நெஞ்சில் நெருப்பு உறைந்து விட்டாற் போல எரிந்தது. மர அலமாரியின் கதவுகள் அகலத் திறந்தபடி அவனை விழுங்கிக் கொண்டிருந்தன. யாரோ உள்ளிழுத்து அமுக்குவது போலப் பிரமை. கண்களை மூடிச் சட்டென்று தன்னைச் சிலிர்த்துக் கொண்டான். பரபரவென்று தலைக்குள் ஏறிய குருதி அவனை நிலை குலைய வைத்தது. அலமாரியின் மேலிரு தட்டுகளும் வெறுமையாகவிருந்தன. கீழிருந்த தட்டுகளைக் கண்கள் துழாவிய போது இடைவெளியேதுமற்று எப்போதும் அடைந்தபடியிருக்கும் அத்தட்டுக்களில் குயிலியுடையதும், விபுலுடையதும் சிறிய துணிமணிகள் நெகிழ்ந்தபடி சரிந்து கிடந்தன. அவனுடைய கண்கள் மறுபடியும் வெறுமையான அலமாரி தட்டுகளை வெறித்தன.
‘திரும்பவும் போயிட்டாள்’
உதடுகள் கூம்பி முணுமுணுக்கக் கதவுகளை அப்படியே திறந்தபடி போட்டு விட்டுக் கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.
கண்களுக்குள் இன்னும் அந்த வெறுமை.
ஏற்கனவே போயிருக்கிறாள்.
அப்போதெல்லாம் அவள் எடுத்துக் கொண்டு போவது வாழைப்பொத்தியின் கரும் ஊதா நிறத்தில் அவள் வைத்திருக்கிற ஒரு சுடிதார், அடர் நீல, செம்மஞ்சள் நிறத்திலான சேலைகள்.
இப்போது ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறாள்.
அப்படியானால், அவள் திரும்ப வரப் போவதில்லை.
திடீரென்று அவனது கண்களில் ஒரு ஒளி பரவியது. பரபரப்பாக எழுந்து வீட்டின் பின் புறமாக ஓடினான்.
நீளமான கயிற்றுக்கொடியில் அவளது சேலைகளும் சுடிதார்களும் காற்றில் அசைந்தன. அப்பால் சற்றுத் தள்ளி உள்ளாடைகள்.
காலையில் உடுப்புகளை அள்ளிக் கொண்டு குளியலறைக்கு அவள் போனதை அவன் விடிகாலைப் பதகளிப்பில் மறந்து போயிருக்க வேண்டும்.
அப்பாடா, எனத் தோன்றிய பெருமூச்சு காற்றில் கலக்க முதலே கூரிய விழிகள் சுழன்று ஆராய்ந்தன.
அந்த ஆடைகள் யாவும் அவள் இங்கு வந்த பின் அவன் வாங்கிக் கொடுத்தவை.
அந்த நிறங்களே அதற்குச் சாட்சியமாயிருந்தன. எல்லாமே வெண்மைக்கு அண்மித்த நிறங்கள், உள்ளாடைகளைத் தவிர. சாம்பல், மென்னீலம், வெண்பச்சை, பொன் மஞ்சள் என எல்லா நிறங்களும் தூய்மையின் பளீரிடலோடு இருந்தன. அவளுக்கான ஆடைகளின் நிறத்தேர்வுகளில் அவன் எப்போதும் கவனமாக இருந்தான். ஆரம்ப நாள்களில் அவன் அவளைப் புடைவைக்கடைக்கு அழைத்துப் போகும்போது அவள் காட்டும் நிறங்களில் அவனுக்கு ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. அவள் சொல்லும் நிறங்களை ஒதுக்கி அவன் வேறு தெரிவுகளை முன்வைக்கும் போது அவள் முகம் வாடிப் போவதை இவன் கண்டிருக்கிறான். அதற்குப் பிறகு அவன் விருப்பங்களையே அவளும் தனதாக்கிக் கொண்டாள். இளமஞ்சள், வெளிர்நீலம் எவ்வளவு அழகு என அவள் கடையில் வைத்தே ஆர்ப்பரிப்பாள். அவள் அப்படிக் குதூகலிக்கின்ற போது அவற்றில் அப்படி ஒரு அழகும் இல்லையென்றே இவனுக்குத் தோன்றும்.
‘எல்லாம் வெளிறிப்போன நிறங்கள். உள்ளை போடுறதெல்லாம் வெளிலை தெரியும்’
என அவன் அவற்றைப் புறக்கணித்தான். அதற்குப் பிறகு அவன் தெரிவு செய்தவை எல்லாம் கடும் நிறமானவையாகவிருந்தன. முதல் தடவையாக அவன் கடும் நிறமானவற்றைத் தெரிந்தெடுத்தபின், கடையை விட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் அவளது முகத்தில் கூடுதல் மகிழ்ச்சி இருந்ததை எதேச்சையாகக் கண்டு விட்டான். போன தடவை கடைக்கு வந்த போது அவள் இதைத்தான் சொல்லியிருந்தாள் என்பதுவும் தான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் சடுதியாக மூளையில் உறைத்தது. முகம் சிவக்க ‘கிரீச்’சென்ற சத்தத்தோடு அவன் தன் மோட்டார் சைக்கிளைத் திருப்பினான். எதிர்ப்புறம் வந்த ஆட்டோ வொன்று இவனது திரும்புதலை எதிர்பார்க்காமல் சுழன்றடித்துத் திணறியது. ஒரு நிமிடத்திற்குள் தெருவில் பெருங் களேபரம் தோன்றி விலகியது.
ஆடைகள் நிறைந்த மெழுகுப்பையைப் பிரித்துக் கொட்டி வேறு நிறங்களைக் காட்டுமாறு அவன் சொன்னான். இப்படி எத்தனையோ பேரைப் பார்த்திருப்பது போலக் கடைப் பையன் எந்த உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாது மறு படியும் ஆடைகளைப் பிரித்துக் காட்டத் தொடங்கினான். அவளது முகம் ஏதோ பெருத்த அவமானம் நேர்ந்தது போலப் பாவனை காட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்தப் பாவனைக்குள் மறைந்திருந்தது அவளுடைய ஆசை ஈடேறாததால் விளைந்த கோபம் என்பதை அவன் புரிந்து கொண்டான். வரும்போது திரும்பவும் அந்தத் தூய மெல்லிய நிற ஆடைகளைச் சுமக்க நேர்ந்தது குறித்து அவள் வருந்துகிறாள் என்பதை அவளது மௌனமே அவனுக்குக் காட்டிக் கொடுத்தது. அதை அறிந்த பிறகு அவனது அகமனது குதூகலிக்கத் தொடங்கியது. அவனது தெரிவு எவ்வளவு பரிசுத்தமானது. கடும் நிறங்களால் அவளிடம் ஏற்படும் மனச் சலனங்கள் விலகி மெல்லிய நிறங்களின் தூய்மையால் அவளும் பரிசுத்தமாவாள். உள்ளாடைகள் தெரியக்கூடுமெனில், அவற்றை மட்டும் கடும் நிறத்தில் அணிந்து கொள்ளலாம் என்பதாக அவன் கண்டு பிடித்து அதைக் கடைப்பிடிக்கச் செய்தான். அதனால் இரண்டு நன்மைகள். உள்ளே அணிந்திருப்பது வெளியே தெரியாது. அத்துடன் அவளுக்குப் பிடித்த கடும் நிறங்களை அவள் அணிந்ததாகவும் ஆகும் என அவன் எண்ணினான். அந்த எண்ணமே இப்போது கொடியின் மறு அந்தத்தில் கடும் வண்ணமுள்ள உள்ளாடைகளாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவளுக்குப் பிடித்த கடும் நிறங்கள். ஆனால், அவள் அவனை விட்டுப் போய் விட்டாள்.
அவள் கொண்டு வந்திருந்த அடர்ந்த நிற ஆடைகளும், இள நிற உள்ளாடைகளும் எதுவும் இங்கு எஞ்சியிருக்கவில்லை. அவள் போய் விட்டாள். அவளுக்குப் பிடித்த ஆடைகளோடு, அவளுக்குப் பிடித்தவன் வீட்டுக்கு.
ஆனால், குழந்தைகள்? அவர்களை எப்படி அவள் அழைத்துச் செல்லலாம். அவர்களின் சகல உரிமைகளும் அவளுக்குப் போலவே அவனுக்கும் இருக்கும் போது எப்படி அவள் அவர்களைக் கூட்டிப் போகலாம்?
அவன் திரும்பவும் வீட்டுக்குள் போனான். விரிந்த படி கிடந்த அலமாரியை அடித்துச் சாத்தினான். அவள் எங்கே போயிருப்பாள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. கதவைப் பூட்டி விட்டு வெளியே வந்தான்.
வெயிலும், நிழலும் இழைந்து தழைந்த மதியமொன்றில் அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். பள்ளிக் குழந்தைகளின் ஆரவாரக் கூச்சல் நிரம்பியிருந்த வீதி. சற்று முன்னால் மோகனாவின் ஸ்கூட்டி அசைவது தெரிந்தது. அவளுக்குப் பின்னால் ஒரு ஹீரோ ஹொன்டா. அதிலிருந்தவன் அவளுக்கு ஏதோ சொல்வதும் தனது வேகத்தை மட்டுப் படுத்துவதுமாய் அவளுடைய கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தான். இவன் தன் வேகத்தை அதிகப்படுத்தினான். அருகே போனதும் ‘டேய்’ என்று குரல் உயர்த்தவும் அவன் சடுதியாய்த் திரும்பி இவனைக் கண்டதும் வேகமெடுத்தான். அவளது ஸ்கூட்டியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த விபுல் இவனைக் கண்டதும் ‘அய், அப்பா’ என்று குதூகலித்தான். மோகனாவின் முகத்தில் ஒரு கலவர பாவம் முளைத்திருந்தது. வீடு வந்து சேரும் வரைக்கும் அவன் அவளுக்குப் பின்பாகவே வந்து கொண்டிருந்தான்.
‘றோட்டுல போய்க் கொண்டிருக்கிறவங்களோடையெல்லாம் நீங்கள் எதுக்குத் தனகுறீங்கள்?’ அவள் சோற்றுத் தட்டினை இவனிடம் நீட்டியவாறே கேட்டாள்.
கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தான். தட்டத்திலிருந்த சோற்றினை அவள் மீது கொட்டி விட்டாலென்னவென்று தோன்றியது.
‘என்ன சொன்னவன் அவன்…?’
‘ஆர்?’
‘உனக்குப் பின்னாலை வந்தவன் தான்’
‘தெருவில போறவன், வாறவனெல்லாம் என்ன சொல்லுறானெண்டு பாக்கிறதே எனக்கு வேலை?’
‘எனக்கு அவன் சொன்னது கேட்டது, மறைக்காமல் உள்ளதைச் சொல்லு.’
‘அப்பிடி ஒண்டும் சொல்லேல்லை’ அவள் உள்ளே போய் விட்டாள்.
இவனுக்குள் கோபம் கொந்தளித்தது.
வெளியே போய் அவளது ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டான்.
‘இனிமேல் நானே ஏத்தி, இறக்கிறன் பிள்ளையை…’
அதற்குப் பிறகு அவளை ஒரு நாளும் ஸ்கூட்டி எடுக்க விடவில்லை அவன்.
சுவர்க்கரையோரம் உடுப்புகள் இறைந்து கிடந்தன. அவற்றைத் துவைக்க வேண்டுமென்ற எண்ணமின்றி அவள் கட்டிலில் படுத்தபடியே போனில் ஆழ்ந்திருந்தாள்.
குயிலி பொம்மைக்குப் பவுடர் போட்டுப் பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள். வெளியே விபுலின் விளையாட்டுக் கார் சீறியது.
அவனுக்குக் கோபம் வந்தது.
அவளிடமிருந்து போனைப் பறித்து விட வேண்டும்.
ஒரு பெண் இவ்வளவு நேரம் போனோடு இருப்பது அவனைப் பொறுத்தவரைக்கும் ஆரோக்கியமான செயற்பாடல்ல. அதிலும் அன்று அவள் ஆதாரத்தோடு, பிடிபட்ட பிறகு.
அவன் வந்து அரை மணி நேரமாகிறது
வீடியோகோல் எடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தாள்.
வீடியோவிலிருந்தது லோகநாதன்.
இவனைக் கண்டவுடன் வேண்டுமென்றே அவள் அதிகம் கதைப்பது போலத் தோன்றியது. போதாக்குறைக்கு குயிலியும், விபுலும் செய்கிற கூத்துக்களை வேறு அவள் வீடியோவில் அவனுக்குக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
‘ஆர் போனிலை?’
அவள் போனைத் திருப்பி இவனுக்குத் திரை தெரியச் செய்தாள்.
‘சரி, நான் வைக்கிறன்’ மறுபுறம் லோகநாதன் அலைபேசியைத் துண்டித்தான்.
மோகனா சாவதானமாக எழுந்து வந்தாள்.
‘புருஷன் வந்தது கூடத் தெரியாமல் என்ன கதை வேண்டியிருக்குது?’
‘சுதந்திரமா வெளிக்கிடவும் விடுறதில்லை. போன் கதைக்கவும் கூடாதெண்டால்…’
‘அதுக்கு கண்டவங்களோடையெல்லாம் என்ன கதை..?’
‘கண்டவங்களில்லை எனக்கு அவர் அத்தான்’ .
‘அத்தானென்டால் அவனையே கட்டியிருக்க வேண்டியது தானே…’
‘உதை விட வேற கதை தெரியாது உங்களுக்கு’
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக அப்படியே விட்டது தவறாகிப் போனது. இரண்டு நாள்களின் பின் மேசையில் கிடந்த பலகாரப் பொதியும், விஸ்பர் பாக்கெட்டும் அவனைப் பார்த்துக் கேலி செய்வது போலிருந்தன.
‘ஆர் வந்தது…?’ குரல் உக்கிரமாயிருந்தது.
அவள் அந்த உக்கிரத்திற்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்பது போல ஒரு அலட்சியத்தோடு நகர்ந்தாள்.
விபுல் பயத்தோடு ‘பெரியப்பா’ என்றான் மெலிந்த குரலில்.
‘அவன் என்னத்துக்கு இஞ்ச…?’ அவளது தோளைப் பற்றி அவன் உலுக்கினான்.
‘விடுங்கோ. சும்மா சின்ன விஷயத்தையும் பெரிசாக்கிக் கொண்டு’
‘எது, சின்ன விஷயம்? அவன் என்னத்துக்கு உதெல்லாம் வாங்கித் தரோணும்…? என்ரை பெண்சாதிக்கு எப்ப விஸ்பர் வாங்கித் தரோணுமெண்டு எனக்குத் தெரியாதே…?’
‘கிழிச்சீங்கள்…’
‘என்னடி சொன்னனி…?’
அவனது கரம் அவள் கன்னத்தில் இறங்கக் குயிலி வீரிட்டாள்.
விபுல் அவளின் சட்டையைப் பிடித்து இழுத்தான்.
அவள் கடைகளுக்குப் போவதில் அவனுக்குத் துளியும் இஷ்டம் இருந்ததில்லை;
ஆரம்பத்தில் வீட்டுத் தேவைகளுக்கும், அலங்காரப் பொருள்களுக்குமென அவள் கடைகளுக்குச் செல்வதை அனுமதித்திருந்தவனுக்கு அவள் ஒவ்வொரு கடையிலும் நிற்கின்ற பையன்களைப் பற்றி விலாவாரியாக ரசித்துக் கூறும் போது தலைக்குள் ஏதோ குடைவது போல உணர்வான்.
அவள் ஒழுக்கமில்லாதவளாக மாறிக் கொண்டிருக்கிறாள். அதனை அவனும் அனுமதித்துக் கொண்டிருக்கிறான். அதை எப்படியாவது நிறுத்துவதற்கு ஸ்கூட்டியை அவன் பூட்டி வைத்தது வாய்ப்பாகியது. அவள் தன் அக்காவிடம் அதைச் சொல்ல லோகநாதன் ஒரு நாள் வந்து அதை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
அதன் பின்பு வீட்டில் எந்தத் தேவை என்றாலும் இவனே அவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு மாத லிஸ்டிலும் அவன் ஒரு விஸ்பர் வாங்குவது வழமை. ஒரு தடவை அலமாரி திறக்கையில் இரண்டு விஸ்பர் தேங்கிக் கிடந்த போது அந்த முறை மாதவிடாய் அவளுக்குத் தாமதமாகியதற்கான காரணம் மனதில் கேள்விகளாய்ப் பெருகத் தொடங்கியது. அவள் மீதான சந்தேகம் எழுந்த பிறகு ஒவ்வொரு மாத விஸ்பர் பாக்கெட்டுகளதும் கணக்கு அவனுக்குத் தேவையாயிருந்தது.
ஒரு தரம் உதிரப்போக்கு அதிகமாகி விஸ்பர் போதாமலாகி பக்கத்து வீட்டு அக்காவிடம் கடன் வாங்கியதாய்ச் சொன்னாள்.
‘எனக்கு போன் பண்ண வேண்டியதுதானை, நானென்ன செத்தா போனன்”
‘எல்லா நேரமும் உங்களுக்கு வசதியாய் இருக்குமே, ரெண்டு பாக்கெட் எக்ஸ்ட்ராவா இருந்தாலே சமாளிக்கலாம்’
இவள் எதற்கு எக்ஸ்ட்ரா பாக்கெட் கேட்கிறாள் என்பதிலேயே அவன் மனம் குவியத் தொடங்கியது.
உதிரப்போக்கு எதற்கு இவ்வளவு அதிகமாய் இருக்க வேண்டும்?
இம்முறை தாமதமாய் வந்ததால் அதிகப் போக்கு என்று அவள் சொன்னாள்.
எதற்குத் தாமதமாக வேண்டும்?
பத்திரிகைகளில் வரும் மருத்துவக் கேள்வி, பதில்களை அவன் குடைந்தான்.
அன்றைக்கு லோகநாதன் வந்து போன பிறகு தான் இவ்வளவு தாமதமாகியிருக்கிறது.
அவள் முழுகித் தலையைக் காய வைத்துக் கொண்டிருந்த போது அவன் அவளது தலை முடியைப் பற்றிச் சுழற்றினான்.
‘உங்களுக்கென்ன பைத்தியமே, இப்பிடிப் பிடிச்சு இழுக்கிறீங்கள்’
அவள் தலைமுடியை விடுவிக்க முயன்றாள்.
‘ஓம், எனக்குப் பைத்தியம் தான். எல்லா நேரமும் எனக்கு வசதியாய் இருக்குமோ, எண்டு நீ சொல்லேக்க விளங்காத நான் பைத்தியம் தான்’ அவன் தள்ளிய வேகத்தில் அவள் சுவரோடு அடிபட்டுக் கீழே விழுந்தாள்.
மிரட்சியாய்த் திரும்பிய அவள் விழிகளில் கண்ணீர்.
நெற்றி வீங்கிக் கன்ற சுவரோடு ஒண்டியிருந்த அவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது. அந்தத் தோற்றத்திற்கு இரங்கி அவளை மன்னித்தால், அவளது தவறுகள் கூடிக் கொண்டே போகும் என்பதை அவன் உறுதியாக நம்பினான்.
சுவரோடு அவளை நெருக்கி அடிக்க முனைந்த போது,
‘அம்மாவை அடிக்காதையுங்க அப்பா’ குயிலி விசும்ப ஆரம்பித்தாள். சற்றைக்குள் அவளது குரல் ஓவென்று கதறியழுதது..
அவன் பிடியைத் தளர்த்தினான்.
‘பிள்ளைகளுக்காக விடுறன். அதுகளுக்காகவாவது, ஒழுக்கமா இருக்கப்பார்’
குயிலி ஓடிப் போய் மோகனாவின் நெற்றியைத் தடவினாள்.
வீட்டுக்குப் பின் புறமாய் ஒரு பப்பாசி நின்றது.
மூன்று பப்பாசிக் கன்றுகளை அவள் அக்கா வீட்டிலிருந்து கொண்டு வந்து வைத்திருந்தாள். அவற்றில் இரண்டு வெயிலுக்கு எரிந்து போக ஒன்று வளர்ந்து காய்க்கும் பருவத்தை எட்டியிருந்தது.
அவை பூக்கத் தொடங்கியதிலிருந்து, அவளே குழந்தைகளுக்கு அந்தப் பூக்களைக் காட்டி, அவை காயாகிக் கனியாவது பற்றி அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தாள்.
அவளுக்கு உதிரப்போக்கு அதிகமென்று சொன்ன பிறகு மனம் ஒரு நிலைப்படாமல் அலைந்தவன் கண்களில் அந்த மரம் பட்டது. எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தான். பூக்கள் காய்களாகியிருந்தன. திடுமென்று ஏதோ தோன்ற அவற்றை எண்ணிப் பார்த்தான்.சிறிதும் பெரிதுமாய் எட்டுக்காய்கள் இருந்தன. அன்று மாலை அவன் பூசாரியிடம் போன போது ஒன்பது காய்களே இருந்தன என்பதைப் பூசாரியும் உறுதிப்படுத்தினான். வந்தவுடன் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தான். எட்டுத்தானிருந்தது.
அதற்குப் பிறகு, ஒவ்வொரு நாள் காலையிலும் பல் துலக்கும் போது,அந்தக் காய்களின் எண்ணிக்கையை அவன் எண்ணிப் பார்த்துக் கொள்வான்.
‘விபுல், பப்பாசி எத்தினை காய் இருக்கு?’
‘…….’
‘எட்டு, எட்டுப் பப்பாசி கிடக்கு’
‘ஒண்டு குறைஞ்சாலும் எனக்குச் சொல்ல வேணும் சரியோ?’
விபுல் தலையை ஆட்டினான் .
‘ஏனப்பா, மேலை அண்ணாந்து தலை வலிக்கப் போகுது.செவ்வரத்தை எவ்வளவு பூத்துக் கிடக்கு, அதை வைச்சு இலக்கம் சொல்லிக் கொடுக்கலாமே…’
அவள் அவனை அவனது இலக்கிலிருந்து திசை மாற்றப் பார்க்கிறாள்.
அவன் அவளது சொற்களுக்கு எடுபடவில்லை.
அன்றைக்கு ஒரு காய் குறைந்திருந்தது.
‘பப்பாசி ஒரு காயைக் காணேல்லை எங்க?’ சந்தேகம் துருவும் விழிகளோடு கேட்டான்.
‘எனக்கு எப்பிடித் தெரியும்?’
‘உனக்குத் தெரியாமல் எங்க போகும்?’
அவள் முற்றம் முழுக்கத் தேடினாள். கிடைக்கவில்லை.
அச்சத்தாலுறைந்த அவளது விழிகளைப் பார்க்க அவனுக்குத் தன் கோபம் நியாயமே எனப்பட்டது. திரும்பவும் அவள் அந்தச் சேற்றில் விழுந்து விட்டாளா?
‘அம்மா பந்து போயிட்டுது அங்காலை, எடுத்துத் தாங்கோ”
‘அங்காலை போனா என்னெண்டு எடுக்கிறது. அப்பா தான் போக விட மாட்டாரே’
அவனது கோபத்திலிருந்து தப்ப அவள், விபுலை மெல்ல அணைத்துக் கொண்டு சொன்னாள்.
‘அங்கை, அங்கை கிடக்கம்மா. தடியாலை எடுத்துத் தாங்கோ’
முட்டுக் கால்களில் அமர்ந்து வேலிக்கு அப்பால் விபுல் காட்டினான்.
எவ்வளவு நீளத்தடி தேவைப்படுமென்று அவள் குனிந்து பார்க்க
‘பப்பாசி எங்கை எண்டு சொல்லிப் போட்டுப் பந்தை எடுத்துக் குடு ‘ என்றான் அவன்.
அவள் குனிந்த வேகத்தில் திரும்பினாள்.
‘பப்பாசிக்காய் அடுத்த காணிக்கை விழுந்து கிடக்குது. பந்தும் பக்கத்திலதான் கிடக்குது. நீங்களே ரெண்டையும் எடுத்து வாங்கோ.’
அவளுடைய ஆவேசம் அவனது சந்தேகத்தை எவ்விதத்திலும் தணிக்கவில்லை.
அவன் அவளது கையை முறுக்கினான்.
‘உன்னை வீட்டாலை வெளிக்கிடாதை எண்டெல்லே சொன்னனான்.’
‘நெடுக வெளிக்கிடாதை, வெளிக்கிடாதை எண்டால் வீட்டு இருட்டுக்குள்ளை எவ்வளவு காலம் இருக்கிறது, நான் அக்கா வீட்டை போக வேணும்’
‘நான் புருஷன் இஞ்சை இருக்க, உனக்கென்ன அலுவல் அந்த வீட்டை?’
‘அம்மா, அப்பா இல்லாமல் அக்காவும், அத்தானும் என்னை வளத்து விட்டதுக்கு என்ன அலுவல் எண்டு கேளுங்கோ’
‘அங்கையொண்டும் போகத் தேவையில்லை.’
‘போகாமல் இருக்கேலாது…’ அவள் அவனது கையை உதறிக் கொண்டு அப்பால் போனாள்.
‘எனக்கெல்லாம் தெரியும், விரும்பினவனை அக்காள் கட்டிப் போட்டாள் எண்டவுடனை, அக்கா, அத்தான் எண்டு போடுற வேசமெல்லாம் இன்னும் எத்தினை நாள் எண்டு பாப்பம்…’
அவள் நாகம் படமெடுப்பது போலத் திரும்பிச் சீறினாள்.
‘என்ன கதைக்கிறீங்கள்…’
‘உள்ளதைத்தானை சொல்லுறன், அக்கா கட்ட முதலே அவன் உனக்கு மச்சான் தானை’
‘அதுக்கென்ன இப்ப …?’
‘அவனை நீ விரும்ப அக்கா கட்டிக் கொண்டு போயிட்டாள், அவனோடை படுத்துக் கிடக்கத் தான் நீ அங்கை போய் வாறாய்…’
‘சீ உங்கட கேவலமான நினைப்புக்குத்தான் உங்கட குடும்பத்தோடை நீங்கள் கதை, பேச்சில்லாமல் இருக்கிறீங்கள். ‘
அவள் அதற்குப் பிறகு அக்கா வீட்டிற்குப் போவதை நிறுத்திக் கொண்டாள்.
‘அவளை வசியம் பண்ணி எடுத்திருக்கு’
இவன் கட்டுச் சொல்லும் பூசாரியின் முன் அமர்ந்திருந்தான்.
‘அவள் இனி உன்னட்டத் தங்கியிருக்க மாட்டாள், அடிக்கடி வெளிக்கிடத்தான் பாப்பாள்.’
‘நான் அவளுக்கு ஒரு குறையும் வைக்கேல்லை, எல்லாம் வேளாவேளைக்கு வாங்கிக் குடுக்கிறன். பிறகேன் அவள் வெளிக்கிடுறாள்…?’
‘ஏனெண்டா வசியம் பண்ணினவங்கள் அப்பிடி, அவளா வெளிக்கிட மாட்டாள், வெளிக்கிட வைப்பாங்கள்.’
‘ஏதாவது பரிகாரம்…?’
‘சொல்லுறன். செவ்வாய்க்கிழமை மம்மலுக்குள்ளை நான் சொல்லுற சாமான்களோடே வா…’
அவனது கண்களில் கூர்மை ஏறியது.
அவள் நிறைய ஒழிக்கிறாள். திருட்டுத்தனமாக அயல் வீடுகளுக்குப் போகிறாள். லோகநாதன் இவன் இல்லாத நாள்களில் அடிக்கடி இங்கு வந்து போகிறான். இரண்டு வீடு தள்ளி இருக்கின்ற பையன் வீட்டு வளைவில் அடிக்கடி தட்டுப்படுகிறான். பப்பாசிக்காய்களின் எண்ணிக்கை காரணமின்றிக் குறைகிறது. கேட்டால் முன்பொருமுறை பக்கத்து வேலிக்கு அப்பால் கிடந்ததுபோல எங்கேனும் கிடக்குமென்று சொல்கிறாள்.
அவன் விபுலைப் பிடித்து அடித்தான்.
பொறுப்பான ஆண்பிள்ளையாக அவனல்லவா அவளைக் கண்காணிக்க வேண்டும்.
விஸ்பர் பாக்கெட்டுகள் அதிகரிப்பதும், குறைவதும் அவனுக்குத் தீராத தலைவலியைத் தந்தன .
அவனுடைய அம்மா அன்றைக்குக் குயிலியையும், விபுலையும் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனபோது ஆவேசமாய் அவளிடம் போய்ப் பிள்ளைகளைப் பறித்துக் கொண்டு வந்தான்.
‘அவள் ……. க் கூத்தாடுறதுக்கு நீங்களெல்லாரும் இடம் குடுத்துக் கொண்டிருங்கோ’
‘என்ன கதையடா கதைக்கிறாய் …?’
உள்ளிருந்து அவனது தங்கை வெளியே வந்தாள்.
‘நீ கதைக்கத் தேவையில்லை. நீயும் ஊர் மேயுறவள் தானை’
‘அண்ணிக்குத் தான் சரியா உன்னை விளங்கியிருக்குது. நீ கவுன்சிலிங் எடுக்காமல் சரி வரமாட்டாய்’
‘எனக்கென்ன விசர் எண்டு நினைச்சாளோ அவள்… உங்கள் எல்லாரிண்டை ……. ஆட்டத்துக்கும் நான் இடைஞ்சலாய் போனன் என்ன…?’
வீட்டுக்கு வந்ததும் குயிலி மோகனாவிடம் ஓடினாள்.
‘……. கூத்து எண்டால் என்ன அம்மா ?’
‘ஆர் சொன்ன அப்பிடி?’
‘அப்பா தான் சொன்னவர்’
‘அப்ப, அவரிட்டையே கேளுங்கோ…’
அவன் அந்த ஊரில் மூன்று வாரங்களாக அலைந்து கொண்டிருந்தான்..
நான்காவது வாரம் நிறைய வாக்குறுதிகளுடனும், குழந்தைகளின் நலனுக்காகவும் பரஸ்பர உடன்படிக்கையின் பின் மோகனா அவனோடு வருவதற்குச் சம்மதித்தாள். லோகநாதன் வாசல் வரை வந்து வழியனுப்பிய போது அவன் அவரது கைகளை நன்றியோடு பற்றிக் கொண்டான்.
‘நீங்கள் எனக்கொரு அண்ணன் மாதிரி, மோகனாவுக்குப் புத்தி சொல்லி அனுப்பியிருக்கிறீங்கள். இனி மேல் பிரச்சினை வராமல் நான் பாக்கிறன்.’
லோகநாதன் எதுவும் பேசவில்லை.
அந்த ஊரெல்லையை அவனது மோட்டார் வண்டி தாண்டியது. அவன் மனதிற்குள் கறுவிக் கொண்டான்.
‘என்ரை பெண்சாதிக்கு எல்லாரும் வசியம் வைக்கிறீங்களோடா…?
வச்சுப் பாருங்கோ, இனிமேல். எல்லாரிண்ட வசியத்துக்கும் மேலால, நானும் வைப்பன் வசியம். இண்டைக்குப் பெட்டிப் பாம்பா என்னெண்டு வாறாள் என்னோட? அது நான் வைச்ச வசியம். இனி மேல் ஆரும் அவளை என்னெண்டு கொண்டு போறீங்கள் பாப்பம்…’
கருமையான சிரிப்பு அவன் உதடுகளில் சர்ப்பமாக நெளிந்தது.
தினமும் வீட்டை விட்டு வெளியேறும் போது, வீட்டினைப் பூட்டி விட்டுப் போக வேண்டும் என்றும், பூசாரியின் கணக்கைத் தீர்க்கிறபோது வீட்டிற்குப் பாதுகாப்பான பூட்டுப் போடுவது பற்றி ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான் தூயவன்.
எந்த இதமுமின்றிக் காற்று சுரீரென்று வீசிக் கொண்டிருந்தது.
எழுதியவர்
-
இலங்கை - யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரி பகுதியைச் சார்ந்தவர் தாட்சாயணி. இதுவரை 7 சிறுகதைத் தொகுதிகளும், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும்; ஒரு கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன.
முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல் ஞானம் விருது பெற்று வெளியிடப்பட்டது. 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்' வட மாகாண இலக்கிய விருது பெற்றது. 2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாஹித்திய விருதைப் பெற்றுக் கொண்டது. 2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகத்தின் மூலம் 'வெண்சுவர்' தொகுதி வெளியாகியுள்ளது. 2022 இல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குறுநாவல் 'தீநிழல்' பரிசு பெற்றது.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023வசியம்
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022த்வனி