13 March 2025
Kumaara Nanthan KS 25

கால இயந்திரம் கிடைத்ததும் என்னுடைய முதல் ஆசை என் மரண நாளை சென்று பார்க்க வேண்டும் என்பதுதான்.  இப்போது எனக்கு நாற்பது வயதாகிறது. என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நடைப்பயிற்சி யோகா தியானம் என உடலை கச்சிதமாக பேணுகிறேன். என்னுடைய கணக்குப்படி, எண்பது வயது வரையாவது இருப்பேன் என்று நினைக்கிறேன். எனவே இன்றிலிருந்து ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் சென்று என் மரண நாளைக் கண்டு பிடித்து சரியாக அன்று நான் அங்கிருக்க வேண்டும் என முடிவு செய்தேன். 

என் திட்டப்படி கால இயந்திரத்தை இயக்கி, நாற்பதாவது ஆண்டில் நான் வசிக்கும் இதே தெருவில் போய் இறங்கினேன். பெரும்பாலானா வீடுகள் மாறிவிட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் பிரமிக்கத் தக்க வகையில் அதிகமாய் இருந்தது. என்னதான் மாற்றங்கள் இருந்தாலும், வேறொரு காலத்தில் இருப்பதைப் போன்ற உணர்வே இல்லை. என்னுடைய வீட்டைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாய் இருந்தது. நல்லவேளை இந்த ஆண்டுகளில் வேறு எங்கேயும் போய்விடவில்லை என்று நிம்மதியாக இருந்தாலும், இன்னும் ஆயுள் காலம் வரையும் இந்த வீடுதானா? என ஏமாற்றமாகவும் இருந்தது. இடம் தான் அதே இடம் வீடு முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. அந்த வீட்டில் என்னுடைய இப்போதைய தோற்றத்தின் அச்சு மாறாமல் என்னுடைய மகன் இருந்தான். அவன் ஏதோ ஒரு கடை வைத்திருந்தான். அதில் என்ன பொருள் விற்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த கடையின் போர்டில் அவனுடைய போன் நெம்பர் எழுதப்பட்டிருந்தது. நான் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என் போன் கீழே விழுந்துவிட்டது எனச் சொல்லி அருகில் இருந்த நபரிடம் போனை வாங்கி, அந்த நம்பருக்கு டயல் செய்து, “உன் அப்பா  என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்டேன். 

அவன் சந்தேகத்தோடு “யார் நீங்கள்?” என்றான். 

நான் அவருடைய நண்பன் என்றேன். 

“நீங்கள் நிச்சயமாக அவருடைய நண்பராய் இருக்க முடியாது. அவர் இறந்து நாற்பது ஆண்டுகள் ஆகிறது. என்ன திட்டத்தில் இப்படி போன் செய்கிறீர்கள்?” என மிரட்டும் தொனியில் கேட்டான். 

எனக்கு அதிர்ச்சியில் விக்கிக் கொண்டது. அவசர அவசரமாக போனை அவரிடம் கொடுத்துவிட்டு கால இயந்திரத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய சொந்த காலத்திற்கு திரும்பினேன். 

திக் திக் கென அடித்துக் கொள்ளும் மனதைத் தேற்றுவது சிரமமாய் இருந்தது. அடுத்த ஆண்டுக்குப் போய் பார்த்தேன். சாலையில் ஒருவன் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. நைசாக அங்கிருந்து நழுவி திரும்ப வந்துவிட்டேன். அவன் பார்வையை வைத்துப் பார்க்கும் போது நான் அதற்கு முன்பே இறந்திருக்க வேண்டும். அடக் கடவுளே என்ன தன்னம்பிக்கையோடு நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் போய் பார்த்திருக்கிறேன்? வேடிக்கைதான். இந்த வருடத்திலேயே என் கதை முடிந்து விடும் போல. ஏதாவது விபத்தில் சிக்கி இருப்பேனா? 

மீண்டும் ஒரு ஆறு மாதத்திற்கு முன் போய் பார்க்க முடிவு செய்தேன். இந்த முறை அப்படியே போகாமல் என்னுடைய தோற்றத்தில் சில மாறுதல்களை செய்தேன். விக் தாடி போன்றவை என்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்ள நன்றாகவே கை கொடுத்தன. 

ஆறு மாதத்திற்கு பிறகு போய் பாரத்தபோது, என்னுடைய வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்தேன் வரவேற்பரையிலேயே என்னுடைய படத்திற்கு மாலை அணிவித்து லைட் எறிந்து கொண்டிருந்தது. அதில் மறைவு என்று குறிப்பிட்டிருந்த தேதியைக் குறித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினேன். 

கடவுளே அந்த நாள் இன்னும் இரண்டே மாதம்தான். இன்னும் இரண்டு மாதத்தில் நான் சாகப் போகிறேன் என்ற எண்ணம் என்னைக் கதறி அழச் செய்தது. மெல்ல மெல்ல மனதைத் தேற்றிக் கொண்டு, அங்கிருந்து அதற்கு முந்தைய நாளுக்குப் போனேன். அங்கே எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்று நான் கொலை செய்யப்பட்டிருந்தேன். 

அந்த நாளுக்குள் நாள் நுழையும் போது, வீடு அமைதியாக இருந்தது.  என்னுடைய நிகழ்காலப் பிரதி, கடையில் இருக்கும் என்பதால், இயல்பாக நான் வீட்டுக்குள் சென்றேன். கங்கா குளியலறையில் இருந்தாள். தொடடிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அவனை நான்கு மாத குழந்தையாக சந்திக்கும் இந்த வாய்ப்பை எண்ணி, மகிழ்ச்சி அடையும் நிலையில் நான் இல்லை. மாடியில் என்னுடைய அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டேன். 

கொஞ்ச நேரத்தில் கீழே என்னுடைய நடமாட்டம் கேட்டது. நான் மறைவாக நின்று கொண்டு கீழே என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தேன். என்னிடம் கால இயந்திரத்தை விற்றவன் நிகழ்காலப் பிரதியிடம் எனக்கு அந்த இயந்திரம் திரும்ப வேண்டும் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். நான் தர முடியாது என்றேன். 

அவன் வாங்கிய பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என்றான். நான் பிடிவாதமாக முடியாது என்றேன். வாக்குவாதம் போய்க் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து என்னை சுட்டான். 

கால இயந்திரத்தை எனக்கு கொடுத்தவன் தான் என்னை சுட்டுக் கொன்றுவிட்டான். 

நான் இறந்து கிடப்பதை நான் கொலை செய்யப்படுவதை என் கண்களால் பார்த்தேன். அதிர்ச்சியில் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. 

கங்கா பாத்ரூமில் இருந்தாள். என்ன செய்கிறோம் என்ற யோசனை இல்லாமலேயே நான் அங்கிருந்து வெளியேறி வந்தேன்.  கால இயந்திரத்தை வாங்கிய அந்த நாளுக்கு சென்றேன். 

என்ன செய்வது என்பதை பலமுறை திட்டமிட்டேன். மீண்டும் என் கால இயந்திரத்தை எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் ஆறு மாதத்தை கடந்து சென்றேன். போகும்போது மறக்காமல் வேறு விக் வைத்துக் கொண்டேன். 

போகும் போது என்னுடைய போனைக் கொண்டு போனது வசதியாகப் போய்விட்டது. கங்காவுக்கு போன் செய்தேன். துயரம் தோய்ந்த குரலில் ஹலோ என்றாள். கங்கா என்ற என்னுடைய குரலைக் கேட்டதும், அச்சத்தில் நடுங்க ஹலோ என்றாள். 

கங்கா பயப்படாதே நான் பேய் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்து எல்லா விஷயத்தையும் சொல்கிறேன் என்றேன். அவள் தயக்கத்தோடு சரி என்றாள்.  

நான் வீட்டுக்குப் போனதும் கங்கா வைத்த கண் வாங்காமல் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சித்தம் கலங்கிவிட்டிருக்கும். நான் மெல்லிய குரலில் நடந்தவற்றை விலக்க ஆரம்பித்தேன். அவள் அப்படீன்னா நீங்க சாகலையா? என்றவள் என்னுடைய மாலை அணிவித்திருந்த போட்டாவை அப்புறப்படுத்த சென்றாள். நான் அது அப்படியே இருக்கட்டும் என்றேன். என்னை உயிரோடு பார்த்த பிறகும் அவளால் சகஜ நிலைக்கு வர முடியவில்லை 

கால இயந்திரம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்றாள். நான் பின்வரும் அந்தக் கதையை அவளுக்கு விலக்கமாக சொன்னேன்.

அவனை முன்பின் பார்த்ததில்லை. என்னுடைய எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைக்கு வந்தான். என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்றான்.  சொத்து ஏதோ ஒன்றை விற்பனை செய்ய வந்திருக்கிறான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நான் அப்போது வீட்டுக்குப் போகும் நேரம் என்பதால், அவனையும் வீட்டுக்கே கூட்டிப் போனேன். அவன் வந்திருந்த காரைக் காட்டினான். இது ஒரு கால இயந்திரம். நான் இருநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்து வருகிறேன் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் என்னை அழைத்துக் கொண்டு என்னுடைய பத்து வயதுக்குக் கூட்டிக் கொண்டு போனான். நான் இறந்துபோன என் அப்பாவை மீண்டும் பார்த்துவிட்ட பிரமிப்பில் இருந்து மீள்வதற்குள் என்னை நிகழ்காலத்திற்கு கூட்டி வந்துவிட்டான். 

தான் இந்த இயந்திரத்தை விற்க விரும்புவதாக சொன்னான். அவனுடைய காலத்தில் இந்த இயந்திரங்கள் சர்வ சாதாரணமாய் புழங்குகின்றனவாம். அங்கு அவனுக்கு சரியான தொழில் எதுவும் அமையாததால் இந்த இயந்திரத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து இங்கேயே ஏதாவது தொழில் தொடங்கி, இங்கேயே செட்டில் ஆகிவிட திட்டமிட்டிருப்பதாக சொன்னான். 

இந்த இயந்திரத்தை மில்லியனர்களிடம் கொண்டு போய் காட்டினால், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். ஆனால், அது ஒரு கால இயந்திரம் என்கிற ரகசியத்தை அவர்களால் காப்பாற்ற முடியாது. கடைசியில நானும் வெளி உலகத்துக்கு தெரிந்துவிடுவேன். எங்கள் காலம் வரையும் அதற்கு அப்பாலும் என் பேர் நாறிக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே எனக்கு சின்னதாக ஒரு தொழில் தொடங்கும் அளவுக்குப் பணம் கொடு போதும் என்றான். 

என்னால் இப்போது இருபத்தைந்து லட்சம் தர முடியும் அது உன்க்குப் போதுமா? என்றேன். அவன் மிகக் குறைவுதான் ஆனால் எங்கள் காலத்து விலையோடு ஒப்பிடும்போது இது நல்ல விலைதான் என்றான் திருப்தியுடன். நான் உள்ளே சென்று அலமாரியைத் திறந்தேன். அதில் இருந்த சைலன்சர் பொருத்திய துப்பாக்கியை எடுத்து வந்து அவன் நெற்றியில் சுட்டேன். 

பாவம் நான் அவனிடமிருந்து கால இயந்திரத்தை வாங்கி, காலத்தில் பயணம் செய்து, எதிர்காலத்தில் என்னை அவன் கொல்லப் போவதை அறிந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பதை அவன் அறியவில்லை. 

அவனுடைய சடலத்தைக் கால இயந்திரத்தில் போட்டு, அதில் பத்தாயிரம் வருடங்களுக்கு பின்னால் போகும்படி செட்டிங்சை வைத்து இயக்கிவிட்டு, நான் இறங்கிக் கொண்டேன்.  அந்த இயந்திரம் அங்கிருந்து தறிகெட்டு ஓடி மறைந்தது. இப்போது நான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டேன் என்று நிம்மதி அடைந்தேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக நான் மீண்டும் என்னுடைய மரண நாளுக்கு சென்றேன். அப்போதும் நான் கொலை செய்யப்பட்டுதான் இருந்தேன். 

திடீரென என் மனம் மாறியது. சாவு பழிதீர்ப்பு எல்லாம் தேவைதானா? பேசாமல் இந்தச் சாவில் இருந்து தப்பித்துவிட்டால் என்ன என்று தோன்றியது. கொலை நடந்த நாளுக்கு  முதல் நாளில் சென்று (என்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டுதான் போனேன். திடீரென எனக்கு முன்னால் நானே வந்து நிற்பதால் உண்டாகும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும் அல்லவா?) நடக்க இருக்கும் விஷயத்தை என்னிடம் சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு இரண்டு மாதத்திற்கு அப்பால் சென்றுவிட வேண்டும். எனத் திட்டமிட்டேன். அதன்படியே அந்த நாளுக்கு சென்று என்னை நான் சந்தித்தேன். நாளை நடக்க இருப்பதைச் சொன்னேன். அவன் ஏற்கனவே கால இயந்திரத்தில் பயணம் செய்தவன் என்பதால், நான் சொன்னதை எளிதாக புரிந்து கொண்டான். அவனையும் அழைத்துக் கொண்டு கால இயந்திரத்தில் ஏறி ஆறு மாதத்திற்கு அப்பால் செல்ல திட்டமிட்டோம். இயந்திரத்தில் ஏறி அதை இயக்கத் தொடங்கியதும். என்னுடைய இன்னொரு பிரதி மறைந்துவிட்டது. ஆக இப்போது நான் கொலையில் இருந்து உறுதியாக தப்பி விட்டேன். 

ஆனால், ஆறு மாதம் கழித்து போன போதும் என் போட்டோவுக்கு மாலை தான் மாட்டியிருந்தது.  நான் இப்படி கொலை செய்யப்படுவதில் எனக்கு சம்மதமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். 

இப்படியான சிக்கலில் என்னை மாட்டிவிட்ட அந்த எதிர்காலத்தவனை பழிவாங்க என் மனம் துடித்துக் கொண்டே இருந்தது. ஒரு முடிவோடு அவன் என்னை சந்திக்க வந்த அந்த நாளுக்கு மீண்டும் கிளம்பிப் போனேன்.  முன்பு போலவே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி, தலைக்கு விக் வைத்து முக அமைப்பை வேறு மாதிரி மாற்றிக் கொண்டு என்னுடைய எலக்ட்ரிக் கடைக்குப் போய் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சோபாவில்  உட்கார்ந்திருந்தேன். அந்த வேறுகாலத்தவன் வந்தான். கல்லாவில் உட்கார்ந்திருந்த என்னிடம் சென்று , உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். 

நான் அவனை வீட்டுக்கு அழைத்துப் போனேன். பின்னாலேயே நானும் போனேன். அவர்கள் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, நான் என்னிடம் இருந்த கால இயந்திர சாவியை வைத்து அந்த இயந்திரத்தை திறந்து உள்ளே போனேன். அதன் சில செட்டிங்குகளை தவறாக அமைத்தேன். சில குழப்பங்களை செய்து விட்டு, வெளியே வந்துவிட்டேன். 

நானும் அவனும் வெளியே வந்து, இருவரும் இயந்திரத்தில் ஏறி இருக்கைகளில் அமர்ந்தார்கள். அவன் என்னுடைய பத்து வயதுக்குப் போகலாம் என்று சொல்லி இயந்திரத்தை முடுக்கினான். அது அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் போதே அப்படியே மறைந்துவிடடது. நான் என்னுடைய கால இயந்திரத்தை மறைவாக நிறுத்தி வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.  

என்னைக் கூட்டிப் போனவன் ஒரு மணி நேரம் கழித்துதான் அங்கே வந்தான். 

நான் அவனிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தேன். “என்னை என்னோட சின்ன வயசுக்கு கூட்டிப் போறேன்னு சொல்லி, ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னால கொண்டு போய் விட்டுட்ட. கடவுளே அங்கிருந்து தப்பிச்சி வந்ததை இப்பவும் என்னால நம்ப முடியல. எனக்கு கால இயந்திரமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் தயவு செஞ்சு இடத்தைக் காலி பண்ணு” என்றேன்.  அவன் என்னிடம் எதையோ சொல்ல முயன்று தோற்றவனாக அங்கிருந்து வெளியேறினான்.   

சிறிது நேரம் கழித்து, நான் நிகழ்காலத்தில் இருந்த என்னை சந்தித்தேன். “நல்லவேளை நீ அந்த கால இயந்திரத்தை வாங்கவில்லை. வாங்கியிருந்தால் நீ கொலை செய்யப்பட்டிருப்பாய்” என்றேன். அவன் பைத்தியக்காரன் போல என்னைப் பார்த்து, “நீ யார்?” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தபடி  அவனை என்னுடைய கால இயந்திரத்திறுகு கூட்டிப் போனேன். நான் தான் அந்த இயந்திரத்தை கோளாறாக்கினேன் என்பதை விளக்கினேன். அவன் எதையும் நம்ப முடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். “சரி வா உன்னை எதிர்காலத்திற்கு கூட்டிப் போகிறேன்” என்று அவன் கையைப் பற்றி இழுத்தேன். அவன் நான் வரமாட்டேன் என்று அலறினான். “நான் என்பது நீ தான் நான் உன் எதிர்காலத்தில் இருந்துதான் வருகிறேன். என்னை நம்ப மாட்டாயா?” என அவனை சமாதானம் செய்து என்னுடன் அழைத்துப் போனேன். ஆனால் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே அவன் மறைந்து போய்விட்டான். 

ஒருவன் வெவ்வேறு காலத்திற்கு சென்று தன்னையே சந்தித்துக் கொண்டாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறொரு காலத்திற்கு போக முடியாது என்பதை புரிந்து கொண்டேன். 

எப்படியோ நான் இப்போது கொலை செய்யப்பட்டிருக்க மாட்டேன் என்கிற உறுதியான நம்பிக்கையோடு திரும்ப எதிர்காலத்திற்குப் போனேன். ஆனால், அப்போதும் நான் இறந்துவிட்ட தகவலைத்தான் பெற முடிந்தது. 

இனி, கொலை நடந்த நாளில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவனாய் அந்த நாளுக்குப் போனேன். 

ஏற்கனவே நடந்தது போல என்னுடைய அறையில் மறைந்திருந்து கொண்டு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். 

அந்த எதிர்காலத்தவன் வந்தான். ஏற்கனவே நான் பார்த்தேதான் மீண்டும் நடந்தது. நான் இறந்து விழுவதைப் பார்ப்பது எனக்கு இப்போது பழகிவிட்டது. 

அவன் வெளியேறிப் போனதும் நான் அந்த அறையில் கங்காவுக்காக காத்திருந்தேன். அவள் வந்ததும் முன் அறையில் நான் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் ஆனால், நான் இன்னும் சாகவில்லை என்பதையும் அவளுக்கு சொன்னேன். அவள் குழப்பத்தோடு முன் அறைக்குச் சென்றாள். அங்கே நான் என் உடலைச் சுற்றி ரத்தம் தேங்கி நிற்க இறந்து கிடப்பதைப் பார்த்ததும், மயக்கமடைந்து விழுந்தாள். 

நான் என்னுடைய இறந்து கிடந்த உடலை அப்புறப்படுத்தி, பின்பக்கம் இருக்கும் தோட்டத்தில் புதைத்தேன். அறையை சுத்தம் செய்தேன். அதுவரை கங்கா எழுந்திருக்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு அழுதான். நான் அவனுக்கு புட்டிப் பாலை புகட்டினேன். ஒருவேளை அதிர்ச்சியில் இதயம் பழுதாகி இறந்துவிட்டாளோ என்ற அச்சத்தோடு, அவளை சோதித்துப் பார்த்தேன். நல்லவேளை அவளிடம் மெலிதாக மூச்சு ஓடிக் கொண்டிருந்தது. நான் டாக்டரை வரவழைத்து அவளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். சற்று நேரத்தில் கண் விழித்த கங்கா எழுந்ததும் என்ன நடந்தது எனப் பரபரத்தாள். அச்சத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. 

நான் ஒன்றும் நடக்கவில்லை. பாத்ரூமில் இருந்து வந்ததும் நீ மயக்கம் போட்டு விழுந்துவிட்டாய் என்றேன். 

நீங்கள் செத்துப் போய்விட்டதாக நீங்களே வந்து என்னிடம் சொன்னீர்களே? என்றான். நான் சிரித்துக் கொண்டே, என்ன நான் செத்துப் போய்விட்டதாக உன்னிடம் நானே வந்து சொன்னேனா? மயக்கத்தில ஏதாவது கனவு கண்டிருப்பாய் என்றேன். அவள் நம்ப முடியாதவளாக என்னைப் பார்த்தாள். நான் அப்படியே என்னுடைய தினசரி வாழ்க்கையை தொடர்ந்தேன். பாழய் போன அந்த கால இயந்திரத்தில் முன்பு போலவே அதன் செட்டிங்குகளை மாற்றி அதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் போகும்படி செய்தேன்.

நான் கடையில் இருந்தபோது, கங்கா கொஞ்சம் ரோஜாச் செடிகளை வாங்கி, வந்திருப்பதாகவும் அதை நடுவதற்காக இரண்டு பேரை விட்டு தோட்டத்தில குழி வெட்டிக் கொண்டிருப்பதாகவும் எனக்குப் போன் செய்தாள். 

நான் “யார் உன்னைத் தோட்டத்தில் குழி வெட்டச் சொன்னது?” என்று கத்தினேன். அவசர அவசரமாக வீட்டுக்குப் போனேன். நான் போவதற்கு முன்பே என்னைப் புதைத்த அந்த இடத்தில் குழி வெட்டப்பட்டிருந்தது. ஆனால் அங்கே ஒன்றுமே இல்லை.


 

எழுதியவர்

குமாரநந்தன்
குமாரநந்தன்
நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் என படைப்புகள் எழுதி தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதுவரை ;
பதிமூன்று மீன்கள்,
பூமியெங்கும் பூரணியின் நிழல்,
நகரப் பாடகன்,
மகா மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும்
’பகற் கனவுகளின் நடனம்’ எனும் கவிதைத் தொகுப்பு மற்றும்
‘மேகலாவின் அற்புதத் தோட்டம்’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x