் இந்த விலங்கை நாங்கள் பாதுகாப்பதற்கு ஈசியாக இருக்கிறது என்று அந்தக் காட்டில் இருந்தவர்கள் விலங்குகள் கூறின. எதற்காக இந்த விலக்கைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்ட பொழுது வியப்பின் உச்சிக்குச் சென்று விட்டேன்.
பொதுவாகவே காடுகள் யாரால் உருவாகிறது” என்று தகைவிலான் கேட்டவுடன் “பறவைகளாலும் பட்டாம்பூச்சிகளாலும் தேன் பூச்சிகளாலும்” என்று கூறியது கரடி.
“ஆம் அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆதிகாலத்தில் அந்த விலங்கின் மூலமாகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற பெரும்பான்மையான காடுகள் உருவாகியதாம்”
“காட்டை அழித்தது என்றால் நம்பலாம் ஆனால் உருவாக்கியது என்றால் நம்ப முடியவில்லை. எப்படி?”என்று நமுட்டுச் சிரிப்போடு கேட்டது மயில்.
“அந்த விலங்கு ஏராளமான இலை தழைகளையும் பழங்களையும் சாப்பிடும் பொழுது அதனுடைய சாணத்தின் வழியாகக் காடு முழுவதும் அந்தப் பழத்திலிருந்து விதைகள் விழுந்து மரங்களாகின்றன” என்று கூறியது முதலை.
“ஓஹோ! அந்த விலங்கை நீங்கள் இங்கு அழைத்து வந்ததற்கான காரணம் இப்பொழுது எங்களுக்குப் புரிந்து விட்டது. நம் காடு அழிந்து கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய மரங்களும் செடி கொடிகளும் வர வேண்டும் என்பதற்காகத்தானே அந்த விலங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த விலங்கு மனிதர்கள் கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்வது?” என்று கேட்டது புலி.
” படாமல் பாதுகாக்க வேண்டும் . சரி வாருங்கள் அனைவரும் அந்த விலங்கைச் சென்று பார்ப்போம்” என்று கூறி அந்த மர்ம விலங்கை அனைத்துப் பறவைகளும் விலங்குகளும் காணச் சென்றன.
“தலைவரே அந்த விலங்கின் பெயரைக் கூறவில்லையே” என்று முயல் கேட்டவுடன்
“இந்தப் புத்தகத்தில் காட்டை உருவாக்கும் உயிரி யானை என்று போட்டிருக்கிறது. அந்த விலங்கின் பெயர் யானையா? என்று கேட்டது காட்டெருமை.
யானையா????
எழுதியவர்
-
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர்.
கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள்
சிறார் சிறுகதை தொகுப்புகள் :
நீல மரமும் தங்க இறக்கைகளும்,
கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி,
கிளியோடு பறந்த ரோகிணி,
யார் தாத்தா நீங்க?,
சின்ன வாத்தியார்.
சிறார் நாவல்கள் :
மந்திரக் கிலுகிலுப்பை,
நிழலைத் திருடிய பூதம்,
பேயாவது பிசாசாவது,
கடலுக்கடியில் மர்மம்,
சரசுவதிக்கு என்ன ஆச்சு?,
வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
இதுவரை.
- கட்டுரைகள்11 November 2024எதிர்ப்புக் குரலின் பேரழகி – வாரிஸ் டைரி
- சிறார் இலக்கியம்18 January 2024கதை சொல்லும் மரம்
- சிறார் இலக்கியம்9 June 2023தங்க முக்கோணம்
- சிறார் இலக்கியம்23 April 2023காட்டுக்குள் மர்ம விலங்கு