1 March 2024

ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத் தண்ணீரோடிருந்த குத்துச்சட்டியும், பால் வாங்க வைத்திருந்த பால் யானமும் திண்ணையிலேயேயிருந்தது. திண்ணையின் பக்கவாட்டில் கிறுக்கியதுபோக மிச்சக் கலர் சாக்பீஸ் துண்டுகள் முற்றத்தில் அங்குமிங்குமாயிருந்தது. நாலைந்து நாட்களாய் முற்றத்திலிருந்து நகர்த்தப்படாத சைக்கிள் கேரியரில் திலகராஜ் கடையின் கட்டைப்பை சுருட்டித் திணிக்கப்பட்டிருந்தது. சும்மா சாத்திய வீட்டின் வாசலில் மூன்றும் நான்குமாய்க் கூடி நின்று கடந்த இரண்டு மணிநேரமாய்ப் பேசித்தீர்த்தது போன மிச்சத்தை மௌனமாய்க் கரைத்துக் கொண்டிருந்தவர்களின் கவலையையறியாதவர்களாய் அவர்தம் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கடந்த நான்கு நாட்களாகவே உடுப்புக்காரங்களும் உறவுக்காரங்களும் வந்ததும் போனதுமாகத்தானிருந்தனர். உடைந்து நொறுங்கிப் போன சமயங்களில் உறவுக்காரர்கள் வருவது ஆறுதலுக்கென்றால் உடுப்புகள் வரும்போதெல்லாம் பயம் கலந்த எதிர்பார்ப்போடு சிலம்பரசியுடன் பக்கத்திலிருக்கும் பெண்களும் சேர்ந்து வந்து தகவல் கேட்க வந்துவிடுவார்கள். ஒவ்வொரு முறை வரும்போதும் பேருக்கு ஏதோ ரெண்டு கேள்விக்கு பதிலோடு சேர்த்து, வந்து போன செலவாக நூறு, இருநூறைச் சேர்த்து வாங்கி விட்டுப் போவார்கள். எழவுக்குப் பல்லிளிக்கும் வெட்டியானுக்கு அளப்பது கூடப் புண்ணியம்.

சிலம்பரசியும் தினமும் காலையில் பிள்ளையைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு அவளறிந்த வரைக்கும் ஊர் ஊராய், கோபாலு போகுமிடம் வருமிடமெல்லாம் சென்று தேடிவிட்டுப் பொழுதிருட்டத்தான் வீடு வருவாள். அவனில்லாமல் வண்டியோட்ட வக்கில்லாமலில்லை. வேண்டாததாயினும் வேண்டாமல் விட யாருக்குத்தான் மனது வரும்? தேடியோடி வெறுங்கையோடு வீடு திரும்பும் இரவெல்லாம் கண்ணீர் குடித்து எரியும் சிலம்பரசி வீட்டு விளக்கு அணையாமல் ஒளிரும். இப்படிக் கேவலப்பட்டுப் போன தன் வாழ்க்கையை எண்ணி அழுது தீரும் இரவுகளில் தூங்க நேரமேது? பற்றாக்குறைக்கு அந்த மாதவியின் சொந்தபந்தங்கள் தினமும் வந்து வாசலில் நின்று வாய்க்கு வந்தபடி கத்திவிட்டுப் போகையில் கயிறைப் போட்டுக் கொள்ளத்தான் தோன்றும். பெற்ற பிள்ளை நாதியில்லாமல் போகுமே என்ற ஒரே காரணத்தினால் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறாள் சிலம்பரசி.

அவள் மட்டும் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவா செய்தாள்? காய்ந்துபோன மானாவாரிப் புஞ்சையில் ஆசையூற்றிக் காதல் வளர்த்தவள், பெற்றோர் நிர்பந்தத்தால் காதலை உதறி வேண்டா வெறுப்பாய்தான் கோபாலை மணக்க சம்மதித்தாள். மானாவாரிச் செடி உருவிக் கொண்டாவரும்? தாய்மண்ணைத் தன்னோடு பெயர்த்துக் கொண்டுதான் வரும். இருந்தும் தன் ஆசாபாசங்களைத் தன்னுள் புதைத்து இவனே வாழ்க்கை என்றுதான் ஒப்புக் கொடுத்திருந்தாள். பெற்றோர் மேல் விரக்தியிருந்தாலும் புது வாழ்வில் கணவன் தன்னைப் புரிந்து கொள்பவனாய், தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்பவனாய் இருப்பான் என்று எல்லாப் பெண்களும் எதிர்பார்ப்பதைப் போல்தான் எதிர்பார்த்திருந்தாள். எத்தனை பேருக்கு எதிர்பார்த்ததெல்லாம் எதிர்பார்த்தபடியே கிடைத்துவிடுகிறது.

திருமணமாகி வந்ததிலிருந்தே கூந்தலின் நீளமறிந்து குடுமியிட்டுக் கொள்ளப் பழகிக் கொண்டாள் சிலம்பரசி. அதுவும் மனத்தால் குறைபட்டவள், எல்லா ஏமாற்றங்களையும் சகித்துப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும். கொத்தனார் வேலை பார்க்கும் கோபாலின் வருமானத்தில் அரிசியும், காய்கறியும் மட்டும் வாராவாரம் வந்து சேரும். வக்கனையாய் ஆசைப்பட்டதைக் கணவனிடம் கேட்டதில்லை. வேலை அலுப்பில் குடித்துவிட்டு வரும் அவனுக்கும் வாய்ருசியெல்லாம் மட்டுப்படவில்லை. கடமைக்கென வந்திருந்து அவன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவளும் தோராயமாய் ஒன்பதாம் மாதத்திலேயே சுமதியைப் பெற்றுப் போட்டாள். அவளிருந்ததால் குறையில்லாமல் பிள்ளையும் வளர்ந்தது. அம்மா வீட்டில் வாங்கித் தந்த தையல்மிசினில் வரும் வருமானம், அனாவசியமாய் கோபாலிடம் கையேந்தாத நிலையிலேயே நின்று கொள்ளப் பழக்கியிருந்தது.

ஏமாற்று வாழ்க்கைதான். ஊரிலும் உறவிலும் அடையாளங் காணாத வகையில் சாமர்த்தியமாய் செலுத்தப் பழகிவிட்டிருந்தாள். அநாவசிய சாமர்த்தியம்தான். ஊராரறிந்தாலும் என்ன பிரயோஜனம்? ஆயினும் அந்த சாமர்த்தியம் கூட கோபாலிற்கு இல்லை. இல்லையென்பதைவிட, அவனுக்குத் தேவைப்படவில்லை. அரசல் புரசலாக உடன் வேலை பார்க்கும் சித்தாள் பொம்பளையுடன் குடித்தனம் நடத்துவதாகச் சேதி. குருட்டு விரிசலை நோண்டி நோண்டிக் கண்ணாடியை உடைப்பானேன்..? காதில் கேட்டதை வாய்வழியாய்க் கடத்திவிடாமல் காதோடே பூட்டிக் கொண்டாள்.

சிலம்பரசியின் அமைதி கோபாலிற்குத் தோதாய்ப் போனது. வேலை முடிந்து பொழுதிருட்ட வீடு திரும்புபவன், நாள்தாண்டத் தொடங்கினான். கரடி புகுந்த சில பூஜை சமயங்களில் வழியில்லாமல் வந்து நடுச்சாமம் கதவைத் தட்டி பேய்பிடித்தவனாய் நிதானமில்லாமல் சிலம்பரசியின் மேல் விழுந்தெழுவான். மூன்றாம் வாசம் புரள்வதைப் படுக்கையறியாமலாயிருக்கும்? வந்த தடமறியாமல் விடிந்ததும் எழுந்து போவான். அன்றும் அப்படித்தான் விடியலில் புறப்பட்டுப் போனான். போகிறவர்கள் போகப்போவதையறிந்தால் போக்கற்றவர்கள் போகவிடுவார்களா? அவள் சக்களத்தி, அந்தச் சித்தாள் பெண் மாதவியின் குடும்பம் வந்து ஆத்திரத்தில் ஆட்டமாய் ஆடியபோதுதான் தெரியும் கோபாலு மாதவியுடன் ஓடிப்போன சேதி.

மூன்று நாளாய் இப்படி உண்ணாமல் உறங்காமல் அலைந்து திரிந்ததில் நேற்று மதியம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மயங்கி விழுந்தவளை பெரியாஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய் வைத்தியம் பார்த்து இன்று காலையில்தான் வீடு வந்து சேர்ந்தாள். தெருவே சேர்ந்து வந்து அவளுக்கு ஆறுதலும் புத்திமதியும் கால்வயிற்றுக் கஞ்சியும் தந்தது. விவரந்தெரியாத மூன்றே வயது மகள் சுமதி தன் போக்கில் இருந்து கொள்கிறாள். சரியாக மாலை விளக்கு வைக்கும் நேரத்திற்கு மட்டும், “ம்மா அப்பாக் காணும்?” என்று கேட்பாள். மற்ற பொழுதுகளில் திண்ணையிலமர்ந்து தெருவைப் பராக்குப் பார்த்துக்கொண்டு இருந்து கொள்வாள்.

இன்றும் மாலை பிள்ளை திண்ணையில் விளையாடிக் கொண்டிருக்க, கோழிகளைக் கூண்டிலடைத்துவிட்டு, பால் யானத்தைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தவளை, வந்தழைத்துச் சென்றார் கோபாலின் மூத்த அண்ணன். நான்கு நாள் நிறைவில் தன் தவறையுணர்ந்து திரும்பிவந்துவிட்ட கோபாலை அவர் வீட்டில் வைத்து புத்தி சொல்வதாய் தெரிவித்தார். பிள்ளையும் கையுமாய் சிலம்பரசி அங்கு நுழைகையில் சன்னல் வழி கிசுகிசுக்கும் சேலைகளின் பார்வையில் திண்ணை கொள்ளா வேட்டிகளின் பஞ்சாயத்து கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. அறிவுரைகளெல்லாம் முடிந்து இனியாவது திருந்தி வாழ வலியுறுத்தி கோபாலிடம் வாக்குறுதியும் பெறப்பட்டது. ஆண்களெல்லாம் அதில் சமரசமடைந்து கொண்டபடியால் சிலம்பரசியின் வாழ்க்கையைக் காப்பாற்றிவிட்ட பெருமை அத்தனை ஆண்கண்களிலும்.

“எம்மா செலம்பு! ஆம்பள இப்பிடித் தப்புப் பண்ணுறது ஒண்ணும் புதுசில்ல… எல்லா எடத்துலயும் நடக்கறதுதான். நாங்க ஆம்பளைங்கல்லாம் சேந்து அவனையும் சத்தம் போட்ருக்கோம். இன்னமேல் ஒழுக்கமா இருப்பேன்ருக்கான்… ஆம்பள வெளிச்சோத்துக்கு எல போடுதான்னா; அவன் வாய்க்கு வீட்டுச் சாப்பாடு ஒப்பலனுதான அர்த்தம். அதுக்காக உன்னக் கொற சொல்லுறதா நெனச்சுக்க வேணாம். அதேமாரி, முழுத்தப்பயும் அந்தப்பய மேலயும் போட்டுற முடியாதுல்லா? நீ இதல்லாம் பெருசு பண்ணி வாழ்க்கையக் கெடுத்துக்காத… கொஞ்சமாச்சும்  கட்டுனவன் மனங்கோணம நடந்துக்கப் பாரு.. பொம்பளப் பிள்ளையப் பெத்து வச்சிருக்கன்றத மனசுல வச்சுக்கோ… பெறகு பிள்ளைய வச்சிட்டு ஒத்தையில நீதான் லோள் படணும். இந்தப் பிரச்சனைய ரெண்டு பேரும் ஒரு கெட்டகனவா நெனச்சு மறந்துட்டு ஒண்ணாச் சேந்து வாழப் பாருங்க.. என்ன!!!?” குடும்பப் பெரியவர் மீசையைத் தடவிக் கொண்டே சொல்லும் போது மீறவா முடியும்.. அத்தனை வக்காளத்துக்கும் வாய்திறக்காமல் பரிதாபமாய் நிற்கும் செல்வத்தைப் பார்த்து பாவப்பட்டவளாய் அவளும் சம்மதித்தாள்.

“பெரியவுங்கலாம் சேந்து சொல்லும் போது நான் என்ன மறுத்தா பேசிறப் போறேன்? என் நல்லதுக்கு தான நீங்களும் பேசுவீங்க! பெரிய்யா சொன்னது மாதிரி நடந்ததக் கெட்ட கனவா நெனச்சு நான் மறந்துருதேன்! இதே கூட்டத்துல நாலு வருசமா என்னத் தூங்கவிடாம பண்ணிட்டிருக்குற இன்னொரு கெட்டகனவையும் சொல்லிடறேன் பெரியய்யா… என் மவ சுமதி, கோபாலுக்குப் பொறந்தவயில்ல… கல்யாணத்துக்கு முன்னவே எனக்கு இன்னொருத்தங் கூடப் பழக்கம் இருந்துச்சு… அது காங்கத்தாளாமத்தான் என் அப்பன் ஆத்தா இதுக்குக் கட்டி வச்சாங்க… அந்தாளுக்குப் பெறந்தவதான் எம்மவ சுமதி. இதுவுங்கூட இன்னொரு ஆம்பள பண்ணின தப்புத்தான் பெரியய்யா… பெரியவுக உங்க எல்லார் முன்ன வச்சு இதயும் அவரு மன்னிச்சு பெருந்தன்மையா ஏத்துக்குவார்னா, அவரோட சேந்து வாழ நானும் தயாராயிருக்கேன்…” பதிலுக்கு வழியில்லாமல் திண்ணை வேட்டிகளின் கறைகள் பற்றியெரிவதைக் கண்ணிமையாமல் புன்னகைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் சிலம்பரசி..!


 

எழுதியவர்

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Prabakaran
1 year ago

மிக அருமை

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x