இவனுக்கு இந்த வீதி வழியே ஏன் வந்தோமென்றிருந்தது. அதைவிட எதற்காக எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதும் புலப்பட வில்லை. பாக்கெட்டில் பணம் இல்லையென்றால் இப்படி ஆகிவிடுகிறது இவனுக்கு. என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது பல சமயங்களில் புரிவதில்லை. சதா எதற்கெடுத்தாலும் எரிச்சல் வருகிறது.
இந்த வீதியில் இவனை எங்கு கண்டாலும் குரைக்கும் நாய்கள் பல இருக்கின்றன. நிறைய இவன் கைக்கல்லால் அடியும் பட்டிருக்கின்றன இந்த இடம்தான் என்றில்லாமல். அடிபட்டாலும் அவைகள் திருந்துவதில்லை. தமது எதிர்ப்பை இவனிடம் காட்டிக் கொண்டிருக்கின்றன. பாக்கெட் நிரம்பி இருக்கும் சமயங்களில் அவைகள் குரைத்தாலும் இவன் காதிற்கு அவ்வளவாகக் கேட்பதில்லை. பல சமயம் பிஸ்கோத்துகளை அவைகளை நோக்கி வீசியுமிருக்கிறான். அவைகள் எதிரிகளின் பிஸ்கோத்துகளைத் தொடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. பிஸ்கோத்துகள்கூட எதிரியின் கைக்குண்டுகளாய் ஒருவேளை அவைகளுக்குப் பட்டிருக்கலாம். ஒருமுறை இதை முன்னிட்டு சண்டையும் நடந்திருக்கிறது.
நாய்னு இருந்தா குரைக்கத்தான் செய்யும் என வீட்டுக்காரன் சொல்லப் போக.. இவன் அன்றைய தினம் லேசான தள்ளாட்டத்துடன் வேறு இருக்க, ‘கடி நாயெ ஏய்யா ரோட்ல உட்டு இருக்கே? ஊட்டுக்குள்ளார சங்கிலில கட்டி வளர்த்து. நாய் குரைக்கும்தான் . ஆனா கல்லடியும் படும்தான். புர்தா! எதுனாப் பேசுனே வகுந்துர்வன் புர்தா..’ என்றும் கூறியிருக்கிறான்.
நேற்று ஒருவேளை அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டோமோ? என தோன்றியது. நேற்று இவன் பண்ணியதும் வெறும் பிசாத்து மேட்டர்தான். சுந்தருதான் ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்திருந்தான். கூடவே குச்சி மாதிரி ஒரு பையன் வந்திருந்தான். இரண்டு கைகளையும் முன்புறமாகக் கட்டிக்கொண்டு நல்லதனமாய் நின்றான். “என்ன ப்ரச்சனை சுந்தரு?” என்றானிவன். “பிசாத்து மேட்டருப்பா … பையன் நம்ம கடையாண்ட டீத்தண்ணி குடிக்க வரும். பிரச்சனைன்னு எங்கிட்ட மொனகிச்சு.. என்னா மேட்டருப்பான்னேன். லேத்துல தம்பி வேலை செய்யுதாம். வாரக்கூலி வாங்கி வயித்தக் கழுவுது பாவம். அது வயித்துல போயி முதலாளி அடிச்சுட்டான்பா.” “அடிச்சே போட்டானா முதலாளி” என்றான் இவன் இடையில் புகுந்து. “நீயி அடிக்கறதுலயே இருப்பா .. வவுத்துலீன்னா பூவாவுக்கு இல்லாமல் பண்ணிடறதுன்னு அர்த்தம். அடுத்த வாரம் அடுத்த வாரம்னு இழுத்தடிக்கறானாமா.. திடீர்னு வெல்டிங் செக்சன்ல தம்பிய உட்டுட்டானாமா. தம்பி கண்ணாடி போடாம ஜன்னல் கம்பி வெல்டிங் வெச்சிருக்குது .. கம்பெனில கண்ணாடி ஒண்ணுதா இருந்துதாமா அதையும் வெல்டர் போட்டுட்டு வெல்டிங் பண்ணிட்டு இருந்தாராமா..
தம்பிக்கு ராத்திரி கண்ணுக்குள்ளார மணலை அள்ளி குத்தாப் போட்டுட்டாப்ல துடிச்சுப் போச்சாமா.. அப்பால வெங்காயத்த கண்ணுல தேச்சு உட்டு வெடிய வெடிய கெடந்து காத்தால கம்பெனி போய் நீ குடுக்கற அம்பது ரூவா சம்பளத்துக்கு என் கண்ணெப் போக்கிக்கணுமா .. கணக்க முடி. சம்பள பாக்கிய குடு. இனிமே வர்லேன்னு சொல்லியிருக்குது.. மிதி தின்னு போடுவே ஓடிப் போயிருன்டாப்லையாமா மொதலாளி.. தம்பி என்னான்ட வந்து சொல்லிச்சு. பாத்துப் பிரச்சனைய முடிச்சுடு வேல்சாமி ..!” என்றான் சுந்தரு.
“ஏஞ் சுந்தரு .. பொலிச் பொலிச்சுனு போன ஒடனே ரெண்டு உட்டு நீயே தம்பி மொதலாளிகிட்ட காசெ வாங்கி தம்பிக்கு குடுத்தர்லாம்ல .. என்னெப் போயி ..” என இவனும் இழுத்தான். “எனக்கு பொழப்பப் பாக்கணும் வேலுசாமி.. தம்பிய கூட்டிட்டு போயி சட்டுபுட்டுனு முடிச்சுட்டு கடைக்கு வா..” என அவன் நழுவிப் போனான்.
“உம் மொதலாளி உனுக்கு எவ்ளோ நாள் கூலி தரணும்ப்பா? அப்படியே நடந்துட்டே பேசிட்டு போலாம் வா… உனக்கு எந்த ஊரு?” என்றபடி நடந்தான். “எனக்கு திருச்சி பக்கமுங்க … ஊர்ல ஆத்தா மட்டுந்தானுங்க… அங்க பொழப்புக்கு வழி இல்லங்க, அதான் இப்படி வந்துட்டேன். எங்கூர்ல எல்லாம் பொழப்புக்கு தகுந்த கூலி கெடையாதுங்க .. எங்க ஊர் பையன்தான் இந்த கம்பெனில சேத்து உட்டான் .. நாலு லேத் ஓடுதுங்க. மூணு ஷிப்டு. ஒரு வாரம் நல்ல மொதலாளி மாதிரிதானுங்க தெரிஞ்சாரு.. ஆறு மாசம் ஒரு பிரச்சனையுமில்லாம ஓடிடிச்சுங்க.. எனக்கு ஏழுநூறு ரூவா வரணுமுங்க பாக்கி.. பூங்கா நகரு போவோணுமுங்க.. ஒரு வாடகை சைக்கிளு எடுத்துட்டு வர்றனுங்க ..” என நழுவி ஐந்து நிமிடத்தில் சைக்கிளோடு வந்தான். இவன் பின்னால் அமர்ந்து கொள்ள அவன் முக்கி முக்கி அழுத்த ஆரம்பித்தான். “எது நடந்தாலும் நீ பாட்டுக்கு கம்முனு நின்னுக்கோ… எதையும் கண்டுக்கப்புடாது” என இவன் சொல்ல அவன் தலையாட்டியபடி மிதித்தான்.
பையன் சைக்கிளைப் பட்டறை முன்பாக நிறுத்தினான். அச்சமயம் பட்டறையினுள் இருந்த நான்கு லேத் மிசின்களும் ஓடிக்கொண்டிருந்தன. பட்டறையின் முகப்பு இரும்பு கேட்டை விலக்கி உள் நுழைந்தான் வேல்சாமி. ஆபிஸ் அறை தனியே வடக்குப்புறமாக இருந்தது. பையன் கேட்டினுள் நுழைந்து ஓரமாகக் கைகட்டி நின்று கொண்டான். திறந்த வீட்டில் நாய் நுழைவது போல ஆபிஸ் அறைக்குள் நுழைந்தான் வேலுசாமி. “ஏய் யாரப்பா நீயி? எதுவோ நுழையிற மாதிரி உள்ளார வந்துட்டு இருக்கே?”
“நாயின்னு சொல்லுங்க முதுலாளி … ஏழப்பட்டவங்க நாயிதான” என்றான். “யார்ரா நீ? கலாட்டா பண்ண வந்துருக்கியா இல்ல வேல கீல கேட்டுட்டு வந்து இருக்கியா? அப்புடின்னு கேளுங்க முதலாளி… இப்பிடி பேயி அடிச்சாப்புடி நிக்குறீங்களே … டேய் தம்பி அங்க ஏன் கேட்டுகிட்ட காவலாளி மாதிரி நிக்கே? வந்து முதலாளிகிட்ட மூஞ்சக் காட்டு ராசா .. டப்புனு புரிஞ்சுக்குவாரு ..” என்றான். இவன் அழைப்பைத் தட்டாமல் பையனும் ஆபிஸ் படியருகே வந்து நின்றான். பையனைப் பார்த்ததும் முதலாளி உசார் ஆனார். “என்னடா, அடிக்க ஆள் கூட்டிட்டு வந்துட்டியா …?” என்றார்.
“தம்பிக்கு அண்ணன் நான்தானுங்க முதலாளி .. ஊர்ல என்னை வேலுசாமின்னு கூப்புடுவாங்க… எனக்கு இன்னொரு பேரும் இருக்குதுங்க மொதுலாளி…” என்றான். “அப்பா டீ!” என பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். “வச்சுட்டுப் போ” என்றார் முதலாளி. “என்னடா தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனா.. பாட்ஷா வாடா நீயி…” “வந்துட்டுப் போற பாப்பா உங்க பாப்பாவா முதலாளி .. நல்லாயிருக்குது .. இப்பப் பாத்திங்கனாக்க… தம்பிக்கு ஆயிரம் ரூவா இப்பவே குடுத்துட்டீங்னா .. வேல்சாமி இதே மொகத்தோட சந்தோசமா போயிடுவான் .. இல்லேன்னா .. என்னோட இன்னொரு மொகத்தே பார்க்க வேண்டி இருக்கும். என்ன மொதலாளி, பாத்துட்டே இருக்கீங்க.. சட்டுபுட்டுனு டிராவை நீக்கி காசெக் கையில குடுங்க… முதலாளி” என்றபடி சுவற்றிலிருந்த சுவிட்ச் போர்டு அருகே இருந்த மெயின் சுவிட்ச்சை ஆப் செய்தான். ஓடிக்கொண்டிருந்த லேத் மிசின்கள் தடதடத்து நின்றன.
முதலாளி டிராவைத் திறந்து ஏழு நூறு ரூவாய் தாள்களை எண்ணிக் கொடுத்தார். “பத்தாதுங்க முதலாளி என்னோட ரேட்டு ஐநூறு ரூவா ஆகுதுங்க… அதப் போயி தம்பிகிட்ட புடுங்கறது நாகரிகமில்லீங்க அதையும் எடுத்துக் குடுத்துடுங்க.. இந்த மெசினப் பத்தி எல்லாம் எனக்கொண்ணும் தெரியாதுங்க… எமுட்டு வெலைன்னுகூட தெரியாதுங்க .. ஆனா” இவன் பேசப் பேச முதலாளி மேலும் ஐந்து தாள்களை நீட்ட அதுவும் இவன் கைக்கு வந்தது. “அப்ப நான் புறப்படறனுங்க முதலாளி.. எதுனாப் பிரச்சனை இருந்தா … நம்ப கையில உடுங்க .. நாம் பாத்துக்கிடறன். நடப்பா தம்பி. அதான் தங்கமான முதலாளி குடுத்துருவாரு துட்டென்னு சொன்னன்ல.. கெளம்பு, நிமிசம் நிக்கப்புடாது.” தம்பி கையில் ஐந்து நோட்டுகளைத் திணித்துவிட்டு, “நீ போயி வேற பட்டறை பாரு. நான் இப்பிடிக்கா போறேன்” என பமீலா பிராந்தி கடை நோக்கி நடையிட்டான்.
தலை கிண்னென்று இருந்தது! மேதண்ணி துளி பெறை ஊத்தினால் நல்லா இருக்குமென்றிருந்தது. நினைப்பிலேயே சுந்தரு டீக்கடை பக்கம் ஒதுங்கினான்.
“என்ன வேல்சாமி, நேத்து நீ வருவீன்ட்டு காத்திருந்தேன். ஏமாத்திப் புட்டியே” என்றான் சுந்தரு. “காசக் கண்டா காலு நேரா ஒயின் ஷாப்புலதான் போயி நிக்குது.. அது தொலையுது உடு. ஸ்ட்ராங்கா ஒரு டீ மொதல்ல போடு” என்றான். “கடை பாக்கிய குடுத்திருந்தீன்னா கூட நான் துளி நேத்து பெறை அடிச்சிருப்பேன்.” “என்ன கடை பாக்கியா? உனக்கெல்லாம் பிரச்சனையே வராது பாரு .. அன்னைக்கி வேலுசாமி வேலுசாமின்னு வருவீங்க. எவ்ளோ தரணும் பிசாத்து இந்தா அம்பது ரூவா இருக்கு, வெச்சிக்க… நான் முனுசாமி கிட்ட டீ குடிச்சிக்கறேன் .. .”
“என்னா வேலுசாமி அதுக்குள்ளார கோவிச்சுக்கிட்டே… சும்மா என்ன சொல்றேன்னு பார்க்கத்தான் கேட்டேன். இந்தா புடி டீயெ.” டம்ளரை வாங்கியவன் டீயோடு வெளியே எறிந்தான். “இது உனக்கு லாஸ்ட் வார்னிங். டம்ளரை வீசினாப்புடி உன்னை ரோட்ல தூக்கி வீச வெகு நேரம் ஆவாது …’
“என்ன வேல்சாமி இதுக்குப் போயி இப்புடி பண்ணிப்புட்டியே.”
“நிப்பாட்டு உன்னுத… எந்த ஊர்ல இருந்து வந்திருக்கே தெரியுமா? பொழைக்க வந்த பயதானேடா நீ…? ஏன்டா நேரங்காலம் தெரியாமெ வேல்சாமிய டென்சன் பண்றீங்க? பாத்து பதனமா தொழிலை நடத்து…”இவன் கடையிலிருந்து வெளியேறினான்.
“எங்க அண்ணே தேடறது உங்களை .. இப்பத்தான் உம்பட ஊடு போயிட்டு வாரென் .. அக்கா அவரு கெளம்பிப் போயி ஒரு மணி நேரமிருக்குமுனு சொல்லுச்சு … உங்களத் தேடித்தான் வந்தேன்” என்றபடி சைக்கிளை நிப்பாட்டினான் சேகர்.
“ஏன்டா உனக்கு இன்னிக்கு டூட்டி இல்ல ? எதுனா பிரச்சனையா? என்னெத் தேடிட்டு வந்திருக்கே?” என்றான் இவனும். “பிரச்சனையெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே.. அதுக்குதா உங்களைத் தேடி வந்தேன். அன்னிக்கு ஒரு தபா கூட்டிட்டு போறன்னு நீங்க சொன்னீங்களே … பணம் ரெடி பண்ணீட்டு வாடான்னீங்களே … மறந்துட்டீங்களா?”
“அடப்பாவி அதுக்கா வந்தே? மணி பத்துதானடா இருக்கும் … உனக்கு இப்பவேவா வேணும்? சரி சரி உம்பட ஆசை… நேரா பமீலா ஒயின்ஸ் உடு. ஒரு கோட்டர் சாப்புட்டு யோசனை பண்றேன்.”
“என்னண்ணே யோசனை பண்றேன்னு சொல்றீங்க?”
“ஆமாடா.. அது உள்ளார போனாத்தான் என் மண்டை கிளை கிளையாப் பிரியும், மூளை வேலையே செய்யும்.. நான் பாருக்குள்ளார போயி நிக்கேன் .. அதா அந்த மட்டன் கடையில் ஒரு கிலோ சொல்லிடு. போறப்ப வாங்கிட்டு போயிடலாம்…வெட்டி வெச்சிருவான்! “ என இவன் நகர்ந்தான்.
மட்டன் கடையில் உடனே கையோடு கட்டித்தருவதாய்க்கூறி, தொடையை அறுத்து பீஸ் போட்டான். சேகர் ப்ளாஸ்டிக் பையில் வாங்கிக்கொண்டான். நேரே பாருக்குள் நுழைந்தான். “என்ன சேகரு, மட்டன் வாங்கிட்டியா… எசவில்லாம காத்தால் இருந்து திரிஞ்சேன் .. கோட்டரக் கொண்டா …” என இவனிடம் பிடுங்கி பாதி பாதி டம்ளரில் ஊற்றினான் வேல்சாமி … ஆளுக்கு ஆள் சியர்ஸ் சொல்லி ஒரு ஆப் பாட்டிலும் ஊற்றிக்கொண்டார்கள். “ஒரு ஹாப்பாட்டிலும் கோட்டரும் … இதே பிராண்டுல வாங்கிக்க… சைக்கிள எடுத்துட்டு வா. நான் முன்னாடி பெட்டிக்கடையில ஒரு பழம் புட்டு சாப்டுட்டு இருக்கேன்” என வெளியேறினான்.
சேகர் இவன் கூறியது மாதிரியே வாங்கி இடுப்பில் சொருவிக் கொண்டு சைக்கிளை உருட்டினான். “அப்புடியே அந்த கெழக்கு பக்க சந்துல கடைசி ஊடு வரைக்கும் உருட்டீட்டே வா…” என்றபடி இவனுடன் இணைந்துகொண்டான் வேல்சாமியும். ரயில் இன்ஜின் புகை மாதிரி அவன் மூக்கிலிருந்து கணேஷ் பீடி புகை வந்துகொண்டேயிருந்தது. “ஏண்ணே, பார்ட்டி ஊட்டுல இருக்குமா? இல்லே ஸ்பின்னிங் மில்லுக்கு நூல் போடப் போயிருக்குமா?”
“என்னடா அபசகுனம் புடிச்சாப்ல கேட்குறே? காரியம் ஆவும்னு மனசுல நெனச்சுக்கற பழக்கமே இல்லியா? இருக்கும் கெடைக்கும்னு நெனைக்கணும்டா … ஊதாரிப்பய … அவ எந்த ஸ்பின்னிங் மில்லுக்கும் வேலைக்கிப் போகமாட்டா… ரப்பர் மாதிரி கெடா பொம்பளை … சந்தெ சந்தெக்கி காய்கறி ஏவாரம் பண்ணிட்டு இருந்தா… நீ எப்பாச்சிம் நம்ப சந்தையிலயே அவளப் பாத்திருப்பே … ஆளப் பாத்தின்னா அட இவளான்னு உனக்குத் தோணும் … அவகூட இப்ப பெருசு இல்ல … அவ ஊட்டுக்கு பொம்பளைக நிறைய அப்பப்ப வந்து தங்கிட்டுப் போகும்கள் … அப்பிடி இருந்தா உனக்கு லக்குதான். அவ பையன் வேற இருக்கான். அவன் வேலைக்கி போகாம ஊட்டுல கெடந்தா தான் பிரச்சனை. உனக்கு பெப்பெப்பேதான். இதா இதான் ஊடு. கதவைப் போயி தட்டு சைக்கிள இப்பிடி ஓரமா உட்டு பூட்டீரு…”
சேகர் சைக்கிளைப் பூட்டிவிட்டு வந்து தட்டினான். “நான் வேலு வந்து இருக்கன் ராசாத்தி. கதவெத் தொற” வேலு ஓரமாய் நின்று கூவினான். கதவு திறக்கப்பட்டது! நீக்கியவுடன் “இதாரு” என கண்களாலேயே வேலுவைக் கேட்டாள் ராசாத்தி. “எந்தம்பி உன்னப் பாக்கணுமின்னு நச்சரிப்பு… இழுத்தபடி, ராசாத்தி சந்தெப் பக்கம் ஆள ரொம்ப நாளா காணம்? வீட்டுலயே நிறைய பாத்துடறியா?”
“அவ அவ கெடக்கா நீ, வேற வேலுசாமி.. போன வாரம் முச்சூடும் ஒடம்புக்கு முடியில. காச்ச, தலவலி… ஆமா திடீர்னு செத்துப்போனாளா இருக்காளான்னு பாக்க வ்ந்தியா? ஆளே தட்டுப்படுலியே. . . சரி சரக்கு கொண்டாந்தியா? இருந்தா குடு. கொஞ்சம் ஊத்திக்கிட்டாதான் தெம்பு கெடைச்சாப்பிடி இருக்கும்”
“சரக்கென்ன சரக்கு ஆட்டுக்கறியே ஒரு கிலோ வெட்டீட்டு வந்திருக்கேன் .. தம்பி அந்த ஆப் பாட்டில குடுத்துடு, மட்டன் பொட்டலத்தியும் குடுத்துடு” என்றான். “ஒரு கிலோவா வாங்கிட்டு வந்தீங்க மட்டன்? எனக்காச்சு… உங்களுக்கு ?”
“எங்களுக்கு எதுக்கு கறி? இப்பத்தான தின்னுட்டு வர்றோம்… நீயே ஆக்கித் தின்னு . மொத சரக்க துளி ஊத்திக்கோ ராசாத்தி” என்றான். பெரிய சில்வர் டம்ளரில் ஊற்றி மடமட என எதுவும் கலக்காமல் குடித்தாள் ராசாத்தி. கூடவே இன்னொரு டம்ளர் ஊற்றி உடனேயே குடித்தாள். டம்ளரை சொய்ங் என உட்கார்ந்து இருந்த வேலுவிடம் சுண்டிவிட்டாள். “ஏத்தத்தப் பார்ரா தம்பி” என வேலு டம்ளரைப் பிடித்து தம்பியிடம் இருந்த கோட்டரையும் வாங்கிக்கொண்டான். ராசாத்தி கறிப்பையை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் நழுவிப் போனாள். வேலு கோட்டரைத் திருகி டம்ளரில் ஊற்றிக்கொண்டு இவனைப் பார்த்தான். “அப்புறம் ராசாத்தி நீ மட்டும் இருக்கே, வேற எவுளுகளுமே இல்லியா? பையனை வேற காணம்? ஒரு வெங்காயத்த எடுத்து வீசு.”
“நேத்துதான் ரெண்டு பேரு போனாளுக… பையன் பெரிசாயிட் டான். ஆரு இவுளுகன்னு கேக்கான் … வெங்காயத்த வீசிட்டேன். எடுத்துக்கோ… பையன் மில்லுக்குத்தான் போறான்.. காத்தால் போனா ராத்திரி எட்டு மணிக்காட்டதான் வருவான். ஒரு வாரம் பாத்தீனாக்க ராத்திரி போனான்னா வெடிஞ்ச பின்னாடிதான் வருவான்… ஆமா உந்தம்பி என்ன மோட்டு வளையவே வெறிச்சுட்டு உக்காந்துட்டு இருக்குது! இந்த முழி முழிக்குது உள்ளார வரச் சொல்லு, கூடமாட வெங்காயம் தொழிக்கன்னு ஆவட்டும் …” என்றாள். வேலுசாமி டம்ளரைக் காலி செய்தான். வெங்காயத்தைக் கடித்துக்கொண்டான், “உலகத்துல யாரும் செய்யாததையா செய்யப் போறே.. போ, போயி அக்கா கூடயே உக்காந்து ரெண்டு பேரும் தொழி போங்க ..” சேகர் எழுந்து நழுவுவது இவனுக்கு அரை மப்பில் தெரிந்தது. அப்படியே சாய்ந்துகொண்டு கைகளைத் தலைக்குக் கொடுத்து விட்டத்தைப் பார்த்தான் வேலுசாமி.
♦♦♦♦♦♦
திரையில் பாண்டியராஜன் அங்குமிங்கும் தம்பிகளோடு சுற்றிக் கொண்டிருந்தான். வேலு கால்களை முன்சீட்டின் மேலே வைத்துக் கொண்டு சாய்ந்து கிடந்தான். இடைவேளை விட்டபோது சேகர் வேலுவை எழுப்பிப் பார்த்திருந்தான். அவன் எழுந்தபாடில்லை. ராசாத்தி வீட்டிலிருந்து கிளம்பியபோது தெளிவாய் வேலு இருப்பது மாதிரிதான் தோன்றியது. ஆனால் இப்போது மப்பில் கிடக்கிறானா … இல்லை நிஜமான தூக்கமா என்பது சேகருக்குப் புரியவில்லை. இருந்த மீதியை தியேட்டரினுள் வந்தபோதே பாத்ரூமில் ஊற்றிக் கொண்டான். படம் வேறு முடியும் தருவாயில் இருந்தது! படமும் முடிந்தது! வேலுவை தியேட்டரை விட்டு எழுப்பி அகற்றிக்கொண்டு வருவதற்குள் போதுமென்றாகிவிட்டது சேகருக்கு!
“அப்புறம் போலாமா… அவிங்கவிங்க வீட்டுக்கு” என்றான் வேலு. “நீங்க நெறையா குடிப்பீங்கன்னு இன்னொரு கோட்டர வாங்கி வெச்சிருந்தேன் அண்ணே. அதுக்குள்ள பீஸ் போயிட்டீங்க…’
“பீசும் போகுல ஒண்ணும் போகுல சேகரு. நேத்து சாப்புடல ஒண்ணும்… இன்னிக்கு காத்தால இருந்து வயித்துக்குள்ளார ஒண்ணுமில்ல… ஆமா உனக்கு ராசாத்தி ஊட்ல காரியம் ஆச்சில்ல.”. “அதெல்லாம் ஆச்சுண்ணே… இதையே பல தடவெ கேட்டுட்டீங்க… நானும் ஆச்சு ஆச்சுன்னு பல தடவெ சொல்லிட்டேன்.”
“ஒவ்வொருக்கா ஏமாத்திப் போடுவா அவ … அப்பறம் நீ சினிமா பார்க்கணும்னு சொன்னே . மூணு மணி நேரம் என்ன பண்றதுன்னு தூங்கிட்டேன் .. மணி ஆறுக்கும் மேல இருக்கும் … அந்த கோட்டர குடு… அந்த தள்ளுவண்டிக்காரன்கிட்ட ரெண்டு இட்லி போட்டுட்டு போலாம்.” இருவரும் நகர்ந்தார்கள். சேகர் மெதுவாக ஆரம்பித்தான். “அண்ணே கேக்கறன்னு தப்பா நெனைக்கப் புடாது … படம் பாத்தம்ல அதுல ஷகிலா வந்தாங்க… மத்தியானம் போனம்ல அவங்களாட்டதான் இருந்தாங்க… படம் பாத்துட்டு இருக்கறப்ப மறுபடி போயிட்டு ஊட்டுக்கு போயிடலாம்னு தோணிச்சு…” என்றான். வேலு சட்டினியில் இட்லியைத் தொட்டு கவுக் கவுக்கென வீசிக்கொண்டிருந்தான். தட்டத்தை பக்கெட்டினருகில் வீசிவிட்டு கோட்டரைத் திருகி அப்படியே பாதியைக் குடித்துவிட்டு மூடி போட்டு அடி பாக்கெட்டில் சொருவிக் கொண்டான். “நட போலாம்.”
சேகர் வேலுவைப் பின்தொடர்ந்தான். இந்த முறை பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிக்கொண்டு வேலு, “நீ சைக்கிளை இங்கியே நிப்பாட்டிட்டு போ… நான் இதா இந்த கடையாண்ட நின்னுட்டு இருக்கேன். இல்லன்னா எதுத்தாப்ல ஹோட்டல்ல இருக்கேன் … போ போயி எம் பேர சொல்லு போ…” என்றான். சேகர் நழுவினான். வேலு பெட்டிக்கடை காடா விளக்கில் சிகரெட்டைப் பற்றிக்கொண்டு புகை விட்டான். ஒரு வெற்றிலை மெல்லலாம் என்றிருந்தது! சேகருக்குக் காரியம் ஆகிவிட்டது! அவனிடம் மிச்சமிருக்கும் பணம் எவ்வளவு என்று இவனுக்குத் தெரியவில்லை. வந்தவுடன் நூறு இருநூறு இருந்தால் கழற்றிக்கொள்ள வேண்டும். ஊட்டுக்கு சும்மா போனால் ‘என்னத்தப் போயி சம்பாதிச்சுட்டு வந்து கழட்டுனே போ’ என சம்சாரம் திட்டுவாள்.
சிகரெட்டை சாக்கடைக்குள் சுண்டிவிட்டு, இன்னும் பாதி சரக்கை ஹோட்டலில் சென்று ஊற்றிக்கொள்ளலாமென நகர்ந்தான். சூடாக பரோட்டா தயாராகிக்கொண்டிருந்தது! ஆம்லெட் ஆர்டர் கொடுத்துவிட்டு உள்ளே கடைசிக் கோடியில் சென்று அமர்ந்தான். டம்ளர் ஒன்றை சப்ளையரிடம் கொண்டு வரச் சொல்லி மீதத்தை டம்ளரில் ஊற்றி பாட்டிலை டேபிள் ஓரம் தள்ளினான்.
ஆம்லெட் வந்ததும் அதை முகர்ந்துகொண்டே சரக்கை ஊற்றிக்கொண்டான். டம்ளரை டேபிளில் வைக்க, எதிரே சேகர் அமர்ந்து… “ஒரே ரகளை ஆயிப்போச்சுண்ணே” என்றான். “என்னடா ரகளை?” என்றானிவன். “எவன்டா உங்கொண்ணன்? ங்கோத்தா வேலுசாமியா? யார்ரா அவன்? நீ ஆர்ரா… இங்க வந்து ராசாத்தி ராசாத்தினுட்டு? ஓடிப் போயிரு. போலீஸ்க்கு போன் பண்ணிருவன் … ஓட்றா நாயே … வேலுசாமியாமா மத்தியானம் அவன்கூட நீட்டிட்டு இவன் வந்தானாம்”னு கண்டபடி எடுத்தெறிஞ்சு அந்தப் பொம்பள பேசுதுண்ணே … நெறைய கூட்டமாயிடிச்சு… நைஸா ஓடியாந்துட்டேன்” என்றான் சேகர்.
வேலுவுக்குத் தலை கிர் என்று இருந்தது! தள்ளாடி எழுந்து “வெளிய காத்தோட்டமா நிப்பம் வா” என தோளில் கை போட்டு சேகர வெளியே கூட்டி வந்தான். “இப்ப என்ன பண்ணலாம்ங்றே?” என்றான். “மத்தியானம் நாம் போனத மறந்துட்டு உங்களையும் என்னையும் கண்டமானிக்கி பேசறாண்ணே … போயி மிதிச்சிட்டு போலாம்” என்றான். “அடத்தம்பி அந்த மாதிரி பொம்பளைக அந்த மாதிரிதான் நடந்துக்குவாளுக… இந்தக் காதுல வாங்கி இந்தக் காதுல உட்டுடணும் … உனக்கு காரியம் ஆன பின்னாடி அங்க என்ன வேலை? வேற பார்ட்டி கீது இருந்துருப்பான் … இல்ல அவ பையன் கீது இருந்துருப்பான் … உன்னையெல்லாம் அவுளுக்கு கரெக்டா ஞாபகம் இருக்கும் … எங்க பார்த்தாலும் “அப்புறங்கண்ணு எங்க ஊட்டுப் பக்கமெல்லாம் காணம்”னு கேப்பா … அன்னிக்கி நீ என்ன முடிவு செய்யிறியோ அன்னிக்கி தெரியும் நீ உருப்படி ஆவியா வெளங்காமப் போவியான்னு … சரி பாக்கெட்டுல பணம் நூறு எரநூறு இருந்தா குடுத்துட்டு போயி ஊட்ல நல்ல புள்ளையா நடந்துக்கோ…” கையில் இரண்டு தாள்களைத் திணித்து விட்டு சேகர் சைக்கிளை நோக்கிச் சென்றான். வேலு தாள்களை பாக்கெட்டில் சொருவிக்கொண்டு வீடு கிளம்பினான்.
எழுதியவர்
-
வா. மு. கோமு என்ற பெயரில் எழுதி வரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தஎழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர் என்றும், மனதில் நினைத்ததை எழுத்தில் சொல்லத் தயங்காத எழுத்தாளர் எனவும் பெயர் பெற்றவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. 1991- ஆம் ஆண்டு முதல் ‘நடுகல்’ எனும் இலக்கியச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவரது நூல்கள் :
அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு,
அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் ,
அழுவாச்சி வருதுங்சாமி - சிறுகதைத் தொகுப்பு,
எட்றா வண்டிய -நாவல் ,
என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள்,
கள்ளி - நாவல் ,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம்,
சகுந்தலா வந்தாள் - நாவல்,
சயனம்- நாவல் ,
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் ,
சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்,
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் ,
பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் ,
பிலோமி டீச்சர் - சிறுகதைகள் ,
மங்கலத்து தேவதைகள்- நாவல் ,
மண்பூதம் - சிறுகதைகள்,
மரப்பல்லி - நாவல் ,
நாயுருவி- நாவல்,
தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள்,
தானாவதி - நாவல்,
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் ,
வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்,
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் ,
மாஸ்டர், ஒரு சாதா டீ - சிறுகதைகள்,
லவ் யு டி - சிறுகதைகள்
காயாவனம்: சிறார் குறுநாவல்,
மாயத் தொப்பி - சிறார் கதைகள்.
இதுவரை.
- சிறார் கதைகள்29 July 2024மகிழனும் இமயவல்லியும் | குறுநாவல்
- சிறார் இலக்கியம்18 January 2024மூக்குடைபட்ட கரடி
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023நான் முதலாளி ஆகணும்!
- சிறுகதை24 April 2023நானெல்லாம் கவரிமான் சாதி
யப்பா தல கோமு சாரே. படிச்சி முடிச்சிதும் எனக்கும் கிர்ர்ன்னு ஏறிடுச்சு. நல்லா இருக்குங்க கதை. இந்த கதை எங்கயோ படிச்ச மாதிரியும் இருக்கு.