27 April 2024

சாயங்காலத்து மேகாத்து ஓலமிட்டபடியே புழுதியைப் புரட்டிக் கொட்டியிருந்தது. வெயில் தாழ்ந்து பொழுதிருட்டும் நேரம் பௌர்ணமி வெளிச்சம் கீழக்குடியின் ஆம்பள மடத்தை நிறைத்துக் கொண்டிருந்து. ஆம்பள மடத்தின் தெற்குச் சுவரின் விளக்குமாடத்திற்கு நேரெதிரிலிருந்த அந்தச் சுமை தாங்கிக் கல்லைப் பார்த்து ஏற்றப்பட்டிருந்த விளக்கு மேகாத்து இசைக்கேற்றபடி நளினமாய் வளைந்தாடிக் கொண்டிருந்தது. மடத்தின் கூரையைத் தாங்கிய மரத்தூண்களின் கீழ்ப் பாதியில், பெரும் போராட்டத்தின் விளைவாய் எழுதப் படிக்கக் கற்ற பிள்ளைகள், தத்தம் காதல் தேவதைகளின் பெயரையெழுதிப் பார்த்து மகிழ்ந்த தடம் மட்டும் மிச்சமிருந்தது.

பௌர்ணமியோ அமாவாசையோ ஆம்பள மடத்து வெளிச்சத்தையும் இருட்டையும் குடித்தே இரவைக் கழிக்கும் கூட்டத்தினர் ஒரிருவராய் மடத்துக்கு வரத் தொடங்கியிருந்தனர். தத்தம் தோள்த் துண்டுகளை உதறிக் காற்றிறைத்திருந்த புழுதியைத் தட்டிவிட்டு, மடத்தில் தத்தம் இடங்களை அன்றைய ஓரிரவிற்குத் தனதாக்கிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட விவரம் தெரிந்த சிறியவர் தொடங்கி வயது முதிர்ந்தோர் வரை என எல்லா வயதினரின் இரவுத் தூங்குமிடமாயிருந்தது அந்த மடம். தீப்பெட்டி ஆலையிலோ பட்டாசு ஆலையிலோ நாள் முழுக்க மாடாய் உழைத்து விட்டு, இரவில் ஒற்றைக் குடிசையில் ஒண்டிக் குடித்தனம் செய்யும் கீழக்குடியின் புது மற்றும் பழைய சோடிகளுக்கும் கூட வீடுகளில் அந்தத் தனிமை தேவைப்பட்டது. தவிர இரவு நேர ஊரின் பாதுகாப்பிற்கும் அப்படியொரு அமைப்புமுறை தேவையாயிருந்தது.

ஐந்தாறு வருடத்திற்கு முன்பு கீழக்குடியின் தெற்கே கிடை போட்டிருந்த குருவன், நடுச்சாமத்தில் அரவங்கேட்டுச் சுதாரித்துப் பார்க்கப்போக, ஆடு களவாட வந்தவர்கள் குருவனைக் கம்பியால் தாக்கிவிட்டு கிடை வேலியைத் தாண்டி ஓட முயலுகையில், குருவனின் அலறல் சத்தங்கேட்டு ஆம்பள மடத்தில் படுத்திருந்தவர்களெல்லாம் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு கிடையைச் சுற்றி வளைத்து சிக்கிய கிடாக்கள்ளர்களை் இருட்டில் வைத்தே கண்முன் தெரியாமல் தாக்கினர். பதறியடித்து இருட்டுக்குள் ஓடியவர்கள் விடிந்ததும் தெற்கேயிருந்து மொதுமொதுவென ஊருக்குள்ளிறங்கி, ஆத்திராத்திரமாய்க் கண்ணில்பட்ட கீழக்குடி ஆண்களையெல்லாம் தாக்கியதும்தான் எல்லோருக்கும் விளங்கியது திருட வந்தவர்கள் சொக்கங்குளத்து இளவட்டங்களென்று. இருட்டில் ஆள் தெரியாமல் செய்துவிட்டதாக அந்தத் திருடர்களிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானத்திற்கு ஊர்ச் செலவாய் ஒரு வெள்ளாட்டையும் கொடுத்தனுப்பினர். ஆனால் சொக்கங்குளத்தினர் கீழக்குடியில் களவாடப் போய் அடிவாங்கிய சேதி சுற்றுப்பட்டியெல்லாம் பரவியது. இரவு முழுக்கக் கீழக்குடியின் காவலாயிருக்கும் ஆம்பளமடத்தைப் பார்த்து அதன்பின் எந்தக் கள்ளனும் வந்ததில்லை. எந்தக் களவும் போனதில்லை.

நேரமாக ஆக அதிகரிக்கும் தலைகளுக்கேற்ப சிரிப்பும் கும்மாளமுமாய் மடம் கலகலக்கும். அந்தந்த வயதுக் குழுக்கள் அவரவர் கூட்டாளிகளோடு கேலியும் அரட்டையுமாய் அமர்க்களப்படும். ஊரின் அந்தந்த நாளின் முக்கிய நிகழ்வுகளோடு தொடங்கும் பேச்சுக்கள் அங்கு தொட்டு இங்கு தொட்டு ஒரு கட்டத்தில் மயிலுத்தாத்தா கையில் வந்து நிற்கும். அதுவரை தனித்தனிக் குழுக்களில் திளைத்திருந்த காதுகள் மோப்பம் பிடித்து தாத்தாவின் பேச்சுத் தொடங்கிய கூட்டத்தில் இணைந்துகொள்ளும். சலித்துப் போன பெருசுகளும் கூட தத்தம் விரிப்புகளிலிருந்தபடி மயிலுத்தாத்தாவிடம் காதுகளைக் கடன்கொடுத்துவிட்டுக் காலாட்டிக் கொண்டிருக்கும்.

மயிலுத்தாத்தாவிற்குத் தெரியாத கதைகளே ஊரிலிருக்காது. ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு கதையிருக்கும் அவரிடம். தினமொன்றாய் கழிந்தும் தீர்ந்துவிடாத இரவுகளைப் போல் அவரிடமும் கீழக்குடிக்குப் பாத்தியப்பட்ட கதைகள் தீர்ந்திடாதிருந்தன. சில கதைகள் உண்மைக் கதைகளாயிருக்கும்; சில புனைவாயிருக்கும்; இன்னும் சில உண்மைப் பிரச்சனைக்கு அவரது புனைவுத் தீர்வு தாங்கியதாயிருக்கும். கதை கேட்பவர்கள் உண்மை எது, புனைவு எது என்பதைக் கண்டறிய விடாத கதை சொல்லும் உத்தி அவருக்கு அத்துப்படி… எந்தக் கதையும் அவர்களின் சுற்றுப்பட்டியில் ஏதோவொரு காலகட்டத்தில் நடந்ததாகவே தொடங்கும், புராண இதிகாசங்களையெல்லாம் தாண்டி உள்ளூர்க்கதைகளுக்கென இருக்கும் மவுசு தனி தான். கதை முடிந்த இரவு அந்தக் கதாபாத்திரங்களின் நினைவுகள் மடத்தின் கூரையின் கீழ் உலாவிக் கொண்டிருக்கும்.

மயிலுத்தாத்தா வந்தமர்ந்ததும் மடத்தின் தெற்குத்திண்ணையில் படுத்திருக்கும் பிள்ளைகளெல்லாம் வந்து அவரைச் சூழ்ந்து கொள்வர். பிள்ளைகளின் அன்றாடங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் முக்கியத்துவம் குறையாமல் கேட்பார். மடத்தில் மயிலுத்தாத்தாவிடம் சொல்வதற்கென்றே தம் உப்புச்சப்பில்லாத அன்றாடத்தில் சில சுவாரசிய மசாலாக்களைத் தூவி சமைத்துப் பரிமாறும் குழந்தைகளுமுண்டு. சமயங்களில் ஏதோ மனக்கவலையில் மடத்திற்கு வரும் பெரியவர்களும் கூட அந்தக் கூட்டத்தோடே கதை கேட்க அமர்ந்து தம் கவலை மறந்துவிடுவதுண்டு.

எப்போதும் நேரம்பட மடத்திற்கு வந்து சேர்ந்துவிடும் மயிலுத்தாத்தா, இன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தார். வழக்கம்போல சட்டையில்லாத தோளில் ஒரு சிவப்புத் துண்டு மட்டும் போட்டிருந்தார். கையில் தூக்குச்சட்டியில் மொச்சைப்பயிறு; மலையாண்டி கடையில் வாங்கியிருப்பார் போலிருந்தது. அதைப் பிள்ளைகளிடம் தந்துவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்து எதிரிலிருந்த சுமை தாங்கிக் கல்லையே வெறித்துக் கொண்டிருந்தார். வழக்கமாய் கடவாய்ப்பல் ஓட்டை தெரியும் சிரிப்பு காணவில்லை. அப்போதுதான் தலைக்கு ஊத்தியிருப்பார் போலிருந்தது. வழுக்கைத்தலை தொடங்கி மேலெல்லாம் வியர்வை முத்துக்கள். பிள்ளைகளுக்கு எங்கிருந்து தொடங்குவதென்பதில்லிருந்த குழப்பத்தை உடைத்து ஒருவன் தொடங்கினான் “மயிலு…!”.

அந்த அழைப்பிற்கான பதிலாயில்லாமல் “அந்தா நிக்கிதே அது என்ன கல்லு, தெரியுமாடா?” பொதுவாய் ஒரு கேள்வி கேட்டு வைத்தார்.

பிள்ளைகள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு அவர்களறிந்திருந்ததை பதில் சொல்ல வேண்டிய அவசரத்துக்கு ஒரு வார்த்தையில் “சுமை தாங்கிக் கல்லு”. என்றனர்

“அப்டினா?” முதல் கேள்வி வெறுமனே அந்தப் பதிலுக்காகக் கேட்கப்படவில்லையென்பதை உணர்த்தியது அந்தக் கிளைக்கேள்வி.

“முன்னாடி காலத்துல எல்லாம் நடந்துதான ஊருக்கெல்லாம் போவாங்க… அப்ப… தலச்சொமையாத் தூக்கியாந்தத எறக்கக் கூடமாட ஆளில்லையினாலும் இந்தக் கல்லுமேல லேசா எறக்கிவச்சிட்டுச் செத்த நேரம் எளப்பெடுத்துக்கத்தான்…” மயிலுத்தாத்தா எதிர்பார்த்தபடி இந்தமுறை விளக்கமாய்ச் சொன்னான்.

“பெறகெதுக்கு அந்தக் கல்லுக்குத் தெனம் வெளக்கு? நாலு வருசத்துக்கு ஒருக்க திருவிழா?”

இன்றைக்கான கதை பிள்ளைகளுக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் அது குறித்து தாங்களறிந்து வைத்திருந்ததை ஒவ்வொருவராய்க் கூறினர்…

“அது நம்மூர் மாடத்தி கல்லுல்லா…! ”

“மாடத்தி மாசமாயிருந்து செத்துப் போனாளாம். அதான் அவ யாவகமா சொக்கங்குள சமீன் வீட்டாளுக வச்சிக் குடுத்துருக்காக… இப்பவும் எல்லாத் திருவிழாக்கும் மொதச் சிறப்பு சமீன் வீட்டோடதுதான!?’

“சிறப்பு மட்டுமா வரும? சமீனோட ஆண்வாரிசுகள்லாம் தவறாம வந்து, நம்மாளுகன்னு கூட யோசிக்காம இந்த மாடத்தி கல்லு கால்ல விழுந்து கும்பிட்டு மண்ணெடுத்துப் பூசிட்டுப் போவாங்க… ”

எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டே, “ம்ம்… வேறென்னல்லாம் தெரியும் மாடத்தி திருவிழா பத்தி?”

“பொங்கலுக்கு மொதநாள் தெக்க போய் மண்ணெடுத்தாந்து, அந்த மண்ணுலயே சாமி சோடிப்பாங்க… அன்னைக்கு ரவைக்கு சக்திக் கரகம் எடுத்தாந்து எல்லாம் சாமியாடுவாங்க…”

“சாமியாடி செல்லைய்யா சாட்டையெடுத்து பதினோறு அடி அடிச்சுக்குவாறு..”

“பெறகு தரையில விழுந்து ‘தண்ணி.. தண்ணீ’னு கேப்பாரு. சமீன் வீட்டம்மா மஞ்சள் தண்ணியெடுத்துட்டுப் போய் ஊத்தும்… கைபடாம வாயில குடிப்பாரு”

“சோடிச்ச மண் சிலைய அன்னைக்கு ராத்திரியே சுமைதாங்கிக் கல்லுக்குப் பின்னாடி பொதச்சிருவாங்க… அந்த இடத்துக்கு மேல ஆட்டைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டு கழுத்தறுத்து ரத்தம் வடியவிடுவாங்க… மறுநாள் காலையில மாடத்தி கல்லுக்கு பொங்க வைப்போம்…”

பிள்ளைகளின் பதில்களைக் கவனியாமலில்லை, குழந்தைகளும் இளவட்டங்களுமாய்ப் பெருகியிருந்த கூட்டத்தைக் காதில் வாங்கிக் கொண்டே, கதையை தொடங்குவதற்கான விநாடியைக் கணித்துக் கொண்டே அமைதியாயிருந்தார். அவரின் அமைதி சபையிலிருந்த ஓரிரு சத்தங்களையும் முடித்துவைத்து அவர்களின் ஆர்வத்தை ஒருமுகப்படுத்திக் கூட்டத்தினிடையிலும் ஒரு அமைதியைக் கொண்டு வந்திருந்த போது அந்த அமைதியில் தொந்தரவுக்குள்ளான மடத்தின் மேற்கு மூலையில் நீண்ட வெண்தாடியை நீவிக் கொண்டு காலாட்டியபடி படுத்திருந்த ஊர்ப் பெரியாம்பள திரவியம் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்து விட்டுப் படுத்ததும் கதையைத் தொடங்கினார் மயிலுத்தாத்தா.

“நம்ம மாடத்தி இருக்காளே? அழகுன்னா அழகு அப்பிடியொரு அழகு. கீழக்குடிப் பொம்பளைகளுக்கே அவ மேல சொல்ல முடியாத பொறாமையாயிருக்குமாம்!”

“நம்ம ஊருல அம்புட்டுச் செவத்த பொம்பளயா மயிலு?”

“அதான் நீ இன்னும் ஒழுங்காப் பிடிச்சு மோளத் தெரியாமயிருக்கங்கேன்! அழகுக்கும் நெறத்துக்கும் என்ன சம்பந்தம்? அவளக்கணக்குட்டா கருந்தோல் கலையான மொகங்கொண்ட பொம்பள கிட்ட நீ சொல்லுத செவத்தத் தோல்க்காரிக எல்லாம் தவங்கெடக்கணும். அப்படியொரு கலை, வாளிப்பான தேகம்; நல்ல உசரம்; அடத்தி கொரயாம இடுப்புக்குக் கீழ வரைக்கும் தொங்குற முடியக்கண்டு பெருமூச்சு விடுவாளுகளாம். அதான் கண்ணு; அதான் மூக்கு; அவ்ளோதான் சிரிப்பு ன்னு அளந்து வடிச்ச சிலையாட்டம் இருப்பாளாம்.”. எல்லோரின் எண்ணத்திலும் அவரவர் கற்பனைக்கேற்ற ஒரு மாடத்தி உருவமானாள்; சொல்லி வைத்தாற்போல் அந்த எல்லா உருவங்களுமே அவரவர்களுக்கு அழகானதாகவேயிருந்தது.

“பிள்ள மேல உயிரையே வச்சிருந்தான் அவ அப்பன் பரமன். விவரந்தெரியத் தாயிழந்த மாடத்தியவும் பெத்ததுக ரெண்டயும் கழியலுக்குப் பறிகுடுத்த அண்ணன் மகன் மாடனையும் பரமன் ஒத்தையாவே வளத்தான். பிள்ளைகளுக்காகவே கடைசி வரைக்கும் வேறதாரங் கூட கட்டிக்காம இருந்தான். மாடத்தி அப்பங்காரன் கிழிச்ச கோட்டத்தாண்ட மாட்டா. அப்பனுக்குப் பிள்ளையாவும் ஆக்கிப் போட்டு ஆத்தா போலவும் பாத்துக்குவா. அவ்வளோ கூறுக்காரப் பிள்ள… மாடன் பாசக்காரன். மாமனுக்கொன்னுன்னா பொறுத்துக்க மாட்டான்.”

“கீழக்குடி சனங்க பூரா அப்ப சொக்கங்குள சமீனுக்குத்தான் வேல பாத்துச்சுங்க. காட்டு வேல, எடுப்பு வேல, எல்லாம்… சமீன்தார் ரகுபதி; அவர்தான் ஒட்டுமொத்த கீழக்குடிக்கும் படியளக்குறவரு. சனங்களும் அதுக்குக் கொறயில்லாம மாடாத்தான் உளைச்சதுக… ஆனா மனுசன் பொம்பள விசியத்துல கட்டுப்பாடில்லாமத் திரிஞ்சிருக்காரு. கண்ணுட்ட பாத்து கைய நீட்டிட்டாருன்னா போதும், அது யாரு தங்கச்சியோ யாரு பொஞ்சாதியோ கணக்குக் கெடயாது. அன்னைக்கே அரம்மனைக்கு வந்து சேரணும். அவராப் பாத்து எப்பத் திருப்பியனுப்புவாரோ அப்பத்தான். திரும்பி அரகொர உசுராவும் வரும்; பெணமாவும் வரும். அப்பிடிப் போய் சீரழிஞ்சு திருப்பி வந்த பெண்டுக எதுவும் சீர்ப்பட்டு வாழ்ந்ததும் கெடயாது”

“சமீன் ஒருதரம் காடுகரையெல்லாம் பாத்தபடிக்க குதிரையில வந்துகிருக்க; எதித்தாப்ல தண்ணிக்கொடமுங் கையுமா மாடத்தி வர; பிள்ளையப் பாத்ததும் சமீனுக்கு நிலை கொள்ளல… கூட வந்த கங்காணியக் கூட்டு காதக்கடிக்க; கங்காணி சொன்ன சேதியக் கேட்டு மாடத்தியும் அவுகப்பனும் இடிஞ்சு போய் உக்காந்துட்டுதுக…”

“பொழுதிருட்டக் காட்டுக்கு விறகு வெட்டப் போன மாடன் வீடுதிரும்பவும்தான் பரமனுக்கு நல்ல யோசனை தோணிருக்கு! நடந்த விசயத்தச் சொல்லி, கையோட மாடத்திய மாடனுக்குக் கட்டி வச்சு நேரங்கடத்தாம ரெண்டு பேத்தயும் ராத்திரியோட ராத்திரியா ஊரவிட்டே அனுப்பிவச்சிட்டாரு”

“சமீன்தார் சும்மாவா விட்டாரு?”

“அதெப்டி விடுவான்? மறுநாக் காலையில பஞ்சாயத்துல பரமன கட்டி வச்சு பதினோறு சவுக்கடி குடுத்து ஊரவிட்டும் தள்ளி வச்சிட்டாரு.. அதோட நிக்காம ஊரவிட்டு ஓடினவளக் கண்டுபிடிச்சுக் கூட்டியார ஆளுங்களயும் அனுப்பிவச்சான்”

“நாளாச்சு, வாரமாச்சு மாசமாச்சு, வருசமுமாகிருச்சு.. மாடனையும் மாடத்தியவும் கண்டுபிடிக்கவே முடியல சமீனால… பரமனையும் சமீன்தாரையும் தவிர ஊரே மாடத்திய மறந்துருச்சி..”

‘நாலு வருசங்கழிச்சு வயித்துச் சூலியா தெக்கயிருந்து ஊருக்குத் திரும்பி வருதுக மாடனும் மாடத்தியும்; மாடன் வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமா அப்பனப் பாத்தே ஆகணும்னு சொல்லவும், வயித்துப்பிள்ளக்காரி ஆசைய மறுக்கமாட்டாம இவனும் கூட்டிகிட்டு காட்டுவழியா ஊருக்குள்ள வந்துக்கிட்டிருக்கான்”

“இந்த விசயம் இந்த சண்டாளன் சமீனுக்குத் தெரிஞ்சு போய், அவன் ஆளுகளோட வந்து காட்டு எல்லையிலயே மடக்கிட்டான். பிள்ளத்தாச்சியப் பிடிச்சு வச்சிட்டு மாடன அடிச்சுக் குத்துயிரும் கொல உயிருமாப் போட்டானுங்க… மாடத்தியக் காட்டி அடிக்கச் சொன்னா கர்ப்பிணிப்பிள்ளயக் கைநீட்ட ஆளுங்க யோசிச்சானுங்க… வந்த வெலத்துல சமீன்தாரே எந்திச்சு வந்து குண்டாங்குதிராப் போட்டு அடிச்சிருக்கான். அடிதாளாம மாடத்தி அழுத சத்தம் இன்னமட்டும்னில்ல… பாவம் தண்ணி தண்ணினு அனத்துனவ தலைக்கு மேல மாடனத் தலகீழாக் கெட்டி கழுத்தறுத்துட்டானுக… வலியும் வேதனையுமா நொந்தே செத்துப் போயிட்டா மாடத்தியும்”

மயான அமைதியிலிருந்த மடத்திலிருந்தவர்களின் இதயத்துடிப்பு மட்டும் அவரவர் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்க, வழிந்து கொண்டிருந்த கண்ணீரை வேட்டியின் உள்முந்தியில் துடைத்து விட்டுக் கனத்துப் போயிருந்த தொண்டையையும் செருமிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் மயிலுத்தாத்தா…

“பொம்பளைக்கு அக்ரவம் பண்ணினவன் அனுபவிச்சுதான ஆவணும்! அதுவும் மாடத்தி சித்ரவதைப்பட்டுச் செத்திருக்கா! சும்மா விடுவாளா? சமீனுக்குப் பயந்த கோளாறு மாதிரி வந்துட்டு… வாயால தின்னது எல்லாம் வைக்க எடமில்லாத மாதிரி வாயாலயும் வயித்தாலயும் தள்ளிருது. தூங்கணும்னு கண்ண மூடினா கண்ணுமுன்ன வந்து மாடத்தி அகோரமா நிக்கா… விடிய விடிய சமீன் அலறல் சத்தம் சொக்கங்குளம் முழுக்கக் கேட்டுகிட்டேயிருக்கும். நாளாச்சு, வாரமாச்சு, மாசமாச்சு, வருசமுமாகிருச்சு… சாகலாம்னு போனாக் கூட சாக விட மாட்டிக்கா மாடத்தி… போவாத கோயிலில்ல, பண்ணாத பூசையில்ல… கடைசியில மொத்தக் குடும்பமும் போய் பரமன் கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கவும், அவளே எனக்கு சுமைதாங்கிக் கல்லு ஊனுங்க, சமீன் குடும்பம் வந்து ஊரறிய அந்தக் கல்லு கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு மண்ணெடுத்துப் பூசிட்டு போங்கனு விதிச்சிருக்கா…”

“அவ்ளோ பெரிய கொடுமக்காரன மாடத்தி மன்னிச்சிருக்கக் கூடாது மயிலு! அவன் செஞ்சது மாதிரியே அவனையும் கதறக் கதற சாகடிச்சிருக்கணும்”

“அதான் அவ சாமி, நாம மனுசங்க… அவனுக்கு ஏண்டப்போ அவன் செஞ்சதயே தனக்கு ஏலுதுன்னு சாமியும் பண்ணலாமா?”

அந்தக் கேள்வி பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவரவர் படுக்கைக்குத் திரும்பிய எல்லாக் கண்களும் ஒருநொடி அந்தச் சுமைதாங்கிக் கல்லைப் பார்த்து ஆத்மார்த்தமாய் வணங்கின.


Courtesy – Art : Mrinal Dutt

எழுதியவர்

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x