18 July 2024

காலை புலரொளியில் கரட்டுப் பெருமாள் கோவில் மெலிதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நேற்று பெய்த மழையின் எச்சம் கரட்டு மலை சூழ்ந்த பனிக்குடம் போலக் காட்சியளித்தது. வீட்டிலிருந்து கரடு அடிவாரம் வரை பசுமை பூரித்திருந்தது.  பெருமாள்சாமி வீட்டுக் கொல்லை வாசல் படியிலிருந்து விரிந்திருந்த தோட்டத்தைப் பார்த்தார்.  ஆடிப்பட்டத்தில் விதைத்த நெற்பயிர் பள்ளியின் காலை நேரப் பிரார்த்தனை கூட்டத்தில் சீருடை அணிந்த சிறுமிகள் போல வரிசையாக நின்று கொண்டிருந்தன. மெல்லிய காற்றுக்கு அவை சிணுங்கி விளையாடிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த பெருமாள்சாமிக்கு கண்கள் கலங்கின.

“செந்தாமரை கண்ணா, காட்டு முனியாண்டி, காளியாத்தா மதவானியம்மா நல்ல வழி உடுங்க சாமி. பெருமழை பெய்ஞ்சி கம்மா நிறையனும்”  என்று முணுமுணுத்தார்

‘சிவகாமி இருந்தால் இப்போது அவள் மனம் குளிர்ந்திருக்கும். சரியாக தண்ணீர் இல்லாமல் ஐந்தாறு வருடமாய் நெல் போடாமல் இருந்தது அவளுக்கு பெரிய குற. சாகும்வரை அவளுக்குக் காடு தான் நினைப்பு . தண்ணியில்லாம நல்ல வெள்ளாம பண்ண முடியலன்னு வருத்தம். அன்னிக்கி கூட காட்டில் துவரை அறுவடை ஆனா போது; கூலியாட்களுக்குக் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வரேன் என்று போனாள். ஒரு கல் தடுக்கி விழுந்து படுத்த படுக்கையாகி விடுவான்னு யார் கண்டது.  விழுந்தவ எந்திரிக்காம போய் விடுவான்னு கெனா கூட காணல. அவ உடம்பு கொஞ்சம் தட்டியம் தான். கபடு சூது கிடையாது வஞ்சனையே இல்ல. நல்லா சாப்பிடுவா. நாலு ஆள் வேல பார்க்கிறவ,  விழுந்ததில் முதுகுதண்டின் அடி என்று படுத்த படுக்கையாகி கெடந்தது மனச விட்டுட்டா. எப்பவும் பம்பரமா சுத்தவரவ படுக்கையில் விழுந்ததும், யாருக்கும் கஷ்டம் வேண்டாமென்று இரண்டே மாசத்துல போய் சேர்ந்துட்டா மகராசி. ஆனா செத்த பிறகு ஊர் ஜனமே சொல்லுச்சி; மனுஷி அலங்கரிச்சி வைச்ச பொண்ணு கணக்கா இல்ல இருக்காங்கன்னு, ஊரே கொண்டாடுச்சே’ என்று யோசித்துக் கொண்டிருந்த பெருமாள் சாமியின் நினைவு அவர் மகன் சுரேஷ் குரல் கேட்டு மீண்டது.

“ஏப்பா லைட்டு நைட் போட்டா, ஆப் பண்ண மாட்டியா? டாய்லெட் சீட்டு முச்சூடும் மழைப்பூச்சி. தண்ணி போவல அடைச்சிக்கிச்சி”

“இருட்டல எதுவும் தட்டுகிட்டு விழுந்துட்டன்னு போட்டு வைச்சேன்.”

“இருபது வருஷமா வர போற வீடு தானே எப்படி தட்டுகிடும்?”

“நீங்க ஊருக்கு எப்பாவது தானே வரீங்க கண்ணு பழகியிருக்க வேணாமா?”

“இவ்வளவு ஈசல் பூச்சிங்க வந்துருச்சி, மழ பெருசா கூட பெய்யல”

“ம்ம் புரட்டாசி பெரு மழ, ஐப்பசி அட மழ, கார்த்திக கா மழ சொல்லுவாங்க அதெல்லாம் அந்த காலம் இப்ப எங்க ஜொலுஜொலுன்னு இரண்டு வாட்டி தெளிச்சிட்டு நின்னுடுச்சி. அதான் பூச்சி அம்மிடுச்சி நல்லா பெய்ஞ்சா வராது”

பின் வாசலில் மழை ஈரம் கோர்த்துக் கொண்டிருந்தது. காலை இளவெயிலில் ஈசல் சிறகுகள் மினுமினுத்தது. சுவரோரமிருந்த பூச்சிகளை எறும்புப்படை இறுத்துச் செல்ல பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தன. இந்த ஈசல் பூச்சியாட்டம் வாழ்க்கை, ஆனா அதுங்க பெறப்புக்கும் சாவுக்கும் நடுவுல பறக்கிறது தானே வாழ்க்கை. பறக்க முடியற ஈசல செத்தப்பறம் எறும்பு கூட இழுத்துட்டு போயிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த பெருமாள்சாமியை வாசலில் “அய்யா” என்ற குரல் மீட்டு எடுத்தது.

“யாரு”

“நான் தானுங்க பொன்ராஜு கல்லடிப்பட்டி போஸ்ட்மேன் மகன். அப்பா என் கல்யாண பத்திரிக்க குடுத்துட்டு வர சொன்னாங்க”

“அடடா நீயாப்பா வா. கீதா கொஞ்சம் அத வாங்கி சாமிகிட்ட வையீம்மா”

“மாமா பால் அடுப்பிடுல இருக்கு, நீங்களே வாங்குங்க”

அடுப்படிப்பக்கம் வேகமாக வந்தவர் சன்னமான குரலில் “நான் என்னத்துக்கும்மா, சுபகாரியம், நான் பால் பார்த்துக்கிறேன். நீ போய் வாங்கிக்க”

“மாமா…” என்று அடக்கமான குரலில் அதட்டி மிரட்டும் தொனியில் பார்த்தார். போம்மா என்று கெஞ்சும் கண்களால் கேட்கும் அவரை ஒன்றும் சொல்ல முடியாமல், முன் வாசலில் நின்றிருந்தவரை உள்ளே வர சொல்லி அமரச் சொன்னாள்.

“பொண்ணு எந்த ஊரு?”

“உள்ளூர் தான்ங்க”

“கொஞ்சமிருங்க. நான் காப்பி எடுத்துட்டு வரேன்”

“இல்லங்க, நான் இன்னும் நிறைய வீட்டுக்கு போவனும். நேரம் ஆவுது பராவாயில்லைங்க”

சாமியறையிலிருந்து தாம்பாளம் ஒன்றை எடுத்து வைத்தாள். அதில் பத்திரிக்கை வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் என்று மங்கலப் பொருட்களை எடுத்து ஒன்றாக வைத்துக் கொண்டிருந்தான் பொன்ராஜ். அதற்குள் சமையலறைக்குச் சென்றவள், அங்கே பெருமாள் சாமி காப்பி கலந்து கொண்டிருப்பதைப் பார்த்து “நான் கலந்து எடுத்துட்டு வரேன், நீங்க ஹால்க்கு போங்க” என்றாள். அவர் தயங்கிக் கொண்டே வரவேற்பறைக்குச் சென்றார்.

“அப்பா எப்படியிருக்காரு?. அவர் ஏன் வர்ல”

“கல்யாணம் நெருங்கிடுச்சி, அப்பாவும் வேற ஊருக்கு பத்திரிக்க குடுக்க போயிருக்காரு, அவர் தான் இங்க வரனும் சொல்லிட்டே இருந்தாரு. அம்மா எப்ப போஸ்ட் எடுத்துட்டு வந்தாலும் காபி கொடுப்பாங்க. எது செய்திருந்தாலும் கொடுத்து சாப்பிட சொல்லுவாங்க. சாப்பிடாம விடவே மாட்டாங்கன்னு சொல்லுவார்.”

“ம் பச்” என்றார் பெருமாள்சாமி.

காப்பியை எடுத்துக் கொண்டு வந்தாள் கீதா. “வேண்டாம்ன்னு சொன்னேங்களே” என்று சொல்லிக் கொண்டே காப்பியை வாங்கிக் கொண்டான் பொன்ராஜ். கீதா தாம்பாளத்தை எடுத்து கொண்டு பொய் உள்ளே வைத்தாள். பெருமாள்சாமியும் பொன்ராஜும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, சமையல் அறையில் வேலையைத் தொடர்ந்தாள். பொன்ராஜ் கிளம்பியதும் மீண்டும் பின்வாசல் பக்கம் வந்தார் பெருமாள்சாமி. பெரிய குரங்கு தனியாக வாசலில் அமர்ந்து ஈசல் பூச்சிகளைத் தின்று கொண்டிருந்தது. அதன் குடும்பம் எங்கே? சில சமயம் பெரிய குடும்பமாகக் குரங்குகள் வந்து அட்டகாசம் செய்யும். இன்று எப்படி தனியாக வந்திருக்கிறது. ஒருவேளை இதற்கும் துணையில்லையோ தனியாளோ? ‘தனியா இருந்தா என்ன பசி எடுக்க தானே செய்யுது என்று நினைத்தார் அவர். ‘சிவகாமி போன பிறகு எப்படி இருப்போமோன்னு நினைச்சி பார்த்ததே இல்லை. அங்கங்க வீட்டு ஆம்பிளைங்க சாவும் போதும் சிவகாமி சொல்லுவா மகராசிங்க மனுஷன சோத்துக்கு திண்டாட விடாம நல்லபடி பார்த்து அனுப்பிட்டாங்கன்னு. நானும் அப்படி தான் போவேன் நினைச்சேன். என்னை முந்திகிட்டு போயிட்டா. போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. ஏதோ பசிக்கு அரைக்க கிடைச்சிடுது’ என்று யோசித்துக் கொண்டிருந்தவரின் கவனத்தைக் கலைத்து சமையலறையிலிருந்து வந்த வாசனை மூக்கை கவர்ந்திழுத்தது.

உள்ளே சமையலறையிலிருந்து விதவிதமான ஓசைகள் எழுந்தது. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமைக் கிழமை விஷேசம் . கீதா பரபரப்புடன் விரத சமையலில் ஈடுபட்டிருந்தாள். ‘பாவம் அவர்கள் வீட்டில் இந்த நேரம் படுக்கைவிட்டு கூட அவள் எழுந்திருக்க மாட்டாள். விடுமுறை நாட்களென்றால் கேட்கவே வேண்டாம். பெருமாள்சாமியும் சிவகாமியும் மகன் வீட்டுக்கு போகும் போதும் சிவகாமியே சமையலைப் பார்த்துக் கொள்வாள். அங்கேயே அப்படியென்றால் இந்த வீட்டுக்கு வரும் போது கேட்கவா வேண்டும். வேளாவேலைக்கு விதவிதமாய் மகன் மருமகளுக்குச் செய்து பரிமாறினால் தான் அவளுக்குத் திருப்தி. படுக்கையில் விழும் வரை யாரையும் சமையல் அறையில் விட்டதேயில்லை. கடைசிவரை அவளுக்கு மருமகள் சமையலைச் சாப்பிடும் கொடுப்பினையில்லாம போய்விட்டது.’ என்று நினைத்தார் பெருமாள்சாமி.

‘சிவகாமி சாவுக்கு வந்திருந்த சமயம் ஓரிண்டு மாதம் இருவரும் விடுப்பெடுத்து இருந்தார்கள். சுரேஷ் கீதா திருமணத்துக்குப் பிறகு இரண்டு மாதம் தொடர்ந்து கிராமத்திலிருந்தது அதுவே முதல் முறை. கிளம்பும் போது பொலபொலவென்று அழுதுவிட்டார் பெருமாள்சாமி. அதைப் பார்த்துக் கலங்கிப் போன சுரேஷ் அவரை தன்னோடு கிளம்ப வேண்டுமென்று வற்புறுத்தினான். மகன் வீட்டுக்குச் செல்லும் சமயம் அங்கே சில நாட்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாமல் சிவகாமியும் அவரும் அவஸ்தையுறுவதை சுரேஷை விட கீதாவுக்குச் சரியாகப் புரியும். முன்னரே பலமுறை அதைப் பற்றிப் பேசிய போதெல்லாம் வருஷம் திரும்பட்டும் என்று சொல்லியிருந்தார். அதைச் சொல்லி அவனைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள் கீதா. வருஷம் திரும்பும் வரை அவர் மனம்படி விட்டால் தான் அவர் கொஞ்சம் தேறுவார் என்று தோன்றியதால் தான் மனமே இல்லாமல் கிளம்பினான் சுரேஷ்.

அதன்பின் தினம் இரண்டு முறையாவது மாமனாரோடு பேசும் கீதாவுக்கு, அவர் எந்த நிமிடத்தில் என்ன நினைக்கிறார் என்பதைச் சொல்லாமலேயே புரிந்துவிடும். வீட்டு வேலைகளைப் பார்க்க அவளே உள்ளூர் பெண் ஒருத்தியை ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருந்தாள். அவர்களது தூரத்து உறவு ஒருத்தர் வீட்டிலிருந்து சாம்பார், ரசம் கொடுத்துவிடுவார்கள். சாப்பாடு மட்டும் வைத்துக் கொள்வார். காப்பி போட்டுக் கொள்வார். ‘சிவகாமி இருந்த போது ஊருக்கே சோறு போடுவாள். ஏதோ அவள் சேர்ந்து வைத்த புண்ணியம் தனக்குத் தடையில்லாமல் சாப்பிட கிடைக்குது என்று நினைப்பார். சுரேஷ் – கீதா மாதம் ஒருமுறையாவது வந்துவிடுவார்கள். வீட்டுக்குத் தேவையானது எல்லாம் வாங்கி நிறைத்துது விட்டு கிளம்புவார்கள். அங்கங்கே உறவுக்காரர்களை ஏற்பாடு செய்து மருந்து மாத்திரை எல்லாம் கூட வீட்டுக்கே வரும்படி ஏற்பாடு செய்து விடுவான் சுரேஷ். எப்படியோ ஒரு வருஷத்துக்கு காலம் ஓடி தலைதிவசம் முடிந்தது.

திவசத்துக்கு வந்த கையோடு ஒரு வருஷம் வரை போகாதிருந்த குலக்கோவிலுக்கும் அப்போது சென்றார்கள். அப்போது புதுமணத் தம்பதியோடு ஒரு குடும்பம் கோவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். பெருமாள்சாமி மெல்ல சுரேஷ் பின்னர் நகர்ந்து தன்னை மறைத்துக் கொண்டதை கீதா பார்த்து பெருமூச்சு விட்டாள். வழக்கம் போல கோவிலுக்குக் கொண்டு வரும் மாலையைத் தான் எடுத்துக் கொடுக்காமல் சுரேஷையும் கீதாவையும் கொடுக்கச் சொன்னார். விளக்கும் போட்டு அம்மனை வணங்கினார். தீபாராதனை வந்த போது அவரிடம் முதலில் நீட்டியபோது கொஞ்சம் தயங்கி பின்னர் எடுத்துக் கொண்டார். வீட்டுக்கு வந்ததும் சுரேஷ் வருஷம் திரும்பிடுச்சி வழக்கம் போல இருக்கலாம் என்றான். கீதாவும் ”சாதாரணமா இருங்க. வருத்தப்பட்டுக்கிட்டே இருக்காதீங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

சிவகாமி இறந்ததிலிருந்தே மாதம் ஒருமுறையாவது வந்து செல்வான் சுரேஷ். ஆனால் கீதாவும் சேர்ந்து வந்து இரண்டு வாரம் தான் ஆகியிருந்தாலும் ஏதோ பந்த் காரணமாக வந்த தொடர் விடுமுறைக்கு வீட்டுக்கு வரக் கூட விசேஷ நாளாக ஆகிவிட்டது. புரட்டாசி சனிக்கிழமையானதால் கரட்டு பெருமாள் கோவிலில் இன்று ஊருக்கே தளிகை போடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது வருடத்துக்கு முன்னால் ஜெ ஜெ என்று திருவிழா போலிருக்கும். ஊரே பெரிய பண்ண வூட்டுல தளுவ போடாறாங்கலாம் என்று சொல்லிக் கிளம்புவார்கள். ஏழு மலையாக விரிந்திருக்கும் கரட்டுப் பாதையில் ஏறுவதே கொஞ்சம் சிரமம் தான். ஆளுக்குக் கையில் ஏதாவது எடுத்துக் கொண்டு மலையேறுவார்கள். காய், கறி, பருப்பு, தண்ணீர் என்று ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு தீப்பந்தம் எடுத்துக் கொண்டு விடியும் முன்னர் அங்கே போய் ஏழுமணிக்கெல்லாம் சாப்பிட்டு இறங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது அதெல்லாம் மாறிப் போனது. மாலையில் தான் தொடங்குகிறார்கள் சாப்பிட்டு இறங்க இரவாகிவிடுகிறது. அதுவரை விரதம் முடிக்காமல் இருக்க முடியுமா?

“குளிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும். சமையல் ஆச்சு, பாயசம் அடுப்புல இருக்கு, வட மட்டும் தான் பாக்கி.”

அதுக்குள்ள சமையல முடிச்சிட்டாளா மருமவ? மணி ஏழு அடிச்சி 10 நிமிசம் தான் ஆயிருக்கும். சுறுசுறுப்பு தான். ஆனா சிவா இருந்தவரை யாரையும் அடுப்படிக்கு விட மாட்டா. காலையிலேயே ஐஞ்சி மணிக்கெல்லாம் சாப்பாடு தயார் ஆயிடும். பன்னென்டு மணி சாப்பாட்டு இப்பவே ஏன் செஞ்சி வைக்கிறான்னு இருக்கும். ஆறு மணிக்கெல்லாம் இட்லிய போட்டு காட்டுக்கு விரட்டி விட்டுருவா. வீட்டுல கொஞ்ச நஞ்சம் வேலய முடிச்சிட்டு அவளும் வந்திருவா, இரண்டு கூலியாள் வேலய பாத்திருவா மவராசி என்று யோசித்துக் கொண்டிருந்தார் பெருமாள் சாமி. வாசலெங்கும் ஈசலின் இறகுகள் பளபளத்துக் கொண்டிருந்தது. குரங்கு ஒன்று அதைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டது. வீட்டுக் கொல்லையில் இருந்த குளியலறைக் கதவு படாரென திறந்த வேகத்துக்கு அது விருட்டென ஓடி மரத்திலேறித் தாவியது. அங்கிருந்து அடுத்த வீட்டுத் தகர ஓட்டில் ஏறிய போது திடுதிடுவென ஒலியெழுப்புது. தாவி அருகிருந்த வேப்பமர கிளையில் அமர்ந்து கொண்டது. தகரக் கூரைமேல் படர்ந்திருந்த வேப்பங்கொத்துகள் மெல்ல அசைந்தன. சுரேஷ் தலையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“எப்பா வெந்நீர் சரியா கலந்து வைச்சிருக்கேன். போ குளிச்சிட்டு வந்திரு. நான் சாமி படத்துக்குப் பூவெல்லாம் போட்டு வைக்கிறேன்.”

குளித்துவிட்டு வந்த போது திருப்பதி கண்ணாடி பிரேம் போட்ட பெருமாள் படத்துக்கும், காலண்டர் அட்டையிலிருந்த முருகன், தனலஷ்மி, இன்னும் பிற சாமி படத்துக்கும் மஞ்சள் சாமந்தி சரத்திலிருந்து நான்கு நான்கு கண்ணிகளாக அறுத்து வைத்திருந்தான் சுரேஷ். அவன் நெற்றியில் நாமம் பளீரென்று தெரிந்தது. இடையில் சிவப்பு கீற்று தீபோல எரிந்தது. “எங்க தாத்தா எல்லாம் தெனம் நாமம் போடுவாரு” என்று எல்லா புரட்டாசி சனிக்கிழமையிலும் மகனுக்குச் சொல்லிக் கொண்டே நாமம் போடுவது நினைவுக்கு வந்தது. கண்கள் கலங்கியது. கீதா இளம் பச்சை நிறத்தில் இருக்கும் இலையை சாமி படத்துக்கு முன்னர் விரித்து அதில் காய்கறி, சாப்பாடு, குழம்பு, பாயசம் வடை எல்லாம் பரிமாறி வைத்திருந்தாள்.

“நீர் வெளவி சூடம் காட்டலாமே?” என்றார் பெருமாள் சாமி

“நீங்க நாமம் போட்டுகிட்டு வாங்க ஆரம்பிச்சிடலாம்”என்றாள் கீதா

“அவர் எப்படி போடுவாரு. தல தெவசம் முடிஞ்சி குலதெய்வ கோவிலுக்கு போனப்ப, கோவில் பூசாரி சொன்னாருல்ல வெள்ளய மட்டும் எடுத்துக்கங்கன்னு. சிவப்பு எடுக்கக் கூடாதுன்னு சொன்னாருல, நீயும் தானே கூட இருந்த” என்றான் சுரேஷ்.

“அவர் சொன்னது இருக்கட்டும். கால காலம் நாமம் போடறது. ஒன்னும் தப்பில்லா போட்டுகிட்டு வாங்க” என்றாள் கீதா

“வேணம்மா”என்றார் பெருமாள்சாமி

“நான் சொல்றேன்ல்ல போய் போட்டுகிட்டு வாங்க மாமா.”

பின் முற்றம், திண்டில் போய் அமர்ந்து முகம் பார்க்கும் சிறிய கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே வெள்ளை நாமக்கட்டியை எடுத்து நீரில் குலைத்து ஈர்குச்சியால் வெள்ளை நாமம் இட்டார். குரங்கு மறுபடி வந்து மழைப்பூச்சிகளை ஒன்றொன்றாக எடுத்து அவசர அவசரமாக வாயில் போட்டது. நீரில் குழைத்த குங்குமத்தை ஈர்க் குச்சியில் தொட்டு நெற்றியின் மையத்தில் வைக்கும் போது அவர் கை நடுங்கியது. “சிவகாமி” என்று குலுங்கி அழத் தொடங்கினார் பெருமாள்சாமி.

“இதுக்கு தான் வேணாம்ன்னு சொன்னேன்” என்று கோபமாய் குரல் எழுப்பியவனை மௌனமாய் ‘உஷ்’ என்று வாயில் விரல் வைத்து அடக்கினாள்.

அழுது அடங்கி நாமம் இட்டுக் கொண்டு வந்தார். நடுவிலிருந்த சிவப்புக் கோடு இலேசாக வளைந்து நெளிந்து இருந்தது. “இப்ப பார்க்க எவ்வளவு அழகா இருக்கு. பொறந்ததுல இருந்து பண்ற வழக்கத்த யாருக்காகவும் மாத்த கூடாது” என்றதும் வெட்கத்துடன் தனது பொக்கை வாய் திறந்து சிரித்தார் பெருமாள் சாமி.

“அத்த போயிட்டாங்கன்னு கவலபட்டுக்கிட்டே இருக்க வேண்டாம் மாமா”

“ஆமா தனியா தான் பொறந்தோம். தனித்தனியா தான் வாயும் வயிறும் இருந்தது” என்றார் பெருமாள் சாமி.

“அதில்ல நீங்க பொறந்தப்ப எப்படியோ; இப்பவும் அப்படித் தான். அத்த உங்க வாழ்க்கைக்கு கொடுத்துட்டு போன எதுவும் மாறல”

“ஆமா”

“ஆனா நீங்க மாறிட்டீங்க”

“…”

“சாதாரணமா இருங்க. இது செய்யக் கூடாது, இல்லன்னு இருக்க கூடாது.”

“சாதாரணமா தான் இருக்கேன். ஆனா அவ நினெப்பு எப்படி மறக்க முடியும்”

“யார் மறக்க சொன்னா?”

“ம்”

“அத்த நினைப்போட இருங்க. கூடவே நாமம் நடுங்காம போட்டுகங்க”


 

எழுதியவர்

லாவண்யா சுந்தரராஜன்
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிதொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் லாவண்யா சுந்தரராஜன் ‘சிற்றில்’ என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார்.


நீர்கோல வாழ்வை நச்சி,
இரவைப் பருகும் பறவை,
அறிதலின் தீ,
மண்டோவின் காதலி ஆகிய கவிதைத் தொகுப்புகளையும்

“புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் “காயாம்பூ” நாவலையும் இதுவரை எழுதியுள்ளார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajarajacholan
Rajarajacholan
9 months ago

சிறந்த கதை, இழப்பை கடந்து செல்ல இக்கதை உதவும்.
ஆசிரியர் அவர்களுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்

கலியபெருமாள்
கலியபெருமாள்
9 months ago

பெண்களுக்கு மட்டும்தான் கட்டுபாடா ? ஆண்களுக்கும் உண்டு ஒவ்வாரு ஆணும் மனைவி முன்னே குழந்தைதானே , சிறப்பான கதை சொல்லும் முறை நன்று வாழ்த்துக்கள்

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x