17 September 2024

ந்தச் சேலையைத் தொட்டதும் மனதிற்குள் மழை பெய்வது போலிருந்தது காயத்ரிக்கு.. அபூர்வமாகத்தான் இந்த உணர்வு அவளுக்கு வரும். இதற்கு முன் ஏழாவதோ எட்டாவது படிக்கையில் நிகழ்ந்தது. தாராபுர அனுமன் தேருக்கு சென்றிருந்தாள். கடும் வேனிற் காலம் அது. தேர் வீதியில் எல்லாரும் தேரின் பின்புறம் பஜனை செய்து கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். . பெரும் நீள் சதுர வடிவத்தில் இருக்கும் அந்த அனுமந்தபுர அக்ரஹாரம் முழுக்கச் சென்று கோவிலுக்கு வடக்கில் இருக்கும் மண்டபத்தின் முன் நிற்கப்பட்டு வெயில் சாயும் வேளையில் மீண்டும் தேர் வடம் இழுத்து கோவிலில் நிறுத்துவார்கள்..

தீக்கங்காய் சாலை தகதகவென கொதித்து கொண்டிருக்கும். பாதம் பொசுங்கும் சூடு தாங்காமல் கால் மாற்றி மாற்றி தரையில் ஊன்றி, ஆங்காங்கே வீடுகளில் நிழல்களில் நின்று தணித்து, பின் தேர் பின்னே சென்று கொண்டிருந்தார்கள். . வெக்கையும் பட்டுப்பாவாடை அசௌகர்யமும் சேர்ந்து காயத்ரிக்கு தாங்க இயலாத எரிச்சலையும் அழுகையும் கொடுத்தன. எல்லோர் வீடுகளிலும் நீர் மோரும் பானகமும் கொடுத்து கொண்டிருந்தனர். காயத்ரியின் அம்மா கட்டாயப்படுத்தி அவளுக்குப் பானகம் தரும் போது இன்னும் அழுகையில் அவற்றை வீசி இருந்தாள். அம்மா அவள் காதை சிவக்கத் திருகினாள். அழுது கொண்டே தேரின் பின் வலம் வந்தாள். தேர் நடையில் கோவில் வடக்கு மூலையின் ஓரத்தில் நின்றிருந்த குல்பி ஐஸ் விற்பவர், காயத்ரியைப் பார்த்து பெட்டியிலிருந்து ஒரு குல்பி ஐஸை எடுத்துக் கனிவுடன் அவள் கைகளில் திணித்தார். இதுவரை ஐஸை சுவைத்ததில்லை. வீட்டில் அம்மா கடும் எதிர்ப்பு. பல் சொத்தையாகிவிடும், சளி பிடித்துவிடும் என அவள் அம்மா தவிர்த்து வந்தாள். காயத்ரி கொஞ்சம் நடையில் பின்தங்கி அவளது அம்மாக்கு தெரியாமல் அந்த குல்பி ஐஸை எடுத்தாள். ஒரு குச்சியில் சிறு ஆப்பிள் போல் ஐஸ் சொருகப்பட்டிருந்தது. அதனைச் சுற்றிலும் தடிமனான அலுமினியத் தாள் சுற்றப்பட்டிருந்தது. அந்தத் தாளைச் சிரமப்பட்டுப் பிரித்து முதன் முதலாக அவள் ஐஸை சுவைத்தாள். வெக்கையில் வதங்கிய உடல் நொடியில் குளிர்ந்து உள்ளத்தில் மழை பெய்த உணர்வு.

அதன் பிறகு இப்போதுதான். பொன் வண்டு அல்லது மயில் பச்சை நிறமோ சொல்லக் கூடிய நிறத்தில், ஆங்காங்கே புட்டா இழைக்கப்பட்டு, முந்தானையில் அடர் சிவப்பு நிற எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சேலை. பருத்திப்பட்டால் நெய்யப்பட்டிருந்தது. ஆதூர அழகிருந்தது. அதே அடர் சிவப்பு நிறத்தில் மயில் பச்சை பார்டர் வைத்து ரவிக்கைத் துணி அதனுடனே இணைந்திருந்தது. ஒரு நொடி யோசிக்கவில்லை. விலையைப் பார்க்கவில்லை. வேறெவரேனும் எடுத்து விடக் கூடும் அல்லது அது வேண்டாம் வேறொருவர் எடுத்து வைத்திருக்கிறார் என விற்பனை பெண்மணி சொல்லக் கூடும் என கையிலேயே பிடித்து நேராகப் பணம் கட்டும் இடத்திற்குச் சென்றுவிட்டாள்.

மனதிற்குள்ளே எவ்வாறு ரவிக்கை தைப்பது, அணிந்தால் எப்படி இருக்கும் என ஒத்திகை பார்த்தாள். தீட்சண்யம் நிறைந்த அழகு அவள். மெனெக்கட்டு அழகு படுத்தாமலே பார்த்துக் கொண்டிருக்கலாமென்ற முகம். ஏதாவது திருமணத்திற்கு , விசேஷத்திற்கு இதைக் கட்டிக் கொண்டால் எல்லாரும் தன்னையே பார்ப்பார்கள் என மனதிற்குள் நினைத்துக் கிளர்ச்சியடைந்தாள். அப்போதே மார்க்கெட் தெருவில் அவளுக்குத் தெரிந்த டெய்லரிடம் சென்று தைக்கவும் கொடுத்துவிட்டாள். இவ்வளவு துரிதமாய் எதையும் அவள் செய்ததில்லை. இந்த மனநிலை எல்லாம் அவளுக்குச் சட்டென வாய்க்காது. சொல்லப்போனால் பைத்தியக்காரத்தனம். விருப்பமானவற்றை அடைந்தே தீர வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனம். தனக்கு வேண்டியதைச் செய்து கொண்ட பின் பரிபூரணமாக உணர்வாள். அதனாலோ என்னவோ அவளுக்கு விருப்பங்கள் என்று அடிக்கடி தோன்றியதில்லை.

உடை, அலங்காரம், விருப்பமான உணவு , பிடித்த பயணம், ஆசைகள் என அவளிடம் எந்த ஏமாற்றமும் இதுவரை கிடையாது. ஹோட்டல் போகலாமென சந்திரன் சொன்னதும் கிளம்பி தயாராகி வெளியே வீட்டைப் பூட்டும் போது, வேண்டாம் வீட்டிலேயே சாப்பிடலாம் என்று சந்திரன் சொன்னால் ” சரி பரவாயில்லை” எனச் சொல்லி உள்ளே சென்று சமைக்க ஆயத்தமாகிவிடுவாள். ஒருமுறை என்றால் பரவாயில்லை. பலமுறை அது போல் நிகழ்ந்தேறியிருக்கிறது. பலமுறையும் அதே போல் எவ்விதக் கோணலுமில்லாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். சந்திரனுக்கு உள்ளூர ஆச்சரியம். மற்ற பெண்கள் போல் அங்குச் செல்ல வேண்டும் இங்குச் செல்ல வேண்டுமென நச்சியதோ, முகத்தைச் சுளித்துக் கொண்டோ கிடையாது. ஒரு வகையில் தான் அதிர்ஷ்டசாலி என அவன் நினைத்தான். ஆனால் இவை எதுவுமே காயத்ரியின் விருப்பம் சார்ந்தவையல்ல. அதனால் அவளுக்கு இவைகள் எவ்வித ஏமாற்றமும் தந்ததில்லை.

கோடி பெறும் வீட்டின் பங்கை வேண்டாமென்றாள். மாமியாரின் தங்க நகைகள் பிரித்த போது கூட ” அத்தைக்கு உயிரோடு இருக்கும் போது கொடுக்க மனசில்லை. என் முன்னாடி ஒரு நாளும் நகை லாக்கரை திறக்க மாட்டாங்க.. ஊருக்கு போயிட்டு வந்தா, நகையெல்லாம் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணுவாங்க. செத்ததுக்கப்புறம் அவர் நகைய எடுத்துக்கிட்டா அது திருட்டுக்குச் சமானம். எனக்கு வேண்டாம்” எனச் சொல்லிவிட்டாள். இவ பொழைக்க தெரியாம இருக்கற வரைக்கும் நமக்கு நல்லது என அவளுடைய நாத்தனார்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு நகைகளைப் பங்கு போடுக் கொண்டனர்.

வாங்கிய சேலையைச் சந்திரனிடம் காண்பித்த போது அவன் பெயருக்குத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான். அதனைப் பாங்காய் மடித்து பீரோவில் வைத்தாள். காலையிலும், மாலையில் அலுவலகம் விட்டு வீடு வந்த போதும் பீரோவை திறக்கும்போதெல்லாம் அந்தச் சேலையைப் பார்க்கும்போது அவள் மனதிற்குள் மழை பெய்தது. இதென்ன கிளர்ச்சி இந்தச் சேலையைப் பார்க்கும்போது என ஆச்சரியத்தை விளைத்தாள்.

சேலையின் ப்ளவுஸ் தயாரானதும், வீட்டில் சேலையை உடுத்தி கண்ணாடியில் பார்த்தும் தன்னையுமறியாமல் புருவத்தை உயர்த்தினாள். அவள் நினைத்தது காட்டிலும் அழகாய் மிளிர்ந்தாள். அவளுக்குள் குதூகலம் தாங்கவில்லை. தன்னுடைய அலைபேசியில் மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டாள். சந்திரன் உள்ளே வரச் சரியாக இருந்தது.

அதே குதூகலத்துடன் ” நல்லாருக்கா?” என பல்லாகக் காண்பித்துக் கேட்டாள்.

“இதெப்போ வாங்கின?”

“ரெண்டு மூணு வாரமாயிருக்கும். அதான் உங்ககிட்ட காமிச்சேனே”

“எங்க காமிச்ச? சும்ம அடிச்சுட வேண்டியது”

“விளையாட்றீங்களா? அன்னிக்கு வந்து முத வேலையா உங்ககிட்டதான் இந்த சேலைய காமிச்சேன். நீங்க வேற உலகத்துல இருந்தா நான் என்ன பண்றது?.”

“ஏன் கருப்பு வாங்கின?”

“ஏங்க இது மயில் கழுத்து பச்சை.. உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு?”

“பாக்க கருப்பாதான் தெரியுது சரி காபி கொடு” என்றான்.

அவள் சேலையை மாற்றியபின் புதுப்புடவையை நிதானமாய் கசங்காமல் மடித்து பீரோவுக்குள் வைத்துவிட்டுத்தான் காபி போடச் சமையலறைக்குள் சென்றாள்.

 

வாங்கி நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. முதலில் கோவிலுக்கு உறவினர் சூழ குடும்பத்துடன் பொங்கல் வைக்கச் செல்லும்போது உடுத்தலாமென எடுத்தாள். வேண்டாம். மஞ்சள் கரி, எல்லாம் அப்பி விடும் என மனதை மாற்றிக்கொண்டாள். பிறகு அது போலவே தனது நாத்தனாரின் வளைகாப்பிற்கு எடுத்துவிட்டு வேண்டாம் வேலை பிடுங்கி விடும். கசங்கிப் பார்க்கவே எடுபடாமல் போகும் என எடுத்த இடத்திலேயே வைத்தாள். இப்படியே பல நிகழ்வுகளைத் தாண்டி விட்டாள். உடுத்தவே மனம் வராமல் இருந்தது.

அவள் எதிர்பார்ப்பிற்கேற்றபடி தீபாவளி வந்தது. தீபாவளி அன்று ஊரே அலங்காரமாய் இருக்கும். தீப ஒளிகளில் வீதியில் நடக்கும் போது அட்டகாசமாய் இருக்கும் என நினைத்து தீபாவளியென்று உடுத்த எடுத்து வைத்தாள். முல்லைப் பூவை கோர்த்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டாள். மருதாணியைப் பறித்து இரவில் அரைக்கத் தயார் செய்து விட்டாள். இரு நாட்கள் முன்னாடியே முறுக்கு, குலோப் ஜாமூன் என வருடம் மாறினாலும் வகையில் மாறாத அதே பலகாரங்களைத் தயாரித்துவிட்டாள். வீடு முழுக்க ஏற்ற விளக்கு ஜோடிகளையும் தயார் செய்தாள். வங்கி அலுவலக வேலைகளுடன் இவ்வேலைகளை எல்லாம் செய்ய எங்கே நேரமிருக்கிறது அவளுக்கு எனத் தெரியவில்லை. எதுவுமே செய்யாதவள் போலத்தான் இருப்பாள். ஆனால் எல்லாவற்றையும் செய்திருப்பாள்.

வீடு முழுக்க உறவினர்கள் வந்திருப்பார்கள். காலையின் பரபரப்பை அவளிடம் எந்தக் கோணத்திலும் நம்மால் கணிக்க முடியாது. அவள் ஏதும் செய்யாமல் அலுவலகம் போனாலும் கூட யாரும் எதும் சொல்லிடப் போவதில்லை. “பாவம் அவளும் பேங்குக்கு நேரத்துக்கு போகனுமில்ல” என வந்தவர்களே நியாயத்தை உரைப்பார்கள். மாறாக அவள் இருபது பேருக்கும் சேர்த்து காலை மதிய உணவு செய்து, காபி கலந்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு சமையலறை சுத்தம் செய்து, பிள்ளைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி,குளித்துக் கிளம்பியிருப்பாள். வெறும் 6 மணிக்கு எழுந்தே இத்தனையும் அசாதாரணமாகச் செய்து கிளம்பிவிட்டாள் என பலரும் மலைத்து அவளைப் பற்றிச் சொல்லும் ஓரு வார்த்தை அசுரக்காரி.

தீபாவளியன்று மருதாணியால் செக்க சிவந்த கைகளை நுகர்ந்து விட்டு வேலைகளை ஆரம்பித்தாள். எல்லாருடைய புதுத் துணிகளை ஒரு தாம்பாள தட்டில் வைத்த போது அந்தச் சேலையையும் மஞ்சள் குங்குமக் கறை படாதவாறு பாதுகாப்பாய் வைத்தாள்.

சந்திரம் முகம் சுருங்கியது. ” இதெதுக்கு போட்டுக்கற. நான் வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கோ..”

“ஏன்? தீபாவளிக்காகவே இதை கட்டாம வச்சிருந்தேங்க”

“சொன்னா கேளு.. இது நல்லால்ல”

“இவ்ளோ அழகான சேலை நல்லா இல்லையா” திருப்பிக் கேட்டாள்.

“கருப்பு கலர் எனக்கு ஆகாதுன்னு தெரியாதா.. இத எடுத்துட்டு நான் வாங்கி தந்ததை வை ”

“இது கருப்பு இல்லைங்க கரும்பச்சை ரகம்”

“நான் தீபாவளிக்குன்னு எல்லாருக்கும் ஒரே மாதிரி கலர்ல போடனும்னுதான் இத வாங்கிட்டு வந்தேன்.. அத வேறெதுக்காவது போட்டுக்கோ.. நல்ல நாளும் அதுமா நான் சொல்றத கேளு காலங்காத்தால பிரச்சனை பண்ணாத.”

“ஏங்க. இப்…”

“பதிலுக்குப் பதில், பதிலுக்குப் பதில், பேசித் தொலையாதடி.. முண்டை நான் செத்தாதான் உனக்கு தெரியும்” அவன் குரல் உயர்ந்தது.

“அம்மா ப்ளீஸ். உங்களுக்குதான் அப்பா பத்தி தெரியும்ல.. வேறொரு நாள் இந்த சேலைய கட்டிக்கோங்க. தீபாவளி அன்னைக்கு சண்டையை போட்டு கொண்டாடறதை கெடுத்துடாதீங்கம்மா ” என அவளது மகள் ஆதிரா ரகசியமாய் வந்து கெஞ்சினாள். எட்டு வயதுக் குழந்தை வந்து சொல்வது அவளுக்கு வெட்கமாக இருந்தது. வேறு வழியின்றி சேலையை மாற்றினாள். சிரிப்பைக் கொண்டு வர முயன்று தோற்றுப்போனாள். பெருத்த ஏமாற்றம் இப்படித்தானிருக்குமா? சண்டைகள் வருவது புதியதில்லை. பிள்ளைகள் விஷயத்தில், சமையல் விஷயத்தில் போகிற போக்கில் சண்டைகள் வருவதற்கு காரணங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் தன் பொருட்டு வரும் முதல் சண்டை இதுவாகத்தானிருக்கும்.

தீபாவளியைத் தொடர்ந்து அடுத்து வந்த நாட்கள் வார இறுதி என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தார்கள். இயல்பாகவே இருந்தார்கள். ஆதிரா, ஆறு வயது மகன் அபயன், சந்திரன் யாவருக்கும் இவள் உணர்வு பற்றி எதுவும் தெரியப் போவதில்லை. அக உணர்வை காண்பிக்கும் கண்ணாடி இருந்தால் வாங்கி வீட்டில் அனைவரையும் போடச் சொல்ல வேண்டும். மழை தெருவை அடைத்துப் பெய்து கொண்டிருந்தது. ஈர வாடை வீட்டிற்குள்ளும் அடிக்க ஆரம்பித்தது. வீடு குளிர்ந்து அனைவரும் ஸ்வெட்டர் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். தெருப்பிள்ளைகள் தத்தம் வீட்டில் கூரை வேய்ந்த வராண்டாவிற்குல் பிஜிலி வெடியை வெடிக்கும் சப்தம் கேட்டது.

அறையில் ஜன்னலையொட்டி போட்டிருந்த படுக்கையில் குளிருக்கு இதமாய் போர்த்திக்கொண்டு மழையை வேடிக்கை பார்த்தவள் எழுந்து சென்று பீரோவைத் திறந்து மடித்து வைத்திருந்த அந்த சேலையைப் பார்த்தாள். இப்போது அதன் மீது ஆசை போய்விட்டிருக்குமா எனப் பரிசோதிக்கவே திறந்தாள். அப்போதும் அவள் மனதிற்குள் மழை பெய்தது. மார்போடு இறுக அணைத்து புதிதின் வாசத்தை நுகர்ந்தாள். சரி இன்றில்லையென்றால் என்ன வேறொரு நிகழ்வு வராமலா போகும் அதற்குப் போட்டுக் கொள்ளலாம் என இயல்பிற்கு வந்தாள். சட்டென மழை நின்று பளீர்வெயில் அடிக்க ஆரம்பித்தது. எல்லாம் சில கணங்களில் மாறுமா? மனமும் இயற்கையும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது எனப் புன்னகைத்தாள்.

 

டை மழைக்காலத்தின் நீட்சியாய் அவள் வீட்டின் முன்னிருந்த தூங்கு மூஞ்சி மரம் மழை நின்றும் தூவானமாய் தூவிக் கொண்டிருந்தது. அந்தச் சேலையை மீண்டும் கட்டும் நாளிற்காகக் காத்துக் கொண்டிருந்த போதுதான் சந்திரன் அவனது மேனேஜரின் மகளின் நீராட்டு விழாவிற்குப் போக வேண்டுமெனச் சொன்னான். நிகழ்வன்று மாலையில் அவள் மீண்டும் அந்தச் சேலையைக் கட்ட எடுக்கையில் சண்டையை ஆரம்பித்தான்.

“ஒரு சுப காரியத்துக்கு போட்ற சேலையா இது? என்னால முடியல காயத்ரி” எரிச்சலுற்றான்.

” இதை ஏன் கட்டக் கூடாது எனக்கு நிஜமாவே புரியல.. இது கருப்பு இல்லைன்னு எத்தனை வாட்டி சொல்றது. உங்களுக்கு கலர் ப்ளைன்ட்னஸா இருக்கும் அதான் இது கருப்பா தெரியுது..”

“ஆமாடி எனக்கு கண்ணு தெரியாது இன்னும் என்ன வேணாலும் சொல்லு”

“இங்க பாருங்க நான் கட்டிட்டு வர்றேன்.. பிடிக்கலைனா சொல்லுங்க..”

சந்திரன் குரல் ஏற்ற இறக்குத்துடன் “ஐயோ எனக்கு தெரியலைம்மா. உங்கூட வாழ்க்கை பூரா இப்படி ஓரியாடி ஓரியாடி ஒரு நாள் போய் சேர்ந்துடுவேன். நீ நடுத் தெருவுல நிப்ப. நாய் கூட சீண்டாது பாத்துட்டு இரு” என அழுத்தமாக வார்த்தைகளைச் சொன்னான்.

“ஒரு சேலைக்கு ஏன் இவ்ளோ பிரச்சனை பண்றீங்க”

“நான் பிரச்சனை பண்றேனா?” என டேபிளை ஓங்கி உதைத்தான். டேபிள் வேகமாய் நாற்காலியைத் தள்ளியது. நாற்காலி ஷோகேஸ் கண்ணாடி மேல் விழுந்து கண்ணாடி சில்லுகளாய் தரையில் சிதறியது. கையை மடக்கி மேசையின் மீது ஓங்கி ஓங்கிக் குத்தி சந்திரன் கத்த ஆரம்பித்தான்.

ஆதிரா அவளுடைய தம்பியை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று ஜன்னல் வழியே மழையை வேடிக்கை காண்பிக்க ஆரம்பித்தாள். சிறு பெண்ணிற்கும் இது தவறு என தெரிகிறது . காயத்ரிக்கு பதற்றம் உருவானது. இதற்கெல்லாமா இத்தனை ரௌத்திரம்.. எவராது தணிந்து போக வேண்டுமே. அவள் தணிந்தாள். கூடத்திலிருந்து விலகி படுக்கையறைக்குள் சென்றாள். மன முழுக்க சிலந்தி வலை பிரம்மை..

அடுத்த ஒரு மணி நேரத்தில் சந்திரன் காயத்ரியை தவிர்த்து குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு விசேஷத்திற்குச் சென்றான்.

தனித்த அப்பொழுதில் இயலாமை தந்த ஆத்திரத்தில் அவளும் கையில் கிடைப்பதை எடுத்து வீசினாள். ஒரு பாட்டு அழுது முடித்தாள். எல்லாவற்றையும் வீசியெறிந்து, வாரி இறைத்து என்ன செய்வதெனத் தெரியாமல் அழும் குழந்தையைப் போல் அமர்ந்திருந்தாள் காயத்ரி. இப்படிச் செய்தது இதுவே முதன்முறை. இதற்கு முன் வந்த சண்டைகளில் களத்தில் இறுதியாக அவன் மட்டுமே தனித்துச் சண்டையிடுவான். அவனுக்கு அது சளைக்காது. எடுத்ததும் கத்துவதும், தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதுமாய் சண்டையிடுபவனிடத்தில் அவளுக்குப் பேசவே எதுவுமிருக்காது. வேண்டுமானால் பதிலுக்கு அவள் கத்தலாம், அல்லது தன் முகத்தில் அறைந்து கொள்ளலாம். அது அவளுக்கு இயலாது என்பதால் பாதியிலேயே வெளியேறிவிடுவாள். அவன் இயல்பு அது. இவள் இயல்பு இது. பூவுக்கு மணம் பரப்புவதுதான் இயல்பு. தேளிற்கு விஷம் கொட்டுவதுதான் இயல்பு.

ஏன் இந்த வீட்டில் மட்டும் சச்சரவுகள் ஒரு உரையாடலாய் எதிரெதிர் அமர்ந்து நிகழ்வதேயில்லை. நாவில் தித்திப்பை உணர்வதற்கு முன்னேயே அமிலத்தை சுவைக்கத் தருபவன் யாராக இருக்கும். எல்லாவற்றிற்கும் உச்சத்தில் கத்தி களேபரம் செய்யும் கணவனைத் தான் பெற்றது வரமா சாபமா? பெயர்தான் சந்திரன். நிலவு தரும் குளுமையை அவனிடம் அவள் உணர்ந்ததில்லை. பொங்கி வழியும் தீப் பிழம்பின் சூட்டை உணர்ந்திருக்கிறாள். எல்லா இன்னல்களையும் அந்தந்த இடத்திலேயே விட்டு பயணத்தைத் தொடர்பவள், இன்று விட்ட இடத்திலெல்லாம் தேட ஆரம்பித்து அப்படியே தூங்கிப் போனாள்.

தூக்கம் தற்காலிக நிவாரணி அவளைக் கொஞ்சம் தெளிவடையச் செய்திருந்தது. வீட்டை மெதுவாக எழுந்து சுத்தம் செய்தாள்.

மறுநாள் அவனாகவே வந்து பேசினான்.

“ஸாரி…என்னமோ கோபம்.. ஏன் என்னால கோபத்தை மட்டும் கன்ட்ரோல் பண்ண முடியலன்னு எனக்கே தெரில. புள்ளைங்க என்ன நினைப்பாங்க சொல்லு.. இதெல்லாம் ஒரு விஷயமா? எனக்கு அந்த சேலை பிடிக்கலைனா விட்டுடேன்…நான் சொல்றத மட்டும் கண்ண மூடிட்டு கேட்டா போதும் குடும்பம் நல்லா போகும்.. , இவ்ளோ நாளா நீ எவ்ளோ சமத்து பொண்டாட்டியா இருந்த.., திடீர்னு மாறிட்ட” எனக் கன்னத்தைக் கிள்ளினான். அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

சரி இதைப் பற்றி உரையாடலாமே என எத்தனித்ததும், குழந்தைகள் நினைவு வந்தது. அமைதியாக இருந்துவிட்டாள். சேலையைை விடக் குழந்தைகள் நிம்மதி முக்கியமல்லவா. வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி குழந்தைகளிடம் அதிக அன்பை காண்பித்தாள். குற்ற உணர்வைப் பூசி மெழுகத்தான்.. அவளையுமறியாமல் ஒன்றுமே இல்லாத பிரச்சனைக்கு அவளுக்குள் குற்ற உணர்வைப் புகுத்தியிருந்தான் சந்திரன்.

ரபரப்பான அலுவலக வேலைக்கு நடுவிலும் கூடத் தனது மண வாழ்வைப் பற்றி, சந்திரனைப் பற்றி நிறைய யோசித்தாள். பத்து வருட மண வாழ்வில் அடுத்தடுத்து இரு குழந்தைகள், அலுவலகம், வீட்டு வேலை இவற்றுக்கு நடுவே சிறு தருணங்களையும் ரசிக்க தெரிந்திருப்பதால் அவளுக்கு மன வருத்தங்களென்று ஏதுமில்லை. சண்டையின் போது கூட கோபத்தைக் காண்பித்த மறு நிமிடமே வீதியிலிருக்கும் நாய்க்குட்டியைப் பார்த்தால் கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள். மழைக் காலத்தில் இளையராஜாவின் பாடல்களை ஓடவிட்டு, காகிதக் கப்பலை வீதியில் விட்டு குழந்தையாய் மாறி விடுவாள். செடிகளில் பூக்கும் பூக்களைப் புதுக் கோணத்தில் படம் பிடிப்பாள். ஆகாயத்தில் வெண்பஞ்சு மேகங்கள் எதனை ஒத்திருக்கிறது என அன்னார்ந்து பார்ப்பாள். மார்கழி அதிகாலைகளில் தெருவில் டார்ச் அடித்து உண்டாகும் ஒளிவிலகலில் பனிப்படலத்திற்கு நடுவே தெரியும் தெருவை ஓவியம் போல் ரசிப்பாள். ஜன்னலொன்றின் வழியே ஊடுருவும் ஒளியில் தெரியும் தூசித் துகள்களைப் பிடிப்பதற்கு நேரம் கடத்துவாள். எல்லாமே சில நொடிகளில் கிடைக்கும் ஆனந்தத்தில் திருப்தியுறுவாள். அவ்வளவுதான் போதும்.

அவள் நினைவு தெரிந்து பிடிவாதம் பிடித்தது ஒரே ஒரு விஷயத்திற்குத்தான். சந்திரன் ஒப்புக்கொண்டே ஒரே விஷயமும் அது மட்டும்தான். மணமான புதிதில் ஒருமுறை குடும்பமாக ராமேஸ்வரம் சென்று பித்ரு காரியங்கள் நடத்திய போது, தனுஷ்கோடி சென்றே ஆக வேண்டும் என அவளது கணவரிடம் பிடிவாதம் பிடித்தாள். எதிலோ தனுஷ்கோடியைப் பற்றி படித்த பிறகு அங்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை அவளைத் தொற்றிக் கொண்டது.

பேரழிவின் எஞ்சிய மிச்சங்கள் எதையோ சொல்லத் துடிக்கும். அவை சொல்லும் துயரக் கதைகளைக் கேட்டுவிட வேண்டும். நகரை சுருட்டி தனது அடிவயிற்றில் நிரப்பிக் கொண்ட ஆழி தன்னிடம் கடத்தும் தகவல்களை அறிந்திடவேண்டும் அவளுக்கு. “இதே கடல்தான் அங்கயும் இருக்கு அவ்ளோ தூரம் போய் பாக்கனுமா” எனச் சந்திரன் மறுத்தான். இவள் வெளியே வராமல் ஹோட்டல் அறையிலேயே அமர்ந்திருந்தாள். கண்ணீரை தேக்கி வைத்து முகத்தைத் தூக்கி வைத்திருந்ததைப் பார்த்த அவனது குடும்பத்தினர் அவள் விருப்பப்படியே அழைத்து போகும்படி கூறியதால், அவளை மட்டும் தனுஷ்கோடி அழைத்துச் சென்றான். மணமான புதிது வேறு. வழியின்றி விட்டுக்கொடுத்து வந்தான்.

ஒரு கால் டாக்ஸியில் தனுஷ்கோடிக்குப் பயணம் செய்த போது போகும் வழி முழுக்க சந்திரன் அவளைத் திட்டிக் கொண்டே வந்தான். அவள் கரையோரமிருக்கும் கடலையே வேடிக்கை பார்த்து வந்தாள். சிதிலமடைந்த தேவாலயத்தின், கட்டிடங்களின் கலையப்படாத மௌனம் மனதை எதுவோ செய்தன. சந்திரன் அவளை இழுத்துக் கொண்டு கடற்கரையை அடைந்த போது சூரியன் மறையும் நேரம். வெண் மணலில் அழுந்த தடம் பதித்து, கடல் வாரி இறைத்த காற்றை ஒரு நெடுமூச்சில் உள்வாங்கி, மறையும் சூரியனையே பார்த்துக் கொண்டிருந்த போது பரிபூரணமாக உணர்ந்தாள். ஆசை தீரச் சூரியனின் ஆரஞ்சு நிற ஒளி வாங்கி அவ்விரவு முழுவதும் அவள் முழு மதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தாள்.

 

றக்குறைய பத்து வருடங்கள் கழித்து இப்போதுதான் அவளுக்கு இந்தச் சேலை மீது ஆசை உண்டானது. அவளது அலுவலகத் தோழி ஹரிதாவிடம் இதைப் பற்றிச் சொல்லிப் புலம்பினாள்.

“ஒரு சேலைக்குப் போய் ஏன் இப்படி ஸ்ட்ரெஸ் எடுத்துக்கற?”

“உனக்கு புரியுதா ஹரிதா? இதுவரைக்கும் எனக்கு எதாவது வேணும்னா ரெண்டு பேரும் சேந்துதான் கடைக்கு போவோம்.. போனதும் எதாவது எடுத்து ‘உனக்கு இது நல்லாருக்கும்’னு எங்கிட்ட காமிப்பாரு.. எனக்கும் அது புடிச்சிருக்கும். உடனே வாங்கிட்டு வந்துடுவோம். அவ்ளோதான்.. அதாவது அவருக்கு பிடிச்சதை இதுவரைக்கும் நான் மறுப்பு சொன்னதில்ல.. ஆனா முத தடவை எனக்கு புடிச்சத ஒன்னு எடுத்திருக்கேன். நான் வேணாம்னு சொல்லியும் ., நீ எப்படி அதை போடலாம்னு சண்டை. ஏதோ நான் கொலை பாவம் பண்ணின மாதிரி சீன் கிரியேட் பண்ணி என்னைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளி வீட்டை ரெண்டாக்குறத என்னன்னு சொல்வ? உனக்கு பிடிச்சத எனக்கு பிடிக்கலைனா நீ அதைச் செய்யவே கூடாதுன்னு சொல்றார். இதை என்ன சொல்வ?”

“ம்ம் . என்ன சொல்றது? வேணும்னா வீட்ல அவர் இல்லாதப்போ கட்டிப் பார்த்து ஆசையா போட்டோ எடுத்துக்கோயேன்”

காயத்ரி முறைத்தாள். ” நான் என்ன கள்ளக் கடத்தல் பிஸினஸா பண்றேன் யாருக்கும் தெரியாம பண்ண. ஏதோ நான் தப்பு பண்ற மாதிரி ப்ரொஜெக்ட் பண்ற”

“எனக்கு தெரில காயத்ரி.. அவங்கவங்க லைஃப் அவங்கவங்க டீல் பண்ணனும்.. எதுவா இருந்தாலும், குழந்தைங்க நிம்மதி முக்கியம் மறந்துடாத” என்று கனிவாக ஹரிதா சொன்னாள்.

காயத்ரி அந்த வார்த்தையில் அடங்கிப் போனாள்.

கேவலம் ஒரே ஒரு ஆசை… அபூர்வ ஆசை..அது ஏன் இப்படி வதைக்கிறது? அந்தச் சேலையைப் பார்க்காமலிருந்திருக்கலாம். வாழப்படும் இந்த வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் அறியாமலே இருந்திருக்கலாம்… . ஒரு சேலையின் பொருட்டு மனதில் மழையின் சப்தத்தை உணர்ந்த அவள், அதன் பூரணத்துவத்தை அறிய முற்பட்டு, அது இயலாமல், தாகம் தீர்க்க கானல் நீரைக் கொத்தி கொத்திக் கூர் மழுங்கிய காகத்தின் கரைதலின் உண்டாகும் வேதனையை அடைந்தாள். அவளது பூரணத்துவம் ஏதோ ஒரு துணுக்கில் முழுமையாகாமல் தொங்கிக் கொண்டிருந்தது.

 

ந்தச் சேலை பிறகு அவள் கட்டிக் கொள்ள நினைக்கவில்லை. வீடு அமைதியாக இருந்தது. எப்போதும் போல் வங்கிக்கும் வீட்டு வேலைகளிலும் பிள்ளைகளை கவனித்தலிலும் மும்முரமாய் இருந்ததால் மனச்சிடுக்கிலிருந்து இயல்பிற்கு வந்தாள். இப்படித்தான் குடும்பங்கள் ஓடுகின்றன போலும். காலம் ஒருவருக்கொருவர் தமக்கிழைக்கும் தீங்கையோ, மன வருத்தங்களையோ யோசிக்க நேரம் தருவதில்லை. ஓடிக்கொண்டே இரு என விரட்டுகிறது. இல்லையெனில் மனித மனங்கள் பித்தாகிப்போகும். தீர்வின்றிச் சண்டையிட்டுக்கொண்டே இருக்கும்.

அவளுக்கு இப்போது எதையும் நினைக்க நேரம் இல்லை அல்லது நேரம் ஒதுக்குவதில்லை. பீரோவைத் திறக்கும்போதெல்லாம் உண்டாகும் மழையின் சப்தம் இன்னும் அழகாக்கியது. இயற்கையுடன் உறவாடத் தெரிந்தாலே அதுவே எல்லாவற்றையும் சரிப்படுத்திவிடும் .

காலையில் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்த போதுதான் சந்திரனுக்கு உடல் நலமில்லை என ஒரு புது அழைப்பு சொன்னது. பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாள். சந்திரன் மாரடைப்பு வந்து இறந்து போயிருந்தான். உறைந்து போய் நின்றாள். அவளுக்கு இது நிஜம் என்பதே உணரும் நிலைக்கு வர பல நிமிடங்கள் ஆனது. சந்திரனுடைய அலுவலக நண்பர்களே சடலத்தை மருத்துவமனையில் எல்லா சம்பிரதாயங்களும் முடித்து வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள்.

காயத்ரி கதறிக் கதறி அழுதாள். பத்துவருட அழுகை ! எங்கெல்லாம் அடக்கி, ஒளித்து வைத்திருந்தாளோ அவையெல்லாம் வெளி வந்தன. சந்திரனின் அக்காக்களும், உறவினர்களும் இன்ன பிற எல்லாரும் வந்துவிட்டனர். இவ்வளவு இளம் வயதில் வந்த மரணத்தை பற்றி அனைவரும் வருத்தமாக பேசிக்கொண்டார்கள். “எல்லாம் இவ கூட மாரடிச்சே என் தம்பி போய்ட்டானே” என அவனது அக்காக்கள் அவள் மீது வசவுகளை வாரிக் கொட்டினார்கள். அழுது வீங்கிய கண்களுடன் நிச்சலனமாய் சந்திரனையே பார்த்தாள். குழந்தைகளை அவளுடைய தங்கை கூடவே வைத்துக் கொண்டாள்.

நொடிப் பொழுதில் மரணம் அவனைத் தழுவிக் கொள்ளும் என அவள் அறியவில்லை. அவன் கொஞ்சமே கொஞ்சம் காதலாக அவளிடம் பேசியிருக்கலாம். பிரியமாய் நடந்திருக்கலாம். நல்ல நினைவுகளை மிச்சம் வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம். எதையுமே அவன் தரவில்லையே எனப் பொங்கிப் பொங்கி அழுதாள். மறுநாள் காரியங்கள் எல்லாம் ஆயிற்று. வீடு கழுவித் துடைத்தாயிற்று.. சந்திரனின் அக்காக்கள் அவளை கரித்து கொண்டேயிருந்தார்கள். அவனைச் சாகடித்துவிட்டாள் எனத் துவேஷித்தார்கள். எப்போதும் போல் கேளாதவாறு அமைதியாக இருந்தாள்.

காயத்ரி குளித்துவிட்டு அறையிலிருந்து வெளி வந்தாள். சுற்றம் எல்லாம் கூடத்தில் அமர்ந்திருந்தது. வெளிவந்த அவளைக் கண்டு பாவமாய் அழ ஆரம்பித்தது. நெடு நாட்களாய் கட்டாமல் வைத்திருந்த மயில் பச்சை நிறச் சேலையை கட்டியிருந்தாள். அவள் பரிபூரணமாகியிருந்ததை அவள் முகம் சொல்லிற்று. இப்போது வெளியேவும் மழை பெய்ய ஆரம்பித்தது.


 

எழுதியவர்

ஹேமி கிருஷ்
ஹேமி கிருஷ்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சார்ந்த ஹேமி கிருஷ் ; தற்போது அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் வசிக்கிறார். . ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் உள்ளிட்ட பல அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் சிறுகதைப் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ‘மழை நண்பன்’ மற்றும் ’நெட்டுயிர்ப்பு’ என இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ruthramoorthy
Ruthramoorthy
1 year ago

அருமையான சிறுகதை தொடர்ந்து எழுதுங்கள்..

osai chella
osai chella
11 months ago

அருமை… இயற்கையுடன் உறவாட தெரிந்தாலே அது எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்!! வைரவரிகள்.

Last edited 11 months ago by osai chella
Arun
Arun
10 months ago

Siru siru aasaihal….avalin yennathai purindthu kollamal…konran avalin siru aasaiyai…anbai…ithu avanin aanathika manathaye pudam poduhinrathu..avalin aluhaiku kidaitha palan

Jayashriraghu
Jayashriraghu
11 days ago

ஹேமி..இது கதையல்ல..பல பெண்களின் மனம்…இப்படி கதையாக வெளிப்படுத்த முடியாத பல பெண்களின் ஆதங்கம்…

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x