செவ்வந்தி தனது வீட்டுத் திண்ணையை வாளி நீர் இறைத்து ஈர்க்குமாறால் கழுவிக் கொண்டிருந்தாள். சலக் சலக்கென சப்தமிட்டபடி தரையெங்கும் ஓடிப் படர்ந்த நீர் திண்ணையிலிருந்து சிறு அருவி போல் கொட்டி தரையில் ஓடை போல் ஓடியது. . பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்; அந்த நீரை விளையாட்டாய் தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் குதூகலம் நிரம்பிய நாள். இன்று வெள்ளிக் கிழமை என்பதுதான் முதன்மை. செவ்வந்தியின் வீட்டில் ஒலியும் ஒளியும் பார்க்கும் நாள்.
அந்த காம்பவுண்டு வீட்டிற்குள் எட்டு வீடுகள் இருக்கின்றன. தாழ்வாரம் தாங்கிய ஒரு விசாலமான திண்ணையுடன் ஒரே ஓர் அறை கொண்ட வரிசை வீடுகள். அந்த அறைக்கு எதிரேயே பத்தடி தூரத்தில் அந்தந்த வீட்டிற்கான சமையலறைகள், சமையலறையொட்டி சிறிய ஜலதாரை போய்க்கொண்டிருந்தது. அறைக்கும் சமையலறைக்கும் நடுவிலிருந்த அகலமான பொது நடையில் சிமெண்ட் தரை பூசப்பட்டிருந்தது. எட்டாவது வீட்டின் முடிவில் பொதுக் குளியலறையும் கழிவறையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த எல்லா வீட்டிற்கும் சேர்த்து பொது மரக்கதவு ஒன்று கரும் பாசி படர்ந்து கிடந்தது. இரவில் பூட்டிவிட்டால் அந்த காம்பவுண்டுக்குள்ளேயே பொது நடையில் பிள்ளைகள் விளையாடுவதும், வயதானவர்கள் கயிற்றுக் கட்டிலை அவர்களின் வாசல் முன் போட்டுப் படுத்துக்கிடப்பதும் இரவில் நிலவின் ஒளியில் வெளியமர்ந்து உணவருந்துவதும் கதையளப்பதுமாக இருந்தார்கள். பகலில் அந்த பொதுக்கதவு திறந்தே இருக்கும்.
அந்த காம்பவுண்டு வீட்டின் முதல் வீடு செவ்வந்தியுடையது. தனித்து வசிப்பதால் அந்த அறை கலையாத புத்தம் புது உடுப்பு போலிருக்கும். படுக்கை விரிப்பின் சலவை வாசம் அந்த அறை முழுவதும் நிரப்பியிருக்கும். அவள் வீட்டில் டிவி வந்துவிட்டது. சமீபமாகத்தான் வாங்கியிருந்தாள். டிவியை சுவரையொட்டி பொது நடை, சமையலறை வரை வெளியிலிருந்தே அனைவரும் பார்க்கும்படி மத்தியில் வைத்திருந்தாள். டிவியை மூடுவதெற்கென ஒரு மிருதுவான கரும்பச்சை திரையை அதன் தலையில் முக்காடு போட்டிருந்தாள்.. அலங்காரம் செய்யப்பட்ட கடவுளைக் காணத் திரையை விலக்குவது போலிருக்கும் அவள் திரையை விலக்கி டிவியை சொடுக்கும் போது. தங்களுடைய காம்பவுண்டிலேயே டிவி வந்துவிட்டதால் அங்கு வசிப்பவர்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். முன்பு போல் ஓனரம்மா வீட்டின் வெளியில் நின்று கும்பலில் எட்டி எட்டி டிவி பார்க்கும் நிலைமை இனி இல்லை. . அது கருப்பு வெள்ளை டிவிதான். ஆனால் செவ்வந்தி வீட்டில் அதிசயமான கலர் டிவி. இந்த டிவியின் கண்ணாடி சற்று குவிந்து வழுவழுவென சாம்பல் நிறத்தில் இருந்தது. கடித்துச் சாப்பிடலாம் போலதொரு தோற்றம்.. டிவியின் பக்கவாட்டில் பெரிய பெரிய பொத்தான்கள் இருந்தன.
வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் அனைவரையும் டிவி பார்க்க அனுமதித்திருந்தாள். இரண்டடிக்கு தள்ளித்தான் அமர்ந்து பார்க்க வேண்டும். அந்த அறையில் ஆரம்பித்து திண்ணை, வாசற்படிக்கட்டுகள் மற்றும் பொது நடை வரை கூட்டம் கூடியிருக்கும். டிவியை என்றாவது தொட்டுப் பார்த்திடவேண்டும் என்பது பிள்ளைகளின் ஆசை. ஆனால் செவ்வந்தி விடமாட்டாள். கையை கொண்டு போய் தொடுவது போல் நீட்டிப் பின் கையை இழுத்துக் கொண்டு அந்த உணர்வையும் அந்தப் பிள்ளைகள் ரசிப்பார்கள்.
அவர்களின் உலகில் பெரும் கவர்ச்சிப் பொருளாக மாறிப்போனது செவ்வந்தி வீட்டு டிவி. ஏதாவது மாய மந்திரம் நடந்து இந்த டிவி தங்கள் வீட்டில் வந்துவிடாதா என காம்பவுண்டு வீட்டுப் பிள்ளைகளின் மனதில் ஏக்கம் சுடர் விட்டுக்கொண்டிருக்கும்.
மாலை ஆனதும் தரை முழுவதும் பாயைப் போட்டு விடுவாள். பின் இலேசாக வாசனை கமிழும் வெளிநாட்டு அகர்பத்தியை ஓரமாய் செருகி வைத்துவிடுவாள். இரவு எட்டு மணிக்கு வரும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்கு பிள்ளைகள் மாலையிலேயே இடம் பிடிக்க வந்து அமர்ந்துவிடுவார்கள். பக்கத்து காம்பவுண்டு வீட்டுப்பிள்ளைகளும் வந்துவிடுகிறார்கள். .
எல்லா வெள்ளி போலவே இந்த வெள்ளியும் இப்படி செவ்வந்தி திண்ணையைக் கழுவுவதில் ஆரம்பித்தது அந்த காம்பவுண்ட் வீட்டினருக்கு. மாலையில் முன்னதாகவே வந்த பிள்ளைகளுக்கு காரப்பொரியைத் தந்தாள் நல்லெண்ணெய் விட்டு ,காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, பொரியை மஞ்சளிட்டு வறுத்து கரக்மொறுக்கென ,மஞ்சள் பொடியின் வாசனையுடன் பொரியைச் சாப்பிட்ட போது அந்த மாலைக்குக் கூடுதல் அழகும் சேர்ந்தது. அவள் தனது சூடான காபியில் காரப்பொரியைச் சிறிது இட்டு அதனைக் குடிப்பாள். அவளுக்குக் காபியை அப்படிக் குடித்தால்தான் பிடிக்கும்.
அவள் வீட்டின் முன் தான் எல்லா குடும்பங்களும் கிடந்தது. நெருக்கி, முறுக்கி, ஒருவர்மீது ஒருவர் அமர்ந்தும் படுத்துமாக ஒளிப்பரப்பாகும் புதுப்பாட்டுக்களை ரசிக்க ஆரம்பித்தார்கள். இடையே வரும் ” சொட்டு நீலண்டோய், ரீகல் சொட்டு நீலண்டோய்” விளம்பரத்துடன் பிள்ளைகளும் சேர்ந்து மனப்படமாய் கோரஸ் பாடினார்கள். பெண்கள் லிரில் சோப் விளம்பரத்தில் அருவியில் குளிக்கும் பெண்ணை உற்றுப் பார்த்தார்கள். எண்ணெயில் பொரியும் ராட்சச பூரியையும் வடையையும் தொட்டு ருசிக்கும் சிறு பையன் வரும் விளம்பரம் அடுத்த வீட்டு மகேசிற்கு பிடிக்கும். “அதா மாரியே செஞ்சு தர்றயா அம்மா” என தன் அம்மா மேகலாவிடம் நச்சரித்தான்.
இவர்களின் மகிழ்ச்சியில் செவ்வந்தி பங்கு பெறாமல் சற்று கூச்சத்துடன் ஒதுங்கியே மேலே கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்., தன்னால்தான் இத்தனை குடும்பங்கள் குதூகலமாய் அமர்ந்திருக்கின்றன என்ற இலேசான கர்வமும், சிறு புன்முறுவலை அவள் உதட்டோரம் சுழித்திருந்தது. அவளுக்கும் அவர்களுக்குமான இடைவெளியை அவளே வெளிக்காட்டாவிட்டாலும் எப்படியோ மற்றவர்களுக்குத் தோன்றிவிட்டது.
சகஜமாய் அவள் மற்றவர்களிடம் பேசியதில்லை என்பதும் காரணம். டிவி பார்க்கும் சமயங்களைத் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் வீட்டுக்குள்ளேயேதான் இருப்பாள். டிவி வருவதற்கு முன் அவள் வீட்டில் ரேடியோ ஒலித்தது. கூடை பின்னிக் கொண்டே பாட்டுக் கேட்பது, அல்லது டேப்பில் புதுப்படத்தின் வசனம் கேட்பது எனப் பொழுதை போக்குவாள்.அவளுக்காக இல்லையெனினும் நேயர் விருப்பம் போல் பக்கத்து வீட்டு மகேசின் அக்காவான கஸ்தூரி மற்றும் அவளது தோழிகளின் விருப்பத்திற்காய் அவர்கள் கேட்கும் பாடல்களை ஒலிக்க விடுவாள். இரு வீட்டிற்கும் உள்ள பொதுச்சுவரில் ஜன்னல் இருப்பதால் அடுத்த வீட்டிற்கும் நன்றாகக் கேட்கும். பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் பதினேழு வயது கஸ்தூரிக்குப் பாடல்கள் என்றால் பெரும் விருப்பம். சமீபமாய் வெளியான இதயத்தைத் திருடாதே பாடல்களைக் கேட்டால் ஆடாமல் அசையாமல் வேறொரு உலகத்திற்குச் சென்றுவிடுவாள். அவள் அம்மா மேகலா ” எப்பவும் மதப்புலையே திரி. சித்திராங்கி” எனத் திட்டிக் கொண்டிருப்பாள்.
செவ்வந்தி வீட்டுத் திண்ணைதான் எல்லாப் பிள்ளைகளுக்கும் மதிய நேரத்தில் விளையாடும் இடம். மற்ற எல்லா வீடுகளின் திண்ணைகளும் தட்டுமுட்டுச் சாமான்களால் நிரம்பியிருப்பதோடு, எல்லோர் வீட்டுப் பெண்களும் திண்ணையிலமர்ந்து பூக்கட்டும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள். முல்லைப்பூ, ஜாதிப்பூ என உதிரி மொக்குகள் மூட்டையாய் வரும் . அவற்றைக் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை கட்டிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு காலை மடக்கி, மறு காலை நீட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் குன்று போல் குவிந்திருக்கும் ஈரப் பூக்களை நாரில் கட்டத் தொடங்குவார்கள். கை விரல்கள் எப்பொழுது பூக்களை எடுக்கின்றன எப்போது நாரில் பின்னுகின்றன என்பதே தெரியாதபடி வேகமாய் லாவகமாய் இருக்கும். சில வீட்டில் யாராவது பூக்களை ஜோடி ஜோடியாய் காம்புடன் சேர்த்து வைப்பார்கள். அதனை மற்றொருவர் எடுத்துக் கட்டுவார். கடைக்காரர்கள் மாலையில் வந்து கூலி கொடுத்து, கட்டிய பூச்செண்டுகளை எடுத்துச் செல்வார்கள். காலையில் வரும் மொட்டுகளால் மாலையில் ஏனைய காம்பவுண்டு வீடுகள் மலர்ந்திருந்தன.
பிள்ளைகள் பூக்கட்டும் அம்மாக்களைத் தொந்தரவு செய்யாமல் செவ்வந்தி வீட்டுத் திண்ணையில் விளையாடுவார்கள். இவள் வீட்டுத் திண்ணை சில்லென சுத்தமாய் இருக்கும். காம்பவுண்டு பிள்ளைகள் அங்கே அமர்ந்து ராஜா ராணி , அஞ்சாகல் , வெயிலில் படச்சுருளைக் கொண்டு சுவரில் படம் காண்பிப்பது எனப் பொழுதை போக்குவார்கள். செவ்வந்தியும் அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பாள், சிலசமயம் அவர்களுக்கு தின்பண்டங்கள் தருவாள். இல்லையெனில் கதவைச் சாத்தி வீட்டிற்குள் இருப்பாள்.
” அப்படி என்னதான் உள்ளே செய்வாளோ” , ” அவளுக்கென்னப்பா, வூட்டுக்காரர் துபாய்ல வேலை பாக்குறார். வேணுங்கறத வாங்கிப் போட்றார். நம்மள மாதிரி இழுபறி பொழப்பா அவளுக்கு ?
“இவ குடி வந்து மூணு வருஷம் ஆயிருக்குமா? ஒருவாட்டி கூட வூட்டுக்காரரு வாராம இருக்காரு? என அவளைப் பற்றி பேச்சுக்கள் வராமலிருந்ததில்லை. அவளிடமும் விவரங்களை கறப்பது லேசுபட்ட காரியமில்லை. அத்தனை அழுத்தமாய் இருந்தாள்.
அவளிடம் பேச்சுக் கொடுத்தால் நாலு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் பேசுவதே அதிகம்.” ம்ம்”, “இல்லை”, “ஆமா” என்பதிலேயே எல்லாவற்றையும் முடித்துவிடுவாள். . செவ்வந்திக்குக் குழந்தைகள் கண்டால் மட்டும் பிடிக்கும். தேடிச் சென்று கொஞ்சுவாள். கைக்குழந்தையை வைத்திருக்கும் கடைசி வீட்டு வடிவு தனது மூத்த குழந்தையைச் சில நேரம் செவ்வந்தியிடம் விட்டு விடுவாள். மறுப்பு சொல்லாமல் புன்சிரிப்புடன் வாங்கிக் கொள்வாள்.
பொலிவு தரும் காபி நிறத்தைக் கொண்டவள் செவ்வந்தி. வெள்ளைக் கற்கள் பதித்த பெரிய மூக்குத்தியை அணிந்திருந்தாள். சின்னஞ்சிறு தங்க மணிகள் அந்த மூக்குத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும்.
மின்னும் காபி நிற முகம் சிரிக்கும் போது, பற்களும், மூக்குத்தியும் , கண்களும் ஒரே நேரத்தில் வெண்மையைப் பளிச்சிட்டு ஒரு மாய வித்தை தரும். அதனை அத்தனை எளிதாகத் தரிசிக்க முடியாதபடி அவள் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பாள். அவளுடைய பூப்பு நீராட்டு புகைப்படம் ஒன்று அப்படியான தரிசனத்துடன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்ப்பவர்களுக்குப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்ற உணர்வைத் தர வல்லது. இது தவிர அவளும் அவள் கணவனும் மாலையுடன் இருக்கும் திருமணப் புகைப்படம் ஒன்று சுவரில் மாட்டியிருக்கிறது. அவள் கணவனைப் பற்றிக் கேட்கும் யாவரிடமும் துபாயில் மூன்று வருட கான்ட்ராக்டில் சென்றிருக்கிறார். மீண்டும் கான்ட்ராக்ட் நீட்டித்திருப்பதால் இன்னும் சில காலம் ஆகும் என்று மட்டும் சொன்னாள். அவள் உறவினர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக வருவதில்லை. எப்போதாவது அவள் அம்மா வீட்டிற்கு வருவார். பக்கத்து வீட்டினர் அவளுடைய அம்மாவிடமிருந்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். கணவன் மணமான பத்து நாட்களிலேயே துபாய் சென்றுவிட்டான். செவ்வந்தி மாமியார் எப்போதும் சண்டை சச்சரவு, தொட்டதெற்கெல்லாம் குற்றம், அழுகை என தொடர்ந்ததால் தனியாக இங்கு வந்து குடியிருக்கிறாள் எனச் சொன்னார். எப்போதாவது ஊருக்கு போவாள். அவள் கணவன் பக்கமிருந்து ஒருவரும் இதுவரை வந்ததில்லை.
தினமும் அவள் வீட்டுப் பாத்திரங்களைத் துலக்க பொன்னாயம்மாளை வேலைக்கு வைத்திருந்தாள். பொன்னாயம்மாள், அந்த வீதியின் தொடக்கத்தில் இருக்கும் அரசமரத்தின் கீழ் வசிப்பவள். மனம்பிறழ்ந்தவள். ரவிக்கை இல்லாமல், பின் கொசுவம் வைத்த சேலை கட்டியிருப்பாள். சொட்டை விழுந்த தலையில் முடிகள் பனங்காய் நாற் போல் ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருக்கும். எப்போதும் தனித்துப் பேசிக் கொண்டிருப்பாள். அரச மரத்தடி இருக்கும் பொதுக்குழாயில் தினமும் காலையில் குளித்து உடுத்தியிருக்கும் சேலையைத் துவைத்து மற்றொரு சேலைக் கட்டிக் கொள்வாள். எங்கிருந்தோ ஒரு பூவை எடுத்து அங்கு வீற்றிருக்கும் அரசமரப் பிள்ளையாரின் தலையில் வைத்து, அவருடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பாள். அரச மரத்தடியில் ஓர் அழுக்குப் பையை வைத்திருந்தாள். அதில் நாலைந்து சேலைகளும் ஒரு மூட்டையும் இருக்கும். அவளது சேலை முந்தானையில் எப்போதும் சில்லறைக் காசுகளை முடிந்து வைத்திருப்பாள்.. வாய் நிற்காமல் ஏதோ முனகிக் கொண்டே இருக்கும்.
தோன்றும் போது எதிரில் தென்படும் எவரையாவது தடுத்து நிறுத்தி, ” அந்த எடுபட்ட மவன் இருக்கானுல்லோ, அவந்தே எல்லாத்தையும் புடுங்கிபோட்டான். போலிஸ் கேஸ்லாம் கொடுத்திருக்கேன். போலிஸ் வார்றதா சொன்னாங்க” என மிகத் தீவிரமாய் பேசுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு சுருங்கிய கண்ணை விரித்து பேச்சு கொடுப்பாள். பலர் பயந்து விலகி நடப்பார்கள், சிலர் சிரித்துக் கடப்பார்கள்…
பொன்னயம்மா என்ன வேலை கொடுத்தாலும் செய்வாள். அவளிடம் பேச்சு கொடுத்தால் சில சமயம் நன்றாக பதில் சொல்வாள். ஆனால் அவளிடம் சென்று ” காசு இருக்கா? காசு தர்றயா? என மட்டும் கேட்கக் கூடாது. அங்கிருக்கும் பொடியன்களுக்கெல்லாம் அவளிடம் வம்பளப்பதுதான் வேலையே. புதிதாய் நண்பன் சிக்கினால் ” அந்த ஆயாட்ட போய் காசு தர்றயானு கேளேன் “என சொல்வார்கள். அந்தப் பையனும் விவரமறியாமல்” “ஆயா காசு தர்றயா”? எனக் கேட்டதும் எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியவில்லை. அவனைக் கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டி, அடிக்க பாய்வாள். உடனே பிள்ளைகள் எல்லாம் சிரித்துக் கொண்டே அங்கிருந்து தலைதெறிக்க ஓடுவார்கள்.
பொன்னாயம்மா, பெருந்துறையைத் தாண்டியிருக்கும் வேட்டுப்பாளையமருகே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் எனவும் அவள் உறவினர்கள் அவளுடைய சொத்தை பிடுங்கிக் கொண்டு அவளுக்கு மாந்திரீகம் செய்துவிட்டதால் பைத்தியமாகிவிட்டதாகவும், அதனால்தான் காசு பற்றிக் கேட்டால் அவள் கோபமாகிவிடுவாள் எனவும் அங்குப் பேசிக் கொள்வார்கள். பொன்னாயம்மாள் ஏதாவது வீட்டிற்குச் சென்று வாசல் பெருக்கி, சாணி மெழுகித் தருவாள், அல்லது பாத்திரங்களைக் கழுவித் தருவாள். அவர்கள் தரும் காசை முந்தானையில் முடிந்து முன்பக்கம் கட்டிக் கொள்வாள். காசுகளைக் கண்ணுங்கருத்துமாய் எண்ணி வைத்துக் கொள்வாள்.
செவ்வந்தி வீட்டிற்குத் தினமும் வருவாள். சமையற்கட்டுக்கு முன்னிருக்கும் ஜலதாரை அருகே போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டே, வாயைக் குவித்தபடி ஆரம்பிக்கும் அவள் பேச்சு , பாத்திரங்கள் கழுவி அந்த இடத்தைச் சுத்தம் செய்து காசு வாங்கி வெளியில் போகும் வரை ஒலித்துக் கொண்டேயிருக்கும். நடு நடுவே செவ்வந்தி ” உம், சரி” சொல்ல வேண்டும். செவ்வந்தி அவள் பேசுவதைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டேயிருப்பாள். பொன்னாயம்மாள் அடுக்கும் புகார்களைக் கேட்கும் ஒரு ஜோடிக் காது செவ்வந்தியுடையதாக மட்டுமே இருந்தது. அது போலவே செவ்வந்தியின் உள்ளார்ந்து புன்சிரிப்பை மீட்டது உள்ளொன்றும் புறமொன்றும் அறியாத பொன்னாயம்மாளின் பேச்சாகவே இருந்தது.
அன்றைய வெள்ளிக்கு இனாமாக சனிக்கிழமையும் அந்த காம்பவுண்ட் வீட்டினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். ஊரில் பிரபலமான சவுண்ட் சர்வீஸ் கடை வைத்திருக்கும் ரவியிடம் டெக் வாடகைக்கு வாங்கி வந்தாள். இதைக் கேள்விப்பட்டதும் ஆளாளுக்கு வந்து என்ன படம் எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.
“இதயத்தை திருடாதே அக்கா. பயங்கர டிமாண்டு. நாலு நாள் முன்னாடியே சொல்லி வச்சு வாங்கியாந்தேன்.” என விசாரிப்பவர்களிடம் பதில் சொன்னாள். இதயத்தைத் திருடாதே படம் எனக் கேள்விப்பட்டதும் அந்த வீதியில் இருக்கும் இளம்பெண்கள் எல்லாம் மதியமே செவ்வந்தியின் திண்ணையை ஆக்கிரமித்தார்கள். ” இந்த படத்துல வாய்ல முத்தம் தர்ற சீன்லாம் இருக்காம்” என மெதுவாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தனர். எல்லோர் முகத்தில் ஒரு குறுகுறுப்பு தளும்பியிருந்தது. கஸ்தூரி, அவளது தோழி மஞ்சுவிடம் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் இருக்கும் ஒரு பையனைப் பற்றி வெட்கத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள் “அக்கா என்னன்னு எனக்கும் சொல்லு இல்லைனா அம்மாட்ட சொல்லுவேன் என மகேசன் நச்சரித்துக் கொண்டேயிருந்தான். எரிச்சலில் “போடா சனியனே. நிம்மதியா இருந்தாலே உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே” என அவன் கையை கிள்ளி, தள்ளிவிட்டாள். அவன் வீச்சென அழுது கொண்டே அவன் அம்மாவிடம் முறையிடசென்றான்.
படம் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் எல்லாம் முன்னதாகவே அங்கு வந்து அமர்ந்திருந்தார்கள். பெண்கள் கூட்டமே அதிகமிருந்தது. ரோட்டின் மேலே மளிகைக் கடை வைத்திருக்கும் வீராயக்கா பேத்தியான அம்பிகா யாரோ ஒருவனை சாமத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து கலவரமாகிப் போன கதையை மீண்டும் அங்கு அசை போட ஆரம்பித்தார்கள்.
படம் ஆரம்பிக்கும் வரை அம்பிகாவில் ஆரம்பித்து அயலூர் வரை வம்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. படம் முடிந்ததும் ” இதுக்குதே வரோனு வரோனும்னு முண்டியடிச்சு இந்தப்படம் பாக்க வந்தீங்களா குமரிகளா? என அம்மாக்கள் சிரித்தபடி கேட்டுக்கொண்டே அவரவர் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்கள்.
ஒரு நாள் செவ்வந்தியைத் தேடி ஒருவன் வந்தான். படித்த களையில் அவன் நடை உடை இருந்தது. அவனைப் பார்த்தும் பார்க்காதது போலச் செவ்வந்தி நடந்து கொண்டதை கண்ட காம்பவுண்ட் வீட்டினர் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர். கண்களையும் காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டனர். வீட்டு வேலை முடிந்ததும் வீட்டிற்குள் அவள் மட்டும் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள் அவன் திண்ணையிலேயே மௌனமாய் அமர்ந்து பின் கிளம்பிப் போய்விட்டான்.
அதோடு நின்றுவிடவில்லை. தினசரி அவ்வாறு வந்தான். அதே போல் திண்ணையில் அமர்ந்தான். அவளும் கண்டும் காணாமல் வீட்டிற்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். யாரும் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. செவ்வந்தியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு வெள்ளி ஞாயிறுகளில் பார்க்கும் பாட்டுகள் முக்கியம், படங்கள் முக்கியம். அதிலும் அந்த கலர் டிவி முக்கியம்.
அவன் அவ்வாறு ஒரு நாள் வந்த போது, டிவியோ, ரேடியோவோ தேவைப்படாத நான்காவது வீட்டு பாப்பம்மா கிழவி தடியை ஊன்றி, ஊன்றி நடந்து வந்து அவனிடம் கேட்டாள்.
” ஆருப்பா நீ இவத்தையே இருக்கியே?”
” இவிக என் சொந்தக்கார பொண்ணு ஆத்தா”
” நீ சொந்தங்கற, அவ பாட்டுக்கு கதவ சாத்திட்டு உள்ளார போயிட்டா? என மீண்டும் கேள்வி கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவன் கட்டியிருந்த கடிகார முள்ளைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
“என்னமோ போ ” என்று புலம்பியபடி திரும்பி விட்டாள்.
இன்னொரு முறை வரும் போது கையில் ஒரு டிரான்ஸ்ஸிஸ்டர் கொண்டு வந்து பாடல்கள் கேட்டுக் கொண்டிந்தான்.
” டேய் அந்த அண்ணங்கையில இருக்க பொட்டி பாடுதுடா” எனப் பக்கத்து வீட்டு வாண்டுகளான மகேசும், அருணும் வந்து வியப்பாகப் பார்த்தார்கள். பிறகு அவன் அடிக்கடி வரும் போதெல்லாம் அந்தப் பிள்ளைகளைக் கூட்டுச் சேர்த்து ட்ரான்ஸிஸ்டரில் பாடல்களைக் கேட்பான். இல்லையெனில் பேச்சுக் கொடுத்து நேரத்தை போக்கிக் கொண்டான்.
அக்கம்பக்கத்தினரின் சலசலப்பைக் கண்டுகொண்ட செவ்வந்தி ஒரு நாள் அவனை உள்ளே அழைத்துக் கொண்டாள். நாளடைவில் அவளும் அவனுடன் சகஜமாக இருக்கத் தொடங்கினாள். இருவருக்கும் பேச வார்த்தைகள் அதிகம் தேவைப்படவில்லை. ஒருவருக்கொருவர் தலையாட்டுவதிலும், மௌனத்திலும், ஒற்றை வார்த்தைகளிலும் அர்த்தம் புரிந்துகொள்ளும் நிலையில் இருந்தார்கள். தினமும் மாலையில் வந்து சிறிது நேரம் இருந்துவிட்டுச் செல்வான்.
அவன் வரும் போது பாப்பம்மா கிழவி வேண்டுமென்றே தனது பேரன் அருணை அவள் வீட்டுக்கு உளவு பாக்க அனுப்புவாள்.
” ஒண்ணுமில்ல ஆத்தா. அந்த அண்ணன் டேப்ரிக்கார்டர் பக்கத்தால உக்காந்துட்டு ஒவ்வொரு கேசட்டா போட்டுகிட்டு இருந்தாரு. செவ்வந்திக்கா எதுத்தாப்ல காலை நீட்டிட்டு கூடை பின்னிகிட்டு இருந்துச்சு. அவ்வளவுதே” எனச் சொன்னான். பாப்பம்மாவுக்கு சப்பென்றிருந்தது. இவனிருப்பதால் அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொண்டாள்.
அவன் மாலை நேரத்தில் அவள் வீட்டிற்கு வரும் பொழுதே அவளுக்குப் பிடித்த சோன்பப்டி வாங்கி வருவான். கூம்பு வடிவக் காகிதப் பொட்டணத்தில் பொங்குவது போல் கீற்றுக் கீற்றாய் வெண் நிறத்தில் இருக்கும் சோன்பப்டியைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் எட்டிப்பார்க்கும். இறுக்கங்கள் இல்லாத அவள் முகம் இன்னும் அழகைக் கூட்டியிருக்கும். அவளுக்குத் தேவையான வீட்டுச் சாமான்களை வாங்கி வருவான். அவளுடன் கடைக்குச் சென்று பைகளைச் சுமந்து வருவான். உடல் நலமில்லையென்றால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வான்.
அவனுடன் புல்லட் வண்டியில் எங்கோ செல்வாள். அவள் சென்றதும், அவள் சினிமாவிற்குச் சென்றிருக்கிறாளா? உணவகத்திற்கா? அல்லது வேறெங்காவது செல்கிறாளா? எனக் கூடி ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள் அந்த காம்பவுண்ட் வீட்டினர். ஆரம்பத்தில் அந்த காம்பவுண்டில் எல்லாரும் மறைமுகமாக முகம் சுளித்துக் கொண்டார்கள். இப்போது அவன் வருகை பழகிப் போனது.
செவ்வந்திக்கு வீட்டிற்கு வரும் அவன் ஒரு கேசட்டை அவளிடம் கொடுத்தான். பால் நிற கேசட் அது. அதனைக் கஸ்தூரி பார்த்துவிட்டாள்.. அந்த கேசட்டில் என்ன இருக்கிறதென தெரிந்து கொள்ள ஆசை. பாடலோ அல்லது அவன் தனது குரலைப் பதிவு செய்ததோ? என அந்த வயதில் உண்டான குறுகுறுப்பு அவளுக்கு. வழக்கமாய் செவ்வந்தி குளிக்கச் செல்கையில் கதவை வெறுமனே சாத்திச் செல்வது வழக்கம் அல்லது பக்கத்து வீட்டில் யாரையாவது பார்த்துக் கொள்ளச் சொல்வது வழக்கம். அன்று அப்படி கஸ்தூரியை பார்த்துக் கொள்ளச் சொன்னவுடன் அவளுக்குள் அந்த குறுகுறுப்பு தலைதூக்கியது. செவ்வந்தி குளித்து வருவதற்குள் அவளும் அவளுடைய தோழிகளும் சென்று அந்த கேசட்டை தேடினார்கள். அங்கிருந்த பல கேஸ்ட்டுகளில் பால் நிற வெள்ளை கேசட்டை கண்டுபிடிப்பதற்கு சிரமப்படவில்லை.. அது டேப்ரிக்கார்டின் அருகிலேயே கிடந்தது. இவர்கள் அவள் வருவதற்குள் கேட்கவேண்டுமென அதனைக் குறைந்த ஒலியில் கேட்க முனைந்தார்கள். அவ்வப்போது அவள் வருகிறாளா எனக் கவனித்துக் கொண்டார்கள். அது ஓடத் தொடங்கியதும் ” ஒ ப்ரியா ப்ரியா” பாடல் ஒலித்தது. அதனைத் துரிதமாய் முன் செலுத்தி அடுத்து என்னவென்று கேட்டார்கள் , ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு பக்கமும் அதே பாடல்தான் இருந்தது. அதனை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்து ஒன்றும் அறியாதவர்கள் போல் இருந்துவிட்டார்கள். ஏன் ஒரே பாடலை கேசட் முழுக்க பதிவு செய்து தந்திருக்கிறான் என அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் கஸ்தூரி , செவ்வந்தியிடம் கேட்டாள். “அக்கா உங்களுக்கு ஒரே பேர்தானா?”
” இல்ல. வீட்ல ப்ரியான்னு கூப்பிடுவாங்க. ஸ்கூல்ல செவ்வந்தி. ஏங்கேக்கற?” எனக் கேட்டாள் ஒயரில் செய்த கிளிகளை வட்ட வடிவ வளையத்தில் மாட்டியவாறு.
” இல்ல செவ்வந்திங்கற பேரு பழசா இருக்கேன்னு கேட்டேன்”
செவ்வந்தி சிரித்துக் கொண்டே எல்லா கிளிகளையும் வளையத்தில் மாட்டிவிட்டு வளையத்தை தூக்கிப் பிடித்தாள். வளையத்தில் பிளாஸ்டிக் கிளிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.
எல்லோரும் குறிப்பாக செவ்வந்தி இருக்கும்பொழுது ரேடியோவில் “ஓ ப்ரியா ப்ரியா” பாடல் ஒலித்தால், கஸ்தூரியும் அவள் தோழிகளும் அந்த கேசட்டை நினைத்து ரகசியமாய் சிரித்துக் கொள்வார்கள்.” நானும் பாக்கறேன் எப்பவும் கெக்கே பிக்கேன்னு என்னடி நினைச்சுருக்கீங்க. மஞ்சு இரு உங்கம்மாட்ட வந்து என்னான்னு கேக்கறேன்” என மேகலா திட்டிக் கொண்டிருந்தாள். ஏதும் புரியாமல் செவ்வந்தியும் தன்பாட்டுக்கு மென்சிரிப்போடு அவர்கள் சண்டையைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.
செவ்வந்தி தீபாவளியன்று பொன்னாயம்மாவிற்கு ஒரு புதுச்சேலை ஒன்றைக் கொடுத்தாள். ” இதாரு கண்ணு, எங்கூட்டுக்காரு கொடுக்கச் சொன்னாரா ?” எனக் கேட்டு முதன் முறை சிரித்தாள். அவள் சிரித்து செவ்வந்தி பார்த்ததில்லை. வேற்று முகம் போல் தெரிந்தது. மஞ்சளும் பூஞ்சையுமாக நாலைந்து முன்பற்களே மேலும் கீழும் இருந்தன. பல நாட்களுக்கு அந்த ஊதா நிற புதுச்சேலையையே கட்டிக் கொண்டு வலம் வந்தாள் பொன்னாயம்மா.
செவ்வந்தி குழந்தைகளையும் பொன்னாயம்மாளையும் தவிர அங்கிருக்கும் மற்றவர்களை ஓர் எல்லைக்கு அப்பால் வைத்திருந்தாள். தினமும் பால் ஊற்றும் முருக சாமி அவளிடம் வழியப் பேசுவதைக் கண்டு அவரிடம் பால் வாங்குவதை நிறுத்தினாள்.
” ஏன் பால் வாங்கறதில்ல கண்ணு? அட உனக்கு மட்டும் தண்ணி கலக்காத ப்ரெஷான பால தர்றனாக்கும் ?” என வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்து வந்து நச்சரிப்பது இன்னும் செவ்வந்திக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவள் பதில் சொல்லும் போது அவன் கண்கள் அவளது உடலில் மேயும். ஒவ்வாமையால் உடலெல்லாம் பூச்சிகள் ஊர்வது போலிருக்கும் அவளுக்கு. இதைக் கவனித்த பக்கத்து வீட்டு மகேசம்மாதான் அவனிடம் சண்டை போட்டாள்.
“அவளுக்கு இஷ்டமில்லாக்கா உட்டுட்டு போக போவேண்டியதுதான. அதென்ன பொட்டபுள்ளகிட்ட வந்து வம்பு பேசறது?
“இந்தம்மாளுக்கு வேனாம்னா எனக்கு நஷ்டமாகுதல்ல.. இப்ப திடீர்னு வேணானாக்க எங்க போய் வேறாள நாம் புடிக்கறது?”
அதுக்கு? உங்கிட்டதான் வாங்கோனும்னு சட்டமா போட்டிருக்கு ? நானும் பாக்கறேன் தினமும் வந்து நச்சிட்டு கிடக்கற..இனி இங்க வார்றது வச்சுக்காத ” எனக் கொஞ்சம் அதிர்ந்து பேசியதும் அவன் புலம்பியபடியே சென்றுவிட்டான்.
பொன்னாயம்மா இரு நாட்களாகவே வரவில்லை. பாத்திரங்கள் துலக்கப் போட்டுக் காய்ந்துபோய், அதன் பின் இவள் துலக்கினாள். கச்சிதமாக வந்துகொண்டிருந்தவள் வராமல் போகவே, உறுத்தலாக அக்கம்பக்கம் கேட்டாள். அவர்களுக்கும் தெரியவில்லை. அவள் தங்கும் அரசமரத்தடி வந்து நோட்டம் விட்டாள். அங்கிருக்கும் கடைகளிலும் யாருக்கும் தெரியவில்லை. ஒரு வாரம் கடந்தும் பொன்னாயம்மா யார் கண்ணிற்குமே தட்டுப்படாமல் போகவே சற்று தீவிரமாய் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது அவள் சாலையைக் கடக்கும் போது லாரியில் அடிப்பட்டு இறந்து போனாள் என்பது. செவ்வந்திக்கு வருத்தமாய் இருந்தது. போகும் வரும்போதெல்லாம் அரசமரத்தடியைப் பார்ப்பாள். பொன்னாயம்மாவின் துணிப்பை அங்கேயே தூசி அப்பிப் போய் கிடந்தது. மரக்கிளையில் அவள் காயப்போட்டிருந்த சேலை நிறமங்கி ஊசலாடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது அங்கு வந்தவர்களில் சிலர், அந்தப் பையை அகற்றலாமென பார்த்த போது பைக்குள் ஒரு கனமான துணி மூட்டை போலிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், எல்லாம் காசுகள். கைக்கொள்ளா அளவில் நிறையப் பைசாக்களை வைத்திருந்தாள். “காசு, காசுன்னு புலம்பிட்டே செத்து போச்சு பாவம் “எனச் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தப் பைசாக்களை செல்லியம்மன் கோவில் உண்டியலில் போட்டு விட்டார்கள்.
செவ்வந்திக்கும் அவ்வப்போது வருத்தம் மேலோங்கியது. அவள் தந்த சேலையைத்தான் சாகும் நாளில் கட்டியிருந்தாள். வேலை செய்த பின் பொன்னாயம்மாளுக்கு தரும் காசில் சில காசுகளைச் செவ்வந்தியிடமே திருப்பிக் கொடுத்து ” இத பத்திரமா வச்சிரு. ஊடு கட்ட வேணும். கேக்கறப்போ கொடு என்னோ?” என வலுக்கட்டாயமாக ஐந்தும் பத்துமாகப் பைசாகளை கொடுத்து வைத்திருந்தாள். பிறகொரு நாள் எல்லாவற்றையும் தந்திடலாமென சமையற்கட்டின் தாழ்வான மரச் சட்டத்தில் அவற்றை வைத்திருந்தாள். நினைவு வந்து அந்த காசுகளை எடுத்து எண்ணியபடியே வெளியே வந்தாள். தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்பவர் மணியடித்துக் கொண்டே வந்தார். வழக்கமாய் வரும் நேரம்தான். பெரிய வட்ட வடிவ பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் சோன்பப்டி நிரம்பியிருந்தது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் அனைவருக்கும் தரும்படி அனைத்து காசுகளையும் கொடுத்தாள். பிள்ளைகள் கத்திக் கொண்டே சோன்பப்டி வண்டி முன் குவிந்தனர். தாடி வைத்த சோன்பப்டி வண்டிக்காரர் சிரித்தபடியே காசுகளை ஒரு சிறு பெட்டிக்குள் போட்டார். சில்லறைகளின் சலசலெவன சப்தம் பொன்னாயம்மாளின் பேச்சுக்குரல் போலிருந்தது. இனி சில்லறை வேண்டுபவர்களிடம் பொன்னாயம்மா போய் சேருவாள்.
ஒரு நாள் திடீரென அவள் வீட்டு முன் சப்தம் கேட்டு அந்த காம்பவுண்ட் வீட்டிலிருந்தோர்கள் எட்டிப் பார்த்தனர் . ஒரு ஒடிசலான, ஆங்காங்கே நரை தெரிந்த ஒரு மத்தியம வயதான பெண் நின்று கொண்டிருந்தாள். கன்னத்தின் ஓரம் வெற்றிலை குதப்பி வைத்து மேடிட்டிருந்தது. செவ்வந்தி சற்றும் முகம் மாறாமல் தனக்கும் இந்த கூப்பாடிற்கும் சம்பந்தமில்லை என்பது போல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.
” இவ பண்ற கூத்தை நீங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களாங்க்மா? எம்புள்ள காசை கஷ்டபட்டு சம்பாரிக்கறான். இவ டிவி, ஷோக்கு, நெத்தம் புதுச் சேலைன்னு பன்னாட்டு பண்ணிட்டு திரியறா?. இவ தனியா வந்துட்டா மட்டும் என்னென்ன பண்றான்னு எங்களுக்கு தெரியாதா? . நாம் போட்ட பிச்சைலதான் இவளுக்கு இத்தன சொகுசு. எங்கூட சேர்ந்து வந்து இருக்கமாட்டாளாமா? நாஞ் சொன்னதாலதே ரெண்டு மாசமா இவளுக்கு அவம் பணம் அனுப்பறதில்லை.பொறவு இவளுக்கு எங்கேருந்து காசு வருது நாங்கேக்கறேன் ? …இரு அவன் ஊருக்கு வரட்டும், வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இவல்லாம்
எம்பட புள்ளைக்கு சரிபடமாட்டா…. எம்புள்ள என் பேச்சைத்தான் கேப்பான். வந்ததும் இவ குடுமியை அறுக்கச் சொல்றேன் இரு ” என இன்னும் ஏதேதோ, வாயில் வரும் எல்லா வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளைக் கூட்டுச் சேர்த்து அவளை திட்டிக் கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.. வந்தவள் மாமியார் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
செவ்வந்தி முகம் அமைதியாக இருந்தது. அவள் அப்போதும் எதுவும் பேசாமல் அரிசி களைந்த நீரை வெளியே ஊற்றிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் எந்த ஓர் எதிர்வினையும் வராத கோபத்தில் அவள் மாமியார் இன்னும் பல கெட்ட வார்த்தைகளை பிரயோகித்தாள். வெற்றிலையை மென்று உமிழ் நீரை அவள் வீட்டு வாசலிலேயே வெறுப்புடன் உமிழ்ந்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் செவ்வந்தி வீட்டு டிவி பார்ப்பது போலவே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகளும் அவர்களின் அம்மாவின் முந்தானையை கையில் சுருட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின் அவள் மாமியார் திட்டியபடியே சென்றுவிட்டாள். அவள் போனபிறகு மேகலாவும் இன்ன பிற பக்கத்து வீட்டினரும் வந்து செவ்வந்தியை சமாதானம் செய்தனர். பொளக்கென்று அவள் கண்களிலிருந்து கண்ணீர் எட்டியது. அவள் பால் நிறத்துக் கண்கள் ரத்த மின்னல் போல் கோடுகளிட்டிருந்தன.
அன்றிரவு மேகலா குழம்பு செய்து, அடுக்களையில் இருந்த செவ்வந்தியிடம் கொடுத்தாள். அவள் மறுப்பு சொல்லாம் வாங்கிக் கொண்டாள். ” சித்த நாளைக்கி உங்க அம்மா வீட்டுல இருந்துட்டு வா. தனியா இருந்தாக்க மனசு சங்கட்டமா இருக்கும் .
செவ்வந்தி மௌனமாக இருந்தாள்.
மேகலா சொல்லலாம வேணாமா என தயங்கியபடி ” கல்யாணமுடிச்சு போனவெய்ங்க மறுக்கா வரவேயில்லையா கண்ணு?” என மெதுவாகக் கேட்டாள். செவ்வந்தி எதுவும் பேசாமல் ஸ்டவ்வின் பம்பை இழுத்து அடித்துக் கொண்டிருந்தாள் . மண்ணெண்ணெய் வாசம் பரவியது. மேகலா அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் வெளியில் சென்றாள்
மறு நாள் பேரமைதியுடன் வீடு இருந்தது அல்லது அப்படி இருப்பது போல் ஒரு பிரமை உண்டாகியிருந்தது. அவள் அழுது கண்களும் முகமும் வீங்கியிருந்தன. அவளே இயல்பிற்கு வரட்டும் என அந்த காம்பவுண்ட் வீட்டினர் நினைத்தனர். இரு நாட்கள் ஆகியிருக்கும். அன்று காலையிலிருந்தே அவள் வீட்டு அறையும் சமையலறையும் திறக்கப்படவில்லை. மாலையில் வாசற்படியில் அமர்ந்து ஒரு பெண்ணின் தலையில் மேகலா பேன் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகே மற்ற வீட்டுப் பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யார் யாரோ வந்தார்கள். பளீர் வேட்டி சட்டையில் வந்தார்கள். கை, கழுத்தில் தங்கம் மின்னியது. பின்னேயே அவளுடைய மாமியாரும் வந்தாள்.
மாமியார் செவ்வந்தியின் வீட்டை வந்தவர்களிடம் பணிவோடு காண்பித்தாள். வீடு பூட்டப்பட்டிருந்தது.
” எப்போலிருந்து வீடு பூட்டியிருக்குங்க? என வெறுப்பாய் இவர்களிடம் கேட்டார்கள்.
“தெரியலையே எப்பவும் போல உள்ளிருக்கான்னு நினைச்சோம்” என்று மேகலா சொன்னாள். அதன் பின்னரே அனைவருக்கும் விஷயம் தெரிய வந்தது. இவள் வீட்டிற்கு அடிக்கடி வரும் அந்தப் பையனும் வீட்டில் காணவில்லையெனத் தேடி இங்கே வந்திருக்கிறார்கள். கோபத்துடன் அந்த ஆண்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள். மர பீரோவில் இருந்த எல்லாவற்றையும் கொண்டு போய்விட்டிருந்தாள். மற்றவைகள் அப்படியே இருந்தன. அவளுடைய கணவனுடனிருந்த புகைப்படம் மட்டும் சுவற்றில் தனித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் வீட்டுத் திண்ணையிலேயே எப்போதும் விளையாடும் பிள்ளைகள் பாவமெனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். செவ்வந்தி அந்தப் பையனுடன் ஓடிப் போய்விட்டாள் என்ற விஷயம் தீயாய் பற்றிக்கொண்டது. அந்த வீதியிலிருப்பவர்கள் வந்து எட்டி எட்டிப் பார்த்தனர்.
வந்தவர்கள் மீண்டும் வேகமாய் வெளியே போய்விட்டார்கள். அவர்கள் சென்ற மறுநொடி செவ்வந்தியின் மாமியார் “ஐய்யோ எம்புள்ள வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டாளே. அவனுக்கு என்ன பதில் சொல்வேன் ஊரெல்லாம் என் மானத்தை வாங்கிட்டாளே” என ஒப்பாரி வைத்தாள். பால்காரர் முருகசாமி நக்கலாய் சிரித்தான்.” எனக்கு அப்ப புடிச்சே தெரியும். அன்னைக்கு வரிஞ்சுகட்டி சப்போட்டுக்கு வந்தீங்கல்ல. இப்ப பாத்தீங்களா” என வாயை கோணித்து மேகலாவைப் பார்த்துச் சொன்னான். அவள் மீண்டும் அவனைப் பார்த்து வசவுகளை அள்ளிக் கொட்டினாள்.
வீட்டிலிருந்த பொருட்களைச் செவ்வந்தியின் மாமியார், வண்டி வரவைத்து ஏற்றிக் கொண்டிருந்தாள். அந்த கலர் டிவியை இரண்டு பேர் பிடித்து எடுத்துச் சென்றனர். ” பாத்து நிதானம் உடைச்சுபோடாதீகோ” எனப் பதற்றமாய் சொன்னாள். வெட்ட வெளியில் அந்தச் சாம்பல் நிற டிவியின் பளபளப்பு இன்னும் கவர்ச்சியாய் தெரிந்தது . அன்று வெள்ளிக் கிழமை என நினைவிற்கு வந்ததும் அந்த காம்பவுண்டு வீட்டினருக்கு சட்டென சோகம் கவிழ்ந்து கொண்டது. இனி எப்போது வாராத டிவியையும், வெள்ளிக்கிழமை குதூகலத்தின் இழப்பையும் நினைத்து தாங்க இயலாத மகேசன் ” டிவி எங்க போதும்மா?” என மேகலாவிடம் சிணுங்கியவாறு கேட்டான். எங்கோ சற்று தொலைவில் “ஓ! ப்ரியா ப்ரியா ” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
எழுதியவர்
- ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சார்ந்த ஹேமி கிருஷ் ; தற்போது அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் வசிக்கிறார். . ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் உள்ளிட்ட பல அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் சிறுகதைப் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ‘மழை நண்பன்’ மற்றும் ’நெட்டுயிர்ப்பு’ என இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023பற்றென்ப
- சிறுகதை28 February 2023காம்பவுண்ட் வீடு
கடைசில செவ்வந்தி அந்த பையனோட ஓடி போயிட்டான்னு காம்பவுண்ட் வீட்டுகாரங்கதான் நினைச்சாங்கன்னு புரிஞ்சிக்கலாமா. கதை சொல்லியவிதம் அருமையா இருக்கு. நெட்டுயிர்ப்பு வாசிச்சிருக்கேன். வாழ்த்துகள் ஹேமலதா!
ஆமாதானே அந்த நாட்கள்ல ஒருத்தங்க வீட்டுலதான் டிவி இருக்கும். நீங்க காம்பவுண்ட் வீடுன்னுசொல்றீங்க. நாங்க வரிச வீடுன்னு சொல்வோம். ஒரே தெருவுல டிவிக்காக அந்த வீட்டுக்காரங்க என்ன மாதிரி இருந்தாலும் ஏத்துப்போம். இந்த கதயில செவ்வந்தி பொண்ணு நல்ல பொண்ணு போல உருவகம் செஞ்சிருக்கீங்க. அவ ஏன் அந்த பையன் கூட ப்ரெண்ட்ஷிபா ஆனாள்ன்னு ஒரிரு வரில சொல்லி இருக்கலாமோன்னு தோணுது. ஆனா இந்த இடைவெளி படிக்கிற எங்களுக்கு விட்ட ஸ்பேஸ்ன்னு எடுத்துக்கலாம். நல்ல கதைதான். இப்போ அங்கிள் ஆண்டியா இருக்கிற என்னை போலவங்களுக்கு பிடிச்ச கதையாதான் இருக்கு. 🙂 😉
Good Writing