21 November 2024
tha araavindhan

பூங்காவின் மர இருக்கையில் அமர்ந்திருந்த என்னை மூன்று பேர் சுற்றி வளைத்தார்கள். அவன்தான் அவனுடைய காதலியோடு போய் அவர்களை அழைத்து வந்திருக்கிறான்.

சற்று முன் இதுதான் நடந்தது. பூங்காவில் ஏதாவது இருக்கை காலியாக இருக்கிறதா என்று தேடிக் கொண்டே ரோஜாச் செடிகள் நிறைந்த அந்த நடைபாதை வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன். அங்கு அவனும் அவன் காதலியும் வழியில் கைகளைக் கோர்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள். நான் எப்போதும் காதலர்கள் நின்றால் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்துவிடுவேன். இந்த உலகமே காதல் செய்வதற்காகவும், காதலர்களுக்காகவும் தான் படைக்கப்பட்டது எனக் கருதுபவன். மேலும், காதலர்களுக்காகப் படைக்கப்படாவிட்டால் உலகம் இந்த அளவிற்கு அழகாகவும், விந்தையாகவும், கற்பனைக்கு எட்டாததாகவும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதிலும் ஆழம் கொண்டவன். அதனால், அவர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களைக் கடக்கப் போனேன்.

‘இந்த உலகத்தையே உனக்கு எழுதி வைக்கிறேன்’ என்று குரல் கேட்டது. அது அவளுக்குச் சொல்லப்பட்டது என்றாலும்; சிரித்துக்கொண்டே அவன் தலை என்னை நோக்கித் திரும்பிவிட்டதாக இருந்தது. அதைக் காதில் வாங்காததுபோல விலகி, நகரப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்த பிறகும், நான் பார்க்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும், ‘இந்த உலகத்தையே உனக்கு எழுதி வைக்கிறேன்’ என்று மீண்டும் அவளிடம் கூறினான். எனக்குக் கோபம் வந்தது. அவனை ஓங்கி அறைந்து, ‘இந்த உலகத்தை ஏற்கெனவே என் காதலிக்கு எழுதி வைத்துவிட்டேன்’ என்று கூறிவிட்டு இந்த இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டேன். அவனை அறைந்தது தவறு என்பதால் வருத்தமாகவும் இருந்தது. ஒரு கணம் என்ன நடந்தது, எப்படி நடந்தது எனத் தெரியாமல் எல்லாம் ஒரு கனவைப் போல நடந்தேறிவிட்டது.

“என் நண்பனை ஏன் அடித்தாய்?” உருளைக்கிழங்கு நிறச் சட்டை அணிந்திருந்தவன் மிரட்டலாகக் கேட்டான்.

வருத்தம் போய், நூறு யானைகள் வந்தாலும் எதிர்க்கும் மூர்க்கம் வந்தது. அதனால், வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தேன். இது ஒரு யுக்தியும். இதுபோன்ற நேரத்தில் கேட்கப்படும் கேள்விக்கு உடனடியாகப் பதில் அளித்தால், பலவீனனாகத் தெரியும். அமைதியை வெளிப்படுத்தும்போது, அது அழுத்தமாகவும் தைரியமாகவும் எதிரிகளுக்குத் தோன்றி, அவர்களைத் தயக்கம் கொள்ளச் செய்யும்.

“என்னை அடித்தான். திருப்பி அடித்தேன்.”

“நான் அடிக்கவே இல்லை.”

“அடிப்பது என்றால் அடிப்பதா? இந்த உலகத்தை அவனுடைய காதலிக்கு எழுதி வைப்பதாக என் எதிரில் கூறினான். அது எவ்வளவு பெரிய அடி… ஏற்கெனவே, என் காதலிக்கு எழுதி வைத்துவிட்ட உலகத்தை…”

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. காதுக்குள் நுழைந்த ஓசையை எப்படியாவது எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்பதைப் போல ஒவ்வொருவரின் முகமும் விநோதமான பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

“நானும்தான் என் காதலிக்கு எழுதி வைத்திருக்கிறேன். இவனும்தான் அவன் காதலிக்கு எழுதி வைத்திருக்கிறான். இதோ, இவனும்தான் அவன் காதலிக்கு எழுதி வைத்திருக்கிறான்.”

யாருக்கும் தெரியாத ஏதோ பெரிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல, வெள்ளரி நிறச் சட்டை அணிந்திருந்தவன் என்னைப் பார்த்து ஆவேசமாகக் கூறினான். காதுக்குள் நுழைந்த சத்தத்தை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியும் அவனுக்கு இருப்பதுபோல தெரிந்தது.

“என் அப்பா அவர் காதலிக்கு எழுதிக் கொடுத்திருப்பார். உன் அப்பா அவர் காதலிக்கு எழுதிக் கொடுத்திருப்பார். இவன் தாத்தா அவர் காதலிக்கு எழுதிக் கொடுத்திருப்பார். எல்லாக் காலங்களிலும், யாரோ ஒருவர் அவர் காதலிக்கு எழுதிக் கொடுத்திருப்பார்கள்தான். யார் இல்லை என்றா?”

அவன் எந்த முகப் பாவனையில் எந்தக் குரல் நயத்தோடு கூறினானோ, அதே வகையில் மர இருக்கையிலிருந்து எழுந்து நானும் கூறினேன்.

“அப்புறம், உன் பிரச்சினைதான் என்ன?”

ஆவேசம் எதுவும் இல்லாமல் கண்ணாடி அணிந்திருந்த நேந்திர நிறச் சட்டை அணிந்திருந்தவன் கேட்டான். என் அணுகுமுறைக்குக் கட்டுப்படத் தொடங்கிய ஆட்டைப் போலவும் அவன் குரல் இருந்தது.

“என் எதிரில் எழுதிக் கொடுத்தான்.”

“ஏன் உன் எதிரில் எழுதிக் கொடுக்கக் கூடாதா? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?”

கீழே இறங்கி வந்த ஆடுகள் மீண்டும் மலையேறியதுபோல மூன்று பேரும் ஆவேசமாகக் கேட்டார்கள்.

“அப்படியானால், பெரிய ஆளாக இருந்தால் எழுதிக் கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?”

அழுத்தத்தைச் சிறிது நேரம் நீடித்தேன்.

“என் எதிரில் என்பது கூட வேண்டாம். அது அதிகாரமிக்கதாக இருக்கிறது. நான் அருகில் இருக்கும்போது என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அதிகாரமிக்கதாக இருந்தால், நான் இருக்கும்போது என்று… இதுவும் அப்படி இருந்தால், நீங்களே கனிவான ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லோரும் போகும் பாதையில் குறுக்காக மறைத்து நின்றிருந்தபோதுகூட அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக விலகி, கடந்து போகப் போனேன். அவன் குரல் என்னை வலிய இழுத்தது. அதையும் கடந்து போகப் பார்த்தேன். ஆனால், நான் பார்க்கிறேன், கேட்கிறேன் எனத் தெரிந்தும், அவன் எழுதிக் கொடுத்தான்.”

“அதில்தான் என்ன தப்பு?”

“அதுதான் சொன்னேனே… என் காதலிக்கு ஏற்கெனவே எழுதிக் கொடுத்திருக்கிறேன் என்று.”

“பைத்தியம்.”

ஒருவரைக் காயப்படுத்துவதற்காகத் திட்டமிட்டு எகத்தாளமிடும் சிரிப்புகள் பெரும்பாலும் அதன் இலக்கை அடைவதில்லை என்பது எவருக்கும் தெரிவதில்லை.

“நீங்கள் புரியாமல் சிரிப்பதைப் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. பைத்தியத்துக்கு மத்தியில் நின்று சிரிப்பவர்களும் பைத்தியமாகத்தான் தெரிவார்கள்.”

“சரி, நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”

“சொல்ல வேண்டியதையெல்லாம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். என் காதலிக்கு எழுதிக் கொடுத்த உலகத்தை என் எதிரில் அவனுடைய காதலிக்கு எழுதிக் கொடுத்தான். அது உலகத்தின் மீதான என் உரிமையைப் பறிப்பது போல இருக்கிறது. என் காதலிக்கு எழுதிக் கொடுத்ததைப் பொய் என்று கூறுவது போலும் இருக்கிறது.”

கோமாவில் இருந்த ஒருவருக்குச் சில கணம் எல்லா நினைவுகளும் வந்து, மீண்டும் அவர் கோமா நிலைக்குப் போனதைப் போல அவர்களுக்கும் ஏதோ புரிந்ததுபோல இருந்து, பிறகு எதுவும் புரியாமல் போய், தடுமாறுவதைப் போல இருந்தது.

“உரிமையா? பறிப்பா?”

“ஆமாம். அதைச் சொல்கிறேன். என் எதிரில் எழுதிக் கொடுத்தால் எனக்கான உரிமையைப் பறிப்பதாகத்தானே அர்த்தம்?”

“ரோஜாச் செடி இருக்கிறது. அது பொதுவானதுதான் அல்லவா? அதில் ஒரு ரோஜாவைப் பறித்து அவன் காதலிக்குக் கொடுக்கிறான். மற்றொரு ரோஜாவைப் பறித்து, உன்னுடைய காதலிக்குக் கொடுக்கிறாய். இதில் என்ன தப்பு இருக்கிறது?”

“பொதுவானது என்று கூறி, என் பாதையில் காலெடுத்து வைத்துவிட்டீர்கள். ஆனால், நடப்பதற்கும் முன்பே பாதை பிசகிவிட்டீர்கள். இந்த ரோஜாச் செடி பொதுவானதாக இருந்தாலும், அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர்கள் அதை உரிமை கொண்டாட முடியும். அவர்களைக் கேட்டு ரோஜாவைப் பறிப்பதும் நியாயம். ஒரு ரோஜாவைப் பறித்து என் காதலிக்குக் கொடுக்க முடியும். உன் காதலிக்கும் கொடுக்க முடியும். என் காதலி தலையில் வைத்திருக்கும் ரோஜாவை உன்னுடையது என்றும் சொல்லப் போவதில்லை. உன் காதலி வைத்திருக்கும் ரோஜாவை என்னுடையது என்றும் சொல்லப் போவதில்லை. அதெல்லாம் புரிகிறது. ஆனால், நான் சொல்ல வருவது யாரும் உரிமை கொண்டாட முடியாத காற்றைப் போன்ற பொதுவானதைப் பற்றி…”

“காற்றா? ”

“ஆமாம். காற்று, காதல், உலகம், எல்லாம். அதே ரோஜாச் செடியின் மீது காற்று வாசம் செய்கிறது. அந்தக் காற்றை ஒருவன் உரிமை கொண்டாடினால்…?”

ரோஜாச் செடியின் மீது வாசம் செய்யும் காற்று, அவர்கள் மீதும் வாசம் செய்வதுபோல இருந்தது.

“ஏன், நாம் மட்டும் என்ன? ஒருவகையில், காற்றால் வாழும் ரோஜாச் செடிகளும்தான் அல்லவா?”

ரோஜாக்களின் மலர்ச்சியும் முறுவலும் அவர்களின் முகங்களில் துளிர்த்தது.

“ஏதோ சொல்கிறாய். அவன் உரிமையா கொண்டாடினான். சும்மா தானே சொன்னான்?”

“நான் சும்மா சொல்லவில்லை. என் காதலிக்கு உண்மையாகவே எழுதிக் கொடுத்திருக்கிறேன். காற்றால் நாம் உயிர் வாழ்வதைப் போல.”

என் மீதே எனக்கு ஈர்ப்பு வந்ததுபோல இருந்தது. அதே நேரம் ஏதோ புனிதமான ஒன்றுக்காக நான் மோதுவது போன்ற தோற்றம் வந்துவிட்டதோ என்பதைப் போல இருந்தது. அவர்களுக்கு இயல்பானதைப் பற்றித்தான் பேசுகிறேன் என்பதைப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதைப் போல இருந்தது. ஆனால், இதையே புலப்படுத்திவிட முடியாதபோது, அதை எப்படிப் புலப்படுத்த முடியும் என்பதைப்போலவும் இருந்தது.

“நீயும் எழுதிக் கொடு. அவனும் எழுதிக் கொடுக்கட்டும். என்ன ஆகப் போகிறது?”

“எழுதிக் கொடு என்று தான் நானும் சொல்கிறேன். ஆனால், நான் இருக்கும்போது எழுதிக் கொடுக்காதே என்றுதான் கூறுகிறேன். இந்த உலகத்தையே எழுதிக் கொடுப்பது என்பது ஒரு காதல். ஒரு பேரனுபவம். ஒரு மலை ஆனந்தம். கண்ணுக்குத் தெரியாத மாற்றுலகம். அதை அனுபவிக்க விடு. அதில், குறுக்கிடாதே, அத்துமீறாதே என்றுதான் கூறுகிறேன். இங்கு எல்லாமே காற்றைப் போலத்தான் இருந்தன. அவை காதல், பேரனுபவம், ஆனந்தம் என்பதிலிருந்து சிறிதுசிறிதாக நகர்ந்து ஏதேதோ குறுக்கிட்டு, எப்படி எப்படியோ அத்துமீறி, பொதுவானதிலிருந்து விலகி யார் யாருக்கோ உரிமையானதைப் போல, உடைமையானதைப் போல மாறிப்போய்விட்டது. அதனால், நீ காதல் கொள். பேரனுபவம் கொள். ஆனந்தம் கொள். மாற்றுலகம் காண். அதே நேரம் என் காதலை, சுகத்தை, பேரனுபவத்தை, மாற்றுலகை உன் உரிமையாக்கிக் கொள்ளப் பார்க்காதே என்றுதான் கூறுகிறேன்.”

ஒன்றுவிடாமல் என் மனச்சொற்களை முழுமையாக வழித்து வைத்துவிட்டதைப் போல இருந்தது. காலியான மண் பாத்திரம் நிம்மதியாகக் காற்று வாங்கிக் கிடப்பது போலும் இருந்தது.

“பைத்தியம்”

பதில் எதுவும் இல்லாதபோதும் தெளிவும் இல்லாதபோதும் மேற்கொள்ளப்படும் யுக்தியை அவர்கள் கையாள்வது புரிந்தது. என்னுடைய காதலி நடைபாதையில் தென்பட்டாள். என்னைப் பார்த்ததும் எப்போதும் அவள் உதிர்க்கும் காதல் சிரிப்பை வெளிப்படுத்தியவள் என்னைச் சுற்றி ஆட்கள் சுற்றி நிற்பதைப் பார்த்ததும் துணுக்குற்றுச் சுருக்கிக் கொண்டாள். என்னுடைய இயல்பான சிரிப்பை அவளுக்கு வெளிப்படுத்த முற்பட்டேன். அது முழுமை பெறாத ஒன்றாக முடிந்தது. என் அருகில் வந்து, அவனும், அவனுடைய காதலியும் எப்படி அமைதியாக நின்றார்களோ, அதைப்போல இவளும் நின்றாள்.

“எந்தப் பைத்தியத்துக்கும் தானொரு பைத்தியம் எனத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.”

பைத்தியக் கோபம் அவர்களுக்கு வந்தது போல இருந்தது. என்னுடைய காதலி தோளில் கையை வைத்து, `போகலாம்’ என்பதைப் போல அழைத்தாள். எனக்கும் அந்த இடத்தைவிட்டுப் போக வேண்டும் என்பதைப் போலத்தான் இருந்தது. ஆனால், உடனே போக இயலாது. விலங்குகள் முன் ஓடினால், இரை என விரட்ட ஆரம்பித்துவிடும்.

“இந்த மூஞ்சிக்குத்தான் உலகத்தை எழுதி வைச்சியா? உன் உலகத்தை நீயே வைச்சுக்க…’’

உருளைக்கிழங்கு நிறச் சட்டைக்காரனை நான் அறைந்தது மட்டும்தான் புரிந்தது. அவர்கள் என்னைத் திரும்ப அடித்தது, எங்கெல்லாம் எனக்கு அடி விழுந்தது என்பதெல்லாம் புரியவில்லை. கூட்டம் கூடியதும் அவர்கள் விலகிப் போனார்கள். அந்த இடத்தில் நிற்காமல் நாங்களும் கொஞ்சம் தூரம் விலகி வந்து உட்கார்ந்தோம். “அதுக்குத்தான் அப்பவே போகலாம்னு அழைத்தேன்’’ என்று கூறி, அவள் என் மனதை வேறொரு திசைக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் அழைத்துச் சென்ற எந்தத் திசைக்கும் செல்லாமல் மனது அதே இடத்தில் நின்றிருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு, மரம், செடி, கொடி எல்லாம் எங்களையே பார்ப்பதுபோல தோன்ற, ‘கடற்கரைக்குப் போவோம்’ என்று எழுந்து, பூங்காவை விட்டு வெளியே நடைபாதைக்கு வந்தோம். வண்டிக்கடையில் பறந்த நீராவியைப் போல அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள்.

“உலகத்தை எழுதி வைத்தது போதும். சோளம் வாங்கிக் கொடு.’’


 

எழுதியவர்

த.அரவிந்தன்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். 1996-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய நூல்கள்: உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (சிறுகதை), பூமத்திய வேர்கள் (கவிதை), குழி வண்டுகளின் அரண்மனை (கவிதை), அதிகாலையும், என் குதிரையும் (கவிதை).
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x