27 April 2025
Ramya KS 25

காற்பந்தை அத்தனை வேகமாய் ஓடிவந்து வலேரியன் உதைக்கும்போது அவனது ஒட்டுமொத்த உடலே பந்தய இருசக்கரவாகனம் போன்று சரிந்துகொடுத்தது. மாலைவெயிற்பட்டு மினுங்குகிற அவனது நரம்பு முறுக்கேறிய கைகள் பறவைச்சிறகுகள்போல் விரிந்திருக்க, வலது காலிடமிருந்து ஒரு அம்பென விடுபட்டு இலக்கு நோக்கிப் பறந்த காற்பந்து இலக்குக்கோட்டுக்கு சற்றுமுன் தரையில்பட்டு இலக்குக்கூடைநோக்கி ஓடியது. மைதானத்தின் வெளியே எவருக்கும் தம் இருக்கையில் அமர நிலைகொள்ளவில்லை. ஒட்டுமொத்தக் கூட்டமும்கோ…’ எனக் கத்தியபடி திறந்த வாயை ‘…ல்என மூடுவதற்குள், கோல்கீப்பர் ரிச்சர்ட் பாய்ந்து பந்தின் குறுக்கே வந்தான்அவனது காலில்பட்ட பந்து இலக்குக்கம்பத்தின் வெளியே பின் இடப்புறமிருந்த எல்லைக்கோட்டை நோக்கி ஓடி வெளியேறியது. உற்சாகத்தின் குரல்கள் நிரம்பிய மைதானத்தின் வெளியே கூட்டத்தில் குதித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓடிவந்து, புல்தரையில் கிடந்த பந்தை, காலால் இலக்குக்கூடைநோக்கி எறிந்தான். அவனது பலத்திற்கு, பந்து செல்லச்சோம்பலுடன் நகர்ந்து இலக்குக்கூடையின் வெளிப்புறமாய் வலையைத்தொட்டு நின்றது. பொடியன் தன் சின்னக்குரலால்கோல்… ‘ எனக் கத்தினான். ரிச்சர்ட் எல்லைக்கோடு அருகே வந்து, தன் தொடையுயரமே வளர்ந்திருந்த அந்தச் சிறுவனின், கடல்நீர் பட்டுப்பட்டு செம்பட்டையாகியிருந்த தலைமுடியைச் செல்லமாய் கலைத்துவிட்டுச் சிரித்தான். அரைஞாண்கயிற்றிலிருந்து காற்சட்டை நழுவிவிடாமல் இறுகப்பிடித்தபடி நிமிர்ந்து, கண்டிக்கும் தோரணையில் சிறுவன்

ஒழுங்கா மரியாதையா வலேரியாண்ணன கோல் போட வுடுங்க ரிச்சட்டுண்ணே…”

அடிங்பொடிப்பயலே! ஃபர்ஸ்ட் ஹாஃப்லதான் உன் வலேயண்ணன் ஒரு கோல் போட்டான்ல்ல, போதாதா…?”

இல்ல சார்அது பிரைட்டன் வீட்டுக்கு எதுத்தாப்புல இருக்க கோல் போஸ்ட்அதுனால பிரைட்டன் ஸ்டைலு காட்டிட்டு இருக்கான், இப்ப சைடு மாறி எங்க வீட்டு சைடு கோல் போஸ்ட் வந்ததுக்கும் ஒரு கோல் போடனும்ல்லாநான்  பந்தயம்லாம் கட்டிருக்கேன் அவன்ட்ட…” என்று கத்திச்சொன்னபடியே சிறுவன், நடுவர் ரதேஷ் விசிலுடன் இணைந்த கயிற்றை சாட்டைமாதிரி சுற்றிக்காட்டியபடியே அருகில் வருவதைப்பார்த்து பயந்தமாதிரி திடுக்கென நடித்து மாறாத உற்சாகத்துடன் ஓடினான். அதற்குள் நடுவர் ரதேஷ்கார்னர் கிக்சைகையை வழங்கியிருந்தார்

 மைதானத்தின் சிவப்புக்கொடி நடப்பட்டகார்னர் கிக்மூலையை நோக்கிச்சென்ற   வலேரியனை ரிச்சர்ட் மேலிருந்து கீழாகப் பார்வையால் அளந்தான். ஒளிர்பச்சை வர்ண புது ஜெர்ஸியும், இன்டிகோ நீலத்தில் கால்சராயும் அணிந்திருந்தான் வலேரியன். அவனது காலணிகள் பளிச்சென புதிதாய் இருந்தன. ரிச்சர்ட் தன் காலணிகளைப் பார்த்துக்கொண்டான். வெண்மையில், எவ்வளவு கழுவினாலும் மறையாத  செந்நிறமேறிப்போய் இருந்தன அவை. மைதானத்தை எவ்வளவுக்கெவ்வளவு முத்தமிடுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சிவந்த  கன்னங்களை உடையவை ஒரு விளையாட்டுவீரனின் காலணிகள்.

மைதானத்திற்குள் நுழையும் முன் தன் அணியின் முன்தடுப்பாட்ட வீரன் ஜெரனும் தானும் பேசிய வார்த்தைகள் நினைவுவந்தது ரிச்சர்டுக்கு… 

 “மச்சான்! அவன்ட்ட ஸ்டட்ஸ் ஷு பாத்தியளா? இதுக்குன்னே புதுசா வாங்குனமாதிரில்ல இருக்குவீட்டுக்குப்போனா  ஒடைஞ்ச கரிச்சட்டியில கடிமீன ஆஞ்சுப்போட்டு ஆனம் காய்ச்சுறா இவன் ஆத்தாபோலியோ அட்டாக்ல ஏலாம போன கால வச்சுக்கிட்டும் இவன் அக்கா வலைக்கு மால் முடிஞ்சு சம்பாதிக்காஇவனப்பாரு சும்மா பச்சக்கிளியாட்டம் மின்னுறான்

பூட்ஸ் வேணா புதுசா இருக்கலாம் மாப்ளஆனா ஆளு நல்ல ஆட்டக்காரன்தான்ஸ்கூல் படிக்கிறப்பவே சும்மா சிட்டாட்டம் பறந்து வெளாடுவாம்ல்லாஏதோ அவன் அப்பன் புயல்ல கடலோட போனப்றம் வயித்துப்பாட்டுக்கு வழியில்லாம, படிப்ப வுட்டுட்டு, வலைய புடிச்சுக்கிட்டு கடலுக்குப் போய்ட்டான்அவன் அக்கா ஐரின் எனக்கு க்ளாஸ்மேட்டுதான…? அவள இவந்தான் தெனைக்கும் சக்கரநாற்காலில கொண்டாந்து கிளாஸ்ல உட்டுட்டுப்போவான், நல்ல பாசக்கார பய” 

ரிச்சர்ட் யோசித்துக்கொண்டிருப்பதற்குள்கார்னர் கிக்ஆரத்திற்குள்ளிருந்து பந்து பாய்ந்து வெளிவந்து ஜெரனுக்கும், திருமணமாகாத அணியின் முன்களவீரன் மாத்யுவுக்கும்  இடையில் உதைபட்டுக்கொண்டிருந்தது

அந்தக் காற்பந்தாட்ட மைதானம் ஊரின் நில அமைப்பையே கிழக்கு மேற்காய் இரண்டாய்ப்பிரித்தது. மைதானத்தின் கிழக்குப்புறத்திலிருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் கடல். அந்த முக்கால் கிலோமீட்டருக்குள்ளே உள்ள ஐந்து தெருக்களிலுள்ள  வீடுகளில் கடலின் வாசம் துல்லியமாய்த்தெரியும். குடிசைவீடுகளே இல்லாத ஊராக முப்பது வருடங்களுக்கு முன்பே மாறிவிட்ட கடற்புறம்தான் என்றாலும் உப்புக்காற்றால் அரிக்கப்பட்டு செப்பனிடுதலை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிற வீட்டுச்சுவர்களும், விரைந்து துருவேறுகிற தலைவாசலின் கம்பிக்கதவுகளும், கடலின் அரசாட்சி அங்கு நடப்பதைக்காட்டும். மைதானத்தின் மேற்குப்புறம் கடற்தொழிலின் அறிகுறியே இல்லாத பங்களாக்களாலும் சிறுவீடுகளாலும் ஆன பத்து தெருக்கள். கால்பந்தாட்டத்திற்கென தனி மைதானத்தை ஏற்படுத்தி, மூன்று தலைமுறைகளாய் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் ஊர் அது. திருமணமான ஆடவர் அணிக்கும், திருமணமாகாத ஆடவர் அணிக்கும் நடைபெறுகிறஊர்த்திருவிழா காற்பந்தாட்டப்போட்டிஅது

 ரிச்சர்ட் கடந்த ஐந்து வருடங்களைப்போல், இந்த வருடமும், திருமணமானோர் அணியின் தலைவன். இம்முறை வலேரியன்தான் திருமணமாகாத அணியின் தலைவன்வழக்கமாய் அவ்வணியில் விளையாடுகிற யாரும் இப்போது விளையாடவில்லை, இது புது அணி. ஒரு வாரம் முன்பு முளைத்த அணி. அணியில் அனைவரும் கடற்தொழிலுக்குச் செல்கிறவர்கள்

ஏன்…? மாதாவோட தேர், மேக்கு தெருவுள்ளயே  திரும்பிறனுமோ…? கெழக்கு தெருவுக்கு வந்தா மாதா சுரூபம் கையிலருக்க சேசு பாலன கீழபோட்டுட்டு மூக்க மூடிக்குமாக்குமாவேய்?”

எலேய்! ஊர் அமைப்புலேய் அதுகெழக்குத்தெருவுலாம் பள்ளக்காலுஅந்தத் தெருவவிட்டு இந்தத்தெரு எறங்குற ரோட்டப்பாருசைக்கிள எறக்கவே அந்த சறுக்கு சறுக்குதுதேர எப்புடிலே எறக்கறது?”

அதுலாம் அலேக்கா இழுத்துட்டு வந்துறலாம்உங்கள மாதிரி மேசைக்காரனுங்க தோள்ல திராணியில்லாட்டி போவுதுநாங்க கடலோடிங்க இழுக்குறோம், எங்களுக்கு மேடு பள்ளம்லாம் சர்வசாதாரணந்தான்

இங்காரு வலேரியன்! தேர்த்தெருவுக்குனு சரியா கோயில்ல ஆரம்ப்ச்சு கோயில்ல வந்து முடியிறாப்ல சச்சவுக்கமா நாலு தெருவ நம்ம சிய்யான்மார் குறிச்சு வச்சிருக்காங்க, அத ஒன்னோட இஷ்ட மசுருக்கெல்லாம் மாத்தமுடியாது

இப்படித்தான் ஊர்க்கூட்டத்தில் ரிச்சர்டுக்கும் வலேரியனுக்கும்  வார்த்தைகளில் தடித்து வெடித்து ஆரம்பித்தது பிரச்சனை.

கடைசியில் ஊரின் பதினைந்து தெருக்களில் உள்ள மக்களிடமும், ஊர் நிர்வாக அமைப்பாளர்கள் பதினைந்துபேரும் தேர்வீதிகளை மாற்றுவது குறித்த கருத்துக்களை கேட்டறிவதற்கு ஒருநாள் ஒதுக்குவதென்றும், அதற்கு மறுநாள் அந்த பதினைந்துபேரும் நிர்வாக அமைப்பாளர்களின் கூட்டத்தில் ரகசிய வாக்களிப்பு நிகழ்த்துவதென்றும் ஊர்க்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நடுவில் தங்கள் தரப்பு நியாயங்கள் குறித்து இருதரப்பினரும் எந்தத் தெருக்களில் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தி தங்களுக்கு ஆதரவு திரட்டலாம் என்றும் கருத்துக்கேட்புக்கு முந்தைய நாள் ஊர்த்திருவிழாவுக்காக வழக்கமாக நடைபெறும் கால்பந்தாட்டப்போட்டியை நடத்தலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஓடியோடி தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசி முடித்தபிறகும் நம்பிக்கையில்லை வலேரியனுக்கு. அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் கவர கால்பந்துப் போட்டியையும் பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்து அணி திரட்டத் தொடங்கினான். அணிபிரிக்கிற நாளில் வலேரியன் தான்தான் திருமணமாகாத அணியின் தலைவனாய் இருப்பேன் என்று உரத்த குரலில் கூறிவிட, தானாகவே அவனுக்குக்கீழ் பத்து ஆட்டக்காரர்களும் கிழக்குத்தெரு இளைஞர்களாகவே சேர்ந்தனர். மாற்றாள் ஆட்டக்காரர்களுக்கும்கூட கிழக்குத்தெருவினர் பெயரே இடம்பெற்றது. போட்டி இப்போது கடலுக்கும் கரைக்கும் என்பதுபோல வந்துநிற்கிறது

கூட்டத்தின் ஆரவாரம் மீண்டும் அதிகமாகியது. வலேரியன் காலுக்கு பந்து வரும்போதெல்லாம் கூட்டம்  ‘கோல்எதிர்பார்த்துக் கத்தியது. தன் கால்களுக்கிடையில் நாய்க்குட்டிபோல் பத்திரமாய் ஓட்டிக்கொண்டு வந்த பந்தை, வலேரியன் தன் அணியின் மாத்யுக்குக் கடத்தினான். மாத்யு அச்சமயம் எதிரணியின் கடைசி முன்தடுப்பாட்டவீரன் ஜெரனுக்கு சற்று பின்புறமாக நின்றதை வலேரியன் கவனிக்கவில்லை. ஆனால் துல்லியமாக கவனித்துவிட்ட நடுவர் ரதேஷ்ஆஃப்சைட்வழங்கினார். எனவேஃப்ரீ கிக்வாய்ப்பு திருமணமான ஆடவர் அணிக்குக் கிடைத்தது. எதிர்ப்புறமுள்ள தங்களது பக்கத்திற்குச் சென்றுவிட்ட பந்து இலக்கை  அடையுமா என ரிச்சர்ட் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அனைவரது விழிகளும் அந்த இலக்குக்கம்பத்தையும்ஃப்ரீ கிக்வாய்ப்பு பெற்ற ஜேம்ஸையுமே பார்த்தபடி இருந்தன. ஜேம்ஸால் உதைபட்ட பந்து, திருமணமாகாத வீரர்களின் அரணைத் தாண்டிப்பறந்து நேரடியாக இலக்கு எட்டியது. நெடுநேரம் தடுமாறி, திருமணமான அணி ஐம்பத்தியாறாவது நிமிடத்தில் திருமணமாகாத அணியின் கோலை சமன்செய்திருக்கிறது.

கூட்டத்திலிருந்து ஆரவாரக்குரல்கள் உற்சாகமாய் எழுந்தன. மைதானத்தைச் சுற்றியிருந்த வேப்பமரங்களில் கூடடையத் தொடங்கியிருந்த காகங்கள் கூட்டத்தின் ஆரவாரத்தால் குழப்பமுற்று மறுபடியும் ஒருமுறை பறந்து ஒரு சுற்றுசுற்றிக்கொண்டு வந்து மரத்தில் அடைந்தன

ஜெரன் கைகளை உயர்த்தியபடியே எதிர்ப்புறத்தின்பெனால்ட்டிகட்டத்துக்குள் நின்றிருந்த ரிச்சர்டை நோக்கி ஓடிவந்தான்

ஓடும்போது வலேரியனைக் கடந்த சமயத்தில் சற்று வேகம் குறைத்து அவனைநோக்கி, “இன்னிக்கு ஒனக்கு கண்ணுல விரலவுட்டு ஆட்டாம விடப்போறதில்லஒக்காளி, தேரு வேணுமோ தேரு…!” என்றான். எப்படியாவது தன் கோபத்தைத் தூண்டி வம்புச்சண்டைக்கு இழுத்துரெட் கார்டுவாங்கவைக்கவே ஜெரன் இவ்வாறு பேசுகிறான் என்பது வலேரியனுக்குப் புரிந்து, ஒரு புன்னகையோடு நகர்ந்துவிட்டான்

நடுவர் விசில் ஊதும் சத்தம் கேட்டதுநடுவட்டத்தை நோக்கி ஜெரனும் மாத்யுவும் ஓடுவதைக்கண்டு சுதாரித்த வலேரியனும் நடுவட்டத்திற்கு ஓடினான்

 மாத்யு அங்கிருந்து பந்தை உதைத்துத் தள்ள, மறுபடியும் பந்து திருமணமாகாத ஆடவர் அணிப்பக்கமே சென்றது. இலக்குக்கோட்டிற்கு மிக அருகிலேயே பந்தைக்கொணர்ந்துவிட்ட வலேரியனிடமிருந்து தடுத்து, தன் அணிவீரர்கள் நோக்கி தள்ளும் முயற்சியில் இருந்த ரிச்சர்ட், இலக்கிற்கு தள்ளும் முயற்சியில் இருந்த வலேரியனிடம், “என்ன வலேரியன்ஊர் நிர்வாகிகள்ட்ட உன் பக்கமே ஓட்டுப்போட சொல்லட்டுமா? நான் சொன்னா எட்டுபேராச்சும் கேப்பாங்கஎன்றான். ஸ்தம்பித்து நின்றுவிட்ட வலேரியனிடமிருந்து பந்து ரிச்சர்டால் உதைபட்டு எதிரணிப்பக்கம் போனதைக்கூட கவனிக்காமல் அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான்

நீ எதுக்கு அப்டி ஊர்க்கூட்டத்துல வாதாடுனன்னு தெரியும் வலேரியன், ஐரின் ஸ்கூல் படிக்கும்போதே அடிக்கடி சொல்லுவா, மாதாத்தேரு எங்க வீதி வழியா வந்தா என் காலு சரியாகிரும்னு

ஆமாண்ணேஅக்கா சின்னப்புள்ளைள்ள கால் நல்லாதான் இருந்துருக்கு, மாதாத்திருவிழா அன்னிக்கு  பட்டுப்பாவாடைலாம் போட்டுக்கிட்டு அம்மா கைய பிடிச்சுக்கிட்டு போகப்போக பயங்கரமா காய்ச்சல் கண்டு சோர்ந்து போயிருக்கு, அன்னிக்கு நடந்தவதானாம், அப்றம் நடக்கவே இல்லியாம்அவளுக்கொரு நம்பிக்கைண்ணே, அந்தத் தேரு நம்ம வீதியில வந்தா காலு சொகமாயிரும்ன்னுஅதுலயும் இந்த தடவ மாதாத்தேர் ஏதோ அவ சொப்பனத்துல வந்துச்சுன்னு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு திங்காம ஒங்காம கெடக்குறாஎன்பதற்குள் அந்தப்பக்கம் திருமணமான அணியின் பக்கமிருந்துகோல்என சத்தம் எழும்பியது. எண்பத்தாவது நிமிடத்தின்கோல்‘. தனது அணியின் வெற்றிவாய்ப்பு, ரிச்சர்ட் தன்னிடம் பேசிய சமயத்தின் கவனச்சிதறலால் பறிபோனது வலேரியனுக்குள் ஆவேசத்தைத்தூண்டியது

என்னண்ணே குறுக்குப்புத்தி இது? நான் கோல் போட்ருவேன்னு என்னய கரெக்ட்டா கவனம் செதறவச்சு காரியத்தச் சாதிச்சிட்டீருல்ல…?”

அடச்சைய்எங்கப்பன் சொப்பனத்துலக்கூட எனக்கு குறுக்குப்புத்தி வராதுலஇப்ப சொல்றேன்இன்னும் பத்தே நிமிஷம். அதுக்குள்ள நீ என்னய மீறி, நீயா ஒரு கோல்போட்டுட்டன்னாஎன் சைடு நிர்வாகிங்க எல்லாரையும் ஒனக்கே ஓட்டுப்போடச் சொல்லிர்றேன்…”

தலையை உலுக்கிக்கொண்டான் வலேரியன்எல்லா உணர்ச்சிகளையும், உணர்ச்சிகள் தருகிற அழுத்தங்களையும் உதறித்தள்ளுகிற உலுக்கல் அது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு முழு வீச்சுடன் விளையாடவேண்டும் என மனதில் குறித்துக்கொண்டான்

நடுவட்டத்திலிருந்து மறுபடியும் பந்து இவர்களது இலக்கைநோக்கி உதைபட்டு வந்துகொண்டிருந்தது. பந்தை கால்களால் பெற்றுக்கொண்ட வலேரியனிடமிருந்து தன்வசமாக்கும் முயற்சியில் நெருங்கிவந்த ஜெரனின் கைமுட்டி வலேரியனின் மூக்கில் ஓங்கி ஒரு இடி இடித்துவிட்டது. சுருண்டுவிழுந்த வலேரியன் வலியைவிடவும் அதிகமாகவே கத்தினான். அவன் எதிர்பார்த்தபடியே ஜெரனுக்குரெட் கார்டும் இவர்களது அணிக்குபெனால்ட்டி கிக்வாய்ப்பும் கிடைத்தது. வலித்தாலும், தானே தொடர்ந்து விளையாடுவதாகக்கூறி மாற்றாளை மறுத்துவிட்டான் வலேரியன்

சரியாய் எண்பத்தி ஆறாவது நிமிடம்… 

பெனால்ட்டி கிக்வாய்ப்புடன் பந்தின்முன் வலேரியனும், அவனை நேர் எதிராய் எதிர்கொள்ளும் ரிச்சர்டும்ஒருவரை ஒருவர் நேரில் ஆழமாகப் பார்த்துக்கொண்டனர். அதிரப்பொருதலுக்கு தயாராகிவிட்ட இரு வேந்தர்களின் பார்வையைப்போல் மதிப்பும் கம்பீரமும் மிக்க எதிராளிகள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் பார்வை அது

கோலுக்காக வலேரியனின் கால் போகும் போக்கை இதுவரை கணித்தே இருந்தான் ரிச்சர்ட்

நிச்சயமாய் இந்தப் பந்து நேர்க்கோட்டில் வராது, தரையோடு தரையாய் உரசிச்செல்கிற ஒரு வட்டவில்போல் என்னைத்தாண்டும்அது புறப்படும் நேரத்தில் நான் இடப்புறமாய் மூன்றடி நகரவேண்டியிருக்கும்இப்போதே நகர்ந்தால் வியூகத்தை முன்னிருப்பவன் மாற்றுவான்எனவே இங்கேயே நிற்பேன்ஆனாலும் என் முன்கணிப்பு தவறாகவும் ஆகலாம்பந்தைத்தடுக்க நிற்கவேண்டிய இடத்தை யூகித்து சற்று முதுகை வளைத்து கூர்பார்வையுடன் முகத்தை முன்னால் நீட்டி வலேரியனையே பாரர்த்துக்கொண்ருந்த சமயத்தில், வலேரியன் பந்தை உதைத்தேவிட்டான்

ரிச்சர்டின் கணிப்பின்படியே பந்து அவன் நினைத்த இடம் நோக்கியே வந்தது, பாய்ந்து தட்டிவிட்டதில், பந்து ஓடாமல் உருளாமல் இலக்குக்கோட்டின் அருகிலேயே கிடந்துவிடும் என்றோ அதை மறுபடியும் உதைத்து இலக்கிற்குள் தள்ள வலேரியன் ஓடிவருவான் என்றோ ரிச்சர்ட் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுதாரித்துத் தடுக்கும்முன் பந்து இலக்கிற்குள் நுழைந்துவிட்டது.

கோ…..ல்ல்ல்

 கூட்டம் முழுவதற்குள் ஒரே உயிர் வந்ததுபோல் ஓங்கிப் பெருங்குரலில் ஆரவாரித்தது

ஆனால் அதேசமயத்தில் ரிச்சர்ட்தான் வலேரியனின்மேல் சற்று பலமாக மோதிக்கொண்டான். இருவரின் முன்நெற்றிகளும் பலமாக இடித்துக்கொண்டன. வலேரியன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தநொடி எண்பத்து ஒன்பதாவது நிமிடம். அந்த ஒருநிமிடம் என்ன நிகழ்ந்ததென்றே ரிச்சர்ட் கவனிக்கவில்லை. கோல் விழுந்ததற்கு ஆராவாரிக்கும் ஊர்க்குரலெல்லாம் ரிச்சர்டின் காதிலோ மூளையிலோ ஏறவேயில்லை. வலேரியனைத்தூக்கி மடியில் போட்டுக்கொண்டுவலேரியன்வலேரியன்…” என கத்தத் தொடங்கினான்                                                            

சற்றைக்கெல்லாம் எல்லாம் சரியாகி இவனைப் பார்த்துக்கொண்டே எழுந்த வலேரியன், “இப்ப விளையாட்டு டிரா ஆகிருக்கு, இன்னும் ஒரு நிமிசம் இருக்கு அண்ணேவாங்க விளையாடலாம்என்றபடி எழுந்து ஓடினான். ரிச்சர்டின் தலை கிறுகிறுத்தது. சமாளித்து எழுந்து நின்றான்

எங்கிருந்தோ ஓடிவந்த ஜெரன், “நெனச்சேன் மச்சான்இங்கனதான் இருப்பீருன்னுநல்ல தேர்த்திருநாளும் பொழுதுமா இந்த மனுசனக் காணோமேன்னு அங்க அக்கா புலம்பிக்கிட்டு முடுக்குமுடுக்கா தேடிக்கிட்டு இருக்காவ…”

அவ எதுக்கு தேடனும்மேட்ச் முடிஞ்சா வீட்டுக்குத்தான போவேன்…? நீ ரெட் கார்டு வாங்குனவன் எதுக்கு உள்ளவந்த…? வெளிய போய்த்தொல! தொந்தரவு பண்ணாத! இன்னும் ஒரே ஒரு நிமிசம்தான் இருக்கு, அதுக்குள்ள  ஜெயிக்கனும்

ம்க்கும்ஆனா, நீமர் வெளாடுன அந்த மேட்ச் முடிஞ்சு மூணாவது வருச தேர்த்திருநா நடக்கு மச்சான் இன்னிக்குஇது எப்ப புரியும் உம்மருக்கு? முடியாமலே போய்ட்ருக்கு உம்ம எம்பத்தியொம்போதாவது நிமிசம்அந்தப்பய வலேரியனும் ஒம்ம மடிலருந்து சரியாகி எந்திச்சு பொழப்பப் பாக்க போய், இப்ப கப்பல் வேலைக்கே போய்ட்டான்நீமர்தான் அப்பப்போ வீட்லருந்து சொல்லாம கொள்ளாம க்ரவுண்ட்க்கு ஓடிவந்து இன்னும் வெளயாட்டிட்டே இருக்கீரு மாமா

அவன் சொன்னதெல்லாம் ரிச்சர்ட் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சச்சவுக்கமான கிழக்குத்தெருவின் முக்கில் திரும்பிக்கொண்டிருக்கிற மாதாவின் தேரோடு ஒலித்தஆவே மரியா…’ பாடல் மைதானம்வரை கேட்டாலும் அதுவும் ரிச்சர்ட் காதுகளை எட்டவில்லை. எதிர்ப்புறமிருந்து தன் கால்களுக்கிடையில் நாய்க்குட்டிபோல் பந்தை  பத்திரமாய் ஓட்டிக்கொண்டு பாய்ந்து வருகிற வலேரியன் எந்தத்திசையில் பந்தடிப்பான் எனக்கணித்து  அதைத்தடுக்க, தான் நிற்கவேண்டிய இடத்தை யூகித்து சற்று முதுகை முன்னோக்கி வளைத்து, கூர்பார்வையுடன் முகத்தை முன்னால் நீட்டி, வலேரியனையே பார்த்துக்கொண்ருந்தான் ரிச்சர்ட்.


 

எழுதியவர்

ரம்யா அருண் ராயன்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x