13 October 2024
kavithaikakaran KS

கொஞ்சம் முன்னதாக கிளம்பியிருக்கலாமோ என்று ஒருமுறை நினைத்துக்கொண்டான். தொடக்கத்திலிருந்தே பேருந்தில் சக பயணிகள் யாருமே இல்லை என்பது ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. அதேவேளை எந்த இடைநிறுத்தத்திலும் வேறு யாருமே ஏறவில்லை என்பதில் ஒரு வியப்பும் இருந்தது. பொதுவாக பேருந்து பயணங்களில் கடைசி சில நிறுத்தங்களுக்கு சக பயணிகள் இல்லாமல் தனித்துப் போக நேர்ந்ததுண்டு. ஆனால் ஒரு நீண்ட பயணவேளை முழுவதுமே இப்படி ஒற்றை ஆளாகப் பயணிக்கும் வாய்ப்பு இதற்குமுன் அவனுக்கு வாய்த்ததில்லை. டிரைவரின் பக்கவாட்டு இருக்கையில் உட்கார்ந்திருந்த கன்டக்டர் ஏதோ அரட்டையில் இருந்தார். வண்டியை எடுத்தபோதே அவனை பெரிதாகக் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. இறங்க வேண்டிய நிறுத்தத்தை ‘அங்கேயா..’ என்றுவிட்டு டிக்கட் கிழித்து கொடுத்ததோடு சரி. கூடுதலாக ஒரு பேச்சு நிகழவே இல்லை. 

பேருந்தின் நடுப்பகுதியில் வலதுபக்க ஜன்னலோர இருக்கை அவனுக்கு சௌகரியமாக இருந்தது. கடந்த ஒரு மணி நேரமாக பேருந்து விரைந்து விரட்டிக்கொண்டு ஓடவில்லை. மாலை சூரியன் இறங்கிக்கொண்டிருக்க வெயிலின் வெளிச்சம் பொன்னிறத்தில் மரச்செடி இலைகளில் சிதறிக்கொண்டே ஜாலம் காட்டியபடி பயணத்துணையாக உடன் வந்தன. ஜன்னல் கம்பிகளில் அவ்வப்போது மஞ்சள் பூசின. தலைமுடியைக் கலைத்துக்கொண்டிருந்த காற்றில் லேசான ஈரப்பதம் இருந்தது. பேருந்தின் உட்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் வரிசையாக அடுத்தடுத்து பழைய சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க அவனுக்கு அதில் மனம் பட்டும் படாமலும் இருந்தது. வெளிக்காட்சியை, தோற்றத்தில் வெவ்வேறு மாற்றங்களைக் காட்டிக்கொண்டே வருகிற கொல்லிமலைப்பகுதியின் பாதைகளை ரசித்துக்கொண்டிருந்தான்.

மெதுவாக பார்வையை ஜன்னல் காட்சிகளிலிருந்து பெயர்த்து பேருந்துக்குள் முன்னும் பின்னுமாக ஓட்டினான். விசித்திரமான பயணமாகப் பட்டது. இப்போது ஸ்பீக்கர்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலில் கவனம் கொண்டான். ஒன்று முடிந்து அடுத்து தொடங்கிய பாடல் பெண் குரலுக்குரியது.

‘மாலை மயங்கிய நேரத்திலே

பச்சை மலையருவி வளர் ஓரத்திலே..’

இசையும் நடையும் மெட்டும் பழைய தமிழ்த்திரைப்படங்களின் பாடல்களில் இருந்த தனித்தன்மையை உணர்த்தின. அது நன்கு பரிச்சயமான பாடல் போலவும் இருந்தது. ஆனால், உறுதியாக எந்தப் படத்தின் பாடல் என்பதை அவனால் யோசிக்க முடியவில்லை. அவனுடைய நினைவடுக்குகள் சண்டித்தனம் செய்தன. இந்தப்பாடலை ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வு இருந்தாலும் கேட்டோமா? எங்கே? என்கிற சந்தேகமும் குழப்பமும் அவனுக்கு மேலோங்கியது. கையில் தொழில்நுட்ப மந்திரத்தை வைத்துக்கொண்டு குமைவானேன் என்கிற முடிவில் மொபைலை எடுத்து கூகுளில் தேடிப் பார்க்கலாம் என்று முயற்சித்தான். இன்டர்நெட்டின் இணைப்பு வரிகோடுகளில் ஒன்றே ஒன்று தேமேவென்று பாதி தெரிந்தும் மறைந்தும் என போக்குக்காட்டியது. பேருந்து சற்று வேகம் எடுத்ததைப் போல இருந்தது. சலித்துக்கொண்டு மொபைலை பாக்கெட்டில் வைத்தான். கன்டக்டரைப் பார்த்து தன்னுடைய குரலை எக்கி அழைத்தான்.

“அண்ணே..!”

அவர் பேச்சு தடைப்பட்டு திரும்பினார். டிரைவர் ரியர்-வியூ கண்ணாடி வழியாக அவனைப் பார்க்க முயன்றார்.

“ஸார்! இன்னும் இருபது நிமிஷத்துல நீங்க இறங்கற ஸ்டாப் வந்துடும்”

“அதில்லண்ணே.. இந்தப் பாட்டு எந்தப் படத்துல வருது?”

“இதுவா.. இப்போ வரிசையா பாடிக்கிட்டு இருக்கறது மொத்தமும் ஒரே படத்தோட பாட்டுத்தான்.. ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி.. அதுக்கும் முன்னாலே விக்கிரம ஊர்வசி.. அதுக்கும் முன்னாலே.. ஆரவல்லி சூரவல்லி.. இதுக்கு அப்புறம் பாட போறது திகம்பர சாமியார்..”

பதிலைக் கேட்டுவிட்டு திருப்தியாகவும் ஆனால் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை என்பதான பாவனையோடும் அமைதியாகினான். திக்குத் தெரியாத யோசனையில் அடுத்த ஐந்து நிமிடம் போன வேகம் தெரியவில்லை.

“ஸார்.. அடுத்த வளைவுல மரத்தோட கிளைங்க சடசடன்னு ஜன்னல்ல அடிக்கும். கொஞ்சம் தள்ளி ஒக்காந்துக்கங்க.. முகத்துல பட்டுட போவுது”

கன்டக்டர் சொல்லிமுடிக்கவும் அவன் நகர்ந்துகொண்டான். நகர்ந்த சில நொடிகளில் மரக்கிளைகள் வலதுபக்கத்தில் இருக்கும் மொத்த ஜன்னல் திறப்புகளையும் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டும் முரடனைப் போல சடசடவென அடித்து அச்சுறுத்தி சத்தம் எழுப்பியது. அந்தச் சத்தம் ராட்சசத்தனமாக பேருந்து முழுவதும் நிறைந்தது. டிரைவரின் பக்கவாட்டு ஜன்னல் இறக்கிவிடப்பட்டிருப்பதை அப்போது கவனித்தான். அவர் பேருந்தை முடிந்தளவு இடதுபக்கம் சாலையில் சரித்து திறமையாக ஓட்டியபோதும் முகப்புக்கண்ணாடியின் மேல்வாட்டத்து ஓரங்களில் மரத்தின் மெல்லிய கிளைநுனிகள் ஆத்திரத்துடன் அடித்தபடியே வந்தன.

ஜன்னல் விளிம்புகளின் இரும்புத்துருக்கள் அவனுடைய கழுத்துப் பகுதிகளுக்குள் புகுந்தது. சட்டென்று எழுந்துகொண்டு சட்டையின் இரண்டு மேல்பட்டன்களையும் கழட்டிவிட்டு நன்கு உதறிக்கொண்டான். அவனுடைய முகம் அஷ்டகோணலாகியிருந்தது. பேருந்து அந்த வளைவை கடந்துவிட்டிருந்தது.

சட்டைக்காலரின் கழுத்துப்பகுதியை தூக்கிவிட்டுக்கொண்டே கைக்குட்டையால் துடைத்து நீவிக்கொண்டிருந்தான். சீட்டில் பரவிக்கிடந்த இரும்புத்தூசுகளை அதே கைக்குட்டையால் பட்டும்படாமல் தட்டிவிட்டபடி மீண்டும் ஜன்னலருகே நகர்ந்து உட்கார்ந்துகொண்டான்.

வளைந்து மேலேறி கீழிறங்கி என மாறி மாறி போகும் பாதையின் பக்கவாட்டில் அடர்ந்திருக்கும் காடுகளினூடே அந்தப் பேருந்து விரைந்துகொண்டிருந்தது.

ஐந்து பாடல்கள் முடிந்து அடுத்த பாடல் தொடங்கியிருந்தது. அதுவும் பெண் குரல்தான்.

‘வச்சேன்னா வச்சதுதான்.. (பெண் குரலின் சிரிப்பு)

வச்சேன்னா வச்சதுதான் – புள்ளி 

வச்சேன்னா வச்சதுதான் – வாசலிலே

வழக்கம் போலே

வாசலிலே வழக்கம் போலே

வாடிக்கையா நான் வேடிக்கையாய்

வாடிக்கையா நான் வேடிக்கையாய்

புள்ளி 

வச்சேன்னா வச்சதுதான்…’

அந்தப்பாடல் முடியும் தருவாயில் பேருந்து.. பருத்து நின்றிருந்த ஒரு சாலையோர மரத்தின் அருகே மெதுவாக பிரேக் அடித்து நின்றது. அவன் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கவே அவனையே பார்த்திருந்தார்கள் டிரைவரும் கன்டக்டரும். வேறு யாரும் ஏறவில்லை, இது தனக்கான ஸ்டாப்தான் என்பதை தாமதமாக உணர்ந்து மெதுவாக எழுந்துவந்து முன்வாசலின் முதல்படிக்கட்டில் நின்றான்.

“இந்தப் படத்தோட பாட்டெல்லாம் எங்கேண்ணே உங்களுக்கு கிடைக்குது?”

அவர்கள் இருவரும் இவனைப் பார்த்து பெரிய ஜோக்கை கேட்டுவிட்டதைப் போல பகபகவென சிரித்தார்கள். அதுதான் பதில் போலும் என்று நினைத்துக்கொண்டான்.

அவன் இறங்கியதும் அது டபுள் விசில் சத்தத்தோடு போய்விட்டது. 

யாருக்கு அந்த டபுள் விசில் என்று நினைத்துக்கொண்டே நின்றவனின் பார்வையை விட்டு பேருந்து மறைந்ததும்.. தான் போக வேண்டிய திசையைத் திரும்பிப் பார்த்தான். வளைவான அச்சாலையின் இடதுபக்கத்தில் சரிவாக ஒரு செம்மண் பாதை இறங்கியது. தான் தேடிவந்திருக்கும் நபரின் ஊருக்குள் தன்னை அழைத்துப் போகவிருக்கும் பாதை என்கிற எளிய புரிதலோடு அதில் இறங்கி நடக்கலானான். ஆள் அரவமே இல்லை. வெளிச்சம் மங்கிய நிலையில் மரங்கள் சூழ்ந்த அப்பகுதி கானகத்தின் சாயலோடு இருந்தது. பாதை சிறிது தூரம் வளைந்து வளைந்து போயிற்று. ஒரு சின்னஞ்சிறிய சலசலப்புக்கூட கேட்கவில்லை.

 

ப்போது வேண்டுமானாலும் சட்டென இருண்டுவிடும் போல பொழுதும் சூழலும் இருந்தன. வானமே கண்ணில் படவில்லை. அங்கிருந்த அமைதி பூதாகரமானதாக இருந்தது. ஐந்து நிமிட நடைக்குப் பின்னே ஒரு திருப்பத்தில் பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கலந்துகட்டின தினுசில் வெளிச்சம் புலப்பட்டது. குகை ஒன்றின் வாயில் அளவிற்கு அந்த வெளிச்சம் அடங்கின பாங்கில் குவிந்திருந்தது. அதனை நோக்கி நடையை வேகமாக்கினான். தன் இதயத்துடிப்பு துல்லியமாகக் கேட்குமளவிற்கு நிசப்தம் நிறைந்த ஓர் இடத்தை வாழ்நாளில் முதன்முறையாக எதிர்கொள்கிறான். லேசான அச்சமும் சேர்ந்திருக்க அவனுக்கு வியர்த்திருந்தது.

வெளிச்சத்தை சமீபித்து அதனுள்ளே பிரவேசித்தபோது பெரிய மரப்பாலம் ஒன்று தென்பட்டது. அகலமான அப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து எதிர்ப்பக்கம் வளைந்து இறங்கியிருந்தது. அப்படி ஒரு மரப்பாலத்தை அந்தக் காட்டுப்பகுதிக்குள் அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. பாலத்திற்குக் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஓடிக்கொண்டா இருக்கிறது? அல்லது தேங்கிக்கிடக்கிறதா? இது என்ன நதி? கொல்லிமலையின் பூகோள விபரங்களை நினைவில் புரட்டிட முயன்று தோற்றான். சாட்டிலைட்டின் பூதக் கண்களுக்கு சிக்காத இடங்களும் பூமியில் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டாலும் அவனுக்குள் முளைத்த சந்தேகத்தோடே பாலத்தில் ஏறிவிட்டான். வேறு வழியில்லை. வந்த வேலை சீக்கிரம் முடிந்தாக வேண்டும்.

சிறிது நடந்து பாலத்தின் கூன் விழுந்த உயர மேட்டில் கால்வாசியைக் கடந்திருந்தான். கரைக்கு கீழே நின்று பார்த்தபோது வெளித்தோற்றத்தில் சிறியதாக தென்பட்ட பாலத்தின்மீது நடக்க நடக்க.. அது  சற்றே நீளமானதாக இருப்பதாகப் பட்டது. மனம் அதிக நேரம் அதில் நிலைக்கவில்லை. ஆனால் கரைகளின் இருமருங்கிலும் அடர்ந்திருந்த மரங்களும் புதர்களும் அவனை வெகுவாக ஈர்த்தன. அதற்குமுன் கண்டிராத நிறங்களில் மலர்கள் பூத்திருந்தன. அங்கே கமழ்கின்ற வாசத்தில் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று நினைத்தான். ஒட்டுமொத்தமாகவே அச்சூழலில் ஒரு மயக்கும் தன்மை இருப்பதை உணர்ந்துகொண்டான். கீழே உள்ள நீர்ப்பரப்பு அசைவற்று இருப்பதாகப் பட்டது. கொஞ்சம் நேரம் அதனையே உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

மங்கிய வெளிச்சத்தில் நீர்ப்பரப்பின்மீது மரங்களின் நிழல்கள் கரும்பச்சை நிறத்தில்  விரிந்திருந்தன. அவற்றின் இலைகள் அவ்வப்போது காற்றில் அசைவதை பிம்பமாக நீர்ப்பரப்பில் பார்த்திருந்தான். நிமிர்ந்து வனப்பகுதியை தன் பார்வையால் துளைத்திட முயன்றான். ஒரு பறவையினத்தைக் கூட காண முடியவில்லை. சிறிய கீச் ஒலி கூட இல்லாமல் இதென்ன காடு? புதிராகவே இருந்தது.

பின்மண்டையில் சுருக்கென்று ஒரு வலி தோன்றி மறைந்தது.

மீண்டும் நீர்ப்பரப்பை கவனித்தான். இப்போது அந்த வித்தியாசம் அவனை மேலும் குழப்பியது. நீர்ப்பரப்பின் ஆழத்திற்குள் ஒரு பழங்கால மாளிகையின் முகப்புவாயில் தெரிந்தது. கலை நயமிக்க அதன் கூரைப்பகுதி சலனமற்று இருந்தது. அனிச்சையாக நிமிர்ந்து கரையை அவதானித்தான். கரையில் மரக்கூட்டம் மட்டுமே இருந்தது. மொத்தமும் அசைவற்று இருந்தது. வேறெதையும் காணவில்லை. அப்படியென்றால் நீருக்குள்ளேதான் கட்டிடம் இருக்கிறதா! என்ன மாதிரியான இடம் இது? லேசான அச்சம் மேலெழுந்த தருணத்தில் அவனுடைய கால்கள் தாம் போக வேண்டிய கரையை நோக்கி மெதுவாகத் திரும்பின. முதலில் ஊருக்குள்ளே போய் சேருவோம். இந்த இடம் சரியில்லை. இங்கேயே நின்றுகொண்டிருப்பது நல்லதல்ல என்றும் அவனுடைய மனத்திற்குப் பட்டது.

சலனமில்லாத நீர்நிலையும் அதனுள் அமிழ்ந்திருக்கும் மாளிகையின் கூரையும் அவனை அசௌகரியப்படுத்தியிருந்தன. பாலத்தின் இறக்கத்தில் இன்னும் கால்வாசி தொலைவு இருக்குமிடத்தில் நின்றபடி கண்ணெதிரே உள்ள பாதையைப் பார்த்தான். அது ஒழுங்கற்று தொடங்கி உள்நோக்கி வளைந்துகொண்டு போகிறது. வேறு யாராவது மனித நடமாட்டமாக கண்ணுக்கு அகப்படமாட்டார்களா என்று ஒரு கணம் வேண்டினான். அடுத்த அடி எடுத்து வைக்கும்போது ஒரு குரல் கேட்டது.

“அங்கேயே நில்”

முதிர்ந்த குரல். ஆனால் கம்பீரமாக இருந்தது. கட்டளைத் தொனியில் ஒரு குரல். அவன் இடவலமாகப் பார்த்தான். யாரையும் காணவில்லை.

“யாருங்க? எங்கே இருக்கறீங்க?”

பதில் இல்லை. சில நொடிகள் அமைதி நிலவியது.

“ஹலோ.. கொஞ்சம் வெளியில வாங்க.. நான் அசலூருக்காரன்..”

“அது தெரிகிறது தம்பி.. நீ வந்த விஸயம் என்னவென்று சொல்?”

எதிர்ப்பக்கம் ஒரு மரத்திற்குள் இருந்துதான் அந்தக் குரல் கேட்கிறது என்பது புரிந்துபோயிற்று. இலைகளும் கிளைகளும் அடர்ந்திருந்த அம்மரத்தைப் பார்த்து அவனும் பதில் சொல்லத் தொடங்கினான்.

“ஒரு ஆளைத் தேடி வந்திருக்கேங்க..”

“யாரது?”

“வல்வில்லன்.. வயசு நாப்பத்தஞ்சு”

“நீ எங்கே இருந்து வருகிறாய்?”

“அவரை உங்களுக்குத் தெரியுமா? அவர் வீட்டுக்கு போவணும்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா? சீக்கிரம் இருட்ட போற மாதிரியே இருக்குது.. நான் கடைசி பஸ்ஸை புடிச்சு இன்னைக்கே திரும்பி போவணும்”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே தம்பி?”

“சென்னைலருந்து வர்றேங்க”

“மதராஸ பட்டணத்தில் எங்கே?”

“மெட்ராஸ் இல்லீங்க.. சென்னைன்னு பேரு மாத்தி ரொம்ப வருஷம் ஆவுதுங்க”

“எல்லாம் ஒன்றுதான் தம்பி.. பட்டணத்தின் எப்பகுதியிலிருந்து வருகிறாய் என்பதைச் சொல்”

“வேர்ல்டு பேங்க்.. கடன் வசூல் பிரிவு.. வல்வில்லன் ஸாரு அஞ்சு லட்ச ரூபா லோன் வாங்கிருக்காரு.. மொத பதினெட்டு மாசம் வட்டியும் அசலும் சேர்த்து கட்டிருக்காரு.. அப்புறம் கடந்த ஆறு மாசமா எதுவும் கட்டலை.. சென்னை அட்ரஸ்ல ஆளு இல்ல.. இந்த ரெண்டு மாசமா தேடி அலைஞ்சு கஷ்டப்பட்டு இந்த இடத்தைக் கண்டுபிடிச்சு இதுவரைக்கும் வந்திட்டேன்.. கொஞ்சம் உதவி பண்ணுங்க ஐயா..”

“இந்த பிழைப்புதான் உனக்கு சோறு போடுகிறதா?”

“ஆமாங்க”

சிறிது நேரம் மீண்டும் அமைதி நிலவியது. அம்மரத்தின் அடர்த்தியையே உற்றுப் பார்த்தான். எந்த அசைவோ நிழல் ஆட்டமோ கிஞ்சித்தும் இல்லை. யாரோ மரக்கிளையிலிருந்து கீழேயிறங்கி வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அமைதி காத்தான். இப்போது ஒட்டுமொத்த மரமுமே அவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் போல மனத்திற்குப் பட்டது. சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டுக்கொண்டு மெதுவாக எச்சிலை விழுங்கினான்.

“உனக்கு மணம் ஆகிவிட்டதா?”

“ஊஹூம்ம்.. இல்லீங்க”

“அப்படியென்றால்.. உன்னை நேசித்துக்கொண்டிருக்கும் பெண்ணை என்ன செய்வதாக உத்தேசம்?”

அவனுக்கு அடிவயிறு பிசைந்து ஒரு கிலி உருவாகியது. இது எப்படி இந்த ஆளுக்குத் தெரியும்? சாலைக்கே ஓடிவிடலாமா என்று நினைத்தான். சிறு அச்சத்துடன் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தான். பாலத்தின் உயரமான நடுப்பகுதி மட்டும்தான் கண்ணுக்குத் தட்டுப்பட்டது. மேற்கொண்டு கால்கள் முன்னேறி நகருமா என்கிற சந்தேகமே வந்துவிட்டது.

“ஓடிப்போக.. முடியாது தம்பி.. தப்பித்துச் செல்லும் எண்ணத்தை கைவிட்டுவிடு.. வந்த காரியத்தை சாதித்துக்கொள்ள முயற்சி செய்”

“ஐயா.. பயமா இருக்கு.. மரத்திலருந்து இறங்கி வந்து நேருல நின்னு பேசினீங்கன்னா கொஞ்சமாச்சும் தைரியமா இருக்கும். உங்களுக்கும் புண்ணியமா போகும்.. வந்துடுங்களேன் ப்ளீஸ்”

அவன் சொன்னதைக் கேட்டு அட்டகாசமான சிரிப்பு சத்தம் மட்டுமே பதிலாக வந்தது. அதில் காடு ஒருமுறை அதிர்ந்து மீண்டது போல இருந்தது. புதர்களுக்குப் பின்னே சிறுவிலங்குகளின் காலடி ஓசைகள் விரைவதை அவனால் உணரமுடிந்தது. நீர்ப்பரப்பில் கூட அவசரமாக ஓர் அலை நீளக்கோடென மெலிதாகக் கடந்து போயிற்று. அதை அவன் பார்க்கவில்லை. விலங்குகள்! விலங்குகள் இருக்கின்றன இந்தக் காட்டில். என்ன மாதிரியான விலங்குகள்? அவனால் ஓர் ஒழுங்கிற்குள் யோசிக்க முடியவில்லை.

“நான் யாரென்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டாம்.. ஆனால்.. நீ தேடி வந்திருக்கிற ஆள் நானல்ல.. அது உறுதி..”

இன்னொரு பயங்கர சிரிப்பு. அவன் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தான்.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.. அப்பெண்ணை என்ன செய்ய போகிறாய்?”

அவனுக்கு கோபம் வந்தது.

“பர்சனலை எதுக்கு நோண்டுறீங்க? உங்களால அட்ரஸ் சொல்ல முடியலைன்னா பரவாயில்ல.. நானே தேடி போயிக்கிறேன்”

சொல்லிவிட்டு ஓரடி எடுத்து வைத்தான்.

“என்னைத் தாண்டி நீ போகவேண்டும் என்றால்.. நான் உன்னிடம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் தகுந்த பதிலைச் சொன்னால் மட்டுமே அது இயலும்”

“இல்லன்னா?”

அமைதி நிலவியது. அவ்வேளை பலத்த காற்று வீசியது. ஒட்டுமொத்த மரத்தின் இலைகளும் ஒரே சமயத்தில் சலசலத்துவிட்டு ஓய்ந்தன. யாரோ ஒருவரின் ராட்சசத்தனமான நமுட்டு சிரிப்பாக அந்த சலசலப்பு இருந்தது. உடல் முழுவதும் சிலிர்த்துக்கொண்டு ஒரு பேரச்சம் அவனுக்குள் எழுந்தது.

“மரணம்”

“வாட்?”

“நீ இங்கே வந்திருக்கக்கூடாது தம்பி.. ஆனால் வந்துவிட்டாய்.. அது உன் தவறு”

அவனுக்கு சூழல் மறந்து கோபம் வந்தது.

“யோவ்..! ஒருத்தன் கடன வாங்கிட்டு திருப்பிக் கட்டாம டிமிக்கி கொடுத்துட்டு இங்க வந்து ஒளிஞ்சுக்கிட்டு இருக்குறான்.. பணத்தை வசூல் பண்ண வந்த என்னை தப்புன்னு சொல்லுற? செத்துருவேன்னு பயமுறுத்துற? எந்த வூர் நியாயம்யா இது..? முதல்ல கீழ இறங்கி வாய்யா.. பெரிய மனுஷனாச்சேன்னு மரியாதை குடுத்து பேசினா.. ரொம்ப ஓவரா போற?”

இப்போது ஒட்டுமொத்த இலைகளும் கோபமாகப் படபடத்து துடித்தன. இலைகளின் சலசலப்பும் துடிப்பும் அவனுடைய இருதயத்துக்குள்ளே நுழைந்து இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு துரிதப்படுத்தின. முகமெல்லாம் சிவந்துபோய் மூளை சூடாவதைப் போன்ற பிரேமை உருவானது. ஒருவேளை இந்த பிரம்மாண்டமான மரத்தின் குரல்தானா அது? மனித குரல் இல்லையா? மரமா என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்தான். தலையை வேகமாக ஓர் உலுக்கு உலுக்கிக்கொண்டான்.

“என்னுடயை வயது எத்தனை இருக்கும்..? கொஞ்சம் பொறுமையாகக் கணித்துவிட்டு சொல்.. பார்ப்போம்”

குரலின் வயதைச் சொல்லுவதா மரத்தின் வயதைச் சொல்லுவதா என்று அவனுக்கு பிடிபடவில்லை. நிச்சயமாக ஆள்தான் உள்ளே உட்கார்ந்திருக்கிறான் என்கிற முடிவுக்கு வந்தவனாக குரலை கணித்துவிட்ட தீர்மானத்தில் சொன்னான்.

“அறுபது அறுபத்தஞ்சி வயசிருக்கும்..”

“ஹஹ்ஹா.. ஹா..! அத்தனை இளமையாகவா என்னுடைய குரல் உள்ளது?”

“இளமையா..! உங்களுது வயசான ஆளோட குரலுதாங்க”

“நீ அறிந்துவைத்திருக்கும் வயதின் காலக்கணக்கு என்பது வேறு தம்பி.. சரி.. நானே சொல்லிவிடுகிறேன்.. நீ பயந்துவிடாதே”

“வயசுல என்னங்க பயம்?”

மீண்டும் ஒரு கம்பீரமான சிரிப்பு.

“வருகிற ஆவணி ஒன்று பிறந்துவிட்டால்.. எழுநூறு முடிந்து எழுநூற்றி ஒன்று தொடங்குகிறது தம்பி..”

எவனோ பைத்தியக்காரனிடம் மாட்டிக்கொண்டோம் என்கிற முடிவுக்கு அவன் வந்தான். இப்போது அச்சம் நீங்கி ஒரு தெளிவு கிடைத்தது போல இருந்தது.

“யோவ்..! என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? அந்த வல்வில்லன் வச்ச ஆளா நீ?”

“உன்னுடைய கோபமும் ஆச்சரியமும் எனக்குப் புதிதல்ல.. போகப்போக அதனை நீயே புரிந்துகொள்வாய்”

“எல்லாம் புரிஞ்சிருச்சி.. அந்த ஆளை நானே தேடிக்கிறேன்..”

“உன்னால் ஊருக்குள்ளே நுழைய முடியாது.. என் கேள்விகளுக்கு பதில் சொல். பின்னர் போகலாம்”

“உன்னோட ஒரே ரோதனைய்யா.. இவ்ளோ நேரமா.. ஒவ்வொன்னுத்துக்கும் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டே வந்தா.. நீ.. என்னையே டுபாக்கூர் ஆக்குற”

“ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சொல்லை சொல்லுகிறாய். அது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. டுபாக்கூர் என்பது ஊரின் பெயரா?”

அவன் அந்த மரத்தைக் கடுப்பாகப் பார்த்தபடி நின்றிருந்தான்.

“இதுக்கெல்லாம் பதிலு கிடையாது.. ஆனா என்னை நீ கேட்ட கேள்வி ரொம்ப பர்சனலு.. பொண்ணை பத்திலாம் சொல்ல முடியாது”

“சரி.. அதை விட்டுவிடுவோம்.. நீ பாலத்துக்கு கீழே உள்ள நீரில் என்ன பார்த்தாய்?”

அவன் சற்று நிதானித்தான். ஏன் பேச்சு வேறு திசைக்கு திரும்புகிறது என்று யோசித்தான். இருந்தாலும் கேள்வியின் தூண்டுதலால் மீண்டும் பாலத்தின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தான். அந்த மாளிகை அதே நிலையில் அப்படியே தெரிந்தது.

“ஒரு பெரிய மாளிகை நீருக்குள்ளே மூழ்கி கிடக்குது”

“வேறு என்ன பார்க்கிறாய்?”

“அவ்வளவுதான்.. இந்த தண்ணீ ஓடாம தேங்கி நிக்குற மாதிரியே இருக்கு.. சில சமயம் அசையுது”

“அதனுடைய நீரோட்டத்தை மேற்பரப்பில் காண்பது அரிது.. கீழே ஆழத்தில் விரைகின்ற நீரோட்டத்தின் விளைவாக மாளிகை அசைவதைக் காணலாம்”

மீண்டும் குனிந்து உற்று நோக்கினான். ஆமாம் மாளிகையின் பக்கவாட்டு சுவர்கள் நீருக்குள் அசைவைதைப் போல இருந்தது உண்மையே.

“அப்படீனா..?”

“அது உண்மையல்ல.. அந்த மாளிகை நீருக்குள் இல்லை. பிம்பம்தான் உள்ளது என்கிறேன்.. இந்தக் காட்டின் அந்தரத்தில் ஒரு நகரம் உள்ளது. மிதக்கும் நகரம்.. அது உன் போன்ற சாதாரண மானிடக் கண்களுக்குப் புலனாவதில்லை.. எத்தனை முறை நீ வந்தாலும் அத்தனை முறையும் உனக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சும்..”

“பழைய விட்டலாச்சார்யா படக்கதை மாதிரி நல்லா புருடா வுடுற.. இதைப் போய் என் டிபார்ட்மெண்ட்ல சொன்னா வேலையலருந்து துரத்தி வுட்ருவாங்க..”

“நான் உள்ளதைத்தான் சொல்லுகிறேன்”

“சரி.. அப்படியே இருந்துக்கட்டும்.. ஐ டோண்ட் கேர்.. எனக்கு வேண்டியது வல்வில்லன் மட்டும்தான்”

“அவனுடைய முழுப்பெயரே அவ்வளவுதான் என்று நினைக்கிறாயா?”

“எங்க ரெக்கார்ட்ல என்ன இருக்கோ.. அத வச்சித்தான் வந்திருக்கேன்”

“நான் சொல்லுகிறேன். அவனுடைய முழு பெயர்.. வல்வில் ஓரி.. எங்கே ஒருமுறை உன் வாயால் உச்சரி.. நான் அதைக் கேட்கவேண்டும்”

“ஓஹோ..! அப்போ ஆளு யாருன்னு கன்ஃபார்மா உனக்கும் தெரிஞ்சிருக்கு.. என் வேலைய செய்ய வுடாம நீ என்னை இப்படி நிப்பாட்டி வச்சிக்கிட்டு லேட் பண்ணுற.. இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? தண்டனை கடுமையா இருக்கும்..”

“நீ உச்சரி.. அவனுடைய முழு பெயரை ஒருமுறை உச்சரி”

“வல்வில்.. ஓரி.. போதுமா?”

“ஆஹா..! நீ உச்சரித்து.. அவன் பெயரைக் கேட்கவே செவிகளுக்கு இனிமையாக உள்ளது தம்பி.. ஆனால்.. அவனை அடைவது எளிதன்று”

“பார்த்தியா.. திரும்பவும் யூடர்ன் போட்டு மொதல்லருந்து ஆரம்பிக்கிற? அவனை புடிக்கிறது எப்படின்னு நானே பாத்துக்கறேன்.. நீ என்னை குறுக்கே மறிச்சிக்கிட்டு இருக்கற பாரு.. அதான் இப்போ பிரச்சனையே”

மரம் அட்டகாசமான ஒரு சிரிப்பை சிரித்து வைத்தது.

“ஒரு கடைசி கேள்வி..”

“என்னய்யா யோவ்..?”

“சலித்துக்கொள்ளாதே.. நீ அந்த நீரின் பரப்பில் பார்க்காதது என்ன?”

அவன் சில நொடிகள் ஒன்றும் புரியாமல் முழித்தான்.

“கேள்வி ஏடாகூடமா இருக்கே”

“இருள் கவிந்துவிடுவதற்கும் முன்பாக நீர்ப்பரப்பை இன்னுமொருமுறை சற்றே ஆழ்ந்து ஆய்ந்து பார்த்துவிட்டு சரியான பதிலைச் சொல்”

அவன் மீண்டும் எட்டிப் பார்த்தான். அதே மாளிகை அங்கேயே இருந்தது. அண்ணாந்து காட்டின் அந்தரத்தைப் பார்த்தான். எதையும் காணவில்லை. அப்போது நீர் பிம்பத்தில் மாளிகையின் மாடத்தில் எங்கிருந்தோ ஒரு பறவை பறந்து வந்து உட்கார்ந்தது. அதன் உடல் நிறம் வசீகரமாக இருந்தது. உட்கார்ந்தபடி தலையை அசைத்து இவனையே பார்ப்பது போல இருந்தது. அந்தப் பார்வை அவனை ஊடுருவியதிலிருந்து கர்மசிரத்தையுடன் தன்னை விடுவித்துக்கொண்டான். கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் மரத்தைத் திரும்பிப் பார்த்தான். மரம் அசையாமல் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தது. இம்முறை அவன் தீர்க்கமாகவே சொன்னான்.

“இதுக்கு முன்னாடி நான்.. பார்க்காதது ஒரு பறவையை”

“இல்லை.. தவறான பதில். அந்தப் பறவை இப்போதுதான் வந்து உட்கார்ந்தது. தொடக்கத்திலிருந்தே நீ பார்க்காத ஒன்று உண்டு.. அது என்ன?”

அவனுக்குத் தெரியவில்லை. இதெல்லாம் நிஜம்தானா என்கிற சந்தேகத்தில் கையை ஓங்கி பாலத்தின் கைப்பிடியில் அறைந்தான். கடுமையாக வலித்தது. அடித்த அடியின் வலுவில் பாலத்தின் அடிப்புறத்திலிருந்து துருப்பிடித்த தூசு தும்புகள் உதிர்ந்தன. அவை நீரின்மீது படிந்து படர்ந்த நொடியில் அவை யாவும் நெருப்பு எறும்புகளாக உருமாறின. ஒன்றையொன்று பற்றியபடி வட்ட வடிவில் ஒரே லயத்தில் மெதுவாக மிதந்தபடியே மேற்கு நோக்கி நகர்ந்தன.

அப்போது, அவனுடைய சட்டைக்குள் இடது கையின் புஜ தசையின் பகுதியில் ஓர் ஊறல் உண்டாயிற்று. கையை வேகமாக உதறினான். புஜத்தில் தொடங்கிய ஊறல் மெதுவாக சட்டைக்கை மடிப்பின் விளிம்பிலிருந்து முழங்கைப் பாதையின் வழியாக ஊர்ந்து வெளியே வந்தது. அது ஒரு நெருப்பு எறும்பு. துருவின் நிறத்தில் மினுக்கிக்கொண்டு மணிக்கட்டை நோக்கி விரைந்தது. அதன் மெல்லிய கால்கள் உறுதியான இரும்புக்கம்பிகளைப் கொல்லன் பட்டறையில் வார்த்து எடுத்ததைப் போன்று அதிதுல்லியமாக இருந்தன. அவன் பேச்சற்று போய் நின்றிருக்கும் போதே உள்ளங்கைக்குள் ஏறிய அது நீருக்குள் எகிறி விழுந்தது. நீர்ப்பரப்பில் வேகமாக நீந்திப்போய் முன்னே நகர்ந்து கொண்டிருந்த வட்டவடிவ எறும்புக் கூட்டத்தினைத் தொற்றியபடி அவற்றின்மீது ஏறி நின்றுகொண்டு தலையைத் திருப்பித் திருப்பி கரையின் இருமருங்குகளையும் வேடிக்கைப் பார்த்தபடியே பயணித்தது.

அவற்றையும் நீர் போக்கையும் பார்த்தபடியே இருந்தவனுக்கு சட்டென ஒன்று புத்திக்கு உரைத்துவிட்டது.

இதையெல்லாம் நாம் பார்க்கிறோம் சரி. பார்க்கும் என் பிம்பம் நீரின் பரப்பில் தெரியவில்லையே? அது எப்படி? அவன் அச்சத்துடன் சுயநினைவுக்கு மீண்டவனாக பட்டென்று திரும்பி மரத்தைப் பார்த்தான்.

மரம் அசைவற்று நின்றிருந்தது. அவனுடைய பதிலுக்காக அது காத்திருந்தது.

“நான் அங்கே பார்க்காதது… எ…ன்…னோ…ட.. பிம்…ப…த்…தை”

அவனிடமிருந்து தடுமாற்றத்துடன் வந்த சொற்களைக் கேட்ட மரம் கடகடவென சிரித்தது. காடே கிடுகிடுத்ததைப் போன்ற ஓர் ஒலியலை நுண்கதிராக வெப்பம் கசிய அவனுடைய ஐம்புலன்களிலும் சிக்காமல் உடலை மட்டும் ஊடுருவிப் பாய்ந்தோடியது.

“இது.. எழுநூறாவது முறை”

அவனைப் பார்த்துச் சொல்லிய அந்தக் குரல் ஓர் அசரீரியைப் போல காடெங்கிலும் பரவி கரைந்து ஓய்ந்தது.

அவனுக்கு குப்பென்று வியர்த்தது. பேருந்து இறக்கிவிட்ட சாலைக்கே போய்விட நினைத்தான். அப்போது வெகுதொலைவில் பேருந்தின் ஹார்ன் ஒலி கேட்டது. பாலத்தின்மீது வேகமாக ஓடத் தொடங்கினான். பித்து பிடித்தது போன்ற ஓர் அசுர ஓட்டம். ஆனால் பாலத்தின் பாதை நீண்டுக்கொண்டே போயிற்று. ரொம்ப நேரமாக ஒரே இடத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது உரைத்தபோது.. முழுவதுமாக வியர்த்துப்போய் உடைகள் உடலோடு ஒட்டிக்கொண்டு கசகசத்தன.

அவன் முன்மாலையில் வந்து இறங்கிய சாலையின் கருநிறத் தாரின் கரை மரக்கூட்டங்களுக்கு ஊடே மங்கலாகத் தெரிந்தது. இப்போது பேருந்தின் ஒலி சற்றே நெருக்கத்தில் கேட்டது போலிருந்தது. அவனுடைய உடலில் ஒரு பரபரப்பு கூடிவிட்டிருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. டபுள் விசில் சத்தம் தெள்ளத்தெளிவாகக் கேட்டது. ஓட்டத்தின் வேகத்தை இன்னும் இன்னுமென அதிகரித்தான். ஆனால் கண்களுக்குப் பேருந்து புலப்படவில்லை. ஒரு கணம் ஓடுவதை அப்படியே நிறுத்திவிட்டு.. பேருந்தின் மோட்டார் சத்தம் கேட்ட திசையைப் பார்த்து குரல் எக்கி கத்தினான்.

“ஹோய்..! நிப்பாட்டுங்க.. நிப்பாட்டுங்க..”

பேருந்தின் மோட்டார் சத்தமோ தொலைவில் நகர்ந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து போயிற்று. மூச்சு வாங்கிட ஸ்தம்பித்து நின்றுவிட்டிருந்தவன் கூன் போட்டு முதுகை வளைத்தபடி முழங்கால்களில் கையூன்றி மரக்கூட்டங்களை வெறிச்சிட்டு பார்த்திருந்தான்.

இப்போது யாரோ நடந்து வருகிற காலடிச் சத்தம் கேட்டது. மிகத் துல்லியமான நடை. எங்கோ கேட்டது மாதிரியான ஒரு நடை. மட்டுமன்றி அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு நடையின் தாளமும் அதில் இருந்தது.

யாரோ ஓர் ஆளைப் பேருந்து இறக்கிவிட்டு போயிருக்கிறது. அநேகம் அவன் இந்த ஊர்க்காரனாக இருக்கலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுவரையில் நடந்ததெல்லாம் ஒரு மோசமான மனப்பிரமை. அப்பாடா நம்மைப் போன்ற ஒரு சக மனிதனைப் பார்க்கப் போகிறோம் என்று தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டான். மரத்திலோ அல்லது அதன் பின்பக்கத்திலோ ஒளிந்துகொண்டு இதுவரை அச்சுறுத்தியது ஒரு மனம் பிறழ்ந்த ஆள் என்பதை வருபவன் நிச்சயமாக உறுதிப்படுத்துவான். அது போதும். அது போதும். ஆனால் என்னுடைய பிம்பம் தண்ணீரில் தெரியவில்லையே. அது எப்படி சாத்தியம்? மீண்டும் மனம் அவனை குழப்பிவிட எத்தனித்தாலும் வரப்போகும் மனிதனை நோக்கி நம்பிக்கையுடன் காத்திருந்தான். 

ஒருவேளை வருகின்றவன் நாம் தேடிவந்த வல்வில்லனாக இருந்தால்? நல்லதாகப் போய்விட்டது. வந்த காரியம் இங்கேயே முடிந்துபோகும். அவனோடேயே அவன் வீட்டுக்குப் போய்விடலாம். தனக்குத் தேவை அவனைச் சந்தித்துவிட்டதற்கான ஆதாரமும் ஒரு பதில் தாக்கலும் கையெழுத்தும் தான். அதற்கு அப்புறம் அவன் பாடு வங்கியின் பாடு.

அப்பாடா.. இத்தனை மன அவசத்திற்குப் பிறகு அந்த ஓர் அதிசயமும் நடந்துவிட்டால்.. வருவது தான் தேடிவந்திருக்கும் வல்வில்லனாகவே இருந்துவிட்டால்.. நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

 

ம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தவனுக்கு வருகின்றவனின் தலை முதலில் தென்பட்டது. அவனோ பாலத்தின் முன்னால் கரையின் அருகே நின்றுகொண்டு அங்குமிங்கும் சந்தேகமாக பார்வையைச் சுழற்றி காட்டைப் பார்த்தான். அட.! அவனைப் பார்த்தால் இந்த ஊர் ஆளைப் போல இல்லையே. அந்த உடல்மொழியில் தன்னைப் போலவே ஒரு புதியவனின் தடம்தானே உள்ளது என்று நினைத்த நொடியில் அவனுடைய நம்பிக்கை சற்றே குறைந்தது.

வந்தவன் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனைப் போல இந்தப் பாலத்தைப் பார்த்தான். பிறகு இவனைப் பார்த்தான். சற்று தயங்கினான். தாமதித்தான். பிறகு என்ன நினைத்தானோ சட்டென்று பாலத்தில் காலை வைத்து விறுவிறுவென்று இவனை நோக்கி வரத் தொடங்கினான்.

இவன் அவனை உற்றுப்பார்த்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே.

ஹஹ்..!

வந்துகொண்டிருப்பது வேறு யாருமல்ல. அதுவும் இவன்தான். அச்சு அசலாக இவனேதான். இது எப்படி சாத்தியமாகும்? இப்போது இவனுக்கு பயம் மும்மடங்கு பெருகிய நிலையில் வருபவனிடம் பிடிபட்டுவிடாமல் திரும்பி ஓட்டம் எடுத்தான்.

தன்னிடமிருந்து தானே தப்பித்துவிட வேண்டும் என்கிற மன உந்துதலில்.. கேள்வி கேட்கின்ற மரம் நிற்கின்ற கரையை நோக்கி பாலத்தில் ஓட.. ஓட.. இம்முறை தொலைவு சுருங்கி.. சில அடித் தூரங்களில் சுலபமாக பாலத்தின் இறக்கத்தில் இறங்கியவன் தலைதெறிக்க ஊருக்குள் ஓடி மறைந்தான். யாரும் எளிதில் பிடித்துவிடமுடியாத ஓட்டமாக அவனுடைய ஓட்டம் இருந்தது.

அம்மரம் ஓடியவனை நமுட்டு சிரிப்புடன் பார்த்தபடி தவ நிலையில் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தது.

இப்போது வந்தவன் பாலத்தின் மத்தியில் நின்றுகொண்டு தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கும் மாளிகையைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். ஊருக்குள் போவதற்காக எத்தனித்தபடி கால்களை நகர்த்தினான்.

அப்போது அம்மரம்.. அவனை எழுநூற்றி ஓராவது முறையாக கேள்விகளைக் கேட்கத் தயாராகியது.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

கவிதைக்காரன் இளங்கோ
கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Saivaishnavi
1 year ago

கதை மிகச்சிறப்பாக இருந்தது. மனதில் காட்சிகள் கற்பனையாக விரிய அச்சம் பெருகி படர்கிறது.

Samuel Manuel
Samuel Manuel
1 year ago

பார்க்காதது எது என்கிற கேள்விக்கு பதில் கணிக்க இயலாததாக உள்ளது. ஆஹா கிடைத்தது துணை என எண்ணி தெளிந்த பயத்தைக் கூட்டிய விதம், வர்ணனை,நடை நன்றாக உள்ளது

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x