28 May 2024

பொறுப்புத் துறப்பு :  இது பயணக் கட்டுரை அல்ல. அப்படித் தோன்றினால் அது உங்கள் கற்பனையே

பகுதி ஒன்று: ஒரு கனவின் தொடக்கம்

வெள்ளி காலை அலுவலகம் சென்றதுமே மாலை கிளம்பும் முன் முடித்தே ஆக வேண்டிய அன்றைய வேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டேன். ‘நீஸ்’ நகரத்தின் அலுவலகத்தில் இருந்த அந்த என் மேலாளரிடம் வார இறுதியில் ‘இத்தாலி’ செல்வதாக முன்னமே அறிவித்திருந்தேன். “நல்ல தேர்வு”, என வழிமொழிந்திருந்தார். அன்றைக்குச் சாயங்காலம் ஏழரை மணிக்கு விமானம், எனவே “மூன்றரை மணிக்கே கிளம்புகிறேன்”, எனச் சொல்லிவிட்டு, அன்றைய அலுவல்களை படபடவென்று முடிக்கலானேன். அங்கே இருந்த அணியில் புதிதாக வந்து சேர்ந்திருந்த என் பழைய அணியின் சக பெண் ஊழியர், அவர் இத்தாலி சென்ற அனுபவத்தைப் பத்து நிமிடங்களில் சொன்னதில், ‘வேட்டிகன்’ நகரத்தின், ‘செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா’ உப்பரிகையில் ஏறிக் காண வேண்டிய அந்நகரின் முழு அகலப் பரப்புக் காட்சி மட்டும் தான் என் நினைவிலேறியது.

காலை ‘காஃபி’ இடைவெளியில் அலுவலக வரவேற்புப் பெண்மணிகளிடம் பேசி அலுவலகக் குறைதூர மண்கலத்தை மூன்றரை மணிக்கு முன்பதிவு செய்து கொண்டேன். ஏற்கனவே தங்குமிட விமான நிலையக் கலச் சேவைக்கு ஐந்தரை மணிக்கு முன்பதிவு செய்திருந்தேன். தங்குமிடத்திலிருந்து நீஸ் விமான நிலையத்திற்கு அமைதியாக நடந்தே சென்றாலும் பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் மழை வந்தால் சிரமமாகி விடும் எனவே கார் பயணம் தான் சிறந்தது. அலுவலகத்தில் இருந்து ‘வேன்-இல் ‘கேன்ஸ் சுர் மெர்’ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ‘சேன் லாரான் து வேர்’ ரயில் நிலையம் அடைந்து, அங்கிருந்து நடந்து சென்று நான் தங்கியிருந்த ‘நோவோட்டெல் நீஸ் ஏரோபோர்ட் கேப் 3000’ விடுதியை அடையும் போது மாலை ஐந்து மணி. ஒரு குளியல் முடித்து, ஒரு காஃபி குடித்து, ஒரு பையில் தேவையான உடைமைகளைத் திணித்துக் கொண்டு கிளம்பினேன். ஆறு மணிக்கு விமான நிலையத்துள் நுழைந்து ‘ஈசிஜெட்’ விமானப் பயணிகள் வருகைப் பதிவிடத்திற்குச் சென்று பயணச் சீட்டைக் காட்டி அனுமதி அட்டை கேட்டதும் அந்தப் பெண்மணி என் ‘பாஸ்போர்ட்’-ஐப் புரட்டிப் பார்த்து “நீங்கள் பயணம் செய்ய முடியாது. உங்கள் ‘ஷென்கன் விசா’ முடிய இருக்கிறது” என்றார். நான் அதிர்ச்சி அடையாமல் அவரைப் பார்த்துப் புன்னகைத்து “ஆம், தெரியும், நன்றாகப் பாருங்கள் இன்னும் ஐந்து நாட்களில், அஃதாவது செப்டம்பர் இருபது இரண்டாயிரத்திப் பதினேழு அன்று முடிகிறது, அதனால் தான் இன்னும் ஒரு புதிப்பிக்கப்பட்ட ஷென்கென் விசா அடுத்த வருடம் ஆகஸ்ட் வரை எடுத்திருக்கிறேன், புரட்டிப் பாருங்கள்” என்றேன். சோதித்து விட்டு ஒரு வெட்கமான புன்னகையுடன் அனுமதி அட்டை கொடுத்து என்னை வழியனுப்பி வைத்தார் அந்தப் பெண்மணி.

விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனையின் நீண்ட வரிசையில் கடைசி ஆளாக நான் நிற்கும் போது ஆறரை மணி. ஏழரை மணிக்கு விமானத்துடன் நான் வானத்தில் இருக்க வேண்டும். விமானத்தைப் பிடித்து விடுவோமா என்ற பயம் வந்து இதயத் துடிப்பை அதிகரித்தது. பாதுகாப்புச் சோதனையில் எனக்கு வந்த சோதனை என் இடைவாரை அவிழ்த்ததும் என் காற்சட்டையும் கழண்டு கொள்ளப் பார்த்தது. ஒரு கையில் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டு சமாளித்தேன். இந்தப் பயணம் முழுவதும் இந்த மானப் பிரச்சனை நிகழ்ந்து கொண்டே இருந்தது. திரும்பியதும் முதலில் இப்போதைய இடுப்பளவிற்கு நாலு காற்சட்டை வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

விமானத்தில் சில இருக்கைகள் காலியாகத் தான் இருந்தன. ஜன்னலோரக் காலி இருக்கை ஒன்றில் விமானப் பணிப்பெண்ணிடம் அனுமதி வாங்கி அமரலாமா என யோசிப்பதற்குள் வேறொருவர் அங்கு அமர்ந்து விட்டார். பெண்கள் மட்டுமே சேர்ந்து பயணம் வந்திருந்த குடும்பம் ஒன்று அருகில் இருந்தது. அக்குடும்பத்திலிருந்த பத்து வயது மதிக்கத் தக்க ஒரு பெண் குழைந்தையை, அது அவசர கால வெளியேறும் வாயில் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததால், அந்த சன்னலோர இருக்கையில் பதினெட்டு வயதிற்குக் கீழுள்ளவர்கள் அமரக் கூடாது என விமானப் பணிப்பெண் சொல்ல, அந்தக் குழந்தை நொந்து போய் எழுந்தது. ஒரு பயணத்தில் சக பயணிகளை கவனிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு தான். அடுத்தவர் சந்தர்ப்பத்தில் நம்மை நாமே பொருத்திப் பார்த்து கவனிப்பது அதை விடச் சிறந்த மெய்ஞானப் பொழுதுபோக்கு.

என் இருக்கையின் வாரை அணிந்து கொண்டு கண்ணை மூடி ஒரு அரைத் தூக்கத்தில் நான் நுழைந்த அக்கணத்தில் எனக்கு என் ‘ரேஸ்ஃபேபர் (Resfeber)’ தொடங்கியது. ரேஸ்ஃபேபர் என்பது பயணிப்பதற்கு முன் நிகழும், பயணியின் சீரற்ற அமைதி குலைந்த அதிகப்படியான இதயத் துடிப்பைக் குறிக்கிறது; கவலை மற்றும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக ஒரு சிக்கலான நோயாக வெளிப்படக்கூடிய ஒரு வித ‘பயணக் காய்ச்சல்’ அது. ‘ஸ்வீடிஷ்’ மொழியிலிருந்து ஆங்கிலம் தத்தெடுத்துக் கொண்ட வார்த்தை இது. இப்படியாக ஒரு பயணி தெரிந்து வைத்திருக்க வேண்டிய சமகால பயண இலக்கியச் சொற்கள் சில என் மனதில் ஓடின. அதில் ஒன்று ‘ஓனிசம் (Onism)’ என்பது – இந்த பரந்து பட்ட உலகின் ஒரு சிறிய பகுதியைத் தான், வாழ்நாள் முழுவதும் பயணம் போனாலும், தரிசிக்க முடியும் எனும் விழிப்புணர்வினால் வரும் மெலிதான சோகத்தை குறிக்கும் சொல் இது.

‘ரோம்’ நகரத்தில் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களில் ‘லியோனார்டோ டா வின்சி-ஃப்யூமிசீனோ’ விமான நிலையத்தின் உள்ளேயே நான் தொலைந்து போனேன். லியோனார்டோ டா வின்சியைத் தெரியும், ‘ஃப்யூமிசீனோ’? அது ரோம் மாநகரத்தில் இந்த விமான நிலையம் இருக்கும் இந்த நகரத்தின் பெயர் என்று ‘கூகுள்’ மூலம் பிற்பாடு அறிந்து கொண்டேன். என் செல்பேசியில் இத்தாலி நாட்டின் செறிவட்டை (‘சிம்’) இல்லை. இணைய வசதியும் இல்லை. எங்காவது கம்பியில்லாத் தொடர்பின் அருகலை (‘ஒய்-ஃபை’) கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான். வெளியெறும் வாயிலைத் தேடியபடி மீண்டும் உட்புகும் வழியின் வேறு ஒரு துவாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கழித்துத் தான் பிரச்சினை உள்ளுணர்விற்கு உரைத்தது. ஒரு அங்காடிக்குச் சென்று அங்குள்ள பெண்ணிடம் கேட்டபோது நான் வந்த திசையிலேயே திரும்ப்பிப் போகச் சொன்னார். ரெண்டு தளங்கள் வேறு நம்பிக்கையோடு ஏறி வந்திருந்தேன். வெளியே செல்லும் திசையில் நடந்து கொண்டே விமான நிலையத்தின் ரயில் நிலையத்தைத் தேடினேன்.

வழித் தேடல்களில் கம்ப்யூட்டர் ‘ஜி’-யை மட்டுமே நான் நம்புவதில்லை, மனிதர் ‘ஜி’-யையும் ஆலோசிக்கத் தவறவே மாட்டேன். ஒரு செல்பேசி அங்காடியின் பெண்மணி ‘ஜி’-யைக் கேட்ட போது அவர் தானியங்கி பயணச்சீட்டு பெறுமிடத்தைக் காட்டினார். அங்கே இரண்டு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் இரண்டு சிறு வரிசைகளுடன் இருந்தன. அதை அந்த வரிசைகளில் இருந்த பெரும்பாலானோர் தேடித் தடவிக் கொண்டிருந்ததிலேயே அவர்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கும் புதியவர்கள் எனத் தெரிந்தது. ஒரு முதுகுப்பை தம்பதியர் பின் சென்று நின்றேன், அவர்கள் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்ததால். என் பின்னால் ரெண்டு ஜப்பானிய ஆடவர் வந்து சேர்ந்து கொண்டனர். கட்டுப்பை தம்பதியரிடம் அனுமதி பெற்று அவர்கள் சீட்டெடுப்பதை கவனித்தேன். நல்ல வேளை ‘ஃபிரான்ஸ்’ போல் இல்லாமல் இங்கே தானியங்கி எந்திரங்களில் ஆங்கிலமும் ஒரு தேர்வு. என் முறை வந்ததும் அவர்கள் செய்ததைப் போல எல்லாம் சரியாகச் செய்தபடியே ரயில் புறப்படும் நேரம் பார்த்தால் ஒன்பது இருபத்து ஐந்து. மணி பார்த்தால் அப்போது ஒன்பதே காலுக்கு பின் நகரும் அந்தப் பெரிய கடிகாரக் கால் வேகமாக ஓடத் தொடங்கியிருந்தது. அந்தக் கட்டுப்பை தம்பதியர் பின்னால் நானும் ஓடினேன். அவர்களும் ஏன் எல்லோரும் ரோம் நகரத்தின் மைய்யம் நோக்கித் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள் அப்போது – ஒரு வேளை அது தான் அன்றைய தினத்தின் கடைசி ரயிலோ என்னவோ.

இந்தப் பக்கம் இல்லை அந்தப் பக்கமா இல்லை எந்தப் பக்கம் தான் எனத் தீர்மானித்து நேர அழுத்தம் தரும் கூடுதல் வியர்வையில் தூரம் கரைந்து வெளியின் ஒரு துளி காணும் பொருட்டு விரையும் பதற்ற அனுபவம் ஒரு வித போதை தரக் கூடியது, பிறகு யோசித்துப் பார்க்கும் பொழுது. சரியான ரயில் மேடைக்குச் சென்று விட்டோம். அப்போது அங்கே காத்திருந்த ஒரு ரயில் கிளம்பிச் சென்றதைப் பார்த்ததும் அடக் கடவுளே என நினைத்த பொழுதே அது இன்னொரு ‘லியனார்டோ எக்ஸ்பிரஸ்’ எனப் புரிந்தது. இன்னுமொரு லியனார்டோ எக்ஸ்பிரஸ் ரயில் வந்து எங்களுக்காகவும் இன்னும் இந்த ரோம் ராத்திரியின் கைபிடிக்க நினைக்கும் யார் யாருக்கெல்லாமோ காத்திருந்தது. கட்டுப்பை தம்பதியர் குறிப்பாக இந்த முறையும் அந்தப் பெண்மணி அந்த ஆண்மகனை விட எப்போதும் போலவே அதிகத் தோழமையுடன் புன்னகைத்து “நாங்கள் சென்றமர்கிறோம், வந்து சேருங்கள்” என சொல்லிச் சென்றார்.

புகைக்க வேண்டும் போலிருந்தது. அந்த இடத்தில் புகைக்கலாமா எனத் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் ஒரு  இளம்பெண் புகைத்துக் கொண்டிருந்தாள். நான் நம்பிக்கையோடு அவளிடம் சென்று “தீ வேண்டும்”, எனக் கேட்டேன். அவள் தன் சிகரெட்டையே எனக்குக் கொடுத்தாள். “எனக்கு சிகரெட் வேண்டாம், தீ தான் வேண்டும்” என்றேன். “தீயை மட்டும் எடுத்துக் கொண்டு சிகரெட்டைத் திருப்பிக் கொடுங்கள்”, என அன்போடு சொன்னாள்.

ஊதிய புகை ரோமின் இரவைப் புணர்ந்த கணம் ரயில் கிளம்பச் சிணுங்கியது. சிகரெட்டை இழுத்து அணைத்து எறிந்து விட்டு ஒரு புணர்ச்சிப் பரவச உச்ச வெறுமையில் ரயிலேறினேன். உள்ளே செல்லும் பொழுது தான் அந்த தனித்த மனித முகத்தை கவனித்தேன் அது இந்திய முகம். தெற்கா, வடக்கா தெரியவில்லை. கருப்புக் காட்டன் ஜெர்கின், கையில் மடக்கிய குடை, எனைப் பார்த்ததும் என்னையும் தொற்றிக் கொண்ட ஒரு நட்புப் புன்னகையை வீசியது. மீசையற்ற, கண்ணாடியணிந்த அந்த முகம். என் வயது என ஊகித்தேன்.

ரெண்டடுக்கு இருக்கைகள் கொண்ட ரயில் ஊர்தி அது. ஜன்னலோரக் கீழடுக்கு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ரோமின் மைய்யத்தை நோக்கி ரயில் நகரத் தொடங்கியது. இன்னும் முப்பத்து ரெண்டு நிமிடங்களில் தன் இலக்கை அடைந்துவிடும் இந்த ரயில்.  இரவின் அரையிருள் காட்டிச் செல்லும் இத்தாலியத் தெருக்காட்சிகள் அவை எனது வீதிகள் தாம் எனத் தோன்றச் செய்து ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கின. அது என் தூக்கப் பிழையாகவும் இருக்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் வாசகம், அயல் தேசப் பயணிகளுக்கு மாபெரும் நம்பிக்கை அளிக்கக் கூடியது போல.

பகுதி ரெண்டு: எதுவும் ரோம் செல்லும் சாலை தான்

 ரோமா டெர்மினி ரயில் நிலையத்தில் இறங்கியதுமே மீண்டும் தொலைந்து போனேன். அச்சடித்துக் கொண்டு வந்த ‘கூகிள்’ வரைபடத்தை எடுத்து, செல்ல வேண்டிய விடுதியின் திசையைப் பார்த்தேன். நேராகச் சென்று இடம் வலம் நேர் வலம் நேர் வலம் செல்ல வேண்டும் என ஏதோ எழுதியிருந்தது. சரியாகப் புரிந்து கொண்டதான ஒரு அறிந்த குழப்பம் எனைச் செலுத்த அப்படியே நடந்து சென்று வெளி வாயிலுக்கு வந்து நடுத் தெருவில் நிற்கும் முன் ‘சிக்னல்’ விழுந்து நடைபாதையிலேயே நின்றேன். என்னருகே ஒரு அழகிய ஆடவர் அவ்வப்பொழுது தெறித்த சிதைந்த ஆங்கிலத்தில் ஆனால் பெரும்பாலும் இத்தாலிய மொழியில் செல்பேசியில் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். மனைவி என்பது என் அனுமானம். அவர் அலைவரிசை தடைபட்டுத் தன் பேச்சை நிறுத்தியதுமே நான் முந்திக் கொண்டு. என் வரைபடத்தை நீட்டி எனக்கு வழி சொல்லக் கேட்டேன்.

 “ஆஹ் … நீங்கள் இடது வெளி வாயிலைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமே. ரோமா டெர்மினி ரயில் நிலையத்திற்கு மூன்று வெளியேரும் வாயில்கள் இருக்கின்றன. நேர், இடம், வலம். நீங்கள் நேராக வந்துவிட்டீர்கள். இந்தத் தங்கும் விடுதிக்கு இடப்புற வாயில் வழி வெளியேறியிருக்க வேண்டும். ஒன்றும் பிரச்சனையில்லை திரும்பிச் சென்று இடப் புறம் திரும்பி இந்த வரைபடத்தைத் தொடருங்கள்”, என்றார். மீண்டும் அழைப்பு வந்து,  “மன்னிக்கவும், நான் போயே ஆக வேண்டும்”, என என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவர் வருடம் சில முறை மனைவியைப் பார்க்க லீவு கிடைத்தால் வருபவர் போல என யோசித்துப் புரிந்து கொண்டேன். தவிர, சரி என்பதற்கு ஆயிரம் பாதைகள். தவறு என்பதற்கும் ஆயிரம் பாதைகள், என்பதையும்.

 ஆனால் அவர் சொற்படி அப்படியே செய்தேன். பாதம் நோக நடந்து திரும்பிச் சென்று வெளியேறும் அந்த இடப்புற வாயில் வரும் முன் அந்த நேர்முக வாயிலில் இருந்த ஒரு ‘போலீஸ்’ ‘ஜீ’-யையும் கேட்க, அவரும்  அதையே சொன்னார். வெளியே வந்து தன்னம்பிக்கையுடன்  இடப்புறம் திரும்பி நேராக நடக்கலானேன். வழியில், வீடு திரும்புவோர், தம் வழி தமக்கு அறிந்த பயணியர், பிச்சைக்காரர்கள், திருடர் போலத் தோற்றம் கொண்டோர், எனக் கண்ட பலருள் வேகமாகச் சென்ற இளம் தம்பதியர் ஒருவரைப் பின் தொடர்ந்தேன், அவர்களும் என்னைப் போல வழி தவறிய ஆடுகள் எனப் புரியாமல். இடது புறம் வந்த ஒரு மேம்பால அடிவாரத்தில் அவர்களை வழிமறித்து என் வரைபடத்தை நீட்டினேன். “மன்னிக்கவும், எங்களுக்குத் தெரியாது”, எனச் சற்று பயந்த முகத்துடன் சொல்லி நகர்ந்தனர். ‘சரி’, என அவர்களைப் பின் தொடர்ந்தேன். இந்த இரவில் எனக்கு இந்த அயல்வெளியில் கிடைத்த ஒரே மனிதத் துணைகள் என்பதால் அல்ல அந்த வழி தான் அன்றைக்கு நான் விடுதி பேறு அடையும் வழி என நான் நம்பியதால்.

 அவ்வப்போது கையிலிருந்து வரைபடத்தை எல்லா திசைகளிலும் திருப்பிப் பார்த்தபடியே நீண்ட தூரம் சென்றும் என் விடுதி தென்படாததால், இதற்கு மேல் தாங்காது என அருகிருந்த ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைய எத்தனித்தபோது அங்கே வயதான ஒரு தம்பதியர் வெளியில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களை அணுகினேன். என் தங்குமிட வரைபடத்தைக் காட்டி “இங்கே எப்படிச் செல்ல வேண்டும், உதவுவீர்களா, நான் ஊருக்குப் புதிது”, என வினவினேன். அவர் அந்த வரைபடத்தைப் பார்த்த உடன், “மகனே (ஆம் அப்படியே தான் எனை விளித்தார்), நீ இந்த வரைபடத்தில் உள்ள இந்த இடத்திற்குச் செல்ல, முதலில் இந்த வரைபடத்திற்குள் செல்ல வேண்டும். நீ வரைபடத்தைத் தாண்டி அதற்கு வெளியே ரெண்டு கிலோமீட்டர் வந்துவிட்டாய்”, என்றார்.

 மணி பார்த்தேன். செல்பேசி கடிகாரம். இரவு பத்து முப்பத்து ஐந்து என்றது.  ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் கிறுக்கன் மாதிரி ஐந்து நிமிடங்களில் சென்றடைய வேண்டிய இடத்தைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். ‘பியாட்சா டெல் ச்சின்குசன்டோ’ சாலையில் சென்றிருக்க வேண்டும் நான். ஆனால் ‘ஜ்யோவன்னி ஜ்யோலிட்டி’ சாலை வழி வந்து விட்டேன். ஆனால் எல்லா சாலைகளும் ரோமுக்கே இட்டுச் செல்லும் எனும் பொன்மொழியின் படி எனக்கு இதுவரை வழிகாட்டியவர்கள் சொன்ன எல்லா வழியிலும் என் தங்குமிடத்தைச் சென்றடையலாம். ஆனால் தொலைந்த போன ஒருவனுக்குக் காட்டிய வழி என்பது தான் அவனுக்குச் சரி. நான் தான் என் ரேஸ்ஃபேபர் காரணமாகக் கூகுள் வரைபடத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. இறுதியாக எனக்கு வழி காட்டியவர் சொன்ன நான் வந்த திசையில் நேரெதிரே திரும்பி நேராகப் போய் இடம் திரும்பி வலம் திரும்பியவுடன் என் தங்குமிடம் வலப்பக்கம் இன்னும் பத்து அடிகளில் நியான் விளக்கு எழுத்து ஒளிகளில் சில துளிகள் இழந்தாலும் ‘ஹோட்டல் ஜில்லியோ டெல்’ஒபெரா’ தான் அது என்பதை சிரமப்படாமல் கண்டுபிடிக்க முடிந்தபோது என் ரேஸ்ஃபேபர் ஒரு முடிவிற்கு வந்தது.

பகுதி மூன்று: விடுதி பேறு

 விடுதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த அந்த வயதான வரவேற்பாளரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் தான் விடுதி மேலாளர் என அவர் தோரணையிலேயே தெரிந்தது. வழக்கமாக, அந்தத் தங்கும் விடுதியில், நுழைவுப் பதிவு மற்றும் வெளியேற்றப் பதிவு நேரங்கள் முறையே மதியம் ரெண்டு மணி மற்றும் மதியம் பன்னிரெண்டு மணி. ஆனால் பதிவு செய்யும்போதே இரவு பத்து மணிக்குத் தான் வருவேன் எனச் சொல்லி முன்கூட்டியே பணமும் செலுத்தி விட்டதால் தொந்தரவு இல்லை. ஒரு நீண்ட பல பக்கப் படிவத்தை அவர் என்னிடம் கொடுத்து “இதோ இங்கே, இங்கே, இங்கே, கையெழுத்துகள் இடுங்கள், நான் பிறகு படிவத்தை நிரப்பிக் கொள்கிறேன்”, என்றார். கையெழுத்திட்டுக் கொடுத்ததும் ‘பாஸ்போர்ட்’ அசலைக் கேட்டார். கொடுத்ததும் வாங்கி வைத்துக் கொண்டு அறையின் சாவியைக் கொடுத்து “மூன்றாவது தளம், அறை எண் 312, வரும் வழியிலேயே மின்-ஏணியைப் பார்த்திருப்பீர்கள் தானே, அதில் செல்லுங்கள், பாஸ்போர்ட்டைப் பிறகு வந்து பெற்றுக் கொள்ளுங்கள். படிவத்தை நிரப்ப நேரமாகும்”, என்றார்.

 நான் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தேன். ‘என்னது என் பாஸ்போர்ட் அசலை உங்களிடம் விட்டுச் செல்வதா’, என யோசித்துக் கேட்டே விட்டேன் “ஏன், ஏன், விட்டுச் சென்றால் தான் என்ன, ஒரு பயணத்தின் முதல் சாகசத் தொடக்கம் இது என நினைக்க மாட்டீர்களா, இந்த உங்கள் பாஸ்போர்ட் உங்களிடம் இருப்பதை விட என்னிடம் அதிகப் பாதுகாப்பாக இருக்கும், தவிர நிஜக் காரணம் படிவத்தைப் பாஸ்போர்ட் பார்த்து நிரப்ப நாழியாகும்”. சரி என நான் அவரிடம் அந்த இடத்தின் ‘ஒய்-ஃபை’ மற்றும் கடவுச் சொல்லை வாங்கிவிட்டு, திரும்பி நடந்து சென்று மின்-ஏணி ஏறி என் ரூமைக் கண்டு பக்கத்து அறையின் புணர்ச்சி முயக்க முனகல் சப்தத்தைக் கடந்து என் அறையைத் திறந்து உள் நுழைந்து படுக்கையில் அமர்ந்தும் கூட அறிமுகம் அற்ற ஒரு அயல் தேசத்தில் என் பாஸ்போர்ட் அசலை வேறு ஒருவரிடம் நம்பி விட்டு வந்திருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

 பசி, வயிறு, குடல், குதம் வரை வந்து சப்த நாடிகளையும் சப்தத்துடன் இசைத்தது. அப்போது தான் பார்த்தேன், இந்த விடுதி மிகப் பழையது, இது ரோமின் இன்னும் ஒரு பண்டைய இடிபாடுகளுள் ஒன்று போலத் தோற்றமளிக்கிறது என்பதை. சாவியின் சங்கிலி ஒரு இசைமணியால் பிணைக்கப் பெற்றிருந்தது. அதே சமயம் இது இப்படி இருப்பது இந்த விடுதியின் கருப்பொருளா அல்லது இவர்களுக்குப் புணரமைப்பு செய்ய மனமில்லாமல் அல்லது பணமில்லாமல் அல்லது ரெண்டும் இல்லாமல் அப்படியே விட்டிருக்கிறார்களா எனவும் யோசித்தேன். மின்-ஏணியின் ஒரு சுவர் விரிசல் விட்டிருந்தது வேறு நினைவிற்கு வந்து தொலைத்தது.

 இரவு மணி பத்து ஐம்பத்து ஐந்து. வரும் வழியில் தங்கும் விடுதிக்கு அருகிலேயே ஒரு உணவு விடுதி உள்ளதைக் கவனித்து இருந்தேன். சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் என்பதும் நினைவு வந்தது. உடனே கிளம்பினேன். கீழே போய் என் பாஸ்போர்ட்டைக் கேட்டேன். “பசியோடு இருப்பீர்கள் பக்கத்து உணவகத்தில் உண்டு களித்து வாருங்கள் தருகிறேன்”, என்றார். நான் மீண்டும் என் பாஸ்போர்ட்டை விட்டுப் பிரிந்து துணிந்து ஒரு நம்பிக்கையில் வெளியேறினேன். 

அந்த உணவு விடுதியின் பெயர் ‘அமெடெயோ ரிஸ்டொரெண்ட்’. இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையை மூடப் போகிறார்கள் எனத் தெரிந்தது. விடுதிக்குள் விருந்தினர்கள் யாரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் வெளியே சிலர் அமர்ந்திருந்தனர். இங்கெல்லாம் இப்படித்தான் போல, நடைபாதையை பாதிக்காமல் உணவு விடுதிக்கு வெளியே இடப்பட்டிருக்கும் இருக்கைகளிலேயே பெரும்பாலும் எல்லோரும் அமர்ந்து உணவு உண்கிறார்கள். அதிக வெய்யிலோ, குளிரோ மழையோ இல்லாத போது இப்படித் தெருவில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உண்பதைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள் போல.

நானும் வெளியே ஆனால் விடுதி வாசலுக்கு அருகே உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். நறுக்கிச் செதுக்கிய தாடி மீசையுடன் ஆனால் சற்று இறுகிய முகத்துடன் ஒரு இளம் பணியாளர் வந்து உணவுப்பட்டியலைத் தந்தார். பட்டியலைப் பார்க்கும் முன்பே “எது உடனே கிடைக்கும்” எனக் கேட்டேன். பதினாறு ‘ஈரோ’-வுக்கு ஒரு பண்டத்தைக் காட்டினார். அதில் ‘ரோமன் பாணியில் மெதுவாகச் சமைக்கப்பட்ட இளம் இறைச்சி மற்றும் பிசைந்த உருளைக்கிழங்கு ‘ என்றிருந்தது. இளம் இறைச்சி என்பதால் அதையே ஆணையிட்டேன். உடன் வீட்டு வைன் எனும் ‘ஹவுஸ் ஒயினும்’ வேண்டும் எனக் கேட்டேன். இவ்வளவு தூரம் நடந்ததால் ஏற்பட்ட அதீத தாகம் போக்கக் குடிநீரும் கேட்டேன்.

 ‘லெவிசிமா’ என்ற நிறுவனப் பெயரில் ஒரு கண்ணாடி புட்டியில் ஒரு லிட்டர் நீர் என் மேஜைக்கு வந்தது. சரி இங்கெல்லாம் நீர் கேட்டால் இப்படித்தான் கொடுப்பார்கள் என நினைத்து மூடியைத் திறக்கப் பார்த்தால் முடியவில்லை. அந்தப் பணியாளரிடம் திறந்து கொடுக்கச் சொல்லி ரெண்டு குவளை நீர் அருந்தியதும் தான் தாகம் தணிந்தது. அதற்குள் உணவும் வந்துவிட்டது. அவ்வளவு சுவையான மிருதுவான இறைச்சி அது. அதனுடன் நசுக்கிய உருளைக் கிழங்கும் சேர்ந்து மேலும் சுவை கூட்டியது. மேலும் ஒரு மிடறு ஒயின் அருந்தியதும் ‘வாழ்வு மிக அற்புதம்’ எனத் தோன்றியது.

அப்பொழுது தான் என் எதிரில் இரு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த அந்த ஆசாமியை கவனித்தேன். உணவுடன் கத்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அட! ரயில்நிலையத்தில் பார்த்த அதே இந்தியர். அவரிடம் சென்று வேறு ஏதாவது வேண்டுமா எனக் கேட்ட பணியாளரிடம், “இந்த இறைச்சித் துண்டு ரப்பர் போல இருக்கிறது”, என்றார். “அப்படியா வேறு என்ன  வேண்டும்” எனக் கேட்டவரிடம், “வேக வைத்த கத்திரிக்காய் இருந்தால் கொடுங்கள்” என்றார்.

 

அது என்னவோ தெரியவில்லை வழக்கமாக எதையும் யாரையும் ஜாக்கிரதை உணர்வுடன் அணுகும் பழக்கம் உள்ள கூச்ச சுபாவம் கொண்ட நான் வெளிநாட்டுப் பயணம் என்றால் புதிய மனித அறிமுகங்கள் மூலம் ஒரு சாகச அனுபவத்திற்குத் தயாராகிவிடுகிறேன். ஆனால் என் உள்ளுணர்விடம் இருந்து அழைப்பு வர வேண்டும். ஒரு நிமிடம் தான் தயங்கினேன், பின் எழுந்து சென்று அவரிடம் “தீ இருக்குமா”, எனக் கேட்டேன். “நான் புகைப்பதில்லை, மது மட்டுமே அருந்துவேன். அதோ அங்கே புகைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்றார். அவரும் விடுதி ஒயின் தான் பருகிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து, “நீங்கள் இந்தியரா”, என்றேன். “ஆம், அமருங்கள் பேசுவோம்” என்றார்.

 தான் ஒரு ‘பாலிமர்’ வேதியியலாளர் என்றும், தன் பூர்வீகம் ஆந்திரா ஆனாலும் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் என்றும், தற்போது ‘அமெரிக்கா’-வில் ‘மிச்சிகன்’ நகரத்தில் வசிப்பதாகவும் தன் பெயர் ‘ப்ரகாஷ் மெத்லா’ என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “என் பெயர் தீபக்” என்றேன் நான். என் வேலை மற்றும் என் நிறுவனம் பற்றியும் அவரிடம் மேலோட்டமாகச் சொன்னேன். எங்கள் உரையாடல் மொழி தானாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தாவியிருந்தது.

 “ரெண்டு மாதங்கள் முன்பு தான் புது நிறுவனம் மாறினேன். இப்போது இந்தப் புது நிறுவனத்தின் தலைமை அலுவலகமான ‘ஜெர்மனி’-யின் ‘ஃப்ரேன்க்ஃபர்ட்’-இல் ஐந்து வாரம் ஒரு பயிற்சி வகுப்பில் இருக்கிறேன். ஒவ்வொரு வார இறுதியும் ஒரு ‘ஈரோப்’ நகரம் என ஃப்ரேன்க்ஃபர்ட், ‘பேரிஸ்’, ‘லண்டன்’, ‘ப்ராக்’ வரை சுற்றிப் பார்த்துவிட்டேன். இது கடைசி வார இறுதி. பின் அமெரிக்கா திரும்பி விடுவேன். இந்த வாரம் இத்தாலியில் என எனக்கு எழுதியிருக்கிறது போல ஏனென்றால் முதலில் ‘ஏம்ஸ்டெர்டேம்’ செல்வதாக இருந்து பின் திட்டத்தை மாற்றினேன்”, என்றார்.

 “எனக்கும் கூட இங்கே உங்களை இத்தாலியில் இந்தப் பேரிரவில் சந்திக்க வேண்டும் என எழுதியிருக்கிறது போல, ஏனென்றால் நானும் முதலில் ஏம்ஸ்டெர்டேம் செல்வதாக இருந்து பின் திட்டத்தை மாற்றினேன். ஏம்ஸ்டெர்டேம் அருகில் இருக்கும் ‘ஹாலேண்ட்’-இல், காண விரும்பிய ‘க்யூகன்ஹாஃப் ட்யூலிப்’ தோட்டம் செப்டம்பர் மாதத்தில் மூடியிருக்கும், மார்ச் முதல் மே வரை தான் திறந்திருக்கும் என அறிந்ததும் அந்தத் திட்டத்தைக் கைவிட்டேன். மேலும் ஏம்ஸ்டர்டேம் சென்றால் போதையும் பேதையும் தான் பிரதானமாக இருக்கும் போலத் தெரிந்ததாலும் கூட அங்கு இந்த முறை செல்ல விழையவில்லை. ‘வான் கோ’ ஓவிய அருங்காட்சியகத்திற்கு மாத்திரம் செலவு செய்து அங்கே செல்ல மனம் ஒப்பவில்லை”, என்றேன். 

“சரி அடுத்த ரெண்டு நாட்களுக்கு உங்களின் பயணத் திட்டம் என்ன”, என நான் கேட்டதும், “திட்டம் எல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை, இங்கே பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை எவ்வளவு முடியுமோ பார்க்க வேண்டியது தான், சரி உங்கள் திட்டம் என்ன”, எனக் கேட்டார் ப்ரகாஷ்.

 நான் என் ஆட்டத் திட்டத்தைச் சொன்னதுமே “நன்றாகத் திட்டம் தீட்டி விட்டுத் தான் வந்திருக்கிறீர்கள் போல. அப்போ நாளைக்கு காலையிலே ‘வேட்டிக்கன் சிட்டி’-யிலிருந்த’ ஆரம்பிக்கறீங்க. இந்த ரெண்டு நாட்கள் நாம் இருவரும் சேர்ந்து பயணம் செய்வோமா”, என அவர் கேட்டதுமே, “நிச்சயமாக”, என்றேன் சற்றும் யோசிக்காமல்.

 “சரி ஆனால் வேட்டிகன் நகர அருங்காட்சியகத்திற்கான முன்பதிவை அதன் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் பதிவு செய்தால் தவிர நேரத்தை மிச்சப்படுத்தவே முடியாது எனவே இப்பொழுதே உங்கள் செல்பேசியில் பதிவு செய்ய முயற்சிக்கலாம். சீட்டு கிடைப்பது சிரமம் தான் எனினும் முயற்சித்துப் பார்க்கலாம்”, என்று வலை தள முகவரி மற்றும் நான் தேர்ந்தெடுத்த சுற்றுலா வகைமையைச் சொன்னதும் அவர் முயன்றதும் சீட்டுகள் இன்னும் மிச்சம் இருப்பதாக அந்தத் தளம் காட்டியதும் மகிழ்ந்து போய் இருவரும் இன்னும் ஒரு குவளை சிவப்பு ஒயின் ஊற்றிக் கொண்டு உற்சாகமாகப் பணம் செலுத்தும் வழிக்கு வந்தபோது அது எத்தனை முறை முயன்றாலும் தோல்வியிலேயே முடிந்தது. இந்தக் கடனட்டையை வைத்துத் தான் தான் ஐந்து வாரம் ‘ஈரோப்பில்’ வாழ்ந்ததாகவும் முதல் முறையாக இப்போது தான் இது பரிவர்த்தனை நிராகரிப்பில் தொடர்ந்து முடிகிறது என்றும் அவர் சொன்னதும் பறந்து செல்லும் விதியின் சிறகிலிருந்து ரெண்டு இறகுகள் உதிர்ந்து எங்கள் ஒயின் கிண்ணங்களில் தனித் தனியே விழுந்து மிதந்ததைக் கண்டோம். எனக்கு பதற்றமாக இருந்தது, ஒரு வழித் துணை தவறிவிடுமோ என. ஆனால் அவர் அது குறித்தெல்லாம் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை.

 “சரி விடுங்கள், நாளை காலை இருவரும் வேட்டிகன் நகரத்திற்கு ஒன்றாகச் செல்வோம். உங்கள் சுற்றுலாவிலேயே நானும் இணைய முடியுமா பார்க்கிறேன். இல்லையெனில் வேறு சீட்டு கிடைக்குமா பார்க்கிறேன். இல்லையெனில் நகரைச் சுற்றி விட்டு உங்களுக்காக் காத்திருக்குறேன் மதியம் எங்காவது சந்தித்து இருவரும் ஒன்றாகக் ‘கோலோசியம்’ செல்லலாம் அல்லது வேறு எங்காவது போகலாம்”, என்றார்.

 என் ‘கோலோசியம்’ அனுமதிச் சீட்டு வேட்டிகன் நகர அருங்காட்சியக அனுமதிச் சீட்டு போல அல்லாமல் ரெண்டு நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் ஒரு முறை செல்லலாம் என்ற விதிக்கு உட்பட்டதால் நானும் சரி என்று அவர் செல்பேசி எண் வாங்கிக் கொண்டு அவரை ‘வாட்ஸ்ஸேப்’ செயலியில் சேர்த்துக் கொண்டு “நாளை காலை இதே இடத்தில் எட்டு மணிக்குச் சந்திக்கலாம், ஏனெனில் சுற்றுலா ஒன்பது மணிக்குத் துவங்குகிறது, இங்கிருந்து செல்ல அதிக பட்சம் அரை மணி நேரம் ஆகும்,” என்றதும் அவர் அதிர்ந்து போய் “என்னது ஏழு மணிக்கே எந்திரிக்க வேண்டுமா”, என்றார்.

 “நான் உங்களைத் திருப்பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புகிறேன் போய் உறங்குங்கள்”, எனக் கூறி உணவு ரசீது சொன்ன போது இரவு மணி பதினொன்று. அவர் என் தங்கும் விடுதிக்கு மிக அருகில் அந்தப் பக்கம் திரும்பினால் வரும் ‘ஹோட்டல் மெடிட்டரேனியோ’ எனும் விடுதியில் தங்கியிருந்தார்.  என் ரசீதில் அந்தக் கண்ணாடிக் குடிநீருக்கும் விலை சேர்த்திருந்தார்கள் ஆனால் இறுதியாகக் குடித்த அந்த ஒரு ஒயின் குவளையைச் சேர்க்கவில்லை. கேட்டு வாங்கிப் பணம் செலுத்திவிட்டுப் புது நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு வந்து விடுதிப் படுக்கையில் வீழ்ந்தேன். ஒயின் உறக்கத்தை எடுத்துப் போர்த்திக் கொண்டு ரோமின் மடியில் தூங்கிப் போனேன், நாளை வேறு நாள் என நினைத்துக் கொண்டே. ரோம் நகரம் எனக்கான தன் கதையற்ற கதை எனும் எதிர்-கதையைச் சொல்லித் கொண்டிருந்தது.

பகுதி நான்கு: பிறகு

காலை ஏழு மணிக்கு எழுந்து, ப்ரகாஷ் மெத்லா-விற்கு வாட்ஸேப் செய்திகள் மற்றும் செல்பேசி அழைப்புகள் எனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து அவரையும் எழுப்பி விட்டேன். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் காலை நேர ரோம் வீதி தன் செதுக்கிய சதுரக் கட்டிடங்களை உயிர்ப்பிக்கத் தொடங்கியிருந்தது, மீண்டும் ஒரு வாழ்நாளுக்குத் தயாராக. கீழே வந்து அடித்தளத்தில் இருந்த உணவு விடுதியில் காலை உணவாகத் தயிர், ‘சலாமி’, முட்டை, ரொட்டி எனச் சாப்பிட்டுவிட்டு, வரவேற்பறை சென்று, வேட்டிக்கன் நகரத்திற்கு எப்படி செல்வது எனக் கேட்டபோது ஒரு அழகான நவீன ரோமாபூரிக் கார்ட்டூன் அமைப்பில் இருந்த ஒரு வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்தார் அந்த அழகான அன்பான வரவேற்பாளர் பெதும்பை, என் பாஸ்போர்ட்டை என் கையில் கொடுத்தபடியே.

அவர் சொன்னதில் எனக்குப் புரிந்தது, வேட்டிக்கன் செல்ல ரயிலுந்து தான் சிறந்த மார்க்கம் என்பது மட்டுமே. மற்ற எதுவும் என் கவனத்தில் நிற்கவே இல்லை. சரி என்று வெளி வந்து நடந்து சென்று திரும்பி ப்ரகாஷின் விடுதி வாசல் அடைந்து அவரை அழைத்து, அவரின் “வரேங்க”, எனும் பதிலுக்குக் காத்திருந்த பொழுது. பேருந்து பேருந்தாக பல நாட்டு மக்கள் தத்தம் ரோம் தரிசனத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

ப்ரகாஷ் வெளியே வந்தபோது எட்டு மணி. எதுவும் பேசாமல் அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ரோமா டெர்மினி ரயில் நிலையம் நோக்கி ஓடினேன். ரோமா டெர்மினியில் எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒரே ரயில், நேற்றிரவு நாங்கள் வந்த லியனார்டோ எக்ஸ்பிரஸ் தான். ஆனால் அது விமான நிலையத்தையும் ரோமா டெர்மினி ரயில் நிலையத்தையும் மட்டுமே இணைக்கும், ரோமுக்குள் திரிய ரோம் மெட்ரோ உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அதுவும் தற்போதைய தேவைக்கு கோடு-அ வழியே செல்லும் ரயில் மட்டுமே பயன்படும் என்றும் அது எங்கே என ஏறக்குறைய ஊரில் உள்ள அனைவரிடமும் விசாரித்துத் தெரிந்து உறுதி படுத்திக் கொண்டும் பாதாளப் பாதையில் ஓட்டமும் நடையுமாகச் சென்ற போது இத்தாலிய மொழி எனும் புதிரின் முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்திருந்திருந்தோம். இருவரின் பயணத்திற்கும் அவர் தான் சீட்டெடுத்தார் என்னிடம் சில்லறை இல்லாததால், “அதனால் என்ன பிறகு தாருங்கள் அந்த ஒன்றரை ஈரோவை”, என்றார் ப்ரகாஷ்.

ஒட்டாவியானோ லைன்-ஏ ரோம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி சீட்டுகளைக் காட்டி கேட்டுகளைத் திறந்து மேலேறி பாதாள இருளிலிருந்து ஆகாய வெளிச்சத்திற்கு வந்த போது மணி காலை எட்டு நாற்பது. மறுபடியும் மனிதக் கம்பூட்டர் ஜி-யை நான் கேட்கப் போன போது, ப்ரகாஷ் “இருங்க, இதோ கூகுள் வரைபடம் இங்கிருந்து ஐநூற்றி ஐம்பது மீட்டரில் ஏழு நிமிட நடையில் நம் இலக்கைத் தெளிவாகக் காட்டுகிறது பாருங்கள்”, என்றார்.

கூகுள் சொன்னபடி முன்னகர்ந்து நாங்கள் வேட்டிக்கன் நகரின் கோட்டையை அடைந்திருந்தோம். மணி எட்டு ஐம்பது. வேட்டிக்கன் நகர அருங்காட்சியகத்திற்குச் சாலையைக் கடந்து வலது புறம் திரும்ப வேண்டும். ஒரு மிகப் பெரியக் காத்திருக்கும் வரிசையை அதற்கு முன் தொலைவிலேயே காண முடிந்தது. நான் பதற்றம் அடைந்தேன். ப்ரகாஷ் மெத்லாவைப் பார்த்தேன். அவர் பதற்றம் அடையவில்லை. ஒரு வழிகாட்டி எங்களை நெருங்கி “அருங்கட்சியகம் பார்க்க வேண்டுமா, என்னுடன் வாருங்கள், இதோ என் அடையாள அட்டை இன்னும் பத்து நிமிடங்களில் சுற்றுலா துவங்கிவிடும், யோசிக்கக் கூட நேரமில்லை விலை ஐம்பத்தி ஐந்து ஈரோக்கள்” என்றார். நான் முன்பதிவு செய்திருந்த சீட்டின் விலை முப்பத்தி ஏழு ஈரோக்கள்.

ப்ரகாஷ் அந்த வழிகாட்டியுடன் செல்வதற்கு முன் இந்த இடத்திலேயே மதியம் சந்தித்து கொலோசியம் செல்லலாம் என முடிவெடுத்துப் பிரிந்தோம். நான் சாலையைக் கடந்து வலது புறம் திரும்பி நடந்த போது வெய்யிலின் உக்கிரம் மெழுகு உடல்களை உருக்கி வியர்வைக் கடலில் கரைக்கத் துவங்கியிருந்தது. அப்போது, ப்ரகாஷ் மெத்லாவை மீண்டும் சந்திப்போமா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அப்படியே சந்திக்காவிட்டாலும் அவருக்கு அது குறித்து எந்தப் பதற்றமும் இருக்காது என்றும் தோன்றி எனக்குச் சற்றே கவலையானது. 

நுழைவாயிலில் சீட்டைக் காட்டி விட்டு அண்ணாந்து கோட்டையின் மதிலுக்கு மீறிய மரத்தைப் பார்த்தபடி உள்ளே சென்றேன். மதிலுக்கு வெளியே ரோம். உள்ளே வேட்டிகன். சுமார் நூறு ஏக்கரில், சுமார் ஆயிரம் பிரஜைகளுடன் ஒரு தனி நாடு. இத்தாலி எனும் ஒரு நாட்டுக்குள் வேட்டிக்கன் என்ற இன்னுமொரு நாடு. உள்ளே பலதரப்பட்ட மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்குத் தயாராகக் காத்திருந்தார்கள்.

அந்த அருங்காட்சியகத்தின் உள்ளே இருக்கும் முக்கியக் காட்சிப் பொருட்களின் வடிவ மாதிரிகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் அந்த வரவேற்பறையில் விற்பனைக்குக் காத்திருந்தன. இம்மாதிரியான சந்தைப்படுத்துதல்களுக்கு இரையாகக்கூடாது என்பதை நான் என் சில வெளிநாட்டுப் பயணங்களில் கற்றுக் கொண்டிருந்ததால் சற்று கவனமாகவே இருந்தேன். அனுபவங்களில் முதலீடு செய்ய வேண்டும், பொருட்களில் அல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதால் பேசாமல் வேடிக்கை பார்த்தேன். எனினும் கட்டுப்படுத்த உடன் யாரும் இல்லாததால் அந்த கவனத்தையும் நானே கவனிக்க வேண்டியிருந்தது.

என் மேல் சட்டைக் ‘கோட்’-ஐக் கழற்றித் தோள் பையில் திணித்தேன். கழிவறை சென்று வந்தேன். ‘பேரிஸ்’ நகரத்தின் ‘லூவேர்’ அருங்காட்சியகம் போலவே இந்த வேட்டிக்கன் அருங்காட்சியகங்களைப் பார்க்கவும் பாதி நாளெல்லாம் போதாது.

வரவேற்பறையில் என் சீட்டைக் காட்டியதும் “அந்த மூலையில் உங்கள் வழிகாட்டியும், குழுவும் வந்து சேரும், காத்திருங்கள், அவர்களை விட்டுப் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்றார் அங்கிருந்த அந்தப் பெண், புன்னகைத்தபடியே.


 

எழுதியவர்

நந்தாகுமாரன்
நந்தாகுமாரன்
கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2019இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக டிசம்பர் 2012இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்' எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு 'பாழ் வட்டம்', காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x