3 December 2024
kumaraanandhanks2

1.

திடீரென இப்படியெல்லாம் நடப்பதைப் பார்த்து, உண்மையிலேயே இதெல்லாம் என் வாழ்க்கையில் தான் நடக்கிறதா? என எனக்கு சந்தேகமாய் இருந்தது. பெண் பார்க்கும் படலம் எப்போது ஆரம்பமானதோ அன்றிலிருந்து என் நம்பிக்கைகள் பத்தை பத்தையாய் சரிய ஆரம்பித்திருந்தன. சீதாவைப் பெண் பார்க்கப் போகும் முன்பு வரை, என் உள்ளுணர்வு எனக்கு கல்யாணமே நடக்காது என, பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அப்போதுதான் சீதாவைப் பெண் பார்க்கப் போனது. அந்த அறையில் இருந்த எல்லோருமே என் முகம் பிரமிப்பில் இருப்பதைக் கண்டு கொண்டார்கள். அங்கே அவளுடைய சித்தப்பா பிள்ளைகள் இன்னும் சில பள்ளிக் கூடப் பிள்ளைகள் என்னை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய பிரமிப்பு அவர்களுக்குப் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாய் இருந்தாலும், அவர்கள் கண்களுக்குச் சராசரியான ஒரு பெண்ணாய் தெரியும் அவளைக் கண்டு நான் ஏன் அப்படிப் பிரமித்தேன் என்பதுதான் அவர்களுக்குப் புரியாத குழப்பமாய் இருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த நிமிடங்களின் பரவசத்தின் காரணம் என்ன என்று எனக்கு இப்போதும் விளக்கவில்லை. எனக்கும் அவளுக்கும் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும், மனதில் அந்த நிமிடங்களை நினைக்கையில் அதே பரவச உணர்வு என் மனதிலிருந்து உடலுக்கு ஊர்ந்து வருவதை என்னால் பார்க்க முடியும். .

நான் தேடிக் கொண்டிருந்தது இவளைத்தான் என எனக்குத் தோன்றியது. இந்த மூன்று ஆண்டுகளில் அம்மா என்னைக் கூட்டிப் போய் பல பெண்களைப் பார்க்கச் செய்துவிட்டார். அவர்களைப் பார்த்தவுடன் முதலில் மறுத்துவிடுகிறேன். அது ஏன் என எனக்கே தெரிவதில்லை. பின்பே காரணத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்.நான் சொல்வதெல்லாம் ஒரு காரணம் போல அப்போதைக்குத் தோன்றினாலும் பிறகு அது என்ன காரணம் என்று எனக்கே மறந்துவிடும். ஒருவேளை நான் அதே பெண்ணை திரும்பப் பெண் பார்க்கப் போயிருந்தால், இப்போதும் மறுத்திருப்பேன். இப்போது என்ன காரணம் என்று கேட்டால் நான் நிச்சயம் முன்பு சொன்னது நினைவில் இல்லாமல் வேறொன்றைச் சொல்லி இருப்பேன். ஆக என் மறுப்புக்குக் காரணம் என்ற ஒன்று இல்லை என்பதே உண்மை. சீதாவைப் பார்த்தவுடன் இவளுக்காகத்தான் நான் எல்லோரையும் நிராகரித்திருக்கிறேன் என நினைத்துக் கொண்டேன்.

நான் சம்மதத்தைச் சொல்லும் முன்பே என் நிறைவுற்ற மனம், எனக்குச் சம்மதம் என்பதை எழுதி என் முகத்தில் ஒட்டிவிட்டது. அப்போதுதான் மனதிலிருந்து கரும்புகை போன்ற உணர்வு பொங்கிப் பெருகுகிறது. இவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என, எச்சரிக்கும் விதமாக எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. அதை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை. அப்படி அலட்சியம் செய்துவிட்டால் நான் நாசமாகிவிடுவேன் என, உள்ளுணர்வு பயமுறுத்தியது. ஆனால் சாமார்த்தியமாக என் முகத்தின் பிரகாசம் குறையாமல் பார்த்துக் கொண்டேன். உள்ளுக்குள் கொஞ்ச நேரம் என்னை மறந்து அந்தப் பீதியில் சிக்கிக் கொண்டிருந்தேன்.சில நிமிடங்களில், மெல்ல அதிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். ஒரு அழகான விஷயம் அதோடு கூடவே அச்சத்தையும் கொண்டிருக்கும் அல்லவா அதுதான் இது என்ற சமாதானம் எனக்கு அப்போது உண்டாகியிருந்தது.

சீதா அங்கே தான் உட்கார்ந்திருந்தாள். நான் அவளைத் திரும்பப் பார்த்தபோது, ஒரு மோகினியின் மயக்கும் உருவம் விசையுடன் இழுப்பதைப் போல அவள் என்னை ஈர்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் நான் அச்ச உணர்வால் சூழப்பட்டேன். ஒருவேளை அவள் எனக்குத்தான் அவ்வளவு அழகாய் தெரிகிறாளோ எனச் சந்தேகமாய் இருந்தது. அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். அவள் இந்தப் பெண்தான் என முடிவு செய்துவிட்டவளைப்போல, சீதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்னும் எனக்கு இரண்டு மனசாகவே இருந்தது. வேறு பெண்ணைப் பார்க்கலாமா என்று யோசித்தேன். பார்த்தவர்களையெல்லாம் மறுத்தாயிற்று என்ற நிலையில் இவளையும் மறுத்தால், அம்மா அந்த இடத்திலேயே என்னை அடித்தாலும் அடித்துவிடுவாள் எனத் தோன்றியது. சீதாவை கல்யாணம் செய்வது குறித்து ஒரு இனம் தெரியாத பயம் குறுக்கிட்டாலும் அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதற்கு இணையாக அல்லது அதைவிட மேலாக என்னை அறியாமல் மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டே வந்தது. உள்ளே இரண்டு பயில்வான்கள் குஸ்திக்கு தயாராக நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் எப்படியோ குஸ்தி போடட்டும் என, வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு ஒதுங்கி நான் கல்யாணத்துக்குத் தயாராக ஆரம்பித்தேன்.

எங்கள் திருமணம் எல்லாத் திருமணங்களைப் போலவே கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் பதற்றம், திட்டமிடுதல், குளறுபடி, மறதி, பிணக்கு அலைச்சல் சோர்வு புதிய உணர்வு எல்லாவற்றுக்கும் கீழ் ஓடிக் கொண்டிருக்கும் கேள்விக் குறிகள் என நடந்து முடிந்தது. (இந்தக் கேள்விக் குறிகளின் நதி, உள்ளுணர்வில் மடிப்பு மடிப்பாய் எழுந்து நிற்கும் அச்சக் குன்றுகளுக்கு இடையே உற்பத்தியாகிறது. )

அன்றே எங்களுக்கு சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. என் வாழ்க்கையில் இன்றுதான் முதன் முதலாக ஒரு பெண்ணைத் தீண்டப் போகிறேன் என்பதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைவு என்னை மேலும் மேலும் சோர்வுக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. அன்றிரவு அந்த முகூர்த்த அறையில் விளக்கு அணைக்கப்பட்ட சில நிமிடங்களில், சீதாவின் மூச்சொலி என் காதுகளில் பிரம்மாண்டமாகக் கேட்டது. அப்படி ஒரு மூச்சொலியை நான் இதுவரை கேட்டதில்லை என்பதால், சந்தேகப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டபோது, அவள் சாதாரணமாக வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அறை நிசப்தமாய் இருந்தது. திரும்ப விளக்கை அணைத்து அவளை நெருங்கியபோது, அவள் கைகளும் கால்களும் மலைப் பாம்பு போல என்னைச் சுற்றிக் கொண்டன. அவள் உடல் தீயடுப்பு போல கொதித்துக் கொண்டிருந்தது. அவள் மூச்சுக் காற்று துருத்தியிலிருந்து வருவதைப் போல என் முகத்தில் சீறியது. அந்த நடப்புகளுக்கும் அவளின் உருவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், என் மனம் அவள் உருவத்தை எடுத்து வீசி விட்டு, இருட்டுக்குள் பயங்கரப் பயங்கரமான உருவங்களைச் செய்து, அவள் நடவடிக்கைகளின் மீது அணிவித்து, போதாததற்கு கோரைப் பற்களோடு என்னைப் பார்த்துச் சிரித்தது. அவளைப் பெண் பார்க்கப் போனபோது உண்டான பயம் நினைவுக்கு வந்தது. என்னைச் சுற்றிலும் பீதி சூழ்ந்திருக்க அதன் நடுவே ஒரு கிளர்ச்சி கிளர்ந்து வந்து என்னை ஆக்கிரமித்தது. அந்த மயக்கத்தில் நான் பிழிவதைப் போல சீதாவை இறுக்கி அணைத்தேன்.

காலையில் எழுந்தபோது, காற்றில் வெயிலின் வெப்பத்தை உணர முடிந்தது. பக்கத்தில் சீதா இல்லை. அவள் குளித்து முடித்தவளாய் உள்ளே வந்து, நாணத்துடன் “ஏங்க இவ்வளவு நேரமா தூங்கறது? மானம் போவுது” என்றாள். நான் புன்னகைக்க முயன்றேன். இரவில் நடந்ததெல்லாம் திரும்ப என் மனக் கண்ணில் ஓடியது. ஒருவேளை தான் அதீத அசதியில் தூங்கிவிட்டு கனவு கண்டேனோ? என யோசித்து யோசித்துக் குழம்பிப் போனேன்.

அன்றிரவும் நடந்த அதே போன்ற நிகழ்வுகள் நேற்று நடந்தது கனவில்லை என்பதை உணர்த்தின. அவளைப் பற்றிய பயம் கற்பனை என்ற நிலையிலிருந்து மேலெழுந்து வந்தது. மோகினி என்ற குரல் திரும்பத் திரும்ப எனக்குள் ஒலித்தது. இவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாதோ என்று குழம்பினேன். ஆனால் இந்த மோகினியைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை.

மீண்டும் நான் சகஜமாக வேலைக்குப் போக ஆரம்பித்தவுடனே, ஒரு கேள்வி என்னைக் குடைய ஆரம்பித்தது. சீதாவுக்குப் பின்னால் ஏற்கனவே ஒரு காதல் கதை இருக்கக் கூடும். இவ்வளவு அழகான பெண்ணுக்கு அப்படி எதுவும் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த எண்ணத்தைத் தொடர்ந்து என் மனதில் என்னென்னவோ கற்பனைகள் வந்து கொண்டே இருந்தன. எனக்கும் சீதாவுக்குமான உறவுக்கு இடையே இந்தக் கற்பனைகள் ஏதேனும் விளைவை ஏற்படுத்தி விடுமோ என பதட்டமாக இருந்தது.

பேச்சில் நடவடிக்கையில் அதீதக் கவனத்தைக் கையாண்டேன். என்னை அறியாமல் ஏதேனும் வார்த்தை விட்டுவிடக் கூடாதில்லையா?

கல்யாணம் நடந்து முடிந்த ஏழு மாதத்தில் நான் நினைத்ததற்கு ஓர் உருவம் கிடைத்தது. சீதாவின் ஊரைச் சேர்ந்த ஒருவன் நான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே வேலை செய்கிறான் என்பது யதேச்சையாகத் தெரியவந்தது. அந்தக் காரணத்தை வைத்தே எங்களுக்குள் சின்னதாய் ஒரு நட்பு பூத்தது. பல நாட்களாய் நாங்கள் எதிர்ப்படும் போதெல்லாம் புன்னகைத்துக் கொண்டோம். ஒருநாள் அவன், அந்தப் பெண் உன்னுடன் சந்தோஷமாய் இருக்கிறாளா? எனக் கேட்டான். சாதாரணமாய் அவன் கேட்டிருந்தாலும் அதில் தொனித்த விஷமம் என்னைத் தொந்தரவு செய்தது. “ஏன் ஒரு மாதிரியா கேக்கற?” என்றேன்.

அவன் “ஒன்னுமில்ல” என்றான்.

நான் அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டு தொல்லை செய்தேன். அவன் சீதா ஏற்கனவே ஒருவனைக் காதலித்ததாகவும், அவன் ஒரு கட்சிக்கார ரௌடி என்றும் சொன்னான். அப்படிப் பட்டவனுக்குப் பெண் தர சீதாவின் வீட்டில் பயந்தபோது, சீதா வீட்டு மாடியிலிருந்து குதித்து விட்டதாகவும் அதில் அவள் வலது கால் எலும்பு முறிந்துவிட்டதாகவும் சொன்னான். அந்த சமயத்தில் அவள் காதலன் ஒரு கொலைக் கேசில் ஜெயிலுக்குப் போய்விட, அவள் பெற்றோர் அதையே காரணமாக சொல்லியவளைச் சமாதானம் செய்து, கல்யாணம் செய்து வைத்துவிட்டதாகச் சொன்னான்.

இந்த யதார்த்தம் ஒரு கனவாய் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். ஆனால் அப்படி ஏன் மாறுவதில்லை.நிஜம் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு, ஒரு கட்டத்துக்கு மேல், அதன் யதார்த்தத்திலிருந்து எம்பும்போது, நாம் தூங்குவதாகவும், அது கனவு என்றும் மனம் அறிவித்து, நம்மை யதார்த்த உலகிற்குள் நெட்டித் தள்ளிவிடுகிறதே, அதே மாதிரி மோசமான யதார்த்தத்திலிருந்து நம்மை கனவுக்குள் நெட்டித் தள்ளிவிட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

சீதா இரண்டு மாதமாக தையல் கிளாசுக்குப் போய்க் கொண்டிருக்கிறாள். இன்று மாலை நான் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிட்டேன். சீதா வீட்டில் இல்லை என்றதும் மனம் துணுக்கென்றது. மணியைப் பார்த்தேன். அவள் வரும் நேரம் கடந்துவிட்டிருந்தது. ஒருவேளை காதலனுடன் கம்பி நீட்டிவிட்டாளா? ஆனால் அவன் இன்னும் ஜெயிலில் தானே இருக்கிறான். இப்படி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள். அவளுக்காகக் காத்திருந்து சோர்ந்திருந்ததைப் போலவும் அவளைப் பார்த்ததும் முகம் பிரகாசமடைவதைப் போலவும் நான் பாவனை செய்தேன். அது அவ்வளவு இயல்பாக இருந்தது. உள்ளுக்குள் என் நடிப்பை நானே பாராட்டிக் கொண்டேன்.

அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, “சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி” என்றாள். இரவில் அவளுடைய ஆவேசமான ஈடுபாட்டுக்கு என்ன காரணம் என இப்போது எனக்குப் புரிந்தது. அவள் அவனை நினைத்துக் கொண்டு என்னுடன் சேர்கிறாள்.

அவள் மனதுக்கும் அவளின் இந்தச் செய்கைக்கும் சம்பந்தம் இல்லை. இது வெறும் நடிப்பு அற்புதமான நடிப்பு. உண்மை தெரியாதவனாய் இருந்தால் இதை ஒரு நடிப்பு என எந்தக் காலத்திலும் என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

கொஞ்சநேரம் நாங்கள் புதிய தம்பதிகளுக்கே உரிய விளையாட்டுகளையும் சீண்டல்களையும் அரங்கேற்றினோம். பார்வையாளர்கள் யாருமற்ற அந்த நாடகத்தில் நாங்களே பார்வையாளர்களாகவும் நடிகர்களாகவும் இருந்தோம். இதில் விஷேசம் என்னவென்றால் நான் நடிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் நடிக்கிறாள் என்பது எனக்குத் தெரியும்.

சராசரி ஆணைப் போலக் கத்தலாம் சச்சரவிடலாம் அவளை அடிக்கலாம் ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இப்படி உணர்ச்சிகரமாக இதை அணுகினால் அது அவளுக்குச் சாதகமாக அமையும். நான் அவமானத்தோடு வெளியேற வேண்டியதுதான். அப்படி நடக்கக் கூடாது. அவளை அவள் திட்டத்திற்குள் போகவிட்டு நாடகமெல்லாம் நடத்தவிட்டு, கடைசி நேரத்தில் அவளை அம்பலப்படுத்த வேண்டும்.

அந்தக் கொலைகாரனும் வெளியே வரட்டும் என்பதற்காக இவள் காத்திருக்கக் கூடும். அவன் வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து என்னைத் தீர்த்துக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்.

எனக்குத் தினசரிகளில் வரும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யும் பெண்களைப் பற்றி செய்திகள் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தன. அந்த அப்பாவிக் கணவர்களில் நானும் ஒருவனாகிவிடுவேன். ஒருநாள் நான் திடீரென்று கொலை செய்யப்படுவேன்.

ஒருவேளை இந்த அதீத யோசனையின் மூலம் நான் அதிபுத்திசாலி என்பதை எனக்கு நானே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேனா? உண்மையில் அவள் எந்தத் திட்டமும் இல்லாத வாழ்க்கை போகும் போக்கில் போகக் கூடிய ஒரு அப்பாவிப் பெண்ணாய் இருந்தால் என்னுடைய நடவடிக்கைகள் எல்லாம் ஒரு சந்தேகப் புத்திக்காரனுடையதாக மாறிவிடும் என என் மனம் எச்சரித்தது.

அவள் அவன் காதலனை மறக்க நினைப்பவளாக இருக்கலாம். என்னுடனேயே வாழ விரும்புபவளாக இருக்கலாம். நான் ஒன்றை மட்டும் யோசிப்பவனாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். எல்லாவற்றையும் எல்லாக் கோணங்களிலும் யோசித்தேன். நான் பதட்டப்படமாட்டேன். அவசரப்படமாட்டேன். அமைதியாக இருப்பேன். சந்தேகப்படும்படி ஒரு விஷயமாவது கிடைக்கும் வரை நான் எந்த முடிவுக்கும் வர மாட்டேன்.

இந்த இளம் வயதில் நான் எவ்வளவு பக்குவமாய் நடந்து கொள்கிறேன் என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. எல்லாத் தம்பதிகளைப் போலவே நாங்கள் , அன்னியோன்னியமாக நடந்து கொண்டோம். ரகசியமாய் பேசிக் கொண்டோம். வெட்கமாகவும் குறும்பாகவும் சிரித்துக் கொண்டோம்.

தன் நடவடிக்கைகள் மூலம் அவள் தன்னை அப்பாவி என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஆமாம் அவள் அப்பாவி அல்ல. அது போன்ற பிம்பத்தைச் சாமார்த்தியமாகச் செய்கிறாள். எனக்கு அவள் மீதான அச்சம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவள் திட்டம் என்ன என்பது யூகிக்க முடியாததாய் இருந்தது. ஒரு சில சமயம் என்னுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் அபத்தமாய் சுத்த பைத்தியக்காரத்தனமாய் தோன்றியது. அந்த அளவுக்கு அவள் தேர்ச்சியாக நடிக்கிறாள்.

ஆனாலும் அந்த மோகினியின் மேல் இருந்த ஈர்ப்பும் ஈடுபாடும் எனக்கு அலுக்காத புதுமையாகவே இருந்தது. இவள் மட்டும் என்னைக் காதலிப்பவளாக இருந்தாள் நான் அவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பேன். ஆனால் அவள் சில சமயம் என்னைக் காதலிப்பதைப் போலவும் நடிக்கச் செய்கிறாள். அவள் திட்டம் என்னவாக இருக்கும் என்றே எனக்குப் புரியவில்லை.

ஒன்பது மாதம்போல நீடித்த இந்த நாடகம் அதன்பின் சடசடவென முடிவுக்கு வந்தது. (அதுவரை அவள் கர்ப்பம் தரிக்காதது இயற்கையானதா அல்லது அதுவும் அவளுடைய சதியா என்பதும் எனக்குத் தெரியவில்லை.) சீதா வேறு மனநிலைக்குத் திரும்பினாள்.என்னை எரிச்சலடைய வைப்பதிலேயே குறியாய் இருந்தாள். இரக்கமின்றித் திட்டினாள் தான் கொடுமைப்படுத்தப்படுவதாகப் புலம்பினாள். முன்பு இருந்த பெண்ணுக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை. இதுதான் இவளுடைய உண்மையாள ரூபமா? ஆமாம் இதை நடிப்பென்று சொல்ல முடியாது. முன்பு அவள் நடந்து கொண்ட விதம்தான் நடிப்பு. அவளால் ஒரு கட்டத்துக்கு மேல் தன் போலித்தனத்தைச் சுமக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிட்டு தன் உண்மையான உருவத்தோடு வீட்டில் நடமாட ஆரம்பித்தாள். இன்னும் கொஞ்சம் தான் அடுத்து அவள் திட்டம் என்ன என்பதையும் அவள் இதே போலத் தெரிவித்துவிடுவாள். அல்லது நான் என் காதலுடன் தான் சேர்ந்து வாழப் போகிறேன் உன்னுடன் வாழ மாட்டேன் எனச் சொல்லப் போகிறாள். அல்லது திடீரென ஒருநாள் வீட்டைவிட்டுக் காணாமல் போய்விடுவாள் அல்லது தந்திரமாக என்னைக் கொல்லப் போகிறாள் இதில் எது நடக்கும்? திரைக்கதையின் அடுத்த கட்டத்தைக் காணும் ஆவலோடும். வாழ்க்கையில் என்னுடைய நிலையை நினைத்து அச்சத்தோடும் நான் காத்திருக்க ஆரம்பித்தேன்.

எந்த அறிகுறியும் இல்லையென்றாலும் என் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்ததால் என்னைச் சுற்றிலும் காந்தப்புலம் போல மரணபயம் சூழ்ந்திருந்தது. என் இதயத்தின் தடதடப்பு அதிகரித்தது. எல்லாவற்றையும் சந்தேகப்பட்டேன். அவள் சமைத்து வைத்திருப்பதைச் சாப்பிடவே அச்சமாய் இருந்தது. அத்தோடு அவளின் சண்டைக் குணமும் சேர்ந்து கொள்ள எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. இந்த நிலையிலும் என்னுடைய நிதானத்தைத் தவற விடாமல் அவளிடம் விவாதம் செய்யாமல், சத்தம்போடாமல் இருந்ததோடு, நான் அவளைச் சந்தேகப்படுகிறேன் என்பதை அவள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இயல்பாய் இருந்தேன்.

அவள் அக்கம் பக்கத்தில் எல்லாம் என்னைப்பற்றி குற்றம் சொல்லி, கொடுமைக்காரனாய் சித்தரிக்க ஆரம்பித்தாள். விபரம் தெரிந்த நாளிலிருந்து நான் இந்தத் தெருவில் தான் இருக்கிறேன். இந்த தெருவின் அமைப்பு பலவிதமாக மாற்றம் கண்டுவிட்டது. ஆனால் எங்கள் வீடு மட்டும் அன்றிருந்ததைப் போலவே இருக்கிறது. இந்தத் தெருவாசிகளுக்கு என்னைச் சின்னக் குழந்தையிலிருந்து தெரியும். . அம்மா மீது எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை என்பது சீதாவுக்கு பெரிய குறையாய் இருந்தது. என்னைப் பற்றி அக்கம் பக்கத்தில் என்ன சொன்னாலும், நீ சொல்ற மாதிரியெல்லாம் தம்பி இல்லம்மா? என்று பட்டென்று சொல்லிவிடுவார்கள்.

கல்யாணத்திற்குப் பிறகு இரண்டு மூன்று முறை நாங்கள் இருவரும் சீதா வீட்டுக்குப் போனோம். மாமனாரும் மாமியாரும் என்னை நன்றாகக் கவனித்தார்கள். வேறொருவனைக் காதலித்தவளை என் தலையில் கட்டி இருக்கிறார்களே ஏன் கவனிக்க மாட்டார்கள்? என்று உள்ளுக்குள் குரல் ஒலித்தாலும், அவர்களிடம் அலட்சியமாய் நடந்து கொள்ள எனக்கு மனம் வரவில்லை.

இந்த நிலையை என்னால் தாங்க முடியவில்லை. சீதா சில சமயம் நயமாக நடந்து கொண்டாலும் மிகத் தீயதாய் ஏதோ உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில் உள்ளுக்குள் நான் தத்தளித்துக் கொண்டே இருந்தேன். நான் செத்துக் கிடப்பதைப் போன்ற தோற்றம் தினம் தினம் என்னை நடுங்கச் செய்கிறது. சில சமயம் அவளை அடித்து உதைத்துத் துரத்திவிடலாமா என்று கூட ஆத்திரம் எழுகிறது.

கட்டுப்பாட்டை இழந்து அப்படி மட்டும் ஏதாவது செய்துவிட்டால் அவ்வளவுதான், நான் கற்பனையாக அவள் மீது குற்றம் சுமத்துகிறேன் என வீட்டையே இரண்டாக்கி விடுவாள். இந்த ஒரே ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு ஊரையே எனக்கு எதிராகத் திருப்பி விடுவாள். அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்

அதீத எச்சரிக்கை, அதீத நிதானம், அதீதக் கவனத்துடன் மெல்ல மெல்ல நான் என் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். அல்லது திடீரென இங்கிருந்து நான் காணாமல் போய்விடலாம். சில ஆண்டுகள் எங்கிருக்கிறேன் எனக் கண்டுபிடிக்க முடியாமல் மறைந்திருந்துவிட்டுத் திரும்பலாம். அப்போது எல்லா ரகசியங்களும் வெளிப்பட்டிருக்கும். என்னைக் கொல்ல யாருக்கும் எந்த அவசியமும் இருக்காது.

என் மனதில் இந்த யோசனை சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. அதை என்னால் புறந்தள்ள முடியவில்லை. என்னைப் போன்ற குணமும் மனநிலையும் கொண்ட ஒருவனுக்குத் தோன்றக் கூடிய மோசமான யோசனையாய் அது இருக்கலாம். என்றாலும், இறுதியில் நான் அதற்குப் பலியாகிவிட்டேன். எங்கள் முதல் திருமண நாளுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் நான் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

2.

மேஷ் என்னைப் பெண் பார்க்க வந்தபோது, வாழ்க்கையைப் பற்றிய என் பார்வை மாறியது. வாழ்வு கடினமானது ஒரு தண்டனை போன்றது என்ற என் கண்ணோட்டம் தெரித்து விழுந்தது. நான் அனுபவதித்து கொண்டிருந்த சிக்கல் நிறைந்த உலகத்திலிருந்து, கனவும் கற்பனையும் நிறைந்த உலகத்தில் சென்று விழுந்தேன். என் மனதை அடைத்துக் கொண்டிருந்த பயங்களும் கற்பிதங்களும் என்னிடமிருந்து நீராவி போல வெளியேறுவதைப் பார்த்துப் பிரமித்தேன். இதற்கு முன் அவனைப் பார்த்திருந்தால் அவனை விரட்டி விரட்டி காதலித்திருப்பேன்.

காலம் எனக்கு அப்படி ஒரு வசீகரத்தை வழங்கவில்லை என்பதில் ஏமாற்றம்தான் என்றாலும், அவன் என்னையே பெண் பார்க்க வந்ததை நினைத்து நினைத்து நான் சந்தோஷப்பட்டேன்..

விரட்டி விரட்டி காதலித்திருப்பேன் என்று நான் சொல்வது சினிமாவின் பாதிப்பால் இருக்கலாம் ஆனால் நான் நிச்சயம் அவனைக் காதலித்திருப்பேன். அவனை முடிந்தவரை பின் தொடர்ந்து சென்றிருப்பேன். அவன் கண்களில் படும்படி நடமாடிக் கொண்டிருந்திருப்பேன். எதேச்சையாக அடிக்கடி சந்திப்பதாலேயே எங்களுக்குள் ஒரு பிணைப்பின் இழை உருவாகி இருப்பதைப் போலப் பாவனை செய்து அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சித்திருப்பேன். இப்படி படிப்படியாகவாவது அவனை அணுகி என் காதலைத் தெரிவித்திருப்பேன்.

நாங்கள் இப்படிச் சந்தித்துக் கொள்ளாமல் வேறு எப்படியாவது சந்தித்திருந்தால் நான் எப்படி அவனைக் காதலித்திருப்பேன் என்ற கற்பனைசெய்வதிலேயே என் நாட்கள் பறந்து கொண்டிருந்தன. அது ஒரு மாபெரும் போதை வஸ்துவைப் போல என்னை அப்படிப் பீடித்துக் கொண்டது.

பணம் இல்லை நகை இல்லை என்பது போன்ற அல்லது அதைவிடவும் அற்பமான காரணங்களுக்காக இந்தத் திருமணம் நின்றுவிடக் கூடாது எனப் பிராத்தித்துக் கொண்டே இருந்தேன். திருமணம் நல்லபடியாக நடந்துவிட்டால் பூ முடிக் காணிக்கை தருவதாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன். எந்தத் தீய அறிகுறிகளும் இல்லாமல் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.

நான் அவனைக் காதலித்த அளவில் பாதியில் பாதிக் கூட அவன் என்னைக் காதலிக்கவில்லை என்பதை நான் முதலிலேயே புரிந்து கொண்டேன். அவனைப் பொறுத்தவரை நான் அவன் மனைவி; காதலி அல்ல. மனைவியைக் காதலியைப் போலப் பாவிக்கும் அளவுக்கு அவனுக்கு ரசனை இல்லையென்று நினைக்கிறேன். அல்லது உண்மையிலேயே அவனுக்கு என் மேல் காதல் இல்லாமல் இருக்கலாம். பெண் பார்க்க வந்தான். இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஜாதகம் ஒகே இரு குடும்பத்திற்கும் சம்மதம் அவ்வளவுதான் வேறென்ன வேண்டும். அப்படிச் சம்பிரதாயமாய் நடந்த கல்யாணத்தில் கிடைத்த மனைவியை அவன் எதற்காகக் காதலிக்க வேண்டும்?

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவன் மீது எனக்கிருக்கும் அளப்பறிய காதலை அவனுக்குத் திறந்து காண்பித்து அவனை பீதியுறச் செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோளாய் இருந்தது. முதலில் நான் எதிர்பார்த்தபடியே அவன் பீதியடைந்தான். (ஆனால் என் அளவிட முடியாத காதலைக் கண்டு அல்ல, எதனாலோ அவன் பீதியடைந்தான்.)

பல ஆயிரம் வருடங்களாகவே இதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பெண் எவ்வளவுதான் பிரேமை நிறைந்தவளாய் இருந்தாலும், ஆண் அவளைத் தன்னில் ஒரு பாதியாகப் பார்க்க மாட்டான். ஆனால் பெண் தான் என்பதே அவன்தான் என்பது போல நினைத்துக் கொண்டிருப்பாள். ஆண் அவளை வேற்றாள் போலப் பார்ப்பான். அவளுக்கு ஈடாக தானும் அவளை விரும்புவதாக நடிப்பான். பின் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அல்லது வலிந்து ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவளுக்குத் துரோகம் செய்வான்.

நான் அவனை எவ்வளவு தூரம் காதலிக்கிறேன் என்பதை அவனிடம் சொல்லிவிடத் துடித்தேன். ஆனால் கல்யாணம் ஆனபின் ஒரு மனைவி தன் கணவனிடம் அப்படிச் சொல்வது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள, கணவனைத் தன்னுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளச் செய்யும் தந்திரமாகவே நினைக்கப்படும் என்பதால் எனக்கு அவனிடம் என் காதலைச் சொல்ல வார்த்தையே எழவில்லை.

திடீரென அவன் என்னைச் சந்தேகப்பட ஆரம்பித்தான். சந்தேகத்திற்கிடமான கேள்விகளோ, பார்வையில் மாறுதலோ இல்லையென்றாலும் அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை எப்படி நான் புரிந்து கொண்டேன் என என்னையே நான் கேட்டுக் கொண்டாலும் எனக்கு அதற்கு விடை தெரியாது. ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியும் அவன் என்னைச் சந்தேகப்படுகிறான். இது என்ன மாதிரியான எதார்த்தம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னை அப்படி நேசிக்கும் ஒரு பெண் தனக்குத் துரோகம் செய்வாளா என ஏன் அவனுக்கு உரைக்கவே இல்லை. ஆனால் அவனை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நான் இன்னும் அவனுக்குப் புரிய வைக்கவே இல்லை என்பது எனக்கு மலைப்பாய் இருந்தது. அவன் என்னைச் சந்தேகப்படுகிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்போது, நான் அவனை அதீதமாக நேசிக்கிறேன் என்பதை ஏன் அவனால் புரிந்து கொள்ள முடியாது? யார் மீது தவறு? அவன் மந்தப் புத்திக்காரனா? அல்லது நான் என்னைச் சரியாக வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாதவளா?

அவன் மந்தப் புத்திக்காரனும் இல்லை. விஷயங்களை அழகாகத் தொகுத்துப் பேசுகிறான். அதன் எல்லாக் கோணங்களையும் யோசிக்கிறான். சில சமயம் பெருங்காதலனைப் போல ஆசையுடன் பார்க்கிறான். சில சமயங்களில் ஏதோ ஓர் அச்ச உணர்வினால் தாக்கப்பட்டவனைப் போலப் பார்க்கிறான். அவன் மனநிலையில் ஏதும் பிரச்சினை இருக்குமோ என எனக்குச் சந்தேகமாய் இருக்கிறது. சில சமயம் நான் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையே அச்சத்தோடு பார்க்கிறான். சாதாரண வெப்ப நிலையிலும் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்து விடுகிறது. பல நாட்கள் போட்ட சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்து போய்விட்டான்.

என் இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க என்று கேட்டால் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். இந்த நிலைமையை எப்படி மாற்றுவது என எனக்கும் தெரியவில்லை.

சட்டென ஒருநாள் எல்லாம் கசந்துவிட்டது. என்னை என் காதலைப் புரிந்து கொள்ளாத அவனைப் பழிவாங்க வேண்டும் என்ற ஆவேசம் வளர ஆரம்பித்தது. நான் அவனிடம் இரைந்து கத்தினேன். அவனுடைய செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் திராணியில்லாதவனை வேறு எப்படிக் கையாள்வது என எனக்குத் தெரியவில்லை

ஒருவேளை இதன் மூலம் அவன் என்னைச் சரணடைவான். என் மீது அவனுக்கிருக்கும் (இல்லாத) காதலைச் சொல்லியேனும் என்னைச் சாந்தப்படுத்துவான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் என்னிடம் இருந்து மேலும் விலகியே செல்ல ஆரம்பித்தான். அந்த விலகல் எனக்கு இன்னும் வெறியூட்டியது. வெறுப்படையச் செய்ய வைக்கும் என்னுடைய நடவடிக்கைகளை மேலும் உக்கிரமாக்கினேன். இந்த முட்டாள்தனத்தை எதற்காகச் செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. மோசமான திசையில் செல்கிறேன் எனத் தெரிந்தே நான் மேலும் மேலும் அடிகளை எடுத்து வைத்தேன் அவன் உண்மையிலேயே என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டான். இனி நான் அதை மாற்றுவது கடினம். அன்பின் மூலமாகவோ, வெறுப்பின் மூலமாகவோ அவன் காதலைப் பெற முடியாத நிலை என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.

என் நெருப்பு தணிந்தது. நான் அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்ற உண்மை என்றாவது ஒருநாள் தானாகவே புலப்படும். அதுவரை வேறு வழியில்லை என நான் அமைதியாகிவிட்டேன்.

ஆனால் இந்தமுறை அவன் அமைதியாகவில்லை. திருமணத்திற்கு முன் நான் வேறு ஒருவனைக் காதலித்தேன் என்பது அவனுக்குத் தெரியும் என்று ஜாடைமாடையாகச் சொல்ல ஆரம்பித்தான். அவனுடைய நடவடிக்கைகள் மாறிவிட்டன. எப்போதும் அச்சம் நிறைந்தவனாகத் தான் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற எச்சரிக்கை உணர்வு கொண்டவனாக ஆகிவிட்டான். வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என எனக்குப் புரியவில்லை. நான் அவனைத் தான் காதலிக்கிறேன் என்பதைக் கூட ஒருவனால் புரிந்து கொள்ள முடியாதா? நான் வேறு யாரையோ காதலித்திருக்கிறேன் என்று எப்படி அவனால் நினைக்க முடியும்?

நான் சமைத்து வைப்பதைச் சாப்பிடவே அவன் அஞ்சும் அவனை நான் வெறுத்தேன்.. இதைவிட மோசமாக என்னை அவமானப்படுத்த முடியாது. நான் அவனைக் காதலிக்கிறேனா வெறுக்கிறேனா என்ற கேள்வியோடு நான் என் மனவெளிக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.

ஆக இப்போது என் காதலை நிரூபணம் செய்ய வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். என்ன செய்வது என யோசித்தபோது மலைப்பாய் இருந்தது. அப்படி நிரூபணம் செய்துவிட முடியுமா? உயிரை விட்டால் கூடச் சாத்தியமில்லை என்றே தோன்றியது. அதே சமயம் என்னைச் சந்தேகப்படும் அவனுக்குச் சரியான தண்டனை தர வேண்டும் என்றும் தோன்றியது. நான் அவனைத் தான் காதலிக்கிறேன் என்பதை நிரூபணம் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் தன் சந்தேகத்திலேயே ஊறி அனுபவிக்கும் வேதனை அவனுக்குச் சரியான தண்டனையாக இருக்கும் எனத் தோன்றியது. இந்த யோசனை திருப்தியாக இருந்தது. எனவே என்னை அவன் சந்தேகப்பட்டு நன்றாக வேதனையை அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

இது சரிதான். ஆனால், கடைசிவரை அவன் சந்தேகப்படுபவனாகவே இருந்துவிட்டால்? என் காதலைப் புரிந்து கொள்ளாமலேயே போய்விட்டால்? மேலும் அவன் என்னைக் காதலித்த நிலையில் நான் துரோகம் செய்கிறேன் என்று தெரிந்தால் தானே அது வேதனையும் தண்டனையுமாக இருக்கும்? ஒருவேளை அவனுக்கு என்மேல் அப்படியான ஒரு எண்ணமே இல்லை என்றால்? நான் அவனுக்குத் துரோகம் செய்கிறேன் என்பது அவனுக்கு எப்படித் தண்டனையாக இருக்கும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பமாக இருந்தது.

நாம் ஒன்றை நினைக்கிறோம். ஒன்றைத் திட்டமிடுகிறோம். ஒன்றை எதிர்பார்க்கிறோம். வாழ்க்கையை ஒரு திசையில் திருப்புகிறோம். ஆனால் வாழ்க்கை நாம் எதிர்பார்க்காத திசையில் திரும்புகிறது. நாம் நினைக்காத ஒன்று நடக்கிறது. நம் திட்டங்கள் தவிடுபொடியாவதோடு அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது. ஒருநாள் ரமேஷ் திடீரெனக் காணாமல் போய்விட்டான். ஒருவேளை உண்மையில் அவன் வேறு யாரையாவது காதலித்திருப்பானோ அது தெரியாமல் நான் அவனிடம் அபத்தமாய் நடந்துகொண்டுவிட்டேனா? அவன் காணாமல் போய்விட்ட துயரத்தை நான் மெல்ல மெல்ல ஜீரணித்துக் கொண்டிருக்கும்போதே நான் அவனைக் கொன்றுவிட்டதாகத் தெருவுக்குள் உலவும் பேச்சு என் காதுக்கு வந்தது.

நான் திகிலில் உறைந்துவிட்டேன். இந்த அபாண்டம் மெல்ல மெல்ல வலுவடைந்து நான் போலீசாரால் பிடித்துச் செல்லப்படுவேனா? அச்சத்தில் என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. அதீத அச்சத்துடன் தான் நான் யாரையும் பார்த்தேன். அந்தப் பார்வையே நான் என்னவோ செய்துவிட்டேன் எனச் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனாலும் அந்தப் பார்வையை என்னால் மாற்ற முடியவில்லை. நான் வெளியே செல்வதைத் தவிர்த்தேன்.

ரமேஷ் திரும்பி வந்தால் தான் நிலைமை சீராகும். அது நடக்காவிட்டால் என்னை இந்த நிலையிலிருந்து யார் மீட்பார்கள் என யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது எனக்கு செல்வேந்திரன் ஞாபகம் வந்தது. ஆனால் அந்த நினைப்பு மிகக் கசப்பாய் இருந்தது-

நான் கல்லூரி படிக்கும்போது, என்னைக் காதலிப்பதாகச் சொல்லி என் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான். என்னைக் கவர என்னென்னவோ அபத்தங்கள் செய்தான். கட்சிக்காரர்கள் மூலம் என்னை அவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி அப்பாவை நிர்ப்பந்திக்க ஆரம்பித்தான்.

நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். எங்கள் வீட்டு மாடியிலிருந்து குதித்தேன். வலது கால் முறிவோடு தப்பித்துவிட்டேன். அவன் பயந்துவிட்டான் அதே சமயம் ஒரு கொலை சம்பந்தமாக போலீசார் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட, என் கால் குணமானதும் அப்பா அவசர அவசரமாக ரமேஷ்க்கு என்னைக் கல்யாணம் செய்து வைத்தார்.

இப்போது அந்த செல்வேந்திரன் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணம் எனக்கு எப்படி எதனால் வந்ததோ தெரியவில்லை. ஆனால் நான் அவனிடம் உதவி கேட்கப் போய், நானும் அவனும் சேர்ந்துதான் ரமேஷை ஏதோ செய்துவிட்டோம் எனப் பேச ஊருக்கு எளிதாகிவிடுமே?

அப்பா வந்து ரமேஷ் வரும்வரை நீ வந்து நம் வீட்டிலேயே இரு. இங்கே இருக்க வேண்டாம் என்றார். ஊருக்குப் போனதும் மூக்கு வியர்த்துக் கொண்டு செல்வேந்திரன் வீட்டுக்கு வந்துவிட்டான். எனக்கு இப்போது அவன் உதவி தேவைப்படும் என்பதால் நாங்கள் யாரும் அவன் வருகைக்கு ஆட்சேபணை செய்யவில்லை. நான் எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். அவனால் தான் நான் இந்த நிலைமைக்கு ஆகிவிட்டேன் என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பினேன்.

என் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருப்பதைப் போல நடந்து கொண்டான். என் மீதான பைத்தியம் அவனுக்குத் தெளிந்துவிட்டிருந்தது என்பதால் நாங்கள் இயல்பாக நண்பர்கள் ஆனோம்.

ரமேஷ் காணாமல் போனது பற்றி எங்கள் மீது சந்தேகம் இருப்பதாக என் மாமியார் போலீசில் புகார் கொடுத்திருந்தார். நான் மீண்டும் அச்சத்தில் உறைந்து போனேன். செல்வேந்திரன் என்னைத் தைரியப்படுத்திக் கொண்டே இருந்தான். போலீசார் என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். செல்வேந்திரன் வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டு வந்தான்.

ரமேஷ் காணாமல் போன அன்று எங்கள் தெருவில் பதிவாகி இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தால் அவன் தானாகவே வெளியேறிச் சென்றது தெரிந்துவிடும். வீண் சந்தேகத்தில் கொடுக்கப்பட்ட புகாரை அடிப்படையாக வைத்து விசாரிக்கக் கூடாது. இந்தப் பெண் இங்கேதான் இருப்பார் சந்தேகம் உறுதியானால் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்கலாம் என அந்த வக்கீல் போலீசாரிடம் நயமாகப் பேசினார். போலீசார் என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

3.

வீட்டைவிட்டு வெளியேறியதும் ஒரு சுதந்திர உணர்வு என்னைச் சூழ்ந்துகொண்டது. அது ஒரு திரவப் பொருள் போல என்னை எடையிழக்கச் செய்து, மிதந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. வாழ்க்கையைப் பற்றிய அச்சமோ துயரமோ என்னை நெருங்கவில்லை. ஓராண்டில் நான் அடைந்திருந்த பத்தாண்டு முதுமை என்னை விட்டு விலகியது. வீட்டிலிருந்து அப்படியே கிளம்பிவிட்டிருந்தேன். மனம் போன போக்கில் ஹைதராபாத் வரை போய்விட்டேன். என்னுடைய டாக்குமெண்ட்களையோ, அதிக அளவில் பணமோ, என் போனையோ கூட நான் எடுத்துவரவில்லை என்றாலும் நான் உற்சாகமாக இருந்தேன். ஒரு சாகச வீரனுக்கான உணர்வும் அசட்டுத் துணிச்சலும் என் மனதில் ததும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

சின்ன வயதில் ஒரு சாமியார் எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வருவார். அவர் மேல் என்னவென்றே தெரியாத ஒரு மதிப்பும் மரியாதையும் எனக்கு இருந்தது. அடிக்கடி அந்த உணர்வுக்கு உள்ளானதால், நானும் என்னைச் சாமியாராகப் பலமுறை கற்பனை செய்து கொண்டேன். வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்துச் சாப்பிடுவதைக் கூடக் கற்பனை செய்து வைத்திருந்தேன். எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

அடி மனதில் ஊறிக் கொண்டிருந்த அந்த மாதிரியான நினைவுகளின் செயல்பாட்டால் தான் என் வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஒரு வகையில் என் மனம் திருப்தியடைந்திருப்பதைப் போல இருந்தது.

ஆனால் பிச்சை எடுப்பதை என்னால் செயல்படுத்த முடியவில்லை. ஏற்கனவே நான் வேலை செய்த நிறுவனத்தைச் சொல்லி, தற்போதைய என்னுடைய நிலையைச் சூசகமாகச் சொல்லி, ஜவுளிக் கடையொன்றில் சூபர்வைசராக வேலைக்குச் சேர்ந்தேன். (அந்தக் கடையில் யதேச்சையாகத் தமிழ்ப் பெண் ஒருவர் வேலையில் இருந்ததால், என் விஷயங்கள் மேலாளருக்குச் சென்று சேர்வது சாத்தியமானது. ) வாழ்க்கை நான் நினைத்துப் பார்க்காத திசையில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் நான் என்பதன் அங்கம் என்ன என்பதைத் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றுமே இல்லை என்பது மட்டுமே விடையாக மீண்டும் மீண்டும் வந்தது.

மின்னல் வேகத்தில் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்கு மேல் எனக்கு அலுப்புத் தட்டிவிட்டது. சீதாவின் நாடகம் இந்நேரம் அரங்கேறி இருக்கும். இனி என்னைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது எனவே ஊருக்கே போய்விடலாம் என்று தோன்றியது.

காணாமல் போனது காணாமல் போனதாகவே இருக்கட்டும் திரும்பப் போக வேண்டாம் என்று ஒரு மனம் சொன்னது. ஆனால் அம்மாவை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற எண்ணம் என்னைத் திடீரென வாட்ட ஆரம்பித்தது. ஊருக்குத் திரும்புவது என முடிவு செய்துவிட்டேன்.

(எனக்குள் இன்னொரு பக்கம் இருப்பதை இந்தச் சமயத்தில் தெரிந்து கொண்டேன். அதில், சீதா என்னைக் காதலிப்பவளாக இருந்தாள். என் பிரிவாள் வாடுபவளாக இருந்தாள். என்னை நினைத்து ஏங்கி ஏங்கி வாழ்நாள் முழுவதும் காத்திருப்பவளாக இருந்தாள். இப்படிப்பட்ட அபத்தக் கற்பனைகள் எனக்குள் இருப்பதோடு, அதுவும் என்னை ஊருக்குக் கிளம்பச் சொல்லி உசுப்பிக் கொண்டு இருந்தது. அபத்தம் தான் என்றாலும் அதிலிருந்து மலர்ந்த எதிர்பார்ப்பு மனதில் எல்லாப் பக்கங்களிலும் வியாபித்திருந்தது.)

நான் ஊருக்குத் திரும்பியபோது இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த மாற்றமும் அங்கே தென்படவில்லை. எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. நான் இந்த ஊருக்குள் உலவி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய கடந்த அந்த இரண்டு ஆண்டுக்கால வாழ்க்கை ஒரு கனவாய் இருக்குமோ என எனக்குச் சந்தேகமாய் இருந்தது. (ஆக ஒருவழியாக யதார்த்தம் கனவுக்குள் நெட்டித் தள்ளப்பட்டுவிட்டது.)

அம்மா கூட அப்படியே இருந்தாள். எந்தச் சேதாரமும் இல்லாமல் என்னுடைய பழைய வாழ்க்கைக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன். வேலைதான் பழைய கம்பெனியிலேயே கிடைக்குமா தெரியவில்லை. வேறு இடத்தில் தான் முயற்சிக்க வேண்டும். ஆனால் பழைய கம்பெனியிலேயே என்னை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள் என்று தோன்றியது.

சீதாவும் அப்படியே இருப்பாளா? என்று ஒரு கணம் தோன்றியது.ஆனால் அவள் அப்படி இருக்க மாட்டாள் என்ற எண்ணமும் உடனே எழுந்தது. அந்த எண்ணம் ஒரு ஏக்கமாக மாறி ஒரு பலூன் போல விரிந்து சென்று கொண்டே இருந்தது. (அவள் எனக்காக உருகிக் கொண்டிருப்பாள் எனச் சொன்ன மனம், கடைசியில் நான் சொன்னதுதான் நடக்கப் போகிறது என்று, துக்கமடைந்த மனதைக் கமுக்கமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.)

நான் அவளைக் காதலித்தேன். ஆனால் அவளுடன் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டம் இல்லாதவனாகிவிட்டேன். என்னுடைய நிலையின் துயரம் என் நெஞ்சத்திலிருந்து பெருகிக் கொண்டே இருந்தது.

திரும்பி வந்து ஒருவாரமாகியும், சீதாவைப் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளாத நிலையில் அன்று காலையில் எழுந்ததும் சீதா எங்கம்மா என்று இயல்பாகக் கேட்டேன். அம்மா தயக்கத்தோடு அவ வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா என்றாள். அவன் பேர் செல்வேந்திரனா என்றேன். அம்மா அப்படித்தான் நினைக்கிறேன் தெரியல என்றாள்.

இங்கேயே இருந்திருந்தால் நான் கொலை செய்யப்படாமல், நிச்சயம் இது நடந்திருக்காது. ஒரு பெரிய ஏமாற்றம் என்னைச் சூழ்ந்தாலும், மரணக் கோட்டையில் நுழைந்து தந்திரமாய் தப்பி வந்த சாகச வீரனைப் போல என்னை உணர்ந்தேன்.


Art Courtesy :  Kamal Rao

எழுதியவர்

குமாரநந்தன்
குமாரநந்தன்
நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் என படைப்புகள் எழுதி தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதுவரை ;
பதிமூன்று மீன்கள்,
பூமியெங்கும் பூரணியின் நிழல்,
நகரப் பாடகன்,
மகா மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும்
’பகற் கனவுகளின் நடனம்’ எனும் கவிதைத் தொகுப்பு மற்றும்
‘மேகலாவின் அற்புதத் தோட்டம்’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x