17 September 2024

விரிந்த கைகளில் சிலுவை உண்டு. விதியற்றவனுக்கு வெற்றுடல் உண்டு. வித்யார்த்தன் விதி வழியே நடுங்கினாலும் விழி வழியே தனையே விளம்பினான்.

“வித்யா..!”

ஆடு கத்துவது போலவே இருந்தது ‘நிழலி’ கூப்பிட்டது.

“இரு.இரு’ என்றது தோள் புரண்ட வித்யாவின் கூந்தல்.

“இதே வேலையா போச்சு. பனிக்குள்ள நிக்க வேண்டியது. அப்றம் இருமல் வந்து தும்மல் வந்து தலைவலி வந்து.. சொன்னா கேக்கவே மாட்டியா மாமா” -அடித் தொண்டையில் கத்தினாள் மலை அரசி நிழலி. இரு மூக்குத்தி குத்திய சின்னஞ்சிறு பாட்டி. சிவந்த நெற்றியில், சாம்பல் பூத்த பருவம். படக்கென பார்த்தால் பூதம் போல பயமுறுத்தும் ராட்சசி. அழகி! அரவமற்ற நிழலி !

பேசிக் கொண்டே பின்னால் வந்து நின்றிருந்தாள்.

மெல்ல திரும்பினான் வித்யார்த்தன். அந்த மலையையே அவன் அப்படி அவ்வப்போது திருப்புவது உண்டு. மலை திரும்பும் என்பதை யாராவது அடிவாரத்தில் இருந்து நோக்க வேண்டும். நோக்கத்தின் விளிம்பு நிலை கீழிருந்தும் மேல் தெரியும். ஆங்கில எழுத்து V யை இரண்டு முறை அடுத்தடுத்து கவிழ்த்து வைத்தது போல அம்மலை. அசப்பில் மோனாலிசா வரைந்தவன் வரைந்தது போல இருக்கும்.

V -க்குள் நுழைந்து வளையும் சாலை ஓரத்தில் இருக்கும் வீடு சொர்க்கம் என்றால்; யாருக்கும் சொற்கள் எட்டிப் பார்க்கத் தோன்றும். சொப்பனத்தில் தானாக எழும்பிய வீடு அது.

” எத்தன தடவ சொல்லிருக்கேன்..பனிக்குள்ள நிக்காத நிக்காதன்னு.கேக்கறயா மனுஷா நீ.?” செல்லமாக முதுகில் குத்தி ஆட்டை போலவே முட்டிக் கொண்டு நகர்த்தினாள். அவ்வப்போது உள்ளொன்று புரிய ஆடு போல கத்துவாள். அதிகாலை மூர்க்கத்தில் அடிக்கடி நிகழும். இப்போதும் நிகழ்ந்தது.

“லூசு நிழலி கத்தாத பேர பாரு நிழலியாம் நிழலி” என்றான் சரிவில் வளைந்த நடையில் வம்பிழுக்க சரிந்த மனதில்.

” பேர பத்தி பேசின இங்கிருந்து முட்டி வீசி தூக்கி போட்ருவேன் என்னைப் பத்தி தெரியும்ல” என்று முட்டியபடியே தலையை அவன் வலது கைக்குள் விட்டு மேலெழுந்து மனித பாம்பாகி கழுத்து கடித்தாள்.

இன்னும் கடி என்பது போல.. கழுத்தை தூக்கிக் காட்டினான் வித்யா. இனி மலை உச்சி பொடியாகும். தலை உச்சியில் வானம் இடிக்க சண்டை நடக்கும்.

ஆப்பிள் மரம் பூத்து குலுங்கிய வாசம் அவர்களை சுழன்று சுழன்று நெளிந்தது.

“வீட்டுக்குள்ள போலாம்..!” முனங்கினான்.

“ஆமாம்மா..இல்லனாலும் ஊரே நம்மளத்தான் பாக்கும் பாரு. மலை உச்சிலதான் இருக்கறோம். எட்டிப் புடிச்சா வானமே கைக்கெட்டும். சுத்தியும் பனி, மேகம், பாறை, காடு, மரம். இதுல எவன் வந்து நம்மள பாக்க போறான் ” சரிந்த பாறையில் நிமிர்ந்து சாய்ந்தாள். வாய் முனங்கியது.

நிற்பதற்கும் படுப்பதற்கும் இடையே சரிந்த நிலை.

“மூச்சு இறங்கி ஏறுவதற்கு லாவகம் ஏய்.. மலை ஏறுதல் பத்தி சொன்னேன் ” செங்கல் நிறம் கன்னத்தில் விரிந்தது. வெட்கம் தாங்காமல் செங்காந்தள் மலர் பூப்பது அவளின் கழுத்து வாசம்.

கண்கள் சிரிக்க காது சிரிக்க.. கன்னம் சிரிக்க ” மலை சரியா ஏறுவது பத்தி நான் சொல்றேன்” என்றவனை மூர்க்கம் கொண்டு திருப்பினாள். பாறை ஓவியம் திரும்பியது. பார்த்த நிலவும் திரும்பியது.

ந்த மலையை நகரத்துக்குள் எங்கிருந்து பார்த்தாலும் பார்க்க முடியும். ஆனால் மலை உச்சி என்பது மற்றவர்க்கு மலை உச்சி. அவ்வளவு தான். அங்கிருக்கும் எல்லாமே மலை உச்சிக்குள்ளேயே அடங்கி விடும். ஆனால் வித்யாவுக்கு இன்னுமோர் உச்சி அந்த மலையில் இல்லை. இருந்தால் அங்கு குடி போகலாம் என சொல்லி இருப்பான். வளைந்த சாலையில் மேலே மலை உச்சியைத் தொடுகையில். அதன் பின் வனாந்திரம் தான். அங்கு தான் ஆடு மேய்ப்பது வானம் மேய்ப்பது எல்லாம். இவர்கள் இருவர். ஆடுகள் நாற்பது. அது தான் அவர்களின் வாழ்வு.

மலைல வாழ்வது குறித்தான சிந்தனையோஅனுபவமோ.. புரிதலோ இல்லை நகர மனிதர்களுக்கு இல்லை. ஆசை ஆசையாக காதலிச்ச காதலியே மனைவியா இருக்கா. ஆடுகளின் உலகத்தில் அற்புதங்கள் நொடி தோறும். அதுங்களோட இருக்கற வாழ்க்கையில கடவுள் ரெம்ப பக்கத்துல அவுங்களை கண்காணிக்கறதா நினைச்சுக்கறாங்க. வழக்கம் போல சித்தாந்தம் அவர்களை கம்பளியாய் போர்த்தியது.

எட்டு மணி நேரம் ஏறினால் தான் இந்த மலை உச்சியை அடைய முடியும். மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியில் இருந்து விலகி விடுபட்டு ஒரு கட்டத்தில் தன்னிச்சையாக தொடர்பில் இருந்து அறுந்து கொண்ட ஒரு துண்டு மலை இது. நிலப் பரப்பில் இருந்து மலை என்று தெரியாமலே ஏற ஏற இந்த மலைக்குள் சென்று விட முடியும். முன்பொரு காலத்தில் ‘கௌசிகா’ நதி உருவான மலை இது. அவ்வப்போது நதியின் தடம் கண்டு பிடித்து அந்த கரையோரம் காதலியின் முகத்தில் அந்த மண் அள்ளி பூசி விளையாடுவான். திரும்பும் பக்கமெல்லாம் பசுமை. பாழ் காலம். பருவ யாமம். ஒவ்வொரு இரவும்.. புதுமை நெய்யும் வானத்தின் அருகே வாழ்வது வானத்தில் வாழ்வதுதான். உலகம் சுற்றுவதை காண்பது போன்ற இந்த வாழ்க்கை முறை அவர்களுக்கு கூடி இருக்கிறது. கூடலின் போதெல்லாம் தலைகீழ் மாற்றம் பூமிக்கும் வானுக்கும். நட்சத்திர கூட்டம் காவல் காக்கும். ஒற்றை நிலவுக்கு முகமே உடல்.

“எப்ப பாரு இதே வேலை கைய எடு” காது கடித்தவளின் கண்கள்.. ஆட்டின் கண்களாக சட்டென முறுகியது.

“என்ன அழகி.. ஏன் இப்டி பிசாசு மாதிரி பாக்கிற ”

வெளியே காட்டுப் பூச்சிகளின் சப்தம்.. காற்றின் வேகம்.வானத்தின் சரிவு..நீலத்தின் மிச்சம்மிருக யுத்தம் மற்றும் சாராய மயக்கம் மலை உச்சியில் உண்டு. சாத்தினாலும் கதவு மலை உச்சியில் இல்லை.

“என்னடி.என்னாச்சு..” என்று வித்யாவும் எழுந்து அமர்ந்தான்.

அவள் காது குவித்து கதவையே பார்த்தாள். அவள் முகத்தில்.. பௌர்ணமியின் வெளிச்சம் பாதி பாதியாக. கோடு கோடாக.கீறல் கீறலாக வழிந்து நெளிந்து கொண்டிருந்தது.

அவள் நெற்றியில் கிடைமட்டத்தில் கோடுகள் மூன்று முறுக்கிக் கொண்டு நகர்ந்தன. மூக்குத்திகள் சுருங்கி விரிந்தன.

“அவன்..’ என்னாச்சு’ என்று கேட்க வாயெடுக்க’ மச்சான். அமைதி !’ என்று ஒற்றை விரலை அவன் வாயில் சிலுவை ஆக்கினாள்.

“கேக்குதா.!?” என்பது போல ஜாடை செய்ய வித்யாவுக்கும் எதுவோ கேட்க ஆரம்பித்தது.

இருவருமே மெல்ல எழுந்து கதவு பக்கம் சென்று காதை கதவில் வைத்து ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்த சத்தம் அப்படியே அடங்கியது.

ன்னும் அதையே நினைச்சிட்டுருந்தா எப்டி ! ஏதாவது மிருகமா இருக்கும் நிழலி ! ” என்று அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான். அவள் முகத்தில் கோடி நட்சத்திரம்கோடி யோசனை. கோடியிலும் அந்த ஒரே சத்தம். அந்த ஒரே வெளிச்சம்.

“பிரம்மை எல்லாம் இருக்காது மாமா.. அப்டினா உனக்கு கேட்ருக்க கூடாதுல ”

“ஆமால்ல எனக்கும் தான் கேட்டுச்சு. அது எப்டி ஒரு மாதிரி வித்யாசமா… என்ன மாதிரினே சொல்ல முடியல இல்லையா?”

“ஆமா.. அது மயமயனு கயமுயன்னு அடித் தொண்டைலருந்து… ஒரு மாதிரி காட்டேரியா இருக்க போகுது மச்சான்” அவள் முகத்தில் இருந்த வட்ட பொட்டு இன்னும் சிவந்தது.
அதே சத்தத்துக்கு அவர்கள் காத்திருந்தார்கள். சத்தமும் அவர்களுக்கு காத்திருந்தது போல. அதே நேரம் அதே கயமுய..

அதே சத்தம்.. இன்னும் சத்தமாக கேட்டது. கையில் இருந்த செல்போனில் டார்ச் வெளிச்சத்தை ஆன் பண்ணியபடியே கதவைத் திறந்து கொண்டு வித்யார்த்தன் வெளியேற கூடவே கத்தியோடு நிழலியும் வெளியேறினாள். அவர்கள் காதில் அந்த சத்தம்; நூறு மரிக்க போகும் வண்டுகளின் குரலை ஓங்கி ஓங்கி தெளித்தது.

“கர்பூர கரைபுரக்கிஇஈ கிரிராமி க்கிய்ய்ய் க்க்க்க்கியால் ரீஎபி ரீவி ரீபை ரீஎபிரப்பரை ரெப்ர ரேபி ரேபுய் ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி கிரியாரி.. ரிபியாரி.. விரியாரி.. ஷிர்லியாரி..ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபை” காதுக்குள் குடைந்து செல்ல செல்ல அவர்கள் தலை சுற்றி அங்கும் இங்கும் காற்றுக்கு அல்லாடி.. அலைந்து அனிச்சையாய் குரல் வந்த திசையில் இழுத்துக் கொண்டு சென்று நின்ற இடம் ஆடுகள் கட்டப் பட்டிக்கும் பட்டி.

ஒவ்வொரு ஆடும் மிரண்டு மருண்டு அங்கும் இங்கும் கலைந்து ஓடி ஒன்றோடொன்று முட்டிக்கத்த அவைகளுக்குள் இருந்து தான் அந்த சத்தமும் வந்து கொண்டிருந்தது.

அதே “ரீஎபி ரீவி ரீபை ரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி ரீபைரீஎபி ரீவி.”

“யாரு. யார்ர்ரு.? என்ன வேணும்..! யாரது? வெளிய வா.. சொன்னா கேளு.. வா.. வெளிய” நிழலி பேயாட்டம் ஆடினாள். வித்யா ஆடுகளுக்குள் நுழைந்து டார்ச்ச்சை இழுத்து இழுத்து நிலவை கோடிட்டு தர தரவென இழுத்து சுற்றுவது போல சுற்றினான்.

சத்தம் இன்னும் அதிகமாக ஆடுகள் மருண்டு ஒரு பக்கமாய் குவிந்து நிற்க.சத்தம் வந்த திசையில் ஒரே ஒரு ஆடு மட்டும் நின்று அவர்களை உற்று பார்த்துக் கொண்டே அதே சத்தத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தது. நேராக பார்க்க பார்க்க அந்த சத்தம் மெல்ல அடங்க வியர்த்த வித்யா பெருமூச்சு விட்டபடியே அதன் அருகே சென்று மெல்ல தலையைத் தடவினான். என்னவோ போல இருந்தது. இருந்தும் அத்தனை நேரம் இருந்த பதட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது.

அர்த்தத்தோடு பார்த்த நிழலியிடம் ” வேண்டாததை எதையோ தின்னுருக்கு போலகாலைல பாக்கலாம்..” என்று அதன் தலையை இன்னும் நன்றாக அழுந்த தடவி ஆட்டியபடியே சாந்தப் படுத்திக்கொண்டே அதன் கண்களை பார்க்க அதன் கண்களும் அவனையே பார்த்தன. பச்சையும் மஞ்சளும் கூடிய வண்ணத்தில் இரு கண்களும் மினுங்கின. உற்று நோக்க நோக்க மிரட்டின. இது வழக்கமான பார்வை இல்லையே வழக்கமான கண்கள் இல்லையே

என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரும்பி நிழலியைப் பார்த்து சீக்கிரம் அங்கிருந்து கிளம்பலாம் என்பது போல அவளைத் தள்ளிக் கொண்டே வெளியே வந்தான்.

“என்னமோ சரியில்ல மாமா பயமா இருக்கு !” முனங்கினாள் நிழலி.

‘ம்ம்.. விடியட்டும் பாத்துக்கலாம்”- வீட்டுக்குள் வந்தார்கள். முன்பு வந்த சத்தம் இப்போது காற்றில் அலைவது போல கேட்டது.

விடிய. காத்திருந்தார்கள்.

திர்ச்சியோடும் அனிச்சையாக விடிந்தது.

நேரமே ஆடுகளை ஒட்டிக் கொண்டு இருவரும் ஆடுகளோடு ஆடுகளாய் ஆழ்ந்த சிந்தனையோடு நகர்ந்தார்கள். வித்யார்த்தன் நிழலியை காரணத்தோடு பார்த்தான். அவ்வப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தை விட்டு தனித்து தனித்து ஓடி விடுவதும் தேடிப் பிடித்துக் கொண்டு வருவதும்.. மந்தைக்கு தப்பிய அந்த ஆடு தான் இப்படி வித்தியாசமாக கத்துகிறதோ என்று யோசித்தார்கள்.

வானத்தின் வெறுமை வனாந்தரத்தோடு ஒட்டி வளைந்து அலைந்து கிடந்தது. மலையின் மேற் மடிப்புகள் மகிமை வாய்ந்தவை. ஆடுகள் குதூகலித்துக் கொண்டு மேய.. இருவரின் கண்களும் அந்த ஒற்றை ஆட்டின் மீதே கவனம் குவித்தது.

“இல்ல இல்ல.. அது சாதாரண கத்தல் மாதிரி இல்லை. அது பயப்படுத்துச்சுஒரு மாதிரி நம்மகிட்ட பேசுற மாதிரி இருந்துச்சு மாமா” நெற்றி விரிந்த நிழலி பேசுவதே இரண்டு கால் ஆடு பேசுவது போலத்தான் இருந்தது. சுற்றிலும்.. வெளிச்சம் பொங்கும் அதிகாலை. சுந்தர புன்னகையில் சூரிய சுடர். மலை உச்சி காற்றில் செந் ஈரம் கசிந்து கொண்டிருந்தது.

வானம் புரியாத கவலையைக் கன்னத்தில் ஒதுக்கினாள் நிழலி. கண்களை வெறித்த பார்வையில் ஒதுங்கினான் வித்யா.

அதே சத்தம்.. ஆடு தாண்டி காடு சுற்ற ஆரம்பித்தது. மற்ற ஆடுகள்.. ம்மே ம்மே மே என அங்கும் இங்கும் அலை பாய்ந்து வரிசை விட்டு.புற்களில் பதுங்க.. அந்த குரல் மட்டும் வழியில் நெடுநெடுவென நீண்டு கொண்டே சென்றது. ஒளியே ஆடானது போல.. அதே கரமுற ரிபோ ரஃபி ரஃபி கத்திக் கொண்டே நடந்த ஆடு மெல்ல ஓட ஆரம்பித்தது.

“ஏய். ஏய்.. நில்லு.” என கத்திக் கொண்டே பின்னால் விரட்ட ஆரம்பித்த வித்யா வேகமெடுத்தான். ஆடு ஓட வித்யா விரட்ட இருவருக்கும் பின்னால் நிழலி கையை நீட்டியபடியே ஓடிக் கொண்டிருந்தாள். மூச்சு வாங்க.. பேச்சும் வாங்கியது. நீளமும் பச்சையும் மெல்ல மறைய ஆடு ஓட ஓட செம்மண் புழுதி படர்ந்திருக்கும் அந்த குகை வெளியில் ஆடு நுழைய இப்படி ஒரு இடம் அங்கே இருப்பதே அப்போது தான் அவர்களுக்குத் தெரிய வந்தது.

எச்சில் விழுங்க உடல் நடுங்க தலை குனிந்து நின்று கண்கள் உயர்த்தி தடுமாறி பார்த்தபடியே’ மாமா மாமா’ என்று கத்திய நிழலி பூமியின் தகதகப்பில் எதுவோ அங்கேயே இழுத்து நிறுத்த.புழுதிக்குள் சென்ற வித்யா சடுதியில் காணாமலே போனான்.

செம்மண் புழுதி களைந்து கண்கள் இறுக்கி உடல் சுருக்கி நெற்றி விரிய உள்ளொன்றும் புறமொன்றுமாக அவனே நின்று சுற்றிலும் பார்த்தான். வானமும் பூமியும் ஒட்டிக் கொண்டே இருப்பது போன்று இருக்க உடலில் படும்.. சூரிய வெளிச்சம் கூட புதிதாக இருந்தது. வெளிச்சத்தில் இளமை மிளிர்ந்தது. இயல்பென சுற்றிலும் தேடி தேடி பார்க்க.. ஆடு சற்று தூரத்தில் நிற்பது நெளி நெளியாய் கானல் நீரில் தெரிந்தது.

‘இந்தா இங்க வந்து நின்னுட்டு இருக்க.. இது எந்த இடம்,.?” ஒன்றும் புரியாமல் அதன் அருகே செல்ல அது நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு பின் பெரிய மதில் ஒன்று உடல் நீண்டு நிமிர்ந்திருந்தது. அதிலிருந்து வேர் பிடித்து வளர்ந்தது போல ஒரு பெரிய மரம் தலை விரிந்து நின்றிருந்தது. அந்த தூர தேசத்துக்கே அந்த மரத்தில் இருந்து தான் காற்று வருகிறது போல. கலகலவென முன்னும் பின்னும் மினுமினுக்கும் இலையில் செம்மண் நிறம். இதுவரை அவன் காணா தேசம் போல அவன் முன்னால் ஒரு புராதான நகரம் இயங்கியது. தலைக்குள் சுழலும் மின்மினிகளில் சப்தம் இல்லாத சைகைகள் மட்டுமே. உணர்கொம்புகளின் வழியே அவன் உள்ளார்ந்த பயணம் ஒன்றை புரிந்த போது இயல்பாகவே ஆட்டின் அருகே சென்று விட்டிருந்தான். ஆனால் ஆடு சற்று தள்ளி நகர்ந்திருந்தது. அங்கே ஒரு மனிதன் சுவரோரம் இருந்த கல்லில் இருந்து பூத்தது போல அமர்ந்திருந்தான். அமைதியில் இருந்தான். அவன் ஒரு தூர தேச பழங்கால மனிதனைப் போல காட்சி தந்தான். அவனை உற்று நோக்கிக் கொண்டே அவன் பின்னால் நிற்கும் ஆட்டை பற்ற நகர்ந்தான் வித்யா.

கழுத்தில் இருந்து கால் வரை அங்கி போல சிவப்பு ஆடையில் அவன் இருந்தான். அவன் தன் அருகே ஒருவன் வருகிறான் என்ற பிரக்ஜை இல்லாமல் இருந்தான். அவன் தோளில் துண்டு போல ஒரு செவ்வாடை காலத்தைப் பிடித்து தொங்கி கொண்டிருந்தது. அவன் கண்கள் எங்கோ நிலை குத்தி இருந்தன. வித்யா அவனைக் கடந்து ஆனாலும் அவனைத் தானும் அறியாமல் பார்த்துக் கொண்டே ஆட்டின் அருகே நகர எட்டிப் பிடிக்க முயல.. ஆடு பிடி நழுவி நகர.. தடுமாறி தெரியாமல் அந்த அமர்ந்திருக்கும் ஆளின் முகத்தில் வித்யாவின் கை படும்படி ஆகி விட்டது. சட்டென நிகழ்ந்த ஸ்பரிசத்தில் அந்த ஆள் தடுமாறி.. யாரு என்று கத்தி.. அதற்குள் பெரும் மௌனத்தில் அவன் நடுங்கிக் கொண்டே எதிலேயோ நிகழ்ந்தான்.

இப்போது அவன் கண்கள் நன்றாக திறந்திருந்தன.

“அய்யய்யயோ” என்று பதறி மன்னிப்பு கேட்டபடியே ஆட்டையும் பிடித்தபடியே பதறினான் வித்யா.

அந்த கணம்.. அடுத்த கணம் இடையே ஒரு ஆன்ம கணம்.. அங்கே சுழன்றதை அந்த குருடன் உணர்ந்தான். அவனுக்கு பார்வை வந்து விட்டது. அவன் மெல்ல நடுங்கிக் கொண்டே கையெடுத்து கும்பிட்டு ‘நான் கடவுளைக் கண்டு விட்டேன்’ என்று கத்த ஆரம்பித்தான். ‘எனக்கு பார்வை கிடைத்து விட்டது. இது கடவுளின் ஸ்பரிசம். இவர் தான் கடவுள். நண்பர்களே எல்லாரும் வாருங்கள்’ என்று உணர்ச்சி மயத்தில் அழுதபடியே கத்த சடுதியில் கூட்டம் கூடி விட்டது.

“பிறவியிலிருந்தே இல்லாத பார்வை இப்போது கிடைத்து விட்டது. கடவுளே உமக்காகத்தான் நாங்கள் காத்து கிடந்தோம்..” என்று ஆளாளுக்கு கும்பிட்டு தலை தாழ்ந்து உணர்ச்சி மிகுதியில் அழத் தொடங்கினார்கள். ஒன்றும் புரியாத வித்யார்த்தன் ஆட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆடு திருடியவன் போலயே பார்த்தான்.

“எங்கு வந்திருக்கிறோம். இது எந்த ஊர் ?” என்று முனங்க” எந்த ஊர்” என்று கேட்டது மற்றவர்களுக்கு கேட்டு விட “கடவுளே இனி இது உம் ஊர். நீரே எங்கள் அரசன் ” என்று கத்தி சொல்லி கண்கள் விரிய.” ஆம்.. நீரே எங்கள் அரசன் “என்று கூட்டம் கத்தியது.

“நிழலி காத்திருப்பாள் நான் போக வேண்டும் ” வித்யார்த்தன் சொல்லியும் சொல்லாமலும் சொற்கள் கலங்கினான்.

“நிஜங்கள் காத்திருக்கிறது. நீங்கள் இங்கே தான் இருக்க வேண்டும்” என்று கூட்டம் உற்சாகமூட்டியது.

வித்யாவுக்கு ஒன்னும் புரியவில்லை என்பது இன்னும் கூடியது. “என்ன நடக்கிறது?”

விஷயம் ஊருக்குள் பரவ எங்கிருந்தெல்லாமோ கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வந்து பார்த்தார்கள். அதற்குள் வித்யாவுக்கு உணவு தரப்பட்டது. ஆடை தந்து அவனை இன்னும் பள பளப்பாக்கி விட்டிருந்தார்கள். அவன் ஆட்டை மட்டும் கீழே விடவே இல்லை. அங்கு பற்றிக் கொள்ள வேறு ஒன்று அவனிடம் இல்லை. நடந்து கொண்டிருப்பதை முன் பின்னாக அடுக்கவே நேரம் போதாமை போல எதுவோ அவன் மூளைக்குள் புரிந்து கொண்டிருந்தது.

“எல்லாம் உன்னால தான். எங்கயோ கொண்டு வந்து சிக்க வெச்சிட்ட. ஊருக்கு போயி இருக்கு. ஞாயிறுக்கு கேடா வெட்டுனாத் தான் அடங்குவ ” ஆட்டின் காதுக்குள் முனங்கசுற்றிலும் நின்றும் அமர்ந்தும் கும்பிட்டு கொண்டே இருந்த கூட்டம்” ஆட்டின் மொழி அறிந்த ஆசானே” என்று கதறியது.

“அது கத்துனது புரியாம தான் பின்னால வந்து மாட்டிகிட்டேன் ” இந்த முறை மைண்ட் வாய்ஸ் மட்டும் தான்.

ஆட்டைத் தூக்கி கழுத்தோடு தோள் மீது போட்டுக் கொண்டு மெல்ல எழுந்து நடக்க கூட்டம் தானாக வழி விட்டு அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தது.

“நீங்கல்லாம் ஏன்?” என்று பாதி விழுங்கிய சொற்களில். கூட்டத்தின் வளையத்தைப் பார்த்து திகைக்க

“கடவுளே நாங்கள் உம் அடிமைகள்” என்று கத்தினார்கள்.

“அடிமைகளா. அது தப்பாச்சே கடவுளுக்கும் அடிமையால்லாம் இருக்க கூடாது நண்பர்களே” என்றான். கொஞ்சம் சத்தம் கூடி இருந்த தன் குரலையே
அவனுக்கு கேட்க புதிதாக இருந்தது.

“அய்யய்யோ என்னென்னமோ பேசறேன்னே” ஆட்டை வயிற்றை பிடித்து கிள்ளினான். ஒரு துள்ளு துள்ளி விட்டு அதே..” ரப ரபாவை கிர்ரெ கிரீவை ஆடு கத்தியது. கூட்டம் ஓவென கத்தி முழந்தாழிட்டு ” மெய்யாலுமே நீர் தான் கடவுள். எம்மை ரட்சிக்க வந்த நட்சத்திர ஒளி நீரே ” என்று கைகளைக் கோர்த்துக் கொண்டு அதே மொழியில் கத்தினார்கள்.

தலைக்குள் சுழன்ற மலை உச்சி வண்டுகளின் ரீங்காரம் மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக் கொள்வது போல உணர்ந்தான்.
“அப்டீனா இது இந்த ஊர் பாஷையா ?” ஆட்டை இறக்கி ஆட்டின் கண்களை உற்று நோக்கினான்.

“என்னவோ விபரீதம் இது. ஆடு கத்திய மொழி இவர்கள் மொழியா.. அப்படி என்றால் எந்த ஊர் இது இந்த மக்கள் யார் ஏன் என்னை கடவுள் என்கிறார்கள் கண்ணிலாதவனுக்கு பார்வை எப்படி வந்தது.எதுவுமே சாதாரணமாக நடக்கவில்லை. எல்லாமே ஏதோவொரு சூட்சுமத்தின் கோர்வை. இந்த மனிதர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். இங்கிருக்கும் காற்றின் சுவையே இதுவரை அறியாதது. இருள் கவ்விக் கிடைக்கும் வெளிச்சத்தில் ஏதோ புது பொருள் நகர்ந்து கொண்டிருப்பதை ஆழ்மனம் உணர்கிறது. இங்கிருந்து எப்படி திரும்பறது. ஒன்னும் புரியல..”

வித்யாவின் தலைக்குள் என்னென்னவோ கால ஓட்டம். வானமும் பூமியும் இடம் மாறிக்கொண்டது போன்ற சிந்தனை. வீசும் காற்றுக்கு தோல் புரண்ட கூந்தல் பொன்னிறத்தில் மினுமினுங்க.. ஒளி படைத்த கண்களோடு வித்யா ஒரு கால ஓவியத்தைப் போல நின்று திகைத்தான்.

எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு பெண் வித்யாவைப் பார்த்து ஓலமிட்டாள்.

ன்ன ஏதென்று பார்த்து கேட்பதற்குள்” மரித்துப் போன தன் சகோதரனை உயிர்ப்பித்துத் தாருங்கள் !” என்று ஏதேதோ பேசினாள். பேச்சுக்கு இடையே அழுகை இதய கோடுகளை மேலும் கீழும் இழுத்துக் கொண்டிருந்தது.

“என்னது செத்து போனவனை உயிரோட எழுப்பனுமா ! என்ன இது ? எப்படி முடியும்..” வித்யாவுக்கு வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

“முடியும் முடியும்.. உங்களால முடியும் ” கூட்டம் கத்தியது.

“எப்படி என்னால் முடியும்..?” புரியாத.சுற்றம் பார்த்துகண்கள் பதுங்க கேட்டான் வித்யா.

“உங்களால் முடியும்..ஏன்னா நீங்க கடவுள்”

“கடவுளா..!? யார் சொன்னாநான் கடவுள்னு யார் சொன்னா.. ?”

“இனிமேல் காலம் சொல்லும்.”

வித்யாவின் அனுமதிக்கு யாரும் காத்திருக்கவில்லை. அப்படியே தூக்கிக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்கள். அந்த சகோதரனின் பிணமருகே அமர்ந்து செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான் வித்யா. ஊரே கூடி நடக்க போகும் மாயாஜாலத்தைக் காண ஆர்வமாய் காத்திருந்தது.

“என்ன செய்வது. எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது அற்புதம் தேவையாய் இருக்கிறது ” யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த சகோதரி வித்யாவின் கையைப் பற்றி இழுத்து தன் சகோதரன் தலையில் வைத்தாள். சற்றும் எதிர்பாராத வித்யா நொடியில் படபடத்து வெல வெலத்துப் போனான். அந்த இறந்த சகோதரன் அதே நொடியில் உயிரோடு எழுந்தமர்ந்தான்.

தூக்கி வாரி போட்டு திகைத்து பின் வாங்க முயற்சிக்க பின்னிருந்தோர் வித்யாவை சேர்ந்து பிடித்து அங்கேயே அன்பால் நிறுத்தினார்கள்.

“என்னமோ கேட்டீங்க யார் கடவுள்னு.. இப்பவாது நம்புங்க.நீங்கதான் கடவுள்னு” வித்யாவை தூக்கி சுற்றினார்கள்.

கூன், குருடு, செவிடு.. பசி, பஞ்சம், பட்டினி, பாவம் என்று கூட்டம் வந்து கொண்டே இருந்தது. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துக் கொண்டே இருந்தது. எல்லாமே இந்த மண்ணில் இருந்து தான் என்றால் பிறகு எல்லாமே சரி ஆகி விடும். பஞ்ச பூதங்களின் உருவம் தான் உயிர்கள். பிண்டங்கள். அண்டம் சரி இல்லாத போது தான் பிண்டம் சரி இல்லாமல் போகும். அண்டம் சரி செய் மனிதா. பிண்டம் சரி ஆகும்.

ஆப்பமும் மீன் குழம்பும் பல்கி பெறுககை காட்டினால் எல்லாம் நடந்தது. திரும்பி பார்த்தால்எல்லாம் நிகழ்ந்தது.

“இந்த மக்களிடையே பேரன்பு இருக்கிறது. கூடவே அறியாமையும் இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது” யோசித்தபடியே ஒரு நாள்..” இங்கிருந்து நான் எப்போது போகலாம்” என்றான் வித்யா. அவனுக்கு நிழலி கண்களுக்குள்ளேயே இருந்தாள்.

“தேவை தீர்ந்தால் போகலாம்” என்ற மக்களோடு மக்களாக வித்யா கலந்திருந்தான்.

ஆரம்பத்தில் விபத்தை போல ஆரம்பித்த சொற்பொழிவுகள்.. பின் எதையோ சரி செய்து கொண்டிருப்பதாக தொடர்ந்தான். சொற்களில் நம்பிக்கையை தீவிரமாக முன்னெடுத்தான். அவன் சொல்வதைக் கேட்க கூட்டம் திரண்டு நின்றது. அவன் பின்னால் அன்பின் சுவடுகள் பதிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. மலை அடிவாரம்.. மலை மேல் நின்று என்று கிடைத்த இடத்திலெல்லாம் வாழ்வின் இம்சைகள்.இச்சைகள் பற்றி பேசினான். தனக்கு.. தனக்கு என்று சேர்க்கும் இங்கிதமற்ற மானுட அவஸ்தைகள் பற்றி பேசினான். மூட நம்பிக்கைகளில் நிகழ்காலத்தைத் தொலைத்து விடாதீர்கள் என்றான்.

“சொர்க்கம் நரகம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாமே இன்று நீங்கள் நடந்து கொள்வது மட்டும்தான். இந்த கணம் மனதுக்கு நெருக்கமானால் அடுத்த கணத்தின் நம்பிக்கை கூடும். மக்களின் அறிவு தான் தீபம். மெழுகுவர்த்தியை நாசப்படுத்தாதீர்கள் என்றான். அரவணைப்பு தான் ஆன்ம பலம் என்றான். சாதி கூடாது.சாத்திரம் கூடாது சமத்துவமே முழுமுதல் தேவை என்றான். அன்புதான் எல்லாமும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். நிலை குலைய செய்யும் இந்த தாக்குதலின் பொருட்டு அறைபவன் வலுவிழப்பான். மனம் உருக யோசிக்க ஒரு வாய்ப்பை அவனுக்குத் தாருங்கள்.

எனக்கு வாக்கு கொடுங்கள். என் காலத்துக்கு பின் எனக்கு கோயில் கட்ட கூடாது. முக்கியமாக என்னை கடவுள் என்று சொல்ல கூடாது. நான் உங்களில் ஒருவன். ஒரு மேய்ப்பன் நான். அறியாமையை உடைத்துக் கொண்டு வெளியேற அறிவு வேண்டும். அறிவுக்கு படிக்க வேண்டும். சக மனிதனைப் படித்தல் தேவையாய் இருக்கிறது. சக உயிரை கவனித்தல் வாழ்வாக இருக்கிறது. உண்மை உழைப்பு நேர்மை.. நிம்மதி. பிரசங்கள் கேட்பதில் பொழுதை போக்காதீர்கள். ஊழியம் ஹீலியம் என்று எவனாவது வந்தால் ஊக்குவிக்காதீர்கள். ஊக்கு விற்றாலும் உழைத்தே உண்ணுங்கள் ”

உருவத்தில் கூட வேறு யாரோ மாதிரி சற்று மாறி இருந்த வித்யா தனிமையில் யோசித்தான்.

“தனக்கு எப்படி இத்தனை பேச வருகிறது. இத்தனை பெரிய கூட்டத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது ”

ஆடும் அவனும் சில நேரத்தில் அவனும் ஆடுமாக கூட தெரிந்தார்கள்.

“மக்கள் புரட்சிக்கு எவனோ ஒருவன் தலைமை தாங்குகிறான். ஆட்சியைப் பிடிக்க வந்திருக்கிறான். மக்களிடம் உண்மை என்று ஏதேதோ பேசி கிளர்ச்சியை உண்டாக்குகிறான்.”என்று அரசிடம் இருந்து வித்யா மீது குற்றச்சாற்று எழ..வேறு வழியில்லாமல் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழலும் வந்தது.

பூமி சுற்றுவது கூட தெரிகிறதோ என்னவோ அத்தனை துல்லியத்தில் உலகத்தை துடைத்து வைத்தாற் போன்ற பளபளப்பு. திரும்பும் பக்கமெல்லாம் கண்ணாடியால் கட்டப்பட்ட கட்டடங்கள். அவரவர் தேவைக்கு புட்டியில் அடைபட்ட நறுமண காற்றை வாங்கி முகத்தில் பொருத்திக் கொண்டு போன மனிதர்களை மனிதர்கள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. எல்லா மனித மண்டைக்குள்ளும் சிப் வைத்து ஜிப் வைக்கப்பட்டிருந்தது. மனிதர்களிடம் பேச்சுக்கள் இல்லாமல் போயிருந்தது. எல்லார் கால்களிலும் கம்பியூட்டர் குச்சிகள். பகலுக்கு ஒரு சத்தம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்றால் இரவுக்கு ஒரு சத்தம் வந்து கொண்டிருக்கும் போல. ஒரு மனிதனுக்கும் வியர்க்கவில்லை. யாருக்கும் சுண்டு விரல் இல்லை. யாரும் முகம் பார்த்து பேசிக் கொள்வதில்லை. கேள்விக்கு பதில். பதிலுக்கு சூனிய பார்வை. ஒருவனுக்கும் தொப்பை இல்லை. நேர நேரத்துக்கு மாத்திரையை உண்டு கொள்கிறார்கள்.

பளபளக்கும் அந்த கீழ் நோக்கி கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் ஓர் அறையில்.. ஒரு முக்கால் மெஷினும் கால் மனிதனுமாக இருந்த ஒருவன் ஆட்டின் கண்களில் ஓடிய அந்த காட்சியை பெரிய காற்றுத் திரைக்கு தன் நீண்ட கையால் இழுத்து விட்டான். காற்றில் சரிந்த காட்சி பிறகு கண்ணாடித் திரையில் கச்சிதமாக செவ்வகத்தில் அமிழ்ந்து விரிந்தது.

“எல்லாம் சரி ஒண்ணாம் நூற்றாண்டை பத்தின ஆராய்ச்சிக்கு இறந்த காலத்துக்கு அனுப்பின ஆடு ஏதோ கனெக்சன் குளறுபடில 2020க்கு போய் அப்பறம் சுதாரிச்சுக்கிட்டு அங்கிருந்து ஒண்ணாம் நூற்றாண்டுக்கு போய்டுச்சு. ஆடு தான் மெஷின். அந்த ஆடு தான் விண்கலம் கூட. ஆனா ஆடு பின்னால இந்த ஆட்டுக்காரன் எப்படி போக முடிஞ்சது..! அங்க போயிமூட நம்பிக்கையில இருந்த மக்கள்கிட்ட நம்ம ஆட்டோட தலைல பொருத்தி இருந்த அதிநவீன டெக்னாலஜிய கொண்டிருக்கிற சிப் மூலமா வர்ற வைப்ரேசன்ல அவனுக்கே தெரியாம நிறைய பேசினான். மருத்துவத்தை கட்டுப்பாட்டுல வெச்சிருக்கிற ஆப்சன் அந்த சிப்ல இருக்கு. மரணத்தையும் ஜனனத்தையும் ஜெயிச்ச எதிர்காலம் அந்த சிப்ல இருக்கு. நாம ஆட்டை அனுப்பினது அங்கிருக்கற மக்களை படம் பிடிக்க மட்டுமில்ல. இந்த மாதிரி அதிசயங்களை கடவுள்ங்கிற பேர்ல நிகழ்த்திக் காட்டி மக்களை அப்போ இருந்தே நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர்றதுக்கும் தான். இந்த பூமியே நம்ம இனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கணும்ங்கிறதுக்காக தான். இந்த வேலையை காலம் கடந்து போயி ஒண்ணாம் நூற்றாண்டிலேயே ஆரம்பிச்சது. ஆட்டுக்காரன் செய்யலனாலும். ஆடு அதையெல்லாம் செஞ்சிருக்கும். கடவுள் அனுப்பி வெச்ச ஆடு பேசுது குணப்படுத்துது உபதேசம் செய்துன்னு காட்சி மாறி இருக்கும். ஆனா இடைல இந்த ஆட்டுக்காரன் எப்படி நுழைஞ்சாங்கிறது புரியாத புதிராக இருக்கு.

அவன் பேசும் போதெல்லாம் ஆடு அமைதியா அவனுக்கு உதவுற மாதிரி நடந்துகிட்டது எப்படினு புரியல. செத்தவன உயிரோட கொண்டு வந்தது குருடனுக்கு பார்வை தந்தது நிறைய நிறைய அந்த ஊரையே மாத்தினது.எல்லாமே இல்லாத கடவுள் பிம்பத்தை கட்டமைக்கத்தான். ஆடு செஞ்சிருந்தா கடவுள் அனுப்பினதுன்னு ஆகியிருக்கும். ஆட்டுக்காரன் செஞ்சதுனால அவனே கடவுள்னு ஆகிட்டான். ஆனா அரசாங்கம் அவனை ஆட்சியை பிடிக்க வந்த எதிரியா பார்க்க ஆரம்பிச்சது. ஆனாலும் விடாம மக்கள் எழுச்சிக்கு குரல் குடுத்தான். இந்த ஆட்டு மூலமாத்தான் இதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கட்டத்துல அவனுக்கே உள்ள தோண ஆரம்பிச்சிருச்சு. அதோட அவன் அதையெல்லாம் நிறுத்தியிருக்கலாம். ஆனா தொடர்ந்தான். அரசு மரண தண்டனை குடுத்து.. அடிச்சு வீதி வீதியா இழுத்துட்டு போகும் போது ஆட்டை வெச்சே அவன் தப்பிச்சிருக்கலாம். ஆனா அப்டி பண்ணல. அவனைக் காட்டி குடுக்க போறவனை முன்னமே தெரிஞ்சும் அங்கிருந்து தப்பிக்காமல் ஏன் மாட்டிகிட்டான்னும் தெரியல.

அதுமட்டுமில்லாம இந்த அன்புங்கிற விஷயத்தை இவ்ளோ ஆழமா நாம சிப்ல பதிவு பண்ணல. ஆனா அவன் அதையே திரும்ப திரும்ப பேசினான். ஆனா அன்பை மட்டுமே போதிச்ச அவன் ஒரு இடத்துல மட்டும் ஒரு கோயில் மாதிரி இருக்கற இடத்துல சாட்டை எடுத்து அங்கிருந்த வியாபார பொருளையெல்லாம் ஏன் அடிச்சான்னும் புரியல. மொத்தத்துல அவன் மரணத்தை நம்ம டெக்னாலஜியை வெச்சு சுலபமா தடுத்திருக்கலாம். ஆனா அவன் தானாவே மரணத்தை ஏன் ஏத்துக்கிட்டான்னு தெரியல. அப்புறம் பழங்கால மக்களை பத்தி இன்னொன்னு நாம புரிஞ்சுக்க முடியுது. அத்தனை நாள் எந்த மக்களுக்காக அவன் பேசினானோ அந்த மக்கள் யாருமே அவனைக் காப்பாத்த முன் வரல ”

இந்த மாதிரி அவர்களின் அறிவியலுக்கு அப்பாற்பட்ட கேள்விகளை காட்டிக் கொண்டிருந்த காட்சிகள் எழுப்பின. அந்த டீம் ஆராய்ச்சியை மேலும் தொடர முடிவு செய்து அந்த ஆட்டு ரோபோவின் தலையை திருகி சிப்பை வெளியே எடுத்து அலச ஆரம்பித்தது.

எதிரே இருந்த காலண்டரில் 2060 என்ற வருஷம்.. பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.

2023

வித்யா சென்ற பாதையை பார்த்தபடி செம்மண் புழுதியில் பட்டும் படாமல் படர்ந்து கொண்டிருந்த காலை வெயிலை உணர்ந்தபடியே அமர்ந்திருந்த நிழலி கண்களில் ஒவ்வொரு ஆடாக விழ. அனிச்சையாக ஒவ்வொன்றாக எண்ணினாள். நியாயப்படி பார்த்தால் 39 தானே இருக்க வேண்டும். நாற்பதும் இருக்கிறதே. அப்படி என்றால்வித்யா விரட்டி போன ஆடு. என்று யோசித்தவள் சட்டென்று எழுந்து நின்று சுற்றும் முற்றும் சுழன்று பார்த்தாள். சுழன்று முடியும் வரை பூமி நின்றது போல இருந்தது. மீண்டும் ஆடுகளை வேக வேகமாய் எண்ணினாள். அவளுக்கு எதுவோ நினைவுக்குள் கொதித்தது. சுழற்சி மீண்டும் சுழன்று கொண்டிருப்பதை உள் வாங்க முடிந்தது. அவளுக்கு எல்லாமே நினைவு வந்தது. காலம் மறக்க செய்த எல்லாமும் மீண்டும் நினைவுக்கு வந்தது. கண்கள் கலங்க மண்ணில் விழுந்து வானம் பார்த்து கிடக்கவாய் மட்டும் நிசப்தமாய் அசைந்தது.

“இதெல்லாம் உன் வேலைதானா? கடவுளா இருக்கறது சாபம்ங்கறதுனாலதான இங்க இருக்கோம்.. திரும்பவும் கூட்டிட்டு போய் சிலுவைல ஏத்திட்டியாஏன் ஒவ்வொரு முறையும் எங்களயே பலி குடுக்கற” நிழலி உயிர் நோக அழுது கத்தினாள்.

அதே நேரம் மலை அடிவாரத்தில் ட்ரெக்கிங் வந்த கூட்டத்துக்கு வழிகாட்டி கூட்டி கொண்டு வந்தவர் பேசிக் கொண்டிருந்தார்.

“ரெம்ப வருஷமாவே ஒரு ஜோடி இந்த மலை உச்சில ஆடு மேய்ச்சிட்டு வாழ்ந்திட்டுருக்கிறதா பேச்சு இருக்கு. ஆனா யாரும் இதுவரை பார்த்தது இல்ல. இந்த மலை மேல ஒரு வனாந்திரம் இருக்கறதாகவும் அப்பப்போ வானத்துல இருந்து பிரகாசமா ஒரு ஒளி விழறதாகவும் சொல்லிக்குவாங்க. எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல..”


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x